Posts filed under: ‘me‘
பிடித்தவர்; பிடிக்காதவர் – தொடர் விளையாட்டு

தொடர்பதிவுக்கு அழைத்த மாதவராஜ் அவர்களுக்கு நன்றி!

1.அரசியல் தலைவர்
பிடித்தவர் :கக்கன்
பிடிக்காதவர்: ஜெயலலிதா

2.எழுத்தாளர்
பிடித்தவர் : அம்பை
பிடிக்காதவர் : ரமணிச்சந்திரன்

3.கவிஞர்
குறிப்பிட்ட கவிஞரென்று தேடிப்பிடித்து படிப்பதில்லை..கண்ணில் பட்ட கவிதைகளை வாசிப்பதோடு சரி!

4.இயக்குனர்
பிடித்தவர் : தங்கர் பச்சான்,
பிடிக்காதவர்: பாக்யராஜ்

5.நடிகர்
பிடித்தவர் : லொள்ளு சபா மனோகர்
பிடிக்காதவர் : எம்ஜிஆர்

6.நடிகை
பிடித்தவர் : சுவலஷ்மி
பிடிக்காதவர் : நமீதா

7 . இசையமைப்பாளர்
பிடித்தவர் : ஏ.ஆர்.ரஹ்மான்
பிடிக்காதவர் : அப்படி யாரும் இல்லை..மற்றவர் இசையமைப்பில் ஏதாவது ஒரு பாடலாவது பிடித்துதானே இருக்கிறது!

இந்த தொடரை தொடர அழைப்பது,

க.பாலாசி
சஞ்சய்
தீஷூ
பா.ராஜாராம்

Advertisements

Add a comment நவம்பர் 1, 2009

ஆறு தன் வரலாறு கூறுதல் – தொடர் விளையாட்டு!

தொடரெழுத அழைத்த சிநேகிதிக்கு நன்றி! சிநேகிதியின் பதிவெழுத வந்த கதையையும் வாசித்து விடுங்கள் – மிக சுவாரசியம்!

ஏற்கெனவே ஒருசில இடுகைகளில், எப்படி பதிவுலகிற்கு வந்தேனென்று சுருக்கமாக சொல்லியிருக்கிறேன்!

”பசும் புல்வெளியில் துள்ளித் திரிய மானுக்கென்ன தயக்கமா,
நந்தவனத்தில் தேன் குடிக்க வண்டுகென்ன தயக்கமா…
உங்கள் முன் உரையாட அடியேனுக்கென்ன தயக்கமா?” – இப்படிதாங்க ஏதொவொரு பேச்சுப் போட்டில பேசி ஜெயிச்சிட்டேன், ஆறாவதோ ஏழாவதோ படிக்கும்போது!!
அப்புறமா, ”பாரதியாம் பாரதி ” – இந்த ரேஞ்சுல கவிதை வேற எழுதி இருக்கேன்.
இதுல, டீச்சருங்க கொடுத்த உற்சாகத்தில தமிழ் நம்ம நாக்குல துள்ளி விளையாடுதுன்னு மமதை வேற!! இதையெல்லாம் ஒரு பெரிய தகுதியா நினைச்சு இந்த ”சித்திரக்கூடத்தை “ தொடங்கினதுல, இப்போ நட்சத்திரமாவும் ஆகிட்டேன்.

அதனால, நீஙக இப்போ திட்டனும்னா, இல்ல ஆட்டோ அனுப்பனும்னா, அனுப்ப வேண்டிய முகவரி : இதோ!! ஏன்னா, சுட்ஜி தான், நீங்க ஏன் தமிழுக்கு தொண்டாற்றக்கூடாதுன்னு, சும்மா இருந்த சங்கை…! 2004-ல “ஹனி டியூ’ ன்ற பேரில ஒரு வலைப்பூ தொடங்கிட்டு, அதை சுத்தமா மறந்திட்டேன்,ஒரே ஒரு பதிவு ஆங்கிலத்தில போட்டுட்டு. அவ்வளவு சுறுசுறுப்பு!”

சின்சியராக ஆணி பிடுங்குக் கொண்டிருந்த காலம் அது! நேரம் கிடைக்கும்போது கடமையாக RFC படிப்பதிலும், ஆன்லைன் ஃபோரங்களிலும் (வேலை தொடர்பான),Sysindia-விலும் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தேன். நிலா ரசிகன்(சரியான்னு தெரியலை) ரசிகவின் கவிதைகள்தான் ஃபார்வர்டு மெயிலாக கிடைக்கப் பெற்றேன். அதுதான் இணையத்தில், நான் முதன்முதலில் கண்ட தமிழெழுத்துகள்!அதைத்தாண்டி தமிழில் இணையத்தில் என்ன இருக்கிறதென்று ஆராய்ந்ததில்லை!

