Posts filed under: ‘வளர்ச்சிப்படிகள்‘
சச் கா சாம்னா

ஆச்சி, ஏன் நம்ப்ளுக்கு ரெண்டு கைதான் இருக்கு…மூணு கை இல்லே?

தெரியலையே பப்பு…

ஏன் ரெண்டு கண்ணு, ரெண்டு காலு இருக்கு? மூணு இல்லே?

தெரியல..பப்பு..ஏன் இல்ல?

ஒனக்கு தெரியும்..நீ அம்மாடி!! சொல்லு!!!

பப்பு…அந்த உண்மை உனக்கும் சீக்கிரத்திலேயே தெரியப்போகுதுன்னு நினைக்கும் போதுதான்…அவ்வ்வ்!!!

Advertisements

Add a comment நவம்பர் 4, 2009

நீங்க யாரோட அம்மா?

நீங்க யாரோட அம்மா?

குறிஞ்சி மலரோட அம்மா.

நீங்க அர்ஷித் மம்மி இல்லையா? ஏன்?

பே!!

வெண்மதி அம்மா இல்லையா? அவங்க வீட்டிலே இருக்காங்களா?!

ஆமா..

whose mother aunty?

குறிஞ்சிஸ் மதர்.

“ஹாய் ஆண்ட்டி’ – மஷ்ரூம் கட்டடித்த குட்டிப்பெண்.

ஆமாம். பப்புவின் பள்ளியில் கடந்த செவ்வாயன்று அப்சர்வேஷன். காலை 9.30 – 10.30.

சரியாக அப்போதுதான் பிரேயர் முடிந்து அவரவரது பாயை எடுத்து விரித்துக்கொண்டிருந்தனர்.
பரபரப்பாக இருந்தது போல இருந்தது. அறைவாயிலில் நின்றுக்கொண்டிருந்தேன். பப்பு என்னை கவனிக்கவில்லை. பாயை எடுத்துக்கொண்டு அவளது இடத்திற்கு வந்தாள். என்னை பார்த்துவிட்டு ஒரு ப்ளாங்க் லுக். காலையில் அவளுக்குச் சொல்லியிருந்தேன்,அவளது பள்ளிக்கு வரப்போவதாக. என்னைக் கடந்துச்சென்ற வெண்மதி ஒரு மூலையில் அமர்ந்து மணிகளை கோர்க்க ஆரம்பித்தாள். வர்ஷினி கொஞ்சம் தள்ளி கட்டைகளை அடுக்கிக் கொண்டிருந்தாள். ஆண்ட்டி காட்டிய பாயில் அமர்வதற்குள், மேலிருக்கும் கேள்விகளில் முதல் மூன்றைக் கேட்டு முடித்திருந்தான் எனக்கெதிரில் இருந்த சிறுவன்.

பப்பு போரிங்கை செய்ய ஆரம்பித்தாள். அதிகமாக வேடிக்கை, கொஞ்சம் வேலை – என்னைப் போலவே!! பிங்க டவர். கட்டைகள் அடுக்கினாள். அவற்றில் கடைசியிலிருக்கும் மூன்று சிறிய துண்டுகளை ஒன்றாக எடுத்துச் செல்ல தலைப்பட்டாள். ‘ஒன் பை ஒன்’ என்று ஆண்ட்டி சொன்னதும் ஒவ்வொன்றாக வைத்துவிட்டு வந்தாள். அதன்பின் ஆல்ஃபபெட் பிக்சர்ஸ். பாயை சுருட்டி எடுத்துக்கொண்டு என்னருகில் வந்து, ‘வழி’ என்றாள். அங்கே வழி தாராளமாகத்தான் இருந்தது. கொஞ்சம் நகர்ந்து வழி விட்டதும் வைத்துவிட்டு திரும்ப வந்து ‘காலை எடு, வழி’ என்றாள். ராகிங்?!!

டெஸ்க் (சோக்கி?!) கொண்டு வந்து வைத்து சிறிய பாயை விரித்துவிட்டு உப்புத்தாள் எழுத்துகளை செய்தாள். ஆண்ட்டி பப்புவிடம் வந்துவிட அடுத்தது பிங்க் லெட்டர்ஸ் ஆரம்பமாகியது. பின் க்ளோப். அவளாக செய்வது எதையுமே என்னிடம் காட்டியபடி “ஓகேவா” என்றுச் சொல்லிக்கொண்டிருந்தாள், எனக்குச் செய்துகாட்டுபவள் போல. நாப்கின் ஃபோல்டிங், அதுவும் எனக்குச் சொல்லிக்கொடுத்தபடியே!! வர்ஷினி என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே இருந்தாள். அவ்வப்போது பப்புவும் அவளும் ரகசியம் பேசிக்கொண்டார்கள்.

திடீரென வகுப்பறைக்குள் ஒரு தும்பியோ வண்டோ வந்துவிட எல்லோரும் அதை துரத்திக்கொண்டு ஓடினர். வண்டு பயத்தில் பறந்தேவிட்டது!! யாரும் எதற்கும் பயந்த மாதிரியே தெரியவில்லை. அதாவது அதைத் துரத்திக்கொண்டு ஓடுவதற்கோ அல்லது வண்டு வந்த செய்தியை பகிர்ந்துக்கொள்வதற்கோ! எட்டாம் வகுப்பில், ஜன்னல் வழியே மரக்கிளையைப் பார்த்துக்கொண்டிருந்த சசிப்பிரியாவை, பாரங்கைமா, கோலன்கைமா நடத்திய அறிவியல் ஆசிரியர் திட்டியது நினைவுக்கு வந்தது.

அதற்குள், எனக்கெதிரில் இருந்த அதே சிறுவன் ஃப்லோடிங் ஆக்டிவிட்டியை கொண்டு வர நான்கைந்து பேர் அவனைச் சுற்றிக்கொண்டனர். அவனுக்காக மேட்டை விரித்து வைக்க உதவினர்.அவன் மிக பெருமிததுடன், ஒவ்வொன்றாக ஃப்லோட்டிங் என்று சொல்லிக்கொண்டு தண்ணீர் இருந்த கிண்ணத்தில் போட்டான். எல்லோரும் “ஹே ஃப்லோட்டிங்’ப்பா என்று சொல்லிக்கொண்டனர். முடிந்ததும் திரும்ப எடுத்து வைத்துவிட்டு தண்ணீருக்குள் கைவிட்டு கைகளை சுழற்றினான். பின் கைகளை உதறி சிரித்துக்கொண்டு விளையாட்டாக மற்றவர் மேல் நீர்த்திவலைகளைத் தெளிக்க எல்லோருக்கும் சிரிப்பு. தெரியாமல் தண்ணீர் கைகளிலிருந்து பட்டுவிட்டால் திட்டும் பப்புவும் அங்கே சிரித்துக்கொண்டிருந்தாள். ‘என்ன சத்தம், அவரவர் பாயில் வேலை செய்யுங்கள்’ என்ற ஆண்ட்டியின் குரல் கேட்டதும் அமைதி.

