சித்திரக்கூடம் இப்போ வொர்க்கிங்!

பதிவை எப்படி மீட்கறதுன்னு யோசனையா இருந்தப்போ பதிவர் முத்துலட்சுமிதான் ஐடியா கொடுத்தாங்க…ஏற்கெனவே “தேன்கிண்ணம்” பதிவு காணாம திரும்ப மீட்ட அனுபவஸ்தர் ராம்கிட்டே கேளுங்கன்னு! ராம் சொன்னார், ப்லாக்கர் சப்போர்ட்-க்கு மெயிலிடுங்க, மறக்காம தொடர்ந்து கேட்டுக்கிட்டே இருங்கன்னு! அப்படியே செய்தேன்! இன்னைக்கு காலையில் முகில்தான் நினைவு படுத்தினார் (ப்லாக் இருந்தா தனக்கு தொந்தரவு வராதுன்ற நினைப்போ?!!), ‘எதுக்கும் அந்த ரிஸ்டோரை இன்னொரு தடவை செக் பண்ணு’ன்னு! அதுலே வெர்ட் வெரிஃபிகேஷன் வந்திருந்தது. அதை சரியா சொன்னதும் 30 நிமிடத்தில் மடல் வந்தது, ப்லாக்கரிடமிருந்து! பதிவும் திரும்ப கிடைத்திருந்தது!

பதிவை காணாமல் தேடியவர்களுக்கும், தொடர்பு கொண்டு விசாரித்தவர்களுக்கும், உதவிய முத்து, ராம், ஆயில்ஸ், தமிழ்பிரியன், ப்லாக்கர் சப்போர்ட் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

கடமையை சரிவர செய்த முகிலுக்கு நன்றி!

Add a comment திசெம்பர் 9, 2009

அங்கவை..சங்கவை…அவ்வை

அவ்வைப் பாட்டி பற்றி இப்போதுள்ள குழந்தைகளுக்கு பெயரைத் தவிர பெரிதாகத் தெரிய வாய்ப்பில்லை.

அவரைப் பற்றிய சரித்திர நிகழ்ச்சி ஒன்றை இப்போது பார்ப்போம்.

நட்பின் மகத்துவத்தைப் பற்றி கூற வேண்டுமெனில் கோப்பெருஞ்சோழன் ,பிசிராந்தையாருடன் அவ்வையார் அதியமான் கதையையும் சொல்வார்கள்.கூடவே பாரி கபிலர் கதையையும் கூறுவார்கள். அந்தப் பாரி மன்னன் கடையேழு வள்ளல்களுள் ஒருவன். பாரி பரம்பு எனும் மலை குறுநில மன்னன் .

மன்னன் என்றால் போர் இல்லாமலா? மூவேந்தர்கள் தமக்கு அடி பணியாத அல்லது கப்பம் கட்டாத குறுநில மன்னர்களுடன் அடிக்கடி போரில் ஈடுபட்டு வந்தனர் என்பது வரலாறு .அப்படி
மூவேந்தர்களுடன் நடந்த போரில் பாரி இறந்து படவே ,அவனது பெண் மக்கள் இருவரும் ஆதரவற்ற அனாதைகள் ஆயினர் என்று வரலாறு சொல்கிறது.

அந்தப் பெண்களின் பெயர்கள் அங்கவை,சங்கவை (சிவாஜி படத்தில் கூட இந்தப் பெயர்கள் வருமே! பாரியின் மகள்களின் பெயர்கள் தான் அவை)

அப்படி நிராதரவாய் வறுமையுடன் வாழும் போதும் அப்பெண்கள் யாரிடமும் அண்டிப் பிழைக்க விருப்பமற்று ஒரு அரசனின் மகள்கள் எனும் பெருமையை விடுத்து தனியே வாழ்ந்திருக்கையில் அவ்வைப்பாட்டி ஒரு நாள் அவர்களைச் சந்திக்கிறாள்.

முல்லைக்கு தேர் தந்த பாரியின் மக்களுக்கா இந்தக் கதி என அவ்வை வருத்தம் மிகக் கொண்டு அவர்களது நல வாழ்வுக்கு ஏதேனும் செய்தே தீருவது என முடிவு செய்கிறார்.

அவ்வையின் மீது பெரு மதிப்பு கொண்ட சிற்றரசன் ஒருவன் அங்கவை சங்கவியை மணந்து கொள்ள சம்மதம் தெரிவிக்கவே அவ்வைப் பாட்டி அவர்களது திருமணத்தை முன்னின்று நடத்துகிறார்.