வேலை மாறியபோது, வெட்டியாக இரு மாதங்கள் செலவழிக்க நேர்ந்தது. சுதர்சனின் வலைப்பூ அப்போதுதான்(2005) அறிமுகம். அவரது வலைப்பூ வழியாக நூல் பிடித்து இளவஞ்சி, துளசி, கேவிஆர் வலைப்பூக்களை தொடர ஆரம்பித்தேன். அப்படியே, தமிழ்மணமும், தேன்கூடும் தினமும் எட்டிப்பார்க்கும் இடமாயிற்று! தினமும் சுதர்சனை ‘இன்றைக்கு ஏதாவது எழுதுவதுதானே ‘ என்று கேட்டு தொணப்ப, பதிலுக்கு அவர் ‘நீங்கள் ஏன் தமிழுக்குத் தொண்டாற்றக் கூடாது’ என்று கேட்டுக்கொண்டதும் (ஓக்கே..ஓக்கே..கூல்!) உருமாறியது ஹனிடியு – சித்திரக்கூடமாக!!

ஆயா, எனக்கு சின்னவயதில் ஒரு கதை சொல்வார். சித்திரக்குள்ளன் கதை. ஏழு குழந்தைகளுடன் ஒரு அம்மா- அப்பா. கடைசி பையன் குள்ளனாக இருப்பான். பஞ்சத்தில் அவனது அம்மா-அப்பா குழந்தைகளை காட்டில் விட்டு விட சித்திரக்குள்ளன் அவனது புத்திசாதுர்யத்தால் ஒவ்வொருமுறையும் வீட்டிற்கு அழைத்து வந்துவிடுவான். ஒருமுறை ராட்சதனிடம் மாட்டிக்கொண்டச் சித்திரக்குள்ளன் எல்லோரையும் தப்புவித்து, ராட்சதனின் வீட்டில் எப்படிச் சந்தோஷமாக வாழ்ந்தார்கள் என்பது கதை! எனது ஃபேவரிட் கதை! எத்தனை முறை நான் கேட்டிருப்பேன், எத்தனை முறை ஆயாவும் சொல்லியிருப்பார்களென்றுத் தெரியாது! எனது எட்டு வயது வரை இந்தக் கதையை தினமும் கேட்டுத்தான் தூங்கியிருக்கிறேன். எனக்குள் ஆழப்பதிந்தச் சித்திரக்குள்ளனுக்காக வைத்த பெயரேச் ‘சித்திரக்கூடம்’!! இந்தபெயர் சித்திரக்குள்ளனையோ கதையை மட்டுமில்லாமல், நானும் ஆயாவும் செலவழித்த பொழுதுகளை, இரவின் இருட்டில் ஆயாவின் மேல் கால் போட்டுக்கொண்டு, ராட்சதன் வரும்போதெல்லாம்(கதையிலேதாங்க!) ஆயாவை இறுக்கமாக கட்டிப்பிடித்துக்கொண்டு, கடந்த நாட்களின் நினைவுகளுக்காக வைத்த பெயர் – ”சித்திரக்கூடம்”!

முதலில், சுரதாவில் தங்கிலிஷில் எழுதி, யுனிகோடிற்கு மாற்றிக் கொண்டிருந்தேன். கொஞ்சநாட்களிலேயே இலகலப்பை-க்கு மாறிவிட்டேன். ஆரம்பத்தில், எனது சிறுவயது நினைவுகளை எழுதத்தான் தொடங்கினேன். ஒரு சில கதைகள், ஃபார்வர்டு மெயிலை தமிழாக்கப்படுத்தி இடுவது என்று ஒரே மொக்கைகள்தான். பின்னூட்டங்களெல்லாம் இட்டது கிடையாது. பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வதும் இல்லை! கிடைக்கிற நேரத்தில் நாலு பதிவுகளைப் படித்துவிட்டு செல்லலாம் என்ற எண்ணமாகவும் இருக்கலாம்!( இப்பொழுது, பப்பு தனியாக விளையாட ஆரம்பித்துவிட்டதால் தொடர்ந்து பதிவுலகிற்கு வர முடிகிறது!)

பப்புவின் பேச்சுகளும், அவளிடம் நான் கண்டு வியக்கும் குறும்புகளுமே சித்திரக்கூடத்தை தூசு தட்ட வைத்தது! பதிவு என்பது கதை, கவிதை எழுத மட்டும்தான் என்பது போன்ற தோற்றத்தை (பயத்தை!) கொண்டிருந்த போது, ஆயில்யனின் “இட்லிபொடி‘ இடுகையை வாசிக்க நேர்ந்தது! அட, ஒரு இட்லி பொடிக்காக ஒரு இடுகையா – இப்படிக் கூட எழுதலாம் போல என்று என்னை எண்ண வைத்து – இப்போது நானும் மொக்கைகளை தொடர்ந்துக் கொண்டிருக்கிறேன்! 🙂 வாழ்த்துகள் ஆயில்ஸ்!!