பப்பு பக்கத்தில் யாருடன் சேலஞ்ச் விடலாமென்று கட்டைவிரலை நீட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தாள். பக்கத்தில் வந்த இன்னொரு சிறுமி பப்புவை நோக்கி சேலஞ்ச் விட அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள் பப்பு. எங்கிருந்தோ வந்த இன்னொரு சிறுவன், தண்ணீரில் விளையாடிய சிறுவனுக்கு வந்து சேலஞ்ச் விட இருவரும் சிரித்தார்கள். சம்பந்தமேயில்லாமல் திடீரென்று வேறு யாருக்காவது ‘கா’ விட்டுக்கொள்கிறார்கள். உதடு மட்டும் அசைகிறது, கை ‘கா’ விடுகிறது. ஒன்றுமட்டும் புரிகிறது…அவளது பள்ளியில் எந்தநேரமும் யாராவது யாருடனாவது சேலஞ்ச் கொடுத்துக்கொண்டேயிருக்கிறார்கள், அதேவேகத்தில் ‘கா’வும்!! என்னால் மட்டும் அவ்வளவு எளிதாக ‘கா’வும், சேலஞ்சும் விட முடியுமென்றால்….!!!

Add a comment ஒக்ரோபர் 15, 2009

காது குத்திய காதை!!

பப்புவின் அனுமதியின்றி, அவள் விருப்பப்பட்டாலொழிய காது குத்துவதில்லை என்று முடிவு செய்திருந்ததை இங்கே எழுதியிருந்தேன். ஊரில் உறவினர்களுக்காக, முதல் மொட்டையின்போது நெல்மணியாலே காதில் லேசாக அழுத்தி, சம்பிரதாய காது குத்தை முடித்துவிட்டோம். தற்போது ‘கம்மல் குத்த போலாம்’ என்ற அவளது ஆசை, நச்சரிப்பாக மாறியதைத் தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுத்துவிட முடிவு செய்தோம். (நாங்க இப்போதைக்கு காது குத்த வேண்டாம்னுதான் நினைச்சிருந்தோம், ஆனால் வர்ஷினி அப்படி நினைக்கலையே!! – சிவாஜி ஸ்டைலில் வாசிக்கவும்!)

‘ஊரைக்கூட்டி, நாலைஞ்சு ஆடை வெட்டி எதற்கு ரணகளம், இங்கே சென்னையிலேயே குத்திவிடலாமெ’ன்று முகிலும் நானும் முடிவு செய்து (‘இதுக்கெல்லாம் ஒரு ஃபங்ஷனா’!)உறவினர்கள் கேட்டால் சமாளித்துக்கொள்ளலாமென்று அருகிலிருக்கும் ‘நாதெள்ளா’வில் கம்மல் வாங்கி அங்கேயே குத்தியாயிற்று. ஆசாரி உள்ளேயே இருக்கிறார். முதலிலேயே சொல்லிவிட்டால் அவரும் தயாராக இருப்பார். முதல்லே டாக்டரிடம் போகலாமாவென்று நினைத்து இங்கேயே கன்ஷாட்-இல் குத்திவிடுவார்களென்றுச் சொன்னதால் ஒரு ஐந்து நிமிடம் காத்திருப்புக்குப் பின் ஆசாரி வந்ததும் குத்தியாயிற்று.

நாற்காலியில் பப்புவை உட்கார வைத்து, நாங்கள் குறித்த புள்ளியிலேயே குத்திவிட்டார். அப்படியே கம்மலையும் மாட்டிவிட்டார். பப்புவுக்கு அழுகையே வரவில்லை, ‘கம்மல் குத்திக் கொள்ள’போகும் உற்சாகத்தில்! லேசாக ஒரு ஆஆ! அவ்வளவுதான். அழுகையின்றி ரத்தமின்றி ஒரு காதுகுத்து!

வெளியே வந்ததும் கண்ணாடியில் திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டாள்…பார்த்துக்கொண்டு நின்றாள்…நின்றுக்கொண்டே இருந்தாள்!! வரும்வழியில் தொட்டு தொட்டு பார்த்துக்கொண்டாள். இரவும் கம்மலுடனே கழிந்தது. பள்ளிக்கூடத்திற்கு தங்கம் போட்டுச் செல்லக் கூடாது. அதனால் கழட்டிவிட்டு, ஆயா சொன்னபடி தேங்காயெண்ணெய் விட்டு (‘அசைவு இருக்குமாம்’) துடைப்பக்குச்சியை போட்டு அனுப்பினோம். சாயங்காலம் வரும்போது பார்த்தால் வலது காதில் சிவப்பாகி வீங்கி இருந்தது. துடைப்பக்குச்சிகளை காணோம். எண்ணெய் மட்டும் விட்டோம். கம்மல் போட விடவில்லை. அழுகை. ஆர்ப்பாட்டம். ”எனக்கு கம்மல் வேணாம்”!!!

அடுத்த நாள் காலை காயம் மூடிக்கொண்டது. அதன்பின் என்ன செய்வது? தேங்காயெண்ணெய் விட்டுக்கொண்டே இருந்ததில் அடுத்த ஞாயிற்றுக்கிழமைக்குள் துளை இருந்த இடமே தெரியவில்லை. :-).

காது குத்தும் படலத்திற்கு தன்னைக் கூப்பிடவில்லையென்று கோபித்துக்கொண்ட வடலூர் ஆயா, ‘ஊர்லே போய் இன்னொருதடவை காது குத்திக்கலாமா’வென்று கேட்டால், பப்பு சொல்கிறாள்,

“கம்மல் குத்துனா வலிக்கும்…,நான் பெரிய பொண்ணாகிட்டுதான் கம்மல் குத்திப்பேன்…நீங்க பெரிய கம்மல் போட்டு இருக்கீங்க..உங்களுக்குக் காது வலிக்குதா? கழட்டிடுங்க!!”

Add a comment ஒக்ரோபர் 6, 2009

ரவுண்ட் அப்!

(படம்: முதல் டெர்மின் இறுதிநாள்!)


