Posts filed under: ‘உயிரெழுத்துத் தொடர்‘
எ ஃபார்…

….. எடுத்துக்காட்டு!!

இந்த.காஎன்ற எடுத்துக்காட்டு படுத்தற பாடு இருக்கே!! யூகேஜிலேர்ந்து இன்னைக்கு வரைக்கும் நம்மை துரத்திக்கிட்டே வர்ற விஷயம்! முதல்லே ‘எ.கா’ -ன்றது ‘எடுத்துக்காட்டு’ அப்படின்னு எனக்கு புரியறதுக்கே சில பல வகுப்புகள் தாண்டி வர வேண்டியிருந்தது.

பளளிக்கூட புத்தகத்துலே பாடம் முடிஞ்சதும் அடுத்ததா கேள்விகள்/பயிற்சிக்கேள்விகள் இருக்கும். அது எப்படின்னா எடுத்துக்காட்டு ஒன்னு கொடுத்துட்டு அதே மாதிரி மீதியெல்லாம் செய்ங்க எனும் ரீதியில் இருக்கும். அறிவியல், தமிழ், ஆங்கில பாடங்கள் கூட சமாளிச்சிடலாம். ஆனால், இந்த கணக்கு பாடத்துலே இருக்குமே…அது ஒன்னொன்னும் ஒரு மாதிரி இருக்கும். எ.கா-ஆக இருக்கறது மட்டும் ஈசியா இருக்கும். ஒருவேளை ஈசியா இருக்கறதை மட்டும் எ.கா -ஆ செஞ்சு கொடுத்திட்டாங்களோன்னு தோணும்!

அதுவும், இந்த மணி பார்க்க கத்துக்கற காலகட்டம் மறக்கமுடியாதது… பாடத்துக்கு பின்னாடி நெறைய கடிகாரங்கள் வெவ்வேற நேரம் காட்டிய படி வரைஞ்சு இருக்கும். அதுலேயும் எ.கா-இல் இருக்கறது ரொம்ப ஈசியா 1.30 மணி காட்டும். ஆனா, நாம் எழுத வேண்டியது மட்டும், 7.45, 2.15 12.45 இப்படி இருக்கும். ஹாஃப் பாஸ்ட் 2, ஃக்வார்டர் டூ 8 – னுதான் சொல்லணும். ஆனா எ.கா-ஆக இதையெல்லாம் போட்டிருக்க மாட்டாங்க. நாமே “யாரேனும் மணி கேட்டால் அதை சொல்லக் கூட தெரியாதே” கேஸ்! நேராக சரியான மணி சொல்றதே பெருங்கஷ்டம், இந்த மாதிரி சுத்தி வளைச்சு சொல்லச் சொன்னா!!

எப்படியோ, மணியெல்லாம் (அட, கடிகாரத்திலேதான்!) பார்க்க கத்துக்கிட்டு பெரிய க்ளாஸ் வந்தா, கொஸ்டின் பேப்பரிலே, “கோலங்கைமா திசு, பாரங்கைமா திசு, மைட்டோகாண்ட்ரியா வை எ.கா டுடன் படம் வரைந்து விளக்கு” னு இருக்கும்! நமக்கு ஏதோ ஒரளவுக்கு ஒழுங்கா வரைய தெரிஞ்சது அமீபாதான். இதோட எங்க சயின்ஸ் டீச்சர் புண்ணியத்துலே மைட்டோகாண்ட்ரியா எப்படி இருக்கும்னு இப்போ வரைக்கும் ஞாபகம் இருக்கு! ஆனாலும் பத்தாவது பரீட்சையிலே கண் -னை (ஏன்னா அதுக்கு முன்னாடி வருஷம் கேள்வித்தாள்லே காது கேட்டிருந்தாங்க!) விழுந்து விழுந்து படிச்சுட்டுப் போக, கடைசிலே கொஸ்டின் பேப்பரில் ‘காது வரைந்து விளக்கு’ன்னு வந்து இருந்தது. என்ன பண்ண, மனசை கல்லாக்கிட்டு, படிச்சிட்டு போன கண்ணை வேஸ்ட் பண்ணாம, ‘இந்த மாதிரி இருக்கிற கண்ணுக்கு சற்றுத்தள்ளி காது இருக்கும்’ என்ற மாதிரி ஒரு விடை எழுதி விட்டு வந்தது வரலாறு!

