Posts filed under: ‘என் குழந்தைக்கான பள்ளி‘
பள்ளி செல்ல விரும்பு… பாடம் வெல்லக் கரும்பு

பள்ளி தான் அடிப்படைகளைக் கற்றுக்கொடுக்கும் கூடம். அது அருமையாக இருக்க வேண்டும் என்பதுதான் எல்லா பெற்றோருடைய கனவு. ஆனால் நினைத்தபடி எல்லாம் நடக்குமா என்பது நடைமுறை சிக்கல்.

அருகில் இருக்கும் ஒரு நல்ல பள்ளி என்பதே எனது எண்ணமாக இருந்தது. நான் படித்தது அரசு பள்ளி என்பதால், பிரபல பள்ளிகளைத் தேடிச் செல்ல எண்ணவில்லை. வீட்டின் அருகில் இருக்கும் நல்ல பள்ளிகள் என்றே பார்த்தேன்.

முதலில் ப்ளே ஸ்கூல் தேவைப்படாது என்று எண்ணினேன். ஆனால் இரண்டு வயதில் இருந்து விளையாட துணை தேடும் குழந்தையின் ஆர்வம் கண்டு, இரண்டரை வயதில் ப்ளே ஸ்கூல் சேர்த்தேன்.

ப்ளே ஸ்கூலில் நான் எதிர்பார்த்தவை:

– குழந்தைகள் குஷியாக பொழுது போக்குமாறு ரைம்ஸ், கதை விளையாட்டு போன்றவை. பாடம் தேவையில்லை

– பள்ளியின் தூய்மை

– அளவான எண்ணிக்கையில் குழந்தைகள்

– அதிக பணம் கேட்கும் பள்ளியோ, ஏ.சி வசதியோ நான் தேடவில்லை. என் குழந்தைகளுக்கு பள்ளியில் ஏ.சி என்பது என்னைப் பொறுத்தவரை சுகம். பள்ளியில் அந்த சுகம் தேவை இல்லை என்பது எனது கருத்து.

அடுத்து பள்ளியில் போடும்பொழுது, மெட்ரிக், சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ என்று இருந்ததில் மெட்ரிக் (அ) சி.பி.எஸ்.இ என்று முடிவு செய்தோம். மற்றவற்றைப் பற்றி எதுவும் புரியாததால் இந்த முடிவு. எல்.கே.ஜி நேர்முகத்திற்கு நந்தினியை அழைத்துச் சென்றேன்.
அவள் ஒரே அழுகை. சற்று நேரம் பொறுத்து என்னுடன் வர சம்மதித்தாள். ஆசிரியர்களின் அணுகுமுறை எனக்கு பிடித்திருந்ததது. ஓரளவு பெரிய மைதானம் இருந்தது.

குழந்தைகளிடம் ஆங்கிலத்தில் பேசினார்கள். குழந்தைக்கு புரியாவிட்டால் திரும்ப புரியுமாறு சைகைகளுடன் பேசினார்கள். சற்று நேரத்தில் குழந்தை அவர்கள் சொல்வதைச் செய்வது அழகாக இருந்தது. உதாரணத்திற்கு, “ஹாப்” என்றார்கள். புரியவில்லை என்றால், கையால் சைகை செய்து “ஹாப்” என்றார்கள். குழந்தை குதித்தது.”புட் திஸ் இன் டஸ்ட்பின்” என்றார்கள். குழந்தை விழித்தது. “பேப்பரை காட்டி, குப்பை கூடையைக் காட்டி, புட் திஸ் இன் டஸ்ட்பின்” என்றார்கள். குழந்தை செய்தது. பின்பு வண்ணம் தீட்டல், எண்ணுதல், அடுக்கி வைத்தல், சாப்பிடும் பொருட்கள் (எதெல்லாம் சாப்பிடக்கூடியவை எனக் கண்டுபிடிக்க வேண்டும். போன் சாப்பிடும் பொருளாகச் சொன்ன பொழுது, போனை சாப்பிடுவாயா என்று கேட்டு சரி செய்தார்கள்) என குழந்தையை மிகவும் சிரமப்படுத்தாது அவர்களது செளகரியத்திற்கு கேள்வி கேட்டது பிடித்திருந்தது. இன்னொரு அழுகை தாங்காது என்று அங்கேயே சேர்த்தோம்.

– தமிழ் இரண்டாவது மொழியாகவும் இந்தி மூன்றாவது மொழியாகவும் இருக்குமாறு பார்த்துக் கொண்டோம்.

– ஹோம்வர்க் என்று மென்னியைப் பிடிக்க கூடாது என்றும் நினைத்தோம்.

– ஒரு வகுப்பில் அளவான எண்ணிக்கையில் குழந்தைகள் இருக்க வேண்டும் என்று எண்ணினோம். முதலில் 30 என்றார்கள். பள்ளி வளர வளர சில சமயம் 35 கூட பார்க்கிறோம்.