என்னிடம் ஒரு பழக்கம் – எதுவுமே கொஞ்ச நாளைக்குத்தான் எனக்கு சுவாரசியமாக இருக்கும், அப்புறம் அதனை திரும்பியே பார்க்க மாட்டேன். பாட்டு கேட்க பிடிக்கும் என்றால், அதற்காக நேரம் செலவழித்து தேடித் தேடி கலெக்ட் செய்து வைப்பேன் – அதன்பின அப்படியே விட்டுவிடுவேன். ஒரு எழுத்தாளர் புத்தகம் படித்து பிடித்து விட்டால்,அவரது எல்லா நாவலையும் வாசித்து விடுவது – ஸ்டெல்லா புரூஸ், பாலகுமாரன், சுஜாதா, கல்கி, அம்பை, சிட்னி இப்படி – அப்புறம் அவர்கள் பக்கமே செல்வது இல்லை! அதே போல், உடைகளாக வாங்கித் தள்ளிக் கொண்டிருப்பேன் – அதன்பின் ஒரு வருடத்திற்கு வாங்க மாட்டேன், போரடித்துவிடும்!திரும்ப், என்றைக்காவது அதே ஆர்வம் துளிர்விடும்! இது ஏதும் மேனியாவாவென்றுத் தெரியவில்லை – But, I am like this only – weird, huh! எந்த பொழுதுப்போக்கையும் இவ்வளவு நாட்களாக தொடர்ந்ததில்லை – என்னைத், தொடர்ந்து பதிவெழுத வைப்பதே பதிவுலகின் வெற்றி! 😉

வாசிப்பதே மிகவும் அரிதாகிப் போன எனக்கு, தமிழ்மணம் நல்ல இடுகைகளை அடையாளம் காண்பித்திருக்கிறது! பதிவுலகில், நல்ல நண்பர்களைப் பெற்றிருக்கிறேன்! அவர்களில் ஒரு சிலரை சந்தித்துமிருக்கிறேன்! என்னை தினம் தினம் இங்கு வர வைப்பதற்கு இவையே காரணம்! தொடர்ந்து வாசித்து, பின்னூட்டமிட்டு உற்சாகப் படுத்தும் தங்களன்பிற்கு நன்றி! 🙂

ஆறு தன் வரலாறு கூறுதல்”- கண்டிப்பாகத் தமிழ் பரிட்சைக்கு வருமென்று, ஆறாவது/ஏழாவது படிக்கும்போது சீனியர்களால் பயமுறுத்தப்பட்டது. ஆனால், எந்தப் பரிட்சையிலும் வந்ததில்லை! :))

நான் அழைக்க விரும்பும் நால்வர்,

1. செல்வநாயகி
2. சென்ஷி
3. தீபா
4. சின்ன அம்மிணி

உடனே, இடுகையைத் தொடர வேண்டிய கட்டாயமில்லை. நேரம் கிடைக்கும்போது, தாங்கள் பதிவெழுத வந்தக் கதையையும் சொல்லுங்கள்….:-)

விதிமுறை:

1. ஒவ்வொருவரும் தாம் வலைபதிய வந்த கதையை, இன்று வரையான தமது அனுபவங்களைச் சொல்ல வேண்டும்.

2. கதை சொல்லி முடிந்ததும் விளையாட்டுக்கு 4 அல்லது அதிலும் கூட 🙂 பேரை அழைக்க வேண்டும். அழைப்பதோடு அழைப்பவர்களுக்கு அழைப்பினைத் தெரியப்படுத்தவும் வேண்டும்.

3. கதை சொல்லுபவர்கள், தாம் தமிழை எழுதப் பயன்படுத்திய கருவிகள் தொழிநுட்பங்கள், சந்தித்த சிக்கல்களைச் சொல்லவேண்டும்.

(மேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் சேர்க்கப்படலாம்.)

Add a comment செப்ரெம்பர் 6, 2009

And, Now…

கையில்லாத ஒரு சிறிய கவுன் ஒன்று, என்னிடம் இருந்தது. பள்ளிவிட்டு வந்ததும் அதை அணிந்து கொண்டு, பலகணியில் நின்று தெருவை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பேன்.

வெகுசுவாரசியமாக இருந்தது, வாழ்க்கை!

எப்படியோ தொலைந்துபோனது அந்த கவுன் ஒருநாளில்..அதனுடன் எனது குழந்தைத்தனமும்!

Add a comment ஓகஸ்ட் 23, 2009

”உன்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் யாரு?”

”ஹேமா (இது இந்த ஹேமா!), சுஜா, குணா, நித்யா, ஷபீனா, ரேணு, சரளா, ஞானம்,தினேஷ்,ஷ்யாம்,ப்ரகாஷ் அப்பறம் ட்யூஷனிலே மேரி,கவிதா,அபிக்கூர் ரெஹ்மான்…..”

