Posts filed under: ‘கவிதா | Kavitha‘




ஒரு அம்மாவின் குறிப்புகள் – 5

குழந்தைகளுக்கான உணவு வகைகளை புதுகைத்தென்றல் மற்றும் விஜி முன்னவே பதிவிட்டு உள்ளனர். அந்த பதிவுகளையும் பார்வையிட்டு, பிறகு இந்த பதிவை எழுதுகிறேன். தன் குழந்தைகளை வளர்க்க ஒவ்வொரு தாயும் எத்தனை பாடுபடுகிறார்கள் என்பது இங்கிருக்கும் பதிவுகளை படிக்கும் போது தெரிகிறது. 🙂

எனக்கு தெரிந்த சில உணவு செய்முறைகளை பதிவிடுகிறேன். அதற்கு முன் சுயபுராணம். 🙂

நவீனுக்கு திட உணவு கொடுக்க ஆரம்பித்ததும் மிகவும் சிரமப்பட்டேன் எனலாம். குறைந்தபட்சம் 2 மணி நேரத்திலிருந்து, 3 நேரம் எடுத்துக்கொள்வான், வாயில் எப்படியும் 2, 3 உருண்டுகளை இந்த பக்கமும் அந்த பக்கமும் அடக்கி வைத்துக்கொண்டு உள்ளே முழுங்காமல் வைத்திருப்பான். எனக்கு பல நேரங்களில் பொறுமை இழந்து போகும், ஆனாலும் நீயா நானா என்று பார்த்துவிடுவோமடா என்று முழுவதுமாக ஊட்டி முடித்துவிட்டு தான் விடுவேன். பொறுமையுடன் இருக்கவேண்டும் என்பதால், நான் முதலில் சாப்பிட்டு விடுவேன், இல்லையேல் எனக்கு ஏற்படும் பசியில் பொறுமை இழுந்து விட்டால் என்ன செய்வது.?

அடுத்து என் அண்ணன் மகன் நிவேதன், இவனின் அம்மா இவன் 1.5 வயதாகும் போது இறந்து போனார்கள். அவனுக்கு பழக்கமே இல்லாத நான் என்னுடன் அவனை அழைத்து வரும்படியாக ஒரு சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. யாரைப்பற்றியும் எதைப்பற்றியும் கவலைக்கொள்ளாமல் அழைத்தும் வந்து விட்டேன். அவனுக்கு அப்போது பேச்சும் வரவில்லை. எப்போதும் அம்மாவை தேடி அல்லது காரணமேயின்றி அழுதுக்கொண்டே இருப்பான்,

அவனுக்கு புதிய, தெரியாத சூழலில் அவனை அழைத்து வந்து விட்டதால் அவன் மட்டும் இல்லை நானும் உடன் சேர்ந்து கஷ்டப்பட்டேன். இவன் நவீனுக்கு எதிர்மறை, எவ்வளவு எளிதாக சாப்பாடு தொல்லை இல்லாமல் நவீனை வளர்த்தேனோ அதற்கு மாறாக ரொம்பவும் சிரமப்பட்டேன். காரணம், இவனுக்கு எந்த உணவும் சட்டென்று ஒற்றுக்கொள்ளாது. ஒரு உருண்டை அதிகமாகிவிட்டால் கூட சாப்பிட்ட அத்தனையும் அப்படியே வாந்தி எடுத்துவிடுவான். ரொம்பவும் உடல் மெலிந்து, எடை குறைந்த குழந்தையாக இருந்தான்.

நவீன் அப்படி இல்லை. அதனால் நவீனை போலவே அவனையும் சக்தியுடையவனாக மாற்ற வேண்டும் என்று இரவும் பகலும் நிவேதனை மட்டுமே கவனிக்க ஆரம்பித்தேன். நிவேதனுக்கு சர்க்கரை, சாப்பாடு, காய்கறி என்று எல்லாமே ஒரு அளவில் தான் இருக்க வேண்டும், டாக்டர் கலோரி கணக்கிட்டு பட்டியில் இட்டு கொடுத்துவிட்டார்கள். ஒரு நாளைக்கு இவ்வளவு பால், இவ்வளவு சர்க்கரை என்றால் அவ்வளவு தான் உள்ளே செல்ல வேண்டும், அதிகபடியாக சென்றால் உடனே அவன் உடம்பு பாதிக்கப்படும். அதனால் மிக மிக கவனமாக கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது. அதில் அவன் பக்கமே திரும்பி படுக்க சொல்லுவான். அவனுக்காக இரவில் ஒரே பக்கமாக படுத்து என்னுடைய இடுப்பு, மற்றும் கால் பகுதிகளில் தோல் தடித்து, புள்ளி புள்ளியாகி கறுப்பு நிறம் படற ஆரம்பித்துவிட்டது. அதை போக போக சரி செய்து கொண்டேன் என்றாலும் குழந்தையை அம்மா இல்லாமல் வளர்க்க எத்தனை சிரமப்பட்டேன் என்பதை மனதளவில் உடலளவில் உணர்ந்தேன். சில நேரங்களில் தாங்க முடியாமல் வீட்டு கதவு ஜன்னல் எல்லாவற்றையும் மூடிவிட்டு அந்த குழந்தையை இறுக்கி கட்டிக்கொண்டு சத்தம் போட்டு ஓ’வென்று அழுவேன். எப்படியோ என்னிடம் இருக்கும் வரை நல்ல முறையில் வளர்த்து கொடுத்துவிட்டேன். 🙂

நவீன் மற்றும் நிவேதனுக்கு கொடுத்த சில உணவுகள்.

1. துவரம் பருப்பை 5-6 பூண்டுகள் போட்டு வேகவைத்து கடைந்து, நெய் 2 ஸ்பூன் விட்டு, சுடசாதத்தை நன்கு பிசைந்து, அல்லது மிக்ஸியில் ஒரு அடி அடித்து பருப்பை சேர்ந்து பிசைந்து ஊட்டிவிடுவேன். தேவைப்பட்டால் ரசம் மேலோட்டமாக சேர்த்துக்கொள்வேன்.

2. இட்லி தோசை எப்போதும் போல.. நெய் சர்க்கரை தொட்டு அல்லது பால் விட்டு சர்க்கரை சேர்த்து மசித்து கொடுப்பேன்.

