Posts filed under: ‘tag‘




பிடித்தவர்; பிடிக்காதவர் – தொடர் விளையாட்டு

தொடர்பதிவுக்கு அழைத்த மாதவராஜ் அவர்களுக்கு நன்றி!

1.அரசியல் தலைவர்
பிடித்தவர் :கக்கன்
பிடிக்காதவர்: ஜெயலலிதா

2.எழுத்தாளர்
பிடித்தவர் : அம்பை
பிடிக்காதவர் : ரமணிச்சந்திரன்

3.கவிஞர்
குறிப்பிட்ட கவிஞரென்று தேடிப்பிடித்து படிப்பதில்லை..கண்ணில் பட்ட கவிதைகளை வாசிப்பதோடு சரி!

4.இயக்குனர்
பிடித்தவர் : தங்கர் பச்சான்,
பிடிக்காதவர்: பாக்யராஜ்

5.நடிகர்
பிடித்தவர் : லொள்ளு சபா மனோகர்
பிடிக்காதவர் : எம்ஜிஆர்

6.நடிகை
பிடித்தவர் : சுவலஷ்மி
பிடிக்காதவர் : நமீதா

7 . இசையமைப்பாளர்
பிடித்தவர் : ஏ.ஆர்.ரஹ்மான்
பிடிக்காதவர் : அப்படி யாரும் இல்லை..மற்றவர் இசையமைப்பில் ஏதாவது ஒரு பாடலாவது பிடித்துதானே இருக்கிறது!

இந்த தொடரை தொடர அழைப்பது,

க.பாலாசி
சஞ்சய்
தீஷூ
பா.ராஜாராம்

Advertisements

Add a comment நவம்பர் 1, 2009

With oscar and Nobel!!

விருது கொடுத்த பா.ராஜாராமிற்கு மிகுந்த நன்றிகள்!! அவரது கவிதைகள் ஒவ்வொன்றும் வாசித்தபின்னும், வெகுநேரத்திற்கு ஆழ்ந்த பாதிப்பை தருபவை! நன்றிகள் ராஜாராம்…கவிதைகளுக்கும், விருதுக்கும்!! இந்த விருதை இவர்களுடன் பகிர்ந்துக்கொள்வதில் மிகுந்த மகிழ்வடைகிறேன்!!

தாய்லாந்து உலாத்தலுக்காக கானாஸ்

வாழ்த்து அட்டைக்காக ஆயில்ஸ்

கிளிஞ்சல்களுக்காக g3

டைரி – வெறு’மை-க்காக நிஜம்ஸ்

எந்தக்கடவுள் காப்பாற்றுவார் -க்காக சின்ன அம்மிணி

பயபுள்ளைக்கு விளையாட கத்துக்கொடுங்க…..நான் ஆதவன்

கலைந்துபோன கடுதாசி – கதிர்

சுவையான ரெசிப்பிகளுக்காக பித்தனின் வாக்கு

வாழ்க்கை வாழ்வதற்கே! – கோமதி அரசு

அழகான கவிதைகளுக்காக ராமலஷ்மி

நல்ல ஐடியாக்களுக்காக தீஷூ

அருமையான கவிதைகளுக்காக அன்புடன் அருணா

நட்சத்திரங்களைப் பற்றி பகிர்ந்துக் கொள்ளும் அமுதா

சுற்றுலாக்குறிப்புகளுக்காக முத்துலட்சுமி

சொற்சித்திரங்களுக்காக தீபா

Add a comment ஒக்ரோபர் 13, 2009

ஆறு தன் வரலாறு கூறுதல் – தொடர் விளையாட்டு!

தொடரெழுத அழைத்த சிநேகிதிக்கு நன்றி! சிநேகிதியின் பதிவெழுத வந்த கதையையும் வாசித்து விடுங்கள் – மிக சுவாரசியம்!

ஏற்கெனவே ஒருசில இடுகைகளில், எப்படி பதிவுலகிற்கு வந்தேனென்று சுருக்கமாக சொல்லியிருக்கிறேன்!

”பசும் புல்வெளியில் துள்ளித் திரிய மானுக்கென்ன தயக்கமா,
நந்தவனத்தில் தேன் குடிக்க வண்டுகென்ன தயக்கமா…
உங்கள் முன் உரையாட அடியேனுக்கென்ன தயக்கமா?” – இப்படிதாங்க ஏதொவொரு பேச்சுப் போட்டில பேசி ஜெயிச்சிட்டேன், ஆறாவதோ ஏழாவதோ படிக்கும்போது!!
அப்புறமா, ”பாரதியாம் பாரதி ” – இந்த ரேஞ்சுல கவிதை வேற எழுதி இருக்கேன்.
இதுல, டீச்சருங்க கொடுத்த உற்சாகத்தில தமிழ் நம்ம நாக்குல துள்ளி விளையாடுதுன்னு மமதை வேற!! இதையெல்லாம் ஒரு பெரிய தகுதியா நினைச்சு இந்த ”சித்திரக்கூடத்தை “ தொடங்கினதுல, இப்போ நட்சத்திரமாவும் ஆகிட்டேன்.

அதனால, நீஙக இப்போ திட்டனும்னா, இல்ல ஆட்டோ அனுப்பனும்னா, அனுப்ப வேண்டிய முகவரி : இதோ!! ஏன்னா, சுட்ஜி தான், நீங்க ஏன் தமிழுக்கு தொண்டாற்றக்கூடாதுன்னு, சும்மா இருந்த சங்கை…! 2004-ல “ஹனி டியூ’ ன்ற பேரில ஒரு வலைப்பூ தொடங்கிட்டு, அதை சுத்தமா மறந்திட்டேன்,ஒரே ஒரு பதிவு ஆங்கிலத்தில போட்டுட்டு. அவ்வளவு சுறுசுறுப்பு!”

சின்சியராக ஆணி பிடுங்குக் கொண்டிருந்த காலம் அது! நேரம் கிடைக்கும்போது கடமையாக RFC படிப்பதிலும், ஆன்லைன் ஃபோரங்களிலும் (வேலை தொடர்பான),Sysindia-விலும் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தேன். நிலா ரசிகன்(சரியான்னு தெரியலை) ரசிகவின் கவிதைகள்தான் ஃபார்வர்டு மெயிலாக கிடைக்கப் பெற்றேன். அதுதான் இணையத்தில், நான் முதன்முதலில் கண்ட தமிழெழுத்துகள்!அதைத்தாண்டி தமிழில் இணையத்தில் என்ன இருக்கிறதென்று ஆராய்ந்ததில்லை!

