Posts filed under: ‘சென்னை‘
Long, Long Ago….

”நண்பனொருவன் வந்தபிறகு விண்ணைத்தொடலாம் உந்தன் சிறகு” – இப்படி எனக்குக் கிடைத்த ப்ரெண்ட்தான் லதா!

பொண்ணுங்களை தனியா வேற ஊருக்கு அனுப்பனும்னாலே கொஞ்சம் யோசிப்பாங்க! துணைக்கு யாராவது ஒரு ஆள் கண்டிப்பா வருவாங்க! அதுவும் எங்க ஆயாவுக்கு சொல்லவே வேணாம். கற்பனை பண்ணி பயந்துக்கறதுலே அவங்களை அடிச்சுக்கவே முடியாது! ‘தொலைஞ்சு போய்டுவேன்’ இல்லன்னா ‘யாராவது கடத்திட்டு போய் கண்லே கரப்பான் பூச்சியை கட்டி பிச்சை எடுக்க விடுவாங்க’ ரேஞ்சுலே மெட்ராஸூக்கு என்னை அனுப்பறதுலே பயந்துக்கிட்டிருந்தாங்க. அதுவும் இல்லாம, இது மெட்ராஸுக்கு போனா உருப்படாது(மெட்ராஸ் உருப்படாதுன்றது வேற விஷயம்!!), அப்புறம் மெட்ராஸிலே எல்லொருமே கெட்டவங்க’னு ஒரு நினைப்பு!! ப்ராஜக்ட்-க்கு கண்டிப்பா மெட்ராஸ்தான் போகணும்…’நீ வேலூர்லேயே ப்ராஜக்ட் பண்ணு’ன்னு சொல்லிட்டா என்ன பண்றதுன்னு ”லதாவும் என்கூடதான் வரா , நாங்க ரெண்டு பேரும் ஒண்ணாதான் ப்ராஜக்ட் பண்ணப் போறோம்”னு (இதே பிட்டு லதா வீட்டுலேயும் ஓடுச்சு!!) பில்டப் கொடுத்து சமாளிச்சாச்சு!

வழக்கமா ஊர்லேர்ந்து வர்றவங்க பண்றதை நாங்களும் தவறாம பண்ணோம்…ஒன்வேல எதிர்பக்கம் பார்த்துக்கிட்டு கிராஸ் பண்றது, ஒன்னுமே வாங்காம ஸ்பென்ஸர்ஸை சுத்தறது, அப்புறம், பெரிய பில்டிங்கைப் பார்த்தா அதுலே ஏதாவது சாஃப்ட்வேர் கம்பெனியோட பேர் தெரியுதான்னு பாக்கறது, பஸ்லே ஏறினா பர்ஸை கெட்டியா பிடிச்சுக்கறது, ஏரோப்ளேன் போனா அண்ணார்ந்து பார்க்கறதுன்னு!! இன்னும் ஒன்னு இருக்கு…ப்ராஜக்ட் பண்ண ஸ்டூடண்ஸ் சென்னை வந்தா, அதும் பெண்கள் வந்தா பண்றது, “மெட்டீரியல் கலெஷன்’ என்னனு தெரியலையா…நீங்க ரொம்ப நல்லவஙகன்னு நம்பிட்டேன்! அது வந்து, தி நகர், அப்புறம் மைலாப்பூர், எக்மோர்லே பாந்தியன் சாலை(காட்டன் ஸ்ட்ரீட்)- புரிஞ்சுருக்குமே – யெஸ் – சல்வார் ‘மெட்டீரியல்’ வாங்கி டிரெஸ் தைச்சுக்கிறது!! காட்டன் ஸ்ட்ரீட்லே மீட்டர் 30 ரூ…மிக்ஸ் அன்ட் மாட்ச்! ப்ராஜக்ட்-காகக் கொடுக்கற காசுதான்!! மெட்டீரியல் கலெக்ஷ்ன் பண்ணனும்னு காசு கேட்டா – ‘கம்ப்யூட்டர்லே என்ன மெட்டீரியல் கலெஷன்’னு திருப்பிக்கேட்டா இப்படிதான் ஆகும்!!(ஹிஹி…பெரிம்மா..மன்னிச்சுடுங்க!!) வேலை கிடைச்சதும், திநகர், காட்டன் ஸ்ட்ரீட் லாம் விட்டுட்டு க்லோபஸ், ஹாப்பர்ஸ் ஸ்டாப்ன்னு ஸ்விட்ச் ஆகிட்டோம்..இப்போ பேக் டூ த பெவிலியன் – காட்டன் ஸ்ட்ரீட்தான்! ஏனா? புரியலையா..அதான் கல்யாணம் ஆகிடுச்சே..அவ்வ்வ்வ்!

ஓக்கே, பழைய கதைக்கு வாங்க, ப்ராஜக்ட் பண்ணப்போ அடையார்லே ஹாஸ்டல்வாசம்! சென்ட்ரல் கவர்மெண்ட்னா, காலை 9.30 டு மாலை 5.30 வெலை செஞ்சா போதும்!! அதும் ஒரு சங்கு ஊதுவாங்க…நீங்க வேலை செஞ்சது போதுங்கற மாதிரி! அதுக்காக நாங்க அஞ்சு மணிக்கே மூட்டையைக் கட்டிட்டு உட்கார்ந்து இருப்போம்!! அதுக்கு அப்புறம் என்ன வேலை..அடையாரை காலாலே அளக்கறதுதான்! அடையாரிலே ‘அடையார் பேக்கரி’ இருக்கு..அதுதான் எல்லாருக்கும் தெரியுமே! ஆனா அங்கே போகக்கூடாது..அதுக்குப் பக்கத்துலே ஒரு குட்டி சந்து மாதிரி இருக்கும்.அங்கே, ஒரு கடை சாயங்காலத்துலே மட்டும் ஓபன் ஆகும்…ஒன்லி பஜ்ஜி,போண்டா, வடை பகோடா, கட்லெட் etc! 10 ரூபாலே நிறைய நொறுக்ஸ் சுடச்சுடக் கிடைக்கும்! அதை நடத்துறது, ‘வேலையில்லா பட்டதாரிகள்’னு போர்டு போட்டிருப்பாங்க! நானும் லதாவும், சரி, வேலையெதுவும் கிடைக்கலன்னா, இதேமாதிரி நாமளும் தோசைக்கடையாவது வைக்கலாம்னு மனசைத்தேத்திக்கிட்டோம்! (Career is important!!) ஏன்னா அப்போ இருந்த நிலைமை அதுமாதிரி!

என்னோட வாஸ்து எப்படின்னா, அஞ்சாவது முடிக்கறேன்னா அந்த வருஷம்தான் ஆறாவது சிலபஸ் மாறும்! நான் எட்டாவது படிக்கறேன்னா அப்போதான் அதைப் பொதுத்தேர்வா மாத்துவாங்க.பத்தாவது படிக்கும்போதுதான் விடைத்தாள் மார்க் போடற பேட்டர்ன் மாத்துவாங்க..பன்னெண்டாவது வரேன்னு தெரிஞ்சதும் ப்ராக்டிகல்ஸ் மாத்துவாங்க!! இதே வாஸ்து நான் வேலைக்கு வரபோறேன்னு தெரிஞ்சதும் வொர்க் அவுட் ஆகலைன்னா எப்படி?
நாங்க, ‘MCA முடிச்சதும் பாஸ்போர்ட் வாங்கிட்டு நேரா அமெரிக்கா’ன்னு கனவுல இல்ல இருந்தோம்…இதை எப்படியோ தெரிஞ்சுக்கிட்ட ஒசாமா டென்ஷனாகி ட்வின் டவரை உடைச்சுப் போட்டுட்டார்! என் சீனியர்ஸ் எல்லாம், ‘உன் ரெசியும் அனுப்பு’ன்னு சொல்லிக்கிட்டுருந்தவங்க, உங்க ஊர்லே இருக்கற காலேஜ்லேயே லெக்சரராகிடுன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க! H1B கொடுக்கறேன்னு இண்டர்வியூலே சொன்னவங்களுக்கெல்லாம், ஆஃபரே கைக்கு வரலை!! அதனாலே நானும் லதாவும் சரி தோசைக்கடை ஓக்கேன்னு முடிவு பண்ணோம்..கேரியர் தான் முக்கியம்..எந்த கேரியரா இருந்தா என்ன..?!!டிபன்பாக்ஸ் கேரியர் கூட ஓக்கேதான்!!

