Posts filed under: ‘நினைவுகள்‘
எ ஃபார்…

….. எடுத்துக்காட்டு!!

இந்த.காஎன்ற எடுத்துக்காட்டு படுத்தற பாடு இருக்கே!! யூகேஜிலேர்ந்து இன்னைக்கு வரைக்கும் நம்மை துரத்திக்கிட்டே வர்ற விஷயம்! முதல்லே ‘எ.கா’ -ன்றது ‘எடுத்துக்காட்டு’ அப்படின்னு எனக்கு புரியறதுக்கே சில பல வகுப்புகள் தாண்டி வர வேண்டியிருந்தது.

பளளிக்கூட புத்தகத்துலே பாடம் முடிஞ்சதும் அடுத்ததா கேள்விகள்/பயிற்சிக்கேள்விகள் இருக்கும். அது எப்படின்னா எடுத்துக்காட்டு ஒன்னு கொடுத்துட்டு அதே மாதிரி மீதியெல்லாம் செய்ங்க எனும் ரீதியில் இருக்கும். அறிவியல், தமிழ், ஆங்கில பாடங்கள் கூட சமாளிச்சிடலாம். ஆனால், இந்த கணக்கு பாடத்துலே இருக்குமே…அது ஒன்னொன்னும் ஒரு மாதிரி இருக்கும். எ.கா-ஆக இருக்கறது மட்டும் ஈசியா இருக்கும். ஒருவேளை ஈசியா இருக்கறதை மட்டும் எ.கா -ஆ செஞ்சு கொடுத்திட்டாங்களோன்னு தோணும்!

அதுவும், இந்த மணி பார்க்க கத்துக்கற காலகட்டம் மறக்கமுடியாதது… பாடத்துக்கு பின்னாடி நெறைய கடிகாரங்கள் வெவ்வேற நேரம் காட்டிய படி வரைஞ்சு இருக்கும். அதுலேயும் எ.கா-இல் இருக்கறது ரொம்ப ஈசியா 1.30 மணி காட்டும். ஆனா, நாம் எழுத வேண்டியது மட்டும், 7.45, 2.15 12.45 இப்படி இருக்கும். ஹாஃப் பாஸ்ட் 2, ஃக்வார்டர் டூ 8 – னுதான் சொல்லணும். ஆனா எ.கா-ஆக இதையெல்லாம் போட்டிருக்க மாட்டாங்க. நாமே “யாரேனும் மணி கேட்டால் அதை சொல்லக் கூட தெரியாதே” கேஸ்! நேராக சரியான மணி சொல்றதே பெருங்கஷ்டம், இந்த மாதிரி சுத்தி வளைச்சு சொல்லச் சொன்னா!!

எப்படியோ, மணியெல்லாம் (அட, கடிகாரத்திலேதான்!) பார்க்க கத்துக்கிட்டு பெரிய க்ளாஸ் வந்தா, கொஸ்டின் பேப்பரிலே, “கோலங்கைமா திசு, பாரங்கைமா திசு, மைட்டோகாண்ட்ரியா வை எ.கா டுடன் படம் வரைந்து விளக்கு” னு இருக்கும்! நமக்கு ஏதோ ஒரளவுக்கு ஒழுங்கா வரைய தெரிஞ்சது அமீபாதான். இதோட எங்க சயின்ஸ் டீச்சர் புண்ணியத்துலே மைட்டோகாண்ட்ரியா எப்படி இருக்கும்னு இப்போ வரைக்கும் ஞாபகம் இருக்கு! ஆனாலும் பத்தாவது பரீட்சையிலே கண் -னை (ஏன்னா அதுக்கு முன்னாடி வருஷம் கேள்வித்தாள்லே காது கேட்டிருந்தாங்க!) விழுந்து விழுந்து படிச்சுட்டுப் போக, கடைசிலே கொஸ்டின் பேப்பரில் ‘காது வரைந்து விளக்கு’ன்னு வந்து இருந்தது. என்ன பண்ண, மனசை கல்லாக்கிட்டு, படிச்சிட்டு போன கண்ணை வேஸ்ட் பண்ணாம, ‘இந்த மாதிரி இருக்கிற கண்ணுக்கு சற்றுத்தள்ளி காது இருக்கும்’ என்ற மாதிரி ஒரு விடை எழுதி விட்டு வந்தது வரலாறு!

ஆனாலும், கழித்தல் கற்றுக்கொண்ட போது, 10-இலிருந்து 3 போனா மீதி எவ்வளவு கேள்விக்கு புரியாமல் விடும் லுக்-கை பார்த்து, “உன்கிட்டே பத்து மாம்பழம் இருக்கு, மூனு மாம்பழம் அனு-வுக்கு கொடுத்துட்டா மீதி உன்கிட்டே எவ்வளவு இருக்கும்” ன்னு எ.கா-டோடு கேட்க, ”ஏன் அனுவுக்குக் கொடுக்கணும் நானேதான் சாப்பிடுவேன்” என்ற கேள்வி மனதில் பசுமையாக இருக்கிறது! அதேபோல் அல்ஜீப்ராவில் மைனஸூம் மைனஸூம் ப்ளஸ் என்று கற்றுக்கொண்டதும்!

ஒவ்வொரு பேப்பருக்கும் செமினார் – அந்த செமினாருக்கு இண்டர்னல் மதிப்பெண்களும் உண்டு. ‘எந்த டவுட்-னாலும் தனியா கேளு, என் செமினார்லெ நீ கேக்காதே, உன் செமினார்லே நான் கேக்க மாட்டேன்’ என்று சொல்லப்படாத டீலிங் வகுப்பில் நடைமுறையில் இருந்தது. இரண்டு செமினார்களை பார்த்த ஆசிரியர், டவுட்களை அவராக கேட்க ஆரம்பித்துவிட திருடனுக்குத் தேள். அதிலிருந்து தப்பிக்க, ‘நான் அவனை கேப்பேன், அவன் என்னை கேப்பான்” என்று போட்டு வைத்த திட்டத்தில் “ இதனை ஒரு எ.கா-டோடு விளக்க முடியுமா” என்ற கேள்விக்கே முதலிடம்!

ஏழாம் வகுப்பிலிருந்து படித்து வந்த ‘தொகை’களை, கல்லூரியில் விரிவாக நடத்திக்கொண்டிருந்தார் தமிழ் பேராசிரியர். ‘நமக்கெல்லாம் இந்த லேங்குவேஜா முக்கியம், சியும் சிபிபியும் தானே சோறு போட போகுது’ என்ற மிதப்பில் கனவு கண்டுக்கொண்டிருந்தபோது, ப்ரியாவிடம் “வினைத்தொகைக்கு’ எ.கா சொல்லுமா” என்றார் ஆசிரியர். ப்ரியா எதையுமே உணர்ச்சி பூர்வமாக விளக்குவாள். ஏதோ ஓர் அரவிந்தசாமி படக்கதையை மூன்று நாட்களாகச் சொன்னவள் அவள். சொல்வதோடு நில்லாமல் ஆக்‌ஷனும் உண்டு – ஒரு குழந்தையைப் போல!

சட்டென எழுந்த ப்ரியா,

”’பால்சோறு சாப்பிட்டான்’ங்க மேம்” என்று,
டெஸ்க்-லிருந்து எடுத்து சாப்பிடுவது போல ஆக்‌ஷ்னுடன் சொல்ல ஆசிரியருக்கே சிரிப்பு வந்துவிட்டது! ப்ரியா, அன்றிலிருந்து கொஞ்சநாளைக்கு ‘பால்சோறு’ ம் ஆனாள்! 🙂

உங்கள் எ.கா நினைவுகளையும் பகிர்ந்துக்கொள்ளுங்களேன்!

Advertisements

Add a comment நவம்பர் 27, 2009

ஊ ஃபார் … (தொடர்ச்சி)

…ஊருக்குப் போறோம்!
பகுதி 1

பண்ருட்டி வந்தவுடன், ஊருக்கே போய்விட்ட சந்தோஷம் கிட்டி விடும் – அதுவும், குடத்தை கையில் ஏந்திக்கொண்டு தண்ணீர் ஊற்றுகிற பாவனையில் பெண்கள் இருபுறமும் நிற்குமாறு கட்டப்பட்ட அந்த வளைவு/ஆர்ச் – ‘அப்பாடா, வடலூர் வந்துவிட்டது’ என்ற நிம்மதி!! ‘நெய்வேலி உள்ளே போகுமா’ என்று கேட்டுவிட்டு வடலூர் பஸ் பார்த்து ஏறி அமர்ந்தால் பலாபழ கூடைகளுடனும், முந்திரி கூடைகளுடனும் நம்மை மொய்க்கத் துவங்குவார்கள்! பெரும்பாலும், குட்டிபசங்கள் ஜன்னலோரத்தில் அமர்ந்தால் பலாபழத்தை பேப்பரில் வைத்து மடியில் போட்டு விடுவார்கள்…நான் ஆயாவை பார்ப்பேன் – அவர் ‘வேணாம்மா’ என்றாலும் விற்கும் நபர்கள் திணிப்பார்கள் – ‘கீரைக்காரம்மாவிற்காக கீரை வாங்கும்’ ஆயா இந்த பலாப்பழ ஆளுக்காக பலாப்பழம் வாங்குவார். ..அது இரண்டு அல்லது மிஞ்சி போனால் இரண்டரை ரூபாய்! இன்றைக்கு பத்து சுளைகள் பத்துருபாய்.சாப்பிட்டபின் பலாப்பழ கொட்டைகளை கண்டிப்பாக கோன் மாதிரி செய்து வைத்திருக்கு பேப்பரில் போடவேண்டும், அது அத்தையிடம் கொடுத்து அடுத்த நாள் சாம்பாரில் போடப்படும்!!

பண்ருட்டி என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது முந்திரி மரங்களும், பிஞ்சு பிஞ்சாய் தொங்கும் பலாமரங்களும்தான். அதுவும் அந்த செம்மண் கலர் இருபுறங்களிலும் பார்க்க மிகவும் பிடிக்கும்!போர்வையால் மேலே போர்த்தி கட்டிலுக்கு கீழே வீடு விளையாட்டு விளையாடும் எனக்கு, கவிந்து பரவிக்கிடக்கும் முந்திரி மரங்களுக்குள்ளே வீடு விளையாட்டு விளையாட மிகவும் ஆசையாக இருக்கும்!ஆனால் ஆயா அங்கு பெரிய பாம்புகள் இருக்குமென்று சொல்வார்! சாலையின் இருபுறமும் இருக்கும் செம்மண் மழைக்குக் கரைந்து வித்தியாசாமான வடிவங்களில்ம் மேடுகளாக பள்ளங்களாக இருக்கும் – அதை ஒரு க்ராண்ட் கான்யனாக உருவகப்படுத்திக்கொள்வேன்! தண்ணீர் அரித்து ஓடியிருக்கும் குட்டி க்ராண்ட் கான்யன்!! அதுவும் பண்ருட்டியில் ஒரு இடத்தில் மகா கெட்ட வாசனையொன்று வரும்…அது வந்தால் முக்கை பொத்திக்கொண்டு வாயால் சுவாசிப்பேன்/அல்லது மூச்சை இழுத்துபிடித்துக்கொள்வேன்! அது ஒரு சாராய பேக்டரி – ஆனால் அது வந்துவிட்டால் வடலூர் நெருங்கிவிட்டது என்று அர்த்தம்! மழைநீர் தேங்கியிருக்கும் செம்மண் குழிகள் – வீடு விளையாட்டில் செங்கல்லை அரைத்து நாங்கள் வைக்கும் சாம்பார் வைப்பதை நினைவூட்டும்!! மண்ணைக்குவித்து அதன் தலையில் நீர் ஊற்றினால் அந்த இடம் ஈரமாகி குழிந்திருக்கும் – அதை கீழாக நோண்டிஎடுத்தால் அதுதான் இட்லி. உடனே விளையாட மனம் ஆயத்தமாகும்! இன்னும் ஒருமணி நேரமே..வடலூர் வந்துவிடும். நிலைகொள்ளாது அதன்பின் – ஆம்பூரில் கற்றுக்கொண்ட விளையாட்டுகளை வடலூரிலும், வடலூரில் கற்றுக்கொண்டதை ஆம்பூரிலும் அல்லவா பரிவர்த்தனம் செய்துக்கொண்டிருந்தேன்! எனக்கு தெரிந்த அரிய பெரிய வித்தைகளை பகிர்ந்துக்கொள்ள வேண்டிய கட்டத்துக்கு தள்ளப்பட்டிருப்பேன்!