அவ்வேளையில் அதை எதிர்த்து மூவேந்தர்களும் படை திரட்டி வருகின்றனர். தங்களை எதிர்த்து போரில் மாண்ட அடி பணியாத பாரியின் மகள்களுக்கு அவ்வைப் பாட்டி திருமணம் செய்வித்து ஆதரிப்பதா என்ற அடங்காக் கோபம் அவர்களுக்கு .

மூவேந்தர்களும் படை திரட்டி வருவதை அறிந்த அவ்வை போர்களத்தில் அவர்களிடம் சென்று பாரியின் பெருமைகளை எடுத்துச் சொல்லி சமாதனம் செய்து எப்படி போரை நிறுத்தினார் என்பது இன்னொரு சுவையான சரித்திர நிகழ்வு.

இப்போது சொல்ல வந்த விஷயம் என்ன வென்றால்

மூவேந்தர்களும் ஒற்றுமையாய் ஒரு சமயம் இருந்தார்கள் அதற்க்கு அவ்வை பாட்டி காரணம் என்பது தான்.

அங்கவை…சங்கவியின் திருமணதிற்கு மூவேந்தர்களும் ஒற்றுமையாய் வந்து கலந்து கொண்டனர் அவ்வையின் மீது கொண்ட பெரு மதிப்பினால்.

இதற்க்கான சரித்திர ஆதாரம் .

திருமணதிற்கு வந்த சேர மன்னர் தன் பரிவாரங்களுடன் தங்கியிருந்த இடமே சேலம் என்று பின்பு மருவிற்றாம்.

அங்ஙனமே பாண்டிய மன்னர் தங்கியிருந்த இடம் வீர பாண்டி என ஆயிற்று .

சோழமன்னன் தங்கியிருந்த இடம் வீரசோழபுரம் என்று ஆயிற்று .

இந்த நிகழ்வு சரித்திரத்தில் பதியப் பட்ட ஒன்று என ஆறாம் வகுப்பு ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் காணக் கிடைத்தது.

பகிர்வுக்காக இங்கே அளித்தேன்.

11 பின்னூட்டங்கள் திசெம்பர் 2, 2009

சாக்லேட் ஊட்டச்சத்து பானங்கள்

இனிப்பை விரும்பாத குழந்தைகள் அரிது தான்.

அதிலும் சாக்லேட்டுகளை …ஐஸ் கிரீம்களைப் பிடிக்காது என்று எந்தக் குழந்தையாவது சொல்லக் கூடுமானால் அது மிகப் பெரிய அதிசயமே .

பாக்கெட் மணியாக ஐந்து ரூபாய் கொடுத்தால் ஒரு ஐஸ் கிரீம் வாங்கலாம் அல்லது ஐந்து எக் லேர்ஸ் சாக்லேட்டுகள் வாங்கலாம் ,இன்னும் குறைக்க வேண்டுமெனில் ஐம்பது காசுக்கு ஒரு காச்சா மேங்கோவோ அல்லது காபி பைட் இன்னும் சில குழந்தைகள் மின்ட்டோ பிரெஷ் …ஹால்ஸ் ..பூமர் இப்படி வாங்கிச் சாப்பிடுகிறார்கள் ,

பத்து ரூபாய் என்றால் ஒரு குர் குரே அல்லது பிங்கோ சிப்ஸ் அல்லது லேய்ஸ் …அதுவும் இல்லா விட்டால் பய்ட்ஸ்…இப்படித் தான் இருக்கிறது ஐந்து முதல் பத்து வயது வரையிலான குழந்தைகளின் சிற்றுண்டிப் (என்ன ஒரு அழகான தமிழ் வார்த்தை ! அதிகம் புழக்கத்தில் இல்லையோ என்று ஐயமாகி விட்டது …இப்போதெல்லாம் சிம்பிளாக ஸ்நாக்ஸ் என்று முடித்து விடுகிரோமில்லையா?!) பழக்கம் .

மேலே கூறப் பட்டுள்ளவற்றில் சிப்ஸ் வகையறாக்கள் தவிர்த்து மற்ற எல்லா சிற்றுண்டிகளிலும் இனிப்பு இருக்கும். சிப்ஸ்களிலும் உருளைக் கிழங்கு இருப்பதால் மாவுப் பொருளுக்கே உரித்தான சிறிதளவு இனிப்பு அதிலும் உண்டு.

