Posts filed under: ‘பிரதிபலிப்புகள்‘
கொஞ்சம் இஷ்டம் : கொஞ்சம் கஷ்டம்


”ஒருநாளைக்கு ஒரு சாக்லேட்தான் சாப்பிடனும்,
நிறைய சாக்லேட் சாப்பிட்டா காலையிலே
எழுந்திருக்கும்போது
பல் கொட்டிடும்” என்றதை நம்பி
நீ
கடையிலேயே விட்டுவந்த
அந்த ஒற்றை சாக்லேட்
என் நினைவில்
உறுத்திக்கொண்டிருக்கிறது
இன்னமும்!

Advertisements

Add a comment நவம்பர் 10, 2009

Main Aisa Kyun Hoon??

”டைமாச்சு, என்னை பஸ் ஸ்டாப்லே கொண்டு வந்து விடேன், ஆச்சி”

”ம்ஹூம், என் ஸ்கூட்டியை பஞ்சராக்க வழி பண்றீங்களா, அதெல்லாம் முடியாது, ஆட்டோலே போங்க!”

அலுவலகம் செல்லும் அவசர தினமொன்றில் கைக்காட்டிய யாரோ ஒரு ஆன்ட்டியை யோசிக்காமல் ஏற்றிக் கொள்கிறேன்…

”மகராஜியா இரு” இறங்கும்போது அவர் உதிர்க்கும் வார்த்தைகள் கொடுக்கும் இதத்தைவிட,
எங்காவது, பஸ் கிடைக்காமல் வீடு திரும்ப தவிக்க நேரிடும் பெரிம்மாவுக்கோ, அம்மாவுக்கோ யாரேனும், என்றேனும் உதவக்கூடும் என்ற எண்ணம் தரும் நிம்மதிக்காக!

Add a comment செப்ரெம்பர் 4, 2009

ஈ ஃபார்….

…ஈகை! (கோல்டா அக்கா கொடுத்த தலைப்புதான்!!)
ஈகை-ன்னா எனக்கு ஈகைத்திருநாள்-தான் நினைவுக்கு வரும்! எங்க ஊர்லே ரம்ஜான் ரொம்ப கோலாகலமா இருக்கும்! எல்லோரும் ரொம்ப சந்தோஷமா – புது ட்ரெஸ் போட்டு- தெருவே செண்ட் வாசனையோட – சிறுவர்களும் சிறுமிகளும் அங்கேயும் இங்கேயுமா பரபரப்பா நடந்துக்கிட்டு – ரோட்லே எதிர்படறவங்களை கட்டிபிடிச்சு வாழ்த்துகள் பரிமாறிக்கறது- தெரிஞ்சவங்க வீட்டுக்கு பிரியாணி கொடுக்கறதுன்னு! (ரம்ஜான் வருதுன்னா ரெண்டு நாளைக்கு எஙக வீட்டுலே சமையல் ரொம்ப சிம்பிளா இருக்கும். ஏன்னா, மேரே பாஸ் பிரியாணி ஹை!) நோன்பு திறக்கறதுக்கு, காலையிலேயே ஒருத்தர் வந்து எழுப்பிட்டு போவார். ஆனா அதுக்கும் முன்னாடியே எங்க மேல் வீட்டுலே, எதிர் வீட்டுலே, கீழ் வீட்டுலே எல்லாரும் எழுந்து சமைக்க ஆரம்பிச்சிருப்பாங்க! (அதுவும் ரம்ஜான் மார்ச் ஏப்ரல்லே வந்துச்சுன்னா, நம்ம வீட்டுலே இருக்கறவங்களும் எழுந்துடுவாங்க..நம்மளை எழுப்பறதுக்கு! அதுவும் எங்க ஆயாவுக்கு இருக்க முன்னெச்சரிக்கை இருக்கே…மணி அஞ்சுதான் ஆகியிருக்கும்..அஞ்சரையாச்சு, எழுந்திரு…எழுந்திரு…படி..படின்னு! நமக்கு அதெல்லாம் புதுசா என்ன!! அவங்க சொல்றதுலேர்ந்து அரைமணிநேரம் கம்மியா கால்குலேட் பண்ணிக்க வேண்டியதுதான்..தூக்கத்துலேயே!)

ஏதோ சொல்ல வந்துட்டு்…எங்கேயோ போறேன்…நான் நாலாவது படிக்கும்போதுதான் சுமி அக்கா எங்க எதிர் வீட்டுக்கு குடி வந்தாங்க. கொஞ்ச நாள்லே‘சுமி வீடு’-ன்னு ஆயிடுச்சு. ஏன்னா, அந்த அக்கா பேரு சுமையா. அப்போ ஒன்பதாவது படிச்சுக்கிட்டு இருந்தாங்க. காலையிலே எட்டேகாலுக்கு ஒரு வேன் வரும்.முஸ்லீம் ஸ்கூல் வேன். அது கரெக்டா வீட்டு முன்னாடி வந்து நிக்கும். பாதிதான் கதவு திறக்கும், குடுகுடுன்னு சுமி அக்கா ஏறி உக்காந்துப்பாங்க. எல்லோருமே கருப்பு புர்க்கா போட்டு இருப்பாங்க. சுமி அக்கா, அவங்க நானி தைச்ச சம்க்கி வொர்க் ட்ரெஸ் போட்டுருப்பாங்க, ஆனா மேலே அந்த கருப்பு புர்க்கா போட்டுப்பாங்க. சுமி அக்காவுக்கு அவங்க கேக்கும்போதெல்லாம் நாந்தான் Campco சாக்லேட் வாங்கித் தருவேன்!

