Posts filed under: ‘கிறுக்குத்தனங்கள்‘
அதோ பாரு காரு…

”என்ன சார் இருக்கு? ”

”தோசை, சப்பாத்தி, பூரி, ப்ரெட் – உங்களுக்கு என்ன வேணும்?”

”எனக்கு ஐஸ்க்ரீம் வேணும். குட்டி, நீங்க என்ன சாப்பிடறீங்க?”

”நான் நூடுல்ஸ் சாப்பிடறேங்க. ”

இரு தட்டுகளில் முக்கோண வடிவ சப்பாத்தியின் உள்ளே முட்டை பொரியல் அடைக்கப்பட்டு ”சமோசா” என்ற பெயரில் வருகிறது. சாப்பிட்டுக்கொண்டே,

”ஐஸ்கிரீம் சூப்பரா இருக்கு”

”நூடுல்ஸ் செம டேஸ்டா இருக்கு”

”காட்டு, பாக்கிறேன், ஆமா.ஜாலி..”

”ஐஸ்க்ரீம் கூட சூப்பரா இருக்கு, பாரு”

”ஹே ஆமா”

– புரிந்திருக்குமே…இது ஹோட்டல் விளையாட்டு!

பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் என் தம்பியும் நானும் ஆயாவுடன் விளையாடும் விளையாட்டு இது. ஆயா ஹோட்டல்காரர்/சர்வர். சொல்லப்படும் மெனு எப்போதும் மாறாது. கேட்கும் ஐட்டங்களும்தான். என்ன இருக்கிறதோ அதை ஐஸ்க்ரீமாக, நூடுல்ஸாக கற்பனை செய்துக்கொண்டு சாப்பிட வேண்டியதுதான்.

குழந்தைகளாக இருப்பதில்தான் எவ்வளவு வசதி – என்ன மாதிரியான இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என்ற குழப்பமில்லை – ஐம்பது வயதுக்குப் பின் என்ன செய்ய போகிறோம் என்ற பயமில்லை – செலுத்த வேண்டிய இஎம்ஐ பற்றிய கவலையில்லை – எப்போது நாம் பெரியவர்களாவோமென்ற ஒரே கனவோடு – உலகில் காணும் எல்லாவற்றிலும் ஆச்சர்யங்கள் தொக்கி நிற்க – குழந்தைகளாக இருப்பதில்தான் எவ்வளவு சந்தோஷம்!!

குழந்தைகளுக்கும், குழந்தைகளாக இருந்தவர்களுக்கும், மனதளவில் இப்போதும் குழந்தைகளாக இருப்பவர்கள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்!! :-))

தலைப்பு *

அதோ பாரு காரு
காருக்குள்ள யாரு
நம்ப மாமா நேரு
நேரு என்னா சொன்னாரு
நல்லா படிக்க சொன்னாரு

தீபா,முத்து,ஆயில்ஸ்,கானாஸ், நான் ஆதவன் மற்றும் ராப்..ஸ்டார்ட் மீசிக்..இது போன்ற, தங்களுக்கு தெரிந்த அனைத்து கருத்தாழ மிக்க பாடல்களை எடுத்து விடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்! :-)))

குறிப்பு : பப்பு பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் தின விழா முடிந்து வந்தேன்…அந்த எஃபெக்ட்!!

Advertisements

Add a comment நவம்பர் 13, 2009

அண்ணன் என்னடா தம்பி என்னடா?!

நான் ஒரு வீட்டுப் பறவை. அவன் வீட்டில் இருந்ததாக சரித்திரம் கிடையாது.எனது அலமாரியின் ராக்கு-களை நான் சுத்தமாக வைத்துக் கொள்வேன்(அப்போது!!). அவனுடையது அப்படியே தலைகீழ். நான் புத்தகப்புழு.அவன் புத்தகங்களை புரட்டக் கூட மாட்டான். கைகளில் மண் படிய விரும்பாதவள் நான். தெருவில் இருக்கும் நாய்குட்டிகளை எடுத்துவந்து கொட்டாங்குச்சியில் பால் ஊற்றச் சொல்வான் அவன். அவன் ஐஸ் ஸ்கேட்டிங் விளையாட விரும்பினான். பிரிட்ஜ்-ல் இருந்த ஐஸ்கட்டிகளையும், கிண்ணங்களில் நீரூற்றி ஐஸ் செய்தும் பலகணியில் போட்டு விளையாட வைத்தது் நான். திட்டு வாங்கியதும்தான்! சதுரங்கத்தில் அவனிடம் தோற்கும்போது அவனுக்கு வயது ஆறு! அதன்பின் சதுரங்கம் ஆடுவதையே நிறுத்தியவள் நான்! பின் அவன் சதுரங்கத்தில் முழுமூச்சுடன். நான் பப்ளிக் எக்சாம், ட்யூசன், எண்ட்ரன்ஸ்! அவன் செஸ் அசோசியேஷன்,IM,arbitrator,VIT என்றும், நான் கல்லூரி,வேலை என்றும் பாதைகள் பிரிந்தன.