உங்களை எங்கே விட்டேன்…சாராய பேக்டரி…இப்போது ரயிலே கேட் அருகில் வந்துவிட்டோமே!! அப்புறம் ஒரு பெரிய புளியமரம் ..அதனருகில், முகப்பில் டீ கடைகொண்ட குடிசை வீடுகள் – அதைத்தாண்டினால் பீங்கான்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் – அவை தொப்பியை கவிழ்த்து வைத்த வடிவில் இருக்கும்.மேலே சொரசொரப்பான பகுதி. அதை எங்குதான் உபயோகிப்பார்களென்று இன்றும் எனக்கு தெரியாது. அப்புறம் நீள வடிவில் குழாய்கள் – அவை நெய்வேலியிலிருந்து தண்ணீருக்காக. அதையடுத்து, சேஷசாயி பேப்பர் மில்ஸ். தொடர்ந்து, கடைகள் ஆரம்பிக்கும்.பெயர்கள் எல்லாமே பெரும்பாலும் வள்ளலார் என்றுதான் தொடங்கும்….வள்ளலார் காபி கடை, வள்ளலார் ஓட்டல்..வள்ளலார் சலூன்….பஸ் வந்ததுமே பிஞ்சு வெள்ளரிக்காய் எடுத்துக்கொண்டு மொய்க்க ஆரம்பித்துவிடுவர் மக்கள்…பஸ் கூடவே ஓடி வரும் அவர்கள் லாவகம் மிகுந்த வியத்தலுக்குரியது!! ஆனால் வாங்க மாட்டோம்…அதான் ஊர் வந்துவிட்டதே…மறக்காமல் செருப்பை மட்டிக்கொண்டு…இறங்கி நடந்தால்…

நான்குமுனைச் சாலை.வடலூரில் ஜனநெருக்கடி கொண்ட ஒரே சாலை. ஒரு புறம் பண்ருட்டி செல்ல, அதனெதிர் புறம் சிதம்பரம் செல்ல, அதன் பக்கத்தில் நெய்வேலி செல்ல,அதனெதிர்ல் கடலூர் செல்வதற்கு! இங்கும் கெஸ்ஸிங் விளையாட்டு ஒன்று நடக்கும் என் மனதிற்குள்! ஒவ்வொரு முறையும் இறங்கி்ய பின் ‘அந்த ரோடில் சென்றால் தான் வீடு வரும்’என்று நினைத்துக்கொண்டிருப்பேன்..ஆனால் அதில் சென்றால் வேறு யாராவது வீட்டுக்குத்தான் செல்லவேண்டிருந்திருக்கும்!சரி, அடுத்த முறை சரியாக கெஸ் செய்யவெண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது, ஆயா க்ருஷ்ணா பேக்கரியின் முன் நிற்பார் – ரஸ்க், ஜாம் பிஸ்கட், கேக், க்ரீம் அடைக்கப்பட்ட கோன் (மேலே செர்ரி இருக்குமே), பேக்கரிகளில் மட்டும் கிடைக்கும் பிஸ்கட் (அதனை எனது பெரியகுளத்து தோழி ‘சூஸ்பெரி’ என்பாள்) எல்லாம் இரண்டு செட்(பெரிய மாமாவீட்டுக்கு/சின்னமாமா வீட்டுக்கு) வாங்கியபின் பூக்காரம்மா ஸ்டாப்…தாமரை இலையில் வைத்து நூல்கட்டி கொடுப்பார். வாங்கியபின் நடக்க வேண்டும்..ஒரு கிமீ.ஆட்டோக்கள் அரிது…புளியமரங்களில் எண்கள் எழுதியிருக்க அதை எண்ணிக்கொண்டு லாம்ப் போஸ்ட் எங்கே வருகிறதென்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டே வந்தால் – ஆயாவை கண்டுக்கொண்ட ஒன்றிரண்டு பெரியவர்கள் , ‘இப்போதான் வர்றீங்களா, மக வயித்து பேத்தியா’என்று சில விசாரிப்புகள். கடந்து வந்தால் வீடு வந்திருக்கும். இருட்டவும் ஆரம்பித்திருக்கும்.

அப்புறம், (பெரிய/சின்ன) மாமா-அத்தை,தம்பி,புழு என்ற புகழேந்தி, கயலு, பஜ்ஜி என்ற விஜி, மகேஷ் எல்லாம் பார்த்தபின் சோர்வாவது ஒன்றாவது! ஒளிந்து பிடித்து,கோ கரண்ட், கல்லா மண்ணா என்று ஆட்டம் தொடங்கும். அப்புறம், யானை மேலே குதிரை மேலே சிங்கம் மேலே டூ கா…துபாய்லேர்ந்து துப்பாக்கி எடுத்துட்டு வந்து சுடுவேனென்றும், பம்பாய்லேர்ந்து பாம்பை உன் மேலே விடுவேன் என்றும் சிங்கப்பூர்லேர்ந்து சிங்கத்தை விட்டு கடிக்க விடுவேன்றும், ரஷ்யாலேர்ந்து ராக்கெட்டை உன் மேலே உடுவேன்றும் பெனாத்திக்கொண்டிருக்க அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் வந்து சேர….திரும்ப அதே ஜாலி,கலவரம்,கிலி்.. அதே டவாலி, பைகள் சகிதம்….பட்டுக்கோட்டை/பெரியார்/திருவள்ளுவர், பண்ருட்டி டூ திருக்கோவிலூர் டூ திருவண்ணாமலை டூ வேலூர் டூ ஆம்பூர்!!

Add a comment நவம்பர் 16, 2009

ஊ ஃபார் …

…ஊருக்குப் போறோம்!

“உங்களுக்கு எந்த ஊரு” என்று கேட்டால் உடனே சொல்லிவிட முடிவதில்லை. வடலூரில் இருக்கும் போது ஆம்பூர்காரியாகவும், ஆம்பூரில் இருக்கும் போது வடலூர்க்காரியாகவும் கொடைக்கானலில், இவையிரணடில் அந்த நேரத்தில் எது தூக்கலாக இருக்கிறதோ அந்த ஊர்க்காரியாகவும், பெங்களூரில் சென்னைக்காரியாகவும் இருந்த எனக்கு சட்டென நேரும் குழப்பமே அது! கல்லூரியில் எப்போதும் ஆம்பூர்க்காரியாகவும், வடலூரை(சுற்றியிருக்கும் கிராமங்களான நெய்வேலி, பண்ரூட்டி, விருத்தாசலம் ஊரைச்) சேர்ந்தவர்களை சந்தித்தால் வடலூர்க்காரியாகவும் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறேன். ஆயாவின் பூர்வீகம் கடலூராக இருந்தாலும் அவர்கள் செட்டிலானது வடலூரில்தான்.

”ஊருக்குப் போறோம்” என்ற வார்த்தைகள் சிறுவயதில் எனக்குள் ஏற்படுத்திய கொஞ்சம்ஜாலி, கொஞ்சம் கலவரம், கொஞ்சம் கிலி என்ற கலவையான உணர்வுகள்!!

வளர்ந்தபிறகு ”நான்ல்லாம் அந்த ஊருக்கு வரவே மாட்டேன்ப்பா, ஊரா அது” என்று முரண்டுபிடித்திருக்கிறேன். வடலூர் மேல் இவ்வளவு வெறுப்பு வர பெரிதான காரணங்களொன்றும் தேவையில்லை…ஆம்பூரிலிருந்து வடலூர் செல்ல ஆகும் நேரம் – ஒரு நாள்-பஸ்ஸில்! இப்போதல்ல, ஒரு இருபது வருடஙளுக்கு முன்னால்!- பை பாஸ் ரோடுகளோ,ஹை வேக்களோ வந்திராத காலம்!! அதுவும், ஆயா பென்ஷன் வாங்க இரண்டு மாதங்களுக்கொரு முறை நெய்வேலி ட்ரெஷரி அல்லது வடலூர் செல்ல வேண்டும். ஆயாவோடு நானும்! எனது நான்கு வயதிலிருந்து எட்டாம் வகுப்பு வரை இந்தப்பயணம் தொடர்ந்தது. ஆம்பூரிலிருந்து வேலூர், வேலூரிலிருந்து திருவண்ணாமலை, திருவண்ணாமலையிலிருந்து திருக்கோவிலூர், திருக்கோவிலிருந்து பண்ருட்டி, பண்ருட்டிலிருந்து வடலூர்!!

காலை ஆறு அல்லது ஆறரைக்கு கிளம்பினோமானால் (அன்று) மாலையே ஆறரைக்கு வடலூர் சென்றுவிடலாம்.ஆயாவின் ட்ரேடு மார்க் ஒரு டவாலி பை. கட்டங்கள் போட்ட கதர் துணியில் ஜிப் தைத்த டவாலிப் பை. பார்த்த மாத்திரத்திலேயே நான் வெறுக்கும் வஸ்து அது!! அதில் தண்ணீர் பாட்டில், டிக்கெட்டிற்கான காசு கொண்ட வள்ளி விலாஸ் பர்ஸ், முகம் துடைக்க சிறு வெள்ளைத் துண்டுகள் அப்புறம் எனக்கு பாலித்தீன் கவர்கள், பழைய செய்தித்தாட்கள் – பஸ்ஸில் ஏறி அமர்ந்துவிட்டால் வயிறு பிரட்டுமே அதற்கு. எப்படியும் ஜன்னல் சீட் எனக்குத்தான். அதுவும் அந்த டீசல் வாசம் வந்துவிட்டாலோ…போச்!!ஆனால் எவ்வளவுதான் டயர்டு ஆனாலும் ஊருக்குப் போனதும் விளையாட ஆரம்பித்தபின் டயர்டாவது ஒன்றாவது!! சோர்வு என்பதைவிட நாள் முழுவதும் பஸ்ஸில் செல்வது – அதுவும் விளையாட முடியாமல் ஒன்றும் செய்யமுடியாமல் ஒரு சீட்டிலே முடக்கப்பட்டிருந்த உணர்வே அது என்பது இப்போது புரிகிறது! ஆனாலும் ஊருக்குப் போவது ஜாலியாக இருக்கும். பட்டுக்கோட்டை, தந்தை பெரியார், திருவள்ளுவர் என்று பலவித பஸ் அனுபவங்களுடன் வடஆற்காடு மாவட்டத்திற்கும் தென்னாற்காடு மாவட்டத்திற்குமான பயணம் அது!

ஆம்பூர் டூ வேலூர் தூக்க கலக்கத்தில் போய்விடும். வேலூரில் வேறு பஸ் ஸ்டாண்ட் மாறி செல்ல வேண்டும். அதற்குள் ஆயா எனக்கு கோகுலம், சாத்துக்குடி,பிஸ்கட் எல்லாம் ஸ்பான்ஸர் செய்வார். ஆனால், பஸ்ஸில் படிக்கக்கூடாது – கண் கெட்டுவிடும்! நடுவில் இருக்கும் 16 வண்ணப்படக்தையை மட்டும் படிக்கிறேனென்று படித்து விட்டு அப்புறம் வேடிக்கைதான். பாயிண்ட் டூ பாயின்ட் எல்லாம் வந்திராத காலம்! ஊருக்கு ஊர் நின்று செல்லும் பஸ்ஸாக இருக்கும் – வேலூர் டூ திருவண்ணாமலை ஜாலியாக போகும் – காலை நேரம் வெயில் அவ்வளவாக இருக்காது! திருவண்ணாமலையில் நல்லவேளை ஒரே பஸ் ஸ்டாண்டுதான். எப்படியும் ஆயாவுக்கு கண்டக்டரும் டிரைவரும் ஃப்ரெண்ட் ஆகிவிடுவார்கள். கிளம்புமிடத்திலிருந்து சேரும் இடம் வரை செல்பவர்களை மிகுந்த மரியாதையுடன் நடத்துவார் நடத்துனர்! ஆயாவும் அவர்பங்குக்கு, உறவினர் ஒருவர் பட்டுக்கோட்டையில் டிரைவராக பணியாற்றுவதைச் சொல்லுவார். ஒரு சில டிரைவர்கள் ஆயாவை நினைவிலும் வைத்திருப்பர்!! அவர்கள் சாப்பிட, டீ குடிக்க நிறுத்தும்போது எங்களுக்கும் சொல்வார்கள். ஆயா மறக்காமல் திருவண்ணாமலையில் பஸ் ஸ்டாண்டின் எதிரி்லிருக்கும் ஒரு கடையில் பக்கோடா வாங்குவார்! பெரிய மாமாவுக்கு அந்த பக்கோடாவென்றால் இஷ்டமாம்!நிறுத்தத்திலிருந்து பேருந்தை உடனே கிளப்பி விட மாட்டார் டிரைவர், சில நிமிட இடைவெளிகளில் மூன்று தடவை கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்துவார், ஹார்ன் சத்தத்துடன்.

