Posts filed under: ‘என் அனுபவங்களிலிருந்து‘
பயணத்திற்க்கு உதவும் checklist

தொலைதூர பயணமாகட்டும், இல்லை அருகிலிருக்கும் ஊர்களுக்கு செல்வதாகட்டும் இந்த பேக்கிங் வேலை ரொம்ப கஷ்டம். எப்படியாவது எதையாவது மறந்துவிடுவோம். அதுவும் கைக்குழந்தைகளோடு பிரயாணம் செய்கையில் ரொம்பவே கஷ்டம். அதற்காக நான் தயாரித்த செக்லிஸ்ட் இது. உங்களுக்கும் உபயோகமாய் இருக்கும் என்ற நம்பிக்கையில்:)

உடைகள்:

(குளிர் பிரதேசமெனில்) உடல் முழுவதும் மறைக்கும் ஆடைகள்
(குளிர் பிரதேசமெனில்) இரண்டு ஸ்வெட்டர்கள்
(குளிர் பிரதேசமெனில்) கையுறைகள்
(குளிர் பிரதேசமெனில்) காலுறைகள்
காலணி
நிறைய டயப்பர்கள்
சிறிய டவல்கள்
குழந்தைக்கு பயன்படுத்தும் போர்வை (சிறியது போதும்)

உணவு:

Cerelac – குழந்தைக்கு பிடித்த flavour
பால் பவுடர் (உபயோகிக்கும் பட்சத்தில்)
ஜூனியர் ஹார்லிக்ஸ் (உபயோகிக்கும் பட்சத்தில்)
பிஸ்கட்
நல்ல தரமான பேக்கரியிலிருந்து வாங்கிய muffins (பயணத்தின் போது உதவும்)
சின்ன கப் (cerelac/சாதம் ஊட்ட)
2 அல்லது 3 ஸ்பூன்கள்
சின்ன flask (நான் 500ml வைத்திருக்கிறேன்)
பால் பாட்டில்/ சிப்பர்/ டம்ளர்
சுத்தப்படுத்த சிறிய பிரஷ்

சில பேர் cerelac போன்ற உணவுகளை அப்படியே டப்பாவோடு தூக்கிக்கொண்டு வருவார்கள். இது தேவையில்லாத சுமை. நீங்கள் எத்தனை நாள் தங்கப்போகிறீர்கள், உங்கள் குழந்தை உட்கொள்ளும் அளவை கணக்க்கிட்டு அதை விட ஒரு வேளைக்கு அதிகமாக இருக்கும்படி சின்ன டப்பாக்களில் எடுத்துக்கொள்ளுங்கள். அதே போல் 3/4 அடுக்கு கொண்ட milk dispenser baby shopல் விற்கிறார்கள். இதில் மூன்று வேளைக்குத் தேவையான உணவுகளை எடுத்து வைத்துக்கொண்டால் கரைத்து ஊட்ட வசதியாக இருக்கும்.

மருந்து:

பிரயாணத்திற்க்கு முன் குழந்தை நல மருத்துவரை சந்தித்து நீங்கள் செல்லப்போகும் இடத்தின் தட்ப வெப்ப நிலையை கூறி தகுந்த ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவும். எக்காரணம் கொண்டும் நீங்களே மருந்து கொடுக்காதீர்கள். ஜுரத்திற்க்கு மட்டும் crocin/calpol syrup கொடுக்கலாம். அதுவும் டாக்டரிடம் கேட்டுவைத்துக்கொள்ளுங்கள்.

சிறிய காட்டன் ரோல்
விக்ஸ் (கண்டிப்பாக மூக்கில் தடவ கூடாது)
Nappy Rash cream

மற்றவை:

Wet wipes
Tissue papers
சிறிய பாட்டில் பாடி வாஷ்
கொஞ்சம் disposable bags. வேண்டாத பொருட்களை/மீந்த உணவுகளை இதில் போட்டு குப்பையில் போட்டுவிடலாம்.