அவன் என் தம்பி.

பலமுறை, தம்பிக்குப் பதில் எனக்கு ஒரு அண்ணன் இருந்திருக்க்கூடாதா என ஏங்கியிருக்கிறேன். என்னுடைய நண்பர்கள் பலருக்கு அண்ணாக்கள் அல்லது தங்கைகள். தம்பிகள் இருந்த ஒருசிலரும் ”தம்பியா, ஒரே சண்டை” என்றுதான் அனுபவப்பட்டிருந்தனர். அண்ணன்கள் வாய்க்கப் பெற்ற பலரும் ”அண்ணா வரைஞ்சது, அண்ணா சைக்கிள்-ல வந்தேன்” என்று வெறுப்பேற்றியிருந்ததும் காரணமாக இருக்கலாம்!

ஒரு கோடை விடுமுறை.பரணில் இருக்கும் சோடா மேக்கர் உபயோகத்துக்கு வந்திருந்தது.
அதை இயக்கும் அதிகாரம் வீட்டில் எனக்கு மட்டுமே . விருந்தினர்கள் வந்தால், மிகப் பெருமையாக இயக்கி பெப்சி அல்லது லெமன் ஃப்ளேவர் போட்டு தரப்படும். மற்றபடி, அதன் முழு உபயோகம் எனக்கும் அவனுக்கு மட்டுமே! சோடா மேக்கரோடு மூன்று அல்லது நான்கு கண்ணாடி பாட்டில்கள். கண்ணாடி பாட்டில்களானதால் அதனை கவனத்துடன் கையாளும் அதிகாரம் எனக்குக் கொடுக்கப் பட்டிருக்கலாம், மேலும் “பெரிய பெண்” எனும் அங்கீகாரம்.

ஊரிலிருந்து கஸின்ஸ். விடுமுறைக்கு வந்திருந்தார்கள். காலை, மாலை, மதியம் எல்லாம் சோடா மயம். அதிலும், யார் நிறைய கேஸோடு குடிப்பது என்றும் போட்டி! அதுவும் கேஸ் அதிகமாக பாட்டில் தண்ணீரில் நிரப்பி உடனே பெப்சி ஃப்ளேவரை ஊற்றினால் நுரை பொங்கும். விளம்பரத்தில் வருவதுபோல ஷேக் செய்து, அப்படியே குடித்து என்று ஒரே கும்மாளம்.

இன்னும் கேஸ், இன்னும் கேஸ், என்று எல்லாரும் கேட்டுக்கொண்டதில், கொஞ்சம் அதிகமாக அழுத்திவிட்டேன்.

”பட்” என்று உள்ளே ஒரு சத்தம்.

திறந்துப் பார்த்ததில், பாட்டில் துண்டுகளாக.

சத்தமில்லாமல், சுத்தம் செய்துவிட்டு மாடியில் அடுத்த விளையாட்டு. நடந்த எதுவும்..என்ன போட்டி, யார் உடைத்தது என்று எதுவும் குட்டிக்குத் தெரியாது. அவன் அப்போது வீட்டில் இல்லை…

ஊகித்திருப்பீர்களே…அதேதான்…பாட்டில் உடைந்தது ஆயாவிற்கும் பெரிம்மாவிற்கும் தெரிந்து விட்டது, நான் அசந்த ஏதோவொரு கணத்தில் !

“எனக்குத் தெரியாது, அவன் தான் உடைச்சிருப்பான்”!- மிக சுலபமாக வார்த்தைகள் என்னிடமிருந்து!

இதற்கு முன்பாக இப்படியெல்லாம் நிகழ்ந்துதான் இருக்கிறது. அவன் உடைத்ததெல்லாம் நானென்றும், நான் உடைத்ததையெல்ல்லாம் அவனென்றும் என்று மாறி மாறி கோள் சொல்லிக் கொண்டது!ஆனால் அப்போது அவன் செய்ததுதான் மிக ஆச்சர்யமானது.

ஒன்றும் சொல்லாமல், ஆமாமென்று ஒப்புக்கொண்டுவிட்டு திட்டு வாங்கிக்கொண்டான். (வீட்டில் ஒரு பழக்கம், எங்களை மற்றவர்கள் முன்னால் திட்ட மாட்டார்கள். அப்படி நடப்பதென்றால் அது தனியாக, எங்கள் இருவரை மட்டும் வைத்துத்தான் நடக்கும்!திட்டுவது என்பது அட்வைஸ் என்று பொருள் கொள்க.)சண்டை போட்டுக்கொள்வோமென்று நினைத்த எனக்கு, அவனது இந்த gesture அதிர்ச்சி. அதன்பின், நாங்கள் அதைப் பற்றி பேசிக்கொள்ளவில்லை.

அந்த நிமிடம் அவன் எனக்கு அண்ணனைப் போல நடந்துக் கொண்டான், மிகப் பெருந்தன்மையாக!

என் தம்பியின் மேல் பாசமாயிருக்கக் கற்றுக்கொண்ட தருணங்களில் இதுவும் ஒன்று! As years passed by, தம்பி இருப்பதும் மிகவும் fun/ஜாலி என்றுணர்ந்தேன்.