குண்டும் குழியுமான ரோடில் குதித்து குதித்து செல்லும் பஸ் – சடன் ப்ரேக் போட்டால் முன்நெற்றி சென்று இடித்துக்கொள்ள இருக்கும் நேரத்தில் பின்னால் ஒரு டமார் – நாம்தான்
பின்னால் சென்றிருப்போம். முன்ஜாக்கிரதை காரர்கள் முன்சீட்டின் கம்பியை பிடித்துக்கொண்டு சீட்டின் நுனியில் வந்திருப்பார்கள்! ஜன்னல்களின் மேலே வெள்ளை நிற பெயிண்டில் ”கரம் சிரம் புறம் நீட்டாதீர்”. “யாகாவாராயினும் நாகாக்க”, ”தீயினாற் சுட்ட புண்”டிரைவரின் சீட் பின்னால் இருக்கும். திருவள்ளுவர் பஸ்களில் முதலுதவி பெட்டி வைத்திருப்பார்கள். அதனால் அதற்கு மேலே திருக்குறளின் இரண்டாம் வரி தெரியாதவாறு எழுதி வைத்திருப்பார்கள். இந்த பஸ்களின் சீட்கள் உயர்ந்திருக்கும். குஷன் சீட்கள் – தலை சாய்த்துக்கொள்ள வசதியாக. ஆனால் எனக்கு அது வசதியாகவே இருந்ததில்லை. சீட்களுக்கு நடுவே கட்டைகள் இருக்கும்.பட்டுக்கோட்டை, தந்தை பெரியார் பஸ்களில் சாதாரண சீட்கள்..பெரும்பாலும் பஸ்ஸின் நடுவில் கம்பி இருக்கும் சீட் அருகில் தான் உட்காருவோமென்று நினைக்கிறேன் அல்லது அங்கே உட்காரக்கூடாதோ ஏதோ ஒன்று நினைவில்லை.

ஆனால், சீட்டை தேர்ந்தெடுப்பதில் அந்தக் கம்பி பெரும்பங்கு வகித்தது! அதுவும் முன்சீட்டில் உட்கார்ந்தாலும் உட்காரலாம், பின்சீட் கண்டிப்பாகக் கூடாது, தூக்கி தூக்கிப் போடுமே! ஆனால் அந்த பம்ப்பி ரைட்டிற்கு மனதளவில் ஆசைப்பட்டிருக்கிறேன், அந்த வயதில்! சீட்டிலிருந்து முன்னால் பார்த்தால் தூரத்தில் ரோடு மேடாக தெரியும். பள்ளத்திலிருந்து இறங்குவது எனக்கு சறுக்குவது போன்ற உணர்வை தருமாதலால் காத்துக்கொண்டிருப்பேன், ஆனால் அது உண்மையில் மேடு அல்ல! மேலும்,ரோடின் இருபுறமும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல்வெளிகள், மேலே பறக்கும் வெள்ளை நிற பறவைகள் (கொக்கா அல்லது நாரையா?!) சமயங்களில் ஜன்னலை தாண்டி பஸ்ஸில் எட்டிப்பார்த்து செல்லும் ரோடில் வளர்ந்திருக்கும் நீளமான சூரை முட்செடிகள்! திருவண்ணாமலையில் மதிய உணவு முடிந்தபின்னர், ‘எப்போதடா ஆற்றின் நடுவில் கல்லின் மேலிருக்கும் ஒரு கோயில் வருமெ’ன்று காத்துக்கொண்டிருப்பேன்.

ஏனென்றால், எனக்கு அது அடுத்த மைல்கல் – அந்த ஊர் திருக்கோவிலூர்.அந்த கோவிலில் காவி வண்ணமும் சுண்ணாம்பும் கலந்து பட்டையாக அடித்து வைத்திருப்பார்கள். எப்படி அதன் மேல் ஏறுவார்களென்று வியப்பாக இருக்கும்! மேலும் ரோட் நடுவில் கம்பு மற்றும் கேழ்வரகு போன்ற தானியங்களை கொட்டி வைத்திருப்பார்கள். ரோடிற்குள் தள்ளிவிட ஓடிவரும் முக்காடிட்ட பெண்கள், பழுப்பேறிய வேட்டியை உயர்த்தி கட்டிக்கொண்டு தலையில் துண்டை கட்டியிருக்கும் ஆண்கள், பஸ்ஸுக்கு டாடா காட்டும் குட்டிப்பசங்கள் என்று நல்ல காட்சிதான். ஆனால், என்ன, தூசி கண்ணில் விழுந்துவிட்டால்தான் கஷ்டம்! மழை வந்தால் அது தனிக்கதை.அடிக்கும் சாரலை தடுக்க துருபிடித்த ஷட்டரை மூட முடியாது – சட்டென சில கைகள் உதவிக்கு நீளும்.

திருக்கோவிலூர் கொஞ்சம் காய்ந்த ஊர் என்ற நினைப்பு எனக்கு. தண்ணீர் இல்லாத மணல் தெரியும் வறண்ட ஆறு. மரங்கள் இல்லாத குன்றுகள்.புழுதி பறக்கும் சாலைகள் – கண்கள் இடுங்கி ,உழைத்து உழைத்து சுருக்கங்கள் விழுந்த வந்த ஒல்லியான மக்கள் ! மேலும் திருக்கோவிலூர் என்றால் உடனே நினைவுக்கு வருவது வாழைப்பழ சீப்பை எடுத்துக்கொண்டு பஸ் புறப்பட்டபின்னரும் கூடவே ஓடிவரும் மக்கள்!!’நான் படிச்சு பெரிய ஆளாகி அவங்களுக்கெல்லாம் ஹெல்ப் பண்ணுவேன்’ என்று எனக்குள் நானே நினைத்துக்கொண்டது நினைவோடே நின்றுவிட்டது!!

அடுத்து – பண்ருட்டி! அதைப்பற்றி அடுத்த இடுகையில் தொடர்கிறேன்.

Add a comment நவம்பர் 15, 2009

இன்று ஒரு தகவல்!

(Publishing this @ 7.40AM in fond memories of Thenkachi swaminathan!)

வீட்டில் ஒரு ஃபிலிப்ஸ் ட்ரான்சிஸ்டர் இருந்தது.சமையலறை அலமாரியின் மூலைதான் நிரந்தர இடம் அதற்கு. காலையில் எழுந்ததும் அதை உயிர்ப்பித்து விடுவார் பெரிம்மா. மிக மெல்லிதாகத்தான் சத்தத்தில்.அது ஒரு ஆல் இண்டியா ரேடியோவாக மட்டுமில்லை, ஒரு கடிகாரமாகவும் எங்களுக்கு இருந்தது. பக்திமாலை, ‘செய்திகள் வாசிப்பது சரோஜ்…’, விவசாயக் குறிப்புகள், பிரில் இங்க், சூர்யா பல்பு இன்னபிற. ‘இன்று ஒரு தகவல்’ வந்துவிட்டால் புத்தகத்தை மூடிவிட்டு ஹாலுக்கு வந்துவிடலாம்.

அரிவாள்மனையில் காய்கள் அரிந்துக்கொண்டிருக்கும் ஆயா வெட்டுவதை நிறுத்தியிருப்பார். பெரிம்மா, குக்கர் விசில் வந்துவிடாமலிருக்க ‘சிம்’மில் வைப்பார். எல்லோரும் புன்னகையோடு கேட்போம். ஐந்து நிமிடம். கடைசியில், சிரிப்புக்கதை முடிந்தவுடன் ‘எல்லாம் நல்லபடியா முடிஞ்சது’ பாவனையோடு நகர்வோம். சினிமா பாடல்கள் (‘ராஜா வாடா சிங்கக்குட்டி’ என்ற பாடல்தான் அடிக்கடி !!) ஒலிக்கத்துவங்கும்போது குளித்து ரெடியாக வேண்டும். 8.10 க்கு ஆங்கில செய்திகள் வரும்போது சாப்பிட உட்கார வேண்டும். இப்படி ஒரு பயாலஜிக்கல் கடிகாரத்தை எங்கள் வீட்டில் அனைவருக்கும் பொருத்தி இருந்தது ஆல் இந்திய ரேடியோவும், பெஞ்ச்மார்க்காக ‘இன்று ஒரு தகவலும்’ நிகழ்ச்சியும்.

சில தமிழாசிரியர்கள் ‘தென்கச்சி இன்று என்ன சொன்னார்’ என்பதை சொல்ல வைக்குமளவிற்கு பள்ளிக்கூடத்திலும் ‘ இன்று ஒரு தகவல்’ நிறைந்திருந்தது. சில சமயங்களில் மதிய உணவு இடைவேளையின்போது ஆசிரியர்கள் ‘இன்று ஒரு தகவலை’யும் பரிமாறிக்கொள்வார்கள். சிறு நகைச்சுவைக் கதைகள், கொஞ்சம் புள்ளிவிவரங்கள், பொன்மொழிகள் எல்லாம் சரிவிகிததில் கலந்தால் பேச்சுப்போட்டியில் பரிசு கட்டாயம் உண்டு என்ற சூத்திரத்தை அப்போது மிகவும் நம்பிக்கொண்டிருந்தேன். அதற்கு, ‘இன்று ஒரு தகவலி’ல் வரும் கதைகள் மிகப்பெரும் உதவியாக இருந்தது. எட்டாவது படிக்கும்போது ‘இன்று ஒரு தகவல்’ தொகுப்புகள் மொத்தமாகக் கிடைத்தது. பிறகென்ன…தமிழ்சினிமா இயக்குனர்களுக்குக் அயல்நாட்டு டிவிடிகள் மொத்தமாகக் கிடைத்தது போல மகிழ்ச்சிதான்! ஆண்டுவிழாவில் பரிசுகள் கிடைத்ததும், ‘தென்கச்சி கோ சுவாமிநாதனுக்கு’ கடிதம் எழுதினால் என்ன என்று விபரீத எண்ணம் தோன்றியது.

அநேகமாக, அவர் பேசும்போது, ‘இப்படித்தான் ஒரு நேயர் கடிதம் எழுதியிருந்தார்’ என்றுச் சொல்வதைக் கருத்தில் கொண்டு, ‘என் கடிதத்தையும் ஒருநாள் சொல்லக்கூடுமெ’ன்ற (நப்)ஆசையும் காரணமாக இருக்கலாம். புத்தகத்தில், ஆசிரியரின் முகவரிக்கு பதிப்பகத்தை அணுகவும் என்று எழுதியிருந்தது. பதிப்பகத்திற்கு ஒரு கடிதம். அடுத்து தென்கச்சிக்குக் கடிதம். ஒரு வாரத்திற்குப் பின் எதுவும் வரவில்லை. ‘தகவலிலும்’ சொல்லவில்லை. எனக்கும் மறந்துவிட்டது.

ஓரிரு மாதங்களுக்குப் பின், ஆயா பிரிக்கப்பட்ட ஒரு என்வெலப்பைக் கொடுத்தார். ஒரு பக்கத்தாளில் எழுதப்பட்டிருந்தது….என்ன எழுதியிருந்ததென்று சரியாக நினைவில்லை…ஆனால், ‘நன்றாக படிக்கவும் என்றும், சந்தனமுல்லை என்ற பெயர் மிக அழகாகவும் வித்தியாசமான பெயராக இருக்கிறதெனவும், பெயருக்கேற்றாற்போல வாசனையோடு திகழ வேண்டுமெனவும்’ பொருள்பட எழுதியிருந்தார். கூட ஒரு புகைப்படம். பார்த்ததும் குரலுக்கும் உருவத்திற்கு சம்பந்தம் இல்லையே என்றுதான் தோன்றியது – பூர்ணம் விசுவநாதன் போலல்லவா கற்பனை செய்திருந்தேன்!

பெரிம்மாதான், படைப்புகளை ரசிப்பதோடு, வாசிப்பதோடு நிறுத்தக் கற்றுக்கொள்ள வேண்டுமெனவும், இதுபோல கடிதங்கள், தொடர்புகள் நமக்கு அவசியமற்றது எனவும் சொன்னார். பள்ளியில் நிறைய பசங்கள் ரஜினிக்கும், கமலுக்கும் கடிதங்கள் எழுதி ஃபோட்டோக்கள் வாங்குவதை பெரிம்மா அறிந்துமிருந்தார். அதுதான் ஒரு பிரபலத்திற்கு நான் எழுதிய முதலும் கடைசியுமானக் கடிதம்! இந்தமுறை ஊருக்குபோனால் தேடிப்பார்க்க வேண்டும் – நோட்டுகளின் மத்தியில் அல்லது நண்பர்களின் கடிதங்களுக்கிடையில் கிடைக்கக் கூடும்!

எங்கள் நாட்களை சுவாரசியமானதாக, எங்கள் காலைகளை லேசானதாக மாற்றினதற்கு என்றும் நன்றி! போய்வாருங்கள், தங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்!!