சுமி அக்காவுக்கு நாலு தம்பிங்க. அஸ்ரார், அப்ரார், உசேன் அப்றம் ஜூபேர். அஸ்ரார் என்னோட செட். அப்ரார் என்னை விட ரெண்டு வயசு சின்னவன். ஜுபேர்-க்கு அப்போதான் ஒரு வயசு. உசேனுக்கு போலியோ-னாலே சரியா நடக்க முடியாது. அவங்க அப்பாவை எல்லோரும் குல்ஸார் பாய்-ன்னு சொல்வாங்க. அவர், ஒரு பஜாஜ் ஸ்கூட்டர் வச்சிருந்தார். காலையிலே எட்டேமுக்காலுக்கு, அதை ஒரு சைடா சாய்ச்சு வச்சு ஸ்டார்ட் செய்வார். ரொம்ப அமைதியான டைப். அன்பானவர். சுமி அக்காவோட அம்மா ரொம்ப ஒல்லியா இருப்பாங்க. எப்போதும் உட்கார்ந்தே இருப்பாங்க. அப்றம், அவங்களோட நானிம்மா – அங்கிளோட அம்மா.

சுமி அக்காதான் சமையல் செஞ்சு வைச்சுட்டு, டிபன் பாக்ஸ்லே எடுத்துட்டு போவாங்க. சில சமயம் ரசம் வைக்க, கீரைக்கூட்டு செய்யறதுக்கு ஆயாக்கிட்டே ரெசிப்பி கேப்பாங்க. அவ்ளோ சூப்பரா பிரியாணி செய்வாங்க..சாஃப்டா சப்பாத்தி செய்வாங்க..ஆனா இட்லி தோசை செய்ய ரொம்ப கஷ்டப்படுவாங்க. ‘வரவே மாட்டேங்குது ஆயா’ கவலைவேற. (நம்ம வீட்டுலே அப்படியே நேரெதிர். தக்காளி சாதம் ரேஞ்சுலே செஞ்சு வச்சிட்டு, ‘பிரியாணி’ன்னு பில்டப்) உசேனுக்கு தோசைதான் பிடிக்கும். அவன் அதை ‘சீலா’ன்னுதான் சொல்வான். அவன் ஸ்கூலுக்குக் கிளம்பற, எங்க ஆயா ரெண்டு தோசை சுட்டுக்கொடுப்பாங்க. எல்லோருக்கும் உசேன் மேல ஒரு தனிப்பாசம் இருந்துச்சு!

எங்க வீட்டுலே எது செஞ்சாலும், ‘சுமிக்கு பிடிக்கும்’ இல்லேன்னா ‘ஜுபேருக்கு கொடுங்க’ கொடுக்கறது – அவங்களும் சப்பாத்தி செஞ்சு ‘குட்டிக்கு கொடுங்க’ன்னு கொடுக்கறது!! தீபாவளிக்கு எங்கக் கூட சேர்ந்து உசேன் மத்தாப்பு கொளுத்துவான்-அஸ்ரார்க்கு எங்க ஆயா இங்கிலீஸ்(!) சொல்லிக்கொடுக்கறது- நாங்க ஊருக்குப் போனா, ‘எல்லோரையும் கேட்டதாச் சொல்லுங்க டீச்சர்’ன்னு அவங்க சொல்றது- பெங்களூர்லேர்ந்து ஆன்ட்டியோட தம்பி கொண்டுவந்த குடைமிளகாயை எங்களுக்கு தர்றதுன்னு ரொம்ப க்ளோஸ் ஆகிட்டோம். !

நான் அப்போ ஆறாவது. அந்த வருஷ அரைபரீட்சை லீவுலே, சுமி அக்கா வீட்டுலே எல்லோரும் பெங்களூருக்குக் கிளம்பினாங்க. அந்த ஆன்ட்டி எங்க ஆயாக்கிட்டே, நான் போய் பல்லை சரி பண்ணிக்கிட்டு வரேன் ஆயா, ஒரே குடைச்சல் கொடுக்குதுன்னு” சொல்லிக்கிட்டிருந்தாங்க. அப்பறம், லீவு முடியறதுக்கு ரெண்டு மூனு நாள் இருக்கும்போது யாரோ வந்து சொன்னாங்க, அந்த ஆன்ட்டி இறந்துப் போய்ட்டாங்கன்னு. அந்த அங்கிள் ஊரு பேர்ணாம்பட். அங்கேதான் காரியம் வச்சிருந்தாங்க. நாங்க எல்லோரும், சாந்தா அத்தை, கெஜா அம்மா எல்லோரும் போனோம். அந்த அங்கிள் ரொம்ப கலங்கிடாம பொறுமையா பேசினார். அவர்கூட சுமி அக்காவோட மாமா இருந்தார். எங்களை எல்லாம் வேறே ஒரு வீட்டுக்கு கூட்டிட்டு போய் என்ன ஆச்சுன்னு சொன்னார். அப்போக்கூட, ஸ்வீட்ஸ் வாங்கி வைச்சு சாப்பிடுங்க சாப்பிடுங்கன்னு சொல்லிக்கிட்டிருந்தார், அந்த அங்கிள்.

எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம். என்ன, பாய், இந்தநேரத்துலேயும் இப்படி உபசரிக்கறாரேன்னு! அந்த ஆன்ட்டிக்கு டிபி இருந்துச்சாம். அதுக்கு மருந்து சாப்பிட்டுக்கிட்டிருந்தாங்களாம். ஆனா அதை ஒரு வருஷம் கழிச்சு திரும்ப வந்து பாக்க சொல்லியிருக்கார் டாக்டர். ஆனா டாக்டர்கிட்டே போகாம, இவங்களா மருந்து வாங்கி தொடர்ந்து சாப்பிட்டிருக்காங்க. அதுதான் பிரச்சினையாகிட்டதா எல்லோரும் பேசிக்கிட்டாங்க வர்ற வழியிலே!! அப்பறம் கொஞ்சநாள் கழிச்சு சுமி அக்கா வந்துட்டாங்க. அவங்க நானிக்கும் கொஞ்சம் முடியாம இருந்தது. முஸ்லீம்களுக்கு நாப்பதுநாள் கணக்காம். நாப்பதாம் நாளுக்கு ஊருக்குப் போய்ட்டும் வந்தாங்க.