Note to my brother:

குட்டி, அந்த பாட்டிலை நாந்தான்டா உடைச்சேன். 🙂 உன்னை ஏன் மாட்டிவிட்டேன்னு இப்போ எனக்குத் ஞாபகமில்லை(sibling rivalry)!! இப்போவும் நாம திட்டு (அட்வைஸ் அட்வைஸ் அட்வைஸ்!!) வாங்கறோம், ஆனா அதெல்லாம் நாம் ஒன்னா சேர்ந்து செஞ்ச காரியங்களுக்காக இல்லை!

Add a comment ஏப்ரல் 13, 2009

Y…Y…Y!?!

காய்கறி கடையில், அடுத்தவர் கூடையிலிருக்கும் காய்கள் மட்டும் எப்போதும் ப்ரெஷ்-ஆக இருப்பது போல் தோன்றுவது ஏன்?

”கழுவிட்டு சாப்பிடு” என்று ஒவ்வொரு முறையும் நினைவூட்ட வேண்டியிருக்க,பப்பு ஆரஞ்சுப் பழத்தை மட்டும் சொல்லத் தேவையில்லாமலே கழுவிவிட்டு சாப்பிடுவது ஏன்?

Add a comment பிப்ரவரி 1, 2009

கெமிஸ்ட்ரி பத்தி உங்களுக்கு என்னத் தெரியும்?

ரொம்ப நாளாச்சு ஏதாவது கிறுக்குத்தனமா கேள்வி/புதிர் போட்டு..இந்தக் கேள்வி பத்தாவதுப் படிக்கும்போது எங்க கிளாஸிலே செம ஹாட்டா இருந்துச்சு. என்னக் கேள்வியா..

ஒரு மாலிக்கிள் ஆஃப் பொட்டாசியம் அயோடைடு, ரெண்டு மாலிக்கிள்ஸ் ஆஃப் சல்பர் சேர்ந்தா என்ன கிடைக்கும்? (கேட்டலிஸ்ட் இருக்கு, அதை மறந்துட்டேனே..மூன்லைட் கேட்டலிஸ்ட்!)

என்னோட பெஞ்ச்மேட் ஹேமாதான் இந்தமாதிரி கிறுக்குத்தனங்களிலே எனக்கு வலதுகை மாதிரி!ம்ம்..அவ ஒருபடி மேலே போய், இந்த வினையோட பை-ப்ராடக்ட் கூட கண்டுபிடிச்சா, பாவம், இப்போ சிங்கப்பூர்லே குப்பைக்கொட்டிக்கிட்டிருக்கா!!!

Add a comment ஜனவரி 15, 2009

கனாக் கண்ட காலங்கள்!!!

கனவுகள் பற்றி ஒரு பதிவு படித்தேன், தேவன்மயத்தின் வலைப்பூவில்! எனக்கும் கனவுகளைப் பற்றி சொல்ல ஆசை வந்துவிட்டது! கனவுகள் வருவது சாதாரணம்தான்..ஆனால் அதன்கூட நாம் செய்யும் காமெடிதான் மேட்டரே!!

நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பேன்..(ஆமா, தூங்கினாதானே கனவு வரும்!!). ஏதோ ஒரு கனவு. கனவிலேயே எனக்கு கால் வலி. வலியென்றால் நிஜமான வலி! உடனே விழிப்பு வந்து, பார்த்தால் நானே காலை சுவரில் மோதிக் விட்டிருக்கிறேன்! இன்னொரு கனவும் மறக்கமுடியாதது, என்னவென்றால் கீழே விழுவது போல. பார்த்தால் படுக்கையிலிருந்து தரையில் இருக்கிறேன்! நல்லவேளை, பொண்ணு படிக்குது என்று தனி ரூம் கொடுத்திருந்ததால் பிழைத்தேன் தம்பி என்றொரு சதிகாரனிடமிருந்து!!

ரெகுலராக சில் கனவுகளும் வரும், அதுவும் பரீட்சை சமயத்திலும், பரீட்சைக்கு பின்பும்! அதாவது, நான் செல்வதற்குள் பரீட்சை ஆரம்பாகியிருக்கும், அல்லது முதல் பாதி முடிந்திருக்கும் அல்லது ஹால் டிக்கட் கொண்டுபோகாமல் சென்றிருப்பேன்.. அந்தக் கனவு அவ்வளவு நிஜமாயிருக்கும்..இதயம் படபடக்க வேர்த்துக் கொட்டி எழுந்துப் பார்த்தால் மணி இரண்டு அல்லது மூன்று இருக்கும். அப்போது ஒரு நிம்மதி வருமே..அதற்கு ஈடு எதுவுமேயில்லை!