ஆம்பூரில் மழையின் காரணமாக ஆற்றின் ஓரத்தில் வசித்துவந்த குடும்பங்களில் உயிரிழப்புகள் (ஏறத்தாழ 20 பேர்) ஏற்பட்டிருக்கிறது – அதுவும் தூங்கிக்கொண்டிருக்கும்போது நடு இரவில் திடீரென வந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவது நினைத்துப் பார்க்க முடியாததாக இருக்கிறது! அவர்களுக்கு என் அஞ்சலிகள்! அவர்தம் குடும்பத்தினருக்கு ஆறுதலும், மனவலிமையும் இறைவன் தரட்டும்!!

Add a comment செப்ரெம்பர் 17, 2009

ப்ரியா B.E.,

ஆச்சி, ப்ரியா வந்துருக்கும்மா, நம்ம ஸ்கூல்லதான் ட்ரெயினிங், ரெண்டுநாளா!! – அலுவலக்த்தில் இருக்கும்போது பெரிம்மாவின் தொலைபேசி அழைப்பு!

“எந்த ப்ரியா, பெரிம்மா?”

“இதோ நீயே பேசு, உன்கிட்டே பேசணும்னு சொல்லுச்சு” – பெரிம்மா தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

”எந்தப் ப்ரியா, பெரிம்மா, சொல்லிட்டுக் கொடுங்க?” – பெரிம்மா காதில் வாங்கிக்கொண்ட மாதிரியேத் தெரியவில்லை!

”ஆச்சி, எப்படி இருக்கே, நல்லா இருக்கியா?” – மறுமுனையில் ப்ரியா!

”நல்லா இருக்கேன், நீ எப்படி இருக்கே” – எந்த ப்ரியாவென்றேத் தெரியாமல் பேச ஆரம்பித்தேன்!

என்னிடம் இதுதான் பிரச்சினை. ஒன்று மறதி. இன்னொன்று ஒரே பெயரில் பல நண்பர்கள் இருப்பது! ப்ரியா என்று சொல்வீர்களானால் பல ப்ரியாக்கள் பரிச்சயம். ஹவுசிங் போர்ட் ப்ரியா, பி செக்ஷன் ப்ரியா, தோழியின் தங்கை ப்ரியா, கல்லூரியில் இரண்டு ப்ரியாக்கள்.கவிதா என்று சொல்வீர்களானால் ஐந்துக் கவிதாக்களைத் தெரியும். எஸ்.கவிதா,டி.கவிதா, சீனியர் கவிதா – இவர்கள் பள்ளிக்கூட கவிதாக்கள். கல்லூரியில் ஒரு கவிதா. இப்போது, வலையுலகில் ஒரு கவிதா. அனு எனில் இரண்டு அனுக்கள். ஹேமா என்றால் மூன்று ஹேமா. (ஒரேயொரு ஞானசௌந்தரிதான்!). கெஜலஷ்மிகள்,முத்துலஷ்மிகள்,சுஜாக்கள், வினிதாக்கள், மஞ்சுக்கள், கல்பனாக்கள்,ஜெயஸ்ரீக்கள். இவர்கள் எல்லாரையுமே பெரிம்மாவுக்கும் தெரியும். இவர்கள் எல்லோருக்குமே பெரிம்மாவையும் தெரியும்!! இந்தப் பிரியா இதில் எந்த ப்ரியா? கொடுமை என்னவெனில் மிகவும் நெருக்கமான அல்லது சரியான ப்ரியா மட்டும் உரிய நேரத்தில் நினைவில் எட்டமாட்டார்கள்!

இங்கே, ப்ரியா போனில் பேசிக்கொண்டே இருந்தாள். இல்லையில்லை…கேட்டுக்கொண்டே இருந்தாள்.

குரலிலும் அடையாளம் பிடிபடவில்லை! (‘உன் குரல், சுப்பு-ருக்குலே வர ருக்கு குரல் மாதிரி இருக்கு’ என்று எனக்குச் சொல்லிக் கொண்டிருந்தவர்கள், இப்போதெல்லாம் ‘உன் குரல் சுப்பு குரல் மாதிரி இருக்கு’ என்றுச் சொல்லும்போது, ப்ரியாவின் குரலில் மட்டும் காலம் எந்த அடையாளத்தை விட்டிருக்கும்?!)

“உன் பொண்ணு ஃபோட்டோ பார்த்தேன், பெரிம்மா ஃபோன்லே காட்டினாங்க, என்ன படிக்கிறா?”

…..

“எனக்கு ரெண்டு பையன். பெரிய பையன் செகண்ட் ஸ்டாண்டர்டு படிக்கறான், மணவாளம்-லதான் வேலை செய்றேன்”

ஓ…தெரிந்துவிட்டது! இந்த ப்ரியா! என்ன சொல்வது அவளைப் பற்றி!! படிப்பு என்றால் ப்ரியா. ப்ரியா என்றால் படிப்பு! எனது நெருக்கமான தோழி!! ‘ஒல்லி ப்ரியா பல்லி ப்ரியா’,’கண்ணாடிப் ப்ரியா’ என்றும் அவளுக்குப் பெயர் இருந்தது! பத்தாவதிலிருந்து ஒன்றாகப் படித்தோம்.அதற்கு முன்பாக வேறு செக்‌ஷனிலிருந்தாபோதே அறிமுகம். இருவரும் இருவரின் வீட்டிற்கும் சென்றிருக்கிறோம். இருவருக்கும் இருவரது வீட்டினரையும் தெரியும். ப்ரியாவின் அப்பாவும் ஆசிரியர். இருவரும் அவரவர் தம்பிகளைப் பற்றிப் பேசிப் பேசி புண்பட்ட மனதை ஆற்றியிருகிறோம். இயற்பியலில் கூடுதல் ஆர்வம் அவளுக்கு!

‘ப்ரியா கண்டிப்பாக பிஈ’தான் – ‘ரேணுகா கல்யாணம்’ – ‘சபீனா, ஆர்ட்ஸ் காலேஜ்’ – என்று எல்லோரும் பக்கா எதிர்காலத் திட்டத்துடன்தான் இருந்தோம்! +2 மதிப்பெண்களும் வந்தது. எதிர்பார்த்தது போலவே ப்ரியாவிற்கு நல்ல மதிப்பெண்கள். கண்டிப்பாக, மெரிட்டிலேயே பிஈ கிடைக்கும். ஒருநாள் காலையில் ப்ரியாவின் அப்பா வீட்டிற்கு வந்தார். Bsc இயற்பியல் படிக்க வைக்கப் போவதாகச் சொன்னார். அதிகம் படித்தால் அவர்கள் சாதியில் மாப்பிள்ளைக் கிடைப்பது கடினம் என்றார். சேலம் சாரதாவில் பிஎஸ்சி படித்தாள் ப்ரியா. நானும் வேறு கல்லூரிக்கு, ஹாஸ்டலுக்குச் சென்றுவிட்டேன். முதல் செமஸ்டர் வரை எல்லோரும் எல்லோருக்கும் கடிதம் எழுதிக்கொண்டோம், கல்லூரி பிடிக்கவில்லையென்றும், பள்ளிதான் நினைவில் நீங்காதிருக்கிறதென்றும் ஒருவரையொருவர் பார்க்கமுடியாமல் இருப்பது மிகவும் கடினமாக இருக்கிறதென்றும், திரும்ப பள்ளிக்கே சென்றுவிடலாமாயென்றும்! அதன்பின், தொடர்புகள் நூலிழையில் இருந்தன!

நான் MCA நுழைவுத்தேர்வுக்கு படித்துக்கொண்டிருக்கையில், கையில் திருமண அழைப்பிதழோடு வீட்டிற்கு வந்தாள் ப்ரியா! பக்கத்து ஊர்காரர். பிஎட் படித்திருக்கிறார். வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. நல்ல நிலபுலன்கள். ஏழு வயது வித்தியாசம். நான் முதல் வருட விடுமுறைக்கு வந்தபோது ப்ரியாவிற்கு குழந்தை பிறந்திருந்தது. சில நாட்களில், குழந்தை இறந்துவிட்டதாக சபினா சொன்னாள். செய்தித் தெரிந்ததும் ப்ரியாவுடன் பேசினேன்.

“பிறந்து கண்ணுக் கூட முழிக்கலைப்பா, கையிலே வைச்சிருந்தேன். அது செத்துப் போகப் போகுதுன்னு தெரிஞ்சுதான் கையிலே வச்சிருந்தேன் போல” என்றாள். ஒரு நொடியில் ப்ரியா முற்றிலும் வேறாகத் தெரிந்தாள்!! எங்களுடன் கிண்டலடித்துக்கொண்டு, விளையாட்டுத்தனமாகத் திரிந்தவளாகத்தான் ப்ரியாவை அறிந்திருந்தேன். ப்ரியா, இப்படியெல்லாம் பேசுவாளென்று நானறிந்திருக்கவில்லை. திடீரென ப்ரியா வேறு தளத்திற்கு சென்றுவிட்டாற் போலிருந்தது! (அப்போதெல்லாம் தாய்மை உணர்வுகள் புரிந்திருக்கவில்லை!)

நாங்கள் சிறுவயதில் ஒரு விளையாட்டு விளையாடுவோம். மூன்றாவது, நான்காவது படிக்கும்போது! அம்மா-அப்பா விளையாட்டு. அவரவர் பொம்மைகளைக் கொண்டு வரவேண்டும். யாராவது சற்றே பெரியச் சிறுமிதான் எங்களை அதட்டிக்கொண்டிருப்பாள் – அவள் பேச்சை நாங்களும் கேட்போம்! ‘ஹாஸ்பிடல் செல்வது – ஆபரேஷன் நடக்கும் – குழந்தை வரும்’ – அப்புறம் குழந்தைப் பொம்மையை குளிப்பாட்டி சடை போட்டு என்று விளையாட்டு! ப்ரியாவிடம் பேசிக்கொண்டிருந்த போது ஏனோ அந்த விளையாட்டை அடிக்கடி நினைத்துக் கொண்டேன்!

ப்ரியாவிற்கு எத்தனையோ கனவுகள் இருந்திருக்கும்!! இருந்ததாவென்றுத் தெரியவில்லை..ஆனால் அவள் அம்மா-அப்பா சொன்னதைக் கேட்கும் பெண்ணாக இருந்தாள். அவளுக்கென்று தனிப்பட்ட விருப்பங்கள் இருந்திருக்கும்! பிஈ படிக்க – ஆபிஸிற்குச் செல்ல – ‘இந்த டீச்சர் வேலை போர்ப்பா, நான் டீச்சராக மாட்டேன்’ என்பதாக!! ஒருவேளை ப்ரியாவிற்கு அவளது வாழ்க்கையின் தீர்மானங்களை எடுக்கும் உரிமைகள் இருந்திருந்தால்?!!

ப்ரியா அந்த முடிவுகளை விரும்பி ஏற்றுக் கொண்டாளாவென்றுத் தெரியவில்லை.

ஆனால், அதற்குப் பின் பிஎட் படித்தாள். ஊரிலேயே ஒரு மேனேஜ்மென்ட் பள்ளியில் ஏழாவது/எட்டாவது வகுப்பிற்கு ஆசிரியராக இருக்கிறாள். இதுவும் அவளது விருப்பமாக இருந்ததாவென்றுத் தெரியாது, ஏனெனில் படிக்கும்போது நாங்கள் பேசிக்கொள்வோம், “நான் டீச்சர் வேலைக்கு மட்டும் போக மாட்டேன்ப்பா!”.

ப்ரியாவை நேரில் சந்திக்க வாய்த்தால் கண்டிப்பாகக் கேட்கவேண்டும்.

“ஏன் ப்ரியா?, ஏன் நீ பிஎஸ்சி படிக்கமாட்டேன்னு சொல்லலை? ஏன் பிஈதான் படிப்பேன்னு அடம் பிடிக்கலை? ஏன் டீச்சர் ஆக மாட்டேன்னு சொல்லலை? ஏன் ப்ரியா?!!”

குறிப்பு: இது ஆசிரியர் தினத்துக்காக எழுதியது. ஏதோவொரு இனம் புரியாத உணர்வு அன்று வெளியிட தடுத்தது!

Add a comment செப்ரெம்பர் 10, 2009

சுதா கான்வெண்ட்-லிருந்து ஒரு சிறுமி!

பொதுவா, நம்ம ஊர்லே ஒன்பதாவது முடிச்சுட்டீங்கன்னா, ‘நீங்க உங்களுக்குச் சொந்தம் இல்ல’ன்னு தீர்மானமே பண்ணிக்கலாம்! ஏன்னா அடுத்தது பப்ளிக் எக்சாம் ஆச்சே! காலையிலே ட்யூஷன், சாயங்காலம் ட்யூஷன், சனி, ஞாயிறு ஸ்பெஷல் கிளாஸ்! முழுபரிட்சை லீவும் கிடையாது…அடுத்த வருஷத்துக்கானதை ஆரம்பிச்சுடுவாங்களே! வீட்டிலே, ஸ்கூல்ல கொடுக்கற டென்ஷனில் பாதியாவது கொடுப்பாங்களே!!