அதும் இல்லாம, பொண்ணுங்க படிச்சுட்டு கொஞ்ச நாள் வீட்டுலே இருந்தா போதும்..நம்ம பேரண்ட்ஸ்க்கு ஐடியா இருக்கோ இலையோ…மத்தவங்கள்லாம் ஏன் அவ மட்டும் நிம்மதியா இருக்கானு யோசிக்க ஆரம்பிச்சுடுவாங்க! ஊர்லே, தெரிஞ்சவங்க யாராவ்து ஐடிலேர்ந்து வேலை இல்லாம வீட்டுக்கு வந்துட்டாங்கன்னு தெரிஞ்சாபோதும்..சும்மா நாள்லேயே வேலை கிடைக்காது,நம்ம பொண்ணுக்கு எங்கே வேலைக்கிடைக்கும்னு ஒரு முடிவுக்கே வந்துடுவாங்க!! உடனே என்ன இருக்கவே இருக்கு, யுனிவர்சல் சொல்யூசன் – ”டும் டும் டும்”!

“நெருப்புன்னா வாய் வெந்துடவா போகு்து…உடனேவா கல்யாணம் பண்ணிட போறோம்..ஆரம்பிக்கலாம்..பார்த்துக்கிட்டே இருப்போம்..அமைஞ்சா பண்ணலாம்…எப்படியும் ஒரு வருஷம் ஆகும்..அதுக்குள்ளே நீயும் வேலைக்கு டிரை பண்ணு”னு ஜாதகத்தை/பயோடேட்டாவை தூசு தட்ட ஆரம்பிச்சுடுவாங்க!! சமாளிக்கணுமே…
”நாங்க ப்ராஜக்ட் பண்ற இடத்துலேர்ந்தே எனக்கு வேலைக் கொடுக்கறேன்னு சொல்லியிருக்காங்க,செண்ட்ரல் கவர்மெண்ட் வேலை…இதெல்லாம் அப்புறம் பாக்கலாம்”!!

இந்தப் பொய்யை சொன்னப்புறம்தான் எங்களுக்கே இந்த ஐடியா கிளிக் ஆச்சு.. இவங்க கிட்டேயே கேட்டு பாக்கலாம்,”சம்பளம் வேணாம்..எக்ஸ்பிரியன்ஸ்க்காக ஒரு ஆறுமாசம் வேலை செய்றோம்”னு பிட்டை போட்டா என்னனு! வொர்க் அவுட் ஆச்சு! வைவா முடிஞ்சு இரு வாரம் ரெஸ்ட் எடுத்துகிட்டு சென்னைக்கு வந்துட்டோம்!! ஆறுமாசம் வேலை – கண்ட்ராக்ட் பொசிஷன்! அதுக்குள்ளே அவங்களே ”பட்சி சிக்கிடுச்சு” ரேஞ்சுலே ப்ராஜக்ட் அசிஸ்டெண்டா 5000 சம்பளத்துலே வேலை தந்துட்டாங்க!! எப்படியோ, அதுக்குள்ளே கொஞ்சம் கொஞ்சமா பிக்கப் ஆச்சு, எங்க ஐடி! ஃப்ரெஷரா இருந்தப்போ எங்களை கண்டுக்காத இந்த ஐடி கம்பெனிங்கல்லாம் நாம ஒரு வருஷம்/ ரெண்டு வருஷம் எக்ஸ்ப்ரியன்ஸாகிட்டோம்னு தெரிஞ்சதும் நமக்குக் கொடுக்கற வரவேற்பு இருக்கே! அதும் நம்மை கண்டுக்காத கம்பெனிங்க, நம்மளை வா வான்னு கூப்பிடறபோ ‘ப்போ போ’னு நாம சொல்றதுல இருக்க ஒரு (அல்ப) சந்தோஷம்!! சான்ஸே இல்ல!! 🙂 எப்படியோ ஒன்றரை வருசம் அந்த கேம்பஸிலே ஒட்டிக்கிட்டு ஆளுக்கொரு சாஃப்ட்வேர் கம்பெனியிலே செட்டில் ஆகியாச்சு..அப்புறமா..கொஞ்ச நாள்லே கல்யாணம்..என்ன..And then they lived happily ever after-ஆ!!அவ்வ்வ்வ்..அதெல்லாம் only in fairy tales-ன்னு நான் புரிஞ்சுக்கிட்டேன்! நீங்க இன்னுமா புரிஞ்சுக்கலை…ஐயோ ஐயோ!! 🙂 (எப்படியோ கேப்லே நான் fairy ஆகிட்டேன்!!)

சரி இதெல்லாம் எதுக்கா..சென்னையை எனக்குத் தெரிஞ்சவரைக்கும் சுத்திக்காட்டி இருக்கேன்லே!! 🙂

உபரிக்குறிப்பு : அந்த அடையார் பேக்கரிக்கு மேலே ‘Shakes n Creams ‘னு ஒரு கடை இருக்கும் – காலேஜ் டைப் ‘பர்த்டே பார்ட்டி’க்கு பர்ஸுக்கு ஏற்ற இடம் – குவாலிட்டி நல்லா இருக்கும் – யாரும் வந்து என்ன வேணும்னெல்லாம் கேட்க மாட்டாங்க. நீங்க எவ்ளோ நேரம் வேணா பேசிக்கிட்டு இருக்கலாம்..நீங்களே போய் சொன்னாதான் உண்டு!

Advertisements

Add a comment ஓகஸ்ட் 28, 2009

ஐ லவ் யூ சென்னை!!

அது ஒரு மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனம். ஒரு சயிண்டிஸ்ட்-இன்-சார்ஜ் அலுவலகம்.

“இந்த நகரம் உனக்கு பரிச்சயமானதா?”

“ஓ..எங்கள் ஊரிலிருந்து இங்கேதான் நாங்கள் வருவோம்..பண்டிகைக்கு உடைகள் எடுக்க”

மெலிதாக புன்னகைத்துக்கொண்டார்.

“சரி, சிறிது நேரம் வெளியே காத்திருங்கள், கூப்பிடுகிறோம்!”

ச்சே..சின்னப்புள்ளத்தனமா சொல்லிட்டேனோ..ஆனா உண்மையதானே சொன்னேன்!!

CSIO. Central Scietific instrumenst Organidation-இல் தலைமை சயிண்டிஸ்ட் அறையில்தான் மேற்கூறிய உரையாடல் நடைபெற்றது, linked list programming, shortest path algorithm, heap sort, bubble sort, neural netwoking, expert systems கேள்விகளுக்குப்பிறகு!

CSIR MADARS COMPLEX, தரமணி. அடையார் CLRI, CEERI, CECRI, NEERI, CSIO, மெட்டாலர்ஜிக்கல் ஆராய்ச்சிக் கூடங்கள். இன்றைய அசெண்டாஸ் கட்டிடத்திற்கு எதிரில் இருக்கும் கேம்பஸ். ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் இந்த கேம்பஸ்தான் அங்கே பெரிய கட்டிடம். முன் இந்த கேம்பஸ்தான் அடையாளம்..

ரானே மெட்ராஸில் வேலை செய்த எனது பள்ளி நண்பனுக்கு csioவில் வேலை செய்துக்கொண்டிஒருந்த நண்பர் பரிச்சயம். அவர் மூலமாக எங்களது (எனதும் லதாவினதும்) ரெசியுமேவை அனுப்பி நேர்முகக்காணலுக்கு வந்திருந்தோம்.இப்போதைக்கு, 45 நாட்களுக்குக் மட்டும் கிடைத்தால் போதும்…இதைவைத்தே அடுத்த ஆறு மாதங்களுக்கு ஏதேனும் வாய்ப்புக் கிடைக்கிறதாவென பாக்கலாம் என்று பேசிக்கொண்டோம்.

MCA ஃபைனல் இயர். ஐந்தாம் செமஸ்டர். ஒன்றரை மாதங்களுக்கு ப்ராஜக்ட் வொர்க். கண்டிப்பாக ஏதேனும் நிறுவனத்தில் சேர்ந்து ரியல் டைம் ப்ராக்ஜட் செய்திருக்க வேண்டும். இல்லையெனில் பல்கலை. கைட் நிராகரித்துவிடுவார்கள். கிடைத்த அவகாசமோ கொஞ்சம்.எங்கள் செட் மாணவிகள் முக்கால்வாசி பேர் பெங்களூருக்கும் மீதிபேர் ஹைதராபாத்திற்கும் மூட்டைக் கட்டிக்கொண்டிருக்க நானும் என் தோழியும் வந்திறங்கிய இடமோ மெட்ராஸ். எல்லோருமே ஜாவா, ஜாவா ஸ்விங், ஆப்லெட்ஸ், கோர்பா, ஏபிஐ என்று பின்னி பெடலெடுத்துக் கொண்டிருந்தார்கள். மேலும், என் மூளையோ வெறும் 32KBதான் – SSI-இல் ஜாவா படிக்க 12K கொடுக்க வீட்டிலும் மறுத்து விட்டார்கள்!! ஆசை, காதல் எல்லாமே ‘சி’! அதிலும் எம்பெடட் சிஸ்டம்ஸில்தான் வேலை செய்ய வேண்டுமென்றுக் கொள்கை வேறு!!