இன்னொரு விஷயம், ஏதாவது விரும்பத்தகாதது நடந்திருந்தால் இது கனவாக இருக்கக் கூடாதா என்று நினைத்துக்கொள்வேன்! உச்சபட்ச காமெடி, கனவிலும், இது கனவாக இருக்கக் கூடாதாவென்று நினைத்துக் கொள்வது போல் வரும்!! :-))

சின்னவயதில் பகலில் மதியம் தூங்கி அந்திசமயம் எழுந்ததும் அடுத்தநாள் காலை போலிருக்கும். அப்போது பல்விளக்கியெல்லாம் காமெடி செய்திருக்கிறேன்! சமீபத்தில் பப்புவும் அப்படி செய்ய முற்பட்டாள்.

நினைவு தெரிந்து வந்த முதல் கனவு இன்றும் மனதிலிருக்கிறது. நிறைய கதைகள் கேட்ட பாதிப்பு என்று நினைக்கிறேன். ராட்சசன் வந்து எங்கள் வீட்டு கொல்லையிலுள்ள பனை மரத்தை பிடுங்கி பல் விளக்குகிறான். அன்று பகல் முழுவது பயந்த பயமும் இன்றும் நினைவிருக்கிறது! :-)))

கனவில் உளறுவது இன்னொரு காமெடி. மாமா பையன் புகழேந்தி கனவில் உளருவான். நாம் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லுவான்! கனவில் சொல்லாததையெல்லாம் உளறியதாகச் சொல்லி கலாட்டா செய்து காலி செய்யும் கூட்டமும் எங்கள் வீட்டில் பஞ்சமில்லாமலிருந்தது!

கனவென்றால் மறக்கமுடியாமல் நினைவுக்கு வருவது காலேஜில் நடந்த சம்பவங்கள் சில.
தினமும் கலாட்டா, ஜாலி, கிண்டல் தானே வாழ்க்கை அப்போது. ராகிங் செய்தவங்கதான் பிற்காலத்தில் நமக்கு எல்லாம் உற்ற தோழிகள்/அக்காக்களாகி விட்டிருப்பார்கள். அவர்கள் செய்த ராகிங்களுக்கெல்லாம் நம்மிடம் வாங்கிக் கட்டிக் கொள்வார்கள் அப்புறமாக! அப்படி என்னை கலாட்டா செய்தவர்களிடம் சொன்னது இது!


“அக்கா, நேத்து நைட் எனக்கு ஒரு கனவு வந்துச்சுக்கா, என்ன தெரியுமா, அதுல நீங்க வர்றீங்க. அப்புறம் ஜெய்ஸ்ரீ, கலா, தேவி எல்லாரும் வர்றாங்க. நாம எல்லாம் ஹெவன் – ல இருக்கோம் அக்கா, அங்கே உள்ளே போனது சொல்றாங்க, நீங்க இந்த ஹால்ல நடந்து போகணும். அங்அக் ஒரு தட்டு வரும்,. அதை மட்டும் மிதிக்கவேக் கூடாது! நானும் பயந்து பயந்து நடந்து வர்றேன், பார்த்தா ஜெய்ஸ்ரீ அக்கா வர்றாங்க, அவங்ககூட யாரோ ஒரு ஆள். அசிங்கமா பார்க்கவே
சகிக்கல! என்னான்னு கேட்டா, அவங்க சொல்றாங்க, நான் அந்தத் தட்டை மெதிச்சுட்டேன், இந்த ஆளை கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க, பார்த்து போ அப்படின்னு! அப்புறம் பார்த்தா தேவிக்காவும்! அவங்களும் அதே சொல்றாங்க! நானும் பயந்துகிட்டே வர்றேன்..பார்த்தா நீங்க வர்றீங்கக்கா! ஆனா உங்களுக்கு மட்டும் நல்ல அழகான் ஹஸ்பண்ட்! அப்போ நான் உங்களைக் கேக்கறேன், அக்கா நீங்க்தான் தட்டை மெதிக்கலையான்னு. அப்போ உங்க கூட இருந்தவர் சொல்றார், “இல்ல, நாந்தான் தட்டை மெதிச்சுட்டேன்”ன்னு!”

-அப்படின்னு சொல்லிட்டு ஓடியே வந்துட்டேன்!!

உஷாக்கா, ஐ மிஸ் யூ சோ மச் உஷாக்கா! அந்த முல்லையும் இப்போ இல்லை, அந்த உஷாக்காவும் இருக்க மாட்டாங்கன்னும் தெரியும்.வாழ்வின் உளிகளில் வெவ்வேறு பரிணாமங்களில் நாமிப்போது! ஆனா, நம்ம காலேஜ் காம்பஸ்-ல கண்டிப்பா ஏதாவதொரு முல்லையும், உஷாக்காவும் கண்டிப்பா இருப்பாங்க..எத்தனை பேட்ச் வந்தாலும்!

Add a comment திசெம்பர் 17, 2008

குத்துவிளக்காக குலவிளக்காக!!!