நாம கொஞ்சூண்டு எதிர்ப்புக் குரல் கொடுத்தாப் போதும், “உன் நல்லதுக்குத்தான் சொல்றோம், இப்போ தெரியாது இதோட அருமை…இந்த வருஷம் கஷ்டப்படப் போறே..அடுத்த வருஷம் காலேஜ்லே போய், என்ன படிக்கவா போறே…எப்படியும் கிடையாது…அதை நினைச்சுக்கிட்டாவது இப்போ ஒழுங்கா படி”!! ன்னு ஒரு குரல் வரும்..அப்புறம் என்ன கப்சிப் தான்!!

நாமளும் இதை நம்பி, ‘சரி, காலேஜ்னா ரொம்ப ஜாலியாயிருக்கும் போல, படிக்க வேண்டாம், அங்கெல்லாமா, இப்படி மன்த்லி் டெஸ்ட், டெர்ம் டெஸ்ட்-னெல்லாம் வைப்பாங்க? அதெல்லாம் இருக்காது – அப்படி, இப்படின்னு ஏகப்பட்ட கனவுகளோட காலேஜில் அடியெடுத்து வைச்சா…தான் தெரியும்..அங்கே மன்த்லி டெஸ்ட் கிடையாது…விக்லி டெஸ்ட் – அப்புறம் யூனிட் டெஸ்ட் – அதைத்தாண்டி சர்ப்ரைஸ் டெஸ்ட் -ல்லாம் இருக்கும்னு!! ஸ்கூலைவிட அதிகமாக டெஸ்ட் எழுதின இடம் கல்லூரியாகத்தான் இருந்தது! கனவுகளில் கூட நிரம்பி வழிந்தன சிண்டாக்ஸும் செமான்டிக்ஸூம்!!தூக்கத்தில் கேட்டாலும் சொல்லக் கூடிய அளவுக்கு மனனமாகியிருந்தன – அல்காரிதங்கள்!

இதுக்கெல்லாம் காரணம் Ms.A – நாங்க மட்டுமில்லை, பிஜி மாணவர்களும் நடுநடுங்கும் ஒரு மேம்! டெரர் மேம்! இவங்களை மாதிரி நடிச்சு காட்டறதுதான் ஹாஸ்டல்லே பொழுதுபோக்கா இருந்துச்சு! எப்படியெல்லாம் கேள்வி கேட்கலாம்னு ரிசர்ச் பண்ணிட்டு வருவாங்களோன்னு நாங்க நினைக்கற அளவுக்கு மடக்கி மடக்கி கேட்பாங்க!! , TNPCEE எக்சாம்லே, ஒரு எறும்பைப் பிடிச்சு, அது எங்கே போய் நிக்குதோ, அதுதான் ஆப்ஷன்னு பென்சிலால தீட்டின எங்களை இப்படியெல்லாம் அடிச்சா தாங்குவோமா?!!

படிக்காத பசங்களுக்கெல்லாம் நான்தான் கேங் லீடர்ன்னு என்னைப் பத்தி ஒரு நினைப்பு வேற இவங்க மனசுலே இருந்துச்சு!! (ஏன்னா, இன்னைக்கு டெஸ்ட் எழுதலை, இன்னொரு நாள் வைச்சிக்கலாம்ன்னு சொல்றதுக்கு நாட்டாமையா நானும், தமிழ்செல்வியும்தான் போவோம்!) அதனாலே, எனக்கு மட்டும் எப்போவும் ஒரு ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் இருக்கும்…படத்துலேல்லாம் தாதாங்க சொல்வாங்க இல்லையா..’கட்டம் கட்டிட்டேன்’/ஸ்கெட்ச் போட்டுட்டேன்னு..கிட்டதட்ட அது மாதிரிதான்!!

ஒரு செமஸ்டர்லே எங்களுக்கு ஆரக்கிள் 8i & VB (இப்போவும் இந்த VB இருக்கா?!! என்ன ஒரு க்ரேஸ் இருந்துச்சு…இந்த VB-க்கு!!). நாங்க எல்லாம் VBயோட அழகிலே மயங்கி ஆரக்கிளை விட்டுட்டோம். ரெக்கார்ட் நோட் ரெடியாகலை. அப்போதான், சுபத்திராவுக்கு ஐடியா வந்துச்சு..நாம லேப்லே ‘நைட் ஸ்டே’ செஞ்சு ஓவர் நைட்லே எல்லா பிரிண்ட் அவுட் எடுத்தா என்ன?!! உடனே நாங்க ஐவர் அணி ரெடி ஆனோம்…’ஹாஸ்டல் மாணவர்கள் கொஞ்சம் அதிக நேரம் லேப்லே ஸ்டே பண்ணலாம்’னு ஒரு எழுதப்படாத சட்டம் இருந்துச்சு!

எட்டு மணிக்குள்ள ப்ரோக்ராமெல்லாம் அடிச்சு முடிச்சாச்சு – லதாவும், மசூதாவும் போய் பரோட்டா வாங்கிட்டு வந்தாங்க – சாப்பிட்டுட்டு, கடகடன்னு சுடச்சுட பிரிண்ட் அவுட்! எங்க டே ஸ்காலர் ப்ரெண்ட்ஸ்க்கும் சேர்த்து எடுத்தோம். அலைன்மெண்ட் – ஃபார்மேட்- பிரச்சினைகளைத் தாண்டி எல்லோருடையதும் தனித்துவமா இருக்கிற மாதிரி பார்த்துக்கிட்டோம்!! யாருக்கிட்டேயும் பர்மிஷன் கேக்கலையே-ன்னு நாங்க யாருமே யோசிக்கலை! எல்லோருக்கும், நாளைக்கு ரிப்போர்ட்டை ஃபைல் பண்ணிடலாங்கற எண்ணமும், ‘நம்ம கடமையை மேம் மெச்சுவாங்க’ன்ற எண்ணமும்தான் மேலோங்கி இருந்தது!!

விடியற்காலையிலே, விடுதிக்குப் போய் சாப்பிட்டுட்டு, களைப்புத் தீர உறங்கிட்டு மதியமா டிபார்ட்மெண்ட்டுக்குப் போனோம்! லேபை தாண்டித்தான் கிளாஸ் ரூம்! நடுநாயகமா உட்கார்ந்திருந்தாங்க Ms.A. பக்கத்துலே லேப் கோ-ஆர்டினேட்டர்! வணக்கம் வைச்சிட்டு கிளாஸ் ரூம்க்கு போய்ட்டோம்! ஜூனியர்ங்கள்ளாம் மும்முரமா ரெக்கார்ட் வேலை செஞ்சுக்கிட்டிருந்தாங்க! கொஞ்ச நேரத்திலே எங்களை கூப்பிட்டனுப்பிச்சாங்க!

அவங்க கேட்டதுலே, இதுதான் இப்போ வரைக்கும் ஞாபகத்துலே இருக்கு, “ஏம்மா, உங்களுக்கெல்லாம் மட்டும் வால் முளைச்சிருக்கா?!!”. லேப் முழுக்க ஜூனியர்ஸ்! அவங்க எங்களை அப்படி கேட்ட வருத்தத்தைவிட இந்த ஜூனியர்ங்க முன்னாடிபோய் இப்படி சொல்லிட்டாங்களேன்னுதான் ரொம்ப வருத்தமா இருந்துச்சு!!

இதுதான் Ms.A. ஒரு ஒற்றைச் சொல் – ஈகோலே அடிக்கற மாதிரி – முகத்திலடிச்ச மாதிரி!

ஆனா, அதுக்குப் பின்னாடி என்ன இருந்துச்சுன்னா, நாங்க கணினிலே கரைகாணனும்கிற எண்ணம் இருந்துச்சு – எங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமையணும்கிற எண்ணம் இருந்துச்சு – நாளுக்குநாள் மாறிக்கிட்டே இருக்கிற தொழில்நுட்பங்களின் மத்தியில் நாங்களும் competentஆ இருக்கணுமேங்கிற அக்கறை இருந்துச்சு!

Thank you,Ms.A! என்னாலே முடியுங்கறதை எனக்குக் காட்டினதுக்கு! உங்களாலேதான் நான் AIலேயும், C++ லேயும் முதன்மையா வர முடிஞ்சுது!! நீங்க, அதீத கண்டிப்பா என்கிட்டே இல்லைன்னா, உங்கிட்டே நல்ல பேரெடுக்கணுங்கிற தீவிரத்தோட நான் படிச்சு இருக்க மாட்டேன்! ஃபுல் மார்க் வாங்கணும்கிற வெறியோட, நானே அசைன்மெண்ட் எழுதியிருக்க மாட்டேன்!

மேலும், சுதா கான்வெண்ட் மித்ரா மிஸ், வனஜா டீச்சர், மற்றும் வாழ்க்கையெனும் பாடத்தைப் பற்றி அறிவு புகட்டிக் கொண்டிருக்கும் எல்லோருக்கும்,

இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்!

Add a comment செப்ரெம்பர் 5, 2009

Long, Long Ago….

”நண்பனொருவன் வந்தபிறகு விண்ணைத்தொடலாம் உந்தன் சிறகு” – இப்படி எனக்குக் கிடைத்த ப்ரெண்ட்தான் லதா!

பொண்ணுங்களை தனியா வேற ஊருக்கு அனுப்பனும்னாலே கொஞ்சம் யோசிப்பாங்க! துணைக்கு யாராவது ஒரு ஆள் கண்டிப்பா வருவாங்க! அதுவும் எங்க ஆயாவுக்கு சொல்லவே வேணாம். கற்பனை பண்ணி பயந்துக்கறதுலே அவங்களை அடிச்சுக்கவே முடியாது! ‘தொலைஞ்சு போய்டுவேன்’ இல்லன்னா ‘யாராவது கடத்திட்டு போய் கண்லே கரப்பான் பூச்சியை கட்டி பிச்சை எடுக்க விடுவாங்க’ ரேஞ்சுலே மெட்ராஸூக்கு என்னை அனுப்பறதுலே பயந்துக்கிட்டிருந்தாங்க. அதுவும் இல்லாம, இது மெட்ராஸுக்கு போனா உருப்படாது(மெட்ராஸ் உருப்படாதுன்றது வேற விஷயம்!!), அப்புறம் மெட்ராஸிலே எல்லொருமே கெட்டவங்க’னு ஒரு நினைப்பு!! ப்ராஜக்ட்-க்கு கண்டிப்பா மெட்ராஸ்தான் போகணும்…’நீ வேலூர்லேயே ப்ராஜக்ட் பண்ணு’ன்னு சொல்லிட்டா என்ன பண்றதுன்னு ”லதாவும் என்கூடதான் வரா , நாங்க ரெண்டு பேரும் ஒண்ணாதான் ப்ராஜக்ட் பண்ணப் போறோம்”னு (இதே பிட்டு லதா வீட்டுலேயும் ஓடுச்சு!!) பில்டப் கொடுத்து சமாளிச்சாச்சு!

வழக்கமா ஊர்லேர்ந்து வர்றவங்க பண்றதை நாங்களும் தவறாம பண்ணோம்…ஒன்வேல எதிர்பக்கம் பார்த்துக்கிட்டு கிராஸ் பண்றது, ஒன்னுமே வாங்காம ஸ்பென்ஸர்ஸை சுத்தறது, அப்புறம், பெரிய பில்டிங்கைப் பார்த்தா அதுலே ஏதாவது சாஃப்ட்வேர் கம்பெனியோட பேர் தெரியுதான்னு பாக்கறது, பஸ்லே ஏறினா பர்ஸை கெட்டியா பிடிச்சுக்கறது, ஏரோப்ளேன் போனா அண்ணார்ந்து பார்க்கறதுன்னு!! இன்னும் ஒன்னு இருக்கு…ப்ராஜக்ட் பண்ண ஸ்டூடண்ஸ் சென்னை வந்தா, அதும் பெண்கள் வந்தா பண்றது, “மெட்டீரியல் கலெஷன்’ என்னனு தெரியலையா…நீங்க ரொம்ப நல்லவஙகன்னு நம்பிட்டேன்! அது வந்து, தி நகர், அப்புறம் மைலாப்பூர், எக்மோர்லே பாந்தியன் சாலை(காட்டன் ஸ்ட்ரீட்)- புரிஞ்சுருக்குமே – யெஸ் – சல்வார் ‘மெட்டீரியல்’ வாங்கி டிரெஸ் தைச்சுக்கிறது!! காட்டன் ஸ்ட்ரீட்லே மீட்டர் 30 ரூ…மிக்ஸ் அன்ட் மாட்ச்! ப்ராஜக்ட்-காகக் கொடுக்கற காசுதான்!! மெட்டீரியல் கலெக்ஷ்ன் பண்ணனும்னு காசு கேட்டா – ‘கம்ப்யூட்டர்லே என்ன மெட்டீரியல் கலெஷன்’னு திருப்பிக்கேட்டா இப்படிதான் ஆகும்!!(ஹிஹி…பெரிம்மா..மன்னிச்சுடுங்க!!) வேலை கிடைச்சதும், திநகர், காட்டன் ஸ்ட்ரீட் லாம் விட்டுட்டு க்லோபஸ், ஹாப்பர்ஸ் ஸ்டாப்ன்னு ஸ்விட்ச் ஆகிட்டோம்..இப்போ பேக் டூ த பெவிலியன் – காட்டன் ஸ்ட்ரீட்தான்! ஏனா? புரியலையா..அதான் கல்யாணம் ஆகிடுச்சே..அவ்வ்வ்வ்!