3. சத்துமாவு கஞ்சி

4. முட்டை

* முட்டையை வெங்காயம் சேர்த்து மிளகு பொடி சேர்த்து ஆம்லெட்,

* கீரையை பொடியாக நறுக்கி சேர்த்து மிளகு பொடி சேர்த்து ஆம்லெட்

* முட்டை வேகவைத்து இரண்டாக வெட்டி, மிளகு போடி தூவி கொடுக்கலாம்.

* முட்டை வேகவைத்து மிளகு சேர்த்து வறுத்துக்கொடுக்கலாம்

* பொட்டுக்கடலை, மிளகு இரண்டையும் மிக்ஸியில் மாவாக்கி, முட்டையுடன் கலந்து ஆம்லெட்

* கோஸ், கேரட், பீன்ஸ் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி லேசாக வதக்கி முட்டையுடன் சேர்த்து அடித்து ஆம்லெட்.

5. முந்திரி, பாதாம், திராட்சை – இவற்றை நிவேதன் பாக்கெட்டில் தினமும் ஒரு 5-10 போட்டு விடுவேன். காலையில் போட்டுவிட்டு சொல்லுவேன், குட்டி மதியத்துக்குள் சாப்பிடு அப்பத்தான் நவீன் மாதிரி ஆகலாம். இதில் குறிப்பிட வேண்டியது, என்னுடைய குழந்தையாக இருந்தாலும் நவீனுக்கு இவற்றை நான் கொடுத்தது இல்லை. நிவேதனுக்கு மட்டுமே கொடுப்பேன். அப்படியே கொடுத்தாலும் அதன் அளவு குறைவாகவே இருக்கும்.

6. கேக், ஸ்வீட், ஐஸ்கிரீம் – இதுவும் நிவேதனுக்கு முதலிடம். அவன் ஆசைப்படுவானே தவிர்த்து அவனால் நவீன் போல சாப்பிட முடியாது. இருப்பினும் ஸ்வீட், கேக் எப்படியும் வாரத்தில் 3 முறை கொடுத்துவிடுவேன். ஐஸ்கீரீம் அடிக்கடி இல்லை என்றாலும் மாதத்தில் 2 முறை கொடுப்பேன்.

7. சாக்லெட் – இது அதிகமாக கொடுக்காவிட்டாலும், சளித்தொல்லை வராத அளவு பார்த்துக்கொடுப்பேன்.

8. காய்கறி : இது ஓரளவு இருவரும் சாப்பிட ஆரம்பித்தவுடன் கோஸ், கேரட், பீட்ரூட், வெண்டக்காய், புடலங்காய், பாவக்காய் இவை அடிக்கடி சேர்ப்பேன். இதை தவிர்த்து வறுக்கும் காய்கரிகள் உருளை, சேப்பங்கிழங்கு, கருணைக்கிழங்கு, வாழைக்காய் வறுத்து தருவேன்.

9. சுண்டல் – தினம் ஒரு சுண்டல், கடலைபருப்பு, பயத்தம் பருப்பு, கொண்டகடலை, வேர்கடலை, முழுபயறு, காராமணி பயறு, மொச்சை போன்றவை. எல்லாவற்றிலும் மிளகுதூள் சிறிது தூவி கொடுத்தல் நலம்.

10. வத்தல் : சீரகம் அதிகம் சேர்த்து, மிளகாய் குறைத்து மிக்ஸியில் நன்கு அடித்து, வேகவைத்த அரிசிமாவில் கலந்து, இடியாப்ப அச்சியில் பிழிந்து காயவைத்துக்கொள்வேன். முள் அச்சுலும் கொஞ்சம் பிழிந்து காயவைத்துக்கொள்வேன். சீரகம் அரைத்து போட காரணம் குழந்தைக்கு தொண்டையில் அடைத்துக்கொள்ளாது என்பதால். உருளைக்கிழங்கு சிப்ஸ் போல சீவி, தேவையான உப்பு சேர்த்து பாதியளவு வேகவைத்து, வெயிலில் காயவைத்து வைத்துக்கொள்ளுவேன்.

11. முருங்கைகாய் லேசாக உப்பு போட்டு வேகவைத்து, உள்ளிருப்பதை மட்டும் வழித்து, மிளகு தூவி, பருப்பு சாதம் ஊட்டும் போது உடன் சேர்த்து கொடுத்துவிடுவேன். இது சளிக்கு மிக சிறந்தது.

அத்தோடு இன்றோடு இங்கிருந்து விடைபெறுகிறேன், தேவைப்பட்டால் திரும்பவும் வந்து எழுத முயற்சி செய்கிறேன். வாய்ப்பளித்த முல்ஸ் மற்றும் தவறாமல் படித்த எல்லா அம்மாஸ் க்கும் எங்களது நன்றிகள். 🙂

அணில் குட்டி அனிதா :- ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஒரு வழியா கிளம்பிட்டாங்களா.. நிம்மதி… !

பீட்டர் தாத்ஸ் :- You can learn many things from children. How much patience you have, for instance.

Advertisements

9 பின்னூட்டங்கள் ஏப்ரல் 27, 2009

ஒரு அம்மாவின் குறிப்புகள் – 4

மிக பெரிய பிரச்சனை மற்றும் மன அழுத்தத்தை தருவது குழந்தை பிறந்தப்பின் அம்மாக்களுக்கு ஏற்படும் உடல் பருமன். குழந்தை பேறு என்பது ஒரு தாய்க்கு அடுத்த பிறவி என்பார்கள். குழந்தை பேற்றால் நம் உடலில் பல வித மாற்றங்கள் ஏற்படுகிறது. அதில் முதலில் இருப்பது நம் உடலின் எடை. மிக சிலர் மட்டுமே எப்போதும் போல் இருப்பார்கள், அதற்கு குடும்பவழி காரணமாக இருக்கலாம். ஆனால் 99% பெண்கள் குண்டாகி விடுகிறார்கள். அதற்கான காரணங்கள் :-

1. இயற்கையாக உடலில் ஏற்படும் மாற்றங்கள்

2. குழந்தையை கவனிப்பதில் நம்மை நாம் கவனித்துக்கொள்வதில்லை

3. குழந்தைக்காக நன்றாக சாப்பிடவேண்டும் என்று சாப்பிட்டு சாப்பிட்டே நம் வயிற்றின் கொள்ளளவு அதிகமாகிவிடுகிறது.