முடிந்தவரையில் சுமையைக் குறைத்துக் கொள்ளுங்கள். தூக்குவது ரங்கமணிகளானாலும் நமக்குத் தான் வீண் சுமை:)
ஏதாவது விட்டுப் போயிருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்:)

Advertisements

12 பின்னூட்டங்கள் பிப்ரவரி 24, 2009

அலட்சியம்

கடந்த மாதம் சஞ்சய்க்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அட்மிட் செய்தோம். நான்கு நாட்கள் அங்கேயிருந்தபோது டாக்டரிடமோ, நர்சுகளிடமோ குழந்தை என்ற உணர்வு கொஞ்சம்கூட இல்லாதது கண்டு ரொம்பவே அதிர்ச்சியானேன். குழந்தைக்கு ரத்தப் பரிசோதனைக்கு சாம்பிள் எடுப்பதிலிருந்தே நர்சுகள் எரிந்து விழுந்தார்கள். எதற்குத் தெரியுமா? ஊசி குத்திய பின்னும் குழந்தை அழுதுக்கொண்டே தான் இருந்தான். “ஏண்டா அழற. அதான் needle எடுத்தாச்சுல்ல” என்று அதட்டினார். Needle எடுத்துவிட்டால்
வலியிருக்காதா குழந்தைக்கு??

நரம்பு(IV) மூலமாக தான் மருந்தும், குளுக்கோசும் செலுத்தினார்கள். குழந்தையோ கையிலிருக்கும் பேண்டேஜைப் பார்த்து பார்த்து அழுகிறான். நர்சுகள் வந்தாலே அழுகை இன்னும் ஜாஸ்தியாகிவிடும். என்ன மருந்து கொடுக்கிறீர்களென கேட்டபோது “சொன்னா உங்களுக்குப் புரியுமா” என்றார். “புரியற மாதிரி நீங்கதான் சொல்லனும்” என்றேன். முறைத்துவிட்டு வீசிங்
குறைய மருந்தும், ஆண்டிபயாடிக்குடன் குளுக்கோசும் ஏறுகிறது என்றார். டாக்டர் ரவுண்ட்ஸ் வரும்போது சில கேள்விகள் கேட்டோம். எங்களை ஒரு மாதிரியாகப் பார்த்த அவர். “இப்படிதான் இருக்கும். நான் ஒரு நாளைக்கு 300 கேஸ்??? பார்க்கிறேன்.” என்றார். அவருக்கு வேண்டுமானால் என் குழந்தை 300ல் ஒரு கேஸாக இருக்கலாம். ஆனால் எனக்கு??

மருத்துவமனைகளில், அதிலும் குழந்தைகள் நல மருத்துவமனைகளில், குழந்தைகளுக்கு பாலூட்ட ஒரு அறைக்கூட இல்லை. அடையாறில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் கழிவறையில் கை அலம்புமிடத்தில் பெண் தன் குழந்தையின் பசியாற்றிக்கொண்டிருந்தார். அதிர்ந்து போனேன். உள்ளே நுழைந்தாலே நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ள இடத்தில், குழந்தைக்கு பால் தருவது எவ்வளவு முட்டாள்தனமானது. இத்தனைக்கும் அப்பெண் படித்தவர். கேட்டதற்க்கு வேறு இடமில்லை என நர்ஸ் கூறியதாக சொன்னார். கோடி கோடியாக செலவு செய்து மருத்துவமனை கட்டுபவர்கள் ஒரு சிறிய அறையை இதற்கென ஒதுக்கலாமே. கவனிப்பார்களா?

குழந்தைகளுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அது உங்கள் உரிமையும் கூட. மேலும் இந்த சிகிச்சையின் பலன்கள் எப்படி இருக்கும், மருந்துகளை எத்தனை நாட்கள் கொடுக்க வேண்டும், மருந்து கொடுக்கும்போது தவிர்க்க வேண்டிய உணவுகள் ஏதேனும் உண்டா, மருந்து முடிந்த பின் மீண்டும் பரிசோதனைக்கு வரவேண்டுமா போன்ற கேள்விகளை தவறாமல் கேளுங்கள்.

பி.கு : இது முழுக்க முழுக்க என் சொந்த அனுபவம் தான். நான் எல்லா மருத்துவர்களையும் குறை கூறவில்லை.

13 பின்னூட்டங்கள் பிப்ரவரி 6, 2009

இரயில் பயணங்களில்…………

நம் குழந்தைகளின் வளர்தலும், புரிதலும் நம் கண்முன்னர் தெரியும் அவர்களின் செய்கைகளின் முன்னேற்றம் இதெல்லாம் மிக ஆச்சர்யப்படத்தக்கதாய் இருக்கிறது.
வியக்கத்தக்கதாகவும் இருக்கிறது. இதைப் பற்றி பிறரிடம் சொல்லி சொல்லி எழுதி எழுதி சிலாகித்துக்கொள்கிறோம்.

ஆனால் சில குழந்தைகள் இருக்கின்றன பெற்றோரின் தவறுக்கு பலியாகும் குழந்தைகள், தான் என்னவாகிக் கொண்டிருக்கிறோம் என்று தெரியாத குழந்தைகள், ஏன் நாம் இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் என்று தெரியாத குழந்தைகள் இப்படி ஏராளமாய்.