”இரு..இரு…பெஸ்ட் ப்ரெண்ட்னா உங்க கிளாசையே சொல்றே ? பெஸ்ட் ப்ரெண்ட்னு ஒரே ஒருத்தர்தான் இருக்க முடியும். யாராவது ஒருத்தங்ககிட்டே க்ளோஸா இருப்பே இல்ல….அவங்க பேரு சொல்லு!!”

ரொம்ப யோசிக்கிறேன்!

இப்போவரைக்கும் பெஸ்ட் ப்ரெண்ட்ஸ்/க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் குறித்து ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. எனக்கு, எல்லோரும் ஃப்ரெண்ட்ஸ்தான். பெஸ்ட் ஃப்ரெண்ட்ன்னு பார்த்தா எல்லோருமே எனக்கு பெஸ்ட் ப்ரெண்ட்தான் – பெஸ்ட்டா இல்லையான்னு அவங்கதான் சொல்லனும்!! எல்லோருக்கும் கொடுப்பதற்கும், எல்லோரும் கொடுப்பதற்கும் – எல்லோருக்குள்ளும் பெஸ்ட்கள் இருக்கிறதுதானே!!ஒரு புன்னகையோ ஒரு நலம் விசாரிப்போ ஒரு தலையசைப்போ இல்லாமல் எவரையேனும் கடந்துவிட முடியுமா!

ஓக்கே…புரிஞ்சுடுச்சா…அமுதா கொடுத்த இந்த நட்பு விருதை, என்னாலே சிலருக்கு மட்டும் கொடுத்துட்டு சிலருக்குக் கொடுக்காம இருக்கமுடியாது..ஏன்னா,நீங்க எல்லோருமே என்னோட ப்ரெண்ட்ஸ்!! பெஸ்ட் ப்ரெண்ட்ஸ்!!

தமிழ்மணத்தில் உங்கள் இடுகைகளை வாசிக்கிறேன் – உங்கள் பின்னூட்டங்களை ரசிக்கிறேன்!! இந்த ‘சித்திரக்கூடம்’ என்னோட இ-வீடு அல்லது இ-ஃப்ளாட் – உங்கள் பதிவுகள் அண்டைவீடு – இப்படித்தான் உங்களோடு என்னை associate செய்துக்கொள்கிறேன். எனது உலகையும் உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன்! இதில் virtual friends என்ன…real friends என்ன?! அதனாலே நீங்க எல்லோருமே என்னோட ப்ரெண்ட்ஸ்தான்! இந்த விருதை எல்லோருக்குமே – எனது அண்டைவீட்டார் அனைவருக்குமே – நட்போடு வழங்குகிறேன்!! 🙂

இதையேத்தான் கொஞ்சம் வேறமாதிரி சொல்லியிருக்கேன் போல!! அவ்வ்வ்வ்வ்!I am like that..என்ன பண்றது..எனக்கு மனிதர்களைப் பிடிக்கிறது!!

Add a comment ஜூலை 31, 2009

ஹேமாக்களும் ஞானசௌந்தரிகளும்!

முதலாம் வகுப்பு. மிஸ்ஸுக்கு என்னிடம் தனிபிரியம். ஹேமா. என்னுடைய தோழி. அழகழகான குண்டு குண்டு கையெழுத்து. புத்தகத்தின் அட்டையில் ஒட்டப்பட்டிடுக்கும் லேபிள்கள் எல்லாம் கிழிக்கப் பட்டிருக்காது.அழகாக அடுக்கப் பட்ட பை. அவள் வந்தபின் மிஸ்ஸிடம் அவளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு அல்லது பிரியம் இடம் மாறியது!

ஆறாம் வகுப்பு. முதல் நாள். வகுப்பு லீடராக என்னைத் தேர்ந்தெடுத்தார் டீச்சர். முதல் மாதாந்திர தேர்வு முடிந்து விடைத்தாட்கள் கொடுக்கப்பட்டன. ஞானசௌந்தரி. எல்லாவற்றிலும் முதல் மதிப்பெண்!ஏதோ ஒரு பாடத்தில் 98 எடுத்தப்பின்னும் 100 எடுக்கவில்லையே என அழுதாள் ஞானசௌந்தரி. அன்றுமுதல் வகுப்பில், ஞானசௌந்தரிக்கு புரிந்தபின் தான் போர்டில் எழுதியிருந்தது அழிக்கப் பட்டது. ஞானசௌந்தரி எழுந்து வாசித்தபின் தான் வரலாற்று ஆசிரியர் அதை விளக்க ஆரம்பித்தார்!