4. அதிகமான உடல் உழைப்பு இல்லாமல் போவது.

அடிவயிற்று சதையை மட்டும் குறைக்க (குறிப்பாக அறுவை சிகிச்சை செய்துக்கொண்டவர்கள்) வீட்டிலேயே செய்யும் எளிதான உடற்பயற்சிகளை குறிப்பிடுகின்றேன். இதை செய்யவதற்கு முன்

1. உடற்பயற்சி செய்யும் போது, மிகவும் வேதனைப்படும் அளவு வலி இருந்தால் நிறுத்திவிடவேண்டும்.

2. வயிறு முழுக்க சாப்பிட்டுவிட்டு செய்யக்கூடாது. திட உணவு சாப்பிட்டு குறைந்த பட்சம் 4 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும். திரவ உணவு சாப்பிட்டால் குறைந்தபட்சம் 1/2 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும்

3. உடற்பயிற்சி முடிந்தவுடன் சாப்பாடு சாப்பிடக்கூடாது. குறைந்தபட்சம் 1/2 மணி நேரத்தில் இருந்து 1 மணி நேரம் கழித்து சாப்பிடலாம்.

4. தண்ணீர் நிறைய குடிக்கலாம், அதுவும் சுடத்தண்ணீராக இருந்தால் நலம்.

5. பயிற்சியின் எண்ணிக்கையை படிப்படியாக தான் உயர்த்த வேண்டும், நமக்கு வேகமாக குறைக்க வேண்டும் என்று, கடுமையாக செய்யக்கூடாது.

கீழ்கண்ட படத்தில் இருப்பது போன்று படிப்படியாக செய்து பாருங்கள்.

1. தரையில் விரிப்பு ஏதாவது போட்டு நேராக படுத்துக்கொள்ளுங்கள்

2. இடது காலை மட்டும் மெதுவாக மேலே தூக்குங்கள். முடிந்தவரை தூக்கிவிட்டு இறக்கிவிடுங்கள்.

3. அடுத்து வலது காலை மெதுவாக மேலே தூக்குங்கள். மெதுவாக இறக்கிவிடுங்கள்.

இதை வேகமாக செய்யக்கூடாது, மிகவும் மெதுவாக செய்யவேண்டும். அப்போது தான் தசைகளுக்கு நல்லது.

இதில் படம் 2, 3 ல் காட்டியுள்ள உடற்பயிற்சிகளை மட்டும், முதலில் ஒரு 5 முறை மேலே தூக்கி இறக்குமாறு எண்ணிக்கை வைத்துக்கொள்ளுங்கள். இரண்டு கால்களும் சேர்ந்து மொத்தம் 10 முறை. இதனை குறைந்தபட்சம் 7 நாட்கள் தொடர்ந்து செய்துவாருங்கள். 5 என்ற எண்ணிக்கை 10 ஆக்கி கொள்ளலாம். உங்களால் நன்றாக சுலபமாக வலியில்லாமல் கால்களை தூக்கி இறக்க முடிந்தவுடன், படம் 4 ஐ முயற்சி செய்யுங்கள்.

4. இரண்டு கால்களையும் ஒரு சேர மெதுவாக தூக்கி, ஒரு சேர மெதுவாக இறக்குங்கள். இப்படி தினமும் உங்களால் முடிந்த அளவு விடாமல் செய்து வந்தால் அடிவயிற்று சதை கொஞ்சம் கொஞ்சமாக கண்டிப்பாக குறையும்

5. எப்போது உடற்பயற்சி செய்தாலும் கடைசியில் ஒரு நிமிட அளவு உடலில் எந்த அசைவும் இல்லாமல், கண்களை மூடி அப்படியே படுத்து இருந்துவிட்டு எழுந்துக்கொள்ள வேண்டும்.

கடைசியாக படம் 6 இல் காட்டி இருப்பது போல் எப்போது எல்லாம் தரையில் உட்காருகிறீர்களோ அப்போது எல்லாம் கால்களை குத்திட்டு, கைகளால் இறுக்கி உடம்போடு அழுத்தி உட்காருங்கள். இதை டிவி பார்க்கும் போது செய்யலாம். உட்காரும் போது எல்லாம் இப்படி உட்கார்ந்து பழக்கப் படித்துக்கொண்டால், அடிவயிற்று சதை குறையும். இதை தனியாக உடற்பயிற்சியாகவும் செய்யலாம். ஆனால் மிக எளிதாக செய்ய முடியும் என்பதால் முடியும் போது எல்லாம் செய்யுங்கள்.

நாம் உட்காரும் போது சோபா, சேர் என்று உட்காராமல், தரையில் உட்கார்ந்து எழுந்து பழகலாம், அதுவுமே ஒரு உடற்பயற்சி தான்.

இப்படி உடற்பயிற்சிகள் எல்லாம் என் குழந்தைக்கு 5 வயது ஆகும் போது தான் நான் ஆரம்பித்தேன். அதுவரையில் எனக்கு அதன் தேவை இல்லாமல் இருந்தது, அதற்கு பிறகு நடைபயிற்சி. இது ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 2 -3 கிமி நடந்து செல்லுவேன். பள்ளிக்கு குழந்தைக்கு சாப்பாடு எடுத்துச் செல்ல நடந்தே சென்று வருவேன். இரண்டு சக்கர வாகனம் இருந்தாலுமே உபயோகப்படுத்தாமல் இருந்தேன். நடப்பதினால் என் உடல் பருமன் ஏறாமல் இருந்தது.

வீட்டில் டிரட் மில் இருந்தால், குறைந்த பட்சம் 10 நிமிடமாவது பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை உடலுக்கு தேவையான பயிற்சியையும், உங்களை எப்போதும் Active ஆக இருக்கும்படியாகவும் பார்த்துக்கொள்ளுங்கள். எல்லாவற்றிக்கும் மேல் உங்கள் எடை கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நீங்கள் மன உறுதியோடும், நம்பிக்கையோடும் இருக்க வேண்டும்.

