Posts filed under: ‘லைஃப்‘
கொஞ்சம் இஷ்டம் : கொஞ்சம் கஷ்டம்


”ஒருநாளைக்கு ஒரு சாக்லேட்தான் சாப்பிடனும்,
நிறைய சாக்லேட் சாப்பிட்டா காலையிலே
எழுந்திருக்கும்போது
பல் கொட்டிடும்” என்றதை நம்பி
நீ
கடையிலேயே விட்டுவந்த
அந்த ஒற்றை சாக்லேட்
என் நினைவில்
உறுத்திக்கொண்டிருக்கிறது
இன்னமும்!

Advertisements

Add a comment நவம்பர் 10, 2009

இது எப்படி இருக்கு?

எதைப்பற்றியோ பேசிக்கொண்டிருந்தபோது
“நெஜம்னா என்ன ஆச்சி?” என்றாய்.
என் குழந்தாய்!
எனை நோக்கி நீ வீசிய
கேள்விக்கணைக்கு பதிலுரைத்து
புரியவைக்க வேண்டிய பெரும்கடமை
எனக்கிருப்பதை உணர்ந்தவளாய்
தலைக்குப்பின் ஒளிவட்டம் சுழல
தாமரைப்பூவிலமர்ந்து
விளக்க ஆரம்பிக்கிறேன்…
அதற்குள் “சிங்கம் வரலை…பயப்படாதே ஆச்சி,
நான் ‘சும்மா’ சொன்னேன்” என்கிறாய்!!

Add a comment செப்ரெம்பர் 28, 2009

Mixed Bag!

‘கா’ உண்டு; நொடிப்பொழுதேனும் பேசாமலிருப்பதில்லை – சிறியவர் உலகம்!
‘கா’ இல்லை; மணிக்கணக்கானாலும் பேசிக்கொள்வதில்லை – பெரியவர் உலகம்!

கொஞ்சம் நாஸ்டால்ஜிக், அய்யனாரின் இசைப்பதிவை பார்த்தபின்!! இந்தப்படத்தின் வேறு சில பாடல்களும் பிடிக்குமென்றாலும், this song holds a special place in my memory!!

Add a comment செப்ரெம்பர் 15, 2009

And, Now…

கையில்லாத ஒரு சிறிய கவுன் ஒன்று, என்னிடம் இருந்தது. பள்ளிவிட்டு வந்ததும் அதை அணிந்து கொண்டு, பலகணியில் நின்று தெருவை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பேன்.

வெகுசுவாரசியமாக இருந்தது, வாழ்க்கை!

எப்படியோ தொலைந்துபோனது அந்த கவுன் ஒருநாளில்..அதனுடன் எனது குழந்தைத்தனமும்!

Add a comment ஓகஸ்ட் 23, 2009

ஈ ஃபார்….

…ஈகை! (கோல்டா அக்கா கொடுத்த தலைப்புதான்!!)
ஈகை-ன்னா எனக்கு ஈகைத்திருநாள்-தான் நினைவுக்கு வரும்! எங்க ஊர்லே ரம்ஜான் ரொம்ப கோலாகலமா இருக்கும்! எல்லோரும் ரொம்ப சந்தோஷமா – புது ட்ரெஸ் போட்டு- தெருவே செண்ட் வாசனையோட – சிறுவர்களும் சிறுமிகளும் அங்கேயும் இங்கேயுமா பரபரப்பா நடந்துக்கிட்டு – ரோட்லே எதிர்படறவங்களை கட்டிபிடிச்சு வாழ்த்துகள் பரிமாறிக்கறது- தெரிஞ்சவங்க வீட்டுக்கு பிரியாணி கொடுக்கறதுன்னு! (ரம்ஜான் வருதுன்னா ரெண்டு நாளைக்கு எஙக வீட்டுலே சமையல் ரொம்ப சிம்பிளா இருக்கும். ஏன்னா, மேரே பாஸ் பிரியாணி ஹை!) நோன்பு திறக்கறதுக்கு, காலையிலேயே ஒருத்தர் வந்து எழுப்பிட்டு போவார். ஆனா அதுக்கும் முன்னாடியே எங்க மேல் வீட்டுலே, எதிர் வீட்டுலே, கீழ் வீட்டுலே எல்லாரும் எழுந்து சமைக்க ஆரம்பிச்சிருப்பாங்க! (அதுவும் ரம்ஜான் மார்ச் ஏப்ரல்லே வந்துச்சுன்னா, நம்ம வீட்டுலே இருக்கறவங்களும் எழுந்துடுவாங்க..நம்மளை எழுப்பறதுக்கு! அதுவும் எங்க ஆயாவுக்கு இருக்க முன்னெச்சரிக்கை இருக்கே…மணி அஞ்சுதான் ஆகியிருக்கும்..அஞ்சரையாச்சு, எழுந்திரு…எழுந்திரு…படி..படின்னு! நமக்கு அதெல்லாம் புதுசா என்ன!! அவங்க சொல்றதுலேர்ந்து அரைமணிநேரம் கம்மியா கால்குலேட் பண்ணிக்க வேண்டியதுதான்..தூக்கத்துலேயே!)

ஏதோ சொல்ல வந்துட்டு்…எங்கேயோ போறேன்…நான் நாலாவது படிக்கும்போதுதான் சுமி அக்கா எங்க எதிர் வீட்டுக்கு குடி வந்தாங்க. கொஞ்ச நாள்லே‘சுமி வீடு’-ன்னு ஆயிடுச்சு. ஏன்னா, அந்த அக்கா பேரு சுமையா. அப்போ ஒன்பதாவது படிச்சுக்கிட்டு இருந்தாங்க. காலையிலே எட்டேகாலுக்கு ஒரு வேன் வரும்.முஸ்லீம் ஸ்கூல் வேன். அது கரெக்டா வீட்டு முன்னாடி வந்து நிக்கும். பாதிதான் கதவு திறக்கும், குடுகுடுன்னு சுமி அக்கா ஏறி உக்காந்துப்பாங்க. எல்லோருமே கருப்பு புர்க்கா போட்டு இருப்பாங்க. சுமி அக்கா, அவங்க நானி தைச்ச சம்க்கி வொர்க் ட்ரெஸ் போட்டுருப்பாங்க, ஆனா மேலே அந்த கருப்பு புர்க்கா போட்டுப்பாங்க. சுமி அக்காவுக்கு அவங்க கேக்கும்போதெல்லாம் நாந்தான் Campco சாக்லேட் வாங்கித் தருவேன்!

