Posts filed under: ‘சமூகம்‘
ஜீன்

I almost see her daily. லிஃப்டில் செல்ல காத்திருக்கும் நேரத்தில், அதே லிஃப்டில் இறங்கி வருவார். அவர் யாரையும் பொருட்படுத்தாமல்தான் கடந்துச் செல்வார். ஆனால், அவர் கடந்து சென்றதும், லிஃப்டில் பயணிப்பவர்கள், லிஃப்ட் உதவியாளர் முதல் பிற அலுவலக ஊழியர்கள் வரை உள்ளாகும்/காண்பிக்கும் உணர்ச்சிகள் இருக்கிறதே….அவர்களுக்குள் பார்த்து கண்சிமிட்டிக்கொள்வதும், சிரித்துக்கொள்வதும், பேசிக்கொள்வதும்!!!

”அவளுக்கு ரெண்டு பசங்கடா”

“டேய், அந்தப் பொண்ணு ஸ்மோக் பண்ணும்டா, தெரியுமா!!”

இன்னும் அந்த பெண் எந்த ஏரியாவிலிருந்து வருகிறாள், பூர்வீகம் எல்லாம் ஆராயப்படும்! ஏன் அந்தப் பொண்ணு ஜீன்ஸ்லியேதான் வருது – இப்படியாக!! அதுவும் அந்தபெண் ஸ்லீவ்லெஸ்-ல் வந்துவிட்டாலோ கேட்கவே வேண்டாம்!

ஏன் இவங்களாலே ஒரு பொண்ணு ஸ்மோக் பண்ணறதை இயல்பா எடுத்துக்கமுடியலை, ஆண்கள் புகைப்பிடிப்பதைபோல?

அதே புகைபிடிக்கும் இடத்துக்கு ஒரு ஃபாரினர் லேடி போனா இவங்க யாரும் கண்டுக்கிறதேயில்லையே!

ஒரு அயல்நாட்டு பெண் (சல்வாரிலேதான்) தினமும் புகைபிடிக்க வருவார். ஆனால், யாரும் அவரை இந்தளவுக்குப் சட்டை செய்தது போல் தெரியவில்லை!! (ஒருவேளை சல்வார் போட்டுக்கிட்டு புகைத்தால் ஒன்னும் பேசிக்க மாட்டாங்களோ என்னவோ!?!)

புகைப்பதை ஆதரிப்பதாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன் – அதைப் பொதுவில் வைப்போம் என்றே சொல்ல வருகிறேன் – புகைப்பதையோ அல்லது புகைக்க வேண்டாமென்று சொல்வதையோ!!

ஆனால், ஒரு பெண் ஜீன்ஸ் அணிவதோ அல்லது ஸ்லீவ்லெஸ் அணிவதோ ஏன் ஒரு பொருட்டாக வேண்டும்? ஒரு பெண் அணியும் உடை, கலாச்சாரத்திற்கு, பாரம்பரியத்திற்கு, குடும்பத்திற்கு, குடும்பத்தின் மானமாக இன்னும் என்னவெல்லமோவாக பார்க்கப்படுகிறது – ஆனால் அது அணிபவருக்கு, உடுத்துபவரின் வசதியாக இருக்கவேண்டுமென்பதைத் தவிர!!
உண்மையில் ஜீன்ஸ் அணிந்துக்கொள்ள வசதியானது. பராமரிக்க எளிதானது.

ஆண்கள், வசதியாக பாண்ட்களுக்கும், அரைக்கால் சட்டைகளுக்கும் மாறிவிட பெண்கள் எந்த காலநிலையாக இருந்தாலும் புடவையை கட்டிக்கொண்டு அழ நேர்ந்த காலகட்டம் எதுவென்றுதான் தெரியவில்லை. எனது பல தோழிகள் திருமணத்திற்குபின் நிரந்தர புடவைவாசிகளாக மாறிவிட்டார்கள் – குடும்பத்தினரின் விருப்பத்திற்காக. ஒரு காலத்தில், அம்மாவின் புடவையை எடுத்து சல்வார் தைத்துக்கொண்டவர்கள், அதே புடவைக்குள் தன்னை கஷ்டப்படுத்தி திணித்துக்கொண்டவர்கள் இவர்கள்!

இந்தப்புடவையைக் குறித்துதான் எத்தனை கண்ணோட்டங்கள் – முழுதுமாக உடலை மறைக்கிறது என்றும், உணர்ச்சிகளை தூண்டக்கூடியதாக இருக்கிறதென்றும்!! எது எப்படியாயினும், புடவைதான் பெண்ணுக்கு அழகு – புடவை அணிந்தவளே இந்திய பெண் – தமிழ் பெண் – நமது கோலிவுட்,டோலிவுட், பாலிவுட் எல்லாம் சுற்றி வளைத்துச் சொல்வதும் இதையே!!

”பாவாடை அணிந்தவள் – ஃப்ரி உமன்”!

”ஜீன்ஸ் அணிபவள் – எதற்கும் துணிந்தவள்”!!

”ஜீன்ஸ் அணிந்தவர்கள் – ஸ்லீவ்லெஸ் அணிந்தவர்கள் நமது கலாசாரத்திற்கு பங்கம் உண்டாக்கக் கூடியவர்கள்”

பெண்களின் உடை குறித்துதான் எத்தனை கண்ணோட்டங்கள்!!

பெண்கள் நீங்கலாக, மற்ற இந்தியர்கள் அனைவரும் அவரவர் வசதிக்கேற்ப உடையுடுத்தும்போது கேடடையாத இந்த கலாச்சாரம் மிகுந்த வியப்பூட்டுகிறது!!

Advertisements

Add a comment நவம்பர் 8, 2009

ஆயாத்துவங்கள்!!

நம்பிக்கைகள்தானே வாழ்க்கையை சுவாரசியமாக்குகின்றன! கீழே இருப்பவை சிறுவயதிலிருந்து நேற்றுவரை என் ஆயாவிடம் பல்வேறு தருணங்களில் நான் கேட்டவை. ஓவர் டூ ஆயா’ஸ்!

பாத்திரங்களை கழுவுவதற்காக சிங்கில் போடும்போது : பாத்திரத்தைக் காய விடக்கூடாது…தண்ணி ஊத்திவைக்கணும்..இல்லேன்னா வயிறு காயும்!

ஆள்காட்டி விரலை நீட்டிக்கொண்டு (ஸ்டைலுக்காக) சாப்பிடும் பழக்கம் இருந்தபோது:
சாப்பிடும் போது அஞ்சு விரலும் குவிச்சு வைச்சுதான் சாப்பிடணும் – இல்லாட்டி அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போய்டும்!!

ஊருக்குப் போகும்போது தலைக்கு எண்ணெய் வச்சு தலைகுளிக்கக்கூடாது! (ஆனா, தலை குளிச்சாத்தானே பஃப்-னு அழகா இருக்கும் என்ற பிடிவாதத்திற்குப்பின் சீயக்காய் வைத்து தலைகுளிக்க வேண்டாம், ஷாம்பூ உபயோகப்படுத்தலாமென்று தளர்த்தப்பட்டது!)

வீடு இன்னைக்கு துடைக்க வேண்டாம் – ஊருக்குப் போய் இருக்காங்க, வந்தப்புறம் துடைச்சுக்கலாம்.

செவ்வாய்க்கிழமை வெளியாட்களுக்கு காசு கொடுக்க வேண்டாம். (அவங்க சம்பளப் பணம்தான்!)

புது ட்ரெஸ் புதன்கிழமை போடணும். (புதன்கிழமையெல்லாம் புதுட்ரெஸ்தான் போடணும்னு சொன்னா எப்படி இருக்கும்!!)

நகத்தைக் கடிக்காதே – தரித்திரம்.

வேலைக்காரம்மாவுக்கு சாப்பாடு முதலில் வைக்கக் கூடாது. ஒரு நாலு சாதம் எடுத்து வாயிலே போட்டுக்கிட்டு அப்புறம் கொடு.

வடக்குப் பார்த்து உட்கார்ந்து சாப்பிடாதே! கஷ்டம் வந்து சேரும். (‘இதுக்கும்மேலயா?!!)

உப்பு கொட்டினியா, துப்பை கொட்டினியா? – (உப்பை கொட்டும்போது கண்டிப்பாக இதை சொல்லிவிட வேண்டும். சோ, துப்பைக் கொட்டியதாக ஆகாது!)