அளவு மீறாமல் சாப்பிட்டால் பயமேதுமில்லை. “அளவுக்கு மேறினால் அமிர்தம் கூட நஞ்சு தானே”

கடைக்குப் போகும் போதெல்லாம் ஒரு ஹால்ஸ் …அல்லது எதோ ஐம்பது காசுகள் அல்லது ஒரு ரூபாய் சாக்லேட்டுகள் என்று வாங்கிச் சாப்பிட்டு பழகிய குழந்தைகள் இன்று அநேகம் பேர். விளைவு பற்கள் சொத்தை …மிகச் சிறு வயதிலேயே பழுப்பான பற்கள் .

இன்னும் சிலருக்கு தீராத சளி …இருமல் .

எல்லாக் குழந்தைகளுக்குமே மழைக் காலம் மற்றும் குளிர் காலங்களில் சீதோஷ்ணம் ஒத்துக் கொள்ளாமல் சளி இருக்கக் கூடும் .சிலருக்கு கோடையில் பெய்யக் கூடிய மழை ஒத்துக் கொள்ளாமல் கூட சளியும் இருமலும் வரக் கூடும். அவை தவிர்த்து மாதம் ஒருமுறைக்கு இருமுறை கடுமையான சளியும் இருமலும் இருப்பின் பெற்றோர் நிச்சயம் தம் குழந்தைகளின் ஸ்நாக்ஸ் பழக்கங்களை கண்டிப்புடன் கவனிக்க வேண்டும்.

நாள் முழுதும் மூன்று அல்லது பலமுறை சாக்லேட்டுகள் அல்லது இனிப்புகளை உண்ணும் பழக்கத்தில் இருந்து நமது குழந்தைகளை நாம் மீட்க வேண்டும். இனிப்பு சுவை அதிகமானால் ;உடல் தளர்வு, சோர்வு, அதிகத் தூக்கம், இருமல், உடல் எடைக் கூடுதல் போன்ற சிக்கல்கள் பலவும் தோன்ற வாய்ப்பு உள்ளது.

நான் அனுபவ ரீதியாக உணர்ந்தது சளியும் இருமலும் தீவிரமாக இருக்கும் நாட்களில் குழந்தைகளின் கண்களில் இருந்து சாக்லேட்டுகளை கண்டிப்பாக மறைத்து வைப்பது சாலச் சிறந்தது.

சாக்லேட்டுகள் மட்டும் தான் என்றில்லை இன்று வரும் ஊட்டச் சத்து பானங்களில் பெரும்பான்மையும் சாக்லேட் கலந்த பானங்களே .எல்லாவற்றிலுமே சாக்லேட் ப்ளேவர் உண்டு.

பூஸ்ட்

போர்ன் விட்டா

காம்ப்ளான்

மால்ட்டோவா

ஹார்லிக்ஸ்

மருத்துவர்களின் ஆலோசனை என்னவெனில் சுத்தமான ஆவின் பால் நீர் கலக்காமல் காய்ச்சி அளவான சர்க்கரை கலந்து குழந்தைகளுக்குத் தரலாம் அதுவே போதும் ஊட்டச்சத்து பானங்கள் என்ற பெயரில் இவை எல்லாம் அத்த்யாவசியமே இல்லை.

தவிர்க்க முடியாது குழந்தைகள் அதன் சுவைக்குப் பழகி விட்டார்கள் என்ற காரணத்தால் இன்றைய நிலையில் வளரும் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் இந்த ஊட்டச் சத்து பானங்களை நம்மால் தடை செய்ய இயலாவிட்டாலும் கூட இரவு முழுதும் இருமல் …சளித் தொல்லை வறட்டு இருமலால் வாந்தி எனும் நிலை வரும் பொது அந்த நாட்களில் மட்டுமேனும் இவற்றை நிறுத்தி விட்டு நீர் கலக்காமல் காய்ச்சிய வெறும் பாலில் செரிமானத்திற்கு உதவும் சதவிகிதத்தில் மட்டுமே கொஞ்சமாக சர்க்கரை கலந்து தரலாம்.

என்ன ஒரு மகாப் பெரிய கஷ்டம் எனில் அப்படிக் குடிக்க குழந்தைகள் ஒத்துக் கொள்ள வேண்டும் !!!

பழக்க வேண்டும் நம் குழந்தைகளை.

2 பின்னூட்டங்கள் திசெம்பர் 1, 2009

ஏக் தோ தீன்…

சில நாணயங்களை எடுத்துக்கொண்டோம். பப்புவுக்கு ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் மட்டும் நன்றாகத் தெரிகிறது. அவளுக்கு எல்லா ரூபாய் தாள்களும் ஐந்து ரூபாய் அல்லது பத்து ரூபாய். நாணயங்களில் ஒன்று மற்றும் இரண்டு ரூபாயை அடையாளம் காண தெரிந்திருக்கிறது. தலை, பூ-வை பார்த்தபின், நாணயங்களை நோட்டில் வைத்து ட்ரேஸ் எடுத்தோம். பப்பு, க்ரேயானை நன்றாக அழுத்தி வண்ணமடித்துவிட்டதால் அடையாளம் காண முடியவில்லை.