சுமி அக்காவுக்கு நாலு தம்பிங்க. அஸ்ரார், அப்ரார், உசேன் அப்றம் ஜூபேர். அஸ்ரார் என்னோட செட். அப்ரார் என்னை விட ரெண்டு வயசு சின்னவன். ஜுபேர்-க்கு அப்போதான் ஒரு வயசு. உசேனுக்கு போலியோ-னாலே சரியா நடக்க முடியாது. அவங்க அப்பாவை எல்லோரும் குல்ஸார் பாய்-ன்னு சொல்வாங்க. அவர், ஒரு பஜாஜ் ஸ்கூட்டர் வச்சிருந்தார். காலையிலே எட்டேமுக்காலுக்கு, அதை ஒரு சைடா சாய்ச்சு வச்சு ஸ்டார்ட் செய்வார். ரொம்ப அமைதியான டைப். அன்பானவர். சுமி அக்காவோட அம்மா ரொம்ப ஒல்லியா இருப்பாங்க. எப்போதும் உட்கார்ந்தே இருப்பாங்க. அப்றம், அவங்களோட நானிம்மா – அங்கிளோட அம்மா.

சுமி அக்காதான் சமையல் செஞ்சு வைச்சுட்டு, டிபன் பாக்ஸ்லே எடுத்துட்டு போவாங்க. சில சமயம் ரசம் வைக்க, கீரைக்கூட்டு செய்யறதுக்கு ஆயாக்கிட்டே ரெசிப்பி கேப்பாங்க. அவ்ளோ சூப்பரா பிரியாணி செய்வாங்க..சாஃப்டா சப்பாத்தி செய்வாங்க..ஆனா இட்லி தோசை செய்ய ரொம்ப கஷ்டப்படுவாங்க. ‘வரவே மாட்டேங்குது ஆயா’ கவலைவேற. (நம்ம வீட்டுலே அப்படியே நேரெதிர். தக்காளி சாதம் ரேஞ்சுலே செஞ்சு வச்சிட்டு, ‘பிரியாணி’ன்னு பில்டப்) உசேனுக்கு தோசைதான் பிடிக்கும். அவன் அதை ‘சீலா’ன்னுதான் சொல்வான். அவன் ஸ்கூலுக்குக் கிளம்பற, எங்க ஆயா ரெண்டு தோசை சுட்டுக்கொடுப்பாங்க. எல்லோருக்கும் உசேன் மேல ஒரு தனிப்பாசம் இருந்துச்சு!

எங்க வீட்டுலே எது செஞ்சாலும், ‘சுமிக்கு பிடிக்கும்’ இல்லேன்னா ‘ஜுபேருக்கு கொடுங்க’ கொடுக்கறது – அவங்களும் சப்பாத்தி செஞ்சு ‘குட்டிக்கு கொடுங்க’ன்னு கொடுக்கறது!! தீபாவளிக்கு எங்கக் கூட சேர்ந்து உசேன் மத்தாப்பு கொளுத்துவான்-அஸ்ரார்க்கு எங்க ஆயா இங்கிலீஸ்(!) சொல்லிக்கொடுக்கறது- நாங்க ஊருக்குப் போனா, ‘எல்லோரையும் கேட்டதாச் சொல்லுங்க டீச்சர்’ன்னு அவங்க சொல்றது- பெங்களூர்லேர்ந்து ஆன்ட்டியோட தம்பி கொண்டுவந்த குடைமிளகாயை எங்களுக்கு தர்றதுன்னு ரொம்ப க்ளோஸ் ஆகிட்டோம். !

நான் அப்போ ஆறாவது. அந்த வருஷ அரைபரீட்சை லீவுலே, சுமி அக்கா வீட்டுலே எல்லோரும் பெங்களூருக்குக் கிளம்பினாங்க. அந்த ஆன்ட்டி எங்க ஆயாக்கிட்டே, நான் போய் பல்லை சரி பண்ணிக்கிட்டு வரேன் ஆயா, ஒரே குடைச்சல் கொடுக்குதுன்னு” சொல்லிக்கிட்டிருந்தாங்க. அப்பறம், லீவு முடியறதுக்கு ரெண்டு மூனு நாள் இருக்கும்போது யாரோ வந்து சொன்னாங்க, அந்த ஆன்ட்டி இறந்துப் போய்ட்டாங்கன்னு. அந்த அங்கிள் ஊரு பேர்ணாம்பட். அங்கேதான் காரியம் வச்சிருந்தாங்க. நாங்க எல்லோரும், சாந்தா அத்தை, கெஜா அம்மா எல்லோரும் போனோம். அந்த அங்கிள் ரொம்ப கலங்கிடாம பொறுமையா பேசினார். அவர்கூட சுமி அக்காவோட மாமா இருந்தார். எங்களை எல்லாம் வேறே ஒரு வீட்டுக்கு கூட்டிட்டு போய் என்ன ஆச்சுன்னு சொன்னார். அப்போக்கூட, ஸ்வீட்ஸ் வாங்கி வைச்சு சாப்பிடுங்க சாப்பிடுங்கன்னு சொல்லிக்கிட்டிருந்தார், அந்த அங்கிள்.

எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம். என்ன, பாய், இந்தநேரத்துலேயும் இப்படி உபசரிக்கறாரேன்னு! அந்த ஆன்ட்டிக்கு டிபி இருந்துச்சாம். அதுக்கு மருந்து சாப்பிட்டுக்கிட்டிருந்தாங்களாம். ஆனா அதை ஒரு வருஷம் கழிச்சு திரும்ப வந்து பாக்க சொல்லியிருக்கார் டாக்டர். ஆனா டாக்டர்கிட்டே போகாம, இவங்களா மருந்து வாங்கி தொடர்ந்து சாப்பிட்டிருக்காங்க. அதுதான் பிரச்சினையாகிட்டதா எல்லோரும் பேசிக்கிட்டாங்க வர்ற வழியிலே!! அப்பறம் கொஞ்சநாள் கழிச்சு சுமி அக்கா வந்துட்டாங்க. அவங்க நானிக்கும் கொஞ்சம் முடியாம இருந்தது. முஸ்லீம்களுக்கு நாப்பதுநாள் கணக்காம். நாப்பதாம் நாளுக்கு ஊருக்குப் போய்ட்டும் வந்தாங்க.

சுமி அக்கா ஸ்கூல்க்கு நிறைய லீவ் போட்டதாலே அந்த வருஷம், இன்னொரு முறை படிக்க வேண்டியதாப் போச்சு. அவங்கதான் சமையல், அப்புறம் ஜூபேரைப் பார்த்துக்கறதுன்னு எல்லாம். அங்கிளும் ரொம்ப மனசுடைஞ்சு போய்ட்டதா பெரியவங்க எல்லாம் பேசிக்கிட்டாங்க.’நானும் போய்டுவேன், நானும் போய்டுவேன்’ன்னு அங்கிள் சொன்னதா சொல்லிக்கிட்டாங்க. பெரியங்க பேசிக்கிற இடத்துலே நின்னாதான் எங்க ஆயாவுக்கு கோவம் வந்துடுமே..”கண்ட செருப்பை வாங்கி காதுலே மாட்டிக்கோ”ன்னு திட்டுவாங்க. ஆனா முன்னாடி மாதிரி எங்க பிளாக் கலகலப்பாவே இல்லே..எல்லாமே அமைதியா ஒரு சுரத்தேயில்லாம மௌனமா இருக்கற மாதிரி நடந்துக்கிட்டிருந்தது.

ஒரு வாரம் போயிருக்கும்…இப்படியே! ஸ்கூல் விட்டு சாயங்காலம் வந்தா சுமி அக்கா வீடு பூட்டி இருக்கு..ஆயா முகம் இறுகிப் போய் இருக்கு. அங்கிள் ஆபிஸ் போகாம வீட்டுலேயே தான் இருந்திருக்கார். எல்லோரும் ஸ்கூல் போயாச்சு. நானி மட்டும்தான். காலையிலே ஒரு பதினொரு மணிக்கு நெஞ்சு வலிக்குதுன்னு சொல்லி இருக்கார். பத்துமணிக்கு மேலேதான் எங்க ப்ளாக்லே யாரும் இருக்கமாட்டாங்களே..யார்யாரையோ பிடிச்சு சாந்தா அத்தை டாக்ஸி ஏற்பாடு செஞ்சுருக்காங்க. எங்க ஆயாவை, அவர் பக்கத்துலேயே இருக்கச் சொல்லியிருக்கார். ஆனா, டாக்டர்கிட்டே போறதுக்குள்ளேயே உயிர் பிரிஞ்சுடுச்சு. பேர்ணாம்பட்லேருந்து அவங்க சொந்தக்காரங்க வந்து எல்லோரையும் கூட்டிட்டு போய்ட்டாங்க.

சுமி அக்காவும் ஜூபேரும் பெங்களூருலே ஒரு மாமா வீட்டுலேயும், அப்ரார் பேர்ணாம்பட்டுலே ஒரு மாமாக்கிட்டேயும், அஸ்ராரும் உசேனும் பெங்களுருலேயே வேற மாமாவீட்டுலேயும் தங்கிக்கற மாதிரியும்- சுமி அக்காவுக்கு கல்யாணம் ஏற்பாடு செய்யப்போறதாவும் – வீடு காலி பண்ணும்போது அவங்க சொந்தக்காரங்க சொன்னதுதான். இது எல்லாமே ரெண்டு மாசத்துக்குள்ளேயே…ஹாஃப் இயர்லி லீவு – ஆன்ட்டி இறந்த நாப்பது நாளு முடிஞ்சு ஒரு வாரம் – அங்கிள் இறந்து நாப்பது நாளும் முடிஞ்சது. அப்புறம் ஒரு ரெண்டு வாரம் கழிச்சு, நானியும் பேர்ணாம்பட்டேலேயே மௌத் ஆகிட்டதாச் சொன்னாங்க! ஆனா, யாரும் போகல..யாரையும் பாக்கிற மனவலிமை யாருக்கும் இல்லைன்னுதான் நினைக்கிறேன். ஆனா எல்லோரும் பேசி பேசி மாஞ்சு போறாங்க..

ரொம்பநாளைக்கு எங்க எதிர்வீடு பூட்டியிருந்தது…ஒன்றரை வருஷத்துக்கும் மேலே! அதுவும் ரொம்ப உயிரோட்டமா இருந்த எங்க ப்ளாக் ஃப்ரீஜாகி இருந்தது, கொஞ்ச நாள். ஆனுவல் லீவ் அப்போ சுமி அக்கா கல்யாணம் ஆகி எங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க, ஒரு சாயங்கால நேரம். டீ குடிச்சுட்டு கொஞ்சநேரம் பேசிக்கிட்டு இருந்துட்டு கிளம்பினாங்க. ‘சுமி கிடைச்சது என்னோட லக்’-ன்னு அந்த அண்ணா சொன்னாங்கன்னு அப்புறமா எங்க ஆயா, சாந்தா அத்தைக்கிட்டே பேசுக்கிட்டிருந்தது காதுலே விழுந்துச்சு.