இருட்டினப்புறம் நகம் வெட்டாதே!

ஊரிலேர்ந்து முருங்கைக்காய் எடுத்துட்டு வராதே!

ஊருக்கு நான்-வெஜ் எடுத்துட்டு போனா ஒரு அடுப்புக்கரித்துண்டு போட்டு அனுப்பு.

கிழக்குப்பக்கம் தலை வச்சு படு.

சாதத்தை வேஸ்ட் பண்ணா பிற்காலத்துலே சாப்பாடு கிடைக்காது. (அந்த பிற்காலம் எனக்கு 20 வயசுலேயே ஆரம்பிக்கும்னு தெரியாது!)

சாயங்காலத்துலே தூங்கக் கூடாது..படிப்பு வராது.

சாயங்காலத்துலே சாதம் சாப்பிடக் கூடாது…படிப்பு வராது. (நொறுக்குத்தீனி சாப்பிடலாம்)

அன்ரூல்டு பேப்பரிலே எழுதும்போது எழுத்து கீழ்நோக்கி போகக்கூடாது. படிப்புலே கீழே போய்டுவே!

யாருக்காவது காசு கொடுக்கும்போது வாசல்படிலே நின்னுக்கிட்டு கொடுக்காதே. ஒன்னு அவங்களை உள்ளே கூப்பிட்டு கொடு, இல்லேன்னா நீ வெளிலே போய் கொடு!

குறிப்பு: இதெல்லாம், எங்க ஆயாவுடைய ‘நம்பிக்கைகள்’ இல்லேன்னா ‘வாழ்க்கை அனுபவங்கள்’ இல்லேன்னா ‘இந்திய பண்பாடு’ இல்லேன்னா ‘இந்திய கலாச்சாரம்’ இப்படி எதுவேனா வச்சுக்கலாம்!இதேபோல, உங்கள் ஆயாவும் உங்களுக்குச் சொல்லியிருந்தால் பகிர்ந்துக்கொள்ளுங்களேன் – பின்னூட்டமாகவோ, பதிவாகவோ!!

அடுத்த இடுகையில் ”ஆயாவின் அட்டகாசங்கள்” !!! ;-)))

Add a comment நவம்பர் 6, 2009

கல்நாயக்!

இது ஒரு பண்டோராவின் பெட்டி போல. வல்லியம்மாவின் மங்கையராய் பிறப்பதற்கே இடுகையே என்னையும் எழுதத் தூண்டியது! ”எனக்கும் இப்படி நடந்திருக்கிறது” என்று!

அவரது இடுகையை மேலோட்டமாக புரிந்துக்கொண்டு பின்னூட்டமிட்டுவிட்டேன். ஆனால், அதன்பின் நீண்ட நேரம் இடுகையைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். ஒருவேளை அவருடைய இடத்தில் நானிருந்தால், என்னால் என்ன செய்திருக்கக்கூடுமென்று!! அல்லது என்ன செய்திருப்பேனென்று! எதுவும் தோன்றவில்லை, ஆனால், சொல்வதற்கு ஏராளம் இருக்கிறது! சிறுவயதிலிருந்து நான் கடந்து வந்த ஒவ்வொரு நிகழ்ச்சியும் மனதில் வந்து போகிறது..அதனோடு, அவை தந்த வலிகளும்!!

பள்ளிககூடத்திற்குச் செல்ல, எங்கள் குடியிருப்பைத் தாண்டி மெயின் ரோடிற்கு வரவேண்டும். அங்கே ஒரு ஆட்டோ ஸ்டேண்டை கடந்துதான் மெயின் ரோடிற்கு கடந்துவர முடியும். எட்டாவது வகுப்பு, சென்றபின்னர் எனக்கு அந்த ஆட்டோ ஸ்டேண்டை கடப்பது நைட் மேராக இருந்தது. காலையில், தலையை வாரி, பையை எடுக்கும்போதே அந்த ஆட்டோ ஸ்டேண்ட் கிலி பிடித்துக்கொள்ளும்! ஒருமாதிரி பயம் என் வயிறு முழுதும் பரவும்! எல்லாம் எதற்காக..அங்கே கிராஸ் செய்யும்போது கேட்கும் சீழ்க்கையொலிகள், கிண்டல், கேலி குரல்களுக்காக,! இதற்காகவே, கவிதாவுடன் ஒன்றாக செல்ல ஆரம்பித்தேன்- ஒரு தைரியத்துக்காக!

கிண்டல், கேலி அல்லது சினிமா பாடல்வரிகள்தன்…ஆனாலும் அந்த street harassment கொடுத்த வலி என் சிறு வயதின் மனதினில் பதிந்தது…கல்லூரி சென்றும், யாரேனும் என் பின்னால் சாதாரணமாக நடந்து வந்தால் கூட இதயம் படபடவென்று அடித்துக்குமளவிற்கு ஆனது! எல்லாமே ‘நீ ஒரு பெண்..சதையாளானவள்..நாங்கள் பார்க்கவும், பார்த்து உணரவும், வார்த்தைகளால் சீண்டவும், முடிந்தால் தொட்டு சீண்டவும் நீ உண்டாக்கப்பட்டவள்’ என்று சொல்லிக்கொண்டே இருப்பது போல இருந்தது!

மதுரையிலிருக்கும்போது நிகழ்ந்தது இது. நானும், சீதாவும் சிம்மக்கல் செல்லும் நகரப்பேருந்தில் சென்றோம். பேருந்து மிகுந்த கூட்டமாக இருந்தது. எங்களுக்கு எப்படியோ உட்கார இடம் கிடைத்துவிட்டது. எங்களுக்கு முன்னிருக்கையில் அமர்ந்திருந்தவன் அருகில் நின்றுக்கொண்டிருந்த பெண்ணிடம் தவறாக நடந்துக்கொள்ள ஆரம்பித்தான். அந்த ஜனக்கூட்டத்தில் யாரும் இதைக்கண்டுக்கொண்ட மாதிரியே தெரியவில்லை. அவரவர் இறங்கும் இடம் எப்போதடா வருமென்று தவித்துக்கொண்ட மாதிரி இருந்தது. என்னருகில் அமர்ந்திருந்த சீதா கொஞ்சம் முன்நகர்ந்து அந்த ஆளின் தலையை பிடித்து இழுத்து ஆட்டினாள். அடுத்த நிமிடமே அந்த ஆள் எழுந்து அந்த கூட்டத்திலும் நகர்ந்து வாயிற்படியினருகில் நின்றுக்கொண்டான். நிறுத்தம் வருவதற்குள்ளாகவே இறங்கியும் சென்றுவிட்டான்.

இது நிகழ்ந்து நீண்ட நாட்களுக்கு அடிக்கடி நினைவில் வந்துக்கொண்டிருந்தது! என்னை நானே மிக அருவறுப்பாக உணர்ந்தேன். எனக்கு நிகழ்ந்தது போல, அதை நினைத்துக்கொண்ட போதெல்லாம் குளிக்கத் தொடங்கினேன், என் தோலையே கழட்டிவிடுவதுபோல!! அதிலிருந்து பேருந்தில் செல்வதை தவிர்க்கத் தொடங்கினேன். ரயிலில், யாராவது என்னை, எனது பெயரை, படிக்கும் கல்லூரியை பற்றி விசாரிக்கத் துவங்கினால் (நட்பாகக்கூட்!), பெயரை மாற்றிக்கூறினேன். தவறான கல்லூரியை குறிப்பிட்டேன்! அடுத்த செமஸ்டர் வந்தபின்னரே கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தேன்! மதுரை என்றில்லை..எந்த நகரத்திலும் ஒரு பெண்ணுக்கு நிகழக்கூடியதுதான் இது…!!

ஒரு டவுனிலிருந்து, எல்லோரையும் எல்லோருக்கும் தெரிந்த ஒரு சிறு ஊரிலிருந்து, வழியில் உங்கள் சைக்கிள்செயின் கழன்றால் உடனே வந்து சரிசெய்து ‘டீச்சர் பொண்ணுதானேம்மா’ என்று கேட்டுவிட்டு செல்லும் நபர்கள் நிறைந்த ஊரிலிருந்து வந்த எனக்கு இந்த சம்பவம் நடுக்கத்தையே, திடுக்கிடலையே தந்தது!!