– லேப்டாப் போன்ற hifi வேண்டாம் என்றே தோன்றியது.

– போக்குவரத்து வசதி பார்த்தோம். வீட்டின் அருகில் வேன் ஏறி/இறங்கும் வசதி இருந்தது

இவர்கள் பள்ளியில் பிடித்த சில விஷயங்கள்:

1. பாடங்களின் சுமை மெல்ல மெல்ல கூடும். எல்.கே.ஜி, யு.கே.ஜியில் தேர்வுகள் கிடையாது. நம்மிடம் சொல்லாமல் அவர்களே அவர்களை பரீட்சித்து ரிப்போர்ட் தருவார்கள். ரிப்போர்ட்டில் அவர்களது பல்வகை திறன்களும் மதிப்பிடப்பட்டிருக்கும். அவர்களது ஆர்வங்களையும், முன்னேற்றங்களையும் வகுப்பாசிரியர் கைப்பட குறிப்பிட்டிருப்பார். ஒன்றாம் வகுப்பில் இருந்து தேர்வுகள் தொடங்கும். பெரும்பாலும் வாரத்தில் ஒரு தேர்வே இருக்கும். எனவே படிப்பது எளிதாகும். எப்படி என்றாலும் முட்டி மோதி தான் படிக்க வேண்டும்.

2. ஹோம்வர்க் கிடையாது (அ) மிகக் குறைவு

3. ஆங்கிலம் பேசும்திறன் முன்னேற்ற வீட்டில் இருந்து அவர்களுக்கு பிடித்த பொம்மையைக் கொண்டு வந்து அது பற்றி பேசச் சொல்வார்கள். குழந்தைகள் ஆர்வமாக பொம்மையை எடுத்துக் கொண்டு அது பற்றி பேசக் கற்றுக் கொள்வார்கள்.

4. பாடம் தவிர வேதம், வெஸ்டர்ன் ம்யூசிக், நடனம், நீதிபோதனை, பொது அறிவு என்று பல விஷயங்கள் உண்டு. மூன்றாம் வகுப்பு வரை “தின்கிங் ஸ்கில்ஸ்” என்று ஒரு பேப்பர் இருக்கும். அந்தந்த வகுப்புக்கு ஏற்றவாறு அவர்களது மூளைத்திறனை மேம்படுத்தும் கேள்விகள் உள்ளது. கண்டிப்பாகப் படித்து ஒன்றும் பண்ண முடியாது. இவர்கள் ஆண்டு விழாவைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். ஆசிரியர்/குழந்தைகளின் முயற்சி வெளிப்படும்.

5. வண்ண நாள், ப்ரூட் சாலட் நாள், சமூக நாள் என்று சில நாட்களுடன் பண்டிகை நாட்களும் கொண்டாடுவார்கள். கொலுவிற்கு குழந்தைகளே கொலுவாக இருப்பார்கள். கிறிஸ்துமசுக்கு எல்லோரும் அவரவர் வகுப்பில் கிறிஸ்துமஸ் மர அலங்காரம் செய்வார்கள். தீபாவளிக்கு பலகாரங்கள் பரிமாறிக் கொள்வார்கள். ஒவ்வொரு ஆசிரியரும் அவர்தம் வழியில் குழந்தைகளுக்கு உற்சாகம் கொடுக்க முயல்வார்கள். உதாரணத்திற்கு வகுப்பில் ஒவ்வொருவரும் சுழல்முறையில் ஏதாவது ஒரு பொறுப்பை ஏற்றிருப்பார்கள்.

6. “அப்சர்வேஷன் டே” என்று ஒரு நாள் நம் குழந்தைகள் வகுப்பில் கற்றுக்கொள்வதையும் ஆசிரியர்கள் கற்பிப்பதையும் காணலாம்.

7. குழந்தைகள் வீட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் ஆசிரியரிடம் பகிர்ந்து கொள்கிறார்கள் என்று அறியும் பொழுதே அவர்கள் எவ்வளவு தூரம் இவர்களுடன் பழகுகிறார்கள் என்று புரியும்.

8. நான்காம் வகுப்பில் இருந்து, ஒவ்வொரு வகுப்பிலும் அனைவரும் ஓரிரு முறையேனும் மற்ற பிரிவினருக்கு ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டும். வகுப்பில் ஒவ்வொருவரும் கலந்து கொள்ள வேண்டும். இது அவர்களது தன்னம்பிக்கையை உருவாக்கும்.

9. மாதமொருமுறை ஆசிரியர் பெற்றோர் கலந்துரையாடல் இருக்கும்.

10. அடிக்கடி ப்ராஜக்ட் என்று பெற்றோருக்கு வேலை கொடுத்தாலும் அது குழந்தைகளின் புரியும் திறனுக்கு என்று உவப்புடன் செய்தால் சுவாரசியம் தான். செடிகள் பற்றி அறிய செடி வளர்த்து எடுத்துச் செல்வார்கள், ஏதேனும் கருத்தை மையமாக வைத்து சார்ட், மாடல் எல்லாம் செய்யச் சொல்லி வகுப்பை அலங்கரிப்பார்கள்.