ஆனாலும், கழித்தல் கற்றுக்கொண்ட போது, 10-இலிருந்து 3 போனா மீதி எவ்வளவு கேள்விக்கு புரியாமல் விடும் லுக்-கை பார்த்து, “உன்கிட்டே பத்து மாம்பழம் இருக்கு, மூனு மாம்பழம் அனு-வுக்கு கொடுத்துட்டா மீதி உன்கிட்டே எவ்வளவு இருக்கும்” ன்னு எ.கா-டோடு கேட்க, ”ஏன் அனுவுக்குக் கொடுக்கணும் நானேதான் சாப்பிடுவேன்” என்ற கேள்வி மனதில் பசுமையாக இருக்கிறது! அதேபோல் அல்ஜீப்ராவில் மைனஸூம் மைனஸூம் ப்ளஸ் என்று கற்றுக்கொண்டதும்!

ஒவ்வொரு பேப்பருக்கும் செமினார் – அந்த செமினாருக்கு இண்டர்னல் மதிப்பெண்களும் உண்டு. ‘எந்த டவுட்-னாலும் தனியா கேளு, என் செமினார்லெ நீ கேக்காதே, உன் செமினார்லே நான் கேக்க மாட்டேன்’ என்று சொல்லப்படாத டீலிங் வகுப்பில் நடைமுறையில் இருந்தது. இரண்டு செமினார்களை பார்த்த ஆசிரியர், டவுட்களை அவராக கேட்க ஆரம்பித்துவிட திருடனுக்குத் தேள். அதிலிருந்து தப்பிக்க, ‘நான் அவனை கேப்பேன், அவன் என்னை கேப்பான்” என்று போட்டு வைத்த திட்டத்தில் “ இதனை ஒரு எ.கா-டோடு விளக்க முடியுமா” என்ற கேள்விக்கே முதலிடம்!

ஏழாம் வகுப்பிலிருந்து படித்து வந்த ‘தொகை’களை, கல்லூரியில் விரிவாக நடத்திக்கொண்டிருந்தார் தமிழ் பேராசிரியர். ‘நமக்கெல்லாம் இந்த லேங்குவேஜா முக்கியம், சியும் சிபிபியும் தானே சோறு போட போகுது’ என்ற மிதப்பில் கனவு கண்டுக்கொண்டிருந்தபோது, ப்ரியாவிடம் “வினைத்தொகைக்கு’ எ.கா சொல்லுமா” என்றார் ஆசிரியர். ப்ரியா எதையுமே உணர்ச்சி பூர்வமாக விளக்குவாள். ஏதோ ஓர் அரவிந்தசாமி படக்கதையை மூன்று நாட்களாகச் சொன்னவள் அவள். சொல்வதோடு நில்லாமல் ஆக்‌ஷனும் உண்டு – ஒரு குழந்தையைப் போல!

சட்டென எழுந்த ப்ரியா,

”’பால்சோறு சாப்பிட்டான்’ங்க மேம்” என்று,
டெஸ்க்-லிருந்து எடுத்து சாப்பிடுவது போல ஆக்‌ஷ்னுடன் சொல்ல ஆசிரியருக்கே சிரிப்பு வந்துவிட்டது! ப்ரியா, அன்றிலிருந்து கொஞ்சநாளைக்கு ‘பால்சோறு’ ம் ஆனாள்! 🙂

உங்கள் எ.கா நினைவுகளையும் பகிர்ந்துக்கொள்ளுங்களேன்!

