MISHA என்றொரு ரஷ்ய மாத இதழ்

மார்ச் 18, 2009 sandanamullai

மிஷா – இந்த ஒரு வார்த்தை எனக்குள் கொண்டுவரும் உணர்வுகள்..நினைவுகள்..!!
அப்போது..(ஐந்தாம் வகுப்பு – எட்டாம் வகுப்பு)ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரமும் நான் எதிர்பார்த்து காத்திருப்பது இரண்டு விஷயங்களுக்காக! ஒன்று பேப்பர்கார அண்ணா கொண்டு வரும் கோகுலம் புத்தகம், இரண்டு தபால்காரர் கொண்டுவரும் மிஷா புத்தகம்! மிஷாவின் ஒவ்வொரு இதழும் ரத்தினம்…ஆனால், அது அப்போதுத் தெரியவில்லை! அதற்குள் அவ்வளவு செய்திகள், கதைகள், விஞ்ஞான செய்திகள், சிறுவர்களுக்கான ஆக்டிவிட்டீஸ், விதவிதமான புதிர்கள்..மிஷாவுக்கு இணை மிஷாதான்! இந்த மிஷா, ஒரு குட்டி கரடிபொம்மை. அது, அப்போது நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் சின்னம்..அதுவும் ரஷ்யாவில் நடைபெற்றது என்று நினைவு!

மிஷாவை நினைத்தவுடன் எழுவது அந்த புத்தகத்தின் வழுக்கும் பக்கங்களும், மென்மையான ஒரு புத்தம் புதிய புத்தகத்தின் வாசனையுமே! என் நினைவடுக்களில் இன்னமும் அந்த வாசனையை உணர்கிறேன். எனக்கு ரஷ்யக் கதைகள் பொதுவாக பிடிக்கும்..ரஷ்ய இலக்கியங்களும் நமது இலக்கியங்களுக்கும் நிறைய ஒற்றுமை இருப்பதாக எங்கோ படித்தேன்!
“செவ்வணக்கங்கள்”, போனி எம்-ன் “ரஸ்புடீன்”, அன்னா கரீனினா, கடைசி ஜார் மன்னன் சரணடைந்த அடர் சைபிரீயக் காடுகள், அந்தோன் சேகவ்-வின் கதைகள் முக்கியமாக பள்ளத்து முடுக்கில், பாலிசிக் பெத்புரூமஸ்(கதையில் வரும் சிறுவன்) சேர்த்து வைத்த ரூபிள்கள், செஸ்சில் பிரபலமாயிருந்த விளாடிமிர் (?) என்று என்று எனக்குள் எத்தனையோ ரஷ்யச் சின்னங்கள்தான்..எல்லாமே புத்தகங்கள் வாயிலாகத்தான்! புத்தகங்களும் வாசிப்பனுபமும் எவ்வளவு மகத்தான திறன் படைத்தவை!!

அல்டர்கோஸையும், ஹெர்குலிஸையும், யெலிராவையும், பூமி பற்றிய விஞ்ஞான தகவல்களையும் நான் அந்த வயதில் அறிந்துக் கொண்டது மிஷாவின்
வாயிலாகத்தான்! அதில் ஒரு பகுதி, சிறுவர்கள் வரைந்து அனுப்பும் ஓவியங்கள் பிரசுரிக்கப் படும். அதில் எப்போதாவது இந்தியாவிலிருந்து அதுவும் காஷ்மீர் அல்லது மும்பை அலல்து டெல்லியிலிருந்து யாரோ அனுப்பியிருப்பார்கள். அதைப் பார்த்ததும் ஏற்படுமே ஒரு மகிழ்ச்சி..:-) அவ்வளவு ஏன், பாகிஸ்தானிலிருந்து என்று இருந்தபோதும் கூட மகிழ்ச்சியடைந்திருக்கிறேன்..நம்ம பக்கத்து ஊரு டைப் சந்தோஷம்தான்! (oh, silly me!!)