பின் குறிப்பு : 🙂 படங்கள் பெயின்ட் பிரஷ்’ஷில் வரைந்தேன். ஏதாவது குறை இருந்தால்.. கண்டுக்காமல் நைசா விட்டுடுங்கோ !! 🙂 முடிந்தால் அடுத்தமுறை ஏதாவது வரையும் போது கையால் வரைந்து, ஸ்கேன் செய்து போடுகிறேன்.. 🙂

அணில் குட்டி அனிதா :- ம்ம்…. அம்மணி வூட்டுல இது எல்லாம் செய்ய தெரிஞ்சாலும் செய்யாம ஜிம் க்கு போறாங்க… ஆனா உங்களை வூட்டுல செய்ய சொல்றாங்க.. .என்னத்த சொல்ல.. ?! 😦

பீட்டர் தாத்ஸ் : “It typically takes about three months to reach a moderate fitness level, and then you just want to maintain that.

8 பின்னூட்டங்கள் ஏப்ரல் 25, 2009

ஒரு அம்மாவின் குறிப்புகள்- முத்தம் – 3

முத்தம் நம் அன்பை வெளிப்படுத்த இதை விட சிறந்தது ஏதாவது இருக்கிறதா என்ன? அதிலும் குழந்தைகளை கையில் எடுத்தாலோ தூக்கினாலோ, நம்மை அறியாமல் நாம் அவர்களுக்கு முத்தங்களை கொடுக்க ஆரம்பிப்போம். இதனால் வரும் பிரச்சனைகளை கொஞ்சமும் நாம் யோசிப்பது இல்லை. குழந்தைகளை தூக்குவதற்கு முன் நம் கைகளை கழுவிவிட்டு பின்பு தான் தூக்கவேண்டும். இதில் முத்தம் எல்லாம்… ?!! கொடுக்கவே கூடாது.

இது எப்போது யாருடைய குழந்தையை அன்போடும், பாசத்தோடும் பார்க்க சென்றிருந்தாலும், தூக்குவதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும். முத்தம் கொடுத்து அவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படத்தக்கூடாது. சிறு குழந்தைகளுக்கு எந்த நோயும் எளிதில் தொற்றிவிடும். குறிப்பாக அம்மாவிற்கு சளிபிடித்தால் கூட, அந்த அம்மா குழந்தைக்கு முத்தமிடக்கூடாது. எளிதில் அது குழந்தைக்கு தொற்றிக்கொள்ளும். நம் உமிழ்நீரிலில் ஏதேனும் கிருமிகள் இருப்பின், நம் வாயை சரிவர சுத்தம் செய்யாமல் இருந்து அதில் கிருமிகள் இருந்து, நாம் குழந்தையை முத்தமிட்டால், மிக மிக எளிதாக அது குழந்தைகளை தொற்றிக்கொள்ளும்.

ஒரு சிறிய எடுத்துக்காட்டு. கண் வலி வருகிறது. இது ஒரு வைரஸ் கிருமியால், தொற்றி பரவுவதே. இந்த கிருமி தொற்றுவதால் மட்டுமே நமக்கு இருக்கும் கண் வலி மற்றவருக்கு தொற்ற வாய்பிருக்கிறது. ஆனால் நம்மவர்கள் கண்களை பார்த்தாலே வந்துவிடும் என்று எண்ணி கருப்பு கண்ணாடி போடுவார்கள். கருப்பு கண்ணாடி போடுவதின் நோக்கம், கண் வலியில் கண்கள் சிவந்து, வீங்கி, அழுக்கு சேர்ந்து பார்க்கவே மிகவும் மோசமாக இருக்கும், அதை மற்றவர்கள் பார்த்து பயப்படவோ, அருவருக்கவோ வேண்டாம் என்பதாலேயே கருப்பு கண்ணாடி போடும் பழக்கம் உள்ளது. எனக்கு கண் வலி வந்தால், மிகவும் மோசமாகிவிடும், வெளியில் செல்வதை தவர்த்துவிடுவேன், வீட்டில் இருப்பதால், கண்களுக்கு கண்ணாடி போடமாட்டேன். ஆனால் கண் வலி சரியாகும் வரை, நான் கை வைக்கும் எந்த பொருளையும் அடுத்தவர் தொடாதவாறு பார்த்துக்கொள்வேன், குறிப்பாக, தனி டம்ளர், தட்டு, தலையணை, பெட்ஷீட், கர்சீப் , இப்படி சொல்லலாம். அவற்றை கண் வலி சரியாகும் வரை தனியாக உபயோகிப்பேன். எல்லோரும் உபயோகிக்கும் பொருளை தொடமாட்டேன், கம்பியூட்டர் கீ போர்டு, டிவி ரிமோட், ஏசி ரிமோட், பிரிட்ஜ் போன்றவற்றை தொடமாட்டேன். இப்படி இருந்ததால் வீட்டில் இருக்கும் மற்ற யாருக்கும் கண் நோய் பரவவேயில்லை, இத்துடன் எனக்கு கண்களுக்கு மருத்து போட்டுவிட்டவுடன் என் கணவர் கையை கழுவிவிட்டாரா என்று கேட்டுக்கொண்டே இருப்பேன். இது அதிகப்படியான கவனமே என்றாலும்,

நவீனுக்கு வரக்கூடாது என்பதில் என் கவனம் அதிகமாக இருக்கும். அதனால் எனக்கு என்ன உடல் உபாதை வந்தாலும் அவனுக்கு அது தொற்றிக் கொள்ளாமல் இருக்க ஆவன செய்வேன். மேலே விழுந்து பிரள அனுமதிக்காமல் ஏதாவது சொல்லி பயமுறுத்தி வைப்பேன். அதுவும் சின்ன வயதில் ரம்யா கிருஷ்ணன் நடித்த “அம்மன் ” படத்தை நினைவு கூர்ந்து, அவனிடம் அம்மன் சாமி வரும், கண்ணை குத்தும் என்று சொல்லி கொஞ்சம் பயம்முறுத்துவேன். இது ஒரு தவறான அணுகுமுறை என்பது எனக்கு தெரிந்து இருந்தாலும், அடங்காத சில நேரங்களில் என்ன தான் செய்வது.. ஆனால் அது எல்லாம் ஒரு காலக்கட்டம் வரை தான்…. ஒரு வயதிற்கு மேல்.. “ஓ அம்மன் சாமியா வர சொல்லு..வர சொல்லு, .ஐயம் மோர் இன்டரஸ்டட் டு மீட் ஹர், நான் இங்கேயே வெயிட்டிங். .கண்ணை எடுக்க என்ன டூல் அவங்க யூஸ் செய்வாங்க, அவங்க காஸ்டியூம் நல்லா இருக்கு ஆனா கண்ணை மட்டும் ஓவரா உருட்ட சொல்லாத. அதை செய்ய நீ தான் இங்க இருக்கியே ” ன்னு சொல்ல ஆரம்பித்துவிட்டான்.