பப்புவின் பள்ளியின் முதல் டெர்ம் கடந்த பதினொன்றாம் தேதி முடிவுற்றது. விஜயதசமி வரை விடுமுறை. பள்ளி முடிந்ததைக் கொண்டாட கடற்கரைக்குச் சென்று காற்றோடு சளி மற்றும் ஜூரத்தையும் வாங்கியாயிற்று. டாக்டர் விசிட்-மருந்துகள் – ஆம்பூர் பயணம் – மருந்துகள் – இப்போது பள்ளியும் தொடங்கிவிட்டது.

ஆரம்பத்தில், வீட்டிலிருந்து செல்லும்போது ஜாலியாக சென்றாலும் பள்ளியில் வர்ஷினி அழுவதைப்பார்த்து கம்பெனிக்காக பப்புவும் அழுதாலும் ஓரிரு வாரத்தில் சரியாகிவிட்டது! எதைச் செய்தாலும் வர்ஷினியோடுதான் செய்ய வேண்டியிருக்கிறதாம் பப்புவுக்கு. வர்ஷினி செய்யும் ஆக்டிவிட்டியைத்தான் செய்கிறாள். இருவரும் அருகருகில் அமர்ந்துக்கொள்ளத்தான் விருப்பப்படுகிறார்களாம். ‘சிறுபிள்ளைகள் தானே, இருக்கட்டுமென்று’ விட்டு விடுவதாகச் சொன்னார் பப்புவின் வகுப்பாசிரியர். மேலும் ‘பிரிப்பது சரியல்ல, இருவருமே அப்படித்தான் இருக்கிறார்கள், அதனால் பரவாயில்லை’ என்றும் கூறினார்.

சிலநாட்களில் யார் யார் எங்கே அமர வேண்டுமென்று பாயைப் போட்டு வைத்தாலும் கூட, ஆன்ட்டி, வேறு ஏதாவது வேலையாக இருந்தால் எப்படியாவது ஒன்றாகி விடுகிறார்களாம். மேலும் பேசிக்கொண்டோ அல்லது ஆக்ட்விட்டி செய்யாமலோ இருப்பதில்லை, அதனால் அப்படி, மாறி அமர்ந்தாலும் நாங்களும் ஒன்றும் சொல்வதில்லை என்றார். என் சுதா கான்வெண்ட் தோழி சுதாவின் நினைவுதான் வந்தது. சுதா, கிருபா மற்றும் நான் – முதல் வகுப்பில் நெருங்கிய நண்பர்கள். கிருபா சுதாவை, “ உன் பேரு சுதா, உன் வயித்திலேருந்து தான் நாங்கள்ளாம் வந்தோம், அதனாலேதான் நாங்க சுதா கான்வென்ட்லே படிக்கிறோம்” என்றுச் சொல்லி அவளை அழ வைத்துக்கொண்டிருப்பாள். என்னையும் சுதாவையும் ஒன்றாக புகைப்படம் எடுக்க வேண்டுமென்று ஆயா சொல்லிக்கொண்டிருப்பார். சுதா வேறு பள்ளியில் சேரும் வரை ஆயா சொல்லிக்கொண்டு மட்டுமே இருந்தார், அது வேறு விஷயம்!

கடந்த சில நாட்களாக ஆங்கிலத்திலேயேத்தான் வகுப்பறையில் உரையாடுகிறார்களாம். அதாவது ஆன்ட்டியிடம் கண்டிப்பாக ஆங்கிலத்தில்தான் உரையாடியாக வேண்டிய கட்டாயமாம். இதுநாள் வரை குழந்தைகள் தமிழில் அல்லது இந்தியில் பதில் சொன்னாலும் புரிந்துக்கொண்டவர்கள், இப்போது, ஆங்கிலத்தில் உரையாடினால் மட்டுமே திரும்பப் பேசுகிறார்களாம். இதுதான் பப்புவின் ”close your வாய்”, ”no eating” , “this take” , “this my bottle” , ” no close your eyes” etc விற்குக் காரணமா?!!

பப்புவிற்கு, அவளது புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு ரைம்ஸ் பாடுவது அலாதி பிரியம். வாசிக்கத் தெரியாதென்றாலும் படத்தைப்பார்த்து என்ன ரைம்ஸ் என்று தெரிந்துக்கொண்டு ஆயாவிற்கும் எனக்கும் வகுப்பெடுப்பாள். இந்த டெர்மில் முதலில் கற்றுக்கொண்ட ரைம்ஸ், “காட்டுக்குள்ளே கச்சேரி”, ”thumpkin he can sing”. இந்த டெர்மில் பாதி நாட்கள் “ இன்னைக்கு அக்டோபர் 28th ஆ” என்ற கேட்டபடிதான் விடிந்தது. வாரத்தின் நாட்கள் தெரியுமெனினும், வருடத்தின் மாதங்களை விரைவில் அறிந்துக் கொண்டால் பரவாயில்லை!! 🙂

இப்போதுதான் vowels சொல்லிக்கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். i மற்றும் e போன்ற ஒரு எழுத்தை வரைந்து விட்டு அதை அளவெடுத்துக்கொண்டிருப்பதிலிருந்து அறிய முடிந்தது. பப்புவாகவே எப்போது கதைப் புத்தகங்கள் படிக்க ஆரம்பிப்பாளென்ற, எப்போதும் கேட்கின்ற அந்தக் கேள்வியை கேட்டு வைத்தேன். இப்போதைக்கு கதை சொல்வதிலிருந்து நான் தப்ப முடியாது போல!! (யாருப்பா அது, பப்பு பாவம்ன்னு சொல்றது?!!) மாலையில் பப்புவிடம், “இன்னைக்கு ஆன்ட்டி என்ன சொன்னாங்க” என்றோ, “ஸ்கூல்ல என்ன பண்ணீங்க” என்றோ கேட்பது வழக்கம். வரும் பதிலை வைத்து அன்று பள்ளியில் என்ன நடந்தது என்பதை அனுமானிக்கவே முடியாது. நானும் எப்படியெப்படியோ கேள்விகளை மாற்றி மாற்றி கேட்டுப்பார்த்தாலும் என்ன நடந்தது என்பதை ஒருநாளும் சொன்னதில்லை. “நாங்க வேன்லே போகும்போது புயல் மேகம் தொரத்திக்கிட்டே வந்துச்சி ஆச்சி” என்றோ அல்லது “புயல் மேகம் வேகமா வந்து எங்க மேலே மழை பெய்யலாம்னு பார்த்துச்சு ஆச்சி” என்றோ “அபிஷேக் ஜோஷ்வா வர்ஷினியை தூக்கிப் போட்டுட்டான்” என்றோதான் விடைகிடைக்கும்!! ”என் பொண்ணு ஸ்கூல்லேர்ந்து வந்ததும் அன்னைக்கு நடந்ததெல்லாம் அப்படியே ஒப்பிப்பா” என்று யாரேனும் சொல்லக் கேட்டால் என் கீழ்தாடை கீழே விழுவதில் ஆச்சர்யமென்ன?!!