நானும் காலேஜ்க்கு ஹாஸ்டல் போய்ட்டேன். லீவுக்கு வந்தப்போ அப்ரார் வந்திருந்தான் வீட்டுக்கு. பாலிடெக்னிக் முடிச்சுட்டு துபாய் போகப்போறதா சொன்னான். உசேன் எங்க ஊருலே ஒருக்கற மதரஸாலே சேரப்போறதாவும், அஸ்ரார் கோடம்பாக்கத்துலே ஒரு டான்ஸரை லவ் மேரேஜ் செஞ்சுக்கிட்டதாவும் சுமி அக்காவுக்கு ரெண்டு குழந்தைகள் இருக்கறதாவும் சொன்னான். உசேன் மட்டும் அப்போப்போ லீவுக்கு எங்க வீட்டுக்கு வருவான், ஒரு நாள்தான் லீவ் போல. ஆனா நாங்கதான்(நானும், குட்டியும்) ஹாஸ்டலுக்குப் போய்ட்டோமே..பெரிம்மாவும், ஆயாவும்தானே..கொஞ்ச நேரம் டீவி பார்த்துட்டு, தூங்கிட்டு, சாப்பிட்டு காசு வாங்கிட்டு போவான்னு சொன்னாங்க.

டில்லி டூருக்குப் போய்ட்டு வந்து அவங்க சொன்ன கதைங்க, அவங்க எனக்குக் கொடுத்த ஒரு மஞ்சள் கலர் கம்மல்,நான் அரேபியன் நைட்ஸ் படிச்சுட்டு, சுமி அக்கா சொல்ற கதைகளோட கற்பனை செஞ்சுக்கிட்டது – எல்லோரும் கண்ணாமுச்சு விளையாடறோம்னு அவங்க வீட்டுக் கட்டிலுக்கு அடிலே ஒளிஞ்சுகிட்டது – அவங்க எல்லோரும் வீட்டைக் காலி செஞ்சுட்டு போனதும் சூழ்ந்த வெறுமை-ன்னு இந்த எதிர்வீட்டு நினைவுகள் அத்தியாயம் இல்லாம என்னோட பால்யக்காலம் முழுமையாகாது! ஜாலியாத்தான் இந்த இடுகையை ஆரம்பிச்சேன்….நினைவுகளிலேருந்து தப்பிக்க முடியலை – எழுதினப்பறம்தான் தெரிஞ்சது. என்னோட பதினோரு வயசுக்கே நான் பயணிச்சு, அப்போ பார்த்ததையெல்லாம், கேட்டதையெல்லாம் கொட்டிட்டேன்னு!!

உபரிக்குறிப்பு : காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் லீவுக்குப் போனப்போ, ‘பூஜாக்குக் கொடுங்க’ன்னு எங்க பெரிம்மா பூரி கொடுக்கறதும், ‘கோங்குரா அரைச்சேன், டீச்சர்’ன்னு எதிர்வீட்டு ஆன்ட்டி கொடுக்கறதுமா இருந்துச்சு! ‘இதுக்குத்தான் யார்க்கிட்டேயும் க்ளோசா இருக்கக் கூடாதுன்னு, இனிமே’ ன்னு, சுமி அக்காவீடு காலியா இருக்கற பார்த்துட்டு பெரிம்மா, ஆயாக்கிட்டே சொன்னது ஏனோ நினைவுக்கு வந்துச்சு!

Add a comment ஓகஸ்ட் 6, 2009

இரு சம்பவங்கள் மற்றும் நான்!

“ஷேப்பர்ஸ்(வடிவங்களை உருவாக்கும் ஒரு விளையாட்டு பொருள்) எங்கே பப்பு?” – நான்.

“கரப்பான் பூச்சி தூக்கிக்கிட்டு போய்டுச்சு” – பப்பு

கரப்பான் பூச்சியா?!! – நான்!

“ஆமா ஆச்சி, அது தூக்கிக்கிட்டு போய் அதோட வீட்டுலே வைச்சுகிச்சு” – பப்பு.

(ஓ, அப்போ அது எங்கேன்னு பப்புக்கு தெரிஞ்சுருக்கு போல, அதைதான் கரப்பான் பூச்சி வீடுன்னு சொல்ல வர்றாங்களோ மேடம்?!)

அதோட வீட்டுலேயா..கரப்பான் பூச்சியோட வீடு உனக்கு தெரியுமா?!- நான்.

”தெரியுமே ஆச்சி, அது இழுத்துக்கிட்டு போய் எனக்கு வேணும்னு வச்சிக்கிச்சு” – பப்பு

(அப்போ அதை எங்கேயோ போட்டுட்டு அது இருக்கிற இடத்தைத் தான் கரப்பான் பூச்சி வீடுன்னு சொல்ல வர்றாளோ?!..இருக்கும்..இருக்கும்…எப்படியோ கிடைச்சா சரி!)

”எனக்கு காட்டு, நான் எடுத்துத் தரேன்” – நான்

அவள் என்னைக் கூட்டிக்கொண்டுச் சென்ற இடம், எங்கள் சமையலறையின் பின்வழியில் இருக்கும் சாமான் கழுவும் நீர் செல்லும் பாதை!

நான் ‘ஞே’ வாகிக் கொண்டிருந்தேன்!

ஏனோ ஒரு ஃப்ளாஷ்பேக் நினைவுக்கு வந்துத் தொலைத்தது.

ஃப்ளாஷ்பேக்:

வொர்க்கிங் வுமன்ஸ் ஹாஸ்டலில் தங்கி இருந்தோம் அப்போது. ஹாஸ்டல் அணுகுண்டைக் கூட சாப்பிட்டு விடலாம், ஆனால் கன்பவுடரை கண்டிப்பாக வாயில் வைக்க முடியாது! (அனுகுண்டுன்னா என்னனு எல்லோருமே கண்டுபிடிச்சுடுவீங்க, கன்பவுடரை கண்டுபிடிங்க :-)) அதனால் எங்களை காப்பாற்றுவது பழங்கள்தான். ஹாஸ்டலுக்கு எதிரில் இருக்கும் பழக்காரரிடம்தான் பிசினஸ். முந்தையதினம் வாங்கிய சாத்துக்குடி பழங்கள் சரியில்லையென்று திருப்பி எடுத்துச் சென்றேன். இது நல்லாயில்லையென்று சொல்லி அவரிடம் கொடுத்து விட்டேன். அவரும் வாங்கி வைத்துக் கொண்டார். பிறகு வந்தவர்களிடம் பிசினசை கவனிக்க தொடங்னினார். கொஞ்ச நேரம் (5 நிமிடங்கள்?!) நின்றுக் கொண்டிருந்தேன். அவர் என்னை கவனித்த மாதிரியேத் தெரியவில்லை. பின்னர் திரும்பி வந்துவிட்டேன். அறையில் வந்து இதைச் சொன்னதும் ஷீபா அக்கா கேட்டார்கள், ”நீ ஏன் நின்னுக்கிட்டிருந்தே?, யாராவது இங்கே அப்படி மாத்திக் கொடுப்பாங்களா?” – என்று சிரித்துக்கொண்டே சொன்னார்!