சுமி அக்கா ஸ்கூல்க்கு நிறைய லீவ் போட்டதாலே அந்த வருஷம், இன்னொரு முறை படிக்க வேண்டியதாப் போச்சு. அவங்கதான் சமையல், அப்புறம் ஜூபேரைப் பார்த்துக்கறதுன்னு எல்லாம். அங்கிளும் ரொம்ப மனசுடைஞ்சு போய்ட்டதா பெரியவங்க எல்லாம் பேசிக்கிட்டாங்க.’நானும் போய்டுவேன், நானும் போய்டுவேன்’ன்னு அங்கிள் சொன்னதா சொல்லிக்கிட்டாங்க. பெரியங்க பேசிக்கிற இடத்துலே நின்னாதான் எங்க ஆயாவுக்கு கோவம் வந்துடுமே..”கண்ட செருப்பை வாங்கி காதுலே மாட்டிக்கோ”ன்னு திட்டுவாங்க. ஆனா முன்னாடி மாதிரி எங்க பிளாக் கலகலப்பாவே இல்லே..எல்லாமே அமைதியா ஒரு சுரத்தேயில்லாம மௌனமா இருக்கற மாதிரி நடந்துக்கிட்டிருந்தது.

ஒரு வாரம் போயிருக்கும்…இப்படியே! ஸ்கூல் விட்டு சாயங்காலம் வந்தா சுமி அக்கா வீடு பூட்டி இருக்கு..ஆயா முகம் இறுகிப் போய் இருக்கு. அங்கிள் ஆபிஸ் போகாம வீட்டுலேயே தான் இருந்திருக்கார். எல்லோரும் ஸ்கூல் போயாச்சு. நானி மட்டும்தான். காலையிலே ஒரு பதினொரு மணிக்கு நெஞ்சு வலிக்குதுன்னு சொல்லி இருக்கார். பத்துமணிக்கு மேலேதான் எங்க ப்ளாக்லே யாரும் இருக்கமாட்டாங்களே..யார்யாரையோ பிடிச்சு சாந்தா அத்தை டாக்ஸி ஏற்பாடு செஞ்சுருக்காங்க. எங்க ஆயாவை, அவர் பக்கத்துலேயே இருக்கச் சொல்லியிருக்கார். ஆனா, டாக்டர்கிட்டே போறதுக்குள்ளேயே உயிர் பிரிஞ்சுடுச்சு. பேர்ணாம்பட்லேருந்து அவங்க சொந்தக்காரங்க வந்து எல்லோரையும் கூட்டிட்டு போய்ட்டாங்க.

சுமி அக்காவும் ஜூபேரும் பெங்களூருலே ஒரு மாமா வீட்டுலேயும், அப்ரார் பேர்ணாம்பட்டுலே ஒரு மாமாக்கிட்டேயும், அஸ்ராரும் உசேனும் பெங்களுருலேயே வேற மாமாவீட்டுலேயும் தங்கிக்கற மாதிரியும்- சுமி அக்காவுக்கு கல்யாணம் ஏற்பாடு செய்யப்போறதாவும் – வீடு காலி பண்ணும்போது அவங்க சொந்தக்காரங்க சொன்னதுதான். இது எல்லாமே ரெண்டு மாசத்துக்குள்ளேயே…ஹாஃப் இயர்லி லீவு – ஆன்ட்டி இறந்த நாப்பது நாளு முடிஞ்சு ஒரு வாரம் – அங்கிள் இறந்து நாப்பது நாளும் முடிஞ்சது. அப்புறம் ஒரு ரெண்டு வாரம் கழிச்சு, நானியும் பேர்ணாம்பட்டேலேயே மௌத் ஆகிட்டதாச் சொன்னாங்க! ஆனா, யாரும் போகல..யாரையும் பாக்கிற மனவலிமை யாருக்கும் இல்லைன்னுதான் நினைக்கிறேன். ஆனா எல்லோரும் பேசி பேசி மாஞ்சு போறாங்க..

ரொம்பநாளைக்கு எங்க எதிர்வீடு பூட்டியிருந்தது…ஒன்றரை வருஷத்துக்கும் மேலே! அதுவும் ரொம்ப உயிரோட்டமா இருந்த எங்க ப்ளாக் ஃப்ரீஜாகி இருந்தது, கொஞ்ச நாள். ஆனுவல் லீவ் அப்போ சுமி அக்கா கல்யாணம் ஆகி எங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க, ஒரு சாயங்கால நேரம். டீ குடிச்சுட்டு கொஞ்சநேரம் பேசிக்கிட்டு இருந்துட்டு கிளம்பினாங்க. ‘சுமி கிடைச்சது என்னோட லக்’-ன்னு அந்த அண்ணா சொன்னாங்கன்னு அப்புறமா எங்க ஆயா, சாந்தா அத்தைக்கிட்டே பேசுக்கிட்டிருந்தது காதுலே விழுந்துச்சு.