Add a comment செப்ரெம்பர் 30, 2009

50:50

சமையல் செய்யும் அம்மா ‘அவசரமா ஊருக்குப் போகவேண்டியிருக்கு, வர எவ்ளோ நாளாகும்னு தெரியல, போய்ட்டு ஃபோன் பண்றேன்’னென்றுச் சொல்லிவிட்டு திண்டிவனத்திற்குச் சென்றார். ஒரு வாரமாகியும், எந்தத் தகவலுமில்லை. பத்துநாட்கள் கழித்து வந்தவரிடம் ‘ஃபோன் பண்ணிச் சொல்றேன்னு சொன்னீங்களே” என்றதற்கு,

”ஊரிலே கரெண்ட்டே இல்லம்மா, ஃபோனே எடுக்கலை”

பப்பு தனியாக விளையாடிக்கொண்டிருந்தாள். சடசடவென சரிந்து விழுவது போல சத்தம் கேட்டது. அலமாரியில் ஏதோ கை வைத்திருக்கிறாள், எல்லாம் விழுந்திருக்கிறது என்று புரிந்தது. நானும் போய் பார்க்கவில்லை. ஒன்றும் கேட்கவுமில்லை.

என்னிடம் வந்த பப்பு,

“ஆச்சி, புக்லாம் அதுவே விழுந்துடுச்சு…வந்து பாரு” என்றாள். நான் அசையாமலிருந்தது அவளதுக் கூற்றை நான் நம்பவில்லை என்றெண்ண வைத்தது போலும். என்னை ஒருமாதிரியாக பார்த்து சொன்னாள்,

”ஆச்சி, குள்ளநரி வந்து எல்லாத்தையும் தள்ளி விட்டுடுச்சு, புக்லாம் கீழே கிடக்கு” !!

Add a comment செப்ரெம்பர் 3, 2009

v3.0 – 3.10

பப்பு,

ஞாபகமிருக்கிறதா, சென்ற வாரத்தில் ஓர் நாள்,

”என்னைத் திட்டுறீங்க இல்ல,உங்க அம்மாக்கிட்டே சொல்றேன்” – பப்பு

“நானும் உங்க அம்மாக்கிட்டே சொல்றேன்” – முகில்

“இது எங்க அம்மாவோட வீடு” – பப்பு

இந்த உரையாடல்(விவாதம்) இதோடு முற்றுப்பெறுகிறது.

‘ஏன் வீட்டைக் குப்பையாக்குகிறாய்’ என்று முகில் கேட்டதற்குதான் இத்தனையும்! இதுநாள் வரை, நாங்கள் இது உன்வீடு, என்வீடு என்று பேசியதில்லை. ஆம்பூர் வீடு, வடலூர் வீடு அல்லது விழுப்புரம் வீடு என்றுதான் பேசியிருக்கிறோம். அல்லது நம்ம வீடு என்றுதான் குறிப்பிட்டிருக்கிறோம்! With that,பப்பு, நீயாகவே உரையாடலை எங்கே முடிக்கவேண்டும்ன்று அறிந்திருக்கிறாய். ;-).

நிறைய பேசுகிறாய். தொலைபேசியில் நீண்ட நேரம் பேசுகிறாய், நீ சொல்வது எல்லாமே ஆச்சரியமாகவும் மகி்ழ்ச்சியூட்டுவதாகவும் இருக்கிறது!

நீயாகவே வரிகளமைத்துப் ஏதாவதொரு மெட்டில் பாடுகிறாய்.

இட்லி
சூடான இட்லி
அட்லி
அட்லியே!!

அர்த்தம்தான் புரியவில்லை!

திரும்ப திரும்ப கடைக்கு
இல்லன்னா கடைக்கு
பத்து வாங்க போலாம்
இந்தச் செடி நல்லாருக்காது!!

நாங்கள் எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும், என்ன செய்ய வேண்டுமென்றுச் சொல்லிக்கொண்டே இருக்கிறாய்! சில நேரங்களில், நீ தனியாக இருக்கவிரும்புகிறாய். யாராவது கூட இருந்தால், கண்காணிக்கத்தான் என்று எண்ணிக்கொள்கிறாய்!

இந்த காலகட்டத்தில்தான், நீ, மிக முக்கியமானதொரு மைல்கல்லை கற்றுக்கொண்டாய்…பழி (complaint)சொல்வதற்கும், ‘நானில்லை, அதுவே உழுந்துடுச்சு, அதுவே கிழிஞ்சுக்கிச்சு’ யென்று தப்பித்துக்கொள்வதற்கும்!

அலுவலகத்திலிருந்து நான் வந்ததும், ஆயாவை பற்றி கம்ப்ளெய்ன் செய்வது உனது வழக்கம். ‘எனக்கு பேரிச்சம் பழம் கொடுக்கல’ அல்லது ‘வாழைப்பழம் கொடுக்கலை’யென்று. (இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டுவிட்டு, முடி வளர்ந்துவிட்டதாவென்று தலையை சாய்த்துப் பார்க்கிறாய்.) நான் கேட்கிறேனென்று சொன்னதும், “ஆயாவை அடி, அடி” என்றாய். ”பப்பு, யாரையும் அடிக்கக்கூடாது” என்றதற்கு, ‘என்னை காலையிலே அடிச்சே, ஏன் என்னை மட்டும் அடிச்சே’ என்றாய்! குற்றம் சாட்டும் நோக்கத்தை விட, ஏன் என்று மட்டும் அறிந்துக்கொள்ளும் ஆர்வமே உன் முகத்தில் இருந்தது! ஹ்ம்ம்..இப்படிதான் நாம் வாழ்கிறோம் பப்பு, செய்யக்கூடாது செய்யக்கூடாது என்று சொல்லிக்கொடுக்கப்பட்டு, கடைசியில் அதைத்தான் செய்யும்படி நேர்ந்துவிடுகிறது!

உன் கேள்விகள் மகிழ்ச்சியைத்தான் தருகின்றன, ‘மரம் ஏன் காத்துலே விழாம நிக்குது’ என்றும், கம்மல் கழட்டிய நாளொன்றில் ‘நீ boyயாயிட்டியா’ என்றும் கேட்கிறாய். பால் குடித்தபின் உதட்டின்மேலிருந்த நுரையைக் காட்டி ‘நான் boyயியிட்டேன்’ என்கிறாய். Well, pappu, இன்னும் பல வித்தியாசங்களை வாழ்க்கை வைத்திருக்கிறது, இது மட்டுமில்லை என்பதை நீ உணரும் காலமும் வரும்!