”செந்தாமரை மேடத்தை பர்க்கணும்” – உதவியாளர் அழைத்துச் சென்றார்.
மேல்தளம். R&D செக்‌ஷன்.
வழக்கம்போல கேள்விகள்….எவ்ளோ பர்செண்டெஜ், உங்கள் விருப்பங்கள், இத்யாதிகள்.

செந்தாமரை மேடம். சையிண்டிஸ்ட் சி. எம்படெட் நெட்வொர்க்கிங்க் ப்ராகஜட். கணினி மொழி சி. (ஹே!!!). அடுத்து அவர் சொன்னதுதான் ஹைலைட் – ”உங்களுக்கு 45 நாட்களுக்கு மட்டுமே ப்ராஜக்ட் தர முடியாது…இது ஆறு மாதப்ராஜக்ட். தொடர்ந்தும் நீங்கள் வருவதாக வாக்குக் கொடுத்தால் தொடரலாம்”. பழம் நழுவி ப்ராக்ஜடில் விழுந்தது. இனி அடுத்த மாதத்திலிருந்து எங்கள் முகவரி மெட்ராஸ் என்ற நினைப்பே உற்சாகத்தைக் கொடுத்தது!!

எல்லோரும் காசுக் கொடுத்து ப்ராஜச்ட் செய்துக்கொண்டிருக்க, ப்ராஜக்ட் செய்தால் காசும் கொடுக்கும் இடம் அது!! ஐடியா இதுதான் – புதிய தொழில்நுட்பங்களை மாணவர்கள் விரல்நுனியில் வைத்திருப்பார்கள், அவர்களைக்கொண்டு தேவையான வேலைகளை வாங்கிக்கொள்வார்கள் – சயிண்டிஸ்ட்கள் கான்செப்ட் லெவலில் கில்லியாக இருப்பார்கள் ! இருசாராருக்கும் பயன்- மாணவர்களுக்கு ப்ராஜக்ட் – இவர்களுக்கு வேலை! அண்ணா பல்கலை, பிட்ஸ், REC – மாணவர்களுக்கு கல்லூரி பெயரே கடவுச்சீட்டு. ஆனாலும் எங்களைப்போல சாதா பல்கலை.வாசிகளுக்கும் புகலிடம் அளித்தது…இந்தக் கேம்பஸ்!! இப்படி ஆரம்பித்ததுதான் – இங்கேயே வேலை,வீடு என்று சென்னை எனக்குத் தஞ்சமாகியது!!

புனே, பெங்களூர், ஹைதராபாத் வாய்ப்புகளையெல்லாம் நிராகரிக்குமளவிற்கு சென்னை என்னை ஈர்த்தது!! ப்ராஜச்ட் கொடுத்தது-படுத்துறங்கக் கூரை கொடுத்தது-வேலையும் கொடுத்தது-என் கனவுகளுக்கு உயிரும் கொடுத்தது!!

எனக்கு மட்டுமில்லை, சென்னையில் வசிக்கும் எல்லோருக்குமே இப்படிச் சொல்லிக்கொள்ள ஒரு சிறப்புமிக்க ஃப்ளாஷ்பேக் இருக்கும்தானே! 🙂

ஐ லவ் யூ சென்னை!!

Add a comment ஓகஸ்ட் 22, 2009

Goodbye Jayshree!

”மனைவி கொலை, கணவன் கைது”

”இளம்பெண் கொலை, கணவன் மேல் சந்தேகம்” – இவையெல்லாம் எனக்கு மற்றுமொரு செய்தியாகவே இருந்தது, இரண்டுத் தெருக்களுக்கு அப்பால் நடக்கும் வரை!

ஜெயஸ்ரீ. சமீபத்தில், மிகச் சமீபத்தில், ”மடிப்பாக்கத்தில் இளம்பெண் கொலை”யென்று கடந்த திங்கட்கிழமை முதன்மைச் செய்தியானார். “தனிக்குடித்தனம் போக வற்புறுத்தினார்” என்பதே காரணமென்று கணவரின் வாக்குமூலம் சொல்கிறது. இந்நிகழ்வு, எனக்குச் சினத்தையும், ஆற்றாமையையும், குழப்பங்களையும் ஒருசேர உண்டாக்குகிறது!!

ஜெயஸ்ரீயின் கொலை திட்டமிட்டது அல்ல. அந்த நிமிடத்தின் கோபம் அல்லது வெறி..ஈகோவின் வெளிப்பாடாக சொல்லப்பட்டாலும், காதலித்து மணந்தவளை கொலை செய்யுமளவிற்குக் கொண்டுச் சென்றது எது? பொறுமையும், சகிப்புத்தன்மையும் இல்லாமல் போய் விட்டதா?

ஒரு பெண் ஏன் தனிக்குடித்தனம் செல்ல விரும்புகிறாளென்பதற்கு ஆயிரம் காரணங்களுண்டு. ஒரு மருமகளாக நீங்கள் இல்லாத வரையில், அதைப் புரி்ந்துக்கொள்ள இயலுமா என்பது சந்தேகமே! ஆனால், பிரச்சினைகளில்லாத குடும்பங்கள் இருக்கிறதா என்ன? அதற்கெல்லாம் இதுதான் தீர்வா? தனிக்குடித்தனம் போக ஒரு பெண் வற்புறுத்தினால் இதுதான் முடிவா? என்னவொரு குடும்ப அமைப்பு இது?

பெற்றோரை/முதியவர்களை பராமரிப்பது என்றால் ஏன் நாம் பையனின் பெற்றோர் என்றே அனுமானித்துக்கொள்கிறோம்?! ஒரு பையன்/ஆண் பெற்றோரோடு கடைசிவரை வாழ அனுமதிக்கிற நமது குடும்ப அமைப்பு, பெண்ணின் பெற்றோர் பெண்ணோடு வாழ்ந்தால் ஏன் நக்கலாய் சிரிக்கிறது? பையனின் பெற்றோரை, மருமகள் கவனித்துக் கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கிற சமூகம், பெண்ணின் பெற்றோரை(பெண்களை மட்டுமே பெற்றவர்களின் நிலைக்) குறித்து சிந்திக்க மறுப்பது ஏன்?

அப்படியே, பெண்கள், தங்கள் பெற்றோரை பராமரிக்க வேண்டுமானால் (அதுவும் பெண்ணின் சம்பளத்திலேயேதான்) திருமணத்திற்கு முன் ஒப்புதல் பெற வேண்டியிருப்பது ஏன்? பையனின் கடமை என்பது தன் பெற்றோரைப் பராமரி்ப்பதாக இருக்க, பெண்ணின் கடமை என்பது புகுந்த வீட்டினரைப் பராமரிப்பதாக மட்டுமே மாறிப்போவதேன்?! பெண்ணின் பெற்றோர், பெண்ணோடு இருந்தாலும் அது குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதற்கும் இதர இத்யாதிக் கடமைகளுக்காகவும்தான்! (இதற்கு அயல்நாடுகளில் செட்டிலாகி இருக்கும் என் தோழிகள்தான் உதாரணம். பிள்ளைப்பேறின்போது அல்லது ஏதேனும் உதவி தேவைப்படும் பட்சத்தில் உடனே விமானமேறுபவர்கள் பெண்ணின் பெற்றோர்களாகத்தான் இருக்கிறார்கள்!! அல்லது, உதவி தேவைப்படும் பட்சத்தில் உடனே அணுகக்கூடியவர்களாக பெண்ணின் பெற்றோர்களே இருக்கிறார்கள்!)

இந்த அமைப்பு பையன்களுக்கு எவ்வித இழப்புகளையும் கொடுப்பது இல்லை…வீட்டைவிட்டு இன்னொரு வீட்டிற்குச் சென்று வாழ வேண்டியதில்லை..அப்படியே இருந்தாலும் அது ”சொல்ல மறந்த கதை”யாகி விடுகிறது!! புது மனிதர்களுடன் ஒரே வீட்டில் வாழ வேண்டிய கட்டாயமில்லை..அவர்களை நேசித்துதான் ஆக வேண்டுமென்ற அவசியமேற்படுவதில்லை…அவர்களுக்குக் கட்டுப்பட வேண்டியதில்லை!சொந்தப் பெற்றோரைப் பார்க்க வேண்டுமெனில் யாரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை!!

இப்படி ஒரு அமைப்பை யார் உருவாக்கினார்கள்?
இந்த அமைப்பு இன்னமும் ஏன் மாறாமலிருக்கிறது அல்லது மாற்றாமலிருக்கிறோம்?