அமித்து அம்மா ஆரம்பிச்சு, வித்யா தொடர்ந்து அப்புறம் என்னையும் இழுத்து விட்டுட்டாங்க இதுல. ஓக்கே என்னோட கொசுவத்தி இல்லை அனுபவங்கள் எப்படியாவது எடுத்துக்கோங்க!
உண்மையில் ஒரு பதிவு எழுதத்தான் நினைத்திருந்தேன் வழக்கம்போல பப்புவை பற்றி! வில் பப்பு ஃபாலோ அ ரிலீஜியன், அப்படின்னு! ஏன்னா, ரிலீஜயனை விட ஸ்பிரிச்சுவலா இருக்கறதுதான் முக்கியம்ன்றது என்னோடக் கருத்து! அந்தப் பத்தி அப்புறம் பார்ப்போம்!

நான், ஒரு தமிழ்நாட்டு பெண்ணுக்குரிய அடையாளங்களான, நீள முடி, பூ வைக்கிறது, கொலுசு போட்டுக்கிறது, கை நிறைய வளையல் இதெல்லாம் இல்லாத ஒருத்தி. ஏனோ அதெல்லாம், சீரியல்லயும் சினிமாலயும் வர்றவங்களுக்குத்தான் எனும் நினைப்பு! பெண்ணுக்கு படிப்பும் அறிவும் இருந்தாப் போதும்ன்ற நினைப்பாக் கூட இருக்கலாம்! உண்மை-ன்னு ஒரு புத்தகம் எஙக் வீட்டுக்கு வரும். அதை ஐந்தாவது படிக்கும்போதிலிருந்து படிக்க ஆரம்பிச்சேன். அதுல படிச்சு, சின்ன வயசுலயே மனசில பதிந்ததனாலேயே என்னவோ எனக்கு நகை, அப்புறம் பூ மேலல்லாம் ஈர்ப்பு இல்லாமயே போய்டுச்சு! பூ ரொம்ப பிடிக்கும், ஆனா பறிக்கப் பிடிக்காது. ஏன்னா, ஒருதடவை கோகுலத்தில், “பூ எனக்குப் பிடிக்கும், ஆனா அதை பறிச்சு ஜாடியில் வைக்கப் பிடிக்காது, குழந்தைகள் கூடத்தான் அழகு. அதனால், அவர்களின் தலைகளை வெட்டியா வைச்சிக்கறோம்-”ன்ற மாதிரி ஒரு பொன்மொழி படிச்சேன். அதிலேர்ந்து பூக்களை பறிக்கறது இல்லை. அதுவுமில்லாம, பூவை தலையில் வைக்க அவ்வளவாக முக்கியத்துவம் கொடுத்ததில்லை நான். ஒருமுறை, மதுரை பஸ் நிலையத்தில் ஒரு பெண் நின்று ஓரத்தில் இருந்த கடையில் பூவாங்கி தலையில் வைத்துக் கொண்டு பஸ் ஏறிச் சென்றதை மிகுந்த வியப்போடு பார்த்தேன் நான்!

வீட்டுல எனக்கு நகை வாங்கினாக் கூட நான் போட்டுக்கவே மாட்டேன். மேலும் அதெல்லாம் எனக்குத் தெரியாமலே வச்சிருந்தாங்க. (காலேஜ் போனப்பறம்தான் ஆகா, இவ்ளோ இருக்கான்னு தெரிஞ்சது. அதிகமில்லை, குட்டி குட்டியா கம்மல்கள்)எனக்கு அதெல்லாம் வேணாம்னு தொடவே மாட்டேன். நானே சம்பாரிச்சுதான் போட்டுக்கணும்னு ஒரு வைராக்கியம். மேலும் நகை மேல அப்படி ஒன்னும் பெரிய ஆசையெல்லாமும் இல்லை. வீட்டிலயும், எனக்கு நகை ஆசை வராதமாதிரிதான் பார்த்துக்கிட்டாங்க. நகை-னு ஒண்ணு போட்டுக்கணும்னு தோணினது, கல்யாணத்துக்கு அப்புறம்தான்! உறவினர் கல்யாணம், விசேஷங்கள்-னு போக ஆரம்பிச்சதுக்கு அப்புறம், அம்மா கொடுத்த நகைகளை பூட்டி வைக்காம அப்போ மட்டும் போட்டுக்க ஆரம்பிச்சேன். மேலும், இன் லாஸ்-க்கு நாம் போட்டுக்கலன்னா அது பிரஸ்டீஜ் பிராப்ளம்! அதுவும், ரொம்ப சிம்பிளாதான், அப்போ மட்டும் அமித்து அம்மாவோட அம்மன் எஃபக்ட் கொடுப்பேன் நான். புடவைக் கட்டி, கை நிறைய மேட்சிங் வளையல் போட்டு, தொங்கல் கம்மல், இல்லேன்னா இருக்கவே இருக்கு முத்துக்கள். பூ மட்டும் நோ சான்ஸ், ஏன்னா எனக்கு இருக்கற முடியில் வைக்க முடியாதே!