நான் அங்கே ‘ஞே’-வாகிக் கொண்டிருந்தேன்,ஆம்பூரிலேல்லாம் மாத்திக் கொடுப்பாங்கதானே என்று நினைத்தபடி!!

பப்புவும் பழக்காரரும் மாறி மாறி தெரிந்தார்கள் என் கண்முன்!! (ஒரு பொண்ணு இன்னொசன்டா இருந்தா எப்படியெல்லாம் ஏமாத்தறாங்கப்பா!!) நாந்தான் இப்படியா இல்ல மக்கள்ஸ்தான் இப்படியான்னே தெரியலை! 😉

Add a comment ஜூன் 24, 2009

ஹேமாக்களும் ஞானசௌந்தரிகளும்!

முதலாம் வகுப்பு. மிஸ்ஸுக்கு என்னிடம் தனிபிரியம். ஹேமா. என்னுடைய தோழி. அழகழகான குண்டு குண்டு கையெழுத்து. புத்தகத்தின் அட்டையில் ஒட்டப்பட்டிடுக்கும் லேபிள்கள் எல்லாம் கிழிக்கப் பட்டிருக்காது.அழகாக அடுக்கப் பட்ட பை. அவள் வந்தபின் மிஸ்ஸிடம் அவளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு அல்லது பிரியம் இடம் மாறியது!

ஆறாம் வகுப்பு. முதல் நாள். வகுப்பு லீடராக என்னைத் தேர்ந்தெடுத்தார் டீச்சர். முதல் மாதாந்திர தேர்வு முடிந்து விடைத்தாட்கள் கொடுக்கப்பட்டன. ஞானசௌந்தரி. எல்லாவற்றிலும் முதல் மதிப்பெண்!ஏதோ ஒரு பாடத்தில் 98 எடுத்தப்பின்னும் 100 எடுக்கவில்லையே என அழுதாள் ஞானசௌந்தரி. அன்றுமுதல் வகுப்பில், ஞானசௌந்தரிக்கு புரிந்தபின் தான் போர்டில் எழுதியிருந்தது அழிக்கப் பட்டது. ஞானசௌந்தரி எழுந்து வாசித்தபின் தான் வரலாற்று ஆசிரியர் அதை விளக்க ஆரம்பித்தார்!

ஹேமாவும், ஞானசௌந்தரிகளும் என்னை வாழ்க்கை முழுதும் துரத்திக் கொண்டே இருந்தார்கள். பெயர்கள் தான் மாறியதே தவிர +1இலும் கல்லூரியிலுங்கூட ஹேமாக்களும், ஞானசௌந்தரிகளும் என்னை பின் தொடர்ந்துக் கொண்டே இருந்தார்கள்! நண்பர்களாக இருந்தாலும் நெருங்கி பழக முடியாதவர்களாக இருந்தார்கள்! உங்கள் வாழ்விலும் ஹேமாவும் ஞானசௌந்தரிகளும் இருந்திருக்கிறார்களா?!( நீங்கதான் ஹேமா இல்லன்னா ஞானசௌந்தரின்னா இந்தப் பதிவு உங்களுக்கில்லை! :-))

முதல் ரேங்க் அல்லது டாப்பர் என்று பெயரெடுத்த இந்த ஹேமாக்களும் ஞானசௌந்தரிகளும் தேர்வுக்கு வரவில்லையெனில் “ஆகா, இந்த வாட்டி நாமதான் ஃப்ர்ஸ்ட்” என்று நினைத்துக் கொள்பவரா நீங்கள்?! நினைத்துக்கொண்டது மட்டுமில்லாமல் வீட்டில் சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்பவரா!! அப்படியாயின் இந்த இடுகை உங்களையும் என்னையும் பற்றிதான்! நாமதான் நல்ல மார்க் வாங்குவோம்னு எல்லோரும் நினைச்சுக்கிட்டு இருக்கும்போது அப்படியே சொதப்புவோமே! பள்ளி/கல்லூரிகளில் நம்மை யாரும் என்னோட ஃபேவரிட்-ன்னு சொல்ல மாட்டாங்க டீச்சர் உட்பட, ஆனா எல்லோருக்கும் நம்மைத் தெரியுமே – அவ்வளவு பிரபலம்! கேக்கற கேள்விக்கு தெரியும்னு கையைத் தூக்கிட்டு இருந்தாலும் டாப்பரை எழுப்பி சொல்ல வைக்கும்போது உள்ளே மனசு அடிச்சுக்குமே! இல்ல தெரிஞ்சாலும் எப்படி சொல்றதுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கும்போது சரியா இந்த “டாப்பர்” எழுந்து சொல்லுவாங்களே!! நம்மை பத்தி யாருமே நினைத்துக் கூட பார்க்காதபோது ஏதாவது ஒரு பாடத்திலே முதல் மதிப்பெண் வாங்குவோமே! கண்டிப்பா 90-95-ல்லாம் வாங்க மாட்டோம், ஆனா ஒற்றைப்படையில் வாங்கமாட்டோமே!