நட்பை உலகமாகக் கொண்டிருக்கிறாய், நண்பர்களுக்காகத்தான் நீ பள்ளிக்கு போகிறாய். இப்பொதெல்லாம், குள்ளநரி தேவைப்படுவதில்லை உன்னை எழுப்ப, ‘வர்ஷினி, வெண்மதி எல்லோரும் உனக்காக வேன்லே வந்துக்கிட்டுருக்காங்க’ என்பதே போதுமானதாக இருக்கிறது உன்னைக் கிளப்ப! ‘நான் வர்ஷினி ஃப்ரெண்ட், உன் ஃப்ரெண்ட் இல்ல’ என்கிறாய்! யாருடனாவது ஃப்ரெண்டாக இருக்க வேண்டுமானால், கண்டிப்பாக யாருடனாவது கா விடத்தான் வேண்டுமென நினைத்துக்கொண்டிருக்கிறாய்!! ‘வர்ஷினி வீட்டுக்கு என்னை விடறியா’ என்கிறாய். Don’t you think its too early pappu?!!

‘கா கா’ என்று என்னிடம் கா விடுகிறாய். பதிலுக்கு நானும் ‘கா’ விட்டால் கவலை கொள்கிறாய். நான் ‘கா’ விடக் கூடாதென்று கத்துகிறாய். நீ கா விட்டாலும், நான் சேலஞ்ச்தான் விடனும் என்று சொல்கிறாய். Ah,பப்பு, இதுதான் முதல் படி, to take your mom for granted!! இது எங்கே முடியுமென்று நானறிந்திருக்கிறேன்…தெரிந்தும் நீ கா விடும்போதெல்லாம் உனக்கு சேலஞ்ச் கொடுத்துக்கொண்டிருக்கிறேன்!!

பப்பு, இரவு நேரங்களில் என்னைவிட்டு தனியே தூங்கி பழக்கமில்லை உனக்கு. ஆயா ஊரிலிருந்து வந்ததும், ஆயாவோடு படுத்துக்கொள்ளப்போவதாகச் சொன்னாய். வழக்கம்போல, சொல்லிவிட்டு தூங்கும் நேரத்தில் வந்துவிடுவாயென்றெண்ணிக் கொண்டிருந்தேன். நீ அருகிலில்லாததை தூக்கத்தில் உணர்ந்து, நடுஇரவினில் ஆயாவினருகில் உறங்கிக்கொண்டிருந்த உன்னைத் தூக்கிக் கொண்டு வந்தேன்!பப்பு, நீ வளர்ந்துவிட்டாய், தனியாக உறங்க…பார், நான் இன்னும் வளரவில்லை!! To let go – இன்னமும் கற்றுக்கொள்கிறேன்!

கோபத்தில் உன்னை அடிக்க முற்படும்போது, “நாந்தான் அம்மா” என்று சொல்லிக்கொண்டு திரும்பி அடிக்க்க வந்தாய். பப்பு, அம்மாவாக இருந்தால் மட்டுமே அடிக்க வேண்ண்டுமென்று நீ நினைப்பது எனக்கு பிடித்திருக்கிறது! 🙂 (இது நானும் பப்புவும் விளையாடும் விளையாட்டு, நான் பப்புவாகி விடுவேன். பப்பு அம்மாவாகி விடுவாள். ஆபீஸ் செல்வாள், நான் வீட்டிலிருப்பதற்கு அழ வேண்டும்..etc!!)

‘சேம் சேம்’ அல்லது ‘சேம் கலர்’ அல்லது ‘சேம் ஸ்விட்’ என்று சொல்லக் கற்றுக்கொண்டாய்! வெளியில் போனாலோ, வீட்டிலிருந்தாலோ நீயும் நானும் ஒரே வண்ணத்தில் உடுத்த விரும்புகிறாய்! அப்படி இல்லையென்றாலும், உனது உடையிலிருக்கும் வண்ணத்தை, எனது உடையில் ஏதோ ஒரு மூலையிலாவது கண்டு நீயாகவே சமாதானமாகிறாய்!

என்றேனும் நான் மாற்றும் கம்மல் உன் கண்களுக்கு மட்டுமே சட்டென தெரிகிறது. ‘அழகா இருக்கே’ என்றும் ‘இந்த ட்ரெஸ் நல்லா இல்லே’ என்றும் சொல்கிறாய், ‘குண்டுக் குட்டி’ என்றுக் கொஞ்சுகிறாய்! Phase D ஐ அழகாக கடந்து வந்தோம்…ஆனாலும் நீ சமயங்களில் கோபமாகிவிட்டால் டி சொல்வதும் நீடிக்கிறது! இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்த டோரா க்ரேஸ் இப்போது இல்லை. அல்லது நான் அப்படி நினைத்துக்கொண்டிருக்கிறேனோ!!

உனது, மூன்று வயது மூன்று மாதங்களில் ஜிக்சா புதிர்களை அடுக்கக் கற்றுக்கொண்டாய். ஏனோ உனக்கு மெழுகுவண்ணங்களை தீட்டுவதில் அவ்வளவு ஆர்வமில்லை அப்போது. சரியாக உனது மூன்று வயது ஆறு மாதங்களில் அதில் ஆர்வம் காட்டத்தொடங்கினாய். அதிலும் சிவப்பு மாடுகள், கறுப்பு மாம்பழம் என்று கற்பனை செய்துபார்க்க இயலாதவைகளை தீட்டியதை எப்படி நான் மறக்க முடியும்!! பல்டி அடிக்கக் கற்றுக்கொண்டாய். பதற்றமும், மகிழ்ச்சியும் சேர்ந்த நிலையை நான் அறிந்துக்கொண்டேன்!

சிறிது கணினியும் இயக்கக் கற்றுக்கொண்டிருக்கிறாய். கீபோர்டில் சில எழுத்துகள், வலது அம்பு சரியாக இயங்க மறுக்கின்றன!! ‘சொன்னபேச்சை கேட்பது’ என்பதை நீ என்றேனும் கற்றுக்கொள்வாயா என்பதே எனக்குச் சந்தேகமாக இருக்கிறது! என் பெரிம்மாவுக்கும், ஆயாவுக்கும், ரத்த அழுத்தம் கூடியதன் காரணம் இப்போது புரிகிறதெனக்கு!