கல்யாணம் நிச்சயமானபின் முடி வெட்டாம விட்டுட்டேன் வளரட்டும்ன்னு, முகிலின் பாட்டி வேண்டி விரும்பி கேட்டுக்கிட்டதால! கல்யாணத்திற்கு அப்புறம், ட்ரிம் பண்ணிட்டேன், கொஞ்சமா பின்னல் போடறமாதிரி. அப்போ எங்க மாமியார் வந்திருந்தாங்க ஊரிலிருந்து. நான் ஆபிஸ் கிளம்பும்போது, நான் தலை சீவறேம்மான்னாங்க. யார் என் தலையில்
கைவச்சாலும் எனக்கு பிடிக்காது. ஆனா, நோ சொல்லதான் நமக்கு தெரியாதே. சோ, பின்னி விட்டுட்டு,பிரிட்ஜிலிருந்து பூ எடுத்துட்டு வந்தாங்க. கனகாம்பரம். மஞ்சள் கனகாம்பரம்.
அன்னைக்குன்னு பார்த்து, என் கூட வேலை செய்ற பிரண்டு வேற நான் ஆட்டோலதான் போறேன், ரெடியா இரு, பிக்கப் பண்ணிக்க வரேன் ஒண்ணா போலாம்னு வேற சொல்லியிருந்தா. ஆகா, பிரண்ட்ஸ்-எல்லாம் பார்த்தா கிண்டல் பண்ணியே நம்மளை காலி பண்ணிடுவாங்க்ளேன்னு ஒரு கிலி வேறே! ஆனா, வைச்சிக்காம இருந்தா அவங்க ஹர்ட் ஆகிடுவாங்கன்னும் தோணுது. என்ன பண்ணறது! என் பிரண்டு வர்றா, அவளுக்கு வேணும்னு கட் பண்ணி வைச்சிட்டு, போகும்போது வச்சிக்கறேன் ஆண்ட்டி-ன்னு சொன்னா நானே வச்சிடுறேம்மான்னு வைச்சிவிட்டுட்டாங்க, பார்த்தா அப்பவும், சடையை விட நீளமா தொங்குது பூ! அப்புறம், என்ன ரெண்டு பேரும் மஞ்சள் கனகாம்பரம் வச்சிக்கிட்டு சியன்னா ஸ்விட்ச் பக் பிக்ஸ் பண்ணக் கிளம்பினோம். ஆட்டோவில் போகும்போது ரெண்டு பேரும் எடுத்து ஹாண்ட் பேகில் வைச்சிக்கிட்டோம், அந்தப் பூவை!!

மெட்டிப் போட்டுக்க பிடிக்கும் எனக்கு. ஆனா சில சமயம், செருப்புகளோட ஒத்துப் போகாது, உறுத்தும். ஆனா, பப்பு ஒரு வயசா இருக்கும்போதிலிருந்து அதை கழட்ட முயற்சி செஞ்சு ஒன்றரை வயசுக்குள்ள வெற்றியும் பெற்று விட்டாள். கையில் வச்சிருந்து முழுங்கிட்டா என்ன பண்றதுன்னு, அதையும் கழட்டி வைச்சதுதான், இன்னும் போடலை. எங்கம்மாவும் திட்டித் திட்டி பார்த்துட்டாங்க. நாமதான் சொன்னா செய்ய மாட்டோமே! ஒருவேளை சொல்லாம இருந்திருந்தா போட்டிருப்பேனோ என்னவோ!

கொலுசு போட்டும் பழக்கமில்லை எனக்கு. ஆனா யாராவது போட்டிருந்தா பார்க்கப் பிடிக்கும்.
கல்யாணத்தின் போது, அம்மா ஒரு செட்டும், கல்யாணத்திற்கு அப்புறமும் மாமியார் ஒரு செட்டும் கொடுத்தாங்க. ஆனா, நாந்தான் போட்டுக்க மாட்டேனே.வழக்கம் போல மாமனார் கொலுசு போடும்மா ந்னு சொன்னார். ரொம்ப சத்தம் வரும் அங்கிள், ஆபிஸ்-ல் எல்லாரும் என்னையே பார்க்கற மாதிரி பீலிங் ந்னு சொன்னது,, அந்த மணிகளை மட்டும் எடுத்திட்டு கொடுத்தார். அப்புறம் அவங்க ஊருக்குப் போனப்பறம் கழட்டி வைக்கிறது, அவங்க நாளைக்கு வராங்க இன்னைக்கு நைட் எடுத்து போட்டுக்கறதுன்னு ரெண்டு மூனு தடவை நடந்துச்சு. நம்ம கொள்கைகள், விருப்பங்கள் அடுத்தவங்களை காயப் படுத்திடக்கூடாதுன்னு! அப்புறம், முகில் இதைப் பார்த்திட்டு, உனக்கு இஷ்டமில்லேன்னா போடாதே, நான் கேட்டா சொல்லிக்கறேன் அப்படின்னு சொல்லிட்டாங்க. சோ, அதுக்கும் டாடா!!