சரி..இங்கேதான் இப்படி, ‘இனிமே அடுத்த வகுப்பு போகும்போதாவது இப்படி இருக்கக் கூடாது’ன்னு முடிவு கட்டி, அடுத்த வருஷம் முதல் மாதாந்திர தேர்வோட அந்த அவதாரத்தையும் நம்மால் காப்பாற்ற முடியாதே! ஒரே பள்ளி படிச்சாலும் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் மட்டும் சீஸனுக்கு சீஸன் மாறுவாங்களே, ஆனால் எதிரிகள் என்று யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாதே!! (எல்லாருக்கும் எப்போவும் நல்ல புள்ளையாவே இருக்க முடியாதுல்ல!)

சரி, இதுலதான் இப்படியென்றால், கல்யாணமென்று வந்தால் நாம்தானே ஹீரோயின். அங்கேயும் ஹேமாக்களும் ஞானசௌந்தரிகளும் என்னைத் துரத்தினார்கள்! “அய்யோ பாவம், யாரு அந்த அப்பாவி” யென்றும், ”உன் கிட்டே மாட்டிக்கிட்டு என்ன பாடுபடபோறாங்களோ” யென்றும் என்னைத் துளைத்தெடுத்தெடுத்திருப்பார்கள்! மேலுன் தொடர்ந்தது ஹேமாக்களின் ஞானசௌந்தரிகளின் பிரச்சினை. தொலைபேசினால் போதும், ”நான் எல்லா கிச்சன் வேலையும் ஃபாஸ்ட்டா முடிச்சுடுவேனே, பிரச்சினையே இல்ல” என்றும் “மார்னிங் டைம்லே எனக்கு டென்ஷனே இல்லைப்பா” என்று இங்கேயும் நம்மை துவைப்பார்கள்! அது மட்டுமா, தன் வேலையைத் தானே செய்துக் கொண்டு, படுத்தாத, சமத்துக் குழந்தைகள் கூட ஹேமாக்களுக்கும் ஞானசௌந்தரிகளுக்குமே வாய்க்கிறது!

இப்போது கூட நீங்கள், “முகிலும் பப்புவும் பாவம்தான் போல, பொண்ணா இது”-ன்னு நினைத்துக் கொண்டு படித்தீர்கள்தானே! (நீங்க என்னைச் சந்திக்காமலே என்னைப் பத்தி ஒரு டேமேஜை உருவாக்கியிருக்கேன் பார்த்தீங்களா!!) இந்த உலகம் ஹேமாக்களுக்காகவும், ஞானசௌந்தரிகளுக்காகவும் மட்டும் இல்ல..சந்தனமுல்லைகளுக்காகவும்தான் என்று எனக்குச் சொல்ல முடியவில்லையென்றால் கூட, ”நீ இதுலே ஹேமாவா இருந்திருக்கணும்”, ”அதுல ஞானசௌந்தரியாக இருந்திருக்கணும்”னு சொல்லாம இருந்தீர்களென்றாலே போதும்! ஏனெனில் சந்தனமுல்லைகள் சந்தனமுல்லைகளாக இருப்பதனால்தான், ஹேமாக்கள் ஹேமாக்களாகவும் ஞானசௌந்தரிகள் ஞான்சௌந்தரிகளாகவும் இருக்க முடிகிறது, இல்லையா! 😉

Add a comment ஜூன் 16, 2009

My little Buddha…!

கட்டிலில் இருந்து குதித்து விளையாடுவது பப்புவிற்கு பிடித்த விளையாட்டு. ”நான் பறக்கிறேன் பாரு” என்று கைகளை நீட்டியபடி பீட்டர் பானாக தன்னை உருவகித்துக் கொண்டு குதிப்பதை பார்க்கும்போது நமக்குத்தான் ‘அவ்வ்வ்’!!

நன்றாக அடித்துவிட்டேன் .(பெரிம்மா, இதை படிச்சுக்கிட்டிருந்தீங்கன்னா என்னை திட்டாதீங்க!!) அவள் இதை எதிர்பார்க்கவில்லை. கோபத்தோடு என்னைப் பார்த்தாள். முகத்தில் கோபமும் அழுகையும் கொப்பளிக்க, தழுதழுத்தக் குரலில்

குட்டிபசங்க பாவம்

நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டு விநாடிகள். தொடர்ந்துச் சொன்னாள்,

”குட்டிப் பசங்கள அடிச்சா, திருப்பி அடிச்சுடுவாங்க!!”

oh, What a Zen-ness…!

Note:

இன்று பள்ளிக்கூடத்தின் முதல்நாள். அவளுக்கொன்றும் வெண்மதிக்கொன்றுமாக இரண்டு மிட்டாய்களை எடுத்துக் கொண்டு கிளம்பியிருக்கிறாள். Now the house seemed empty and quiet.(More on that Later!!)இந்தப் பதிவை இன்றொருமுறை வாசித்துக்கொண்டேன்!! Wishing here on her First day to school…to the new beginnings…All the very Best,Pappu!!

Add a comment ஜூன் 10, 2009

கடிகாரத்தை நிறுத்துதல்- நன்றிகள்- நாஸ்டால்ஜிக்!

20-கள்…பற்பல கனவுகள்..திட்டங்கள்..கவலைகள்! வயதாகிறதேவென்ற கவலை இருந்ததேயில்லை..i.e. we are getting older! வாழ்வைக்குறித்து பயம் ஏதும் இல்லை!

மேற்கொண்டு படிக்க வேண்டும். நினைத்த பல்கலையில் கிடைக்கவேண்டும். உடனே வேலைக் கிடைத்து, நினைத்ததெல்லாம் வாங்க வேண்டும்! சம்பாரிக்க வேண்டும்..ஒரு நல்ல துணை கிடைக்க வேண்டும், நமது விருப்பங்களுக்கேற்றவாறு. அழகான
பலகணிகளுடன் அமைந்த வீடு வாங்க வேண்டும். நிலைநிறுத்திக்கொண்டாக வேண்டும்.
ஒரு நாள் திருமணம். default ஆக குழந்தை.