நானும் காலேஜ்க்கு ஹாஸ்டல் போய்ட்டேன். லீவுக்கு வந்தப்போ அப்ரார் வந்திருந்தான் வீட்டுக்கு. பாலிடெக்னிக் முடிச்சுட்டு துபாய் போகப்போறதா சொன்னான். உசேன் எங்க ஊருலே ஒருக்கற மதரஸாலே சேரப்போறதாவும், அஸ்ரார் கோடம்பாக்கத்துலே ஒரு டான்ஸரை லவ் மேரேஜ் செஞ்சுக்கிட்டதாவும் சுமி அக்காவுக்கு ரெண்டு குழந்தைகள் இருக்கறதாவும் சொன்னான். உசேன் மட்டும் அப்போப்போ லீவுக்கு எங்க வீட்டுக்கு வருவான், ஒரு நாள்தான் லீவ் போல. ஆனா நாங்கதான்(நானும், குட்டியும்) ஹாஸ்டலுக்குப் போய்ட்டோமே..பெரிம்மாவும், ஆயாவும்தானே..கொஞ்ச நேரம் டீவி பார்த்துட்டு, தூங்கிட்டு, சாப்பிட்டு காசு வாங்கிட்டு போவான்னு சொன்னாங்க.

டில்லி டூருக்குப் போய்ட்டு வந்து அவங்க சொன்ன கதைங்க, அவங்க எனக்குக் கொடுத்த ஒரு மஞ்சள் கலர் கம்மல்,நான் அரேபியன் நைட்ஸ் படிச்சுட்டு, சுமி அக்கா சொல்ற கதைகளோட கற்பனை செஞ்சுக்கிட்டது – எல்லோரும் கண்ணாமுச்சு விளையாடறோம்னு அவங்க வீட்டுக் கட்டிலுக்கு அடிலே ஒளிஞ்சுகிட்டது – அவங்க எல்லோரும் வீட்டைக் காலி செஞ்சுட்டு போனதும் சூழ்ந்த வெறுமை-ன்னு இந்த எதிர்வீட்டு நினைவுகள் அத்தியாயம் இல்லாம என்னோட பால்யக்காலம் முழுமையாகாது! ஜாலியாத்தான் இந்த இடுகையை ஆரம்பிச்சேன்….நினைவுகளிலேருந்து தப்பிக்க முடியலை – எழுதினப்பறம்தான் தெரிஞ்சது. என்னோட பதினோரு வயசுக்கே நான் பயணிச்சு, அப்போ பார்த்ததையெல்லாம், கேட்டதையெல்லாம் கொட்டிட்டேன்னு!!

உபரிக்குறிப்பு : காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் லீவுக்குப் போனப்போ, ‘பூஜாக்குக் கொடுங்க’ன்னு எங்க பெரிம்மா பூரி கொடுக்கறதும், ‘கோங்குரா அரைச்சேன், டீச்சர்’ன்னு எதிர்வீட்டு ஆன்ட்டி கொடுக்கறதுமா இருந்துச்சு! ‘இதுக்குத்தான் யார்க்கிட்டேயும் க்ளோசா இருக்கக் கூடாதுன்னு, இனிமே’ ன்னு, சுமி அக்காவீடு காலியா இருக்கற பார்த்துட்டு பெரிம்மா, ஆயாக்கிட்டே சொன்னது ஏனோ நினைவுக்கு வந்துச்சு!

Add a comment ஓகஸ்ட் 6, 2009

கலர்…கலர்..விச் கலர் டூ யூ வாண்ட்?!

எனக்கு அப்போ அஞ்சு வயசாயிக்கும், ஒரு உறவினரை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள்.அவர் பேரு அண்ணாதுரை. அப்போ அவருக்கு 24-25 இருக்கலாம். ‘இவரை நீ சித்தப்பான்னு கூப்பிடணும்” அப்படின்னு சொன்னாங்க, ஆயா. நான் வாயை வைச்சுக்கிட்டு சும்மா இல்லாம, ”அப்போ சித்தி எங்கே” ன்னு கேட்டுட்டேன். எல்லாரும் சிரிச்சாங்க. அந்த சித்தப்பாவுக்கும் செம குஷி. ”சின்னபொண்ணுக்கு கூட தெரியுது, உங்களுக்கு புரியமாட்டேங்குதே”ன்னு சொன்னார். அவருக்கு ஒரு ப்ரெண்ட். ஞானசேகரன். ரெண்டு பேரும் எப்போவும் ஒண்ணாதான் இருப்பாங்க…ஞானசேகரன் சித்தப்பா இல்லாம அண்ணாதுரை சித்தப்பா வீட்டுக்கு வர மாட்டார். எனக்கு அண்ணாதுரை சித்தப்பான்னா ஞானசேகரன் சித்தப்பாவும் ஞாபகத்துக்கு வர அளவுக்கு! அப்போ அவங்க ரொம்ப தீவிரமா நிரந்தர/அரசு வேலைக்கு முயற்சி செஞ்சுக்கிட்டிருந்தாங்க. உற்சாகமான இளைஞர்கள்! இப்போ அண்ணாதுரை சித்தப்பா வெளிநாட்டுலே இருக்கார். ஞானசேகரன் சித்தப்பா நெய்வேலில இருக்கார்.

சண்முகண்ணா, பாபுண்ணா. இருவரையும் தனித்தனியாக பார்த்ததேயில்லை..மிகையாகக் கூடத் தோன்றலாம். ஆனா நிஜம். சரி, வீட்டுக்கு வரும்போதுதான் ஒண்ணா வருவாங்கன்னு நினைச்சா, யாராவது ஒருவருக்கு போன் செஞ்சாக் கூட மற்றவரும் அருகிலேதான் இருப்பார். கலகலப்பான உற்சாகமான இளைஞர்கள். இவங்க ரெண்டு பேரும் மட்டுமில்லை..இவங்க பேட்ச் அண்ணாங்க, அக்காங்க எல்லோரும் எங்க வீட்டுக்கு எப்போவும் ஸ்பெஷல்தான். ஏன்னா, எங்க பெரிம்மாவிற்கு முதல் பேட்ச் மாணவர்கள்.