ஓக்கே, பழைய கதைக்கு வாங்க, ப்ராஜக்ட் பண்ணப்போ அடையார்லே ஹாஸ்டல்வாசம்! சென்ட்ரல் கவர்மெண்ட்னா, காலை 9.30 டு மாலை 5.30 வெலை செஞ்சா போதும்!! அதும் ஒரு சங்கு ஊதுவாங்க…நீங்க வேலை செஞ்சது போதுங்கற மாதிரி! அதுக்காக நாங்க அஞ்சு மணிக்கே மூட்டையைக் கட்டிட்டு உட்கார்ந்து இருப்போம்!! அதுக்கு அப்புறம் என்ன வேலை..அடையாரை காலாலே அளக்கறதுதான்! அடையாரிலே ‘அடையார் பேக்கரி’ இருக்கு..அதுதான் எல்லாருக்கும் தெரியுமே! ஆனா அங்கே போகக்கூடாது..அதுக்குப் பக்கத்துலே ஒரு குட்டி சந்து மாதிரி இருக்கும்.அங்கே, ஒரு கடை சாயங்காலத்துலே மட்டும் ஓபன் ஆகும்…ஒன்லி பஜ்ஜி,போண்டா, வடை பகோடா, கட்லெட் etc! 10 ரூபாலே நிறைய நொறுக்ஸ் சுடச்சுடக் கிடைக்கும்! அதை நடத்துறது, ‘வேலையில்லா பட்டதாரிகள்’னு போர்டு போட்டிருப்பாங்க! நானும் லதாவும், சரி, வேலையெதுவும் கிடைக்கலன்னா, இதேமாதிரி நாமளும் தோசைக்கடையாவது வைக்கலாம்னு மனசைத்தேத்திக்கிட்டோம்! (Career is important!!) ஏன்னா அப்போ இருந்த நிலைமை அதுமாதிரி!

என்னோட வாஸ்து எப்படின்னா, அஞ்சாவது முடிக்கறேன்னா அந்த வருஷம்தான் ஆறாவது சிலபஸ் மாறும்! நான் எட்டாவது படிக்கறேன்னா அப்போதான் அதைப் பொதுத்தேர்வா மாத்துவாங்க.பத்தாவது படிக்கும்போதுதான் விடைத்தாள் மார்க் போடற பேட்டர்ன் மாத்துவாங்க..பன்னெண்டாவது வரேன்னு தெரிஞ்சதும் ப்ராக்டிகல்ஸ் மாத்துவாங்க!! இதே வாஸ்து நான் வேலைக்கு வரபோறேன்னு தெரிஞ்சதும் வொர்க் அவுட் ஆகலைன்னா எப்படி?
நாங்க, ‘MCA முடிச்சதும் பாஸ்போர்ட் வாங்கிட்டு நேரா அமெரிக்கா’ன்னு கனவுல இல்ல இருந்தோம்…இதை எப்படியோ தெரிஞ்சுக்கிட்ட ஒசாமா டென்ஷனாகி ட்வின் டவரை உடைச்சுப் போட்டுட்டார்! என் சீனியர்ஸ் எல்லாம், ‘உன் ரெசியும் அனுப்பு’ன்னு சொல்லிக்கிட்டுருந்தவங்க, உங்க ஊர்லே இருக்கற காலேஜ்லேயே லெக்சரராகிடுன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க! H1B கொடுக்கறேன்னு இண்டர்வியூலே சொன்னவங்களுக்கெல்லாம், ஆஃபரே கைக்கு வரலை!! அதனாலே நானும் லதாவும் சரி தோசைக்கடை ஓக்கேன்னு முடிவு பண்ணோம்..கேரியர் தான் முக்கியம்..எந்த கேரியரா இருந்தா என்ன..?!!டிபன்பாக்ஸ் கேரியர் கூட ஓக்கேதான்!!

அதும் இல்லாம, பொண்ணுங்க படிச்சுட்டு கொஞ்ச நாள் வீட்டுலே இருந்தா போதும்..நம்ம பேரண்ட்ஸ்க்கு ஐடியா இருக்கோ இலையோ…மத்தவங்கள்லாம் ஏன் அவ மட்டும் நிம்மதியா இருக்கானு யோசிக்க ஆரம்பிச்சுடுவாங்க! ஊர்லே, தெரிஞ்சவங்க யாராவ்து ஐடிலேர்ந்து வேலை இல்லாம வீட்டுக்கு வந்துட்டாங்கன்னு தெரிஞ்சாபோதும்..சும்மா நாள்லேயே வேலை கிடைக்காது,நம்ம பொண்ணுக்கு எங்கே வேலைக்கிடைக்கும்னு ஒரு முடிவுக்கே வந்துடுவாங்க!! உடனே என்ன இருக்கவே இருக்கு, யுனிவர்சல் சொல்யூசன் – ”டும் டும் டும்”!

“நெருப்புன்னா வாய் வெந்துடவா போகு்து…உடனேவா கல்யாணம் பண்ணிட போறோம்..ஆரம்பிக்கலாம்..பார்த்துக்கிட்டே இருப்போம்..அமைஞ்சா பண்ணலாம்…எப்படியும் ஒரு வருஷம் ஆகும்..அதுக்குள்ளே நீயும் வேலைக்கு டிரை பண்ணு”னு ஜாதகத்தை/பயோடேட்டாவை தூசு தட்ட ஆரம்பிச்சுடுவாங்க!! சமாளிக்கணுமே…
”நாங்க ப்ராஜக்ட் பண்ற இடத்துலேர்ந்தே எனக்கு வேலைக் கொடுக்கறேன்னு சொல்லியிருக்காங்க,செண்ட்ரல் கவர்மெண்ட் வேலை…இதெல்லாம் அப்புறம் பாக்கலாம்”!!

இந்தப் பொய்யை சொன்னப்புறம்தான் எங்களுக்கே இந்த ஐடியா கிளிக் ஆச்சு.. இவங்க கிட்டேயே கேட்டு பாக்கலாம்,”சம்பளம் வேணாம்..எக்ஸ்பிரியன்ஸ்க்காக ஒரு ஆறுமாசம் வேலை செய்றோம்”னு பிட்டை போட்டா என்னனு! வொர்க் அவுட் ஆச்சு! வைவா முடிஞ்சு இரு வாரம் ரெஸ்ட் எடுத்துகிட்டு சென்னைக்கு வந்துட்டோம்!! ஆறுமாசம் வேலை – கண்ட்ராக்ட் பொசிஷன்! அதுக்குள்ளே அவங்களே ”பட்சி சிக்கிடுச்சு” ரேஞ்சுலே ப்ராஜக்ட் அசிஸ்டெண்டா 5000 சம்பளத்துலே வேலை தந்துட்டாங்க!! எப்படியோ, அதுக்குள்ளே கொஞ்சம் கொஞ்சமா பிக்கப் ஆச்சு, எங்க ஐடி! ஃப்ரெஷரா இருந்தப்போ எங்களை கண்டுக்காத இந்த ஐடி கம்பெனிங்கல்லாம் நாம ஒரு வருஷம்/ ரெண்டு வருஷம் எக்ஸ்ப்ரியன்ஸாகிட்டோம்னு தெரிஞ்சதும் நமக்குக் கொடுக்கற வரவேற்பு இருக்கே! அதும் நம்மை கண்டுக்காத கம்பெனிங்க, நம்மளை வா வான்னு கூப்பிடறபோ ‘ப்போ போ’னு நாம சொல்றதுல இருக்க ஒரு (அல்ப) சந்தோஷம்!! சான்ஸே இல்ல!! 🙂 எப்படியோ ஒன்றரை வருசம் அந்த கேம்பஸிலே ஒட்டிக்கிட்டு ஆளுக்கொரு சாஃப்ட்வேர் கம்பெனியிலே செட்டில் ஆகியாச்சு..அப்புறமா..கொஞ்ச நாள்லே கல்யாணம்..என்ன..And then they lived happily ever after-ஆ!!அவ்வ்வ்வ்..அதெல்லாம் only in fairy tales-ன்னு நான் புரிஞ்சுக்கிட்டேன்! நீங்க இன்னுமா புரிஞ்சுக்கலை…ஐயோ ஐயோ!! 🙂 (எப்படியோ கேப்லே நான் fairy ஆகிட்டேன்!!)

சரி இதெல்லாம் எதுக்கா..சென்னையை எனக்குத் தெரிஞ்சவரைக்கும் சுத்திக்காட்டி இருக்கேன்லே!! 🙂

உபரிக்குறிப்பு : அந்த அடையார் பேக்கரிக்கு மேலே ‘Shakes n Creams ‘னு ஒரு கடை இருக்கும் – காலேஜ் டைப் ‘பர்த்டே பார்ட்டி’க்கு பர்ஸுக்கு ஏற்ற இடம் – குவாலிட்டி நல்லா இருக்கும் – யாரும் வந்து என்ன வேணும்னெல்லாம் கேட்க மாட்டாங்க. நீங்க எவ்ளோ நேரம் வேணா பேசிக்கிட்டு இருக்கலாம்..நீங்களே போய் சொன்னாதான் உண்டு!

Add a comment ஓகஸ்ட் 28, 2009

ஈ ஃபார்….

…ஈகை! (கோல்டா அக்கா கொடுத்த தலைப்புதான்!!)
ஈகை-ன்னா எனக்கு ஈகைத்திருநாள்-தான் நினைவுக்கு வரும்! எங்க ஊர்லே ரம்ஜான் ரொம்ப கோலாகலமா இருக்கும்! எல்லோரும் ரொம்ப சந்தோஷமா – புது ட்ரெஸ் போட்டு- தெருவே செண்ட் வாசனையோட – சிறுவர்களும் சிறுமிகளும் அங்கேயும் இங்கேயுமா பரபரப்பா நடந்துக்கிட்டு – ரோட்லே எதிர்படறவங்களை கட்டிபிடிச்சு வாழ்த்துகள் பரிமாறிக்கறது- தெரிஞ்சவங்க வீட்டுக்கு பிரியாணி கொடுக்கறதுன்னு! (ரம்ஜான் வருதுன்னா ரெண்டு நாளைக்கு எஙக வீட்டுலே சமையல் ரொம்ப சிம்பிளா இருக்கும். ஏன்னா, மேரே பாஸ் பிரியாணி ஹை!) நோன்பு திறக்கறதுக்கு, காலையிலேயே ஒருத்தர் வந்து எழுப்பிட்டு போவார். ஆனா அதுக்கும் முன்னாடியே எங்க மேல் வீட்டுலே, எதிர் வீட்டுலே, கீழ் வீட்டுலே எல்லாரும் எழுந்து சமைக்க ஆரம்பிச்சிருப்பாங்க! (அதுவும் ரம்ஜான் மார்ச் ஏப்ரல்லே வந்துச்சுன்னா, நம்ம வீட்டுலே இருக்கறவங்களும் எழுந்துடுவாங்க..நம்மளை எழுப்பறதுக்கு! அதுவும் எங்க ஆயாவுக்கு இருக்க முன்னெச்சரிக்கை இருக்கே…மணி அஞ்சுதான் ஆகியிருக்கும்..அஞ்சரையாச்சு, எழுந்திரு…எழுந்திரு…படி..படின்னு! நமக்கு அதெல்லாம் புதுசா என்ன!! அவங்க சொல்றதுலேர்ந்து அரைமணிநேரம் கம்மியா கால்குலேட் பண்ணிக்க வேண்டியதுதான்..தூக்கத்துலேயே!)