‘அப்பாக்கு கா கா விட்டுடு…otherwise நோ சேலஞ்ச்’!- என்று பிலாக்மெயில் செய்கிறாய்! எதைச் சொன்னாலும் அதற்கு எதிர்ப்பதமாகத் தான் செய்கிறாய். சரிதானென்று நாங்களும் எதிர்ப்பதமாகச் சொன்னால், அன்றுதான் கடமையாகச் சொல்பேச்சை உடனே கேட்கிறாய்!

சொல்வதற்கு இன்னும் நிறைய இருப்பதுபோல தோன்றுகிறது, பப்பு! ஃப்ரெண்ட்லியான, உற்சாகமான, பயமறியாத சின்னஞ்சிறுமியாக நீ வளர்வதைப் பார்க்க நிறைவாக இருக்கிறது!
உனது மூன்று வயதைத் தாண்டி பத்து மாதங்களைக் கடந்து வந்திருக்கிறோம் and We have grown together!

இருந்தாலும், காலத்தை இப்படியே உறையச் செய்துவிட விரும்புகிறேன்.அதே சமயம் நீ வளரவும் விரும்புகிறேனே!! oh my!

வாழ்த்துகளுடன்,
ஆச்சி!

Add a comment செப்ரெம்பர் 1, 2009

தன் வினை …./முற்பகல் செயின் ….

…தன்னைச் சுடும்!!

“பப்பு, ரோட்லே போறவங்க நமக்குத் தெரியாதவங்க கூப்டா பேசக்கூடாது” -ன்னு சொல்லி நான் பட்டபாட்டை சொல்லியிருக்கேன்.

பக்கத்துவீட்டு ஆன்ட்டியை நாங்க அடிக்கடி பால்கனிலே பார்த்து பேசிக்குவோம். அவங்க வீட்டுக்கும் வருவாங்க சிலசமயம், இல்லன்னா, நானும் பப்புவும் போவோம். அங்கிளை ரோட்லே பாத்தா விஷ் பண்றதோட சரி,அதுவும் என்னைக்காவதுதான் பார்ப்போம். சோ நானோ, முகிலோ அங்கிள் கூட பேசி பப்பு பார்த்ததில்லை. இதுவரைக்கும் அங்கிள் எங்க வீட்டுக்கு வந்ததையும் விரல்விட்டு எண்ணிடலாம்னு வச்சிக்கங்களேன். இதெல்லாம் எதுக்குச் சொல்றேன்னா பப்புவை பொறுத்த வரை அங்கிள்கிட்டே நாங்க பேசி பார்த்ததில்லை. ஆண்ட்டிதான் நல்ல பழக்கம், எனக்கும் பப்புவுக்கும்.

சனிக்கிழமை சாயங்காலம் அங்கிள் வீட்டுக்கு வந்திருந்தார். கொஞ்ச நேரத்துலே மழை, இடி. எல்லோரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.


”அவங்கவங்க வீட்டுலேதான் அவங்கவங்க இருக்கனும்.. சொல்லு…எல்லோரும் அவங்கவங்க வீட்டுலேதான் இருக்கனும்!!”

பப்பு என்ன சொல்ல வர்றான்னு இந்நேரம் உங்களுக்கு புரிஞ்சிருக்குமே!!! அவ்வ்வ்வ்!
முகிலுக்கு ஒன்னும் புரியலை. அங்கிளுக்கு மழை சத்ததில தெளிவா கேக்கலை.

ஆனா, எனக்கு மட்டும் ‘பக்’னு ஆகிடுச்சு. பெரிம்மா வேற பப்புவை டிஸ்ராக்ட் பண்ணி கூப்பிடறாங்க. விடாம இன்னொருவாட்டி அப்படியே ரிப்பீட்டு வேற!! எனக்கு அப்படியே நிலம் இரண்டா பிளந்து என்னை முழுங்கிடாதான்னு!! நானும் உள்ளே கூட்டிட்டுபோய் பாக்குறேன்..ம்ம் முடியல…அங்கிளும் முகிலும் பிசியா பேசிக்கிட்டு இருக்காங்க – ஐடி ஃபீல்ட்டுலே இருக்க பையனை நம்பி அவரோட பொண்ணைக் கொடுக்கலாமான்னு!!

“ரோட்லே போறவங்க கூடல்லாம் பேசக்கூடாது” – பப்பு!

அங்கிளுக்கு பப்பு சொல்றது தெளிவா கேட்டிருக்காதுன்னும், ”மூனு – அஞ்சு வயசுலேதான் பேசிக் கேரக்டர் பில்ட் ஆகும்”ன்னு அவர் சாதாரணமாத்தான் சொன்னார்ன்னும் நம்ப விரும்பறேன்!! 🙂

….பிற்பகல் விளையும்!!

நீங்கல்லாம் பயந்த மாதிரி ஒன்னும் ஆகலை..அடியெல்லாம் இல்ல! தங்கள் அக்கறைக்கு நன்றி! 🙂 ஆனா,ஒரு புத்தகம் குழந்தைங்ககிட்டே எவ்வளவு பெரிய தாக்கத்தை உண்டு பண்ணும், நாம் சொல்ற ஒவ்வொன்னும், அவங்க மனசுக்குள்ளே போகற ஒவ்வொரு விஷயமும், என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்துதுன்னு எனக்குப் புரிய வைச்சது இது!!

பப்புவும் நானும் ஒரு புத்தகம் படிச்சிக்கிட்டிருந்தோம். விதவிதமான ஓடுகள் பத்தி. எப்படி சில விலங்குகளுக்கு வீடு அதனோட மேலேயே அமைஞ்சு இருக்குன்னு. நமக்கு வீடு எவ்வளவு பாதுகாப்பா இருக்கோ அது மாதிரி சில விலங்குகளுக்கு இயற்கையே எபப்டி பாதுகாப்பு கொடுக்குதுன்னு!அந்த புத்தகத்தை படிச்சுட்டு,அந்த வாரயிறுதியிலே கிண்டி பூங்காவுக்கும், பெசண்ட் நகர் பீச்சுக்கும் போயிருந்தோம். புத்தகத்துலே இருந்ததை நேராவும் பார்த்தோம்! கடற்கரையிலே கொஞ்சம் கிளிஞ்சல்கள் (கிளிஞ்சலுக்குள்ளே எப்படி ஒரு அனிமல் இருக்கும்னு இன்னும் அவளுக்கு ஒரே ஆச்சர்யம்!!), நத்தை, ஆமை, நண்டு இப்படி…கிண்டி பார்க்கில் ஆமையை 30 நிமிஷம் பார்த்த ஒரே குடும்பம் நாங்களாதான் இருப்போம்!