வேலை மாறியபோது, வெட்டியாக இரு மாதங்கள் செலவழிக்க நேர்ந்தது. சுதர்சனின் வலைப்பூ அப்போதுதான்(2005) அறிமுகம். அவரது வலைப்பூ வழியாக நூல் பிடித்து இளவஞ்சி, துளசி, கேவிஆர் வலைப்பூக்களை தொடர ஆரம்பித்தேன். அப்படியே, தமிழ்மணமும், தேன்கூடும் தினமும் எட்டிப்பார்க்கும் இடமாயிற்று! தினமும் சுதர்சனை ‘இன்றைக்கு ஏதாவது எழுதுவதுதானே ‘ என்று கேட்டு தொணப்ப, பதிலுக்கு அவர் ‘நீங்கள் ஏன் தமிழுக்குத் தொண்டாற்றக் கூடாது’ என்று கேட்டுக்கொண்டதும் (ஓக்கே..ஓக்கே..கூல்!) உருமாறியது ஹனிடியு – சித்திரக்கூடமாக!!

ஆயா, எனக்கு சின்னவயதில் ஒரு கதை சொல்வார். சித்திரக்குள்ளன் கதை. ஏழு குழந்தைகளுடன் ஒரு அம்மா- அப்பா. கடைசி பையன் குள்ளனாக இருப்பான். பஞ்சத்தில் அவனது அம்மா-அப்பா குழந்தைகளை காட்டில் விட்டு விட சித்திரக்குள்ளன் அவனது புத்திசாதுர்யத்தால் ஒவ்வொருமுறையும் வீட்டிற்கு அழைத்து வந்துவிடுவான். ஒருமுறை ராட்சதனிடம் மாட்டிக்கொண்டச் சித்திரக்குள்ளன் எல்லோரையும் தப்புவித்து, ராட்சதனின் வீட்டில் எப்படிச் சந்தோஷமாக வாழ்ந்தார்கள் என்பது கதை! எனது ஃபேவரிட் கதை! எத்தனை முறை நான் கேட்டிருப்பேன், எத்தனை முறை ஆயாவும் சொல்லியிருப்பார்களென்றுத் தெரியாது! எனது எட்டு வயது வரை இந்தக் கதையை தினமும் கேட்டுத்தான் தூங்கியிருக்கிறேன். எனக்குள் ஆழப்பதிந்தச் சித்திரக்குள்ளனுக்காக வைத்த பெயரேச் ‘சித்திரக்கூடம்’!! இந்தபெயர் சித்திரக்குள்ளனையோ கதையை மட்டுமில்லாமல், நானும் ஆயாவும் செலவழித்த பொழுதுகளை, இரவின் இருட்டில் ஆயாவின் மேல் கால் போட்டுக்கொண்டு, ராட்சதன் வரும்போதெல்லாம்(கதையிலேதாங்க!) ஆயாவை இறுக்கமாக கட்டிப்பிடித்துக்கொண்டு, கடந்த நாட்களின் நினைவுகளுக்காக வைத்த பெயர் – ”சித்திரக்கூடம்”!

முதலில், சுரதாவில் தங்கிலிஷில் எழுதி, யுனிகோடிற்கு மாற்றிக் கொண்டிருந்தேன். கொஞ்சநாட்களிலேயே இலகலப்பை-க்கு மாறிவிட்டேன். ஆரம்பத்தில், எனது சிறுவயது நினைவுகளை எழுதத்தான் தொடங்கினேன். ஒரு சில கதைகள், ஃபார்வர்டு மெயிலை தமிழாக்கப்படுத்தி இடுவது என்று ஒரே மொக்கைகள்தான். பின்னூட்டங்களெல்லாம் இட்டது கிடையாது. பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வதும் இல்லை! கிடைக்கிற நேரத்தில் நாலு பதிவுகளைப் படித்துவிட்டு செல்லலாம் என்ற எண்ணமாகவும் இருக்கலாம்!( இப்பொழுது, பப்பு தனியாக விளையாட ஆரம்பித்துவிட்டதால் தொடர்ந்து பதிவுலகிற்கு வர முடிகிறது!)

பப்புவின் பேச்சுகளும், அவளிடம் நான் கண்டு வியக்கும் குறும்புகளுமே சித்திரக்கூடத்தை தூசு தட்ட வைத்தது! பதிவு என்பது கதை, கவிதை எழுத மட்டும்தான் என்பது போன்ற தோற்றத்தை (பயத்தை!) கொண்டிருந்த போது, ஆயில்யனின் “இட்லிபொடி‘ இடுகையை வாசிக்க நேர்ந்தது! அட, ஒரு இட்லி பொடிக்காக ஒரு இடுகையா – இப்படிக் கூட எழுதலாம் போல என்று என்னை எண்ண வைத்து – இப்போது நானும் மொக்கைகளை தொடர்ந்துக் கொண்டிருக்கிறேன்! 🙂 வாழ்த்துகள் ஆயில்ஸ்!!

என்னிடம் ஒரு பழக்கம் – எதுவுமே கொஞ்ச நாளைக்குத்தான் எனக்கு சுவாரசியமாக இருக்கும், அப்புறம் அதனை திரும்பியே பார்க்க மாட்டேன். பாட்டு கேட்க பிடிக்கும் என்றால், அதற்காக நேரம் செலவழித்து தேடித் தேடி கலெக்ட் செய்து வைப்பேன் – அதன்பின அப்படியே விட்டுவிடுவேன். ஒரு எழுத்தாளர் புத்தகம் படித்து பிடித்து விட்டால்,அவரது எல்லா நாவலையும் வாசித்து விடுவது – ஸ்டெல்லா புரூஸ், பாலகுமாரன், சுஜாதா, கல்கி, அம்பை, சிட்னி இப்படி – அப்புறம் அவர்கள் பக்கமே செல்வது இல்லை! அதே போல், உடைகளாக வாங்கித் தள்ளிக் கொண்டிருப்பேன் – அதன்பின் ஒரு வருடத்திற்கு வாங்க மாட்டேன், போரடித்துவிடும்!திரும்ப், என்றைக்காவது அதே ஆர்வம் துளிர்விடும்! இது ஏதும் மேனியாவாவென்றுத் தெரியவில்லை – But, I am like this only – weird, huh! எந்த பொழுதுப்போக்கையும் இவ்வளவு நாட்களாக தொடர்ந்ததில்லை – என்னைத், தொடர்ந்து பதிவெழுத வைப்பதே பதிவுலகின் வெற்றி! 😉

வாசிப்பதே மிகவும் அரிதாகிப் போன எனக்கு, தமிழ்மணம் நல்ல இடுகைகளை அடையாளம் காண்பித்திருக்கிறது! பதிவுலகில், நல்ல நண்பர்களைப் பெற்றிருக்கிறேன்! அவர்களில் ஒரு சிலரை சந்தித்துமிருக்கிறேன்! என்னை தினம் தினம் இங்கு வர வைப்பதற்கு இவையே காரணம்! தொடர்ந்து வாசித்து, பின்னூட்டமிட்டு உற்சாகப் படுத்தும் தங்களன்பிற்கு நன்றி! 🙂

ஆறு தன் வரலாறு கூறுதல்”- கண்டிப்பாகத் தமிழ் பரிட்சைக்கு வருமென்று, ஆறாவது/ஏழாவது படிக்கும்போது சீனியர்களால் பயமுறுத்தப்பட்டது. ஆனால், எந்தப் பரிட்சையிலும் வந்ததில்லை! :))

நான் அழைக்க விரும்பும் நால்வர்,

1. செல்வநாயகி
2. சென்ஷி
3. தீபா
4. சின்ன அம்மிணி

உடனே, இடுகையைத் தொடர வேண்டிய கட்டாயமில்லை. நேரம் கிடைக்கும்போது, தாங்கள் பதிவெழுத வந்தக் கதையையும் சொல்லுங்கள்….:-)

விதிமுறை:

1. ஒவ்வொருவரும் தாம் வலைபதிய வந்த கதையை, இன்று வரையான தமது அனுபவங்களைச் சொல்ல வேண்டும்.