என்ன பிடிக்கவில்லை?

எல்லா விரல்களும் ஒன்று போல் இருப்பதில்லை. ஆசிரியர்களும் அப்படியே. எல்லோரும் ஒன்று போல் பயிற்சி எடுத்துக் கொண்டால் பிரச்னை இருக்காது என்று எண்ணுகிறேன்.

அடுத்தது… கழிப்பறை. பள்ளியில் பிள்ளைகள் இல்லாதவரை சுத்தமாக இருப்பது போல் இருக்கிறது. அதன் பின்? இதற்கு தீர்வு உண்டா? என் தோழிகளிடமும் விசாரித்த வரை, பிரபலமான பள்ளிகள் உட்பட, கழிப்பறை சுத்தம் என்று எந்த் பிள்ளையும் சொன்னதாகத் தெரியவில்லை. அது வீட்டின் சுத்தம் முன்பு தோற்றுப்போவதாலா அல்லது மிகச் சிரமமான விஷயமா என்று புரியவில்லை. பள்ளி செல்லும் பொழுதெல்லாம் சம்மந்தப்பட்டோரிடம் சொல்கிறோம்; அதன் பின் பரவாயில்லை என்று சொன்னாலும் பிள்ளைகள் கழிப்பறை செல்லத் தயங்குகிறார்கள். பணம் கட்டி பள்ளி சேர்த்தாலும் கழிப்பறை விஷயம் மட்டும் மாறுவதில்லை. இந்திய மனப்பாங்காக அதையும் சகிக்கிறோம். இதைப் பற்றி உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்கள்.

Advertisements

7 பின்னூட்டங்கள் ஜூலை 29, 2009

ஸ்கூல்..ஸ்கூல்…விச் ஸ்கூல் டூ யூ சூஸ்!

மூன்று வயதுக்குப் முன்பே பப்புவை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப எனக்கு விருப்பமில்லை. இருவரும் பணிக்குச் செல்லும் சூழல். மூன்று மாதத்திலிருந்து பப்புவை பார்த்துக்கொள்ள இவர்களின் உதவியிருந்ததால் மூன்று வயதுக்குப் பிறகுப் பார்த்துக்கொள்ளலாமென்று ரொம்பவும் மெனக்கிடவில்லை. வீட்டுக்குக் கொஞ்சமாவது அருகிலுள்ள – வேளச்சேரி, தாம்பரம் ஏரியாக்களில்தான் சேர்த்தாகவேண்டுமென எண்ணி, இணையத்தில்/தெரிந்தவர்களிடம் கேட்டு/நேரடியாக போனில் விசாரித்துத் தயாரித்த பள்ளிகளின் லிஸ்ட் இதோ! இதையெல்லாம் நான் விசாரிக்கும்போது பப்புவிற்கு இரண்டேகால் வயது். Partially potty trained. ஏனோ ப்ளே ஸ்கூலுக்கு அனுப்ப எனக்கு விருப்பமில்லை.

ஆனால் இரண்டரை வயதில் வீட்டில் பப்புவை சமாளிக்க முடியவில்லை. மேலும், முன்னறிவிப்பின்றி விடுப்பு அல்லது விட்டுச் செல்லும் ஆயாக்கள் போன்ற சூழ்நிலைகளால் இரண்டு மணிநேரமாவது ஒரு மாறுதலுக்காக வெளியில் அனுப்பலாமென்று முடிவு செய்தோம்.அப்போதுதான் வீட்டுக்கு அருகிலேயே இருந்த பிரபலமான இண்டர்நேஷனல் பள்ளியின் கிளை யை விசாரிக்க நேர்ந்தது. ஃப்ளாப்!

பப்புவுக்கான பள்ளியைத் தேடும்போது என் மனதிலிருந்தவை இவைதான்,

1. வீட்டுக்கு அருகில் இருக்கவேண்டும். வேன் வசதி இருக்க வேண்டும். கண்டிப்பாக மெட்ரிக்குலேஷன் வேண்டாம்!

2. ஷூ-சாக்ஸ் போட வற்புறுத்தக்கூடாது. (I hated to wear them.வெயிலில் எதற்கு ஷூவும் சாக்ஸூம்!) சுகாதாரமாக இருக்கவேண்டும். (டாய்லெட்டுகள் சின்னக்குழந்தைகளுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும்!)

3. பெரிய மைதானத்துடன் இருக்க வேண்டும்.

4. தினமும் பள்ளிக்குச் செல்ல ஆர்வத்தைத் தூண்டுமிடமாக இருக்கவேண்டும். அதாவது, பார்க்குக்கு செல்வதற்கு எவ்வளவு மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடன் கிளம்புவாளோ அது போல! (இல்லையெனில், எங்கள் பாடு திண்டாட்டம்தான். அவள் பள்ளிக்குச் செல்ல மறுத்தால் எங்கள் வேலை பாதிக்குமே…!!)