வியாதிகள் உண்டாவதற்கு மூலக்காரணம், தொற்று கிருமிகளால் தான் என்பதால், குழந்தைகளுக்கு ஒரு சிலர் இடும் முத்தங்களினால் கண்ணங்களில் புண்கள் கூட வர வாய்ப்புகள் உண்டு. நமக்கே தெரியாது அது ஏன் வந்தது என்று? ஆனால் வந்து இருக்கும். விருந்தினர், சொந்தங்களை குழந்தைகக்கு ஆசையாக முத்தமிட வரும்போது ” முத்தம் கொடுக்காதே ” என்று எளிதாக சொல்லிவிட முடியாதே.. ஆனால் சொல்லித்தான் தீரவேண்டும் என்ற கட்டாயத்தில் ஒவ்வொரு அம்மாவும் இருக்கிறார்கள், காரணம் குழந்தையின் ஆரோக்கியம் ரொம்பவும் முக்கியம் அல்லவா?. நம் வீட்டில் இருப்பவர்களிடம் நேரிடியாக சொல்லிவிட முடியும் ஆனால் மற்றவர்களை.? விருந்தினரோ, சொந்தங்களோ குழந்தைகளை பார்க்க வரும்போது, அவர்கள் வந்து குழந்தையை தூக்குவதற்கு முன்னரே. … டாக்டரிடம் சென்று வந்தோம், குழந்தையை ரொம்பவும் கவனமாக பார்த்துக்கொள்ள சொன்னார்கள், என்னையே முத்தமிட வேண்டாம் என்று சொல்லிவிட்டார் என்றார் பாருங்களேன்… என்று சொல்லி பேச்சை ஆரம்பித்து அவர்களுக்கு புரியவைக்கலாம், அப்படியே.. நீங்களும் குழுந்தையை தூக்கி கொஞ்சுங்கள் ஆனால் முத்தம் மட்டும் வேண்டாம்… அப்படியே கொடுத்தாலும் கையில் (உள்ளங்கைக்கு மேற்புறம்) கொடுங்கள் என்று சொல்லிவிடுங்கள். விருந்தினர் சென்றவுடன் முத்தமிட்ட இடங்களை கிருமி நாசினி கலந்த சுடத்தண்ணீரில் நனைத்த துணியைக்கொண்டு துடைத்து எடுத்துவிடுங்கள். இதை மறக்காமல் செய்ய வேண்டும், அல்லது அவர்களின் எதிரில் கூட செய்யலாம், அப்படி செய்வதால், இன்னொரு முறை முத்தமிட மாட்டார்கள் அல்லது வேறு குழந்தைகளிடம் இப்படி செய்ய மாட்டார்கள்.

அன்பாக இருந்தாலும் குழந்தைகளின் ஆரோக்கியம் என்று வரும்போது விட்டுக்கொடுக்க முடியாது அல்லவா? ஆரோக்கியம் தானே முதல், அதனால் அம்மாக்களே… உங்களின் குழந்தைக்கு முத்தம் கொடுக்க வருபவரை நீங்கள் முன்னே நின்று தடுத்து நிறுத்துங்கள்.. அது குழந்தையின் அப்பாவாக இருந்தாலும் சரி… 🙂 , தடுக்க தயக்கம் காட்டாதீர்கள்… 🙂

அணில் குட்டி அனிதா : கவி….. முடிச்சாச்சா..?!! கிளம்பலாமா.. எனக்கு இந்த வீடு ரொம்ப போர் அடிக்குது.. அவ்வ்வ்வ்வ்!! ஒரே அம்மாஸ்.. நோ ஃபன்…. எல்லாம் ரொம்ப சீரியஸா இருக்க்காங்க.. அப்புறம் குட்டீஸ் ஒன்னையும் காணோம்… கண்ணை கட்டி காட்டுக்குள்ள விட்டாப்பல இருக்கு… ஆமா உங்க பிரண்டு. . இந்த ரோஜால இருக்குமே அந்த ..”முல்ஸ்” தானே… அவங்க எப்படி இங்க இருக்காங்க… ஆங்.. கொஞ்சம் கேட்டு சொல்லுங்க… ஒகே… சரி.. இன்னைக்கும் நான் தூங்கறேன்….. யூ டேக் ரெஸ்ட் அணிலு.. அம்மாக்கள்ஸ் எப்படியும் வந்து.. முத்தம் முத்தம் முத்தம்ம் ன்னு கமெண்ட போறாங்க. ஹி ஹி.. வர அம்மாக்கள் எல்லாம் எனக்கு ஒரு முத்தம் கொடுத்துட்டு போகனும் ஒகேஸ். .டீல் !! …

பீட்டர் தாத்ஸ் :A kiss is just a pleasant reminder that two heads are better than one

5 பின்னூட்டங்கள் ஏப்ரல் 24, 2009

ஒரு அம்மாவின் குறிப்புகள் – 2

நேற்றைய பதிவின் தொடர்ச்சி……..