2. கதை சொல்லி முடிந்ததும் விளையாட்டுக்கு 4 அல்லது அதிலும் கூட 🙂 பேரை அழைக்க வேண்டும். அழைப்பதோடு அழைப்பவர்களுக்கு அழைப்பினைத் தெரியப்படுத்தவும் வேண்டும்.

3. கதை சொல்லுபவர்கள், தாம் தமிழை எழுதப் பயன்படுத்திய கருவிகள் தொழிநுட்பங்கள், சந்தித்த சிக்கல்களைச் சொல்லவேண்டும்.

(மேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் சேர்க்கப்படலாம்.)

Add a comment செப்ரெம்பர் 6, 2009

”உன்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் யாரு?”

”ஹேமா (இது இந்த ஹேமா!), சுஜா, குணா, நித்யா, ஷபீனா, ரேணு, சரளா, ஞானம்,தினேஷ்,ஷ்யாம்,ப்ரகாஷ் அப்பறம் ட்யூஷனிலே மேரி,கவிதா,அபிக்கூர் ரெஹ்மான்…..”

”இரு..இரு…பெஸ்ட் ப்ரெண்ட்னா உங்க கிளாசையே சொல்றே ? பெஸ்ட் ப்ரெண்ட்னு ஒரே ஒருத்தர்தான் இருக்க முடியும். யாராவது ஒருத்தங்ககிட்டே க்ளோஸா இருப்பே இல்ல….அவங்க பேரு சொல்லு!!”

ரொம்ப யோசிக்கிறேன்!

இப்போவரைக்கும் பெஸ்ட் ப்ரெண்ட்ஸ்/க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் குறித்து ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. எனக்கு, எல்லோரும் ஃப்ரெண்ட்ஸ்தான். பெஸ்ட் ஃப்ரெண்ட்ன்னு பார்த்தா எல்லோருமே எனக்கு பெஸ்ட் ப்ரெண்ட்தான் – பெஸ்ட்டா இல்லையான்னு அவங்கதான் சொல்லனும்!! எல்லோருக்கும் கொடுப்பதற்கும், எல்லோரும் கொடுப்பதற்கும் – எல்லோருக்குள்ளும் பெஸ்ட்கள் இருக்கிறதுதானே!!ஒரு புன்னகையோ ஒரு நலம் விசாரிப்போ ஒரு தலையசைப்போ இல்லாமல் எவரையேனும் கடந்துவிட முடியுமா!

ஓக்கே…புரிஞ்சுடுச்சா…அமுதா கொடுத்த இந்த நட்பு விருதை, என்னாலே சிலருக்கு மட்டும் கொடுத்துட்டு சிலருக்குக் கொடுக்காம இருக்கமுடியாது..ஏன்னா,நீங்க எல்லோருமே என்னோட ப்ரெண்ட்ஸ்!! பெஸ்ட் ப்ரெண்ட்ஸ்!!

தமிழ்மணத்தில் உங்கள் இடுகைகளை வாசிக்கிறேன் – உங்கள் பின்னூட்டங்களை ரசிக்கிறேன்!! இந்த ‘சித்திரக்கூடம்’ என்னோட இ-வீடு அல்லது இ-ஃப்ளாட் – உங்கள் பதிவுகள் அண்டைவீடு – இப்படித்தான் உங்களோடு என்னை associate செய்துக்கொள்கிறேன். எனது உலகையும் உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன்! இதில் virtual friends என்ன…real friends என்ன?! அதனாலே நீங்க எல்லோருமே என்னோட ப்ரெண்ட்ஸ்தான்! இந்த விருதை எல்லோருக்குமே – எனது அண்டைவீட்டார் அனைவருக்குமே – நட்போடு வழங்குகிறேன்!! 🙂

இதையேத்தான் கொஞ்சம் வேறமாதிரி சொல்லியிருக்கேன் போல!! அவ்வ்வ்வ்வ்!I am like that..என்ன பண்றது..எனக்கு மனிதர்களைப் பிடிக்கிறது!!

Add a comment ஜூலை 31, 2009

32 கேள்விகள் – தொடர்பதிவு!

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

வீட்டில் வைச்சதால்! வீட்டில் எல்லோருக்கும் தமிழ்பெயர்தான்.
கண்டிப்பா பிடிக்கும், இந்தப் பெயரின் தனித்தன்மைக்காக! நான் இதுவரை படித்த/வேலை செய்த இடங்களில் எனது பெயர் கொண்ட இன்னொருவரை பார்க்க வில்லை! இதில் எனக்குப் பெருமை கலந்த மகிழ்ச்சியும் கூட! 🙂

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

பிரபாகரன் இறந்துவிட்டார் என்று சேனல்களில் காட்டியதைக் கண்டு துக்கம் தொண்டையை அடைக்க கண்கலங்கினேன்.

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பிடிக்கும்! ஆனா சமயங்களில் எனக்கே புரியாது. அதனால பிடிக்காம போய்டுமா என்ன?!

4. பிடித்த மதிய உணவு என்ன?

மதிய உணவு என்றில்லை..எப்போதுமே பிரியாணிதான்! ஒன்லி ஆம்பூர் பிரியாணி ஃப்ரம் ஆம்பூர்!!!

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா? இது உண்மையான கேள்வி அல்ல! தொடரை ஆரம்பித்த நிலாவும் அம்மாவும் பதிவில் இருக்கிற உண்மையான கேள்வி: நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

ஹ்ம்…யோசிக்க வேண்டிய விஷயம்!

6. கடலில் குளிக்க பிடிக்குமா….அருவியில் குளிக்க பிடிக்குமா?

பாத்ரூமில்தான் குளிக்கப் பிடிக்கும்!

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்கள்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம் : எனது தன்னம்பிக்கை, தைரியம்!

பிடிக்காத விஷயம் : அநாவசிய செண்டிமெண்ட் மதிப்புகள், மிகவும் எளிதில் உணர்ச்சிவசப்படுதல் – தேவையில்லாத காரணங்களுக்கு! (அது தேவையில்லாததுன்னு
விளைவுகளை பார்த்துத்தானேத் தெரியும்!!)

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்த விஷயம் : எந்த சண்டையையும் ஒரு நாளைக்கு மேலே வளர விடாதது!

பிடிக்காத விஷயம் : எப்போதும் நான் சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கறது!