இங்கிலீஷ் கார்னர்:

முடி வெட்டிக்கொள்ள சென்றிருந்தோம்…

” பாய் கட் பண்ணிடுங்க” என்றேன்.

நோ பாய்கட்..கேர்ல் கட்தான்…இல்ல..ஹேர் கட்..எனக்கு ஹேர்கட்தான் வேணும்!! – பப்புதான்!

aaya will பூட்டு! – ஆயா கதவை பூட்டியிருப்பார்கள் என்பதற்கு!

i will close the door and தாப்பா(தாழ்ப்பாள்)!

Add a comment திசெம்பர் 1, 2009

பாப்பு செய்த மணிமாலை

பாப்புவுக்கு பள்ளி நேரம் மாலை மூன்று மணியுடன் முடிந்து விடும் ,வீட்டிற்கு வந்த பின் உடனே யூனி பார்ம் கூட மாற்றிக் கொள்ளாமல் அவள் செய்யும் முதல் வேலை டி .வியை ஆன் செய்வது தான்…பிறகு அவள் இரவு தூங்கச் செல்லும் வரை அது ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் , அதில் வரும் நிகழ்ச்சிகளைப் பார்க்கிறாளோ இல்லையோ டி.வி அது பாட்டுக்கு ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் ,இப்படி ஒரு கட்டாய மனநிலை,ஒற்றைக் குழந்தையாய் வளரும் பல குழந்தைகளுக்கும் இருக்கக் கூடும் என்றே தோன்றினாலும் ,இந்தப் பழக்கத்தை மாற்றியே ஆக வேண்டும் என முயன்றதில் நல்ல பலன் .
நேற்று இந்த செயற்கை மாலையும் ,இயர் ஹேங்கிங்கும் பாப்புவே தன் கையால் செய்து காட்டினாள் எனக்கும் அவளது அப்பாவுக்கும்.இன்றைக்கு பள்ளிக்கு எடுத்துக் கொண்டு செல்கிறாள் அவளது அனிதா மிஸ்ஸிடம் காண்பிக்க வேண்டுமாம்.
மணிமாலை செய்யத் தேவையான பொருட்கள்:
மீடியம் சைஸ் பீட்ஸ் – 40 (கலர் கலராக கலந்து வாங்கிக் கொள்ளவும் )மாலை முகப்பு(டாலர் போல) செய்ய – 3 சிறு மணிகள் பிணைத்த தொங்கல்கள்
நரம்பு ( கோர்க்க) – 3௦0 சென்டி மீட்டர் (அல்லது) தேவையான அளவு
திருகு அல்லது கூக் – 1 ஒன்று (ரெடிமேட் ஆகவே கடைகளில்
கிடைக்கும்)
நரம்பில் விரும்பும் வண்ணங்களில் மணிகளைக் கோர்த்து இரண்டு முனைகளையும் பிணைக்கும் போது ஏற்க்கனவே வாங்கி வைத்த ரெடி மேட் ஹூக்கின் பின்புற முனைகளையும் மணிகளின் கடைசியில் உள்ளே கோர்த்து உட்புறமாக முடிச்சிடவும் .
இயர் ஹேங்கிங் செய்யத் தேவையானவை :
மாலை முகப்பு செய்யப் பயன்படுத்திய சிறுமணிகள் பிணைத்த தொங்கல்கள் – 2
கேங்கிங் கூக் – 2
இது மாலை செய்வதைக் காட்டிலும் எளிதானது வாங்கி வைத்த ரெடிமேட் ஹேங்கிங் ஹூக்கில் சிறுமணிகள் பிணைத்த தொங்கல்களை பிணைத்தால் இயர் ஹேங்கிங் ரெடி .இப்படியாக நேற்று பாப்பு அதிகம் டி.வி பார்க்கவில்லை ,மேஜிக் வொண்டர் லேன்ட் மட்டுமே பார்த்து விட்டு ஹோம் வொர்க் செய்தாள்,பிறகென்ன தூக்கம் வரவே சரியான நேரத்திற்கு தூங்கப் போய் இன்றைய பொழுது அவசரமின்றி அழகாக விடிந்தது.
எனக்கும் ஐயோ ! …எந்நேரமும் டிவி பார்க்கிறாளே என்ற பயம் குறைந்தது, ஆனாலும் கதை இன்னும் முடியவில்லை தான் ;அடுத்தென்ன செய்யலாம் அவளது கவனம் டி.விக்குச் செல்லாமல் தடுக்க என்று யோசிப்பதில் காலம் கரைகிறது எனக்கு .