இந்த அமைப்பு நன்மைப் பயக்கிறது எனில் ஜெயஸ்ரீகளின் உயிரை ஏன் காவு வாங்குகிறது?

Add a comment ஓகஸ்ட் 20, 2009

பன்றிக்காய்ச்சல், வேளச்சேரி,பள்ளிகள் மற்றும் பெற்றோர்…

அமெரிக்கா, மெக்ஸிகோ என்றுக் கேள்விப்பட்டு கடைசியில் இந்த பன்றிக்காய்ச்சல் வந்துவிட்டது எங்கள் வீட்டுக்கருகில். நான்காவது Hop-இல் தெரிந்த ஒருவருக்கு பாஸிடிவ். நேற்றுக்காலை வரை எந்தக்கேள்வியுமில்லாமல்தான் அவரவர் பணியிடத்திற்குச் சென்றுக்கொண்டிருந்தோம். பப்புவை பள்ளிக்கு அனுப்புவதிலும் எந்தக் கேள்வியுமில்லாமல். அந்தச் சிறுவனின் மரணம், உடனே பரவிய முன்னெச்சரிக்கை பற்றிய மின்மடல்கள், மாஸ்க்குகள் பற்றிய விவரங்கள், சம்பாஷணைகள் என்று நேற்று மதியத்திற்குள் நீக்கமற நிறைந்திருந்தது பன்றிக்காய்ச்சல் கவலைகள்.

மதியத்திற்குள் அலுவலக நண்பரின் குழந்தைகள் படிக்கும் பள்ளி விடுமுறையை அறிவித்திருந்தது. அதைக்கேட்டு முடிப்பதற்குள், வேளச்சேரியில் பத்து பள்ளிகளில் விடுமுறை என்றச் செய்தியும் சேர்ந்திருந்தது. பப்புவின் பள்ளிக்குத் தொடர்புக் கொண்டபோது, அவர்கள், இதைக்குறித்து அரசு அலுவலர்களைத் தொடர்புக்கொண்டு பேசிக்கொண்டிருப்பதாகவும், விடுமுறை அறிவிக்க அரசு ஆணை எதுவும் அந்தப்பகுதிக்கு இல்லாததாகவும், குழந்தைகளை அழைத்துச் செல்ல விரும்பும் பெற்றோர் அழைத்துச் செல்லலாமென்றும் கூறினர்.

பப்புவுக்கு வேறு நேற்றிலிருந்து மூக்கு ஒழுக ஆரம்பித்திருந்தது. அந்த மின்மடல்களைப் படித்து படித்து எனக்கும் அதிலிருந்த அறிகுறிகள் இருப்பதாகவே ஒரு மாயை. சொல்லவா வேண்டும்…கவலைப் படுவதுதான் கை வந்த கலையாயிற்றே!! மூன்று மணிக்கு பப்பு வீட்டிற்கு வந்துவிட்டாள். டைரியில் நோட் : அரசு ஆணை வரும் வரை பள்ளி இயங்கும் என்றும் குழந்தைகளுக்கு சளி இருமல் காய்ச்சல் இருந்தால் அனுப்ப வேண்டாமென்றும் இருந்தது. இந்தவாரம் முழுவதும் பள்ளிக்கு அனுப்ப வேண்டாமென்று இப்போது முடிவு செய்துள்ளோம்.

அனுப்பிவிட்டு பயந்துக்கொண்டிருப்பதை விட இது மேல் என்றுத் தோன்றுகிறது. ஆனால் எவ்வளவு நாளைக்கு?!! I am paranoid. அதீத எச்சரிக்கையுணர்வும், அச்சமும், கவலையுங்கொள்வதுமே திடீரென்று நமது வாழ்க்கையாகிவிட்டதோவென்றுத் தோன்றுகிறது!
முன்பு ஆந்தராக்ஸ் பயம் பரவியபோது இப்படி இல்லவே இல்லை, நான்!! எனது அச்சம், கவலை, நம்பிக்கை எல்லாவற்றுக்கும் ஒரே காரணம் – பப்பு!! (கடவுளுக்கு நன்றி!)

சஞ்சயின் அம்மாவை நினைத்துப்பார்த்தேன். இதயம் வலித்தது. தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியை இறைவன் அவருக்குத் தரவேண்டுமாய் வேண்டிக்கொள்கிறேன். அந்தக்குழந்தையின் வலி, அதைக்கண்டு பெற்றோரின் வலி….எல்லாம் ஒரு வைரஸினால்! அந்தச்சிறுவனின் தந்தை சிங்கப்பூரிலிருந்து வந்திருந்தார், அச்சிறுவனுக்கு ஏற்கெனவே ஆஸ்த்மா என்று எத்தனையோக் காரணங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்…ஆனால், அந்ததாயின் இழப்பை எந்தக் காரணம் ஈடு செய்யும்?! 😦

Add a comment ஓகஸ்ட் 11, 2009

The Very Hungry Caterpillar

நானும் பப்புவும் ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தோம். The Very Hungry Caterpillar. ஒரு ஞாயி்றுக்கிழமையின் காலையில் முட்டையிலிருந்து வெளிவரும் ஒரு கூட்டுப்புழு அடுத்த ஞாயிறுக்குள் கூட்டுக்குள் அடையும்வரை பயணிக்கும் கதை. மிகுந்த பசி கொண்ட கூட்டுப்புழு , முதல் நாள் ஒரு ஆப்பிள், இரண்டாம் நாள் இரண்டு பேரிக்காய்கள், மூன்றாம்நாள் மூன்று பிள்ம்கள் என்று ஒரு வாரம் முழுக்க உணவுண்டு, அது போதாமல் கேக், ஐஸ்கிரீம், சலாமி என்று சாப்பிட்டு சிறிய (கூட்டுப்)புழுவிலிருந்து பெரிய (கூட்டுப்)புழுவாக மாறி பட்டாம்ப்பூச்சியாக வளருவதை சொல்லும் குழந்தைகளுக்கான படக்கதை. சாப்பிட்டு முடித்து, ஒரு கூட்டைத் தானேக் கட்டிக்கொண்டு இரு வாரங்களுக்கு அதனுள்ளே வசித்து, பின்னர் ஒரு சிறு ஓட்டைவழியே தன்னுடலை நுழைத்து வண்ணமிகு ப்ட்டாம்பூச்சியாக வெளிவருகிறது என்று பப்புவிற்குச் சொல்லிக்கொண்டிருந்தேன்.

முன்பொருகாலத்தில் மெயில்ஃபார்வார்டாக சுற்றிக்கொண்டிருந்த ஒரு கதைதான் நினைவுக்கு வந்தது. அதுவும், முதல்முதலாக வேலைக்குச் சேர்ந்தால் கடமையாகச் செய்யும் முதல்வேலையே ஃபார்வர்டு மெயில்களை படிப்பதும் அதைத் தொடர்ந்து ஃபார்வர்டு செய்வதும்தானே!! அதிலொன்று கேட்டர்பில்லரைப் பற்றியது. ஒருவர் மிகுந்த கவனத்தோடு கேட்டர்பில்லரின் வாழ்க்கைசுழற்சியை கவனித்து வந்தார். அது கூட்டுப்புழுவாக மாறியதும் அது வெளிவரும் அந்த நொடிக்காக ஆவலுடன் காத்திருந்தார். கூட்டிலிருந்து வெளிவர அந்தப்புழு உள்ளாகும் சிரமத்தைக் காணச்சகியதவராய், அந்தப் புழுவுக்கு உதவுவதாய் எண்ணி கூட்டைக் கத்தரித்து தாராளமாக வழியுண்டாக்கி அந்தபுழுவை வெளிவ்ரச்செய்வார். ஆனால் அந்தபுழு பட்டாம்பூச்சியாக மாறமுடியாமல், பறக்கவுமுடியாமல் தத்தித்த்தி வாழ்நாள் முழுக்க மிகுந்தச் சிரமப்படும். உண்மையில், அந்தச் சிறியதுவாரத்தின் வழியே அது வெளிவரும்போதுதான் வண்ணத்துப்பூச்சியாக முழுஉருவம் கொள்கிறது, அதன் உடல்வழியே இறக்கைகளுக்கு தேவையான சத்துகள் சென்றுச் சேர்கிறது. அவர் உதவி செய்வதாய் நினைத்து செய்த செயல் அந்த உயிரின் இயல்பு வாழ்க்கையையே பாதித்துவிட்டது என்பதாய் முடியும்! ஏனோ எனக்கு இந்தக்கதை எனக்கு மஞ்சுவையே எப்போதும் நினைவூட்டும்! மஞ்சுவிடம் இந்தக் கதையைச் சொன்னபோது, ‘நானும் அந்த கூட்டுப்புழு போன்ற நிலையில்தானே முல்லை இருக்கிறேன்’ என்று சொன்ன அந்த சனிக்கிழமை காலைநேரம் இன்னும் மனதிலிருக்கிறது.