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

பெரிம்மாதான்.

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

ஆகாயநீல டீ-ஷர்ட், பிஜ் கலர் காஷுவல்

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

“ரெக்ரஷன் ஓடுச்சா? 4 பிளாட்பார்மிலே லெவன்-சீரிஸ்ல ப்ராப்ளம் இல்ல!” – பக்கத்து க்யூபிலிருந்து!

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

என்னால் “எனக்கு பிடித்த வர்ணம் இது”வென்று ஒரு தீர்மானத்திற்கு வர இயலாது!

14. பிடித்த மணம்?

பப்பு தலையிலிருந்து வரும் ஒரு (வேர்வை கலந்த/பார்பிக்யூ) மணம்!

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

g3 – g3 பத்தித் தனியா சொல்லனுமா என்ன?! இவங்களோட நட்பு பாராட்டும்தன்மையைப் (friendliness) பார்த்து அசந்து போயிருக்கேன்! உங்களுக்கு நெருக்கமான ஒரு தோழியை
இவங்களுக்குள்ளே பார்க்கலாம்!

கவிதா – எதைச் சொல்றது, எதை விடறது!! :-))

ராப் – ராப்-இன் அதிரடி ஸ்டைல்! எதையும் கலக்கலான நடையில் எழுதுவாங்க!புயல் மாதிரி வந்தாங்க, இப்போ அப்போப்போ எட்டிப் பார்க்கறாங்க! இந்த கேள்விக்கெல்லாம் ராப் எப்படி அவங்க பாணியில் பதில் சொல்றாங்கன்னு பார்க்கத்தான்!

ஆயில்யன் – சின்னபாண்டி!!

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

விக்னேஷ்வரி – கிராமத்து இல்லைகளும், நகரத்து தொல்லைகளும்

17. பிடித்த விளையாட்டு?

இறகுபந்து, சதுரங்கம்!

18. கண்ணாடி அணிபவரா?

ஆமாம்.

19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

women exploitation இல்லாத எந்த படமானாலும்!

20. கடைசியாகப் பார்த்த படம்?

சுப்ரமணியபுரம்

21. பிடித்த பருவ காலம் எது?

மார்ச்-ஏப்ரலில் நம்ம ஊரில் என்ன பருவமோ அது!

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

Power of Positive mom

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

படங்கள் எதுவும் வைத்துக் கொள்வதில்லை!

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம் : பள்ளி/கல்லூரி மேடைகளில் பரிசுக்காக என் பெயரை அழைக்கும் அறிவிப்பு சத்தம்!

பிடிக்காத சத்தம் : எவர்சில்வர் சாமான்களை தரையில் இழுக்கும் சத்தம் பிடிக்காது! ஆம்புலன்ஸ் சத்தம் – இது எனனி தாண்டிசெல்லும்போது ஒரு அமானுஷ்யமான பயம் அல்லது சொல்லமுடியாத பயங்கலந்த உணர்வு! (ஆம்புலன்ஸுக்கு அவசியம் இல்லாத உலகு!!)

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

மவுன்ட் அபு!

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

ஓ..எவ்ளோ நேரம் வேணாலும் தூங்குவேன்! 🙂

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

எதுஎதற்காகவோ எதுஎதையோ காம்ப்ரமைஸ் செய்துக் கொண்டுதான் வாழவேண்டும் என்கிற
உண்மையை! அல்லது, கல்யாணம் பண்ணிக்கிட்டா பொறுப்பு வந்துடனும்னு நினைக்கறதை!

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சுயநலம்!

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

ஹவாய், ஆஸ்திரேலியா (இப்போ வேணாம்ப்பா!!)!

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

சில சமயங்களில் நான் தைரியசாலின்னு நினைப்பேன். சிலசமயங்களில் நிறைய கற்பனை செஞ்சு பயந்தாங்கொள்ளியா இருப்பேன். பலசமயங்களில் இவை இரண்டுக்கும் நடுவில் குழப்பத்துடன் இருப்பேன்!! இப்படி இல்லாம, வீட்டுலே சொல்ற மாதிரி “பொறுப்போட” இருக்கலாமோன்னு !!

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

நானே கார் ஓட்டிச்செல்ல!

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

Stop bugging me stop bothering me
Stop bugging me stop forcing me
Stop fighting me stop yelling me
Stop telling me stop seeing me
It’s my life!

இது டாக்டர்.ஆல்பனோட பாட்டு வரிகள்! ஏனோ இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்!
வாழ்வு பற்றி ஒரு வரி-ல சொல்லத் தெரிஞ்சா, இந்நேரம் ஹைக்கூ-ல்லாம் எழுதியிருக்கமாட்டேனா!! 🙂

post-edited: g3 ஏற்கெனவே இடுகையிட்டதால், நசரேயனை அழைக்க விரும்புகிறேன்! அவரது நகைச்சுவை பதிவுகள் பிடிக்கும்!

Add a comment ஜூன் 4, 2009

அழியாத கோலங்கள் – தொடர் பதிவு

அழைத்த தீபாவிற்கும் , தொடங்கி வைத்த மாதவராஜ் அவர்களுக்கும் நன்றிகள்!

ஹாய் மீனு,

உன் கடிதம் கிடைத்தது.எத்தனை வருடங்களுக்குப் பிறகு….!!! எப்படி இருக்கிறாய்? உன் மகள் மற்றும் கணவர்? இங்கே நாங்களனைவரும் நலமே!

நீ எழுதியக் கடிதம் எனக்குள் பல நினைவலைகளைத் தூண்டிவிட்டது! பழைய கடிதங்களையும், ஆட்டோகிராப் நோட்டுகளையும் தோண்டி எடுத்துப் படித்துக் கொண்டிருந்தேன்! இப்போதுதான் நாம் சந்தித்ததுபோல் இருக்கிறது, ஆனால் எவ்வளவு நடந்துவிட்டிருக்கிறது! oh..our sweet bygone days!

பலசமயங்களில் நான் உன்னை நினைத்துக்கொண்டிருக்கிறேன், ஆனால் எந்தச் சூழ்நிலைகளில் என்று இப்போது ஞாபகமில்லை! உன்னிடம் பகிர்ந்துக் கொள்ள நிறைய இருப்பதுபோலவும் தோன்றுகிறது, அதேசமயம், பேசுவதற்கு ஒன்றுமில்லாததுபோலவும் இருக்கிறது..ம்ம்..உண்மைதான், குழந்தைகளையும், குடும்பத்தைத் தாண்டி பேச
ஒன்றுமில்லாதது போல்தான் இருக்கிறது..நான் பார்த்த கடைசி ஷாருக் படம் கூட நினைவில் இல்லை! ஹேய்..கடைசி எக்சாம் முடித்து, நம் கிளாஸ்மேட்ஸ் அனைவருடனும்கூட நாம் தியேட்டரில் பார்த்தோமே..என்ன படம் அது?!