6 பின்னூட்டங்கள் நவம்பர் 27, 2009

எ ஃபார்…

….. எடுத்துக்காட்டு!!

இந்த.காஎன்ற எடுத்துக்காட்டு படுத்தற பாடு இருக்கே!! யூகேஜிலேர்ந்து இன்னைக்கு வரைக்கும் நம்மை துரத்திக்கிட்டே வர்ற விஷயம்! முதல்லே ‘எ.கா’ -ன்றது ‘எடுத்துக்காட்டு’ அப்படின்னு எனக்கு புரியறதுக்கே சில பல வகுப்புகள் தாண்டி வர வேண்டியிருந்தது.

பளளிக்கூட புத்தகத்துலே பாடம் முடிஞ்சதும் அடுத்ததா கேள்விகள்/பயிற்சிக்கேள்விகள் இருக்கும். அது எப்படின்னா எடுத்துக்காட்டு ஒன்னு கொடுத்துட்டு அதே மாதிரி மீதியெல்லாம் செய்ங்க எனும் ரீதியில் இருக்கும். அறிவியல், தமிழ், ஆங்கில பாடங்கள் கூட சமாளிச்சிடலாம். ஆனால், இந்த கணக்கு பாடத்துலே இருக்குமே…அது ஒன்னொன்னும் ஒரு மாதிரி இருக்கும். எ.கா-ஆக இருக்கறது மட்டும் ஈசியா இருக்கும். ஒருவேளை ஈசியா இருக்கறதை மட்டும் எ.கா -ஆ செஞ்சு கொடுத்திட்டாங்களோன்னு தோணும்!

அதுவும், இந்த மணி பார்க்க கத்துக்கற காலகட்டம் மறக்கமுடியாதது… பாடத்துக்கு பின்னாடி நெறைய கடிகாரங்கள் வெவ்வேற நேரம் காட்டிய படி வரைஞ்சு இருக்கும். அதுலேயும் எ.கா-இல் இருக்கறது ரொம்ப ஈசியா 1.30 மணி காட்டும். ஆனா, நாம் எழுத வேண்டியது மட்டும், 7.45, 2.15 12.45 இப்படி இருக்கும். ஹாஃப் பாஸ்ட் 2, ஃக்வார்டர் டூ 8 – னுதான் சொல்லணும். ஆனா எ.கா-ஆக இதையெல்லாம் போட்டிருக்க மாட்டாங்க. நாமே “யாரேனும் மணி கேட்டால் அதை சொல்லக் கூட தெரியாதே” கேஸ்! நேராக சரியான மணி சொல்றதே பெருங்கஷ்டம், இந்த மாதிரி சுத்தி வளைச்சு சொல்லச் சொன்னா!!

எப்படியோ, மணியெல்லாம் (அட, கடிகாரத்திலேதான்!) பார்க்க கத்துக்கிட்டு பெரிய க்ளாஸ் வந்தா, கொஸ்டின் பேப்பரிலே, “கோலங்கைமா திசு, பாரங்கைமா திசு, மைட்டோகாண்ட்ரியா வை எ.கா டுடன் படம் வரைந்து விளக்கு” னு இருக்கும்! நமக்கு ஏதோ ஒரளவுக்கு ஒழுங்கா வரைய தெரிஞ்சது அமீபாதான். இதோட எங்க சயின்ஸ் டீச்சர் புண்ணியத்துலே மைட்டோகாண்ட்ரியா எப்படி இருக்கும்னு இப்போ வரைக்கும் ஞாபகம் இருக்கு! ஆனாலும் பத்தாவது பரீட்சையிலே கண் -னை (ஏன்னா அதுக்கு முன்னாடி வருஷம் கேள்வித்தாள்லே காது கேட்டிருந்தாங்க!) விழுந்து விழுந்து படிச்சுட்டுப் போக, கடைசிலே கொஸ்டின் பேப்பரில் ‘காது வரைந்து விளக்கு’ன்னு வந்து இருந்தது. என்ன பண்ண, மனசை கல்லாக்கிட்டு, படிச்சிட்டு போன கண்ணை வேஸ்ட் பண்ணாம, ‘இந்த மாதிரி இருக்கிற கண்ணுக்கு சற்றுத்தள்ளி காது இருக்கும்’ என்ற மாதிரி ஒரு விடை எழுதி விட்டு வந்தது வரலாறு!