நகையெல்லாம், சிட்டில வீட்டுல இருந்தா பயம்ன்னு, லாக்கர்ல கொஞ்சம், எங்க மாமியார் வீட்டுல கொஞ்சம்னு இருக்கும். ஏன்னா, சில சமயம் அது ஹிந்தி ட்யூசன் படிக்கப் போகும். அதேசமயம், ஊரில விசேஷம்னா, அங்க இருக்கும் நகையை போட்டுக்கிட்டு போகலாம். மத்தபடி தாலி போட்டிருக்கும் செயின் மட்டும்தான்! கொத்துக் கொத்தா போட்டுக்கற வழக்கமும் கிடையாது. இப்போ சுத்தமா வளையலும் கிடையாது, போட்டிருந்தா இப்படி டைப் அடிக்கமுடியுமா என்ன! காலேஜ் டே, சாரி டே மாதிரி வந்தா மட்டும் பேஷனபிளா போட்டுப்பேன். அவ்வளவுதா, ஆனா சின்ன வயசுல எக்கச்சக்கமா பான்ஸி வளையல்கள் போட்டிருக்கேன். அதுக்கு அப்புறம் பிரெஸ்லெட்தான். ஏனோ தங்க வளையல் என் கைக்கு நல்லாயில்லாத மாதிரி பீலிங். சின்ன வயசுலே ஒரு தடவை, குடும்ப நண்பர் கல்யாணத்தில், செயினையோ கம்மலையோ வேற தொலைச்சுட்டேன்! அவ்ளோதான், அதுவும் கட். அதுவும் இல்லாம, காலேஜ் படிச்சது ஹாஸ்டல், அதுவும் கொடைக்கானல். பனிரெண்டு மணிநேர பயணம். அதனாலேயே காதுல போட்டுக்க சின்னச் சின்ன கம்மலா கலெக்‌ஷன் வச்சிருப்பேன். உயிருக்கே ஆபத்தாயிடக்கூடாது இல்லையா! அப்படியே போட்டு போட்டு, இப்போ எனகிட்ட இருக்கறதெல்லாம் லைட் வெயிட் மாடல்கள் தான்!

பதிவு ரொம்ப நீளமா போய்கிட்டிருக்கு!
முடிவா என்னன்னா, சாதாரணமான நாட்கள், அலுவலகம் செல்லும் போது கம்மல்,
தாலி போட்டிருக்கும் செயின். வளையல், பூ நோ எண்ட்ரி! புடவை, அதான் சொன்னேனே, கல்யாணம் அதுவும் காலை முகூர்த்ததிற்கு போனால் மட்டுமே. ரிசப்ஷன் என்றால் சல்வார்! இப்படியிருக்கும் நான், என்னோட அடுத்த தலைமுறைக்கு என்ன கத்துக் கொடுக்கப் போறேன்னு நினைக்கறீங்க? உனக்கு இஷ்டமிருந்தா இதெல்லாம் போட்டுக்கோ, வற்புறுத்தவோ தலையிடவோ மாட்டேன். ஆனா, உனக்கு பிடிச்சமாதிரி வேணுங்கறதை நீ சம்பாரிச்சுதான் வாங்கிக்கணும்!

பி.கு:
இதுக்கு எல்லாம் காரணம், அமித்து அம்மாவோட போட்டோ பார்த்து ஒன்னைக் காட்டினாங்க..பார்த்தா, கையில் ஒரு வேல் வைச்சி, ஏதாவதொரு பூவுக்குள்ள நிக்கவோ உட்காராவோ வைச்சு அம்மன் படம் தோத்துது போங்க, அந்த ரேஞ்சுல இருந்தாங்க!! அதைப் பத்தி பேசிக்கிட்டே இருந்தப்போ இதைப் பத்தி பதிவு போடலாமான்னு பேசினது, இப்போ இந்த நெலமையில் இருக்கு. யாராவது இந்தப் பதிவை தொடர்ந்தா நல்லாயிருக்கும்!

Add a comment திசெம்பர் 6, 2008

இந்த சிம்டம்ஸ் உங்களிடம் இருந்தால்..

உங்கள் வீட்டில் ஒரு வாண்டாவது இருக்கிறதென்று அர்த்தம்..அர்த்தம்!!

1. அவர்கள் பாடும் குழந்தைப்பாடல்களை(ரைம்ஸ்) உங்களையறிமலேயே முணுமுணுக்கத் தொடங்கியிருப்பீர்கள், அவர்கள் அருகிலில்லாத போதும்!!

2. டூத் பிரஷோ, அல்லது வீட்டுக்கு தேவையான தொங்கும் அலங்காரப் பொருட்களோ, சிறு சாமான்களோ தேர்ந்தெடுக்க நேர்ந்தால் நீங்கள் வாங்கியது ஆரஞ்ச்/மஞ்சள் ப்ளோரசண்ட் கலர்களில் இருக்கும்!!

3. மளிகை சாமான்கள் வாங்கும்போது, எதனுடன் இலவசமாக பெரிய பாட்டில்கள், கண்டெய்னர்கள் வருகிறதென்று பார்த்து வாங்குவீர்கள், குட்டீஸின் விளையாட்டு சாமான்கள் போட உபயோகமாகுமென்று!