முன்பு, எனது கஸின்சிஸ்டர்ஸை பார்த்து வியந்திருக்கிறேன், இவர்களுக்கு குழந்தைகளைத் தாண்டிப் பேச ஒன்றுமிராதாவென்று, எனக்கு ஒரு குழந்தைப் பிறக்கும் வரை! எங்கோ படித்தது தான் நினைவுக்கு வருகிறது, மின்சார ரயிலிலிருந்து இறங்கியதுமே, ஆண்கள்
டீ குடிக்கவோ பேசவோ நண்பர்களுடன் கூட்டாகப் போய் விடுகிறார்கள், ஆனால், பெண்கள் கீரை வாங்கவும், காய்கறி பேரம் பேசி வாங்கவும் தயாராகி விடுகிறார்களென்று! எவ்வளவு உண்மை! ஒருவேளை நாம் மகள்களாக வளர்க்கப் படாமல், மருமகளாக்கப்படுவதற்காகவே
வளர்க்கப் படுகிறோமோ!!வீடு, குழந்தைகளென்று ஒரு விடுபடவே முடியாத நத்தைக்கூடு நம் கண்களுக்குத் தெரியாமலே நம் முதுகில் ஏற்றிவிடப்படிட்டிருக்கின்றதோ, மீனா! விடுபட்டாலும் எங்கே போக!!

நீ வேலை செய்கிறாயா, மீனா?! நான் மூன்று கம்பெனிகள் மாறிவிட்டேன்….ஆபிஸூம், அதைவிட்டால் வீடும்தான் மாறிமாறி…மீனா, ஆன்சைட் போவதுதான் என் கனவு என்று சொல்லிக்கொண்டிருப்பேனே..ஆனால், இன்னும் ஒருமுறைக்கூட போகவில்லை! வாய்ப்புக் கிடைக்காமலில்லை, ஆனால், கல்யாணத்திற்கு முன் அம்மா போக விடவில்லை, கல்யாணத்திற்குப் பின் சந்தர்ப்பம் போக விடவில்லை! எங்கே, வீட்டையும், குட்டீஸையும் விட்டுவிட்டு போவது..சிலசமயங்களில் தோன்றுகிறது, ஒருவேளை நாம் தான் ரொம்ப நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, நாம் இல்லாவிட்டால் ஒன்றுமே நடக்காதென்று!ஒருவேளை நாம் care-givers-ஆக இல்லாமலிருந்தால், equations மாறுமோ! மீனா, நாம் லைப்ரரில்யிலிருந்து எடுத்துப் படித்தோமே…அம்பையின் புத்தகம்..வீட்டின் மூலையில் சமையலறை..ஞாபகமிருக்கிறதா..நிறைய விவாதித்தோமே! நான் இதுவரைக்கும் ஆயிரம் தோசைகள் செய்திருப்பேனா..நீ எவ்வளவு செய்திருப்பாய்?:-)

இன்னும் ஒன்று சொல்லவேண்டும் மீனா, யூ வில் பி எக்சைட்டட்..எங்கள் அலுவலகத்தில் நாங்கள் பெண்கள் மட்டும் ஒரு குழுமம் உருவாக்கியிருக்கிறோம்..எங்காவது ஓரிடத்ட்க்ஹில் நாம் நாமாக இருக்கவேண்டுமில்லையா! எங்கள் கம்பெனி ஜிஎம் முதல் எல்லோரும் அதில்! நினைவிருக்கிறதா, நாம் காலேஜில் விளையாடுவோமே கிறிஸ்மா, கிறிஸ்சைல்ட்…அதிலிருந்து ஆரம்பித்து, காலேஜில் ஒரே கலர் தீம் வைத்து உடைஉடுத்திக்கொண்டு வருவோமே..அப்புறம் புடவை டே இதெல்லாமே..இங்கேயும்..விளையாட்டுப் போட்டிகள், எல்லோரும் ஒரே கலர் குர்தா..மாதத்தில் அல்லது இருமாதங்களுக்கு ஒருமுறை வெளியே சென்று ப்ரீக் அவுட்..என்றாவது ஒரு நாள் பாட் லக்! எல்லாம் சிண்ட்ரெல்லாவின் காலணியில்தான்!

இப்படி நாமாக ஏதாவது சுவாரசியமாக செய்துக்கொண்டால்தான் உண்டு! சம்திங் டூ கீப் அஸ் கோயிங்! மதிய உணவிற்கு லேடிஸ் மட்டுமாக அமர்ந்து சாப்பிடுவோம்..அப்படிதான் நேர்ந்துவிடுகிறது..அவ்வளவு கிண்டலும் கலாட்டாவுமாக, சிரிப்புமாக..அப்போதுதான் தெரியும், ஒவ்வொருவருக்குள்ளேயும் ஒரு குறும்புப்பெண் ஒளிந்துக்கொண்டிருப்பதை! பசங்க கிண்டல் செய்வாங்க, “என்ன மேடம், அவ்வளவு சிரிப்பு, நீங்களா ஒருத்தருக்கொருத்தர் பார்த்து, ஹேய், நீ இன்னிக்கி ரொம்ப அழகாயிருக்கே” அப்படின்னு சொல்லிட்டு சிரிச்சுக்குவீங்களா” அப்படின்னு! எவ்வளவு கிண்டல் பாரேன்! அப்புறம் பாட் லக் வைத்திருந்தோம்..அதுவும் நாங்கள் பெண்கள் மட்டும்! உடனே,பசங்க, “மேடம், இது சூசைட் அட்டெம்ட் இல்லையா, நீங்களே சமைச்சு நீங்களே சாப்பிடறது?!” “நீங்க இபப்டில்லாம் கிண்டல் செஞ்சா உங்களுக்கு கொடுத்துடுவோம்னு நினைக்காதீங்கன்னு” சொல்லிட்டு நாங்க ஜாலியா பாட் லக் எஞ்சாய் செய்தோம்! ஒன்றாக ஒருமுறை சினிமாவுக்குக்கூட போயிருக்கிறோம், அலுவலக் பெண் தோழிகளாக! இதுதான் எங்களைப் பொறுத்தவரை மிகப்பெரிய மகிழ்ச்சி, அன்றாட வாழ்வின் இறுக்கங்களிலிருந்து விடுபட!

ஓக்கே மீனா, ரொம்ப போரடிக்க விரும்பவில்லை! நாந்தான், கடிதம் எழுதினா பக்கம் பக்கமா பரிட்சை பேப்பரை விட அதிகமா எழுதுவேனே…விடுமுறைக்கு நாங்கள் சென்னை வருவோம், தொலைபேசியில் அழைக்கிறேன்!

N. B: இன்னும் இந்த “Guess me!” அப்புறம் “open with smile” இதெல்லாம் போடுவதை விடமாட்டியான்னு திட்டாதே!geeee!

With sunshine and rainbows
கVதா!! 🙂 (இப்படி சைன் செய்து நீண்ட நாட்களாகிவிட்டன, மீன்ஸ்!)