ஆனாலும், கழித்தல் கற்றுக்கொண்ட போது, 10-இலிருந்து 3 போனா மீதி எவ்வளவு கேள்விக்கு புரியாமல் விடும் லுக்-கை பார்த்து, “உன்கிட்டே பத்து மாம்பழம் இருக்கு, மூனு மாம்பழம் அனு-வுக்கு கொடுத்துட்டா மீதி உன்கிட்டே எவ்வளவு இருக்கும்” ன்னு எ.கா-டோடு கேட்க, ”ஏன் அனுவுக்குக் கொடுக்கணும் நானேதான் சாப்பிடுவேன்” என்ற கேள்வி மனதில் பசுமையாக இருக்கிறது! அதேபோல் அல்ஜீப்ராவில் மைனஸூம் மைனஸூம் ப்ளஸ் என்று கற்றுக்கொண்டதும்!

ஒவ்வொரு பேப்பருக்கும் செமினார் – அந்த செமினாருக்கு இண்டர்னல் மதிப்பெண்களும் உண்டு. ‘எந்த டவுட்-னாலும் தனியா கேளு, என் செமினார்லெ நீ கேக்காதே, உன் செமினார்லே நான் கேக்க மாட்டேன்’ என்று சொல்லப்படாத டீலிங் வகுப்பில் நடைமுறையில் இருந்தது. இரண்டு செமினார்களை பார்த்த ஆசிரியர், டவுட்களை அவராக கேட்க ஆரம்பித்துவிட திருடனுக்குத் தேள். அதிலிருந்து தப்பிக்க, ‘நான் அவனை கேப்பேன், அவன் என்னை கேப்பான்” என்று போட்டு வைத்த திட்டத்தில் “ இதனை ஒரு எ.கா-டோடு விளக்க முடியுமா” என்ற கேள்விக்கே முதலிடம்!

ஏழாம் வகுப்பிலிருந்து படித்து வந்த ‘தொகை’களை, கல்லூரியில் விரிவாக நடத்திக்கொண்டிருந்தார் தமிழ் பேராசிரியர். ‘நமக்கெல்லாம் இந்த லேங்குவேஜா முக்கியம், சியும் சிபிபியும் தானே சோறு போட போகுது’ என்ற மிதப்பில் கனவு கண்டுக்கொண்டிருந்தபோது, ப்ரியாவிடம் “வினைத்தொகைக்கு’ எ.கா சொல்லுமா” என்றார் ஆசிரியர். ப்ரியா எதையுமே உணர்ச்சி பூர்வமாக விளக்குவாள். ஏதோ ஓர் அரவிந்தசாமி படக்கதையை மூன்று நாட்களாகச் சொன்னவள் அவள். சொல்வதோடு நில்லாமல் ஆக்‌ஷனும் உண்டு – ஒரு குழந்தையைப் போல!

சட்டென எழுந்த ப்ரியா,

”’பால்சோறு சாப்பிட்டான்’ங்க மேம்” என்று,
டெஸ்க்-லிருந்து எடுத்து சாப்பிடுவது போல ஆக்‌ஷ்னுடன் சொல்ல ஆசிரியருக்கே சிரிப்பு வந்துவிட்டது! ப்ரியா, அன்றிலிருந்து கொஞ்சநாளைக்கு ‘பால்சோறு’ ம் ஆனாள்! 🙂

உங்கள் எ.கா நினைவுகளையும் பகிர்ந்துக்கொள்ளுங்களேன்!

Add a comment நவம்பர் 27, 2009

தத்துவ முத்துக்களும் கருத்து குத்துக்களும்..

எப்போவும் பாய்ஸ் பக்கத்துலே பாய்ஸ்தான் உட்காரணும்..கேர்ல்ஸ் பக்கத்துலே கேர்லே வரணும்.

சின்னவங்க daappu, பெரியவங்க டூப்பு!

பாய்ஸ் எல்லாம் daappu, கேர்ல்ஸ் எல்லாம் டூப்பு!

கேர்ல்ஸ் தான் daappu, பாய்ஸ் எல்லாம் டூப்பு!

இதெல்லாம் பப்பு அப்போப்போ உதிர்த்த தத்துவங்கள். வேனிலே இப்படித்தான் கத்திக்கிட்டு வருவாங்களாம்!!