சீதாவிற்கு அந்த தைரியம் வர..அது ஒரு நீண்ட பயணமாக இருந்திருக்க வேண்டும்! பயத்தை..அதிர்ச்சியை..ஒரு உடலாக உணரப்பட்ட தருணத்தை..உதறி அந்த ஆளின் முடியைப் பிடிக்க அவள் இதையெல்லாம் கடந்து வந்திருக்கவேண்டும்! நமக்காக யாரும் குரல் உயர்த்த மாட்டார்கள், இதுபோன்ற சந்தர்ப்பங்களில்! நாம்தான் நமக்காக எழுந்து நிற்க வேண்டும்! வல்லியம்மாவின் அனுபவம் உணர்த்துவதும் அதைத்தான்!

Add a comment ஒக்ரோபர் 30, 2009

The mad ad

“நீயும் ஆபிஸூக்கு போகாதே” என்று ஒரு சிறுமி வேலைக்குச் செல்லும் அம்மாவிடம் சொல்லுவதாக வரும் விளம்பரமொன்றை பார்க்க நேரிட்டது. எதற்காக…நீளமான பளபளக்கும் கூந்தலுக்காக!! அவளது தாய் சிறுமியாக இருக்கும்போது நீண்ட கூந்தலுடன் இருந்ததாகவும், தனக்கு அவ்வாறு இல்லையென்றும் குறைப்பட்டுக்கொள்வாள். தனது அம்மா ஓட்டிக்கொண்டு வந்த காரிலிருந்து இறங்கிய அச்சிறுமி பள்ளிக்கூடத்திற்குள் போகும்முன் மேற்கண்ட வசனத்தைச் சொல்லிவிட்டுச் செல்வாள். அவளது அம்மாவும் வேலைக்குப் போகும்வழியில் இதனை யோசித்துக்கொண்டு கவலைப்பட்டுக்கொண்டு காரை ஓட்டிச்செல்வாள். கடைசியில் ஒரு ஷாம்பூ பாட்டிலை வாங்குவாள்.

இந்த விளம்பரம் என்ன சொல்ல வருகிறது? இந்த விளம்பரம் சொல்லவரும் செய்தி சரியானதுதானா?

ஒரு பெண் தனது கேரியரைவிட, தனது குழந்தையின் நீளமான முடிக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மறைமுகமாக சொல்லப்படுவதாகவே தோன்றுகிறது!

பப்பு கார்னர் :

அவ்வப்போது ஆன்லைனில் கேம்ஸ் விளையாட பப்புவை அனுமதிப்பதுண்டு. அப்படி ஒருநாள் விளையாடிக்கொண்டிருந்தவள், “ஆச்சி, நான் பாயா கேர்லா” என்றாள்! அவ்விளையாட்டின் இடையில் ‘oh boy’ என்று வரும், விளையாட்டை பற்றி விளக்கும்போதோ அல்லது ஊக்குவிக்கும் போதோ அப்படிச் சொல்வதை கேட்டபின் அவளுக்கு வந்த சந்தேகமே அது!!

‘நீ கேர்ல்’தான் – என்று சொன்னதும், ‘ஏன் என்னை ஓ பாய் ன்னு சொல்லுது” என்றுக் கேட்டாள்.

Its time to change!!

Add a comment ஒக்ரோபர் 22, 2009

காந்தா அத்தையும் பிரபுதேவாவும்!!

காந்தா அத்தை எங்களுக்கு ஹவுசிங்போர்டு போனப்புறம்தான் பழக்கம். அது அப்போதான் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகள் என்பதால் அவ்வளவாக நிறைய பேர் வந்து குடியேறியிருக்கவில்லை. எங்களையும் சேர்த்து ஒரு பத்து பதினைந்து குடும்பங்கள். காந்தா அத்தை, பாண்டுரங்கன் சார், மணிமேகலை வீடு அப்புறம் ஏழுமலை வீடு, வெண்ணிலா வீடு என்று எல்லோருக்கும் எல்லோரையும் தெரிந்திருந்தது!அப்போதெல்லாம் எனக்கு மதியம் ஒருவேளைதான் பள்ளிக்கூடம் – நான்காம் வகுப்பு. பைக்கை உயிர்ப்பிக்கும் சத்தம், கார் கிளப்பும் சத்தம், சைக்கிள் மணிகள் என்று எல்லாம் ஓய்ந்து காலை, பத்துமணிக்குமேலே நிசப்தம் ஆக்கிரமிக்கும் நேரத்தில், பெண்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடுவார்கள். எப்போதும் ஒரே வீடாக இருக்காது…ஒருநாளைக்கு எங்கள் வீடு, அடுத்த நாள் உமா வீடு என்று மாநாடு மாறிக்கொண்டேயிருக்கும். ‘என்ன சமையல்’ என்று பேசியபடி, வீட்டு அழகுபொருட்களை செய்யத் துவங்குவார்கள் – தொங்கும் மீன்கள் அல்லது கிளிகள், உல்லன் நூலில் மேசைவிரிப்பு என்று அவரவர் கைவரிசையைக் காட்டியபடி வலை பின்னுவார்கள்….பின்னிக்கொள்வார்கள்!!

காந்தா அத்தைக்கு ஆந்திராவில் ஏதோ ஒரு கிராமம். ஆரம்பத்தில் அவர் பேசிய தெலுங்கு இங்கு தெலுங்கு பேசிய யாருக்குமே புரியவில்லை – அவ்வளது சுத்தமான தெலுங்கு! அத்தையுடன், அவரது தம்பி தியாகு மாமா தங்கியிருந்தார். தியாகு மாமாவிற்கு திருமாணமாகியிருக்க வில்லை. அங்கிளுக்கு வேலூரில் வேலை. காந்தா அத்தைக்கு இரண்டு பிள்ளைகள்.கவின் அண்ணாவும் நிவ்யாவும். அண்ணா அப்போது +1 படித்துக்கொண்டு இருந்தார். நிவ்யா என்னைவிட இருவயது சிறியவள். இருவருமே சென்னையில் ஹாஸ்டலில் தங்கி படித்துக்கொண்டிருந்தார்கள். லீவுக்கு வருவார்கள். அதனால், அத்தையின் ஒரு நாளின் பெரும்பகுதி ஆயாவுடனே கழிந்தது.

காந்தா அத்தையின் வீட்டுக்கு எதிர் வீட்டில் ருக்குபாய் டீச்சர் இருந்தார். கண்டிப்பு – அவரது முகத்தைப் பார்த்தாலேத் தெரியும். அவரும் தெலுங்கு. டீச்சர் தனியாகத்தான் தங்கி இருந்தார். அவரும் பெரிம்மாவும் ஒரே பள்ளியில்தான் வேலை செய்தார்கள். டீச்சரும் எங்க வீட்டுக்கு அடிக்கடி வருவார். பெரும்பாலும், வெள்ளி இரவுகளில், எங்கள் வீட்டில்தான் தூங்குவார். சாப்பிடும் போது நிறைய இறைப்பேன், தட்டைச் சுற்றி…டீச்சர் இறைக்கக் கூடாதென்று கண்டிப்புடன் சொல்லி, பேப்பர் மேல் தட்டை வைத்து சாப்பிடவும் வலியுறுத்துவார், அப்போதும் இறைப்பது வேறு கதை!! எல்லோருக்கும் டீச்சருடன் ஒரு சுமூக உறவு இருந்தது.

திடீரென்று டீச்சரிடம் எல்லோரும் பேசுவதை நிறுத்தினார்கள். காலைக்கூட்டங்களில் ஏதோ ரகசியம் பேசிக்கொள்கிறார்கள் என்று மட்டும் உணர முடிந்தததேத் தவிர முழுமையாகப் புரியவில்லை. இப்போதெல்லாம், டீச்சரும் எங்கள் வீட்டுக்கும் அவ்வளவாக வருவது இல்லை. இல்லையில்லை…வருவதேயில்லை. எப்போவாவது பெரிம்மா ஸ்கூலுக்கு லீவ் என்றால், லீவ் லெட்டரை டீச்சரிடம் கொடுத்துவிடச் சொல்லுவார். சில நாட்கள் கழித்து அதுவும் இல்லை.