Advertisements

Add a comment நவம்பர் 27, 2009

ஊ ஃபார் … (தொடர்ச்சி)

…ஊருக்குப் போறோம்!
பகுதி 1

பண்ருட்டி வந்தவுடன், ஊருக்கே போய்விட்ட சந்தோஷம் கிட்டி விடும் – அதுவும், குடத்தை கையில் ஏந்திக்கொண்டு தண்ணீர் ஊற்றுகிற பாவனையில் பெண்கள் இருபுறமும் நிற்குமாறு கட்டப்பட்ட அந்த வளைவு/ஆர்ச் – ‘அப்பாடா, வடலூர் வந்துவிட்டது’ என்ற நிம்மதி!! ‘நெய்வேலி உள்ளே போகுமா’ என்று கேட்டுவிட்டு வடலூர் பஸ் பார்த்து ஏறி அமர்ந்தால் பலாபழ கூடைகளுடனும், முந்திரி கூடைகளுடனும் நம்மை மொய்க்கத் துவங்குவார்கள்! பெரும்பாலும், குட்டிபசங்கள் ஜன்னலோரத்தில் அமர்ந்தால் பலாபழத்தை பேப்பரில் வைத்து மடியில் போட்டு விடுவார்கள்…நான் ஆயாவை பார்ப்பேன் – அவர் ‘வேணாம்மா’ என்றாலும் விற்கும் நபர்கள் திணிப்பார்கள் – ‘கீரைக்காரம்மாவிற்காக கீரை வாங்கும்’ ஆயா இந்த பலாப்பழ ஆளுக்காக பலாப்பழம் வாங்குவார். ..அது இரண்டு அல்லது மிஞ்சி போனால் இரண்டரை ரூபாய்! இன்றைக்கு பத்து சுளைகள் பத்துருபாய்.சாப்பிட்டபின் பலாப்பழ கொட்டைகளை கண்டிப்பாக கோன் மாதிரி செய்து வைத்திருக்கு பேப்பரில் போடவேண்டும், அது அத்தையிடம் கொடுத்து அடுத்த நாள் சாம்பாரில் போடப்படும்!!

பண்ருட்டி என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது முந்திரி மரங்களும், பிஞ்சு பிஞ்சாய் தொங்கும் பலாமரங்களும்தான். அதுவும் அந்த செம்மண் கலர் இருபுறங்களிலும் பார்க்க மிகவும் பிடிக்கும்!போர்வையால் மேலே போர்த்தி கட்டிலுக்கு கீழே வீடு விளையாட்டு விளையாடும் எனக்கு, கவிந்து பரவிக்கிடக்கும் முந்திரி மரங்களுக்குள்ளே வீடு விளையாட்டு விளையாட மிகவும் ஆசையாக இருக்கும்!ஆனால் ஆயா அங்கு பெரிய பாம்புகள் இருக்குமென்று சொல்வார்! சாலையின் இருபுறமும் இருக்கும் செம்மண் மழைக்குக் கரைந்து வித்தியாசாமான வடிவங்களில்ம் மேடுகளாக பள்ளங்களாக இருக்கும் – அதை ஒரு க்ராண்ட் கான்யனாக உருவகப்படுத்திக்கொள்வேன்! தண்ணீர் அரித்து ஓடியிருக்கும் குட்டி க்ராண்ட் கான்யன்!! அதுவும் பண்ருட்டியில் ஒரு இடத்தில் மகா கெட்ட வாசனையொன்று வரும்…அது வந்தால் முக்கை பொத்திக்கொண்டு வாயால் சுவாசிப்பேன்/அல்லது மூச்சை இழுத்துபிடித்துக்கொள்வேன்! அது ஒரு சாராய பேக்டரி – ஆனால் அது வந்துவிட்டால் வடலூர் நெருங்கிவிட்டது என்று அர்த்தம்! மழைநீர் தேங்கியிருக்கும் செம்மண் குழிகள் – வீடு விளையாட்டில் செங்கல்லை அரைத்து நாங்கள் வைக்கும் சாம்பார் வைப்பதை நினைவூட்டும்!! மண்ணைக்குவித்து அதன் தலையில் நீர் ஊற்றினால் அந்த இடம் ஈரமாகி குழிந்திருக்கும் – அதை கீழாக நோண்டிஎடுத்தால் அதுதான் இட்லி. உடனே விளையாட மனம் ஆயத்தமாகும்! இன்னும் ஒருமணி நேரமே..வடலூர் வந்துவிடும். நிலைகொள்ளாது அதன்பின் – ஆம்பூரில் கற்றுக்கொண்ட விளையாட்டுகளை வடலூரிலும், வடலூரில் கற்றுக்கொண்டதை ஆம்பூரிலும் அல்லவா பரிவர்த்தனம் செய்துக்கொண்டிருந்தேன்! எனக்கு தெரிந்த அரிய பெரிய வித்தைகளை பகிர்ந்துக்கொள்ள வேண்டிய கட்டத்துக்கு தள்ளப்பட்டிருப்பேன்!