மறுபடியும் டெம்ப்ளேட் மாத்திட்டேன். அந்த டெம்ப்ளேட் கொஞ்சநாள்லேயே போரடிச்சுடுச்சு. அதைப் பார்த்து எனக்கே தூக்கம் வந்து தூங்கிட்டேன்னா பார்த்துக்கோங்களேன்! அந்த டெம்ப்ளேட் மாத்திட்டு கருத்து கேட்போமேன்னு நானும் நாலு பேர்கிட்டே கேட்டேன்.

கருத்து 1 : டெம்ப்ளேட்-ல்லாம் ஓக்கே! Where is the girl on right side?

கருத்து 2 : இதுவும் நல்லாத்தான் இருக்கு. அந்த பொண்ணை மட்டும் இதிலே சேர்த்திடுங்க..சூப்பரா இருக்கும்.

கருத்து 3 : இது நல்லாருக்கு..ஆனா, அந்த டெம்ப்ளேட் பிடிச்சிருந்தது! (எ.கொ.ச.இ!!)

கருத்து 4 : ஹப்பாடா..ரொம்ப நாளா அந்த பொண்ணு நின்னுக்கிட்டே இருந்தாங்க, இப்போ உட்கார வைச்சுட்டீங்களா..வெரி குட்!

ம்ஹூம்! அப்புறம் நான் கருத்து கேக்கறதையே நிறுத்திட்டேன்!

எனக்கு பழைய டெம்ப்ளேட் மிகவும் பிடிக்கும். ஸ்கீரின்ஷாட் எடுத்து வைத்திருக்கிறேன். (எந்த பிரச்சினைக்காக மாற்றினேனோ அதே பிரச்சினை இப்போதைய டெம்ப்ளேட்டிலும் இருப்பது போலத்தான் தெரிகிறது!) மேலும், கைவசம் சில டெம்ப்ளேட்-கள் இருக்கின்றன.
இந்த டெம்ப்ளேட் கொஞ்சம் போரடித்தால்…:-)

Add a comment நவம்பர் 26, 2009

தங்களின் மேலான உதவி வேண்டி…

நண்பரின் நண்பர் நமக்கும் நண்பர்தானே! தயை கூர்ந்து உதவுங்கள்!!
அந்த நண்பர் விரைவில் உடல்நலம் பெறட்டும்!!

மேலும் விபரங்களுக்கு….

உதவுங்கள்

நண்பர்களே,

கிழக்கு பதிப்பகத்தில் என்னுடன் பணியாற்றிய முத்துராமன் என்கிற என் நண்பர் (வயது 33) இப்போது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் டயாலிஸிஸ் சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார். டயாலிஸி்ஸுக்கான மருத்துவச் செலவே மாதம் ரூ. 16,000 ஆகிறது. கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு ஆறு லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.

பலபேர் உதவினால் மட்டுமே சீக்கிரத்தில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடியும் என்கிற நிலைமை. எனவே உங்களால் முடிந்த தொகையை தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். சிறு உதவியாக இருந்தாலும் அது நிச்சயம் நண்பரின் வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

மேலும் இதுதொடர்பாக உதவக்கூடிய டிரஸ்டுகளில் உங்களுக்குப் பரிச்சயம் இருந்தாலும் சொல்லவும்.

முத்துராமன் அக்கவுண்ட் எண் –

Name – Muthuraman
State Bank of India (Mogappair) a/c no – 30963258849
IFS code no – 5090

MICR code : 600002118

முத்துராமன் முகவரி :

Muthuraman,
7/551, JJ Nagar West,
Near ERI Scheme Velammal School,
Mugappair West,
Chennai – 600037
Tamil Nadu. India.

Add a comment நவம்பர் 23, 2009

சனி-ஞாயிறு

சனிக்கிழமை ஒரு திருமண வரவேற்புக்கு சென்றிருந்தோம். ‘இனிமே கல்யாணிக்கெல்லாம்(கல்யாணம் இன் பப்புஸ் வெர்ஷன்) நான் வரமாட்டேன், அங்கே ரொம்ப நாய்ஸ்(Noice) இருக்கு’!! ஆர்கெஸ்ட்ராவுக்கு அருகில் நின்றுக்கொண்டிருந்தோம்! வரும்வழியில், ஏன் ரெண்டு பேருக்கும் கல்யாணி் நடக்குது, ஏன் எனக்கு நடக்கலை என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாள். நல்லா படிச்சு,வளர்ந்து, காலேஜ்-ல்லாம் போய் அப்புறம் ஆஃபீஸ் போனாத்தான் கல்யாணம் நடக்கும் என்று சொல்லிவைத்தேன். நீ தான் வளர்ந்து ஆஃபீஸ் போறியே, ஒனக்கு ஏன் கல்யாணம் நடக்கலை? என்று கேட்டாள்.