ஒருநாள், பப்பு, கிளிஞ்சலை முதுகிலே ஒட்டிக்கிட்டு படுக்கையிலே நகர்ந்து நகர்ந்து வந்தப்போ எனக்கு ஒன்னும் புரியலை. நான் டக்னு கிளிஞ்சலை எடுத்துட்டேன். ரொம்ப கோவம் வந்து, ‘நான் ஆமைடி, ஷெல் வச்சிருக்கேன் பாரு’-ன்னு கத்தின பப்புவை சமாதானப்படுத்தி, ஃபோட்டோ எடுத்தேன்! அதுதான் முதல் படம்!!

இன்னொரு நாள், பப்பு இப்படி நாற்காலியை கவிழ்த்து அதுக்குள்ளே போய்ட்டதும் எங்க ஆயா பயந்துப் போய் என்னை கூப்பிட்டாங்க. ”நான் நத்தையோட ஷெல்-ல இருக்கேன்’ன்னு பேலன்ஸ் பண்ணி நகர முயற்சி செய்துக்கிட்டிருந்தா, ஹால்லே! நான் குடுகுடுன்னு ஓடிப்போய் கேமிராவை கொண்டுவந்து ‘கிளிக்’ட்டேன்!! அது இரண்டாம் படம்!

இந்த விளக்கம் கொஞ்சம் பெரிசா இருக்கலாம், ஆனா, திரும்ப எப்போவாவது படிச்சுப் பார்க்கும்போது எங்களுக்கு ஒரு நல்ல ரீகாலிங்கா இருக்கும்!! அரவிந்த் சரியா சொல்லியிருக்கார். வாழ்த்துகள் அரவிந்த்! 🙂

Add a comment ஓகஸ்ட் 26, 2009

என்ன கொடும குள்ளநரி இது!!!

யார் உங்கள மொட்ட அடிச்சா, முகிலப்பா?! – அவள் தூங்கிக்கொண்டிருக்கும் சமயம் முடித்திருத்திக்கொண்டு வந்த முகிலைப் பார்த்து!

“குள்ளநரி, பப்பு” – முகில்! (நான் புஜ்ஜி என்பதை நினைவிற் கொள்க!!)

”அதுக்குத்தான் ஓரத்துலே படுக்கக்கூடாது, அப்பா ஓரத்துலே படுத்திருந்தாங்க இல்ல, அதான் குள்ளநரி வந்து கட் பண்ணிடுச்சு”- இது நான்!

அதிலிருந்து பப்புவை காலையில் எழுப்பவும் சில சமயங்களின் கட்டிலின் மறுஓரத்தில் படுக்க அடம் பிடிக்க பப்புவை சமாளிக்கவும் “குள்ளநரி” உதவி செய்தது.

காலை 6.15-க்கு அப்படி சத்தம் கொடுத்துவிட்டு (யாராவது ஒருவர்தான்…ஹிஹி!) “குள்ளநரி வந்துடுச்சு போலிருக்கு” என்று சொன்னதும் எழுந்து உட்கார்ந்து விடுவாள்-குள்ளநரிதான் வந்துவிட்டது என்று நம்பி்!அப்புறம் என்ன…குள்ளநரியை தேடுகிற படலம் பாத்ரூமில் முடியும்!!

எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டிருந்துச்சு, இன்றுக்காலை ஏழு மணிக்கு அவள் என்னை எழுப்பும் வரை –

”ஸ்ஸ்..ஸ்ஸ்…குள்ளநரி வந்திருக்கு பாரு!!”

..என்று குள்ளநரி சத்தத்தைக் கொடுத்து!!

குறிப்பு :

இன்று பப்பு அவளது பள்ளியிலிருந்து முதல் ஃபீல்ட் ட்ரிப் சென்றுவிட்டு வந்திருக்கிறாள். (அதைப்பற்றி பிறிதொரு இடுகையில்!)

Add a comment ஜூலை 17, 2009

லேடி இன் ரெட்!!

பப்புவின் பள்ளியில் கடந்த 26ஆம் தேதி – ரெட் டே! எல்லோரும் ரெட் வண்ண் உடையில் வர வேண்டும். யதேச்சையாக வாங்கிய சிவப்பு-மஞ்சள் பாவாடை சட்டை இருந்தது! அதையே போட்டு அனுப்பலாம் என்று நினைத்திருந்தேன். என் அலுவலகத் தோழியிடம் சொன்னபோது, ”எவ்ளோ அழகழகா ட்ரெஸ் இருக்கு, ஆரெம்கேவிலே! வாங்கி போடேன்” என்றாள். நான் கொடுத்த லுக் பார்த்துவிட்டு, ”நீ கண்டிப்பா வாங்க போறதில்லே, எனக்கு நல்லாத் தெரியும்! சே, பையனை வச்சிக்கிட்டு எனக்கு எப்படி இருக்குத் தெரியுமா, பொண்ணை எவ்ளோ அழகா அனுப்பலாம். ரெட் கலர் வளையல், ஹேர்பின், மணியெல்லாம் போட்டு அனுப்பு, எங்க அக்கா ப்ரீத்தாக்கு அப்படிதான் பண்ணுவா” என்று சொல்ல, அவளது உற்சாகம் என்னைத் தொற்றிக் கொண்டது. புதுஉடையெல்லாம் வாங்கவில்லை…ஆனால் ரெட் நெய்ல்பாலிஷ், நெத்திசுட்டி, ஹேர் க்ளிப்ஸ் வாங்கினோம். வளையலும் கழுத்தில் போட்டுக்கொள்ளும் மணி அம்மா வாங்கி வந்தது வீட்டிலேயே இருந்தது!

ரெட் டே அன்று இப்படித்தான் இருந்தாள் பப்பு. கைகளில் நகப்பூச்சு இருப்பதால் நீண்டநேரம் அப்படியே வைத்திருந்தாள். முந்தினநாளிரவே கைகளில் பூசியாயிற்று.நகப்பூச்சு போயவிடுமென்று காலையில் பல்துலக்க மறுத்துவிட்டாள். மறுபடியும் போட்டுக்கொள்ள அனுமதித்தபிறகே குளியலறைக்குள் நுழைந்தாள். தீம் டே அன்று பள்ளி நேரம் முடிந்ததும் நாமும் பள்ளிக்கு சென்று பார்க்கலாம், ஆன்ட்டியை சந்திக்கலாம். பள்ளியில் எல்லாமே ரெட் கலர்தான் – பூக்கள், காய்கறிகள், செய்த கலரிங் வேலை ஸ்ட்ராபெர்ரி, தர்பூசணி வில்லை என்று!