உங்களை எங்கே விட்டேன்…சாராய பேக்டரி…இப்போது ரயிலே கேட் அருகில் வந்துவிட்டோமே!! அப்புறம் ஒரு பெரிய புளியமரம் ..அதனருகில், முகப்பில் டீ கடைகொண்ட குடிசை வீடுகள் – அதைத்தாண்டினால் பீங்கான்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் – அவை தொப்பியை கவிழ்த்து வைத்த வடிவில் இருக்கும்.மேலே சொரசொரப்பான பகுதி. அதை எங்குதான் உபயோகிப்பார்களென்று இன்றும் எனக்கு தெரியாது. அப்புறம் நீள வடிவில் குழாய்கள் – அவை நெய்வேலியிலிருந்து தண்ணீருக்காக. அதையடுத்து, சேஷசாயி பேப்பர் மில்ஸ். தொடர்ந்து, கடைகள் ஆரம்பிக்கும்.பெயர்கள் எல்லாமே பெரும்பாலும் வள்ளலார் என்றுதான் தொடங்கும்….வள்ளலார் காபி கடை, வள்ளலார் ஓட்டல்..வள்ளலார் சலூன்….பஸ் வந்ததுமே பிஞ்சு வெள்ளரிக்காய் எடுத்துக்கொண்டு மொய்க்க ஆரம்பித்துவிடுவர் மக்கள்…பஸ் கூடவே ஓடி வரும் அவர்கள் லாவகம் மிகுந்த வியத்தலுக்குரியது!! ஆனால் வாங்க மாட்டோம்…அதான் ஊர் வந்துவிட்டதே…மறக்காமல் செருப்பை மட்டிக்கொண்டு…இறங்கி நடந்தால்…

நான்குமுனைச் சாலை.வடலூரில் ஜனநெருக்கடி கொண்ட ஒரே சாலை. ஒரு புறம் பண்ருட்டி செல்ல, அதனெதிர் புறம் சிதம்பரம் செல்ல, அதன் பக்கத்தில் நெய்வேலி செல்ல,அதனெதிர்ல் கடலூர் செல்வதற்கு! இங்கும் கெஸ்ஸிங் விளையாட்டு ஒன்று நடக்கும் என் மனதிற்குள்! ஒவ்வொரு முறையும் இறங்கி்ய பின் ‘அந்த ரோடில் சென்றால் தான் வீடு வரும்’என்று நினைத்துக்கொண்டிருப்பேன்..ஆனால் அதில் சென்றால் வேறு யாராவது வீட்டுக்குத்தான் செல்லவேண்டிருந்திருக்கும்!சரி, அடுத்த முறை சரியாக கெஸ் செய்யவெண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது, ஆயா க்ருஷ்ணா பேக்கரியின் முன் நிற்பார் – ரஸ்க், ஜாம் பிஸ்கட், கேக், க்ரீம் அடைக்கப்பட்ட கோன் (மேலே செர்ரி இருக்குமே), பேக்கரிகளில் மட்டும் கிடைக்கும் பிஸ்கட் (அதனை எனது பெரியகுளத்து தோழி ‘சூஸ்பெரி’ என்பாள்) எல்லாம் இரண்டு செட்(பெரிய மாமாவீட்டுக்கு/சின்னமாமா வீட்டுக்கு) வாங்கியபின் பூக்காரம்மா ஸ்டாப்…தாமரை இலையில் வைத்து நூல்கட்டி கொடுப்பார். வாங்கியபின் நடக்க வேண்டும்..ஒரு கிமீ.ஆட்டோக்கள் அரிது…புளியமரங்களில் எண்கள் எழுதியிருக்க அதை எண்ணிக்கொண்டு லாம்ப் போஸ்ட் எங்கே வருகிறதென்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டே வந்தால் – ஆயாவை கண்டுக்கொண்ட ஒன்றிரண்டு பெரியவர்கள் , ‘இப்போதான் வர்றீங்களா, மக வயித்து பேத்தியா’என்று சில விசாரிப்புகள். கடந்து வந்தால் வீடு வந்திருக்கும். இருட்டவும் ஆரம்பித்திருக்கும்.