‘வாழ்க்கையிலே டிராஜிடி வரலாம், ஆனா டிராஜிடியே வாழ்க்கையா இருந்தா’ என்றெல்லாம் தத்துபித்துவங்கள் தோன்றினாலும் சொல்லாமல், “நீ பெரிய பொண்ணாகி ஏரோபிளேன்லே எங்கெல்லாம் போவே” என்று பேச்சை மாற்றினேன். ஒருமுறை அவள் ‘பெரியவளாகி சன் கிட்டே போய் ஏரோபிளேன் ஓட்டுவேன்’ என்று சொல்லியிருந்தாள்.

இந்தவாரயிறுதியில் பப்புவும் என்னோடு அலுவலகம் வந்தாள். வெளியே வரும் போது, எது அவளை அப்படி கேட்க வைத்தது என்று தெரியவில்லை!

“ஆச்சி, நீ ஆஃபீஸ்லே தூங்குவியா?”

Add a comment நவம்பர் 23, 2009

கிட்ஸ் புன்னகை உலகத்தில் பாப்பு

ஜெயாவின் முந்தைய பதிவைப் படித்து பாப்புவுக்கு சொல்லிக் கொண்டிருந்தேன் …முடிந்ததும் பாப்புவுக்கு என்ன தோன்றியதோ …ஹே…ஹே நானும் ப்ளாக் எழுதணும் மம்மி …ப்ளீஸ்…ப்ளீஸ் என்று ஒரே அடம்.

சரி என்ன எழுதணும் சொல்லு நான் நீ சொல்லச் சொல்ல டைப் பண்றேன் என்று அனுமதிக்கவே அவள் சொன்னது கீழே பார்வைக்கு …

“பேரன்ட்ஸ் வந்து சின்னக் குழந்தைங்க கொஞ்சம் சேட்டை பண்ணா மெதுவா சொல்லுவாங்க…சொன்னதைக் கேட்காம மறுபடி மறுபடி சேட்டை பண்ணா கண்டிக்க தான் செய்வாங்க…ஆனா நீங்க அம்மா அப்பா கண்டிக்கும் போது அவங்க பேச்சை கேட்டுட்டிங்கன்னா அவங்க இந்த மாதிரி கண்டிக்கவே தேவை இல்லை. எப்பவும் நல்ல குழந்தையா இருக்கற நீங்க அப்படியே இருந்திங்கன்னா மம்மி டாடி உங்களை ஒண்ணுமே சொல்ல மாட்டாங்க.இதெல்லாத்தையும் சொல்றது நான் தான் பாப்பு…இதை சொல்றதுக்கு எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு .

“ஹேவ் எ குட் டே “

பை..பை “

பாப்புவின் பள்ளியில் இருந்து ஒவ்வொரு மாதமும் புன்னகை உலகம் என்றொரு புத்தகம் அனுப்புவார்கள் ,இந்த இஸ்யூவில் “குழந்தைகளின் கிரியேட்டிவிட்டியை ” தூண்டவும் வளர்க்கவும் சொல்லப் பட்டிருந்த செய்திகளில் ஒன்று…

குழந்தைகளிடம் நிறைய புது புதுப் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருப்பது.

அதில் சில உதாரணங்கள் …

கேள்வி:

உனக்கு மூன்றாவதாக ஒரு கண் தோன்றி விட்டால் என்ன செய்வாய்?

பாப்புவின் பதில் :

மூனாவதா ஒரு கண்ணு வந்தா …கண்ணாமூச்சு விளையாடும் போது இந்த ரெண்டு கண்ணையும் மூடிட்டா நான் மூணாவது கண்ணை ஓபன் பண்ணிட்டு லார்ட் சிவா மாதிரி ஒளிஞ்சிட்டு இருக்கறவங்களை கண்டு பிடிப்பேன் ,கண்டிப்பா அந்த மூணாவது கண்ணை அப்படியே வச்சுப்பேன் … எடுக்க சொல்ல மாட்டேன். (ஏனோ…ஏனோ…அது ஏனோ?!) நல்லா இருக்கும் இல்ல மம்மி ?!

இதற்க்கு என்ன சொல்வேன் நான்?

அவளது பதில் கேட்டு ஒரு பக்கம் சந்தோசமாக உணர்ந்தேன் ;எந்த பதிலைச் சொல்வது என்ற தயக்கம் இல்லை அவளிடம் …அது போதுமாய் இருந்தது போலும் எனக்கு.

4 பின்னூட்டங்கள் நவம்பர் 22, 2009

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

மே 2024
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Most Recent Posts