5. individual attention

6.டொனேஷன் கொடுக்க முடியாது.

பின்னர் இணையத்தில் வாசித்தபோது மாண்டிசோரி பற்றி விளக்கமாகத் தெரிந்துக்கொண்டேன். பப்புவிற்கு இரண்டேமுக்கால் வயதானபோது அவளைப் பள்ளியில் சேர்த்தாக வேண்டியக் கட்டாயத்துக்கு ஆளானோம். அருகிலிருந்த மாண்டிசோரி பள்ளி ( AMIஇனால் அங்கீகரிக்கப்பட்டது) – அணுகினோம்.

1. ஒரு வகுப்பிற்கு 20-25 பிள்ளைகள் மட்டுமே. இரு ஆன்ட்டிகள் மற்றும் ஒரு உதவியாளர்.
பத்து வருடங்களாக இருந்தாலும், ஐந்தாம் கிரேட் வரை மட்டுமே.

2. நான் எதிர்பார்த்த பெரிய மைதானம் கிடையாது. சின்னதுதான். ஆனால், பெரிய ஆன்ட்டி சொன்னது, “மாண்டிசோரி சூழலுக்கு மைதானமேத் தேவையில்லை. அங்கு செய்யும் எல்லா பயிற்சிகளுமே மான்டிசோரி வகுப்புச் சூழலிலேயே கிடைத்துவிடுகிறது”.

3. பப்புவிற்கு எந்த இண்டர்வியூவுமே இல்லை. எழுதுவதற்கு நான்கு வயதுக்குப் பிறகே. விருப்பமிருந்தால் எழுதலாம். எழுத்துகளும் மூன்றரை வயதுக்குப் பின்னரே! ஏனெனில், எல்லாக் குழந்தைகளுமே ஒரே மாதிரி இல்லை. தனித்துவமானவர்கள்.

4. காலை 9 மணிக்கு ஆரம்பித்து 12.15க்கு முடியும். நடுவில் 10.30 க்கு 30 நிமிட நேர இடைவேளை. (இது இரண்டரை வயதிலிருந்து – மூன்றரை வயதினருக்கு)

5. முதல் இரண்டு டெர்ம்கள் வரை பப்பு ஷீ-சாக்ஸ் போட்டது இல்லை.சாதாரண செருப்புதான்.

6. மூன்றரை வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பள்ளி நேரங்களிலேயே, ஆக்டிவிட்டீஸ் தவிர கராத்தே/யோகா கற்றுக்கொடுக்கப்படுகிறது.

7. ரேங்க் கிடையாது. பரிட்சைகள் கிடையாது. Only Assessments. போட்டி என்பது அடுத்தவருடன் அல்ல..தான் முன்பு செய்ததை இன்னும் பெட்டராக செய்யவேண்டும் என்பதுதான் குறிக்கோள்!

சேர்க்கும்போது ஒரு அரைகுறை மனதோடுதான் சம்மதித்தேன். அடுத்த வருடம் வேறு இடத்தில் சேர்த்துவிடலாமென்று. ஏனேனில் நானும் இதேபோல ஒரு சின்னப் பள்ளிக்கூடத்திலேதான் ஐந்தாம் வகுப்பு வரைப் படித்தேன். ஆம்பூரின் சூழல் வேறு. ஆனால் சென்னைப் போன்ற பெருநகரத்தில் இருந்துக்கொண்டு, நல்ல எக்ஸ்போஷர் கிடைக்காமல் போய்விடக்கூடாதென்றும் உள்ளுக்குள் ஒரு எண்ணம். ஆனால் இப்போதோ, பள்ளியின் அணுகுமுறை, பப்புவிடம் தெரியும் தன்னம்பிக்கை, தனிப்பட்ட கவனம், மாண்டிசோரிக் கல்விமுறையின் நன்மைகள் கண்டபின் இங்கேயே தொடருவதாக உத்தேசம்!

9 பின்னூட்டங்கள் ஜூலை 28, 2009

ஏன் இந்த பள்ளி?

இந்த தொடர் இடுகை எழுதி பதிநைந்து நாள் ஆகி விட்டது, தாமதத்திற்கு மன்னிக்கவும்.

வர்ஷா பிறக்க பத்து நாட்கள் இருக்கும் போது தான் நாங்கள் கோவை வந்தோம், அது வரை திருப்பூரில் இருந்தோம். குழந்தை பிறந்து வளர்ந்து இரண்டரை வயது ஆகும் போது ரொம்ப நல்ல பேசுவாள், தெளிவாக திருக்குறள், சின்ன பாடல்கள் எல்லாம் சொல்லி குடுத்து இருந்தேன். பக்கத்தில் இருக்கும் ஒரு ப்ளே ஸ்கூலில் இரண்டு மணி நேரம் தினமும் அனுப்பி வைப்பேன். ஸ்கூல் சேரும் வயது என்ற போது கோவையில் இருக்கும் பள்ளிகளில் கிட்டத்தட்ட பதினைந்து பள்ளிகள் பார்த்தேன், நாங்கள் இருப்பது நகரின் மைய பகுதி, எல்லா பள்ளிகளும் குறைந்த பட்சம் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது.