அப்புறம், (பெரிய/சின்ன) மாமா-அத்தை,தம்பி,புழு என்ற புகழேந்தி, கயலு, பஜ்ஜி என்ற விஜி, மகேஷ் எல்லாம் பார்த்தபின் சோர்வாவது ஒன்றாவது! ஒளிந்து பிடித்து,கோ கரண்ட், கல்லா மண்ணா என்று ஆட்டம் தொடங்கும். அப்புறம், யானை மேலே குதிரை மேலே சிங்கம் மேலே டூ கா…துபாய்லேர்ந்து துப்பாக்கி எடுத்துட்டு வந்து சுடுவேனென்றும், பம்பாய்லேர்ந்து பாம்பை உன் மேலே விடுவேன் என்றும் சிங்கப்பூர்லேர்ந்து சிங்கத்தை விட்டு கடிக்க விடுவேன்றும், ரஷ்யாலேர்ந்து ராக்கெட்டை உன் மேலே உடுவேன்றும் பெனாத்திக்கொண்டிருக்க அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் வந்து சேர….திரும்ப அதே ஜாலி,கலவரம்,கிலி்.. அதே டவாலி, பைகள் சகிதம்….பட்டுக்கோட்டை/பெரியார்/திருவள்ளுவர், பண்ருட்டி டூ திருக்கோவிலூர் டூ திருவண்ணாமலை டூ வேலூர் டூ ஆம்பூர்!!

Add a comment நவம்பர் 16, 2009

ஊ ஃபார் …

…ஊருக்குப் போறோம்!

“உங்களுக்கு எந்த ஊரு” என்று கேட்டால் உடனே சொல்லிவிட முடிவதில்லை. வடலூரில் இருக்கும் போது ஆம்பூர்காரியாகவும், ஆம்பூரில் இருக்கும் போது வடலூர்க்காரியாகவும் கொடைக்கானலில், இவையிரணடில் அந்த நேரத்தில் எது தூக்கலாக இருக்கிறதோ அந்த ஊர்க்காரியாகவும், பெங்களூரில் சென்னைக்காரியாகவும் இருந்த எனக்கு சட்டென நேரும் குழப்பமே அது! கல்லூரியில் எப்போதும் ஆம்பூர்க்காரியாகவும், வடலூரை(சுற்றியிருக்கும் கிராமங்களான நெய்வேலி, பண்ரூட்டி, விருத்தாசலம் ஊரைச்) சேர்ந்தவர்களை சந்தித்தால் வடலூர்க்காரியாகவும் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறேன். ஆயாவின் பூர்வீகம் கடலூராக இருந்தாலும் அவர்கள் செட்டிலானது வடலூரில்தான்.

”ஊருக்குப் போறோம்” என்ற வார்த்தைகள் சிறுவயதில் எனக்குள் ஏற்படுத்திய கொஞ்சம்ஜாலி, கொஞ்சம் கலவரம், கொஞ்சம் கிலி என்ற கலவையான உணர்வுகள்!!