ஹேமாவும், ஞானசௌந்தரிகளும் என்னை வாழ்க்கை முழுதும் துரத்திக் கொண்டே இருந்தார்கள். பெயர்கள் தான் மாறியதே தவிர +1இலும் கல்லூரியிலுங்கூட ஹேமாக்களும், ஞானசௌந்தரிகளும் என்னை பின் தொடர்ந்துக் கொண்டே இருந்தார்கள்! நண்பர்களாக இருந்தாலும் நெருங்கி பழக முடியாதவர்களாக இருந்தார்கள்! உங்கள் வாழ்விலும் ஹேமாவும் ஞானசௌந்தரிகளும் இருந்திருக்கிறார்களா?!( நீங்கதான் ஹேமா இல்லன்னா ஞானசௌந்தரின்னா இந்தப் பதிவு உங்களுக்கில்லை! :-))

முதல் ரேங்க் அல்லது டாப்பர் என்று பெயரெடுத்த இந்த ஹேமாக்களும் ஞானசௌந்தரிகளும் தேர்வுக்கு வரவில்லையெனில் “ஆகா, இந்த வாட்டி நாமதான் ஃப்ர்ஸ்ட்” என்று நினைத்துக் கொள்பவரா நீங்கள்?! நினைத்துக்கொண்டது மட்டுமில்லாமல் வீட்டில் சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்பவரா!! அப்படியாயின் இந்த இடுகை உங்களையும் என்னையும் பற்றிதான்! நாமதான் நல்ல மார்க் வாங்குவோம்னு எல்லோரும் நினைச்சுக்கிட்டு இருக்கும்போது அப்படியே சொதப்புவோமே! பள்ளி/கல்லூரிகளில் நம்மை யாரும் என்னோட ஃபேவரிட்-ன்னு சொல்ல மாட்டாங்க டீச்சர் உட்பட, ஆனா எல்லோருக்கும் நம்மைத் தெரியுமே – அவ்வளவு பிரபலம்! கேக்கற கேள்விக்கு தெரியும்னு கையைத் தூக்கிட்டு இருந்தாலும் டாப்பரை எழுப்பி சொல்ல வைக்கும்போது உள்ளே மனசு அடிச்சுக்குமே! இல்ல தெரிஞ்சாலும் எப்படி சொல்றதுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கும்போது சரியா இந்த “டாப்பர்” எழுந்து சொல்லுவாங்களே!! நம்மை பத்தி யாருமே நினைத்துக் கூட பார்க்காதபோது ஏதாவது ஒரு பாடத்திலே முதல் மதிப்பெண் வாங்குவோமே! கண்டிப்பா 90-95-ல்லாம் வாங்க மாட்டோம், ஆனா ஒற்றைப்படையில் வாங்கமாட்டோமே!

சரி..இங்கேதான் இப்படி, ‘இனிமே அடுத்த வகுப்பு போகும்போதாவது இப்படி இருக்கக் கூடாது’ன்னு முடிவு கட்டி, அடுத்த வருஷம் முதல் மாதாந்திர தேர்வோட அந்த அவதாரத்தையும் நம்மால் காப்பாற்ற முடியாதே! ஒரே பள்ளி படிச்சாலும் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் மட்டும் சீஸனுக்கு சீஸன் மாறுவாங்களே, ஆனால் எதிரிகள் என்று யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாதே!! (எல்லாருக்கும் எப்போவும் நல்ல புள்ளையாவே இருக்க முடியாதுல்ல!)

சரி, இதுலதான் இப்படியென்றால், கல்யாணமென்று வந்தால் நாம்தானே ஹீரோயின். அங்கேயும் ஹேமாக்களும் ஞானசௌந்தரிகளும் என்னைத் துரத்தினார்கள்! “அய்யோ பாவம், யாரு அந்த அப்பாவி” யென்றும், ”உன் கிட்டே மாட்டிக்கிட்டு என்ன பாடுபடபோறாங்களோ” யென்றும் என்னைத் துளைத்தெடுத்தெடுத்திருப்பார்கள்! மேலுன் தொடர்ந்தது ஹேமாக்களின் ஞானசௌந்தரிகளின் பிரச்சினை. தொலைபேசினால் போதும், ”நான் எல்லா கிச்சன் வேலையும் ஃபாஸ்ட்டா முடிச்சுடுவேனே, பிரச்சினையே இல்ல” என்றும் “மார்னிங் டைம்லே எனக்கு டென்ஷனே இல்லைப்பா” என்று இங்கேயும் நம்மை துவைப்பார்கள்! அது மட்டுமா, தன் வேலையைத் தானே செய்துக் கொண்டு, படுத்தாத, சமத்துக் குழந்தைகள் கூட ஹேமாக்களுக்கும் ஞானசௌந்தரிகளுக்குமே வாய்க்கிறது!