வெகு இயல்பாக, அதே சமயம் நம்மையும் நமது அனுபவங்களோடு அசை போடவைக்கும்படியும், ‘மனசைப் பிழியற’ மாதிரியும் பதிவெழுதும் நமது அமித்து அம்மாவை இதைத் தொடர அழைக்கிறேன்!

Add a comment ஏப்ரல் 1, 2009

என்னைக் கவர்ந்தவர்கள்!!

சின்னஞ்சிறு வயதில் கார்ட்டுன் மாந்தர்களை பிடித்திருந்தது. ஏழு அல்லது எட்டு வயதில் வஉசியைப் பிடித்திருந்தது, தம்பிக்கு அந்தப் பெயர்தான், அதுவும் தலைப்பெழுத்தையும் சேர்த்தே வைக்க வேண்டுமென அடம்பிடிக்குமளவிற்கு! பள்ளி பருவத்தில், ஒரு சம்மர் கேம்பில், இதே கேள்வியை எதிர்கொண்டபோது, எனது பிடித்தவர்கள் பட்டியல், அன்ட்ரூ அகாஸி, Gaby (Gabriella sabatini), பிரபாகரன், வீரப்பன் மற்றும் நாடியா கோமோன்ஸ்க்கி(ஜிம்னாஸ்டிக் வீராங்கனை) என்றிருந்தது! கல்லூரி பருவத்தில், கிரண் பேடியும், ஷாருக்கும், வீன்ஸ் வில்லியம்ஸூம், கலாமும் என்று பட்டியல் வளர்ந்தது!

one fine day, I learnt, எங்கோ இருப்பவர்களை விட, நமக்கு மிக மிக அருகில், நம் வாழ்வின் அங்கத்தினர்களின் தாக்கமே அதிகமென்றும், அவர்களின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் உண்டென்றும்,அவர்களும் தூண்டுகோல்களேயென்றும்!!
இப்போதெல்லாம், இவரைப் பிடிக்கும் அல்லது பிடிக்கவில்லையென்று சொல்லிவிடமுடிவதில்லை! ஒருவேளை நான் வளர்வது நின்று விட்டதாவெனத் தெரியவில்லை..ஆனால், ஒவ்வொரு மனிதரிடமும் ஏதோவொன்று எனை ஈர்த்தபடிதான் இருக்கிறது! பிடிக்காத பகுதி வந்தால் தள்ளிவிட்டு படிப்பதும், பிடித்திருந்தால் திரும்பத் திரும்ப படிப்பதுபோல, தள்ளி இருப்பதும், அருகாமைப்படுவதுமாய்.. சுவாரசியமாகத்தான் இருக்கிறது, புத்தகம் படிப்பதைப் போல் மனிதர்களை படிப்பதும்!

என்னைக் கவர்ந்தவர்கள் எனும் தொடர்பதிவுக்கு சகோதரர் ஜமால் அழைத்திருந்தார். மிகத் தாமதமாக பதிவிட்டிருக்கிறேன்….தவறாக எண்ணமாட்டீர்கள் என் நினைக்கிறேன்!! எல்லோரும் மனசை பிழியறமாதிரி எழுதியிருக்கறதால எதுக்கும் நானும் என் பங்குக்கு அதையே செய்யனும்னுதான் சின்னதா எழுதிட்டேன்! 🙂 அப்புறம் இந்த டேக்கை விருப்பமிருப்பவர்கள் தொடரலாம்..

Add a comment மார்ச் 30, 2009

பிடித்தமானவர்கள் – பப்புவின் லிஸ்ட்!

நிலாவும் அம்மாவும் நெடுநாட்களுக்கு முன் பப்புவை ஒரு தொடர்பதிவு-க்கு அழைத்திருந்தார்கள்! பப்புவுக்கு பிடித்த நபர்கள் பற்றி!

பப்புவிற்கு எல்லாரையுமே பிடிக்கும்..அவளிடம் பேசுகிற, அவளைப் பார்த்துக் புன்னகைத்துக் கொண்டே எங்கள் தெருவைக் கடக்கும் நபர்கள், பலூன் விற்கும் ஆயா, தண்ணீர் கொண்டு வரும் அண்ணா என எல்லோரையுமே! மெத்தப் பிடித்தது, ஆயாக்களையும் தாத்தாவையும்! ஆனால் பப்புவுக்கு பிடித்த இன்னொரு பெரிய பட்டியலுண்டு!

சண்முகம் ஆயா – இவர் பப்புவை 4 மாதத்திலிருந்து 14 மாதங்கள் வரை பார்த்துக் கொண்டார்…இல்லை…வளர்த்தார் என்றே சொல்லலாம். கும்பகோணத்திலிருந்து வந்து எங்கள் வீட்டோடு தங்கியிருந்தார். “டாடா சொல்லு” என்று பப்புவிற்கு கையை பிடித்து ஆட்டுவார், நாங்கள் அலுவலகம் செல்லும்போது! அவரது பெண்ணிற்கு வேலைக் கிடைக்கவே சென்றுவிட்டார், பெண்ணின் திருமணம் முடிந்தபின் வருவதாகக் கூறி! போகும்முன் பப்புவின் ஃபோட்டோவை வாங்கிக்கொண்டார் ஞாபகமாக…:-)

குண்டு ஆயா – பக்கத்துத் தெருவிலிருந்து வந்தார். ஒரு மாதம் மட்டுமே இவரால் தாக்குப் பிடிக்க முடிந்தது..பப்பு ஓடியாட ஆரம்பித்திருந்ததால், அவளின் பின் செல்ல மிகவும் கஷ்டப்பட்டார். முடியாததினால், விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டார்.

செல்வி – I – பாண்டிச்சேரியிலிருந்து வந்தவர். வீட்டோடு தங்கியிருந்தார். அவரதுக் குடும்பசூழல் காரணமாக ஒரு மாதத்திலேயே விடைபெற்றுக் கொண்டார். ஆனால் பப்புவோடு ஓடியாடி விளையாடுவார்.

திருப்பத்தூர் ஆயா – இரண்டு மாதங்கள் வரை பப்புவை கவனித்துக் கொண்டார். பப்புவோடு சொப்பு வைத்து விளையாடுவார். பப்புவை வாக்கிங் அழைத்து செல்வார். தூக்கி வைத்துக் கொள்ள அலுத்துக் கொண்டதேயில்லை, முழங்கால் வலியிருந்தபோதும்!

செல்வி – II – ஏஜன்சி மூலமாக வந்தவர். ஒரு மாதம் மட்டுமே தாக்குப் பிடிக்க முடிந்தது, பப்பு இவரிடம் விளையாட மறுத்ததால்! பப்பு ஒருவரை மறுதலிப்பது இதுவே முதன்முறை!