ஏதோ சொல்ல வந்துட்டு்…எங்கேயோ போறேன்…நான் நாலாவது படிக்கும்போதுதான் சுமி அக்கா எங்க எதிர் வீட்டுக்கு குடி வந்தாங்க. கொஞ்ச நாள்லே‘சுமி வீடு’-ன்னு ஆயிடுச்சு. ஏன்னா, அந்த அக்கா பேரு சுமையா. அப்போ ஒன்பதாவது படிச்சுக்கிட்டு இருந்தாங்க. காலையிலே எட்டேகாலுக்கு ஒரு வேன் வரும்.முஸ்லீம் ஸ்கூல் வேன். அது கரெக்டா வீட்டு முன்னாடி வந்து நிக்கும். பாதிதான் கதவு திறக்கும், குடுகுடுன்னு சுமி அக்கா ஏறி உக்காந்துப்பாங்க. எல்லோருமே கருப்பு புர்க்கா போட்டு இருப்பாங்க. சுமி அக்கா, அவங்க நானி தைச்ச சம்க்கி வொர்க் ட்ரெஸ் போட்டுருப்பாங்க, ஆனா மேலே அந்த கருப்பு புர்க்கா போட்டுப்பாங்க. சுமி அக்காவுக்கு அவங்க கேக்கும்போதெல்லாம் நாந்தான் Campco சாக்லேட் வாங்கித் தருவேன்!

சுமி அக்காவுக்கு நாலு தம்பிங்க. அஸ்ரார், அப்ரார், உசேன் அப்றம் ஜூபேர். அஸ்ரார் என்னோட செட். அப்ரார் என்னை விட ரெண்டு வயசு சின்னவன். ஜுபேர்-க்கு அப்போதான் ஒரு வயசு. உசேனுக்கு போலியோ-னாலே சரியா நடக்க முடியாது. அவங்க அப்பாவை எல்லோரும் குல்ஸார் பாய்-ன்னு சொல்வாங்க. அவர், ஒரு பஜாஜ் ஸ்கூட்டர் வச்சிருந்தார். காலையிலே எட்டேமுக்காலுக்கு, அதை ஒரு சைடா சாய்ச்சு வச்சு ஸ்டார்ட் செய்வார். ரொம்ப அமைதியான டைப். அன்பானவர். சுமி அக்காவோட அம்மா ரொம்ப ஒல்லியா இருப்பாங்க. எப்போதும் உட்கார்ந்தே இருப்பாங்க. அப்றம், அவங்களோட நானிம்மா – அங்கிளோட அம்மா.

சுமி அக்காதான் சமையல் செஞ்சு வைச்சுட்டு, டிபன் பாக்ஸ்லே எடுத்துட்டு போவாங்க. சில சமயம் ரசம் வைக்க, கீரைக்கூட்டு செய்யறதுக்கு ஆயாக்கிட்டே ரெசிப்பி கேப்பாங்க. அவ்ளோ சூப்பரா பிரியாணி செய்வாங்க..சாஃப்டா சப்பாத்தி செய்வாங்க..ஆனா இட்லி தோசை செய்ய ரொம்ப கஷ்டப்படுவாங்க. ‘வரவே மாட்டேங்குது ஆயா’ கவலைவேற. (நம்ம வீட்டுலே அப்படியே நேரெதிர். தக்காளி சாதம் ரேஞ்சுலே செஞ்சு வச்சிட்டு, ‘பிரியாணி’ன்னு பில்டப்) உசேனுக்கு தோசைதான் பிடிக்கும். அவன் அதை ‘சீலா’ன்னுதான் சொல்வான். அவன் ஸ்கூலுக்குக் கிளம்பற, எங்க ஆயா ரெண்டு தோசை சுட்டுக்கொடுப்பாங்க. எல்லோருக்கும் உசேன் மேல ஒரு தனிப்பாசம் இருந்துச்சு!

எங்க வீட்டுலே எது செஞ்சாலும், ‘சுமிக்கு பிடிக்கும்’ இல்லேன்னா ‘ஜுபேருக்கு கொடுங்க’ கொடுக்கறது – அவங்களும் சப்பாத்தி செஞ்சு ‘குட்டிக்கு கொடுங்க’ன்னு கொடுக்கறது!! தீபாவளிக்கு எங்கக் கூட சேர்ந்து உசேன் மத்தாப்பு கொளுத்துவான்-அஸ்ரார்க்கு எங்க ஆயா இங்கிலீஸ்(!) சொல்லிக்கொடுக்கறது- நாங்க ஊருக்குப் போனா, ‘எல்லோரையும் கேட்டதாச் சொல்லுங்க டீச்சர்’ன்னு அவங்க சொல்றது- பெங்களூர்லேர்ந்து ஆன்ட்டியோட தம்பி கொண்டுவந்த குடைமிளகாயை எங்களுக்கு தர்றதுன்னு ரொம்ப க்ளோஸ் ஆகிட்டோம். !

நான் அப்போ ஆறாவது. அந்த வருஷ அரைபரீட்சை லீவுலே, சுமி அக்கா வீட்டுலே எல்லோரும் பெங்களூருக்குக் கிளம்பினாங்க. அந்த ஆன்ட்டி எங்க ஆயாக்கிட்டே, நான் போய் பல்லை சரி பண்ணிக்கிட்டு வரேன் ஆயா, ஒரே குடைச்சல் கொடுக்குதுன்னு” சொல்லிக்கிட்டிருந்தாங்க. அப்பறம், லீவு முடியறதுக்கு ரெண்டு மூனு நாள் இருக்கும்போது யாரோ வந்து சொன்னாங்க, அந்த ஆன்ட்டி இறந்துப் போய்ட்டாங்கன்னு. அந்த அங்கிள் ஊரு பேர்ணாம்பட். அங்கேதான் காரியம் வச்சிருந்தாங்க. நாங்க எல்லோரும், சாந்தா அத்தை, கெஜா அம்மா எல்லோரும் போனோம். அந்த அங்கிள் ரொம்ப கலங்கிடாம பொறுமையா பேசினார். அவர்கூட சுமி அக்காவோட மாமா இருந்தார். எங்களை எல்லாம் வேறே ஒரு வீட்டுக்கு கூட்டிட்டு போய் என்ன ஆச்சுன்னு சொன்னார். அப்போக்கூட, ஸ்வீட்ஸ் வாங்கி வைச்சு சாப்பிடுங்க சாப்பிடுங்கன்னு சொல்லிக்கிட்டிருந்தார், அந்த அங்கிள்.

எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம். என்ன, பாய், இந்தநேரத்துலேயும் இப்படி உபசரிக்கறாரேன்னு! அந்த ஆன்ட்டிக்கு டிபி இருந்துச்சாம். அதுக்கு மருந்து சாப்பிட்டுக்கிட்டிருந்தாங்களாம். ஆனா அதை ஒரு வருஷம் கழிச்சு திரும்ப வந்து பாக்க சொல்லியிருக்கார் டாக்டர். ஆனா டாக்டர்கிட்டே போகாம, இவங்களா மருந்து வாங்கி தொடர்ந்து சாப்பிட்டிருக்காங்க. அதுதான் பிரச்சினையாகிட்டதா எல்லோரும் பேசிக்கிட்டாங்க வர்ற வழியிலே!! அப்பறம் கொஞ்சநாள் கழிச்சு சுமி அக்கா வந்துட்டாங்க. அவங்க நானிக்கும் கொஞ்சம் முடியாம இருந்தது. முஸ்லீம்களுக்கு நாப்பதுநாள் கணக்காம். நாப்பதாம் நாளுக்கு ஊருக்குப் போய்ட்டும் வந்தாங்க.

சுமி அக்கா ஸ்கூல்க்கு நிறைய லீவ் போட்டதாலே அந்த வருஷம், இன்னொரு முறை படிக்க வேண்டியதாப் போச்சு. அவங்கதான் சமையல், அப்புறம் ஜூபேரைப் பார்த்துக்கறதுன்னு எல்லாம். அங்கிளும் ரொம்ப மனசுடைஞ்சு போய்ட்டதா பெரியவங்க எல்லாம் பேசிக்கிட்டாங்க.’நானும் போய்டுவேன், நானும் போய்டுவேன்’ன்னு அங்கிள் சொன்னதா சொல்லிக்கிட்டாங்க. பெரியங்க பேசிக்கிற இடத்துலே நின்னாதான் எங்க ஆயாவுக்கு கோவம் வந்துடுமே..”கண்ட செருப்பை வாங்கி காதுலே மாட்டிக்கோ”ன்னு திட்டுவாங்க. ஆனா முன்னாடி மாதிரி எங்க பிளாக் கலகலப்பாவே இல்லே..எல்லாமே அமைதியா ஒரு சுரத்தேயில்லாம மௌனமா இருக்கற மாதிரி நடந்துக்கிட்டிருந்தது.

ஒரு வாரம் போயிருக்கும்…இப்படியே! ஸ்கூல் விட்டு சாயங்காலம் வந்தா சுமி அக்கா வீடு பூட்டி இருக்கு..ஆயா முகம் இறுகிப் போய் இருக்கு. அங்கிள் ஆபிஸ் போகாம வீட்டுலேயே தான் இருந்திருக்கார். எல்லோரும் ஸ்கூல் போயாச்சு. நானி மட்டும்தான். காலையிலே ஒரு பதினொரு மணிக்கு நெஞ்சு வலிக்குதுன்னு சொல்லி இருக்கார். பத்துமணிக்கு மேலேதான் எங்க ப்ளாக்லே யாரும் இருக்கமாட்டாங்களே..யார்யாரையோ பிடிச்சு சாந்தா அத்தை டாக்ஸி ஏற்பாடு செஞ்சுருக்காங்க. எங்க ஆயாவை, அவர் பக்கத்துலேயே இருக்கச் சொல்லியிருக்கார். ஆனா, டாக்டர்கிட்டே போறதுக்குள்ளேயே உயிர் பிரிஞ்சுடுச்சு. பேர்ணாம்பட்லேருந்து அவங்க சொந்தக்காரங்க வந்து எல்லோரையும் கூட்டிட்டு போய்ட்டாங்க.

சுமி அக்காவும் ஜூபேரும் பெங்களூருலே ஒரு மாமா வீட்டுலேயும், அப்ரார் பேர்ணாம்பட்டுலே ஒரு மாமாக்கிட்டேயும், அஸ்ராரும் உசேனும் பெங்களுருலேயே வேற மாமாவீட்டுலேயும் தங்கிக்கற மாதிரியும்- சுமி அக்காவுக்கு கல்யாணம் ஏற்பாடு செய்யப்போறதாவும் – வீடு காலி பண்ணும்போது அவங்க சொந்தக்காரங்க சொன்னதுதான். இது எல்லாமே ரெண்டு மாசத்துக்குள்ளேயே…ஹாஃப் இயர்லி லீவு – ஆன்ட்டி இறந்த நாப்பது நாளு முடிஞ்சு ஒரு வாரம் – அங்கிள் இறந்து நாப்பது நாளும் முடிஞ்சது. அப்புறம் ஒரு ரெண்டு வாரம் கழிச்சு, நானியும் பேர்ணாம்பட்டேலேயே மௌத் ஆகிட்டதாச் சொன்னாங்க! ஆனா, யாரும் போகல..யாரையும் பாக்கிற மனவலிமை யாருக்கும் இல்லைன்னுதான் நினைக்கிறேன். ஆனா எல்லோரும் பேசி பேசி மாஞ்சு போறாங்க..

ரொம்பநாளைக்கு எங்க எதிர்வீடு பூட்டியிருந்தது…ஒன்றரை வருஷத்துக்கும் மேலே! அதுவும் ரொம்ப உயிரோட்டமா இருந்த எங்க ப்ளாக் ஃப்ரீஜாகி இருந்தது, கொஞ்ச நாள். ஆனுவல் லீவ் அப்போ சுமி அக்கா கல்யாணம் ஆகி எங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க, ஒரு சாயங்கால நேரம். டீ குடிச்சுட்டு கொஞ்சநேரம் பேசிக்கிட்டு இருந்துட்டு கிளம்பினாங்க. ‘சுமி கிடைச்சது என்னோட லக்’-ன்னு அந்த அண்ணா சொன்னாங்கன்னு அப்புறமா எங்க ஆயா, சாந்தா அத்தைக்கிட்டே பேசுக்கிட்டிருந்தது காதுலே விழுந்துச்சு.

நானும் காலேஜ்க்கு ஹாஸ்டல் போய்ட்டேன். லீவுக்கு வந்தப்போ அப்ரார் வந்திருந்தான் வீட்டுக்கு. பாலிடெக்னிக் முடிச்சுட்டு துபாய் போகப்போறதா சொன்னான். உசேன் எங்க ஊருலே ஒருக்கற மதரஸாலே சேரப்போறதாவும், அஸ்ரார் கோடம்பாக்கத்துலே ஒரு டான்ஸரை லவ் மேரேஜ் செஞ்சுக்கிட்டதாவும் சுமி அக்காவுக்கு ரெண்டு குழந்தைகள் இருக்கறதாவும் சொன்னான். உசேன் மட்டும் அப்போப்போ லீவுக்கு எங்க வீட்டுக்கு வருவான், ஒரு நாள்தான் லீவ் போல. ஆனா நாங்கதான்(நானும், குட்டியும்) ஹாஸ்டலுக்குப் போய்ட்டோமே..பெரிம்மாவும், ஆயாவும்தானே..கொஞ்ச நேரம் டீவி பார்த்துட்டு, தூங்கிட்டு, சாப்பிட்டு காசு வாங்கிட்டு போவான்னு சொன்னாங்க.