பள்ளிகளுக்கு முக்கிய தகுதி யாக நான் எதிர்பார்த்தது:

# குழந்தைகளை குழந்தைகளாக நினைக்க வேண்டும்,

# ஹோம் வொர்க், படிப்புன்னு ரொம்ப தொல்லை பண்ண கூடாது,

# மொழி ஒரு முக்கிய விஷயம், என்னதான் நாம் தமிழ் என்று கதறினாலும் ஆங்கிலம் நன்றாக பேச வர வேண்டும் என்பதில் நான் கவனமாக இருக்கிறேன், வரும் காலத்தில் குழந்தைகள் மிக கடுமையான போட்டிகளை எதிர்கொள்ளவேண்டி இருக்கும், நாம என்ன நாற்காலியில இருக்கோம் தமிழ் மட்டும் படிச்சு மந்திரி ஆக.. ( சிரிங்கப்பா)

# போட்டிகளில் தொடர்ந்து ஊக்கம் தரும் பள்ளியாக இருக்க வேண்டும்.

# ஒரு குறிப்பிட்ட மதமோ, ஜாதியோ அதிகமாக இருக்கும் பள்ளிகள் வேண்டாம் என்பதும் என் எண்ணம்.

# பள்ளி நல்ல சுற்று புறத்துடனும், கலாச்சாரத்தை கற்று கொடுக்க வேண்டும்.

# மிக முக்கியமாக கழிப்பறை வசதிகள் நன்றாக இருக்க வேண்டும்.

( இத்தனையும் இருக்கணும் நா நான் படித்த ஸ்ரீ வாசவி வித்யாலயம் ஸ்கூல் தான் போகணும், அது ரொம்ப தூரம் ஆச்சே)

முதலில் பள்ளிகளில் ஒரு வரிசை பட்டியல் தயார் செய்தேன், நானும் என் கணவரின் தங்கையும் ஒரு நல்ல நாளில் காலையில் கிளம்பினோம், , முதலில் நகரின் மிக புகழ் பெற்ற நூற்றி ஐம்பது வருட பாரம்பரியம் கொண்ட ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளி, அங்கே பெற்றோர் குறைந்த பட்சம் ஒரு கார் வைத்திருப்பது விரும்பத்தக்க தகுதியாக இருந்தது…இது ஆவறது இல்ல..

அடுத்து: என் மனதில் இந்த பள்ளியில் சேர்த்தலாம் என்று நினைத்தேன், ஆனால் இது shift முறையில் செயல் பட்டதால் ஊரெங்கும் கிளைகள் கொண்ட பவன் பள்ளியும் லிஸ்டில் கழிந்தது.

நகரின் பெண்கள் பள்ளி ஒன்று காலை விண்ணப்பம் வாங்க முதல் நாள் இரவே துண்டு போட்டு வைக்கணுமாம், ஆனால் படிப்புக்கு ரொம்ப முக்கியத்துவம் தருவார்கள், கண்டிப்பான பள்ளி என்று பெயர் பெற்றது, என் வீட்டில் இருந்து ரொம்ப தொலைவு அதனால் அதுவும் அடிபட்டது.

ரயில் நிலையம் அருகில், கலை கல்லூரி பின்புறம் இருக்கும் மூன்று பள்ளிகளில் ஒன்று நன்றாக இருக்கும் ஆனால் நம்ம அம்மிணி வயசு பத்து, பத்தாவது எழுதும் போது பிரச்சனை என்றார்கள். சரி விடு ஜூட்டு…

இது போல் கழிப்பறை நன்றாக இல்லை, கட்டிடம் விழுந்துவிடுவது போல இருக்கு என்று சில பள்ளிகள் கழிக்கப்பட்டன,

இன்னும் ஒரு முக்கியாயமான விஷயம் நான் தனியாக பெண்கள் பள்ளியில் என் குழந்தைகளை சேர்க்க எனக்கு விருப்பம் இல்லை, இரு பாலரும் இருக்கும் பள்ளியில் தான் சேர்த்த வேண்டும் என்று முடிவு பண்ணி இருந்தேன்.
ஆகவே இப்போது படிக்கும் பள்ளி ( S.B.O.A.) ஓரளவிற்கு எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்தது, கட்டணம் கொஞ்சம் ஏற்கனவே அதிகம் இப்போது மேலும் 50% அதிகரித்து உள்ளார்கள், அது பற்றி என் கருத்துகள் இங்கே.