குழந்தைகள் வளர்ப்பு பொதுவாக குழந்தைகளுக்கு உடல் பிரச்சனைகள் வராமல் பார்த்துக்கொண்டால், நாமும் நலம், குழந்தையும் நலம். அதில் குறிப்பாக அடிக்கடி குழந்தைகளிடம் பார்ப்பது சளித்தொல்லை. பள்ளிக்கு செல்ல ஆரம்பிக்காத குழந்தைகளுக்கு சளிப்பிடித்தால் அதற்கான முழுப்பொறுப்பு குழந்தையின் அம்மாவே சேரும். சளிப்பிடிப்பதால் குழந்தைகள் சாப்பிடுவதும், சாப்பாட்டின் அளவும் ரொம்பவும் குறைந்துவிடும், தூக்கம் கெடும், மூச்சு பிரச்சனை போன்றவை ஏற்படும், சளிப்பிடிக்காமல் இருக்க..

1. அம்மா சரியான உணவை சாப்பிட வேண்டும். அதிக குளிர்ச்சியான உணவுகள் கூடாது. செள செள (பெங்களூர் கத்திரிக்காய்), பீரிக்கங்காய், புளித்த தயிர், சுடசாதத்தில் தயிர் விட்டு சாப்பிடுவது, வியர்வையோடு குளிப்பது, சுடத்தண்ணீர், குளிர்ந்த தண்ணீர் இரண்டையும் கலந்து குடிப்பது, வியர்வையோடு சில்லென்று தண்ணீர் குடிப்பது போன்றவையால் உடனுக்குடன் சளிப்பிடிக்கும். ஒவ்வாத குளிர்ச்சியான காய்கரிகள் சாப்பிடக்கூடாது. தலைக்கு குளித்தால் தலையை ஈரத்தோடு விட்டுவிடுவது போன்றவை.

2. கைவிரல்களின் நகங்கள் சுத்தமாக இருக்கவேண்டும். நகங்களே இல்லாமல் இருந்தால் நலம். ஒவ்வொரு முறை கழிவரை சென்று வந்த பிறகு சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும்.

3. தினமும் குளித்து உடலை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைக்கு எது செய்தாலும் கை கழுவிவிட்டு செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.

4. எல்லோரையும் குழந்தைக்கு முத்தமிட அனுமதிக்கக்கூடாது. இதை தடுப்பது அம்மாக்களில் கையில் மட்டுமே இருக்கிறது.

5. குழந்தைக்கு குளிக்க ஊற்ற அழைத்து செல்வதற்கு முன், தேவையானவற்றை எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும். அதாவது தண்ணீர் பதமான சூட்டில் இருக்கிறதா? என்று பார்த்து பதமான சூட்டில் வைத்துக்கொள்ள வேண்டும், சோப்பு, ஷாம்பூ, (அ) சியக்காய், உடல் துடைக்க டவல் போன்றவை கைக்கு எட்டும் தொலைவில் வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தையை குளிக்க எடுத்த சென்ற பிறகு இந்த வேலை எல்லாம் செய்யக்கூடாது. அதே போல் குழந்தைக்கு உடலில் தண்ணீர் ஊற்றும் போது சின்ன அளவு குவலையை பயன்படுத்த வேண்டும். எங்கள் வீட்டில் ஆயா குழந்தைக்கு தண்ணீர் ஊற்ற டம்ளரை தான் பயன்படுத்துவார்கள். காரணம் அதிகமாக தண்ணீர் ஊற்றினால் சில சமயம் குழந்தை சுவாசிக்க கஷ்டப்படும். டம்ளரில் கூட அரை அரை டம்ளராக உள்ளங்கையால் டம்ளரின் வாயை பாதி அளவு மூடி வேக வேகமாக ஊற்றுவார்கள். பின் குளித்தமுடித்த கையோடு, டவலால் குழந்தையை உடனே சுற்றிவிடவேண்டும். 4-5 வயது வரை கூட இப்படி செய்வது நல்லது. தண்ணீரில் குழந்தைகளை ரொம்ப நேரம் விளையாடவிடுவதும் கூட சளித்தொல்லைக்கு காரணம்.

6. குளித்துமுடித்து பிறகு, பஞ்சை திரியாக்கி காது, மூக்கில் விட்டு தண்ணீர் இருந்தால் எடுத்துவிட வேண்டும். இது செய்ய தெரிந்தவர்கள் மட்டுமே செய்ய வேண்டும். சில சமயம் மூக்கில் விடும் போது குழந்தை மூச்சை நன்றாக இழுத்துவிட்டால் பஞ்சி உள்ளே சென்றுவிடும். அதனால் மிகவும் ஜாக்கறதையாக செய்ய வேண்டிய விஷயம். இது ஒவ்வொரு முறை குளித்த பிறகும் செய்யவேண்டும். நம்மை அறியாமல் காதிலோ மூக்கிலோ தண்ணீர் சென்று இருந்தால், இப்படி செய்வதின் மூலம் உடனுக்குடன் எடுத்துவிடலாம்.

7. தலை காயவைக்க நான் சாம்பிராணி புகை போடுவேன். ஆனால் இது எல்லா குழந்தைகளுக்கும் அம்மாக்களுக்கும் ஒற்றுக்கொள்ளாது என்பதை நேரில் பார்த்து இருக்கிறேன். எங்கள் வீட்டில் இப்படி புகை போட்டு தலைமுடியை காயவைப்பது தான் பழக்கம். அதனால் நவீனுக்கு எப்பவும் அப்படியே செய்வேன். இதுவும் டாக்டரின் ஆலோசனை கேட்டு உங்களுக்கும் குழந்தைக்கும் ஒற்றுக்கொள்ளும் பட்சத்தில் செய்யலாம். சாம்பிராணி புகையால் சளித்தொல்லை இருக்காது, கூந்தல் வாசனையுடன் இருக்கும்.

8. பொதுவாகவே நம் உடம்பில் எப்போதும் உள்ளுக்குள் சளி இருக்கும். அது இயற்கை. குளிக்க ஊற்றி முடித்தவுடன், ஆயா நவீனின் ஒரு மூக்கின் ஒரு துளையில் விரல் விட்டு அடைத்து இன்னொரு துளையில் வேகமாக ஊதுவார்கள். அவனுக்கு சளி இல்லை என்றால் கூட அவர்கள் அப்படி செய்யும் போது சளி வெளியே வரும். இதுவும் அதில் தேர்ந்தவர்கள் மட்டுமே செய்ய வேண்டும். அவன் வலிதாங்காமல் அழுவான், அவன் அழுவதை பார்த்து ஆயா இதைமட்டும் இனிமே நீ செய்யாதே என்று ஒவ்வொரு முறையும் சொல்லுவேன். :). எனக்காக ரொம்பவும் ஊதாமல் விட்டுவிடுவார்கள். 🙂

9. நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் வசம்பு, கண்டத்திப்பிலி, சாதிக்காய் இவற்றை விளக்கெண்ணெய் விட்டு எரியும் விளக்கில் சூடாக்கி கரியாக்கி, சின்ன சந்தனகல்லில் இழைத்து குழந்தையின் நாக்கில் தடவி விடுவார்கள். இதன் பலன், செய்முறை முழுமையாக தெரியாது, யாருக்காவது தெரிந்தால் எழுதி விளக்கவும்.