காந்தா அத்தை வீட்டுக்கும், எங்கள் வீட்டுக்கும் சில சமயம் காலையுணவு பரிமாற்றம் நிகழும். ஆப்பம் அல்லது குழிப்பணியாரம் இருந்தால் அத்தைக்குக் கொடுத்துவிட்டு வரச்சொல்வார் பெரிம்மா. எனக்கு ரோடில் வேகமாக ஓடுவது மிகவும் பிடிக்கும். அதுவும் மனசுக்குள் ஒன்னு, ரெண்டு எண்ணிக்கொண்டு பத்துக்குள் அவங்க வீட்டு மாடி ஏறிவிட்டால் ‘வின்’ என்று எனக்கு நானே வைத்துக்கொண்ட சட்டம். அப்படித்தான் அன்றும் வேகமாக ஓடிச்சென்றேன். டீச்சர் வீடு சாத்தி இருந்தது. காந்தா அத்தை வீடு திறந்து இருந்தது. அத்தையிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்த மங்கையர்மலரில் படம் பார்த்துக்கொண்டு நின்றேன். டீச்சர் கதவைத் திறந்துக்கொண்டு வெளியில் வந்தார். அவரைப் பார்த்தததுமே அத்தை சத்தம் போட ஆரம்பித்தார். என்னவோ திட்டுகிறார் என்று மட்டும் எனக்குப் புரிந்தது..டீச்சர் கதவைப் பூட்டிக்கொண்டு சென்றபின்னும் அத்தையின் திட்டுகள் ‘அவ’ ‘இவ’ என்று தொடர்ந்து கொண்டே இருந்தது.

ஆயாவிடம் சொன்னபோது ‘கண்டசெருப்பை வாங்கி காதில மாட்டிக்கோ’ என்று திட்டுதான் கிடைத்தது. ஒரு வாரம் போயிருக்கும். ஹிந்தி ட்யூஷனில் (ஹிந்தி மிஸ் வீடு சப்-இன்ஸ்பெகடர் வீட்டுக்கு பின் ப்ளாக்கில் இருந்தது) மிஸ் ‘என்ன சண்டைடி, உனக்குத் தெரியுமோ’னு கேட்டார் ..காந்தா அத்தையும், அங்கிளும், ருக்குபாய் டீச்சரும் சப்-இஸ்பெக்டரை பார்க்க வந்ததாகச் சொன்னார்.எனக்குத்தான் ஒன்னும் தெரியாதே…இதைச் சொன்னதும் மிஸ் உதட்டோரமாய் புன்னகைத்துக்கொண்டார்.
மாதமொருதடவை வந்துக்கொண்டிருந்த அத்தையின் கணவரும் சிறிதுநாட்களுக்குப்பின் வருவதே இல்லை. நிவ்யாவும், ப்ரவீன் அண்ணாவும் லீவுக்கு வருவார்கள். அவங்கப்பாதான் காரில் கொண்டு வந்துவிட்டு விட்டு பிறகு லீவு முடிந்ததும் அழைத்துச் செல்ல வருவார். அதுவும் தெருமுனையிலிருந்து மட்டுமே!! .

சிறிது நாட்களுக்க்ப்பிறகு டீச்சரும் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு அருகிலிருந்த அவரது தங்கை ஊருக்குச் சென்றார். அங்கிருந்து தினமும் பஸ்ஸில் பள்ளிக்கூடம் வந்துச் சென்றார். அப்படியே ரிடையர்டும் ஆகிவிட்டார். இன்று, கவின் அண்ணா வெளிநாட்டில் டாக்டராக இருக்கிறார். நிவ்யாவுக்கும் கல்யாணமாகிவிட்டது. அங்கிளின் இருதயப் பிரச்சினையில் இப்போது அத்தையும் அங்கிளும் ஒன்றாகிவிட்டார்கள். நானும் கொஞ்சம் பெரிய பெண்ணாகிவிட்டபடியால், என்ன பிரச்சினையென்றெல்லாம் புரிந்தது. ஆனால், ஒன்று மட்டும் புரியவில்லை!

அதாவது, நடக்கும் தவறில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமபங்கு இருக்கும்போது, பெண்ணை மட்டுமே விமர்சிப்பது ஏன்? பெண்தான் அதற்குக் முழுமுக்கியக் காரணம் என்பதுபோல சித்தரிப்பது ஏன்? ஆணுக்கும் அதில் சரிபங்கு இருக்கிறதுதானே!

இந்த வார ஆவியில் நயந்தாரா-பிரபுதேவா கட்டுரையில், ‘நயந்தாராதான் பிரபுதேவாவைப் பிடித்து வைத்திருக்கிறாரென்றும் அவரது உடும்புபிடியிலிருந்து பிரபுதேவாவாவை விடுதலையாக்க வேண்டுமெ’ன்கிற ரீதியில் இருந்தது.(சினிமாக்காரங்க விஷயம் தானேன்னு விட்டுடலாம்.) ஆனால், ஒரு பெண் எப்படி ஒழுக்கத்துடனும், கட்டுப்பாட்டுடனும் இருக்க விழைகிறார்களோ, அதேயளவு பொறுப்பையும், குடும்பக் கடமைகளையும் ஒரு ஆணிடமும் எதிர்பார்க்க வேண்டியதுதானே!!

இதில் மாதர்சங்கங்களும்(?!) களத்தில் குதித்திருப்பதாக…(அவர்களாவது பிரபுதேவாவுக்கும் புத்தி சொன்னால் தேவலை!!) பிரபுதேவாவைக் கண்டித்து ஏன் யாரும் களத்தில் இறங்கவில்லை..அவரை ஏன் யாரும் விமர்சிப்பது இல்லை..for that matter அந்த அங்கிளையும்!!

(குறிப்பு : நயந்தாரா – பிரபுதேவா பெயர்களைத் தவிர மீதிப் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.)

Add a comment ஒக்ரோபர் 2, 2009

எங்கே செல்லும்….

எட்டாம் வகுப்பின் ஆரம்ப நாட்கள். அன்னபூரணி டீச்சர் பேரேடு எடுத்து ஒவ்வொருவராய் அழைக்கிறார். மாணவியர் ஒவ்வொருவராக டீச்சர் அருகில் செல்கிறார்கள். அவர்கள் சொல்வதை ஒரு தாளில், பேருக்குப் பக்கத்தில் குறித்துக் கொள்கிறார். அது வேறு ஒன்றுமில்லை, சாதி ரீதியான படிப்பு உதவித்தொகைக்கான கணக்கெடுப்பு. அந்த நேரம் வரும் வரை நான் என்ன சாதியென்று எனக்குத் தெரியாதிருந்தது!என் முறையும் வந்தது, பெரிம்மா அதே பள்ளியில் வேலை செய்வதால், ‘மத்தியானம் சொல்றேன் டீச்சர்’ என்று சொல்லிவிட்டு வந்தமர்ந்தேன்.

“சாதிகள் இல்லையடி பாப்பா” என்று என் சிறுவயதில், பாரதியாரையும், தினமும் பத்து திருக்குறளும் படிக்க வைத்த பெரிம்மாவிடம், உணவு இடைவேளையில் கேட்டு தெரிந்துக்கொண்டு அன்னபூரணி டீச்சரிடம் சொல்லிவிட்டேன்.வீட்டில் நாங்கள் சாதியைக் குறித்து எதுவும் பேசியதில்லை. அதற்கு அவசியமும் இருந்ததில்லை. அதனால் நான் என்ன சாதி என்ற அறிந்துக்கொள்ள வேண்டிய அவசியமுமேற்படவில்லை, அதுநாள்வரை. ஆனாலும் என் மனதை அரித்துக்கொண்டே இருந்தது இது…அமுதா வில்லாளனுக்கும், நித்யா சீனிவாசனுக்கும், அனுப்பிரியா சீனுவாசனுக்கும் தெரிந்திருந்தது சந்தனமுல்லை ராஜரத்தினத்துக்கு எப்படித் தெரியாமல் போயிற்று? சாதியை பற்றி தெரிந்துக்கொள்ளாமல் இருப்பது ஒரு பெருமைப்படும் விஷயமாக இல்லையா? ஆம்பூரில் ஒரு ஏரியா இருக்கிறது. அந்த பகுதியில் குறிப்பிட்ட மக்களைத் தவிர யாரும் வசிக்க மட்டார்கள். அங்கிருந்து வெளியே வேறு எங்காவது குடி போவார்களே தவிர, அந்தப் பகுதிக்கு வேறு யாரும் குடிவரமாட்டார்கள். இன்னமும் அப்படி இருக்கிறதா என்றுத் தெரியவில்லை!