ராணி – இவர் வரும் சமயம் பப்புவுக்கு தெரிந்திருந்தது, வருபவர்கள் அவளைக் கவனித்துக் கொள்ளத்தான் வருகிறார்களென்று. அதனால் அவளாகவே முதலில் போய் அவர்களிடம் பழக் முற்பட்டாள். இவரும் ஏஜென்சி மூலம் வந்தவர். பெரம்பூர். பதினொரு மாதங்கள் வரை வீட்டோடுத் தங்கி இருந்தார். பப்புவிற்கு சப்பாத்தி மேல் விருப்பம் ஏற்பட செய்தவர். பப்புவின் விளையாட்டு சாமான்களை வைத்து விதவிதமாக விளையாட்டுக் காட்டுவார். பத்திரமாகப் கவனித்துக் கொண்டார், பொறுமையோடும்! பப்பு இப்போதும் பப்பு இவரை சிலசமயங்களில் கேட்பாள்.இவர் விட்டுச் சென்றுவிட்ட பின்பும் பப்பு இவரை மறப்பதுக் கடினமாக இருந்தது!

தனம் – இவரும் ஏஜென்சி மூலம் வந்தவர். அரக்கோணம். வீட்டோடு தங்கியிருந்தார். பப்புவை சமாளிக்க கஷ்டப்பட்டார். இரண்டு மாதங்களில் விடைப் பெற்றுக் கொண்டார்.

சரளா – ஏஜென்சி மூலம் திருச்சியிலிருந்து வந்தவர். இவர் பப்புவோடு ஓடியாடி விளையாட அலுக்கவே மாட்டார். எப்படியாவது சாப்பிட வைத்துவிடுவார். பப்புவை யானையேற்றிக் கொண்டு வலம் வருவார். அவரதுக் குடும்பச் சூழல் காரணமாக மூன்று மாதங்களிலேயே விடைப் பெற்றுக் கொண்டார். பப்பு இன்றும் கூட இவரைக் கேட்பாள். பப்புவின் நினைவுகள் சில சமயம் இவரை சுற்றி ரீங்காரமிடுவதுண்டு.

இவர்களிருக்கும் வரையிலும், சென்றபின்னும் சிலரை இன்னும் நினைவில் கொண்டும்… பப்புவிற்கு, பிடித்தமானவர்களாகவே இருந்திருக்கிறார்கள் இவர்கள் ஏதாவதொரு வகையில். பப்புவைக் கவர்ந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள், அவரவர் வழிகளில்!
கவலையின்றி நான் வேலையில் கவனம் செலுத்த உதவியிருக்கிறார்கள். சம்பளத்துக்காகத்தானென்றாலும், பாதுகாப்பாக பப்பு இருக்கிறாள் என்று என்னை உணர வைத்திருக்கிறார்கள். சிலசமயங்களில் பப்பு என்னை விடுத்து, அவர்களிடம் உணவருந்தப் பிரியப்பட்டிருக்கிறாள். அவர்களிடமிருந்து என்னிடம் வர மறுத்திருக்கிறாள்! அவர்கள் பிரிந்துச் சென்றபோது வருந்தியிருக்கிறாள்! பப்புவின் சின்னஞ்சிறு உலகம் இவர்களால் ஆனதுதான்!

அதற்காக, பிரச்சினைகள் இல்லாமலில்லை..there were so many problems..hiccups. (hmm..that deserves a seperate post). ஆனால், இப்படியொரு supporting system இருந்ததால்தான், நான் மற்ற ஆப்ஷன்களை(creche etc) பற்றி நினைக்க முடியாமலிருந்தது. we, as a family, salute these ladies who dare to come out of their family and served us.

இந்த தொடர்பதிவுக்கு நான் அழைப்பது, சசியையும் (பத்மாவிற்கு பிடித்தவர்களைப் பற்றியும்), வித்யாவையும்(ஜூனியருக்கு பிடித்தவர்கள் பற்றியும்)!

Add a comment மார்ச் 5, 2009

வழக்கொழிந்த தமிழ் சொற்கள் (தொடர்பதிவு)

வழக்கொழிந்த தமிழ் சொற்கள் எழுத அமித்து அம்மா சொல்லியிருக்காங்க! நன்றி அமித்து அம்மா!

அவங்களே சொல்லியிருக்கற மாதிரி, உண்மையில் நாம் பேசுவது தமிழா என்பதில் சந்தேகமே! காலையில் எழுந்து “பல் விளக்கு” என்று பப்புவிடம் சொல்லாமல், “ப்ரஷ் பண்ணியா?” என்றுதானே கேட்கிறேன்!! ஆனால், என் ஆயா அப்படி கிடையாது. அவர் உபயோகிப்பதில் பாதியளவுதான் நான் தமிழ் வார்த்தைகள் பேசுகிறேன். அவர் சொல்லும் பல வார்த்தைகள் தூயத்தமிழேயானாலும், கிண்டல் செய்திருக்கிறோம் அவரை அவ்வார்த்தைகளை வைத்து!! உறவினர்கள் தொலைபேசியில், “பப்புவை கூப்பிடுங்க” எனும்போது பப்பு உடனே வராவிட்டால், “சீக்கிரம் வா, காத்துக்கிட்டிருக்காங்க இல்ல” என்பார். ஆனால் நான், “சீக்கிரம் வா, வெயிட் பண்றாங்க இல்ல” என்கிறேன்!

இந்தப் பதிவில் என் ஆயா உபயோகிக்கும், ஆனால் அவர்களுக்கு இரண்டாவது தலைமுறையான நான் உபயோகிக்காத, சட்டென்று நினைவில் வரும் வார்த்தைகளை கணக்கில் கொண்டுவர பார்க்கிறேன். இப்படித்தான் வார்த்தைகள் வழக்கொழிகிறது போல!!

ஆயாவின் சொற்களை உச்சரிக்கும் முறையும் சரியாக இருக்கும். உதாரணத்திற்கு, பல்லி..அதை நாங்கள் “balli” என்று சொல்வோம். (நாங்கள் என்பது நானும், தம்பியும் என்று பொருள் கொள்க!)ஆனால் உண்மையில் அது “palli” யே!!

நான் ஒருகாலத்தில், ஆங்கில பாடல்கள், தம்பி ஒரு படி அதிகம் போய் ராக் என்று வீடே அதகளமாக இருக்கும், ஓடவிட்டிருக்கும் இசையில்! ஆயா சொல்வார்கள், “என்ன சத்தம் இது, கேட்கவே நாராசமா இருக்கு?!!” கண்டிப்பாக நாங்கள் இந்த வார்த்தையை எக்காலத்திலும் உபயோகித்ததில்லை, “ஆயா, எப்படி இருக்கு, நாராசமாவா..நாராசமா இருக்கா ஆயா” என்று அவர்களை எரிச்சலூட்டியதைத் தவிர! (Plz people, do not mistake me, I was so raw that time, என்ன பண்றது டீன்ஸ்!!)