“அண்ணா, ஒரு ஆலமரம் இருக்கு, அங்கே ஒரு குருடன், ஒரு நொண்டி, ஒரு ஊமை உட்கார்ந்து இருக்காங்க. அப்போ ஒரு மாம்பழம் விழுது. யார் போய் ஃப்ர்ஸ்ட் எடுப்பாங்க…குருடனா, நொண்டியா, ஊமையா?” என்ற எனது லகலக கடிகளுக்கு இலக்காவது இவர்கள்தான்! பதிலுக்கு சொல்வதற்கு நிறைய சுவாரசியமான கதைகளுக்கு ரெண்டு அண்ணன்களிடமும்!! காப்பி அடிச்சு மாட்டிக்கிட்டது, பொண்ணுங்களை கிண்டலடிச்சு வாங்கிக் கட்டினதும்ன்னு…

சண்முகண்ணாவிற்கு கல்யாணமானப்போ, கொடைக்கானலில் படிச்சுக்கிட்டிருந்தேன். ஹனிமூனுக்கு கொடைக்கானல் வந்திருந்தாங்க…ஹாஸ்டலில் என்னை பார்க்க வந்திருந்தாங்க. கூடவே பாபுண்ணா. ”என்னண்ணா, நீங்களும் வந்துட்டீங்களா!!” -ன்னு கேட்டதுக்கு, “இவன் வந்தப்புறம் எனக்கு ரெண்டு நாளா என்ன செய்றதுன்னே தெரியலை..அதான் கிளம்பி வந்துட்டேன்”ன்னு சொல்றார் பாபுண்ணா. “அவன் கல்யாணம் ஆகி ஹனிமூன் போறான். இவன் எதுக்கு பின்னாடியே போறான்?” – அந்ததடவை ஊருக்குப் போனப்போ பெரிம்மா சொன்னது!! கடைசியா ஆம்பூருக்குப் போனப்போ வீட்டுக்கு ரெண்டு பேரும் ஒண்ணாதான் வந்திருந்தாங்க!

சண்முகண்ணாவிற்கு படிக்க வேண்டுமென்று ஆசை..ஆனால் காலேஜ் முதலாண்டிலேயே அவரது அப்பா மரணமடைந்துவிட, குடும்பப்பொறுப்பு அண்ணாவின் மேல். நான்கு சகோதரிகள் மற்றும் ஒரு தம்பி. சண்முகண்ணா இல்லாத காலேஜுக்கு பாபுண்ணா மட்டும் செல்வாரா என்ன..BRC & சன்ஸ் சவுண்ட் சர்வீஸலிருந்து ஆரம்பித்து இப்போது இருவரும் வியாபாரக் காந்தங்கள்!!

நாடோடிகள் பார்த்தேன். ஏனோ, நான் கடந்து வந்த இந்த ஜாலியான இளைஞர்களை நினைவுபடுத்தியது. காதலுக்கு உதவின அனுபவங்களை கேட்க வேண்டும்….அடுத்த முறை ஊருக்குச் செல்லும்போது!! எனக்குச் சொல்வதற்குத்தான் நிறைய இருக்கிறதே அண்ணன்களிடம்!!

பப்புவோடு சென்றிருந்தோம்.உதயம். ‘அஞ்சாதே’விற்குப் பிறகு நாங்கள் பார்த்தத் திரைப்படம். பப்புவிற்கு முதல்முறையாக தியேட்டருக்குச் சென்றது நினைவிருக்க வாய்ப்புகள் இல்லை! “எப்போ வீட்டுக்குப் போலாம்” என்று கேட்டுக்கொண்டிருந்தவள், 30 நிமிடங்களில் உறங்கிவிட்டாள். 🙂

பப்பு என்ன ட்ரெஸ் போடறதுன்னு நான் முடிவெடுத்தது போக,பதிலுக்கு என்னோட உடைகளை பப்புத்தான் முடிவெடுக்கிறாள். ஆரஞ்சு வண்ண உடை போட்டிருந்தாள். என்னோட சாய்ஸ்தான். ”சேம் கலர் சேம் கலர்”ன்னு என்னையும் அதே வண்ண ட்ரெஸ் போட வச்சுட்டா!அவ்வ்வ்! ஆரஞ்சு வண்ண உடையில் ஒரு அம்மாவும் குட்டிப்பெண்ணும் கடலலையில் விளையாடிகிட்டுருந்ததை ஞாயிற்றுக்கிழமை பார்த்திருந்தீங்கன்னா…ஹிஹி..அது நாங்கதான்!!

தலைப்பு : இது ஒரு சின்னவயசு விளையாட்டு. கிளாஸ் ரூமில் கூட விளையாடலாம். எந்த கலர் சொல்கிறார்களோ அந்த கலரை தொட வேண்டும். தொட முடியாதவர்கள் அவுட்.

Add a comment ஜூலை 20, 2009

Jungle Book


(Thanks – Image : google)

அண்மையில் ஜங்கிள் புக் படத்தை பப்புவிற்கு அறிமுகப் படுத்தினோம். நானும் இந்தப் படத்தைப் பார்த்து வளர்ந்ததாலேயே என்னவோ மிகவும் ஸ்பெஷலாக டைம்பாஸாக இருந்தது! யாரால் மறக்க முடியும்..பகீரா என்ற பான்த்தர், பலூ என்ற கரடி, ஷேர்கான் என்ற புலி மற்றும் ஹாத்தி என்ற யானை!கிப்ளிங்-கின் கதைகளை படித்ததில்லை, ஆனால் கார்டூன் கேரக்டர்களாக பார்த்திருக்கிறேன். தாயாக இருப்பதில் ஒரு அட்வாண்டேஜ் அல்லது சந்தோஷமான விஷயம் எதுவெனில், உங்கள் மகளின்/மகனின் கண்களால் பார்க்க முடிவதும், சின்னப் பிள்ளைத்தனமான காரியங்களை எந்தவித கான்ஷியசும் இல்லாமல் செய்வதற்கான உரிமைகளும்தான்! 😉