இந்த இதழ்கள் எல்லாமே படித்தபின், பத்திரமாக சேகரிக்கப் பட்டவை. நான் ஒரு கலெக்டர்..எந்த நகருக்குமில்லை..:-)..அதாவது, எனது வழிகளில் கடந்துவரும் எதையுமே சேமிப்பவள். இதைத்தான் என்றில்லை..ஏதாவது ஒரு சிறு நினைவு அந்தப் பொருளோடு தொடர்பிருந்தால் போதும், எனது பீரோவின் ரகசிய அலமாரியில் அதற்கோர் இடமுண்டு! பல பதப்படுத்தப்பட்ட இலைகள், ஹிண்டுவிலிருந்து வெட்டப் பட்ட காகிதத்துண்டுகள், பத்தாம் வகுப்பு ப்ராக்ரஸ் கார்டு + ஹால் டிக்கட், வாழ்த்தட்டைகள், இப்படிப் பல..! அதேபோல், கோகுலம், ஹிந்துவின் யங் வேர்ல்ட் இதெல்லாம் ஒரு அட்டைப் பெட்டியில். பெரியவர்களுக்கான ரீடர்ஸ் டைஜஸ்ட், விஸ்டம் (இது எங்களுக்காக வாங்கியது..;-)..ஆனால் நாங்கள் அப்படி நினைப்பதில்லை) விமன்ஸ் எரா இதெல்லாம் தனித்தனி அட்டைப் பெட்டிகளில்! அப்படித்தான் நான்கு வருடங்களுக்கு மேலாக வாங்கிய மிஷாவில் மூன்று வருடங்கள் + ஒரு வருடத்தில் சில இதழ்கள் மட்டும் !! பெரியவர்களுக்கான புத்தகங்கள் இப்போது இல்லை!! 😦

மிஷா புத்தகங்கள் பப்புக்கு இந்த வயதில் ஏற்றவை அல்ல! அவளாகவே படிக்க ஆரம்பித்த பின்னர் தான் இதன் அருமைத் தெரியும் என எண்ணுகிறேன்..ஆனால், அந்த குணாதிசயம் எனது சரித்திரத்தில் இல்லை..அதாவது எங்கள் வீட்டுப் பெரியவர்கள் ட்ரெஷர் செய்ததை நான் மதித்தது இல்லை..அது அவர்கள் செண்டிமென்ட். அவர்களுக்கு முக்கியம்…எனக்கல்ல என்பது போல! ;-). எனக்கு மிஷா-வைப் போல் பப்புவிற்கு டோரா போல இருக்கிறது,இப்போது!! (Both are Mascots too!)

USSR பிரிந்தபின் மிஷா வருவது நின்று போயிற்று. எவ்வளவோ சொன்னாலும், மிஷாவைப் பற்றியும் அதனுடன் எனது பிணைப்புகளையும் இன்னும் முழுதாக சொல்லவில்லை என்ற உணர்வுதான் ஏற்படும்.அதனால், முடிவாக, USSR -ரையும் மிஷாவையும் அவர்கள் என்னிடமிருந்துப் பிரித்திருக்கலாம், அதன் பின் பல காரணிகளிலிருக்கலாம்..ஆனால், எனக்குள்ளிருந்து மிஷாவையோ, USSR-யோ ஒருபோதும் பிரித்துவிட முடியாது, எந்தவொரு காரணியாலும்!!

Misha, I love you!

பிகு
இது கடந்த வருடத்தில் எழுதியது…தீபாவின் மிஷா பதிவைப் பார்த்ததும் நினைவுக்கு வந்தது. அப்போது ஏற்கெனவே என் சிறு வயது புத்தகங்களைக் குறித்து எழுதியிருந்ததால், இதை வெளியிடாமல் வைத்திருந்தேன்! நன்றி தீபா, நினைவூட்டியமைக்கு!

Entry Filed under: குடும்பம்,புத்தகங்கள்,nostalgic

பின்னூட்டமொன்றை இடுக

Trackback this post  |  Subscribe to comments via RSS Feed

பக்கங்கள்

பிரிவுகள்

நாட்காட்டி

மார்ச் 2009
தி செ பு விய வெ ஞா
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Most Recent Posts