வளர்ந்தபிறகு ”நான்ல்லாம் அந்த ஊருக்கு வரவே மாட்டேன்ப்பா, ஊரா அது” என்று முரண்டுபிடித்திருக்கிறேன். வடலூர் மேல் இவ்வளவு வெறுப்பு வர பெரிதான காரணங்களொன்றும் தேவையில்லை…ஆம்பூரிலிருந்து வடலூர் செல்ல ஆகும் நேரம் – ஒரு நாள்-பஸ்ஸில்! இப்போதல்ல, ஒரு இருபது வருடஙளுக்கு முன்னால்!- பை பாஸ் ரோடுகளோ,ஹை வேக்களோ வந்திராத காலம்!! அதுவும், ஆயா பென்ஷன் வாங்க இரண்டு மாதங்களுக்கொரு முறை நெய்வேலி ட்ரெஷரி அல்லது வடலூர் செல்ல வேண்டும். ஆயாவோடு நானும்! எனது நான்கு வயதிலிருந்து எட்டாம் வகுப்பு வரை இந்தப்பயணம் தொடர்ந்தது. ஆம்பூரிலிருந்து வேலூர், வேலூரிலிருந்து திருவண்ணாமலை, திருவண்ணாமலையிலிருந்து திருக்கோவிலூர், திருக்கோவிலிருந்து பண்ருட்டி, பண்ருட்டிலிருந்து வடலூர்!!

காலை ஆறு அல்லது ஆறரைக்கு கிளம்பினோமானால் (அன்று) மாலையே ஆறரைக்கு வடலூர் சென்றுவிடலாம்.ஆயாவின் ட்ரேடு மார்க் ஒரு டவாலி பை. கட்டங்கள் போட்ட கதர் துணியில் ஜிப் தைத்த டவாலிப் பை. பார்த்த மாத்திரத்திலேயே நான் வெறுக்கும் வஸ்து அது!! அதில் தண்ணீர் பாட்டில், டிக்கெட்டிற்கான காசு கொண்ட வள்ளி விலாஸ் பர்ஸ், முகம் துடைக்க சிறு வெள்ளைத் துண்டுகள் அப்புறம் எனக்கு பாலித்தீன் கவர்கள், பழைய செய்தித்தாட்கள் – பஸ்ஸில் ஏறி அமர்ந்துவிட்டால் வயிறு பிரட்டுமே அதற்கு. எப்படியும் ஜன்னல் சீட் எனக்குத்தான். அதுவும் அந்த டீசல் வாசம் வந்துவிட்டாலோ…போச்!!ஆனால் எவ்வளவுதான் டயர்டு ஆனாலும் ஊருக்குப் போனதும் விளையாட ஆரம்பித்தபின் டயர்டாவது ஒன்றாவது!! சோர்வு என்பதைவிட நாள் முழுவதும் பஸ்ஸில் செல்வது – அதுவும் விளையாட முடியாமல் ஒன்றும் செய்யமுடியாமல் ஒரு சீட்டிலே முடக்கப்பட்டிருந்த உணர்வே அது என்பது இப்போது புரிகிறது! ஆனாலும் ஊருக்குப் போவது ஜாலியாக இருக்கும். பட்டுக்கோட்டை, தந்தை பெரியார், திருவள்ளுவர் என்று பலவித பஸ் அனுபவங்களுடன் வடஆற்காடு மாவட்டத்திற்கும் தென்னாற்காடு மாவட்டத்திற்குமான பயணம் அது!