பப்பு முழுவதுமாக பார்க்கவில்லையெனினும், பார்த்ததையே திரும்பத் திரும்ப பார்க்க விரும்பினாள். அடுத்து என்ன வரும் என்று சொல்லுமளவிற்கு! பலூவின் கேரக்டரும், குட்டி யானையும் மிகப் பிடித்தம். மோக்லி பற்றி சொல்லவே வேண்டியதில்லை. படம் பார்க்கும்போது, அவள் பார்ப்பதை நான் பார்த்துக்கொண்டிருப்பதை பப்பு விரும்பவில்லை! 🙂

இப்படத்திலிருக்கும் அருமையான பாடலின் நான் ரசிக்கும் வரிகள்..

Look for the bare necessities
The simple bare necessities
Forget about your worries and your strife
I mean the bare necessities
Old Mother Nature’s recipes
That brings the bare necessities of life .

And don’t spend your time lookin’ around
For something you want that can’t be found

When you find out you can live without it
And go along not thinkin’ about it
I’ll tell you something true

The bare necessities of life will come to you

வாழ்க்கைக்குத் தேவையான மிக முக்கியமான ஏதோவொன்று இந்த வரிகளில் இல்லை??!

(Thanks: youtube)

Add a comment ஏப்ரல் 12, 2009

அழியாத கோலங்கள் – தொடர் பதிவு

அழைத்த தீபாவிற்கும் , தொடங்கி வைத்த மாதவராஜ் அவர்களுக்கும் நன்றிகள்!

ஹாய் மீனு,

உன் கடிதம் கிடைத்தது.எத்தனை வருடங்களுக்குப் பிறகு….!!! எப்படி இருக்கிறாய்? உன் மகள் மற்றும் கணவர்? இங்கே நாங்களனைவரும் நலமே!

நீ எழுதியக் கடிதம் எனக்குள் பல நினைவலைகளைத் தூண்டிவிட்டது! பழைய கடிதங்களையும், ஆட்டோகிராப் நோட்டுகளையும் தோண்டி எடுத்துப் படித்துக் கொண்டிருந்தேன்! இப்போதுதான் நாம் சந்தித்ததுபோல் இருக்கிறது, ஆனால் எவ்வளவு நடந்துவிட்டிருக்கிறது! oh..our sweet bygone days!

பலசமயங்களில் நான் உன்னை நினைத்துக்கொண்டிருக்கிறேன், ஆனால் எந்தச் சூழ்நிலைகளில் என்று இப்போது ஞாபகமில்லை! உன்னிடம் பகிர்ந்துக் கொள்ள நிறைய இருப்பதுபோலவும் தோன்றுகிறது, அதேசமயம், பேசுவதற்கு ஒன்றுமில்லாததுபோலவும் இருக்கிறது..ம்ம்..உண்மைதான், குழந்தைகளையும், குடும்பத்தைத் தாண்டி பேச
ஒன்றுமில்லாதது போல்தான் இருக்கிறது..நான் பார்த்த கடைசி ஷாருக் படம் கூட நினைவில் இல்லை! ஹேய்..கடைசி எக்சாம் முடித்து, நம் கிளாஸ்மேட்ஸ் அனைவருடனும்கூட நாம் தியேட்டரில் பார்த்தோமே..என்ன படம் அது?!

முன்பு, எனது கஸின்சிஸ்டர்ஸை பார்த்து வியந்திருக்கிறேன், இவர்களுக்கு குழந்தைகளைத் தாண்டிப் பேச ஒன்றுமிராதாவென்று, எனக்கு ஒரு குழந்தைப் பிறக்கும் வரை! எங்கோ படித்தது தான் நினைவுக்கு வருகிறது, மின்சார ரயிலிலிருந்து இறங்கியதுமே, ஆண்கள்
டீ குடிக்கவோ பேசவோ நண்பர்களுடன் கூட்டாகப் போய் விடுகிறார்கள், ஆனால், பெண்கள் கீரை வாங்கவும், காய்கறி பேரம் பேசி வாங்கவும் தயாராகி விடுகிறார்களென்று! எவ்வளவு உண்மை! ஒருவேளை நாம் மகள்களாக வளர்க்கப் படாமல், மருமகளாக்கப்படுவதற்காகவே
வளர்க்கப் படுகிறோமோ!!வீடு, குழந்தைகளென்று ஒரு விடுபடவே முடியாத நத்தைக்கூடு நம் கண்களுக்குத் தெரியாமலே நம் முதுகில் ஏற்றிவிடப்படிட்டிருக்கின்றதோ, மீனா! விடுபட்டாலும் எங்கே போக!!

நீ வேலை செய்கிறாயா, மீனா?! நான் மூன்று கம்பெனிகள் மாறிவிட்டேன்….ஆபிஸூம், அதைவிட்டால் வீடும்தான் மாறிமாறி…மீனா, ஆன்சைட் போவதுதான் என் கனவு என்று சொல்லிக்கொண்டிருப்பேனே..ஆனால், இன்னும் ஒருமுறைக்கூட போகவில்லை! வாய்ப்புக் கிடைக்காமலில்லை, ஆனால், கல்யாணத்திற்கு முன் அம்மா போக விடவில்லை, கல்யாணத்திற்குப் பின் சந்தர்ப்பம் போக விடவில்லை! எங்கே, வீட்டையும், குட்டீஸையும் விட்டுவிட்டு போவது..சிலசமயங்களில் தோன்றுகிறது, ஒருவேளை நாம் தான் ரொம்ப நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, நாம் இல்லாவிட்டால் ஒன்றுமே நடக்காதென்று!ஒருவேளை நாம் care-givers-ஆக இல்லாமலிருந்தால், equations மாறுமோ! மீனா, நாம் லைப்ரரில்யிலிருந்து எடுத்துப் படித்தோமே…அம்பையின் புத்தகம்..வீட்டின் மூலையில் சமையலறை..ஞாபகமிருக்கிறதா..நிறைய விவாதித்தோமே! நான் இதுவரைக்கும் ஆயிரம் தோசைகள் செய்திருப்பேனா..நீ எவ்வளவு செய்திருப்பாய்?:-)