சின்ன வகுப்பில் தேர்வுகளே இல்லை, ஆசிரியர்கள் நன்றாக பழகுவார்கள், மாணவர்கள் அதிகம் இருப்பினும் தனி கவனம் செலுத்துகிறார்கள், படிப்பைத்தவிர மற்ற விசயங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார்கள். இப்போது பாட்டு வழி படிப்பு என்னும் புதிய அறிமுகத்தில் இன்னும் நன்றாக இருக்கிறது. முக்கியமாக மொழி பயிற்சி மிக திருப்தியாக உள்ளது. சில பல தேவையில்லாத போராட்டங்களுக்கு பின் இந்த வருடம் பள்ளி புதுப்பிக்கப்பட்டு உள்ளது. நான் பெற்றோர் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றுள்ளதால் நம் கருத்துகள் மற்றும் மற்றவர்கள் கருத்துகளை பரிமாறிக்கொள்ள முடிகிறது.

எனக்கு மட்டும் பிடித்து என்ன செய்ய என் குழந்தைகளும் இந்த பள்ளியில் நன்றாகவே உணருகிறார்கள். வருடாவருடம் கொலுவிற்கு வர்ஷாவின் தோழர்கள் பெற்றோருடன் வந்து விழாவை சிறப்பிப்பார்கள். நானும் ஆவலுடன் எதிர்பார்க்கும் நிகழ்வு அதுதான்.

ப்ளே ஸ்கூலை பொறுத்தவரை எங்கள் பகுதியில் நல்ல பள்ளி இல்லை என்று கருதுகிறேன். நான் அனுப்பிய பள்ளிகள் எனக்கு அவ்வளவு இஷ்டம் இல்லை என்றாலும் வேறு வழி இல்லாமல் அனுப்பினேன். பாதியில் நிறுத்தி விட்டேன்.

4 பின்னூட்டங்கள் ஜூலை 27, 2009

என் பிள்ளைகள் படிக்கும் பள்ளி…

முல்லையின் பதிவின் தொடர்ச்சியாக இந்தப் பதிவு..

பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் முன் நாம் யோசிக்க வேண்டிய
விடயங்கள் நிறைய்ய.. சிலவற்றை இங்கு பார்ப்போம்.

1. பள்ளி நம் வீட்டிற்கு அருகில் இருக்கிறதா? மிக அருகில் இல்லாவிட்டாலும்
கூட நியாயமான தூரம் அதிக பட்சமாக 5 கிமீ வரை இருந்தால்
பரவாயில்லை.

2. 100% ரிசல்ட் தரும் பள்ளி என்பதாலோ, பெயர் பெற்ற பள்ளி
என்பதாலோ அந்த பள்ளியில் பிள்ளையை சேர்க்க நினைக்க
வேண்டாம்.

3. அவர்கள் பெயரை தக்க வைக்கவும், 100 சதவிகித ரிசல்ட்
தரும் மாணாக்கர்களுக்காகவும் தான் பள்ளி நடத்துகிறார்கள்.

4. அனைத்து மாணவரும் 100% சதவிகிதம் எடுப்பது கஷ்டம்.
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும். சில பிள்ளைகளால்
அதிக மதிப்பெண் எடுக்க இயலாது(thanks to the mechale system 😦 )

5. படிப்பு படிப்பு என்று பாடப்புத்தகத்தை மட்டுமே கவனிக்கும்
பள்ளியில் பிள்ளையைய் சேர்க்க வேண்டாம். விளையாட்டு,
இசை, யோகா,போன்றவற்றிற்கு முக்கியத்துவம் தரும்
பள்ளியா என்று பார்ப்பது அவசியம்.

6. ஆசிரியைகள் எப்படி? கண்டிப்பாக இருக்கிறார்களா?
கனிவாக நடத்துகிறார்களா என்பதை கவனித்து, விசாரிக்க
வேண்டும்.

7.வகுப்பறைகள் காற்றோட்டமிக்கதாக இருக்கிறதா?
வகுப்பில் எத்தனை மாணாக்கர்கள் இருக்கிறார்கள் என்பதையும்
பார்க்க வேண்டும்.

8. பொதுவாக நாம் பார்க்க தயங்கும் ஒருஇடம் அது
பள்ளியின் கழிப்பறை. கழிப்பறை வசதி சரியாக இருக்கிறதா?
என பார்ப்பது மிக மிக அவசியம்.

9. பள்ளியில் அடிப்படை வசதிகள் இருக்கிறதா என
பார்க்க வேண்டும்.

10. கற்பது என்பதை ஒரு சுமையாக ஆக்காமல்
கூடிய மட்டும் இனிமையாக ஆக்கும் பள்ளியா
என்பது பார்க்கப் படவேண்டிய விடயம்.