கல்லூரியில் ஒருமுறை அனைத்திந்திய கல்லூரிகளுக்கான கலாச்சார விழாவிற்காக மவுண்ட் அபுவிற்குச் சென்றிருந்தோம். தங்குமிடத்திலிருந்து விழா நடைபெறும் இடத்திற்குச் செல்லவிருந்த பேருந்தில் ஏறினோம். மூவர் அமரக் கூடிய சீட்டில் நானும் எனது பேராசியரும் அமர்ந்தோம். இடம் தேடி வந்த இரு வடநாட்டு இளைஞர்கள், எங்களை நோக்கி ‘என்ன குலம்’ என்றார்கள். ஒரு நிமிடம் என்ன கேட்கிறார் இவரென்றே விளங்கவில்லை. அந்த இளைஞரே, ‘நான் ஷத்திரியன், நீ என்ன குலம்” என்றார். அதற்குள் எங்கள் குழுவிலிருந்து இன்னொரு பெண்ணும் வந்துவிட இடமில்லாமற்போகவே அவ்விடத்தை விட்டு அகன்றார் அவ்விளைஞர்!

நான் வேலை செய்த நிறுவனங்கள் ஒன்றில், பார்த்த முகங்களில், பட்ட அனுபவங்களுக்குப் பின்னரே அப்படி முடிவு செய்தேன். அப்போது சின்னமலையில் தோழிகளோடு அறையெடுத்துத் தங்கியிருந்தோம். செல்லம்மாள் மகளிர் கல்லூரி என்ற ஒரு கல்லூரி சின்னமலை-கிண்டியில் இருக்கிறது. அந்த போர்டை பார்த்தால்தான் அங்கு ஒரு கல்லூரி இருப்பதேத் தெரியும். நேராக அந்தக் கல்லூரியின் அட்மின் அறைக்குச் சென்றேன்.

பி.யெஸ்சி கம்ப்யூட்டர் இருக்குங்களா?

பார்ட்-டைம் தான் மேடம் இருக்கு.

அதுலே, ஃபீஸ் கட்டமுடியாம இருக்கிற யாரையாவது சொல்றீங்களா? எம்.பி.சி இல்லேன்னா எஸ்.சி-லே பார்த்துச் சொல்லுங்க!!

ஆதியில், எங்கள் வீடு காங்கிரசுடன் இருந்தது. அதன்பின் தி.க- தி.மு.கவுடன் இருந்தது. இனி *.*.*.*.க?

குறிப்பு : தோழியோடு பேசிக்கொண்டிருந்த போது, பெயருக்குப்பின் அல்லது மெயில் ஐடிக்களில் பின்னால் சாதிப்பெயரைச் சேர்த்துப்போட்டுக்கொள்ளும் வழக்கம் வந்திருக்கிறதே, இதைப்போல் செய்வதற்கு, முன்னர் எவ்வளவு தயங்குவார்கள், ஆனால் இப்போது இளைய தலைமுறையினரே இப்படி செய்ய ஆரம்பித்திருக்கிறார்களே என்ற வருத்தத்தை பகிர்ந்துக்கொண்டார். அதைத் தொடர்ந்தே இந்தப் பதிவு!

Add a comment செப்ரெம்பர் 27, 2009

எ..க்..ஸ்..க்..யூ..ஸ் மீ

பள்ளிக்கூட வயதில், பேசும்போது ‘டா’ இல்லன்னா ‘டீ’ போட்டு பேசினா ஆயா சூடே வச்சிடுவாங்க.’என்ன கெட்ட பழக்கம்’, ‘எங்கேருந்து கத்துக்கிட்டு வந்தே’, அது இதுனு ஏகப்பட்ட திட்டு விழும்! எனக்கு மட்டுமில்லே..பொதுவா எல்லாருடைய வீட்டிலேயும் நடக்கும் ஒரு விஷயம்தான் இது! யாரையாவது திட்டனும்னா எங்களுக்கு கிடைக்கற முதல் வார்த்தையே ‘போடா’ ன்னு சொல்றதுதான். அது ஒரு இழுக்கு மாதிரி! அதேமாதிரி ‘டீ’ன்னு யாராவது நம்மை சொல்லிட்டா அவ்வளவுதான்!! கிடைக்கற திட்டுக்கு அடுத்த தடவை அப்படிச் சொல்றதுக்கு யோசிப்போம். என் தம்பி, ‘டீ’ன்னு சொல்லிட்டான்னா போச்சு..ரொம்பநாளைக்கு இதைச் சொல்லியே அவனை ஃப்ளாக் மெயில் பண்ணுவேன், ‘என்னை டீன்னு சொன்னே இல்லே அன்னைக்கு…ஆயாக்கிட்டே சொல்லட்டா’ன்னு! நான் என்னிக்காவது ‘டான்னு சொல்லிட்டா, அவன் சொன்ன ‘டீ’ கேன்சலாகி என்னை
ப்ளாக்மெயில் செய்ய ஆரம்பிச்சிருப்பான்.

அப்புறம் ஸ்கூல்லயும் ஒரு வழக்கம் இருந்தது. பொண்ணுங்களுக்குள் ‘வாடா போடா’ ன்னு பேசிக்கு்வோம். அது ரொம்ப ஸ்டைலிஷாவும் இருந்துச்சு..செல்லமா, ஒரு நெருக்கமான நட்புணர்வையும் கொடுத்துச்சு. ஸ்கூல் சீனியர் அக்காங்கள்ளாம் வாப்பா போப்பா ன்னு பேசிப்பாங்க. இந்த ‘டா’ வும் ‘ப்பா’வும் இப்போ வரைக்கும் தொடருது! அதேமாதிரி பையனுங்களுக்குள்ள பேசிக்கும்போது ‘வாம்மா, போம்மா’ ன்னு பேசிப்பாங்க.பொண்ணுங்களுக்குள்ளே வாடா போடான்னு பேசினாவெல்லாம் வீட்டிலே ஒன்னும் சொல்லமாட்டாங்க. ஆனா வாடி போடின்னு பேசினா போதும்..என்ன பழக்கம் இதுன்னு திட்டு விழும்..இந்த வயசிலேயும்!

பப்புவுக்கு பிடிச்ச பாட்டு வந்தா “உனக்கு பிடிக்குமா”ன்னு கேப்பா. பிடிக்கும்னு சொன்னா, ‘யே, சேலஞ்ச்” என்றூ மகிழ்ச்சியாக ஆர்ப்பரிப்பாள்.எந்தப் பாட்டையும் பிடிக்காதுன்னு இது வரைக்கும் சொன்னது இல்லே..ஆனா பிடிச்ச பாட்டு இதுன்னு தெரிஞ்சுக்கலாம் அவ கேக்கறதை வச்சு!
அவளோட சந்தோச்த்துக்காகவே பிடிக்கும்னு எல்லோரும் சொல்வோம்..

‘எக்ஸ்க்யூஸ் மீ’ பாட்டு ஓடிக்கிட்டிருந்தது…

பப்பு என்கிட்டே ‘பிடிக்குமா’ன்னு கேட்டா…நானும் பிடிக்கும்னு சொன்னேன்.

‘பிடிக்குமா..அப்போ சேலஞ்ச்’ன்னு சொன்னா.

பக்கத்துலே இருந்த ஆயாக்கிட்டே ‘உங்களுக்கு பிடிக்குமா’ன்னு கேட்டா..

இதெல்லாம் என்ன பாட்டுன்னு கொஞ்சநாள் முன்னாடி என்கிட்டே சொன்ன ஆயா, பப்புகிட்டே சொல்றாங்க…”உம்..பிடிக்கும்டா”ன்னு! பப்பு சின்ன பொண்ணு, இப்போ சொன்னா புரிஞ்சுக்கற பக்குவம் இருக்காதுன்னு ஆயா விட்டுபிடிக்கறாங்கன்னாலும்…

கண்லே விளக்கெண்ணெயை விட்டு நாங்க ஒழுங்கா பேசறோமா, கெட்ட வார்த்தை எதும் கத்துக்காம..நல்ல பழக்க வழங்கங்கள் கத்துக்கிறோமான்னு கண்காணிச்ச அந்த தலைமுறையினரின் அவ்வளவு உழைப்பையும் ஒண்ணுமில்லாம ஆக்கிட்டு, “வாடா போடா”ன்ன்னு பேசறது தப்பில்லேங்கற மாதிரியான அர்த்தத்தைக் கொடுக்குதே
இந்தப்பாட்டுன்னுதான் எனக்கு அப்போ தோணுச்சு!