மஞ்சுவை நான் சந்தித்தது வொர்க்கிங் உமன்ஸ் ஹாஸ்டலில்!மஞ்சுவிற்கு ஏனோ என்னைப் பிடித்திருந்தது அவளது வாழ்வின் இருண்ட பக்கத்தை பகிர்ந்துக்கொள்ளுமளவிற்கு. மஞ்சுவிற்கு, தரமணிக்கு அருகில்தான் வீடு – குடும்பமும் உறவினர்களும் அந்த ஏரியா முழுவதும். ஏதோவொரு குடும்பப்பிரச்சினைக் காரணமாக வீட்டைவிட்டு வெளியேறிய மஞ்சு வந்தடைந்தது அடையாறில் ஒரு லேடிஸ் ஹாஸ்டல். கொஞ்சநாளில், மஞ்சுவின் அம்மா கண்டுபிடித்து வீட்டுக்கு அழைக்க மஞ்சு செல்ல மறுத்துவிட்டாள். சொல்ல மறந்துவிட்டேனே..மஞ்சு வேலை செய்தது ஒரு லெதர் கம்பெனியில் – பர்ஸ் தைப்பதில் ஸ்பெஷலிஸ்ட். இடைப்பட்டக் காலத்தில், லேத் பட்டறை வைத்திருப்பவனொருவனுடன் அறிமுகமாகி காதலாகிக் கனிந்து கல்யாணமுமாகியிருக்கிறது. ஒரு சில மாதங்களுக்குப்பின் அவன் சரியாக வீட்டுக்கு வராமல்போக பொறிதட்டிய மஞ்சுவிற்குத், தெரியவந்தது அவனுக்கொரு குடும்பம் ஏற்கெனவே இருப்பது. வாங்கிய கட்டில், பீரோ, கேஸ் கனெஷன், சாமான் செட்டுகள் மற்றும் இன்னபிறவற்றை ரெட் ஹில்ஸில் தோழியின் தாயின் வீட்டில் வைத்துவிட்டு, மஞ்சு தஞ்சமடைந்தது இப்போதிருக்கும் லேடிஸ் ஹாஸ்டலை.

”நானும் அந்த கூட்டுப்புழு மாதிரிதானே முல்லை..ஏற்கெனவே அவனுக்குக் கல்யாணமாகியிருந்தும், என்னை கல்யாணம் பண்ணி என் வாழ்க்கையைக் பாழாக்கிட்டான். நானும் அந்த றெக்கை முழுசா வளராத பட்டாம்பூச்சி மாதிரிதானே! நிறைய நாள் அவன் வீட்டுக்கு வரவே மாட்டான். ராத்திரி, பக்கத்துவீட்டுக்காரன் கதவை தட்டுவான். நான் தூக்கம் வராம முழிச்சுக்க்கிட்டே படுத்துக்கிட்டு இருப்பேன்” – மஞ்சு.

மஞ்சுவிடம் ஒரு பைபிள் இருந்தது. எனக்கென்னவோ மஞ்சு அவளுக்குத் தேவையான சக்தியை அந்த பைபிளிலிருந்து உறிஞ்சிக்கொள்வதாய் தோன்றும்! ‘உங்கம்மாக்கிட்டே போக வேண்டியதுதானே, மஞ்சு’ என்றதற்கு, “அவங்கல்லாம் ஒரு கும்பலா வாழ்றவங்க முல்லை, அங்கே போனா நிம்மதியா இருக்க முடியாது” என்றாள். ஒருவேளை, மஞ்சுவின் கணவன் உண்மையுள்ளவனாக இருந்திருந்தால், மஞ்சுவும் மிக அழகாக குடும்பம், குழந்தையென்று வாழ்ந்திருப்பாள். கவரவத்துடன் அம்மாவீட்டுக்குப் போக வர இருந்திருப்பாள். மஞ்சுவிற்கு இங்கிலீஷில் பேச மிகவும் ஆசை. விவேகானந்தாவில் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் சென்றுக்கொண்டிருந்தாள்.

ஹாஸ்டலை புதுப்பித்தல் காரணமாக நாங்கள் வெளியேற வேண்டிய சூழல் வந்தபோது நான் தோழியின் தோழிகளோடு ஒண்டிக்கொண்டேன்.மஞ்சு 600ரூ வீடு (அறை) பார்த்து, பொருட்களை எடுத்துவந்து வைத்துக்கொண்டாள். இரண்டு மூன்று பெண்களை வைத்து பர்ஸ் தைக்கும் தொழிலைச் செய்தாள். அது சரிவராமல் போகவே மறுபடியும் கம்பெனியில் சேர்ந்துக்கொண்டாள். அதற்குள் நான், பெங்களூர்-கல்யாணம்-திரும்பவும் சென்னை என்று வாழ்க்கைச்சுழற்சியை முடித்திருந்தேன். பப்புவுக்கு மூன்றுமாதங்கள் இருக்கும் போது வீட்டுக்கு வந்திருந்தாள். அதுதான் கடைசியாக நான் அவளைச் சந்தித்தது. சென்ற டிசம்பரில் மஞ்சுவிற்கு திருமணமாகியிருக்கிறது. அவளது தோழியின் அண்ணன்தான் மணமகன். அவருக்கு நீண்டநாட்கள் ஜாதகத்தடையால் திருமணமாகாமல் இருந்திருக்கிறது. அந்தத்தோழிக்கு மஞ்சுவின் நிலை தெரிந்து அவரெடுத்த முயற்சியே இந்தத்திருமணம். கூட்டுக்குடும்பம். மஞ்சுவுக்கென்று ஒரு குடும்பம். மஞ்சு ஒரு கேட்டர்பில்லர்தான், வாழ்வின் மீது பசிக்கொண்ட கேட்டர்பில்லர் – வாழ்ந்துவிடத்துடிக்கும் – வானத்தைத் தொட்டுவிட எத்தனிக்கும் பட்டாம்பூச்சியை உள்ளடக்கிய கேட்டர்பில்லர்!!

எனக்கென்னவோ, அவள் இறக்கைகள் முழுமையடையாத பட்டாம்பூச்சியாகத் தோன்றவில்லை. மஞ்சு எடுத்த முடிவுகள் சரியா தவறா என்று அவளது வாழ்க்கையை வாழாமல் விவாதிக்கமுடியாது. ஆனால், பாதுகாப்பானது என்று நான் கருதும், படிப்பு, நல்ல சம்பளத்துடன் வேலை என்ற ஆயுதங்களை….. தற்காப்புகளைக் கொண்டிருந்தும், நான் எடுக்கத் தயங்கும் முடிவுகளை மஞ்சு அநாயசமாக எடுத்திருந்தாள். ஒருவேளை, நல்லக் கல்விச் சூழலும், வேலைவாய்ப்பும் அமைந்திருந்தால்?! மஞ்சுவின் உறுதி, தைரியம் – வாழ்தலுக்கான விடாமுயற்சி – எல்லாவற்றுக்குமேல் வாழ்க்கையின் மீதிருந்த நம்பிக்கை – இவையே மஞ்சுவின் முழுமையடைந்த இறக்கைகள்!!

Add a comment ஓகஸ்ட் 3, 2009

பப்பு பள்ளியில் பெற்றோர் பட்டறை!

பப்பு பள்ளியில் கடந்த சனிக்கிழமை பெற்றோர் பட்டறை (workshop) வைத்திருந்தார்கள். காலையில் 10 மணிக்கு தொடங்கிய பட்டறை மதியம் 1 மணிக்கு முடிவுற்றது. மாண்டிசோரி முறைக்கல்வியை பற்றியும், இவர்களின் பள்ளிச் சூழலைப் பற்றியும், அணுகுமுறையைப் பற்றியும் பேசப்பட்டது. 11.30 மணிக்குப் பிறகு ஒரு மணிநேரம் – நாம் குழந்தைகளாக மாறி வகுப்பறையில் இருக்கும் உபகரணங்களை கையாளலாம். மாண்டிசோரி வகுப்பறைச் சூழலில் குழந்தைகளும் ஆண்ட்டியும் எப்படி communicate செய்துக் கொள்கிறார்கள் என்பதே நோக்கம்!

என் நினைவிலிருந்து சில பாயிண்ட்கள் :

1. மாண்டிசோரி சூழல் ஒரு prepared environment. 5 senses-ஐ அடிப்படையாகக் கொண்டது (EPL,Geography & Culture,Senses,Math etc). ஒரு வகுப்பில் 20-25 மாணாக்கர்கள் இருப்பர்.