என் பிள்ளைகள் 7 வருடங்கள் கொழும்புவில்
பிரிட்டீஷ் கல்வி முறையில் படித்தவர்கள்.
அங்கே ஹோம் வொர்க் கிடையாது, எல்லாம்
ப்ராஜக்ட் சிஸ்டம். படிப்பு ஸ்ட்ரெஸ் தரக்கூடியதாக
இல்லாமல் பிராக்டிகலாக கற்றவர்கள்.

ஆஷிஷாவது 3 வருடங்கள் இந்திய பாடத்திட்டத்தில்
படித்திருந்தான். அம்ருதாவுக்கோ ஆரம்பமே அங்குதான்.
ஆரம்பக்கல்வி மாண்டிசோரி முறை + ப்ரீ ஸ்கூல் முறைக்
கல்வியின் கலவையாக இருக்கும்.

இங்கே ஹைதைக்கு வந்து பள்ளியில் சேர்க்க வேண்டுமென்றதும்
உடனடியாக முடிவெடுத்துவிடாமல், நண்பர்கள் சேர்த்திருக்கிறார்கள்
என்பதற்காக அங்கே ஓடாமல் 1மாதம் முழுதும் இருந்து
தினமும் 4 ஸ்கூல் சென்று தேடி மனதுக்கு பிடித்தால்
மட்டுமே சேர்ப்பது என்று முடிவு செய்திருந்தோம்.

சில பள்ளிகள் பள்ளி விடும் நேரம் சென்று எப்படி
வேனில் ஏற்றுகிறார்கள்? ஆயாக்கள் பொறுப்பாக
இருக்கிறார்களா? என பார்த்தோம்.

பெயர் பெற்ற சில பள்ளியில் பெற்றோரை மதிக்கவேயில்லை.
உட்கார வைத்துக்கூட பேசாமல், நிற்க வைத்தே பேசி
அனுப்பிய பள்ளிகளை தவிர்த்தோம்.

டொனேஷன்கொடுக்க நிர்பந்தித்த பள்ளியை
முடிந்த வரை தவிர்த்தோம்.

ஆஷிஷும் அம்ருதாவும் ஒரே பள்ளிக்குச் செல்ல
வேண்டும். அப்போதுதான் விடுமுறை பரிட்சை
போன்றவை ஒரே நேரத்தில் இருக்கும், தயார்
செய்வதும் எளிது என்பதிலும் கண்டிப்பாக இருந்தோம்.

இப்போது படிக்கும் பள்ளி என் எதிர் பார்ப்புகளுக்குத்
தகுந்த பள்ளி. பள்ளியில் யோகா, தபலா, நடனம்,
பாட்டு ஆகியவை டைம்டேபிளில் கட்டாயம் உண்டு.

ஃப்ரெண்ட்லியான ப்ரின்சிபல், இன்னொரு தாயாய்
பார்த்துக்கொள்ளும் ஆசிரியைகள், பிரச்சனை ஏதும்
வந்தால் உடனடியாக தீர்வு கிடைக்கும்.

நீச்சல் கட்டாய பாடம். இங்கே மற்ற பள்ளிகளில்
சனிக்கிழமை கூட பள்ளி உண்டு. பாடம் நடக்கும்.
ஆனால் என் பிள்ளைகள் படிக்கும் பள்ளியிலோ
சனிக்கிழமை extra curricular activities.
9-12 மணி வரை. ஒவ்வொரு குழந்தையும்
2 பாடத்தை தேர்வு செய்ய வேண்டும்.

பியானோ,நீச்சல், கிரிக்கட், டென்னீஸ்,
நடனம், கராத்தே, சமையற்கலை, ஓவியம்,
கைவண்ணம் என கொஞ்சம் பெரிய லிஸ்ட்.

வகுப்பில் அதிகம் போனால் 28 மாணவர்கள்தான்.

C.B.S.C வழிக்கல்வி. ஆனால் காலாண்டு, அரையாண்டு,
முழுப்பரிட்சை கிடையாது.

CONTINUOUS COMPREHENSIVE ASSESSMENT (C.C.A)
எனும் திட்டப்படி மாதாந்திர தேர்வுகள்
நடைபெறும். 15,40,40 மார்க்குக்கு தேர்வுகள்.
5 மார்க் practical/viva/oral projects
ஒவ்வொரு பாடத்துக்கும் இப்படி தேர்வு நடைபெறும்.
GRADING SYSTEM தான்.

வருட இறுதியில் ஒவர் ஆல் அசெச்மெண்டில்

Punctuality(submission of completed assignments on time,)
communication skills (participation in class discussions),
listening skills(concentration and attention span),
thinking skills (out of the box thinking and reference work),
social skills (Discipline)
இவைகளுக்கு தலா 20 மார்க்குகள் கிடைக்கும்.