இந்த ரெயில் பயணம் இருக்கிறதே, இது நல்ல ஸ்னேகிதங்களையும் தரும், சில பாதிப்புகளையும் தரும். அப்படி என்னை பாதித்த சிலவற்றில் ஒன்றுதான் இது.

என் மனதில் ஆழப்பதிந்த ஒரு குழந்தையின் பார்வை இன்னமும் என்னை உறுத்திக் கொண்டேயிருக்கிறது.

அமித்து தான் என் வயிற்றிலிருக்கிறாள் என்பது தெரியாத 7 மாதம் எனக்கு.
ஒரு சனிக்கிழமை மதியம், ஆபிஸ் முடிந்து எக்மோரிலிருந்து சைதாப்பேட்டைக்கு ட்ரெயினில் வந்து கொண்டிருந்தேன்.
மிதமான கூட்டம்.

மாம்பலத்தில்தான் அவர்கள் ஏறினார்கள். கணவன், மனைவி, மனைவியின் இடுப்பில் 1 1/2 வயதுக்கு குறைவாக இருந்த ஒரு பெண்குழந்தை.
சிகப்பு நிற்ம், கலைந்த கேசம், துறு துறு கண்கள் அழகு முகம்.

குழந்தைகள் என்றாலே அழகுதானே, வறுமையிருந்தால் மட்டும் அழகில்லாமல் போய்விடுமா என்ன.
வறுமையில் வரும் குழி விழுந்த கண்களும், செம்பட்டை முடியும், உடுப்பில்லா உடம்பும் கூட ஒரு அழகைத்தருகின்றது அவர்களுக்கு.


கணவன், மனைவி இருவருக்கும் கண் பார்வையில்லை. முன்னே இடுப்பில் குழந்தையுடன் மனைவி பாடிக்கொண்டே செல்ல, பின்னர் கணவன் ஒரு தாளவாத்தியத்தை தட்டிக்கொண்டே அவளின் தோள்பிடித்து போகிறான். அந்தப் பெண்ணுக்கு குரலில் வஞ்சனை வைக்கவில்லை கடவுள், நல்ல வேளையாய். பிழைப்பு நடத்த ஏதுவாய்.

சற்று பாடிய பின்னர் சில்லறைகளுக்காக அந்தப் பெண் கை நீட்டினாள். கூடவே அவள் கையில் இருந்த கைக் குழந்தையும். அந்தக் குழந்தை சிரித்து கொண்டே கை நீட்டியது. கை நீட்டிய திசை என்னை நோக்கியிருந்தது.

என்னால் ஏதும் செய்ய இயலவில்லை. அந்தக் குழந்தையின் பிஞ்சு விரல்களை மடக்கி விட்டேன். இப்படியெல்லாம் செய்யக்கூடாதுடா, இப்படி சொல்லும்போது என் குரல் கம்மியது.
சுற்றியிருந்தோர் என்னை ஒருமாதிரி பார்க்கத்துவங்கினர்.

பையில் துழாவி என் கையில் அகப்பட்ட சில்லறைகளை அப்பெண்ணின் கையில் போட்டேன்.

நிறுத்தம் வந்தது, ஒரு சிலையாய் இறங்கினேன்.

அவர்களும் என்னோடே இறங்கினார்கள்.

ப்ளாட்பாரத்தின் ஊடே நடந்து போய்க்கொண்டிருந்தார்கள்.
அந்தப் பெண்ணின் இடுப்பிலிருந்த குழந்தை கையை ஆட்டிக்கொண்டும் ஏதேதோ செய்து கொண்டிருப்பது அந்த தாய்க்கு தெரிய வாய்ப்பேதுமில்லை.

என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. வீடு செல்லும் வரை, வீடு சென்ற பின்னரும் அந்தக் குழந்தையின் தோற்றமும், சிரிப்பும், பார்வையும் என்னை ஏதோ செய்து கொண்டே இருந்தது.

இன்னமும் ட்ரெயினில் அது போன்ற பார்வையற்றோரை ரயிலில் பார்க்க நேர்ந்தால் அக் குழந்தையைத் தேடுகிறேன்.

வளர்ந்திருப்பாள் எனினும் அந்தப் பார்வை அடையாளப்படுத்தித்தரும் அவளை எனக்கு.

//,இன்னமும் சொல்வேன்,//

11 பின்னூட்டங்கள் திசெம்பர் 3, 2008

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

ஜனவரி 2019
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Posts by Month

Posts by Category