டில்லி டூருக்குப் போய்ட்டு வந்து அவங்க சொன்ன கதைங்க, அவங்க எனக்குக் கொடுத்த ஒரு மஞ்சள் கலர் கம்மல்,நான் அரேபியன் நைட்ஸ் படிச்சுட்டு, சுமி அக்கா சொல்ற கதைகளோட கற்பனை செஞ்சுக்கிட்டது – எல்லோரும் கண்ணாமுச்சு விளையாடறோம்னு அவங்க வீட்டுக் கட்டிலுக்கு அடிலே ஒளிஞ்சுகிட்டது – அவங்க எல்லோரும் வீட்டைக் காலி செஞ்சுட்டு போனதும் சூழ்ந்த வெறுமை-ன்னு இந்த எதிர்வீட்டு நினைவுகள் அத்தியாயம் இல்லாம என்னோட பால்யக்காலம் முழுமையாகாது! ஜாலியாத்தான் இந்த இடுகையை ஆரம்பிச்சேன்….நினைவுகளிலேருந்து தப்பிக்க முடியலை – எழுதினப்பறம்தான் தெரிஞ்சது. என்னோட பதினோரு வயசுக்கே நான் பயணிச்சு, அப்போ பார்த்ததையெல்லாம், கேட்டதையெல்லாம் கொட்டிட்டேன்னு!!

உபரிக்குறிப்பு : காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் லீவுக்குப் போனப்போ, ‘பூஜாக்குக் கொடுங்க’ன்னு எங்க பெரிம்மா பூரி கொடுக்கறதும், ‘கோங்குரா அரைச்சேன், டீச்சர்’ன்னு எதிர்வீட்டு ஆன்ட்டி கொடுக்கறதுமா இருந்துச்சு! ‘இதுக்குத்தான் யார்க்கிட்டேயும் க்ளோசா இருக்கக் கூடாதுன்னு, இனிமே’ ன்னு, சுமி அக்காவீடு காலியா இருக்கற பார்த்துட்டு பெரிம்மா, ஆயாக்கிட்டே சொன்னது ஏனோ நினைவுக்கு வந்துச்சு!

Add a comment ஓகஸ்ட் 6, 2009

மே மாதம்…

கோடைவிடுமுறை. ஒரு மாத லீவுக்கு உறவினர் வீடு என்று ஊர் சுற்றுவது. அதுவும் ஒரு பத்து குட்டீஸ் ஒன்றாக சேர்ந்துவிட்டால், உற்சாகக் கூச்சலுக்கும் கொண்டாட்டத்துக்கும் கேட்கவே வேண்டாம். லீவு விட்டால் நாங்கள் ஆம்பூரிலிருந்து வடலூர் செல்வோம், மாமா வீட்டுக்கு. வீட்டின் பின்னால் மாமரங்கள், நெல்லிமரங்கள், பனைமரங்கள், பலாமரங்கள் என்று நமது மரம் ஏறும் திறமைக்கு சவால் விட நிறைய மரங்கள்.

மாங்காயை மரத்திலேயே சாப்பிட்டு கொட்டை மட்டுமே மரத்தில் தொங்கவிட்டு வைக்க ஒரு போட்டி. சில்லி காம்படிஷன்ஸ். சீக்கிரம் யார் சாப்பிடுவது, கடைக்குப் போய்விட்டு யார வேகமாக வீட்டுக்கு வருவது etc. காலையிலேயே நுங்கு மட்டுமே உணவாக உண்ட நாட்கள். பைண்டு செய்து வைக்கப்பட்ட ஆனந்த விகடன் சிறுகதைத் தொகுப்புகள், தொடர்கதைத் தொகுப்புகள், கல்கியிலியிருந்து தொகுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் என்று எக்கச்சக்க கதைப் புத்தகங்கள். விளையாட பல்லாங்குழி, அதிலேயே எத்தனை வெர்ஷன்கள், ராஜா-ராணி-மந்திரி-திருடன் – போலிஸ்,கேரம் போன்ற வெயிலில் தலைக்காட்ட வேண்டியிருக்காத விளையாட்டுகள். காலை உணவிற்கு பின் பலாப்பழத்தை வெட்டி நாள் முழுவதும் பலாப்பழ வாசனையும், பிசுபிசிப்பும் சேர்ந்து உடையிலேயே துடைத்து என்று ஒரு மாதிரியாக வலம் வந்த நாட்கள். எல்லோரும் சேர்ந்து வள்ளலார் சத்தியஞான சபைக்கு செலும் மாலை நேரங்கள். (அட,ஞானத்துக்காக இல்லைங்க..அங்கே நிறைய மாமரங்கள் இருக்கும்!)பின் வடலூரிலிருந்து ஆம்பூருக்கு வருவோம், எல்லாக் குட்டீஸூம்! மாடியில் விளையாட்டு, மைதானத்தில் விளையாட்டு, கொஞ்சமே கொஞ்ச நேரம் டீவி, கதைப்புத்தகம் என்று பொழுது போகும். (எச்சி காம்படிஷன் – மாடியிலிருந்து எச்சிலை துப்ப வேண்டும், யார் எச்சில் சீக்கிரம் கீழே சென்றடைகிறதோ அவர்தான் வெற்றியாளர்.) முடியவே முடியாது என்ற எண்ணத்தில் ஒவ்வொரு தினத்தையும் கழித்த கோடை விடுமுறை நாட்கள்!

**sigh** எனது சிறுவயது கோடைவிடுமுறைகளை நினைத்துக் கொண்டேன், அம்மாக்களின் பகிர்வுகளில் சிறார் ஆக்டிவிட்டீஸை பதிவிட்டபோது!!

Add a comment மே 7, 2009

கனாக் கண்ட காலங்கள்!!!

கனவுகள் பற்றி ஒரு பதிவு படித்தேன், தேவன்மயத்தின் வலைப்பூவில்! எனக்கும் கனவுகளைப் பற்றி சொல்ல ஆசை வந்துவிட்டது! கனவுகள் வருவது சாதாரணம்தான்..ஆனால் அதன்கூட நாம் செய்யும் காமெடிதான் மேட்டரே!!

நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பேன்..(ஆமா, தூங்கினாதானே கனவு வரும்!!). ஏதோ ஒரு கனவு. கனவிலேயே எனக்கு கால் வலி. வலியென்றால் நிஜமான வலி! உடனே விழிப்பு வந்து, பார்த்தால் நானே காலை சுவரில் மோதிக் விட்டிருக்கிறேன்! இன்னொரு கனவும் மறக்கமுடியாதது, என்னவென்றால் கீழே விழுவது போல. பார்த்தால் படுக்கையிலிருந்து தரையில் இருக்கிறேன்! நல்லவேளை, பொண்ணு படிக்குது என்று தனி ரூம் கொடுத்திருந்ததால் பிழைத்தேன் தம்பி என்றொரு சதிகாரனிடமிருந்து!!

ரெகுலராக சில் கனவுகளும் வரும், அதுவும் பரீட்சை சமயத்திலும், பரீட்சைக்கு பின்பும்! அதாவது, நான் செல்வதற்குள் பரீட்சை ஆரம்பாகியிருக்கும், அல்லது முதல் பாதி முடிந்திருக்கும் அல்லது ஹால் டிக்கட் கொண்டுபோகாமல் சென்றிருப்பேன்.. அந்தக் கனவு அவ்வளவு நிஜமாயிருக்கும்..இதயம் படபடக்க வேர்த்துக் கொட்டி எழுந்துப் பார்த்தால் மணி இரண்டு அல்லது மூன்று இருக்கும். அப்போது ஒரு நிம்மதி வருமே..அதற்கு ஈடு எதுவுமேயில்லை!

இன்னொரு விஷயம், ஏதாவது விரும்பத்தகாதது நடந்திருந்தால் இது கனவாக இருக்கக் கூடாதா என்று நினைத்துக்கொள்வேன்! உச்சபட்ச காமெடி, கனவிலும், இது கனவாக இருக்கக் கூடாதாவென்று நினைத்துக் கொள்வது போல் வரும்!! :-))

சின்னவயதில் பகலில் மதியம் தூங்கி அந்திசமயம் எழுந்ததும் அடுத்தநாள் காலை போலிருக்கும். அப்போது பல்விளக்கியெல்லாம் காமெடி செய்திருக்கிறேன்! சமீபத்தில் பப்புவும் அப்படி செய்ய முற்பட்டாள்.

நினைவு தெரிந்து வந்த முதல் கனவு இன்றும் மனதிலிருக்கிறது. நிறைய கதைகள் கேட்ட பாதிப்பு என்று நினைக்கிறேன். ராட்சசன் வந்து எங்கள் வீட்டு கொல்லையிலுள்ள பனை மரத்தை பிடுங்கி பல் விளக்குகிறான். அன்று பகல் முழுவது பயந்த பயமும் இன்றும் நினைவிருக்கிறது! :-)))

கனவில் உளறுவது இன்னொரு காமெடி. மாமா பையன் புகழேந்தி கனவில் உளருவான். நாம் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லுவான்! கனவில் சொல்லாததையெல்லாம் உளறியதாகச் சொல்லி கலாட்டா செய்து காலி செய்யும் கூட்டமும் எங்கள் வீட்டில் பஞ்சமில்லாமலிருந்தது!

கனவென்றால் மறக்கமுடியாமல் நினைவுக்கு வருவது காலேஜில் நடந்த சம்பவங்கள் சில.
தினமும் கலாட்டா, ஜாலி, கிண்டல் தானே வாழ்க்கை அப்போது. ராகிங் செய்தவங்கதான் பிற்காலத்தில் நமக்கு எல்லாம் உற்ற தோழிகள்/அக்காக்களாகி விட்டிருப்பார்கள். அவர்கள் செய்த ராகிங்களுக்கெல்லாம் நம்மிடம் வாங்கிக் கட்டிக் கொள்வார்கள் அப்புறமாக! அப்படி என்னை கலாட்டா செய்தவர்களிடம் சொன்னது இது!


“அக்கா, நேத்து நைட் எனக்கு ஒரு கனவு வந்துச்சுக்கா, என்ன தெரியுமா, அதுல நீங்க வர்றீங்க. அப்புறம் ஜெய்ஸ்ரீ, கலா, தேவி எல்லாரும் வர்றாங்க. நாம எல்லாம் ஹெவன் – ல இருக்கோம் அக்கா, அங்கே உள்ளே போனது சொல்றாங்க, நீங்க இந்த ஹால்ல நடந்து போகணும். அங்அக் ஒரு தட்டு வரும்,. அதை மட்டும் மிதிக்கவேக் கூடாது! நானும் பயந்து பயந்து நடந்து வர்றேன், பார்த்தா ஜெய்ஸ்ரீ அக்கா வர்றாங்க, அவங்ககூட யாரோ ஒரு ஆள். அசிங்கமா பார்க்கவே
சகிக்கல! என்னான்னு கேட்டா, அவங்க சொல்றாங்க, நான் அந்தத் தட்டை மெதிச்சுட்டேன், இந்த ஆளை கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க, பார்த்து போ அப்படின்னு! அப்புறம் பார்த்தா தேவிக்காவும்! அவங்களும் அதே சொல்றாங்க! நானும் பயந்துகிட்டே வர்றேன்..பார்த்தா நீங்க வர்றீங்கக்கா! ஆனா உங்களுக்கு மட்டும் நல்ல அழகான் ஹஸ்பண்ட்! அப்போ நான் உங்களைக் கேக்கறேன், அக்கா நீங்க்தான் தட்டை மெதிக்கலையான்னு. அப்போ உங்க கூட இருந்தவர் சொல்றார், “இல்ல, நாந்தான் தட்டை மெதிச்சுட்டேன்”ன்னு!”

-அப்படின்னு சொல்லிட்டு ஓடியே வந்துட்டேன்!!

உஷாக்கா, ஐ மிஸ் யூ சோ மச் உஷாக்கா! அந்த முல்லையும் இப்போ இல்லை, அந்த உஷாக்காவும் இருக்க மாட்டாங்கன்னும் தெரியும்.வாழ்வின் உளிகளில் வெவ்வேறு பரிணாமங்களில் நாமிப்போது! ஆனா, நம்ம காலேஜ் காம்பஸ்-ல கண்டிப்பா ஏதாவதொரு முல்லையும், உஷாக்காவும் கண்டிப்பா இருப்பாங்க..எத்தனை பேட்ச் வந்தாலும்!

Add a comment திசெம்பர் 17, 2008

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

பிப்ரவரி 2019
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

Posts by Month

Posts by Category