இவ்வளவு +கள் சொல்கிறேன். அதனால் Fees
அதிகமோ என நினைக்க வேண்டாம். எட்டாவது
படிக்கும் என் மகனுக்கு வருடத்திற்கு 17,000. இதில்
பாடப்புத்தகங்கள்,நோட்டுக்கள்,லேபிள், ப்ரவ்ன் ஷீட்,
டயரி,BADGE, BELT சேர்த்துதான் Fees.
(கணிணி பயன்பாடு, நீச்சல், நியூஸ் பேப்பர் ஆகியவற்றிற்கு
தனி கட்டணமில்லை) ஆந்திர பிரதேச அரசால்
C.B.S.C வழிக்கல்வி பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும்
தொகையில் 40% குறைவாகத்தான் இந்தப் பள்ளியில்
Fees என்பது குறிப்பிட வேண்டிய விடயம்.

ஒவ்வொரு வருடமும் 10 சதவிகிதம் கட்டண
உயர்வு உண்டு.

பிள்ளைகளும் சந்தோஷமாக பள்ளிக்கு போய்
வருகிறார்கள். டென்ஷனில்லாமல் கற்கிறார்கள்.
இப்படி ஒரு பள்ளிக்காகத்தான் தேடி அலைந்தேன்.

சென்ற வருடம் புதுகையில் அப்பாவுக்குத்
தெரிந்தவர்கள் ஹைதைக்கு மாற்றலாகி வந்த
பொழுது எந்த பள்ளியில் சேர்க்கலாம்? என்று
கேட்க என் பிள்ளைகள் படிக்கும் பள்ளியை
கை காட்டினேன். அவர்களுக்கும் திருப்தி.

20 பின்னூட்டங்கள் ஜூலை 3, 2009

என் குழந்தைக்கான பள்ளி – அறிவிப்பு!

தந்தையர் தினத்தை கருத்தாகக் கொண்டு இடுகையிட்டு கொண்டாடிய அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்! இந்த ஜூன் ஜுலையென்றாலே பள்ளிகள் ஆரம்பித்து விடும். புது பள்ளிக்கு சேர்க்கைக்கு அலைவது, எந்த பள்ளியைத் தேர்ந்தெடுப்பது என்று நமக்குள் பலவித கருத்துகள்/ எண்ணங்கள்! பள்ளிக்கு இல்லையென்றால் கூட, டே கேர் செண்டர்கள் அல்லது ப்ளே ஸ்கூல்கள்!பள்ளிக்கூடம்/டே கேர்/ப்ளே ஸ்கூல்கள் இவற்றை தேர்ந்தெடுப்பதில் பல்வேறு கேள்விகள், நமக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் – இந்த மாதம் இவற்றைக் குறித்து நாம் அனைவரும் பேசுவோமா?!

குழந்தை இரண்டு வயதானாலே நமக்குள் வரும் கேள்வி எப்படிபட்ட ப்ளே ஸ்கூலுக்கு அனுப்புவது அல்லது பள்ளிக்கு அனுப்புவது? என்னென்ன தகுதிகள் இருக்கும் இடத்திற்கு நாம் நமது குழந்தைகளை அனுப்புவோம்? அல்லது என்னென்ன தகுதிகளை எதிர்பார்க்கிறோம்? உங்கள் மகள்/மகன் படிக்கும் பள்ளியைத் தேர்ந்தெடுத்த காரணங்கள் என்ன? நீங்கள் பள்ளியின் பெயரை வெளியிட வேண்டிய அவசியமில்லை, ஆனால் ஏதோவொன்று உங்களுக்குள் தோன்றியிருக்கும் அல்லவா, இந்த பள்ளியில் நமது மகள்/மகன் சேர்ந்தால் மகிழ்ச்சியாக இருப்பார்கள், நன்றாக வளருவார்கள் என்று..அதை எங்களோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள். அனைவருக்கும் உபயோகப்படும்.

உங்கள் குழந்தைகளை இன்னும் பள்ளியில் சேர்க்கவில்லையெனில் என்ன மாதிரி பள்ளி/டே கேர்/ப்ளே ஸ்கூல்-ஐ தேடிக்கொண்டிருக்கிறீர்கள் என்றும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்! என்ன மாதிரி போட்டிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது, இடம் கிடைப்பதில் இருக்கும் சோதனைகள், ஏன் ஒரு குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டும் இவ்வளவு போட்டி, என் ஆர் ஐ மக்களுக்கு மட்டுமான பள்ளிகள், குளிரூட்டபட்ட பள்ளிக்கூட அறைகள் பற்றி உங்கள் கருத்து…எல்லாவற்றையும் பேசுவோம்!அம்மாக்கள் வலைப்பூ வாசகர்களும் பங்களிக்கலாம்.
லேபிள்கள் உங்கள் பெயர் மற்றும் என் குழந்தைக்கான பள்ளி!

பி.கு: அடுத்த மாதத்திற்கான தீம்கள் வரவேற்கப்படுகின்றன!

9 பின்னூட்டங்கள் ஜூலை 2, 2009

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

பிப்ரவரி 2019
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

Posts by Month

Posts by Category