இப்படி கனவுகளை துரத்தும் வாழ்வில், you realise you are not as young as you thought you were. 30-களும் 40-களும் எனக்கு என்ன வைத்திருக்கிறதெனத் தெரியவில்லை..ஆனால், 20களின் கடைசி எனக்கு உணர்த்துவது, you can beat age with your attitude..;-)! 20-கள் எனக்குக் கொடுத்தது, முடிவெடுக்கும் உரிமைகள், செலவு செய்யும் பொறுப்புகள்..எல்லாவற்றுக்கும் மேல் சுதந்திரம் என்பதும் பொறுப்புகளே..!!
யாரும் அருகில் இருந்து இதைச் செய்தால் இப்படி இருக்கும் என்று சொல்வதற்கு இருக்க மாட்டார்கள்..ஆனால் இப்படி செய்திருந்தால் இப்படியா இருந்திருக்குமே என்று சொல்வதற்கு கண்டிப்பாக இருப்பார்கள்! :-))

so many random thoughts crossing my mind….and again I am in utter confusion as I was in 19!!

மாதம் பிறக்கும் முன்பே நாட்களை எண்ணுவது- காலண்டரில் வட்டமிட்டு, வாங்கிய புத்தாடையை ஒரு நாளைக்கொரு தரமாவது அட்டை டப்பாவிலிந்து பிரித்துப் தொட்டு கண்களில் கற்பனைக்கனவுகள்- பள்ளியில் சாக்லேட்களை பரிமாற்றம்- வகுப்பில் ஒரு ராயல் ட்ரீட்மென்ட்- எப்போதும் திட்டும் ஆசிரியர் கூட அன்று அன்பாக- எதிரிகள் கூட திடீரென நண்பர்களாகி பாசமழை பத்மாக்கள் – இவையெல்லாம் அய்யோ இன்றோடு போய்விடுமே எனும் ஒரு திடுக் எண்ணம் !

எனக்குள் ஒளிந்திருந்த அந்த ஆம்பூர் சிறுமியை வாழ்த்துகளாலும், பதிவுகளாலும் மீட்டெடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றிகள்! சுவரொட்டியில் வாழ்த்து சொன்ன G3, கேக் கொடுத்த ஆயில்ஸ், கவிதை எழுதிய கவிதா, ஜூஸ் கொடுத்த தூய்ஸ் – நெகிழ்ந்தேன்..மகிழ்ந்தேன்! :-))

கொஞ்சம் நாஸ்டால்ஜிக் – Rising from the east – Bally sagoo-வின் ஆல்பம். featuring suchitra pillai. நல்ல பாடல். வீடியோ மிகப் பிடிக்கும். வித்தியாசமாக இருக்கும்!

Add a comment ஏப்ரல் 9, 2009

இனியா இன் ஸ்கூல்!!

இனியா அந்தப் பள்ளியில் புதிதாகச் சேர்ந்திருந்தாள். அவளது வகுப்பிலிருந்த பலரும் அவளைப் போலத்தான், ஐந்தாம் வகுப்பை வேறு ஒரு பள்ளியில் படித்தபின், ஆறாம் வகுப்பிற்கு அந்தப் மேனிலைப் பள்ளியில் சேர்ந்திருந்தனர். அவளுடனே படித்த பலரும் அதே பிரிவில் இருந்தனர். பழைய பள்ளியில் எதிரிகளாயிருந்தவர்களும் இந்தப் பள்ளியில் சேர்ந்தவுடன் நண்பர்களாகிவிட்டிருந்தனர். இது அவர்களது சிறு பள்ளியை போல அல்ல,
பெரிய கட்டிடங்களும், அசெம்ப்ளி ஹாலும், மிகப் பெரிய விளையாட்டு மைதானம் கொண்டதுமாயிருந்தது இந்த மேனிலைப் பள்ளி. குறைந்தது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை கொண்டிருப்பது போலத் தோன்றியது. இனியாவின் வகுப்பில் மட்டும் நாற்பத்தைந்து பேர் இருந்தனர். ஆனால், அவளுக்கு தன் வரிசையில், முன் வரிசையில் அமர்ந்திருப்பவர்களின் பெயர்கள் மட்டுமே தெரிந்திருந்தது! இனியா, நித்யா, வாணி மூவரும்
நண்பர்கள். மூவரும் படித்த கதைப்புத்தகங்களைப் பற்றியும், சுட்டியின் கார்ட்டூன்களைப் பற்றியும் பேசி சிலாகித்துக் கொண்டிருப்பர்.

அவளது வகுப்பாசிரியை சுதா. அவர்தான் ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாடங்களை எடுக்கிறார். அந்த வருடத்திற்கான புத்தகங்கள் அவர்களதுப் பள்ளியில் கொடுப்பார்கள்,
ஆனால் முதல் டெர்ம் முடியும்போதுதான் கிடைக்கும். அதனால், எல்லோருமே கடையிலே வாங்கிவிட்டிருந்தனர். மேலும், அவர்களது ஊரிலே இருந்த புத்தகக் கடைகளில் தமிழ் பாடத்திற்கான புத்தகம் தீர்ந்துவிட்டிருந்தது. பலருக்கு அப்புத்தகம் கிடைக்கவில்லை. வகுப்பிலே ஒரு சிலர் வைத்திருந்த புத்தகத்தை அருகிலிருப்பவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளுமாறு சுதா மிஸ் சொல்லியிருந்தார்கள். ஒரு சிலர் பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் கொண்டிருந்தார்கள். ராதா இனியாவின் வரிசையிலே அமர்ந்திருந்தாள். இனியாவும் நித்யாவும் அவளுடன் இணைந்துக் கொண்டனர். வாணி கலைமாமணியுடன் சேர்ந்துக் கொண்டாள்.