ஏதாவது அனத்திக்கொண்டு, அல்லதுத் தொல்லைச் செய்தால், “ஏன் சிங்கிநாதம் பண்றே?” என்பார்கள். அதற்கும் கிண்டல்தான்! பிறிதொருநாளில் வீட்டில் உறவினர்கள்/நண்பர்கள் குழுமியிருந்தபோது எழுந்த பேச்சினில் ஆயா புரிய வைத்தார்கள், அது சிங்கிநாதம் இல்லை, உண்மையில் “சிணுங்கல் நாதமே!!”!
எனக்கு அதிலிருந்து ஒரு பெருமையே..ஏனெனில், நான் அரற்றுவதையும் ஆயா நாதமென்று சொல்லியிருக்கிறார்களேயென்று!! (ஆனா, பப்பு அப்படி செய்யும்போது நான் சொல்கிறேன். “சும்மா நை நை பண்ணாதே”!! :-))

பப்புவின் அரணாகயிறு (அரை ஜாண் (?) கயிறு/ அரைஞான் (??) கயிறு ) நெகிழ்ந்தபோது, ஆயா அம்மாவிடம் வாங்கிவர சொன்னது, “அரம்ப்ளி/லி”. அது ஒரு முக்கோண வடிவத்தில் சங்கிலிகளைக் கோர்த்ததுபோல் இருந்தது. அவர்கள் காலத்தில் மெல்லிய தகடு போல் இருக்குமாம்! அதன் ஒரு முனையில் கயிறைக் கட்டி மாட்டவேண்டியது! அவர்கள் சொல்லும் வரை எனக்குத் தெரியாது, மேலும் பிற்காலத்தில் உபயோகப்படுத்துவேனா என்பதும் சந்தேகமே..வார்த்தையையாகவோ அல்லது பொருளாகவோ!!

பப்புவிற்கு பல் முளைத்து ஈறுகள் ஊறும்போது கையில் கிடைப்பதைக் வாயில் வைப்பதுமாயிருந்தாள். நான் “டீதர்” வாங்கியதைப் பார்த்து சொன்னார்கள், ”எங்க அண்ணா உங்க மாமாவுக்கு சீப்பாங்கழி வாங்கிக் கொடுத்தாங்க” என்று. அது விரல் நீளத்தில் மேலே உருண்டையாக மரத்தாலான அந்தக் காலத்து டீதர். ஆனால், அது இப்போது கிடைப்பதில்லை. எங்காவது மியூஸியத்தில் காணக் கிடைக்கலாம்.

பதிவு நீண்டுக் கொண்டிருப்பதால், தொடர நான் அழைப்பது,

பார்வைகள் கவிதா
சிறுமுயற்சி முத்துலெட்சுமி
விரிந்த சிறகுகள் திவ்யாபிரியா

அவர்களின் சுவாரசியமான லிஸ்டை எதிர்நோக்கி!!

Add a comment பிப்ரவரி 1, 2009

வண்ணத்துப் பூச்சி விருது


“சித்திரக்கூடம் சந்தனமுல்லை: இவங்களுடைய பதிவை தவறாமல் படிப்பதுண்டு. இவங்களுடைய பதிவுகள் அருமையாக இருக்கும். பப்புவின் அசைவுகளையும், குரும்புகளையும் அவர் மட்டும் ரசித்து ஆனந்தபடுவது மட்டும் அல்லாது, பதிவில் இவை அனைத்தையும் எழுதி எங்களை ரசிக்கவும் ஆனந்தப்படுத்தியும் சந்தோஷப்படுபவர்.” என்றுத் தமிழ்தோழி பட்டர்பிளை விருது கொடுத்திருக்கிறார்!

தமிழ்தோழி, இது எனக்கொரு எதிர்பாராத சர்ப்ரைஸ்! இன்னும் எழுத ஆர்வத்தை தூண்டுகிறது, உங்களின் அங்கீகாரம்! (மாட்டிக்கிட்டீங்களா?!!) நான் ரொம்ப புவர், மறுமொழியளிப்பதில்! இனி அப்படி இருக்கக்கூடாதென எண்ணிக்கொள்கிறேன்!


“சந்தனமுல்லை (ஆச்சியைப் பத்தி நான் அதிகம் சொல்லவேண்டியதில்லை, பப்பு பேரவையை நடத்தும் அத்தனை பேருக்கும் இவர் அத்துப்படி)”
என்று சொல்லி பட்டர்ப்ளை அவார்டுவிருதுக் கொடுத்த அமித்து அம்மாவுக்கு நன்றிகள். சொல்லப்போனால், அமித்து அம்மாதான் நான் முதலில் தொலைபேசிய பதிவர்!

கொடுத்த விருதினை விதிமுறைகள்படி ஏழுபேருக்கு அளிக்கிறேன்! பெற்றுக்கொண்டவர்கள் 7 பேருக்கு அளிக்கும்படி விதிமுறை சொல்கிறது!

கானாஸ் – கானாவின் றேடியோஸ்புதி பதிவுகள். ஒருமுறையும் மிஸ் செய்ததில்லை. விடை கண்டிப்பாக தெரியாது என்றாலும்!
அதிலும், சுவாரசியமாக இசையோடு இணைந்த பழைய நிகழ்ச்சிகளை எப்படிதான் திரட்டுகிறாரோ!!


சிநேகிதி
– சிநேகிதின் எல்லாப் பதிவுகளும் எனக்கு விருப்பம். அதிலும் சைக்காலஜி பதிவுகள், மிக அருமையாக எழுதுவார். அப்படியே, ஈழத்து நினைவுகளும்!!

ஆகாயநதி – பொழிலோடு இவர் செலவிடும் நேரங்களை பற்றிய பதிவுகளுக்காக!

குடுகுடுப்பை – இவரின் நாஸ்டால்ஜிக் காலேஜ் பதிவுகள் மற்றும் அவரது மகள் ஹரிணியை பற்றி அவ்வப்போது எழுதுவதற்காக!!

சின்ன அம்மிணி – மௌயினின் சாகசக் கதைகள் சமீபத்தில்தான் படித்தேன்! அப்புறம் அவரது நகைச்சுவைப் பதிவுகளுக்கும்!

நிலாவும் அம்மாவும் – நிலா எழுது கடுதாசிக்காக!

தமிழன் -கறுப்பி – இவரின் கவிதைகளும், கவிதை நடையில் இருக்கும் பதிவுக்களுக்கும்….மிக அருமையான கவிதைகள்..!

உண்மையில் தமிழ்தோழிக்கும்,அமித்து அம்மாவிற்கும் கொடுக்க ஆசை. ஆனால், என்னை முந்திக்கொண்டார் ஜமால்!
ராமலஷ்மி-க்கும், சீனா ஐயாவுக்கும் கொடுக்க நினைத்தேன். ஆனால், அவர்களின் கடல் போன்ற எழுத்துலகிற்கு முன்,
நான் எம்மாத்திரம். பெரியவர்களுக்கு சிறியவளான் நான் விருது கொடுப்பது நல்ல பண்பன்று என்று தோன்றியது.
ஆயில்ஸ்-கு கொடுக்க சொல்லி பப்பு உத்தரவு. ஆனால், அமித்து அம்மா முந்திக்கொண்டார்! 🙂

Add a comment ஜனவரி 8, 2009

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

ஜனவரி 2019
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Posts by Month

Posts by Category