Add a comment செப்ரெம்பர் 25, 2009

ப்ரியா B.E.,

ஆச்சி, ப்ரியா வந்துருக்கும்மா, நம்ம ஸ்கூல்லதான் ட்ரெயினிங், ரெண்டுநாளா!! – அலுவலக்த்தில் இருக்கும்போது பெரிம்மாவின் தொலைபேசி அழைப்பு!

“எந்த ப்ரியா, பெரிம்மா?”

“இதோ நீயே பேசு, உன்கிட்டே பேசணும்னு சொல்லுச்சு” – பெரிம்மா தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

”எந்தப் ப்ரியா, பெரிம்மா, சொல்லிட்டுக் கொடுங்க?” – பெரிம்மா காதில் வாங்கிக்கொண்ட மாதிரியேத் தெரியவில்லை!

”ஆச்சி, எப்படி இருக்கே, நல்லா இருக்கியா?” – மறுமுனையில் ப்ரியா!

”நல்லா இருக்கேன், நீ எப்படி இருக்கே” – எந்த ப்ரியாவென்றேத் தெரியாமல் பேச ஆரம்பித்தேன்!

என்னிடம் இதுதான் பிரச்சினை. ஒன்று மறதி. இன்னொன்று ஒரே பெயரில் பல நண்பர்கள் இருப்பது! ப்ரியா என்று சொல்வீர்களானால் பல ப்ரியாக்கள் பரிச்சயம். ஹவுசிங் போர்ட் ப்ரியா, பி செக்ஷன் ப்ரியா, தோழியின் தங்கை ப்ரியா, கல்லூரியில் இரண்டு ப்ரியாக்கள்.கவிதா என்று சொல்வீர்களானால் ஐந்துக் கவிதாக்களைத் தெரியும். எஸ்.கவிதா,டி.கவிதா, சீனியர் கவிதா – இவர்கள் பள்ளிக்கூட கவிதாக்கள். கல்லூரியில் ஒரு கவிதா. இப்போது, வலையுலகில் ஒரு கவிதா. அனு எனில் இரண்டு அனுக்கள். ஹேமா என்றால் மூன்று ஹேமா. (ஒரேயொரு ஞானசௌந்தரிதான்!). கெஜலஷ்மிகள்,முத்துலஷ்மிகள்,சுஜாக்கள், வினிதாக்கள், மஞ்சுக்கள், கல்பனாக்கள்,ஜெயஸ்ரீக்கள். இவர்கள் எல்லாரையுமே பெரிம்மாவுக்கும் தெரியும். இவர்கள் எல்லோருக்குமே பெரிம்மாவையும் தெரியும்!! இந்தப் பிரியா இதில் எந்த ப்ரியா? கொடுமை என்னவெனில் மிகவும் நெருக்கமான அல்லது சரியான ப்ரியா மட்டும் உரிய நேரத்தில் நினைவில் எட்டமாட்டார்கள்!

இங்கே, ப்ரியா போனில் பேசிக்கொண்டே இருந்தாள். இல்லையில்லை…கேட்டுக்கொண்டே இருந்தாள்.

குரலிலும் அடையாளம் பிடிபடவில்லை! (‘உன் குரல், சுப்பு-ருக்குலே வர ருக்கு குரல் மாதிரி இருக்கு’ என்று எனக்குச் சொல்லிக் கொண்டிருந்தவர்கள், இப்போதெல்லாம் ‘உன் குரல் சுப்பு குரல் மாதிரி இருக்கு’ என்றுச் சொல்லும்போது, ப்ரியாவின் குரலில் மட்டும் காலம் எந்த அடையாளத்தை விட்டிருக்கும்?!)

“உன் பொண்ணு ஃபோட்டோ பார்த்தேன், பெரிம்மா ஃபோன்லே காட்டினாங்க, என்ன படிக்கிறா?”

…..

“எனக்கு ரெண்டு பையன். பெரிய பையன் செகண்ட் ஸ்டாண்டர்டு படிக்கறான், மணவாளம்-லதான் வேலை செய்றேன்”

ஓ…தெரிந்துவிட்டது! இந்த ப்ரியா! என்ன சொல்வது அவளைப் பற்றி!! படிப்பு என்றால் ப்ரியா. ப்ரியா என்றால் படிப்பு! எனது நெருக்கமான தோழி!! ‘ஒல்லி ப்ரியா பல்லி ப்ரியா’,’கண்ணாடிப் ப்ரியா’ என்றும் அவளுக்குப் பெயர் இருந்தது! பத்தாவதிலிருந்து ஒன்றாகப் படித்தோம்.அதற்கு முன்பாக வேறு செக்‌ஷனிலிருந்தாபோதே அறிமுகம். இருவரும் இருவரின் வீட்டிற்கும் சென்றிருக்கிறோம். இருவருக்கும் இருவரது வீட்டினரையும் தெரியும். ப்ரியாவின் அப்பாவும் ஆசிரியர். இருவரும் அவரவர் தம்பிகளைப் பற்றிப் பேசிப் பேசி புண்பட்ட மனதை ஆற்றியிருகிறோம். இயற்பியலில் கூடுதல் ஆர்வம் அவளுக்கு!

‘ப்ரியா கண்டிப்பாக பிஈ’தான் – ‘ரேணுகா கல்யாணம்’ – ‘சபீனா, ஆர்ட்ஸ் காலேஜ்’ – என்று எல்லோரும் பக்கா எதிர்காலத் திட்டத்துடன்தான் இருந்தோம்! +2 மதிப்பெண்களும் வந்தது. எதிர்பார்த்தது போலவே ப்ரியாவிற்கு நல்ல மதிப்பெண்கள். கண்டிப்பாக, மெரிட்டிலேயே பிஈ கிடைக்கும். ஒருநாள் காலையில் ப்ரியாவின் அப்பா வீட்டிற்கு வந்தார். Bsc இயற்பியல் படிக்க வைக்கப் போவதாகச் சொன்னார். அதிகம் படித்தால் அவர்கள் சாதியில் மாப்பிள்ளைக் கிடைப்பது கடினம் என்றார். சேலம் சாரதாவில் பிஎஸ்சி படித்தாள் ப்ரியா. நானும் வேறு கல்லூரிக்கு, ஹாஸ்டலுக்குச் சென்றுவிட்டேன். முதல் செமஸ்டர் வரை எல்லோரும் எல்லோருக்கும் கடிதம் எழுதிக்கொண்டோம், கல்லூரி பிடிக்கவில்லையென்றும், பள்ளிதான் நினைவில் நீங்காதிருக்கிறதென்றும் ஒருவரையொருவர் பார்க்கமுடியாமல் இருப்பது மிகவும் கடினமாக இருக்கிறதென்றும், திரும்ப பள்ளிக்கே சென்றுவிடலாமாயென்றும்! அதன்பின், தொடர்புகள் நூலிழையில் இருந்தன!

நான் MCA நுழைவுத்தேர்வுக்கு படித்துக்கொண்டிருக்கையில், கையில் திருமண அழைப்பிதழோடு வீட்டிற்கு வந்தாள் ப்ரியா! பக்கத்து ஊர்காரர். பிஎட் படித்திருக்கிறார். வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. நல்ல நிலபுலன்கள். ஏழு வயது வித்தியாசம். நான் முதல் வருட விடுமுறைக்கு வந்தபோது ப்ரியாவிற்கு குழந்தை பிறந்திருந்தது. சில நாட்களில், குழந்தை இறந்துவிட்டதாக சபினா சொன்னாள். செய்தித் தெரிந்ததும் ப்ரியாவுடன் பேசினேன்.