4. புத்தகக் கடைக்குச் செல்வீர்கள், வாங்கவேண்டியவற்றை மனதில் நினைத்துக் கொண்டு! ஆனால், நேராக குழந்தைகள் பகுதிக்குச் சென்று நிற்பீர்கள். கடைசியில், இன்னொரு நாள் பார்க்கலாம் என்று பில் போடும்போது நினைத்துக் கொள்வீர்கள்!!

5. புதிதாக முளைக்கும் குழந்தைகளுக்கான கடைகளை உள்ளே சென்று பார்த்துவிட ஆசையிருக்கும், வாங்குவத்ற்கு ஒன்றுமில்லாவிட்டாலும்!!

Add a comment நவம்பர் 15, 2008

கிளாஸ் ரூம் விளையாட்டுகள் : ஜாலிபாஸ், FLAMES இன்னபிற

அமித்து அம்மா போட்டிருக்கும் இந்த போஸ்ட் என் நினைவுகளையும் கிளறிவிட்டது. விளையாட்டுக்காக, இந்த போஸ்ட்!இது கிளாஸ் ரூமில் விளையாடும் விளையாட்டுகளைப் பற்றி! டீச்சர் வருவதற்குள்ளாகவோ, அல்லது பாடம் டீச்சருக்குத் தெரியாமலோ விளையாடப் படுபவை! ஒன்பதாம் வகுப்பு வரை இவற்றை விளையாடியதாக நினைவு!

ஜாலிபாஸ் : இது இடது/வலது உள்ளங்கையின் ஒரத்தில் பேனாவினால் வட்டவடிவத்தில் பொட்டு போல வைத்துக் கொள்ளவேண்டும்.அருகிலிருப்பவரிடம் அதைக் காட்டவேண்டும். அவர்கள் கையிலும் அதே போல் இருந்தால் ஜாலி என்று சொல்லிவிட்டு விட்டுவிட வேண்டும்.அப்படி அவர்கள் கையில் இல்லையென்றால் நமக்கு சாக்லேட் வாங்கித் தரவேண்டும்!! இதற்காக, காலை பிரேயர் முடித்த கிளாஸ் ரூம் வந்தவுடன் மார்க் வைத்துக் கொள்வோம்! அதன் விளைவு இன்றும் status meeting-ல் போரடிக்கும் போது மார்க் செய்துக் கொள்கிறேன்! ஆனால் அருகிலிருப்பவருக்கு தெரியவேண்டுமே இவ்விளையாட்டு! 😉

புக் கிரிக்கெட் : பாட புத்தகத்தை திருப்பிக் கொண்டே வந்து ஏதாவதொரு பக்கத்தில் நிறுத்த வேண்டும். வலது பக்கத்தின் கடைசி எண்தான் நீங்கள் எடுத்த ரன். பையன்களிடம் தான் இவ்விளையாட்டு பேமஸ்,வழக்கம்போல !

FLAMES : இதில் இருவரது பெயர்கள் தேவை.அதாவது விளையாடுபவர் மற்றும், அவரது தோழனோ/தோழியோ அவரது பெயர்!இது அவர்களுக்கிடையே உள்ள உறவை கண்டுபிடிக்கும் விளையாட்டு! இருவரின் பெயர்களை எழுதி, பொதுவாக இருக்கும் எழுத்துகளைஅடித்துக் கொண்டே வர வேண்டும். ஆனால், எப்படிக் கண்டுபிடிப்போம் என்பது மறந்து போய் விட்டது! யாருக்காவது தெரியுமா?
F – FriendL = LoveA = AdoreM = MarriageE = Enemy S = Sister.
எழுத்து விளையாட்டு : Name, Place, Animal, Thing
ஒரு எழுத்து எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த எழுத்தில் ஆரம்பிக்கும் Name, Place, Animal, Thing எழுத வேண்டும்.நான்காம் வகுப்பில் இது ரொம்ப பேமஸ்! x அல்லது e வந்தால் கொடுமை!

வேறு ஏதேனும் விடுபட்டிருந்தால் சொல்லுங்கள்!!அநேகமாக 80களில் 90களில் பள்ளி முடித்தவர்கள்இதையெல்லாம் மிஸ் செய்திருக்கமுடியாது!! 🙂

Add a comment நவம்பர் 6, 2008

சும்மா டைம் பாஸ்

நாம பள்ளிக்கூடத்தில் கண்டிப்பாக பிரேயர் டைமில் கீழே இருப்பதை சொல்லியிருப்போம்!

“India is my country and all Indians are my brothers and sisters.”

ஆனா, தன்னுடைய வாழ்க்கையில் இதை உண்மையிலேயே கடைப்பிடித்தவர் யார்?

Add a comment நவம்பர் 3, 2008

matrix ஞாபகம் இருக்கா? படம் இல்லீங்க…

பாடம்!!கண்டு பிடிங்க!

a h g

h b f

g f c

டெடிகேடட் டூ சின்ன பாண்டி, பெரிய பாண்டி!!

பி.கு: இது ரொம்ப பேமஸ்…எங்க ஸ்கூல்ல!!

Add a comment ஒக்ரோபர் 17, 2008

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

ஒக்ரோபர் 2018
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Posts by Month

Posts by Category