இப்போது கூட நீங்கள், “முகிலும் பப்புவும் பாவம்தான் போல, பொண்ணா இது”-ன்னு நினைத்துக் கொண்டு படித்தீர்கள்தானே! (நீங்க என்னைச் சந்திக்காமலே என்னைப் பத்தி ஒரு டேமேஜை உருவாக்கியிருக்கேன் பார்த்தீங்களா!!) இந்த உலகம் ஹேமாக்களுக்காகவும், ஞானசௌந்தரிகளுக்காகவும் மட்டும் இல்ல..சந்தனமுல்லைகளுக்காகவும்தான் என்று எனக்குச் சொல்ல முடியவில்லையென்றால் கூட, ”நீ இதுலே ஹேமாவா இருந்திருக்கணும்”, ”அதுல ஞானசௌந்தரியாக இருந்திருக்கணும்”னு சொல்லாம இருந்தீர்களென்றாலே போதும்! ஏனெனில் சந்தனமுல்லைகள் சந்தனமுல்லைகளாக இருப்பதனால்தான், ஹேமாக்கள் ஹேமாக்களாகவும் ஞானசௌந்தரிகள் ஞான்சௌந்தரிகளாகவும் இருக்க முடிகிறது, இல்லையா! 😉

Add a comment ஜூன் 16, 2009

கடிகாரத்தை நிறுத்துதல்- நன்றிகள்- நாஸ்டால்ஜிக்!

20-கள்…பற்பல கனவுகள்..திட்டங்கள்..கவலைகள்! வயதாகிறதேவென்ற கவலை இருந்ததேயில்லை..i.e. we are getting older! வாழ்வைக்குறித்து பயம் ஏதும் இல்லை!

மேற்கொண்டு படிக்க வேண்டும். நினைத்த பல்கலையில் கிடைக்கவேண்டும். உடனே வேலைக் கிடைத்து, நினைத்ததெல்லாம் வாங்க வேண்டும்! சம்பாரிக்க வேண்டும்..ஒரு நல்ல துணை கிடைக்க வேண்டும், நமது விருப்பங்களுக்கேற்றவாறு. அழகான
பலகணிகளுடன் அமைந்த வீடு வாங்க வேண்டும். நிலைநிறுத்திக்கொண்டாக வேண்டும்.
ஒரு நாள் திருமணம். default ஆக குழந்தை.

இப்படி கனவுகளை துரத்தும் வாழ்வில், you realise you are not as young as you thought you were. 30-களும் 40-களும் எனக்கு என்ன வைத்திருக்கிறதெனத் தெரியவில்லை..ஆனால், 20களின் கடைசி எனக்கு உணர்த்துவது, you can beat age with your attitude..;-)! 20-கள் எனக்குக் கொடுத்தது, முடிவெடுக்கும் உரிமைகள், செலவு செய்யும் பொறுப்புகள்..எல்லாவற்றுக்கும் மேல் சுதந்திரம் என்பதும் பொறுப்புகளே..!!
யாரும் அருகில் இருந்து இதைச் செய்தால் இப்படி இருக்கும் என்று சொல்வதற்கு இருக்க மாட்டார்கள்..ஆனால் இப்படி செய்திருந்தால் இப்படியா இருந்திருக்குமே என்று சொல்வதற்கு கண்டிப்பாக இருப்பார்கள்! :-))

so many random thoughts crossing my mind….and again I am in utter confusion as I was in 19!!

மாதம் பிறக்கும் முன்பே நாட்களை எண்ணுவது- காலண்டரில் வட்டமிட்டு, வாங்கிய புத்தாடையை ஒரு நாளைக்கொரு தரமாவது அட்டை டப்பாவிலிந்து பிரித்துப் தொட்டு கண்களில் கற்பனைக்கனவுகள்- பள்ளியில் சாக்லேட்களை பரிமாற்றம்- வகுப்பில் ஒரு ராயல் ட்ரீட்மென்ட்- எப்போதும் திட்டும் ஆசிரியர் கூட அன்று அன்பாக- எதிரிகள் கூட திடீரென நண்பர்களாகி பாசமழை பத்மாக்கள் – இவையெல்லாம் அய்யோ இன்றோடு போய்விடுமே எனும் ஒரு திடுக் எண்ணம் !

எனக்குள் ஒளிந்திருந்த அந்த ஆம்பூர் சிறுமியை வாழ்த்துகளாலும், பதிவுகளாலும் மீட்டெடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றிகள்! சுவரொட்டியில் வாழ்த்து சொன்ன G3, கேக் கொடுத்த ஆயில்ஸ், கவிதை எழுதிய கவிதா, ஜூஸ் கொடுத்த தூய்ஸ் – நெகிழ்ந்தேன்..மகிழ்ந்தேன்! :-))

கொஞ்சம் நாஸ்டால்ஜிக் – Rising from the east – Bally sagoo-வின் ஆல்பம். featuring suchitra pillai. நல்ல பாடல். வீடியோ மிகப் பிடிக்கும். வித்தியாசமாக இருக்கும்!

Add a comment ஏப்ரல் 9, 2009

என்னைக் கவர்ந்தவர்கள்!!