“பிறந்து கண்ணுக் கூட முழிக்கலைப்பா, கையிலே வைச்சிருந்தேன். அது செத்துப் போகப் போகுதுன்னு தெரிஞ்சுதான் கையிலே வச்சிருந்தேன் போல” என்றாள். ஒரு நொடியில் ப்ரியா முற்றிலும் வேறாகத் தெரிந்தாள்!! எங்களுடன் கிண்டலடித்துக்கொண்டு, விளையாட்டுத்தனமாகத் திரிந்தவளாகத்தான் ப்ரியாவை அறிந்திருந்தேன். ப்ரியா, இப்படியெல்லாம் பேசுவாளென்று நானறிந்திருக்கவில்லை. திடீரென ப்ரியா வேறு தளத்திற்கு சென்றுவிட்டாற் போலிருந்தது! (அப்போதெல்லாம் தாய்மை உணர்வுகள் புரிந்திருக்கவில்லை!)

நாங்கள் சிறுவயதில் ஒரு விளையாட்டு விளையாடுவோம். மூன்றாவது, நான்காவது படிக்கும்போது! அம்மா-அப்பா விளையாட்டு. அவரவர் பொம்மைகளைக் கொண்டு வரவேண்டும். யாராவது சற்றே பெரியச் சிறுமிதான் எங்களை அதட்டிக்கொண்டிருப்பாள் – அவள் பேச்சை நாங்களும் கேட்போம்! ‘ஹாஸ்பிடல் செல்வது – ஆபரேஷன் நடக்கும் – குழந்தை வரும்’ – அப்புறம் குழந்தைப் பொம்மையை குளிப்பாட்டி சடை போட்டு என்று விளையாட்டு! ப்ரியாவிடம் பேசிக்கொண்டிருந்த போது ஏனோ அந்த விளையாட்டை அடிக்கடி நினைத்துக் கொண்டேன்!

ப்ரியாவிற்கு எத்தனையோ கனவுகள் இருந்திருக்கும்!! இருந்ததாவென்றுத் தெரியவில்லை..ஆனால் அவள் அம்மா-அப்பா சொன்னதைக் கேட்கும் பெண்ணாக இருந்தாள். அவளுக்கென்று தனிப்பட்ட விருப்பங்கள் இருந்திருக்கும்! பிஈ படிக்க – ஆபிஸிற்குச் செல்ல – ‘இந்த டீச்சர் வேலை போர்ப்பா, நான் டீச்சராக மாட்டேன்’ என்பதாக!! ஒருவேளை ப்ரியாவிற்கு அவளது வாழ்க்கையின் தீர்மானங்களை எடுக்கும் உரிமைகள் இருந்திருந்தால்?!!

ப்ரியா அந்த முடிவுகளை விரும்பி ஏற்றுக் கொண்டாளாவென்றுத் தெரியவில்லை.

ஆனால், அதற்குப் பின் பிஎட் படித்தாள். ஊரிலேயே ஒரு மேனேஜ்மென்ட் பள்ளியில் ஏழாவது/எட்டாவது வகுப்பிற்கு ஆசிரியராக இருக்கிறாள். இதுவும் அவளது விருப்பமாக இருந்ததாவென்றுத் தெரியாது, ஏனெனில் படிக்கும்போது நாங்கள் பேசிக்கொள்வோம், “நான் டீச்சர் வேலைக்கு மட்டும் போக மாட்டேன்ப்பா!”.

ப்ரியாவை நேரில் சந்திக்க வாய்த்தால் கண்டிப்பாகக் கேட்கவேண்டும்.

“ஏன் ப்ரியா?, ஏன் நீ பிஎஸ்சி படிக்கமாட்டேன்னு சொல்லலை? ஏன் பிஈதான் படிப்பேன்னு அடம் பிடிக்கலை? ஏன் டீச்சர் ஆக மாட்டேன்னு சொல்லலை? ஏன் ப்ரியா?!!”

குறிப்பு: இது ஆசிரியர் தினத்துக்காக எழுதியது. ஏதோவொரு இனம் புரியாத உணர்வு அன்று வெளியிட தடுத்தது!

Add a comment செப்ரெம்பர் 10, 2009

தன் வினை …./முற்பகல் செயின் ….

…தன்னைச் சுடும்!!

“பப்பு, ரோட்லே போறவங்க நமக்குத் தெரியாதவங்க கூப்டா பேசக்கூடாது” -ன்னு சொல்லி நான் பட்டபாட்டை சொல்லியிருக்கேன்.

பக்கத்துவீட்டு ஆன்ட்டியை நாங்க அடிக்கடி பால்கனிலே பார்த்து பேசிக்குவோம். அவங்க வீட்டுக்கும் வருவாங்க சிலசமயம், இல்லன்னா, நானும் பப்புவும் போவோம். அங்கிளை ரோட்லே பாத்தா விஷ் பண்றதோட சரி,அதுவும் என்னைக்காவதுதான் பார்ப்போம். சோ நானோ, முகிலோ அங்கிள் கூட பேசி பப்பு பார்த்ததில்லை. இதுவரைக்கும் அங்கிள் எங்க வீட்டுக்கு வந்ததையும் விரல்விட்டு எண்ணிடலாம்னு வச்சிக்கங்களேன். இதெல்லாம் எதுக்குச் சொல்றேன்னா பப்புவை பொறுத்த வரை அங்கிள்கிட்டே நாங்க பேசி பார்த்ததில்லை. ஆண்ட்டிதான் நல்ல பழக்கம், எனக்கும் பப்புவுக்கும்.

சனிக்கிழமை சாயங்காலம் அங்கிள் வீட்டுக்கு வந்திருந்தார். கொஞ்ச நேரத்துலே மழை, இடி. எல்லோரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.


”அவங்கவங்க வீட்டுலேதான் அவங்கவங்க இருக்கனும்.. சொல்லு…எல்லோரும் அவங்கவங்க வீட்டுலேதான் இருக்கனும்!!”

பப்பு என்ன சொல்ல வர்றான்னு இந்நேரம் உங்களுக்கு புரிஞ்சிருக்குமே!!! அவ்வ்வ்வ்!
முகிலுக்கு ஒன்னும் புரியலை. அங்கிளுக்கு மழை சத்ததில தெளிவா கேக்கலை.

ஆனா, எனக்கு மட்டும் ‘பக்’னு ஆகிடுச்சு. பெரிம்மா வேற பப்புவை டிஸ்ராக்ட் பண்ணி கூப்பிடறாங்க. விடாம இன்னொருவாட்டி அப்படியே ரிப்பீட்டு வேற!! எனக்கு அப்படியே நிலம் இரண்டா பிளந்து என்னை முழுங்கிடாதான்னு!! நானும் உள்ளே கூட்டிட்டுபோய் பாக்குறேன்..ம்ம் முடியல…அங்கிளும் முகிலும் பிசியா பேசிக்கிட்டு இருக்காங்க – ஐடி ஃபீல்ட்டுலே இருக்க பையனை நம்பி அவரோட பொண்ணைக் கொடுக்கலாமான்னு!!

“ரோட்லே போறவங்க கூடல்லாம் பேசக்கூடாது” – பப்பு!

அங்கிளுக்கு பப்பு சொல்றது தெளிவா கேட்டிருக்காதுன்னும், ”மூனு – அஞ்சு வயசுலேதான் பேசிக் கேரக்டர் பில்ட் ஆகும்”ன்னு அவர் சாதாரணமாத்தான் சொன்னார்ன்னும் நம்ப விரும்பறேன்!! 🙂

….பிற்பகல் விளையும்!!

நீங்கல்லாம் பயந்த மாதிரி ஒன்னும் ஆகலை..அடியெல்லாம் இல்ல! தங்கள் அக்கறைக்கு நன்றி! 🙂 ஆனா,ஒரு புத்தகம் குழந்தைங்ககிட்டே எவ்வளவு பெரிய தாக்கத்தை உண்டு பண்ணும், நாம் சொல்ற ஒவ்வொன்னும், அவங்க மனசுக்குள்ளே போகற ஒவ்வொரு விஷயமும், என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்துதுன்னு எனக்குப் புரிய வைச்சது இது!!