2. 2.5 லிருந்து 3 வயது வரை குழந்தைகள் மிகவும் துறுதுறுவென்று இருக்கும். ஏனெனில் அந்தநேரம் தான் குழந்தைகளின் அறிந்துக்கொள்ளும் திறனும், மூளையும் செயல்பாடும் உச்சத்தில் இருக்கும். அதனால்தான் அவர்கள் ஒரு இடத்தில் நில்லாமல் அங்குமிங்கும் ஓடிக்கொண்டும் எல்லாவற்றையும் அறிந்துக்கொள்ளும் ஆர்வத்துடன் இருப்பார்கள். அந்தநேரத்தில் அவர்களுக்கானச் சூழலை ஏற்படுத்திக்கொடுப்பது நமது கடமை!

3.வகுப்பறையில் உபகரணங்கள் அடுக்கப்பட்டு இருக்கும். பிள்ளைகள் எதை வேண்டுமானாலும் எடுத்து உபயோக்கிக்கலாம். அவர்கள் எடுப்பது புதிதாக இருக்கும் பட்சத்தில் ஆனட்டி சொல்லித்தருவார்கள். உதவி தேவைப்படுமாயின் பெரியவர்களைக் கேட்க வேண்டுமென்று அறிந்துக்கொள்வார்கள்.

4. உபகரணங்களைக் கையாள்வது precised movements-ஆக. அதில் கட்டைவிரல்,ஆள்காட்டிவிரல், மோதிரவிரலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுச் செய்யப்படுகிறது. இது பின்னாளில் எழுதத் தொடங்கும்போது மிகவும் உதவியாக இருக்கும். சரியான பிடிப்பு, வேகத்தைக் கட்டுப்படுத்துவது போன்றவற்றை அவர்களுக்குத் தெரியாமலேயேக் கற்றுக்கொள்கிறார்கள்.

5. மலை அல்லது சூரியன் என்றதும் நாம் அதன் வடிவங்களின் மூலமே கற்பனைக் கொள்கிறோம். அதையேத்தான் மாண்டிசோரிச் சூழல் கடைப்பிடிக்கிறது. எல்லாமே வடிவங்களின் வழியாகவே – child size – குழந்தைகளின் பார்வையில்!!

6. இங்கு ஒருவருக்கொருவர் ஒப்பீடு கிடையாது. எல்லா குழந்தைகளுமே தனித்தன்மையானவர்கள் என்று நம்புகிறோம். “அந்தக் குழந்தைச் செய்யும்போது உன்னால் ஏன் செய்ய முடியவில்லை” என்று கேள்வி இங்குக் கிடையாது. ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் எல்லாத் திறமைகளுமே ஒளிந்திருக்கிறது. அந்தத் திறமைகளை வெளிவர வெளிக்கொண்டு வர நேரம்தான் முக்கியம்.

7. ஆன்ட்டி என்று ஏன் அழைக்கச் சொல்கிறோமென்றால், ஒரு பழகிய உணர்வு வருவதற்காகவே! அணுகக்கூடாதவர்களல்லவென்றோ அல்லது ஒரு பயத்தையோ உண்டாக்காமல் இருப்பதற்காகவும். இங்கு யாரும் சத்தம் போட்டுக்கூட பேசுவது கிடையாது. புது ஆக்டிவிட்டி கற்றுக்கொடுக்கும்போது, செயல்முறை மட்டும்தான். பேசுவது கிடையாது. (”வொர்க் பண்ணும்போது பேசக் கூடாது” என்று நாங்கள் விளையாடும்போது பப்பு சொல்லியிருக்கிறாள்.)

சில அடிப்படியான மாண்டிசோரி ஆக்டிவிட்டீஸை செய்துக் காட்டினார்கள்.

காயின் பாக்ஸ் :

பாக்ஸிலிருக்கும் எல்லா பிளாஸ்டிக் நாணயங்களையும் ஒவ்வொன்றாக எடுத்து வைத்து விட்டு, அதனுள் ஒவ்வொன்றாக போடுதல் – சத்தம் வராமல் – பின்னாளில் கணிதம் கற்க இந்தமுறை உபயோகப்படும்.

போரிங் :

கீழே தண்ணீர் ஊறாத ஒரு தடுப்பினை போட்டபின், ஒரு கிண்ணத்திலிருந்து இன்னொரு கிண்னத்திற்கு மாற்றுதல் – கடைசிச் சொட்டு அடுத்தப் பாத்தரத்தில் விழும்வரை காத்திருந்து பின் எல்லாவற்றையும் அதன் இடத்தில் வைத்தல். பொறுமை, வேகத்தை கட்டுப்படுத்துதல், மேலும் தவறு செய்தால் திருத்திக்கொள்வதை அறிந்துக் கொள்கிறார்கள்.

துணிக்கிளிப்-கள் – மூன்று விரல்களை ஒருங்கிணைக்கும் பயிற்சி.

இதையெல்லாம் எப்படிச் சொல்லித்தருவார்களென்றும் செய்துக் காட்டினார்கள். அதாவது one-to-one communication. மேலுன் இந்த உபகரணங்கள் எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். குழந்தைகளுக்குத் தேவையான உபகரணத்தை அவர்கள் தேர்ந்தெடுக்கலாம். யாராவது உபயோகித்துக் கொண்டிருந்தால், அது வரும் வரை காத்திருந்து, விரும்பும் உபகரணம் வந்தபின் எடுத்துக்கொள்ள வேண்டும். உபயோகித்தபின் திரும்ப அதன் இடத்தில் கொண்டு வைக்க வேண்டும். freedom & discipline!

EPL : Exercises of Practical Life

இது வாழ்க்கையின் நாம் அன்றாடம் செய்யக் கூடிய வேலைகளுக்குத் தயார்படுத்துவது.
கோப்பைகளை அடுக்கி எடுத்து வருவது, பேனா, கத்தரிக்கோல் கேட்டால் கொடுக்கும் முறைகள் முதலியன. ஆண்ட்டி சொன்னது, “நீங்கள் சாப்பிடும்போது உங்கள் குழ்னதைகளையே பரிமாற்ச் சொல்லுங்கள். சாம்பார் கொட்டிடுவாங்க என்றோ ஊத்திடுவாங்க என்றோ பயப்படாதீர்கள். அவர்கள் கீழேச் சிந்தமாட்டார்கள். ஏனெனில் சிந்தினால் அவர்கள்தான் துடைக்க வேண்டுமென்று அவர்களுக்குத் தெரியும். இங்கேக் கூட தண்ணீர் வைத்துச் செய்யும் எந்த ஆக்டிவிட்டியிலும் கீழே சிந்த மாட்டார்கள். ஏனெனில் அந்த உபகரணத்தோடு துடைக்க ஒரு துணியும் இருக்கும். கற்றுக்கொள்ளும்போது ஓஇரு முறை சிந்தொவிடும். அந்தத் துணி ஈரமாகிவிட்டால் அதை வைத்துவிட்டு, வேறு துணி எடுத்து வைக்கவேண்டும். அதை மாற்றுவதற்குப் பதில் அவர்கள் கீழே சிந்தாமல் பொறுமையாகச் செய்வார்கள்.”

silent hour : தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்தபடி முதலில் கைகளை கீழே தரையில் ஊன்றிக்கொண்டு, கண்களை மூடுயபடி அமர்ந்திருக்க வேண்டும். அது பழக்கமானபின் கைகளை கட்டிக்கொண்டு கண்கள் மூடியபடி. இது பழகியபின் உலலையும் மனதையும் மெதுவாக ஒருங்கிணைக்கும் பயிற்சி. (பப்பு என்னை சில சமயங்களில், close your eyes என்று சொல்லியிருக்கிறாள். அவளுக்கு முன் கைகளை கட்டி ஒற்றைக்கண்ணால் பார்த்தபடி அமர்ந்திருக்கிறேன். அவளும் ஒற்றைக்கண்ணால் நான் கண்கள திறந்திருப்பதை கண்டுபிடித்துவிடுவாள்!!)

Sensory : சிலிண்டர் ப்ளாக்ஸ், பிங்க் டவர் முதலியன்

இவை எல்லாமே ஒரு செமீ-யிலிருந்து 10 செமீ பரிமாணத்தில் அமைந்தவை – 10 பொருட்கள். உபயோகிக்க வேண்டும் பட்சத்தில் அதன் இருப்பிடத்திலிருந்து ஒவ்வொன்றாக குழந்தைகளின் இடத்திற்கு எடுத்து வர வேண்டும். அதைச் செய்து முடித்தபின் ஒவ்வொன்றாக எடுத்துச் சென்று அதன் இடத்தில் வைக்க வேண்டும்.