ஆண்ட்டியிடம் பேசினேன். வகுப்பில் மற்றவருக்கு தொல்லை தருவதில்லை. மிகவும் நல்ல பெண் . வர்ஷினியோடு சேர்ந்துதான் எதையுமே செய்ய பிரியப்படுகிறாள். இப்போதும் அழுவது தொடர்கிறது, ஒருசில நாட்களில். செய்ய விருப்பமில்லாவிட்டால் சொல்லி விடுகிறாள் என்றார்கள். குறிப்பிட்ட ஒரு சில நண்பர்களுடன் மட்டுமே பழகுகிறாள்.அவள் இன்று மிக அழகாக வந்திருந்ததாக சொன்னார்! (என்னை உற்சாகபடுத்திய என் தோழி அபிக்கு நன்றிகள்!:-))

பப்புவைக் கேட்டபோதோ,’நான் அழவேயில்லே’ என்றும் ‘வர்ஷினிதான் அழுதுச்சு, பப்பு அம்மா வேணும்னு சொல்லுச்சு’ என்றும் சொல்கிறாள்! ஆனால், காலையில் செல்லும் போது எந்த அறிகுறியும் இருப்பதில்லை. பள்ளியில் அழுதேனேன்றும் சொல்வதுமில்லை. 😦

பப்பு பள்ளியில் பெற்றோர்கள் – ஆசிரியர்களின் முதல் சந்திப்பு இந்த வருடத்தில்! என்னைக் கவர்ந்த ஒரு சில விஷயங்கள்:

* ஆன்ட்டி சொன்னது, குழந்தைகளை அடிக்காதீர்கள், தயது செய்து அடிக்காதீர்கள். நாங்களும் அடிப்பதில்லை. எதுவானாலும் அவர்களுக்கு சொல்லுங்கள். விளக்குங்கள்.They are ready to accept. ஆனாl நாmதான் சொல்வது இல்லை. வெளியில் போனாலும், எங்கே போகிறீர்கள் என்று சொல்லுங்கள். “டாக்டர்கிட்டே போறேன், ஊசி போட்டுடுவார்னு பயமுறுத்தாதீங்க. நாளைக்கு நிஜமாவே, டாக்டர்கிட்டே போலாம்னு சொன்னா அந்த குழந்தை வரமாட்டேன்னு பயந்து அழும்”.

* இங்கே இருக்கும் உபகரணங்களை சில குழந்தைகள் தெரியாமல் எடுத்து பையிலே வைத்துக்கொள்ளலாம். அப்படி ஏதாவது உங்கள் குழந்தைகள் பையில் பார்த்தீர்களென்றால் எதுவுமே சொல்லாதீர்கள். கண்டிக்காதீர்கள். ‘ஆன்ட்டிக்கிட்டே கொடுத்துடு’ என்று சொல்லி கொடுத்தனுப்பி விடுங்கள். குழந்தைகள் இதையெல்லாம் பார்த்து ஈர்க்கபபடுவது இயல்பு. அதுக்காக, ‘திருடிட்டு வந்துட்டியா’ என்றோ அல்லது ‘இனிமே திருடக் கூடாது’ என்றோ சொல்லாதீங்ர்கள். நாங்களும் அப்படி சொல்வது இல்லை. அந்த வார்த்தையை உங்கள் குழந்தை மேல் உபயோகிக்காதீர்கள்! உபகரணத்தின் நிறத்தையும் அந்த ஆக்டிவிட்டியைப் பார்த்து ஈர்க்கப்படுவது இயல்புதான்!

* கடந்தவாரத்தில் ஏதோ உபகரணத்தின் சிறியதுண்டு காணாமல் போய்விட்டது. கிளாஸ் முழுவதும் எல்லோரும் சேர்ந்து ஒரே தேடலாம். ஆன்ட்டியால் கட்டுப்படுத்த முடியவில்லையாம். எங்கிருந்தோ கண்டுபிடித்ததும் ஒரே குதூகலமாம். கிடைத்துவிட்டது ஆன்ட்டி என்று எல்லாரும் ஒருவரையொருவர் கட்டிபிடித்துக்கொள்கிறார்களாம். அதாவது அவர்கள் உபயோகப்படுத்தும் உபகரணத்தை எந்தளவு நேசிக்கிறார்கள் என்று சொல்லி முடித்தார் ஆண்ட்டி. காணாமல் போன ஷேப்பர்ஸூம், கரப்பான் பூச்சி வீடும் ஏனோ நினைவுக்கு வந்தது!! 😉

சித்திரக்கூடத்திற்கு இன்றோடு மூன்று வயது! இன்று யதேச்சையாக கண்டுபிடித்தேன். உங்களனைவருக்கும் எனது வாழ்த்துகளும் நன்றிகளும்! சித்திரக்கூடத்திற்கும், தமிழ்மணத்திற்கும் எனது நன்றிகள்! 🙂

Add a comment ஜூலை 4, 2009

My little Buddha…!

கட்டிலில் இருந்து குதித்து விளையாடுவது பப்புவிற்கு பிடித்த விளையாட்டு. ”நான் பறக்கிறேன் பாரு” என்று கைகளை நீட்டியபடி பீட்டர் பானாக தன்னை உருவகித்துக் கொண்டு குதிப்பதை பார்க்கும்போது நமக்குத்தான் ‘அவ்வ்வ்’!!

நன்றாக அடித்துவிட்டேன் .(பெரிம்மா, இதை படிச்சுக்கிட்டிருந்தீங்கன்னா என்னை திட்டாதீங்க!!) அவள் இதை எதிர்பார்க்கவில்லை. கோபத்தோடு என்னைப் பார்த்தாள். முகத்தில் கோபமும் அழுகையும் கொப்பளிக்க, தழுதழுத்தக் குரலில்

குட்டிபசங்க பாவம்

நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டு விநாடிகள். தொடர்ந்துச் சொன்னாள்,

”குட்டிப் பசங்கள அடிச்சா, திருப்பி அடிச்சுடுவாங்க!!”

oh, What a Zen-ness…!

Note:

இன்று பள்ளிக்கூடத்தின் முதல்நாள். அவளுக்கொன்றும் வெண்மதிக்கொன்றுமாக இரண்டு மிட்டாய்களை எடுத்துக் கொண்டு கிளம்பியிருக்கிறாள். Now the house seemed empty and quiet.(More on that Later!!)இந்தப் பதிவை இன்றொருமுறை வாசித்துக்கொண்டேன்!! Wishing here on her First day to school…to the new beginnings…All the very Best,Pappu!!

Add a comment ஜூன் 10, 2009

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

ஜனவரி 2019
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Posts by Month

Posts by Category