முதல் வரிசையிலிருந்த சௌந்தரி நன்றாக படிக்கும் பெண் போல காட்டிக் கொண்டாள். அவள்தான் வகுப்பில் முதலாவதாக வருவாள் என்று அவளுடன் பழைய பள்ளியில் படித்த சிலர் சாட்சி வேறு கூறினர். இனியாவும் வாணியும் ஒரே பள்ளியிலிருந்து வந்திருந்தனர். அந்தப் பள்ளியில் இனியாதான் நன்றாக படிக்கும் பெண் என்று பெயர் வாங்கியிருந்தாள். மாத பரிட்சைக்கான அட்டவணையும் வந்துவிட்டது. அட்டவணையை சுதா மிஸ் போர்ட்டில் எழுதும் போதுதான் தமிழ்புத்தகங்களை கொண்டு வந்திருப்பதாக பள்ளியின் உதவியாளர் கணேஷ், சுதா மிஸ்ஸிடம் கூறினார். சுதா மிஸ் புத்தகங்கள் இல்லாதவர்களை எழுந்து நிற்கும் படிக் கூறி ஒவ்வொன்றாக வினியோகிக்கத் தொடங்கினார்.கலைமாமணியும் எழுந்து நின்றாள்.

“மிஸ், கலைமாமணிகிட்டே புக் இருக்கு மிஸ்” என்ற யாருடைய குரலோ சுதாமிஸ்-ற்கு கேட்டுவிட்டது!

“கலைமாமணி, உன்கிட்டே புக் இருக்கா?” என்றதற்கு, ”ஆமா மிஸ்” என்றாள் மெல்லிய குரலில்!

“அப்போ ஏன் நின்னுக்கிட்டிருக்கே, உட்கார்” என்று மிஸ் சொன்னதற்கு,

“இந்தப் புத்த்கத்தை அடுத்த வருஷத்திற்கு வச்சிப்பேன் மிஸ்” என்றாள் கலைமாமணி. வகுப்பறையே சிரித்து ஓய்ந்தது!!

“நீ பாஸாகி அடுத்த வகுப்பிற்கு போய்டுவே இல்லையா, அப்போ வேற புத்தகம்தான் படிக்கணும், சரியா” என்றபடியே சுதா மிஸ்-உம் சிரித்தார்கள்!!

மாதப் பரிட்சையும் முடிந்து விட்டது. எளிதாக இருந்ததாகத் தான் இனியா நினைத்துக் கொண்டிருந்தாள். தான் நன்றாக எழுதியிருப்பதாக இனியா நம்பிக்கைக் கொண்டிருந்தாள்.அந்த வாரயிறுதி முடிந்து, திங்கள் காலை வகுப்புத் தொடங்கியது. சுதா மிஸ் வந்தார்கள்..ஹூம்…ஆனால் விடைத்தாள்களை கொண்டுவரவில்லை. சௌந்தரி ஒருவித படபடப்போடு இருந்தாள்….யாருடனும் பேசாமல்! எப்போதும் நமது மூவர் குழு வாரயிறுதியில் விளையாடியதைப் பற்றியும், கிரிக்கெட் மேட்ச் பற்றியும் பேசிக் கொண்டிருந்தனர்! மீண்டும் சுதா மிஸ் வகுப்பு மாலை மூன்று மணிக்கு! கையில் விடைத்தாள் கட்டு! அனைவரது விடைத்தாட்கள் அவரவர் கைக்கு வந்துச் சேர்ந்தது.
சௌந்தரி விசும்பத் தொடங்கினாள். வகுப்பறை முழுக்க அவளையே திரும்பிப் பார்த்தது! இனியாவிற்கு சௌந்தரி ஏன் அழுகிறாள் என்று புரியவேயில்லை. சௌந்தரிதானே முதல் மதிப்பெண். எதற்கு அழ வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள். மணியடித்தது. சுதாமிஸ் வகுப்பறையை விட்டகன்றார்கள், அடுத்த பரிட்சையில் எல்லோரும் இதைவிட அதிகமாக எடுக்க வேண்டுமென்று வாழ்த்தியபடி!

சௌந்தரி இப்போது தேம்பியழத் தொடங்கியிருந்தாள். இனியாவிற்கு புதிதாக இருந்தது, ” நீதானே தொண்ணூறியொன்று எடுத்திருக்கே, அப்புறம் ஏன் அழறே?”, என்றாள் சௌந்தரியிடம்.

சௌந்தரி சொன்னாள், “ நான் எப்போவுமே நூற்றுக்கு நூறுதான் எடுப்பேன், இப்போ குறைஞ்சுப்போச்சே!” !!

“அடுத்தப் பரிட்சையிலே பார்த்துக்கலாம், அழாதே, இப்போ அழுதா ஒன்னும் யூஸ் இல்ல” என்றாள் எண்பத்தைந்து மதிப்பெண்கள் எடுத்த இனியா!

மதிப்பெண்கள் மட்டுமே நம்மை நிரூபிப்பதில்லை. ஒவ்வொரு முறையும், நாம் முன்பு செய்ததைவிட சிறப்பாக அடுத்தமுறைச் செய்வதே வெற்றி என்பது இனியாவிற்கு நன்றாகவே புரிந்திருந்தது! அந்தத் தன்னம்பிக்கையும் மனப்பாங்குமே எண்பதைந்து மார்க்குகள் எடுத்த இனியாவை கொண்டு முதல் மதிப்பெண் எடுத்த சௌந்தரியைத் தேற்றச் செய்தது!!

பி.கு 3 : குழந்தைகளுக்கான எனது முதல் கதையை அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்! அதுதான் கடைசி என்று நினைத்து ஒரு சிலர் மகிழ்ந்துக் கொண்டிருப்பதாகத் தெரியவந்தது…அதான்!

பி.கு 2 : கதை எனதுக் கற்பனையே. அணுகுமுறையில் மாற்றம் கொண்டுவரலாமென்று விரும்புவோர் தயைச் செய்து சுட்டிக் காட்டவும்.

பி.கு 1 : கலைமாமணி கேரக்டர் ஆயில்ஸை மனதில் கொண்டு எழுதப்படவில்லை.

Add a comment மார்ச் 24, 2009

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

ஜனவரி 2019
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Posts by Month

Posts by Category