இன்னும் ஒன்று சொல்லவேண்டும் மீனா, யூ வில் பி எக்சைட்டட்..எங்கள் அலுவலகத்தில் நாங்கள் பெண்கள் மட்டும் ஒரு குழுமம் உருவாக்கியிருக்கிறோம்..எங்காவது ஓரிடத்ட்க்ஹில் நாம் நாமாக இருக்கவேண்டுமில்லையா! எங்கள் கம்பெனி ஜிஎம் முதல் எல்லோரும் அதில்! நினைவிருக்கிறதா, நாம் காலேஜில் விளையாடுவோமே கிறிஸ்மா, கிறிஸ்சைல்ட்…அதிலிருந்து ஆரம்பித்து, காலேஜில் ஒரே கலர் தீம் வைத்து உடைஉடுத்திக்கொண்டு வருவோமே..அப்புறம் புடவை டே இதெல்லாமே..இங்கேயும்..விளையாட்டுப் போட்டிகள், எல்லோரும் ஒரே கலர் குர்தா..மாதத்தில் அல்லது இருமாதங்களுக்கு ஒருமுறை வெளியே சென்று ப்ரீக் அவுட்..என்றாவது ஒரு நாள் பாட் லக்! எல்லாம் சிண்ட்ரெல்லாவின் காலணியில்தான்!

இப்படி நாமாக ஏதாவது சுவாரசியமாக செய்துக்கொண்டால்தான் உண்டு! சம்திங் டூ கீப் அஸ் கோயிங்! மதிய உணவிற்கு லேடிஸ் மட்டுமாக அமர்ந்து சாப்பிடுவோம்..அப்படிதான் நேர்ந்துவிடுகிறது..அவ்வளவு கிண்டலும் கலாட்டாவுமாக, சிரிப்புமாக..அப்போதுதான் தெரியும், ஒவ்வொருவருக்குள்ளேயும் ஒரு குறும்புப்பெண் ஒளிந்துக்கொண்டிருப்பதை! பசங்க கிண்டல் செய்வாங்க, “என்ன மேடம், அவ்வளவு சிரிப்பு, நீங்களா ஒருத்தருக்கொருத்தர் பார்த்து, ஹேய், நீ இன்னிக்கி ரொம்ப அழகாயிருக்கே” அப்படின்னு சொல்லிட்டு சிரிச்சுக்குவீங்களா” அப்படின்னு! எவ்வளவு கிண்டல் பாரேன்! அப்புறம் பாட் லக் வைத்திருந்தோம்..அதுவும் நாங்கள் பெண்கள் மட்டும்! உடனே,பசங்க, “மேடம், இது சூசைட் அட்டெம்ட் இல்லையா, நீங்களே சமைச்சு நீங்களே சாப்பிடறது?!” “நீங்க இபப்டில்லாம் கிண்டல் செஞ்சா உங்களுக்கு கொடுத்துடுவோம்னு நினைக்காதீங்கன்னு” சொல்லிட்டு நாங்க ஜாலியா பாட் லக் எஞ்சாய் செய்தோம்! ஒன்றாக ஒருமுறை சினிமாவுக்குக்கூட போயிருக்கிறோம், அலுவலக் பெண் தோழிகளாக! இதுதான் எங்களைப் பொறுத்தவரை மிகப்பெரிய மகிழ்ச்சி, அன்றாட வாழ்வின் இறுக்கங்களிலிருந்து விடுபட!

ஓக்கே மீனா, ரொம்ப போரடிக்க விரும்பவில்லை! நாந்தான், கடிதம் எழுதினா பக்கம் பக்கமா பரிட்சை பேப்பரை விட அதிகமா எழுதுவேனே…விடுமுறைக்கு நாங்கள் சென்னை வருவோம், தொலைபேசியில் அழைக்கிறேன்!

N. B: இன்னும் இந்த “Guess me!” அப்புறம் “open with smile” இதெல்லாம் போடுவதை விடமாட்டியான்னு திட்டாதே!geeee!

With sunshine and rainbows
கVதா!! 🙂 (இப்படி சைன் செய்து நீண்ட நாட்களாகிவிட்டன, மீன்ஸ்!)

வெகு இயல்பாக, அதே சமயம் நம்மையும் நமது அனுபவங்களோடு அசை போடவைக்கும்படியும், ‘மனசைப் பிழியற’ மாதிரியும் பதிவெழுதும் நமது அமித்து அம்மாவை இதைத் தொடர அழைக்கிறேன்!

Add a comment ஏப்ரல் 1, 2009

Friends 4 லைப்!!