டச் போர்ட் : இது சொரசொரப்பான பகுதியும் மெதுவாக பகுதியும் கொண்ட ஒரு போர்டு. அதனை கைகளால் தடவிப் பார்த்து உணர்ந்துக்கொள்வதற்காக – இதில் வெர்ஷன்களும் உண்டு. இரு விரல்கள் கொண்டு உபயோகிப்பது முதல் நான்கு விரல்களைக் கொண்டு உபயோகிப்பது வரை. அதன்பின் geometric tray, binomial cube முதலியன் பற்றி.

மொழி : முதலில் எல்லா எழுத்துகளும் சப்தங்களின் மூலமே கற்றுத் தரப்படும். சப்தங்களைக் கொண்டு வார்த்தைகளை அவர்கள் சொல்வது, எழுத்துகளை சாண்ட் பேப்பரில் தொட்டு உணரச் செய்வது முதலியன. உங்கள் குழந்தை வீட்டுப்பாடத்தில் முடிந்தவரை நேரடியாக உதவுவதைத் தவிருங்கள். (எ.கா-ஆக, e-இல் ஆரம்பிக்கும் 5 வார்த்தைகள் என்றால் உடனே சொல்லி விடாதீர்கள். அவர்களாகவே யோசித்து சொல்லட்டும்.)

எண்கள் : தீஷூ சொல்லியிருந்தது போல மணிகளைக் கொண்டுதான் எண்கள் பயிற்றுவிக்கபபடுகிறது. பத்து பத்தாக கோர்க்கப்பட்டவை, அவற்றைக் கொண்டு கோர்க்கப்பட்ட 100 மணிகள் கொண்டவை, பத்து நூறுகள் சேர்ந்த 1000 மணிகள் கொண்டவையென்று. எண்கள் அதன் அளவுகளை கொண்டு கற்றுக்கொடுக்கப்படுவதால் apacus க்கு அனுப்ப வேண்டாமென்று சொன்னார் ஆண்ட்டி.

பெற்றோர்களின் கேள்விகள் :

பெற்றோர் 1 : ரொம்ப கொஞ்சமா ஹோம்ஒர்க் கொடுக்கறீங்க. அதிகம் டீவி பாக்கறாங்க. நீங்க இன்னும் கொஞ்சம் அதிகமா ஹோம்-ஒர்க் கொடுத்தீங்கன்னா அவங்க அதிலியே நேரம் செலவழிப்பாங்க.

ஆன்ட்டி : பள்ளியில்தான் அவர்கள் நிறைய வொர்க் செய்ய வேண்டுமேத் தவிர ஹோம் ஒர்க் கொடுப்பதில் விருப்பம் இல்லை. நீங்கள் குழந்தையுடன் நேரம் செலவிடுங்கள். கார்ட்டூன்கள் அதிகம் பார்க்க விடாதீர்கள். (குறிப்பு : ஹோம்ஒர்க் 5 வயதுக்கு மேலிருந்துதான் ஆரம்பமாகிறது!)

பெற்றோர் 2 : ரொம்பச் சேட்டை பண்றான்.வீட்டுலே சமாளிக்க முடியலை. ஏதாவது க்ளாஸ்-க்கு அனுப்பலாமா?

உங்க பிள்ளைக்கு 2.5 தானே ஆகுது. அப்படித்தான் இருப்பாங்க. க்ளாஸ் எல்லாம் டூ யர்லி. வெளிலே எங்கேயாவது கூட்டிட்டு போங்க. பெயிண்டிங் க்ளாஸ் அனுப்பலாம்.

(இன்னும் நிறைய கேட்டாங்க, மனதில் நின்றது இந்தக் கேள்விகள்தான்!நான் என்னென்ன ஆக்டிவிட்டீஸ் செய்து பல்பு வாங்கினேன் என்பதை பிறிதொரு இடுகையில் எழுதுகிறேன்!)

Add a comment ஜூலை 13, 2009

12 கேள்விகள் (குட்டீஸ் வெர்ஷன்)

‘மழை’ ஷ்ரேயா தான் இப்படி ஒரு ஐடியா கொடுத்தாங்க. பப்புகிட்டே இண்டர்வ்யூ செஞ்சு ஒரு போஸ்ட் போடுங்கன்னு! நன்றி ஷ்ரேயா!! இனி கேள்விகள் :

1. நீ எப்போ சந்தோஷமா இருப்பே?

உன் கூட விளையாடும்போது

2. நீ ஸ்கூல் போய்ட்டேன்னா நான் என்ன பண்ணுவேன்?

ஆஃபீஸ்

3. நான் ஆஃபீஸ் போய்ட்டா நீ என்ன பண்ணுவே?

சோகமா இருப்பேன்.

4. உனக்கு என்ன சாப்பாடுல்லாம் பிடிக்கும்?

சிக்கன், மட்டன் அப்புறம் நூடுல்ஸ்…சேமியா, இட்லில்லாம் பிடிக்காது..ப்ளக் (நாக்கை நீட்டி முகத்தை கோமாளித்தனமாக்குகிறாள்!)

5.ஸ்கூலுக்கு என்ன சாப்பாடு எடுத்துட்டு போகப் பிடிக்கும்?

நீட்டு முறுக்கு

6.அப்பா உன்னை என்ன செஞ்சு சிரிக்க வைப்பாங்க?

பேபேபேபே…மேமேமே அப்ப்டின்னா? ஆடு ஆச்சி ஆடு அப்படிதான் கத்தும். (ஏதாவது கோமாளித்தனமாக செய்திருக்க வேண்டும்!)

7. நாம ஒண்ணாயிருந்தா என்ன பண்ணுவோம்

விளையாடுவோம்

8. நாம் ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்கோமா?

இல்ல! என்னோடது பழைய ட்ரெஸ்ஸா? (அவ்வ்வ்வ்..அன்னைக்கு ஒரு புது டீ-ஷர்ட் போட்டு இருந்தேன்)

9. எனக்கு உன்னை பிடிக்கும்னு எபப்டி தெரியும்?
எப்படி எப்படியோ தெரியும்!

10. நான் உன்னை என்ன செஞ்சு சிரிக்க வைப்பேன்?

ஹெஹ்ஹே…ஹிஹ்ஹிஹீ(சிரிக்கிறாள்..ஹ்ம்ம்..கேள்வி போரடிக்குது போல)

11. டீவிலெ என்ன பார்க்க பிடிக்கும்?

டோரா, புஜ்ஜி….பெஞ்சமின்

12. எந்த புக் பிடிக்கும்?

டினோசர்

பி.கு 1: பகுதி பகுதியாத்தான் பப்புக்கிட்டே கேட்டேன். ரெண்டு மூணு கேள்விகளுக்கு மேலே மேடம் விளையாட ஓடிபோய்டறாங்க… மயில் விஜி அவங்க பப்புகிட்டே இதே மாதிரி ஒரு இண்டர்வ்யூ எடுக்கணும்னு கேட்டுக்கறேன்!(கேள்விகள் இதேதான் இருக்கணும்னு கிடையாது!!) 🙂

மடிப்பாக்கம் செல்லம்மாள் கல்யாண மண்டபத்தில் (சதாசிவம் நகர்) pebbles CD/DVD expo நடக்கிறது ஜூலை 12 வரைக்கும்! pebbles-இன், சிறாருக்கான அனிமல் சிடிகள்(பாடல்கள்), பஞ்சதந்திர கதைகள், பாட்டி கதைகள் பப்புவை சாப்பிட வைக்க கணிசமான அளவு உதவியிருக்கின்றன. விலை 99ரூ – இப்போது டிஸ்கவுண்டில் விலை குறைந்திருக்கலாம்!

நேற்று ஒரு 94.3 எப் எம்-இல் சுச்சி “கல்பனா சாவ்லா பிறந்தநாள், அதை டாட்டர்ஸ் டே கொண்டாடுறோம்’ன்னு பெண் குழந்தைகள் இருக்கும் பாடகர்களை பேட்டி எடுத்தார். இன்னொரு எப். எம்-ல் “டாக்டர்ஸ் டே”ன்னு சொல்லி மலர் ஹாஸ்பிடல்லேர்ந்து ஒரு டாக்டரை கூப்பிட்டு பேட்டி எடுத்தார்கள்! இரண்டுமே உண்மையா?

Add a comment ஜூலை 2, 2009

Z is for Zoo!