சின்னஞ்சிறு வயதில் கார்ட்டுன் மாந்தர்களை பிடித்திருந்தது. ஏழு அல்லது எட்டு வயதில் வஉசியைப் பிடித்திருந்தது, தம்பிக்கு அந்தப் பெயர்தான், அதுவும் தலைப்பெழுத்தையும் சேர்த்தே வைக்க வேண்டுமென அடம்பிடிக்குமளவிற்கு! பள்ளி பருவத்தில், ஒரு சம்மர் கேம்பில், இதே கேள்வியை எதிர்கொண்டபோது, எனது பிடித்தவர்கள் பட்டியல், அன்ட்ரூ அகாஸி, Gaby (Gabriella sabatini), பிரபாகரன், வீரப்பன் மற்றும் நாடியா கோமோன்ஸ்க்கி(ஜிம்னாஸ்டிக் வீராங்கனை) என்றிருந்தது! கல்லூரி பருவத்தில், கிரண் பேடியும், ஷாருக்கும், வீன்ஸ் வில்லியம்ஸூம், கலாமும் என்று பட்டியல் வளர்ந்தது!

one fine day, I learnt, எங்கோ இருப்பவர்களை விட, நமக்கு மிக மிக அருகில், நம் வாழ்வின் அங்கத்தினர்களின் தாக்கமே அதிகமென்றும், அவர்களின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் உண்டென்றும்,அவர்களும் தூண்டுகோல்களேயென்றும்!!
இப்போதெல்லாம், இவரைப் பிடிக்கும் அல்லது பிடிக்கவில்லையென்று சொல்லிவிடமுடிவதில்லை! ஒருவேளை நான் வளர்வது நின்று விட்டதாவெனத் தெரியவில்லை..ஆனால், ஒவ்வொரு மனிதரிடமும் ஏதோவொன்று எனை ஈர்த்தபடிதான் இருக்கிறது! பிடிக்காத பகுதி வந்தால் தள்ளிவிட்டு படிப்பதும், பிடித்திருந்தால் திரும்பத் திரும்ப படிப்பதுபோல, தள்ளி இருப்பதும், அருகாமைப்படுவதுமாய்.. சுவாரசியமாகத்தான் இருக்கிறது, புத்தகம் படிப்பதைப் போல் மனிதர்களை படிப்பதும்!

என்னைக் கவர்ந்தவர்கள் எனும் தொடர்பதிவுக்கு சகோதரர் ஜமால் அழைத்திருந்தார். மிகத் தாமதமாக பதிவிட்டிருக்கிறேன்….தவறாக எண்ணமாட்டீர்கள் என் நினைக்கிறேன்!! எல்லோரும் மனசை பிழியறமாதிரி எழுதியிருக்கறதால எதுக்கும் நானும் என் பங்குக்கு அதையே செய்யனும்னுதான் சின்னதா எழுதிட்டேன்! 🙂 அப்புறம் இந்த டேக்கை விருப்பமிருப்பவர்கள் தொடரலாம்..

Add a comment மார்ச் 30, 2009

250-உம் நன்றிகளும்!!


(pappu : @ nine months old!)

என்னுடைய கடந்த இடுகை 250வது இடுகை. பதிவுகளின் எண்ணிக்கையைக் குறித்து அவ்வளவாக சிலாகித்துக் கொள்வதில்லையென்றாலும் நன்றி சொல்லவதற்காகவேனும் இதைக் பதிவு செய்வது அவசியமாகத் தோன்றுகிறது எனக்கு! நான் ஒன்று பெரிய எழுத்தாளரோ கவிஞரோ இல்லை! ஆனால் பள்ளி/கல்லூரி போட்டிகளுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும், நிகழ்வுகளைக் குறித்துக் கொள்வதற்காகவும், சில சமயங்களில் பள்ளிக் கல்லூரித் தோழியருக்கு நெடுங் கடிதங்கள் என்றுதான் எழுதியிருந்திருக்கிறேன்! எதையாவது எழுதுவது என்பது என்னை எனக்கு உணர்த்தியிருக்கிறது..எழுத்து எனக்கு தஞ்சமளித்திருக்கிறது..அடுத்தவரிடம் சொல்ல முடியாதபொழுதுகளில்..அல்லது பிறர்
புரிந்துக்கொள்ள முடியாத பொழுதுகளில்! வாசிப்பு எழுத்தும் என்னை ஓருபோதும் காயப்படுத்தாதவை!

வேலை மாற்றங்கள், திருமணம், குழந்தை என்றிருக்கும்போதுதான் வலைப்பதிவு அறிமுகமானது! பப்பு ஒருவயதை நெருங்குகையில் 28 இடுகைகளைத் தொட்ட என் வலைப்பதிவு, அவளது இரண்டாம் அகவையில் 18 இடுகைகளாக குறைந்து அவள் பள்ளி செல்லவாரம்பித்தபின் 145 ஆக எகிறியிருக்கிறது! இதில் மறைந்திருக்கும் இன்னொரு் பொருள்..பப்புவிற்கும் எனக்கும் இடையேயிருக்கும் பிணைப்புக்கயிறு நாள்பட நெகிழ்ந்து, பப்பு அவளது விளையாட்டுலகத்துடன் நெருக்கமாகியிருக்கிறாள்.. நான் பதிவுகளுடன்!!