எனக்கு ஒரு தோழி இருந்தாள் கல்லூரியில், ஒரு சில பழக்கவழக்கங்கள் இருவருக்கும் ஒன்றாக! ஜீன்ஸூம், முக்கால் பேண்டும், செமஸ்டருக்கு ஒரு ஹேர்ஸ்டைலும் எல்லாவற்றிற்கும் மேலாக வாழ்க்கையின் மேல் தீராக்காதலுடனும்(crazy over life?!)!
பட்டங்கள் பெற்று அவள் மனித வள நிர்வாகத்தின் பக்கமும், நான் கணினி பயன்பாட்டுவியலுமாகப் பாதைகள் பிரிந்தன! நடுவில் ஒருமுறை ஃப்ரெண்ட்ஷிப் டே கெட் டூ கெதரில் சந்தித்தப் பிறகு ஒரு பெரிய இடைவெளி. நீண்ட பிரிவிற்கு சமீபத்தில் விட்ட இடத்திலிருந்து தொடர்கிறோம் – கிண்டலும், கேலியும்,அவரவர்களின் எடையைப் பற்றியும், குழந்தைகளப் பற்றிய விசாரிப்புகளுமாய்! whoa! ஒன்று மட்டும் மாறவேயில்லை..attitude towards life! அவளும் நானும் அப்படியேதான் இருக்கிறோம்..வாழ்க்கையின் மீதான ரசனைகளில்..சின்னச்சின்ன ஆசைகளில்…பற்பல மாற்றங்களுக்குப்பின்னும்!

ஒருசில விஷயங்கள் மாறுவதில்லை!!

Add a comment நவம்பர் 25, 2008

நினைவுகளின் பிரதிபலிப்புகள்

மளிகை வாங்கிக்கொண்டு பில் போடுவதற்காக கார்டோடு நின்றுக்கொண்டிருந்தேன்.
ஏதோ இடித்த மாதிரி இருந்தது..இன்னொரு கார்ட்!! அதில், லாக்டோஜன் II ,
செரிலாக் மற்றும் பாம்பர்ஸ் என்று நிரம்பியிருந்தது!! புரிகிறது பெண்ணே…
இரண்டு மணி நேரங்களுக்குள் போக வேண்டும் என்ற உன் அவசரம்!!
இரண்டு வருடங்களுக்குமுன் நானும் இருந்திருக்கிறேன் அந்நிலையில்!!
இரவு நேர விழிப்புகள், நான்கு மணிக்கொருமுறை பால் கலந்து, அதிகாலை ஹக்கீஸ் மாற்றி,
weight management..எல்லாம் கண்முன் வந்துப்போயின ஒருமுறை!!

Add a comment செப்ரெம்பர் 25, 2008

நினைவுகளின் பிரதிபலிப்புகள்

ஆண்டுத் தேர்வுகள் முடிந்ததும் விடுமுறைக்கு வடலூர் செல்வது வழக்கம்.
பன்னிரண்டம் வகுப்பு பரீட்சைகள் முடிந்ததும், நுழைவுத்தேர்வுக்கான கோச்சிங் கடலூரிலோ அல்லது நெய்வேலியிலோ என்று முடிவானது. நெய்வேலி செயின்ட்.பால்ஸ் பள்ளியின் கோச்சிங்கில் சேர்ந்தேன். பொதுவாக பள்ளியில் நடக்கும் கோச்சிங் கிளாஸில் அந்த பள்ளி மாண்வர்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள மாணவர்கள் மட்டுமே சேருவார்கள். இப்படி ஊர் விட்டு ஊர் வந்து படிப்பவர்கள் மிகவும் அரிது! அந்த மாணவர்கள் எல்லாம் ஒரு குருப்பாக, அல்லது ப்ரெண்ட்சாக இருப்பார்கள். நான் மட்டும் odd girl(!!) out!! ஒரு பதினைந்து-இருபது பெண்கள் இருந்தார்கள். எல்லாம் நெய்வேலி பெண்கள் கான்வென்ட் பள்ளி! ஒரு சிலர் கடலூர் க்ளூனியிலிருந்து!! கோச்சிங் ஒரு 30 நாட்கள் மட்டுமே! ப்ரேக் டைம் 15 நிமிடங்கள்!!
அனைவருடைய பெயர்களும் தெரிவதற்குள்ளாகவே நாட்கள் முடிந்து போயின! I made some wonderful friends there…and lost contacts!

நேற்று மாலை எனது ஆர்குட் பக்கத்தில் ஒரு மின்னழைப்பு!! அதில், “செயின்ட் பால்ஸ் கோச்சிங்கில் படித்த அதே சந்தனமுல்லையா?” என்று ஸ்கிராப்!! பெயரோ, பேசியிருக்கிறேனாவென்றும் ஞாபகத்தில் இல்லையென்றாலும், பத்து நீண்ட வருடங்களுக்கு (என் வயதை கணக்கிட்டு விட்டீர்களா!?!) முன்னால் சந்தித்த நபர் என் பெயரை நினைவு கொண்டிருப்பது, எதிர்பாராத தருணத்தில் ஒரு பூங்கொத்தை பெறுவதைப் போல் மகிழ்ச்சி தருவதாயிருந்தது. தொடர்பை விட்டுப் போன எத்தனையோ எனது பால்ய கால நண்பர்களையும் என் தொடர்பு எல்லைக்குள் கொண்டு வந்த ஆர்க்குட்டுக்கு நன்றி!!

x—–x—–x—–x——x—-x
சாலையில் எனக்கு முன் செல்லும் ஆட்டோவில் வாசகங்கள் இருந்தால் எப்படியேனும் சந்து பொந்துக்களில் புகுந்து படித்துவிட முயல்வேன். பல நேரங்களில் பைபிள் வசனங்கள், கீதோபதேங்கள் அல்லது “சுருக்” வசனங்கள்/வாழக்கை தத்துவங்கள், சுயபுலம்பல்கள்/கவிதை போன்றவை மற்றும் random thoughts!! இன்று படிக்கக் கிடைத்தது,

” உங்கள் வழிச்செலவு எங்கள் வாழ்க்கைச் செலவு!”

how true!! ப்ளாக்குக்கு முன்னோடி இந்த ஆட்டோ வாசகங்கள்.. :-))!!

Add a comment ஜூலை 15, 2008

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

பிப்ரவரி 2019
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

Posts by Month

Posts by Category