ஆம்பூர் டூ வேலூர் தூக்க கலக்கத்தில் போய்விடும். வேலூரில் வேறு பஸ் ஸ்டாண்ட் மாறி செல்ல வேண்டும். அதற்குள் ஆயா எனக்கு கோகுலம், சாத்துக்குடி,பிஸ்கட் எல்லாம் ஸ்பான்ஸர் செய்வார். ஆனால், பஸ்ஸில் படிக்கக்கூடாது – கண் கெட்டுவிடும்! நடுவில் இருக்கும் 16 வண்ணப்படக்தையை மட்டும் படிக்கிறேனென்று படித்து விட்டு அப்புறம் வேடிக்கைதான். பாயிண்ட் டூ பாயின்ட் எல்லாம் வந்திராத காலம்! ஊருக்கு ஊர் நின்று செல்லும் பஸ்ஸாக இருக்கும் – வேலூர் டூ திருவண்ணாமலை ஜாலியாக போகும் – காலை நேரம் வெயில் அவ்வளவாக இருக்காது! திருவண்ணாமலையில் நல்லவேளை ஒரே பஸ் ஸ்டாண்டுதான். எப்படியும் ஆயாவுக்கு கண்டக்டரும் டிரைவரும் ஃப்ரெண்ட் ஆகிவிடுவார்கள். கிளம்புமிடத்திலிருந்து சேரும் இடம் வரை செல்பவர்களை மிகுந்த மரியாதையுடன் நடத்துவார் நடத்துனர்! ஆயாவும் அவர்பங்குக்கு, உறவினர் ஒருவர் பட்டுக்கோட்டையில் டிரைவராக பணியாற்றுவதைச் சொல்லுவார். ஒரு சில டிரைவர்கள் ஆயாவை நினைவிலும் வைத்திருப்பர்!! அவர்கள் சாப்பிட, டீ குடிக்க நிறுத்தும்போது எங்களுக்கும் சொல்வார்கள். ஆயா மறக்காமல் திருவண்ணாமலையில் பஸ் ஸ்டாண்டின் எதிரி்லிருக்கும் ஒரு கடையில் பக்கோடா வாங்குவார்! பெரிய மாமாவுக்கு அந்த பக்கோடாவென்றால் இஷ்டமாம்!நிறுத்தத்திலிருந்து பேருந்தை உடனே கிளப்பி விட மாட்டார் டிரைவர், சில நிமிட இடைவெளிகளில் மூன்று தடவை கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்துவார், ஹார்ன் சத்தத்துடன்.

குண்டும் குழியுமான ரோடில் குதித்து குதித்து செல்லும் பஸ் – சடன் ப்ரேக் போட்டால் முன்நெற்றி சென்று இடித்துக்கொள்ள இருக்கும் நேரத்தில் பின்னால் ஒரு டமார் – நாம்தான்
பின்னால் சென்றிருப்போம். முன்ஜாக்கிரதை காரர்கள் முன்சீட்டின் கம்பியை பிடித்துக்கொண்டு சீட்டின் நுனியில் வந்திருப்பார்கள்! ஜன்னல்களின் மேலே வெள்ளை நிற பெயிண்டில் ”கரம் சிரம் புறம் நீட்டாதீர்”. “யாகாவாராயினும் நாகாக்க”, ”தீயினாற் சுட்ட புண்”டிரைவரின் சீட் பின்னால் இருக்கும். திருவள்ளுவர் பஸ்களில் முதலுதவி பெட்டி வைத்திருப்பார்கள். அதனால் அதற்கு மேலே திருக்குறளின் இரண்டாம் வரி தெரியாதவாறு எழுதி வைத்திருப்பார்கள். இந்த பஸ்களின் சீட்கள் உயர்ந்திருக்கும். குஷன் சீட்கள் – தலை சாய்த்துக்கொள்ள வசதியாக. ஆனால் எனக்கு அது வசதியாகவே இருந்ததில்லை. சீட்களுக்கு நடுவே கட்டைகள் இருக்கும்.பட்டுக்கோட்டை, தந்தை பெரியார் பஸ்களில் சாதாரண சீட்கள்..பெரும்பாலும் பஸ்ஸின் நடுவில் கம்பி இருக்கும் சீட் அருகில் தான் உட்காருவோமென்று நினைக்கிறேன் அல்லது அங்கே உட்காரக்கூடாதோ ஏதோ ஒன்று நினைவில்லை.