வலைப்பதிவுகளின் மூலம் பல நல்ல நண்பர்களை பெற்றிருக்கிறேன்..ஒரு சிலரை நேரில் சந்தித்துமிருக்கிறேன்! இந்தப் பதிவின்மூலம் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது இதுதான்….உங்கள் பின்னூட்டங்கள் ஊக்கமளித்திருக்கின்றன….மேலும் பதிவுகளிட கிரியை செய்திருக்கின்றன….பலசமயங்களில் மறுமொழிக்கு மறுமொழி இடாவிட்டாலும் தொடர்ந்து மறுமொழியிடும் உங்கள் கனிவுக்கும் பெருந்தன்மைக்கும் வந்தனங்கள்!

என் பதிவுகளை தொடர்ந்து வாசிக்கும், பின்னூட்டமிடும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!
வலைப்பதிவுகளுக்கு தளமாக இருக்கும் தமிழ்மணத்திற்கு நன்றி!!

Add a comment மார்ச் 27, 2009

ஆட்டோகிராப் aka டைரி ரீவிசிட்டட்!!

12-ஆம் வகுப்பு படிக்கும்போது நான் வைத்திருந்த டைரியை ஊருக்குச் சென்றபோது கண்டெடுத்தேன். அதுவே எனது ஆட்டோகிராப் புத்தகமாயும் இருந்தது. டைரிக் குறிப்புகள் என்றால், இன்று இந்த ப்ராக்டிகல்ஸ் செய்தேன், இந்த சால்ட் வந்திருந்தது…எனக்குப் பிடித்த சில பாடல்கள், அதன் வரிகள்!! எல்லோருடைய ஆட்டோகிராப் எண்ட்ரிகளில் இருந்தது எதைப் பற்றியென்றால், நான் சொல்லும் கடி ஜோக்குகளைப் பற்றியும், என்னுடைய புன்னகையும்தான்..மேலும், சிரித்தால் குழி விழுவதைப் பற்றியும்!! எல்லாவற்றுக்கும் மேலாக அனைவரும் வாழ்த்தியிருந்தது புன்னகை வாழ்வின் எந்த சூழ்நிலையிலும் மாறிவிடக்கூடாதென்று! yes friends, the smile still remains the same with me, come what may the situations!!

ரீடர்ஸ் டைஜஸ்ட்-டிலிருந்து பிடித்த சில quotes-ம் எழுதி வைத்திருக்கிறேன், ஆவியிலிருந்ததும் சில கவிதைகளை!! அதைவிட சுவாரசியம், நானே கூட கவிதைகள் எழுதியிருக்கிறேன்..:-)). And I managed to get some interesting stickers with funny messages. ஆண்ட்ரி அகாஸியின் ஹைட், வெயிட், அட்ரஸ், சொத்து பற்றிய குறிப்புகளும் இருக்கின்றன! :(..ம்ம்ம்! ஒவ்வொரு பக்கத்திலும், ஏதாவதொரு ஸ்டிக்கர்/ரெயின்போ இருக்கிறது..நான் அப்பொழுதே ப்லாக் எழுத ஆரம்பித்துவிட்டேன் போலிருக்கிறாது!! அப்புறம் கோட் வேர்ட்ஸ் நிறையக் இருக்கிறது..ஆட்டோகிராப் என்ற பெயரில் கொஞ்சம் அட்வைஸ் வேறு!எதுகை மோனைகளிலும், உவமைகளிலும் மக்கள்ஸ் பின்னியெடுத்திருக்கிறார்கள்!எழுத்துப் பிழைகள் வேறு!

கொஞ்சம் சுமாராயிருக்கிறது என்று நான் எண்ணுகிற கவிதையை..

வாழ்வை
ஊடுருவிப்
பார்த்தபோது..!

எண்ணமுட்டை வெடித்து
வண்ணக்கனவுகள்
வானுயர வளர்ந்து நிற்கும்!
கனவுகள் கரியாய் மரித்து
உண்மைகள் இயல்பாய் புரிய
மனம் இயலாமையில்
சூம்பிப் போகும்!
நடப்புகளை கிரகிக்க
சக்தியற்ற மனம்
வெதும்பி வெதும்பி ஏங்கும்..
இனிமையாய் கழித்த
இளம்பிராயத்துக்காக….!

(அநேகமா எங்க பாட்டி ஏதாவது என்னைத் திட்டியிருப்பாங்க, அதுக்கு நான் இவ்ளோ பெரிய கவிதை எழுதியிருப்பேன்ன்னு நினைக்கிறேன்..காலையில் எழுந்து படிக்காததற்காக!சத்தியமா எதுக்கு இப்படியெல்லாம் எழுதினேன்னு இப்போ ஒன்னும் புரியல!!:-)))

Add a comment நவம்பர் 2, 2008

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

பிப்ரவரி 2019
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

Posts by Month

Posts by Category