(மேற்க்கூறிய குறிப்புகள் அத்தனையும் ஆயா எனக்கு சொல்லிக்கொடுத்து தினப்படி நான் பழக்கிக்கொண்டது. )

அணில் குட்டி அனிதா : … எனக்கு தூக்கம் வருது… :((

பீட்டர் தாத்தா :- Cough is very common in children. However, cough and cold medicines are not useful in children and can actually be harmful. In most cases, a cough that is unrelated to chronic lung conditions, environmental influences, or other specific factors, will resolve on its own.

19 பின்னூட்டங்கள் ஏப்ரல் 23, 2009

அம்மாக்களுக்கு ஒரு அம்மாவின் குறிப்புகள்….

அம்மாவாக ஒரு சின்ன அறிமுகம் செய்துக்குறேன்..! எனக்கு ஒரே மகன் , பெயர் நவீன். அவனை எந்த /யார் உதவியும் இன்றி தனியாக வளர்த்தேன் என்பது என் வாழ்க்கையின் சாதனையாகவே நினைக்கிறேன். மூன்று மாதங்கள் வரை ஆயா துணை இருந்தாலும் அவரின் வயது காரணமாக அவரால் ரொம்பவும் குழந்தையை கவனித்து க்கொள்ள முடியாது. நானே அவர்களுக்கு ஒரு குழந்தை என்பதால் என்னை கவனிப்பதில் அவரின் கவனம் இருந்தது. ஆயாவின் நேரடி கவனிப்பில் அந்த மூன்று மாதங்கள் இருக்கும் போதே எப்படி எல்லாம் குழந்தையை வைத்துக்கொள்ள வேண்டும், என்னுடைய & குழந்தையின் உணவு பழக்கம், குளிக்க ஊற்றுதல், குறிப்பாக தலைக்கு ஊற்றுதல், என் மற்றும் குழந்தையின் தூக்கம், தாய்ப்பால் போன்ற நிறைய குறிப்புகளை என்னில் பதியவைத்துக்கொண்டேன். பின்பு எங்கள் வீட்டிற்கு வந்த பிறகு தேவைப்படும் போது கடிதம் எழுதி ஆயாவிடம் கேட்டுக்கொள்வேன். அப்போதும் அவர் எனக்கு கொடுக்கும் குறிப்புகள் உணவும் , தூக்கம் சம்பந்தமாகவே இருக்கும்.

ஆயாவின் ஒரு சின்ன அறிவுரையோடு ஆரம்பிக்கிறேன். “உணவே மருந்து !! எந்த அளவு நீயும் குழந்தையும் ஒழுங்கான உணவு பழக்கங்களை கடைப்பிடித்து சாப்பிட்டு வருகிறீர்களோ.. .அந்த அளவு நீங்கள் டாக்டருக்கு பணம் கொடுக்க வேண்டாம், டாக்டருக்கு கொடுக்கும் பணத்தை உணவாக மாற்று !! “

இந்த வரிகள் இப்போதும் எனக்குள் உள்ளது, சின்ன சின்ன உடல் உபாதைகளுக்கு எல்லாம் எல்லாம் என்னையும் சரி நவீனையும் சரி டாக்டரிடம் போகாமல் இருக்க தேவையானவற்றை வீட்டிலே செய்துக் கொள்ள பழகிக்கொண்டேன். உடல் பிரச்சனைகள் குறிப்பாக நவீனுக்கு வராமல் பார்த்துக்கொள்ள ரொம்பவும் அக்கறை எடுத்துக்கொள்வேன். அவற்றில் சில

1. சுத்தமான தண்ணீர்
2. விளையாடிவிட்டு வந்தவுடன் கை, கால் கழுவுதல், அல்லது குளித்தல்
3. கொசுக்கடிக்காமல் பார்த்துக்கொள்வேன். இதற்கு ரொம்பவும் சிரமப்பட்டேன் எனலாம்.
4. வேளைக்கு தகுந்த, தேவையான உணவு (நேரம் தவறாமல் எப்படியும் கொடுத்துவிடுவேன், இதற்காக அடுத்தநாள் உணவு என்று எழுதி வைத்து தயார் செய்ய வசதியாக்கி க்கொள்வேன், நேரத்திற்கு ஒரு லிஸ்ட் எழுதி வைத்துக்கொள்வேன்)
5. உடம்பை கஷ்டப்படுத்தாத ஆடைகள், பொதுவாக மெல்லிய பருத்தி ஆடைகள், தவிர்ப்பது நைலான், நிறைய சிமிக்கி வேலைபாடுகள் உள்ள ஆடைகள், மிகவும் இறுக்கமான ஆடைகள்.
6. சுத்தமான படுக்கை, படுக்கை பொதுவாக குழந்தைகளுக்கு வெள்ளை நிறத்தில் கவர் போட்டு இருக்க வேண்டும், அப்போது தான் பூச்சி, எறும்பு போன்றவை இருந்தால் தெரியும்.
7. நேரத்திற்கு சரியான தூக்கம்
8. ஆடைகள் துவைக்கும் போது , கிருமி நாசினி (டெட்டால்) யை கலந்து உலர்த்துவேன். தலையணை உறைகள், பெட் கவர்கள், உள்ளாடைகளை வாரம் ஒருமுறையாவது சுடத்தண்ணீரில் கொதிக்க வைத்து துவைப்பது.