வண்டலுர் ஜூ. எனக்கு ஐஞ்சு வயசா இருக்கும்போது எங்க ஆயா என்னையும் இளஞ்செழியனையும் கூப்பிட்டு போனாங்க. ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்தாங்க. நாங்களும் சாப்பிட்டிக்கிட்டிருந்தோம். கடைசிலே ஆயாக்கும் ஐஸ்கிரீம்-காரருக்கும் சண்டை. என்னன்னா, அவர் ‘ரெண்டு அர்ரூபா’ ரெண்டு அர்ரூபா’ ன்னு சொன்னாராம். கடைசிலே ஐஞ்சு ரூபா கேட்டுருக்கார்.எங்க ஆயா ‘ரெண்டு ஐஸ்க்ரீம் அரை ரூபா’ன்னு நினைச்சு வாங்கிக் கொடுத்திருக்காங்க!இப்போவரைக்கும் எங்க ஆயா அதை மறக்கலை..போன சனிக்கிழமை பப்புவை கூப்பிட்டு போறோம்-ன்னு சொன்னதும் அவங்க இதை திரும்ப எங்களுக்கு (10001வது தடவையா) ரி-ப்ளே பண்ணாங்க!எனக்கு இதெல்லம் ஞாபகம் இல்லை..ஆனா ஒரு யானை மேலே ஏறனும்னு அடம் பிடிச்சது மட்டும் ஞாபகம் இருக்கு!

எட்டாவது படிக்கும்போது எங்க ஸ்கூல் டூர். வண்டலூர் ஜூ, வேடந்தாங்கல் அப்புறம் மகாபலிபுரம். ரொம்ப ஜாலியா இருந்துச்சு. யாரு அனிமல்ஸை பார்த்தது…ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து ஃபோட்டோ எடுக்கறதும், க்ரூப்பா பாட்டு பாடறதும், ஸ்னாக்ஸ் வாங்கி சாப்பிடறதும், ஜன்னல்கிட்டே நீ எனக்கு இடம் தரலைன்னு சண்டை போடறதுமா இருந்துச்சு! உள்ளேயே ட்ரெயின் ஓடுது..அதுல போகலாம்-ன்னு டூர் ஆர்கனைசர் வேற பில்டப்! ஒரு tram-ஐ காட்டி ட்ரெயின்-ன்னு சொல்லி ஏமாத்தினாங்களே..அவ்வ்வ்…அந்த ட்ராம் இன்னும் இருக்கு!

‘ட்ரெயின் புகழ்’ ட்ராம்!

மிருகங்களை பயமுறுத்த மூனு வழி இருக்கு.

1.நடந்தே போய் பார்க்கலாம்
2.வாடகை சைக்கிள் கிடைக்குது.
3.அப்புறம் ‘ஜூ உள்ளேயே ஓடற ட்ரெயின்’. (ஒரு மணிநேரம் ரவுண்ட்)

சைக்கிள்லே என்னையும் பப்புவையும் வைச்சு முகில் ஓட்டினாலும் சைக்கிள் தாங்குமானு டவுட் இருந்ததாலே ட்ராம்-க்கு டிக்கெட் வாங்கினோம். எவ்வளவு சீக்கிரமா போறீங்களா அவ்வளவு சீக்கிரம் டிக்கெட் கிடைக்கும். (10 ரூபாய் – சிறாருக்கு, 20- ரூபாய் – பெரியவர்களுக்கு)நாங்க போனப்போ ரெண்டு ஸ்கூல்-லேர்ந்து வந்திருந்தாங்க.11.30 மணிக்கு போனோம், ஆனா மதியம் 2.15-க்குதான் டிக்கெட் கிடைச்சது. அன்னைக்கு வெதர் ரொம்ப நல்லா இருந்துச்சு! அதனால, கொஞ்ச நேரம் நடந்து சுத்திப் பார்த்துக்கிட்டு இருந்தோம். நல்லா சுத்தமா வச்சிருந்தாங்க. பப்பு அதைத்தான் காடுன்னு நினைச்சுக்கிட்டா. ”காஆஆடு, ஐஸ்க்ரீம் தீவு..நாம அப்புறம் எங்கே போறோம் டோரா’ன்னு கேட்டுக்கிட்டிருந்தா. பப்புவிற்கு ஏப்-தான் ரொம்ப பிடிக்கும். ‘ஏப் வந்து எனக்கு எக் கொடுக்கபோகுதா’ன்னு கேட்டா.அவ்வ்வ்! (ஒரு மூவிலே, தன் வீட்டுக்கு வந்த ஒரு பொண்ணுக்கு ஏப் காலையில் பால், முட்டை எல்லாம் தட்டில் வைத்து எடுத்து வரும்!!)

மயில், பலவித கிளிகள், குரங்குகள், மேலும் குரங்குகள், மேலும் மேலும் குரங்குகள்-ன்னு பார்த்துட்டு, ஒரு கல்மண்டபதுலே உட்கார்ந்து கொண்டு வந்த சாப்பாடு, நொறுக்ஸ் எல்லாம் காலி பண்ணிட்டு சரியா ரெண்டு மணிக்கு ட்ராம் வர்ற இடத்துக்கு போய்ட்டோம். அந்த ட்ராமிலே போறதும் ஜாலியாதான் இருந்துச்சு. நாம நடக்கற வேகம்தான்…;-). அங்கங்கே நிறுத்தி 10 நிமிஷம் டைம் கொடுக்கறாங்க. அதுக்குள்ளே பார்த்துட்டு வந்துடனும். பப்பு, பார்க்கிற மிருகங்களையெல்லாம் ‘ஏன் அது என்கூட பேச மாட்டேங்குது’ னு கேட்டுக்கிட்டிருந்தா. அவ்வ்வ்..the animated CDs n TV programs!! புலி பாட்டுக்கு அந்தப் பக்கம் போய்க்கிட்டிருக்கு. ‘புலி புலி’ ன்னு கூப்பிட்டா அது திரும்பி பார்க்குமா என்ன?! (நமக்குத் தெரியும் அது புலின்னு, ஆனா புலிக்குத் தெரிய வேணாமா..ஹ்ம்ம்..இதெல்லாம் சொன்னா பப்புவையாவது ஒழுங்கா விட்டு வைன்னு சொல்றது!!)

புலி, வெள்ளை புலி, ஹிப்போ, மான்கள், யானை, ஜீப்ரா, ஜிராஃப் எல்லாம் முடிச்சுட்டு 3.15-க்கு ஏறின இடத்துக்கே வந்துட்டோம். லேசா தூறல். வெளிலே வந்தப்புறம் செம மழை. பப்புவிற்கு வரவே மனசில்லை. நான் உள்ளேயே இருக்கேன்னு சொல்லிட்டு திரும்பி உள்ளேயே ஓடறா! ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்லை, நாம வீட்டுக்கே போகலாம்-ன்னு சொல்ல நினைச்சேன்..ஹிஹி்..செல்ஃப் டேமேஜாகிடும்ன்னு விட்டுட்டேன்! ;-))

நுழைவு கட்டணம் : பெரியவர்களுக்கு – 20 ரூ சிறார் – 10 ரூ
காமெரா கட்டணம் : 25 ரூ
நுழைவாயில் தாண்டி, உள்ளே ஒரு TTDC உணவகம் இருக்கு. மினரல் வாட்டர் வேணா வாங்கிக்கலாம். ட்ராம்/வாடகை சைக்கிளுக்கு கட்டணம் தனி. பொதுவான ஜூ ரவுண்ட்-உம், லயன் சஃபாரி-யும் இருக்கு. ஜூ ரவுண்ட் ஒரு மணி நேரம் – எல்லா மிருகங்களும்! லயன் சஃபாரி – 30 நிமிடங்கள் – சிங்கங்கள் மட்டும் – ஆனால் வெகு அருகில் பார்க்கலாம்! ஜு உள்ளே சென்றால் ஆவின் ஐஸ்க்ரீம் கடை இருக்கு. அது ஒன்னுதான் கொஞ்சம் ஆறுதல். மற்றபடி வேறு உணவகங்கள் எதுவும் இல்லை. குடிநீர், நொறுக்குத்தீனி, சாப்பாடு, தொப்பி கொண்டு செல்வது நல்லது!

Add a comment ஜூன் 30, 2009

சென்னை : குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள்

குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் பற்றிய அறிவிப்பு அம்மாக்கள் பதிவுகளில்.

Add a comment திசெம்பர் 6, 2008

சென்னை : குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள்

லிட்டில் தியேட்டர், கிறிஸ்மஸ் மாதத்தை முன்னிட்டு “Robinson Crusoe — Spaced Out” என்ற கருத்தில் குழந்தைகளுக்கான நாடகங்களை நிகழ்த்தவுள்ளது.

இடம் : மியூஸியம் தியேட்டர், பாந்தியன் சாலை, எழும்பூர்.
தேதி : 12 – 17 வரை, டிசம்பர் 08

Photobucket

அகில உலக கதைசொல்லி ஜீவா-வின் நிகழ்ச்சி ஜூம் கிட்ஸ், கேகே நகரில் நடைபெறுகிறது.

குழந்தைகளுக்கு பெற்றோருக்கும் வாரயிறுதி கொண்டாட்டமாக அமைய வாழ்த்துக்கள்!

2 பின்னூட்டங்கள் திசெம்பர் 6, 2008

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

ஜனவரி 2019
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Posts by Month

Posts by Category