பப்புவும் நானும் ஒரு புத்தகம் படிச்சிக்கிட்டிருந்தோம். விதவிதமான ஓடுகள் பத்தி. எப்படி சில விலங்குகளுக்கு வீடு அதனோட மேலேயே அமைஞ்சு இருக்குன்னு. நமக்கு வீடு எவ்வளவு பாதுகாப்பா இருக்கோ அது மாதிரி சில விலங்குகளுக்கு இயற்கையே எபப்டி பாதுகாப்பு கொடுக்குதுன்னு!அந்த புத்தகத்தை படிச்சுட்டு,அந்த வாரயிறுதியிலே கிண்டி பூங்காவுக்கும், பெசண்ட் நகர் பீச்சுக்கும் போயிருந்தோம். புத்தகத்துலே இருந்ததை நேராவும் பார்த்தோம்! கடற்கரையிலே கொஞ்சம் கிளிஞ்சல்கள் (கிளிஞ்சலுக்குள்ளே எப்படி ஒரு அனிமல் இருக்கும்னு இன்னும் அவளுக்கு ஒரே ஆச்சர்யம்!!), நத்தை, ஆமை, நண்டு இப்படி…கிண்டி பார்க்கில் ஆமையை 30 நிமிஷம் பார்த்த ஒரே குடும்பம் நாங்களாதான் இருப்போம்!

ஒருநாள், பப்பு, கிளிஞ்சலை முதுகிலே ஒட்டிக்கிட்டு படுக்கையிலே நகர்ந்து நகர்ந்து வந்தப்போ எனக்கு ஒன்னும் புரியலை. நான் டக்னு கிளிஞ்சலை எடுத்துட்டேன். ரொம்ப கோவம் வந்து, ‘நான் ஆமைடி, ஷெல் வச்சிருக்கேன் பாரு’-ன்னு கத்தின பப்புவை சமாதானப்படுத்தி, ஃபோட்டோ எடுத்தேன்! அதுதான் முதல் படம்!!

இன்னொரு நாள், பப்பு இப்படி நாற்காலியை கவிழ்த்து அதுக்குள்ளே போய்ட்டதும் எங்க ஆயா பயந்துப் போய் என்னை கூப்பிட்டாங்க. ”நான் நத்தையோட ஷெல்-ல இருக்கேன்’ன்னு பேலன்ஸ் பண்ணி நகர முயற்சி செய்துக்கிட்டிருந்தா, ஹால்லே! நான் குடுகுடுன்னு ஓடிப்போய் கேமிராவை கொண்டுவந்து ‘கிளிக்’ட்டேன்!! அது இரண்டாம் படம்!

இந்த விளக்கம் கொஞ்சம் பெரிசா இருக்கலாம், ஆனா, திரும்ப எப்போவாவது படிச்சுப் பார்க்கும்போது எங்களுக்கு ஒரு நல்ல ரீகாலிங்கா இருக்கும்!! அரவிந்த் சரியா சொல்லியிருக்கார். வாழ்த்துகள் அரவிந்த்! 🙂

Add a comment ஓகஸ்ட் 26, 2009

Goodbye Jayshree!

”மனைவி கொலை, கணவன் கைது”

”இளம்பெண் கொலை, கணவன் மேல் சந்தேகம்” – இவையெல்லாம் எனக்கு மற்றுமொரு செய்தியாகவே இருந்தது, இரண்டுத் தெருக்களுக்கு அப்பால் நடக்கும் வரை!

ஜெயஸ்ரீ. சமீபத்தில், மிகச் சமீபத்தில், ”மடிப்பாக்கத்தில் இளம்பெண் கொலை”யென்று கடந்த திங்கட்கிழமை முதன்மைச் செய்தியானார். “தனிக்குடித்தனம் போக வற்புறுத்தினார்” என்பதே காரணமென்று கணவரின் வாக்குமூலம் சொல்கிறது. இந்நிகழ்வு, எனக்குச் சினத்தையும், ஆற்றாமையையும், குழப்பங்களையும் ஒருசேர உண்டாக்குகிறது!!

ஜெயஸ்ரீயின் கொலை திட்டமிட்டது அல்ல. அந்த நிமிடத்தின் கோபம் அல்லது வெறி..ஈகோவின் வெளிப்பாடாக சொல்லப்பட்டாலும், காதலித்து மணந்தவளை கொலை செய்யுமளவிற்குக் கொண்டுச் சென்றது எது? பொறுமையும், சகிப்புத்தன்மையும் இல்லாமல் போய் விட்டதா?

ஒரு பெண் ஏன் தனிக்குடித்தனம் செல்ல விரும்புகிறாளென்பதற்கு ஆயிரம் காரணங்களுண்டு. ஒரு மருமகளாக நீங்கள் இல்லாத வரையில், அதைப் புரி்ந்துக்கொள்ள இயலுமா என்பது சந்தேகமே! ஆனால், பிரச்சினைகளில்லாத குடும்பங்கள் இருக்கிறதா என்ன? அதற்கெல்லாம் இதுதான் தீர்வா? தனிக்குடித்தனம் போக ஒரு பெண் வற்புறுத்தினால் இதுதான் முடிவா? என்னவொரு குடும்ப அமைப்பு இது?

பெற்றோரை/முதியவர்களை பராமரிப்பது என்றால் ஏன் நாம் பையனின் பெற்றோர் என்றே அனுமானித்துக்கொள்கிறோம்?! ஒரு பையன்/ஆண் பெற்றோரோடு கடைசிவரை வாழ அனுமதிக்கிற நமது குடும்ப அமைப்பு, பெண்ணின் பெற்றோர் பெண்ணோடு வாழ்ந்தால் ஏன் நக்கலாய் சிரிக்கிறது? பையனின் பெற்றோரை, மருமகள் கவனித்துக் கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கிற சமூகம், பெண்ணின் பெற்றோரை(பெண்களை மட்டுமே பெற்றவர்களின் நிலைக்) குறித்து சிந்திக்க மறுப்பது ஏன்?

அப்படியே, பெண்கள், தங்கள் பெற்றோரை பராமரிக்க வேண்டுமானால் (அதுவும் பெண்ணின் சம்பளத்திலேயேதான்) திருமணத்திற்கு முன் ஒப்புதல் பெற வேண்டியிருப்பது ஏன்? பையனின் கடமை என்பது தன் பெற்றோரைப் பராமரி்ப்பதாக இருக்க, பெண்ணின் கடமை என்பது புகுந்த வீட்டினரைப் பராமரிப்பதாக மட்டுமே மாறிப்போவதேன்?! பெண்ணின் பெற்றோர், பெண்ணோடு இருந்தாலும் அது குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதற்கும் இதர இத்யாதிக் கடமைகளுக்காகவும்தான்! (இதற்கு அயல்நாடுகளில் செட்டிலாகி இருக்கும் என் தோழிகள்தான் உதாரணம். பிள்ளைப்பேறின்போது அல்லது ஏதேனும் உதவி தேவைப்படும் பட்சத்தில் உடனே விமானமேறுபவர்கள் பெண்ணின் பெற்றோர்களாகத்தான் இருக்கிறார்கள்!! அல்லது, உதவி தேவைப்படும் பட்சத்தில் உடனே அணுகக்கூடியவர்களாக பெண்ணின் பெற்றோர்களே இருக்கிறார்கள்!)

இந்த அமைப்பு பையன்களுக்கு எவ்வித இழப்புகளையும் கொடுப்பது இல்லை…வீட்டைவிட்டு இன்னொரு வீட்டிற்குச் சென்று வாழ வேண்டியதில்லை..அப்படியே இருந்தாலும் அது ”சொல்ல மறந்த கதை”யாகி விடுகிறது!! புது மனிதர்களுடன் ஒரே வீட்டில் வாழ வேண்டிய கட்டாயமில்லை..அவர்களை நேசித்துதான் ஆக வேண்டுமென்ற அவசியமேற்படுவதில்லை…அவர்களுக்குக் கட்டுப்பட வேண்டியதில்லை!சொந்தப் பெற்றோரைப் பார்க்க வேண்டுமெனில் யாரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை!!

இப்படி ஒரு அமைப்பை யார் உருவாக்கினார்கள்?
இந்த அமைப்பு இன்னமும் ஏன் மாறாமலிருக்கிறது அல்லது மாற்றாமலிருக்கிறோம்?

இந்த அமைப்பு நன்மைப் பயக்கிறது எனில் ஜெயஸ்ரீகளின் உயிரை ஏன் காவு வாங்குகிறது?

Add a comment ஓகஸ்ட் 20, 2009

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

ஒக்ரோபர் 2018
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Posts by Month

Posts by Category