உணவு முறைகள் :-

தாய்ப்பால் :- தாய்ப்பாலை விட சிறந்த உணவு இல்லை. குழந்தைக்கு தேவைப்படும் எதிர்ப்பு சக்தியை அந்த குழந்தையின் வாழ்நாள் முழுதும் கொடுப்பதும், நல்ல திடமான தேக ஆரோக்கியத்துடன் இருக்க இது தான் அடிக்கல் எனலாம். குறைந்தபட்சம் 1 வருடம் அதிகபட்சம் அவரவரின் விருப்பத்தை பொருத்தது. இப்போது எல்லோரும் வேலைக்கு செல்வதால் இது எந்த அளவு சாத்தியப்படுகிறது என்று தெரியவில்லை. மேலும் அறிய
http://www.indiaparenting.com/diet/data/diet23_03.shtml
http://www.indg.in/health/child-health/benefits-of-breastfeeding
http://www.babycenter.com/0_how-breastfeeding-benefits-you-and-your-baby_8910.bc

தாய்ப்பால் கொடுக்கும் தாயிக்கான சிறந்த உணவுகள் :-

1. முருங்கைக்கீரை – இதை ஏதோ ஒரு விதத்தில் சாப்பிடலாம், ஆனால் இந்த கீரை சரியான முறையில் சமைக்கப்பட்டு இருக்க வேண்டும் இல்லையேல் வயிற்றுவலி வர வாய்ப்புகள் அதிகம்.
2. மீன் , பால் சுறாப்புட்டு மிகச்சிறந்த உணவு, இதுவும், செய்த அன்று சாப்பிடுவது நல்லது, வைத்திருந்து சாப்பிடக்கூடாது குறிப்பாக பால் கொடுக்கும் பெண்கள்.
3. கீரை வகைகள் அத்தனையும்.
4. பசும்பால் குறைந்தபட்சம் 500 மிலி குடிக்கவேண்டும். (கண்டிப்பாக.)

குழந்தைகளுக்கான உணவு:-

இது 7 மாதங்களில் இருந்து ஆரம்பிக்கலாம். இருப்பினும் உங்களின் குழந்தை டாக்டரிடம் கலந்து ஆலோசித்து பிறகு கொடுங்கள். நவீனுக்கு டின் ஃபுட் எதுவுமே கொடுக்கவில்லை. கொடுக்கக்கூடாது என்று தவிர்த்துவிட்டேன் எனலாம். அதற்கு பதிலாக வீட்டிலேயே தயார் சத்துமாவு கஞ்சி கொடுப்பேன்.

சத்துமாவு கஞ்சி :-
பச்சரசி : 1/4 கிகி
சம்பா கோதுமை : 1/4 கிகி
கேழ்வரகு : 1/4 கிகி
சோளம் : 100 கி
பார்லி : 50 கி
கம்பு : 50 கி
சுக்கு : சுண்டு விரல் அளவு 3
ஏலக்காய் : 5
பொட்டுகடலை : 200 *
முந்திரி : 200 *
பாதாம் : 200 *

இதில் * இட்டதை வீட்டில் அரைத்து வைத்துக்கொள்ளுங்கள், மீதமுள்ளதை நன்கு கழுவி சுத்தம் செய்து, காயவைத்து மிஷினில், அரிசி அரைத்த பிறகு இதை கொடுத்து அரைத்துக்கொள்ளுங்கள், பிறகு வீட்டில் அரைத்து வைத்ததை இதனுடன் கலந்து , வயதிற்கு தகுந்தார் போன்று தேவையான அளவு எடுத்து கஞ்சி காய்த்து, பால் , சர்க்கரையுடன் சேர்த்து குழந்தைக்கு கொடுக்கலாம்.

தினமும் குழந்தையின் உணவு பட்டியலில் சேர்க்கவேண்டியவை

கீரை :- தினமும் ஒரு கீரை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ளுங்கள்,
முட்டை :- தினம் ஒரு வித சுவையில் செய்து கொடுங்கள்
சுண்டல் : ஏதாவது ஒரு சுண்டல் தினமும் ஒரு வேளை இதை கொடுக்கலாம்
பசும் பால் : – ஏதோ ஒரு வகையில் இதுவும் உள்ளே செல்ல வேண்டும்
சீரக தண்ணீர் : வெறும் தண்ணீர் கொடுப்பதற்கு பதில் சீரகம், காய்ந்த திராட்சை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து (திராட்சையை நசுக்கி விடவும்) குழந்தைகளுக்கு இதையே கொடுத்துவந்தால், உணவு செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராது.
பிஸ்கட் : க்ரீம் இல்லாத பிஸ்கட் கொடுக்கலாம் (க்ரீம் இருப்பவற்றை குழந்தைகளுக்கு தயவு செய்து கொடுத்து பழக்கவேண்டாம்)
வத்தல் : கடையில் வாங்குவதாக இருந்தால் கலர் வத்தலாக இல்லாமல், வெள்ளையாக இருப்பதை மட்டும் வாங்கி பொரித்து கொடுக்கலாம் வீட்டில் செய்தால் குழந்தை சாப்பிட வசதியாக அதிக பச்சைமிளகாய் சேர்க்காமல் செய்து வைத்து கொடுக்கலாம்.

இன்றைக்கு இதோடு.. இன்னும் தொடர முயற்சிக்கிறேன்…

வாய்ப்பு கொடுத்த முல்ஸ்’ க்கு அன்பு முத்தங்கள்.. 🙂

அணில்குட்டி அனிதா : அம்மணி என்ன இப்ப எல்லாம் அவங்க வீடு தங்காம வீடு வீடா போக ஆரம்பிச்சிட்ட்டான்ங்க….. வெயில் அதிகமா போச்சோ.. ஸ்ஸ் ஒரு வீடே தாங்கமுடியாம இருக்கேன்.. இதுல இது வேற…. அதுவும் மாட்டினது பாவும் சின்ன புள்ளைங்க… அம்மாங்களா. .சாக்கறதை… அம்மணி சொல்றாங்களேன்னு நீங்களும் அப்படியே எதையும் செய்துபிடாதீங்க…

பீட்டர் தாத்ஸ் :- God could not be everywhere and therefore he made mothers.”

19 பின்னூட்டங்கள் ஏப்ரல் 22, 2009

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

மே 2018
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Posts by Month

Posts by Category