ஆனால், சீட்டை தேர்ந்தெடுப்பதில் அந்தக் கம்பி பெரும்பங்கு வகித்தது! அதுவும் முன்சீட்டில் உட்கார்ந்தாலும் உட்காரலாம், பின்சீட் கண்டிப்பாகக் கூடாது, தூக்கி தூக்கிப் போடுமே! ஆனால் அந்த பம்ப்பி ரைட்டிற்கு மனதளவில் ஆசைப்பட்டிருக்கிறேன், அந்த வயதில்! சீட்டிலிருந்து முன்னால் பார்த்தால் தூரத்தில் ரோடு மேடாக தெரியும். பள்ளத்திலிருந்து இறங்குவது எனக்கு சறுக்குவது போன்ற உணர்வை தருமாதலால் காத்துக்கொண்டிருப்பேன், ஆனால் அது உண்மையில் மேடு அல்ல! மேலும்,ரோடின் இருபுறமும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல்வெளிகள், மேலே பறக்கும் வெள்ளை நிற பறவைகள் (கொக்கா அல்லது நாரையா?!) சமயங்களில் ஜன்னலை தாண்டி பஸ்ஸில் எட்டிப்பார்த்து செல்லும் ரோடில் வளர்ந்திருக்கும் நீளமான சூரை முட்செடிகள்! திருவண்ணாமலையில் மதிய உணவு முடிந்தபின்னர், ‘எப்போதடா ஆற்றின் நடுவில் கல்லின் மேலிருக்கும் ஒரு கோயில் வருமெ’ன்று காத்துக்கொண்டிருப்பேன்.

ஏனென்றால், எனக்கு அது அடுத்த மைல்கல் – அந்த ஊர் திருக்கோவிலூர்.அந்த கோவிலில் காவி வண்ணமும் சுண்ணாம்பும் கலந்து பட்டையாக அடித்து வைத்திருப்பார்கள். எப்படி அதன் மேல் ஏறுவார்களென்று வியப்பாக இருக்கும்! மேலும் ரோட் நடுவில் கம்பு மற்றும் கேழ்வரகு போன்ற தானியங்களை கொட்டி வைத்திருப்பார்கள். ரோடிற்குள் தள்ளிவிட ஓடிவரும் முக்காடிட்ட பெண்கள், பழுப்பேறிய வேட்டியை உயர்த்தி கட்டிக்கொண்டு தலையில் துண்டை கட்டியிருக்கும் ஆண்கள், பஸ்ஸுக்கு டாடா காட்டும் குட்டிப்பசங்கள் என்று நல்ல காட்சிதான். ஆனால், என்ன, தூசி கண்ணில் விழுந்துவிட்டால்தான் கஷ்டம்! மழை வந்தால் அது தனிக்கதை.அடிக்கும் சாரலை தடுக்க துருபிடித்த ஷட்டரை மூட முடியாது – சட்டென சில கைகள் உதவிக்கு நீளும்.

திருக்கோவிலூர் கொஞ்சம் காய்ந்த ஊர் என்ற நினைப்பு எனக்கு. தண்ணீர் இல்லாத மணல் தெரியும் வறண்ட ஆறு. மரங்கள் இல்லாத குன்றுகள்.புழுதி பறக்கும் சாலைகள் – கண்கள் இடுங்கி ,உழைத்து உழைத்து சுருக்கங்கள் விழுந்த வந்த ஒல்லியான மக்கள் ! மேலும் திருக்கோவிலூர் என்றால் உடனே நினைவுக்கு வருவது வாழைப்பழ சீப்பை எடுத்துக்கொண்டு பஸ் புறப்பட்டபின்னரும் கூடவே ஓடிவரும் மக்கள்!!’நான் படிச்சு பெரிய ஆளாகி அவங்களுக்கெல்லாம் ஹெல்ப் பண்ணுவேன்’ என்று எனக்குள் நானே நினைத்துக்கொண்டது நினைவோடே நின்றுவிட்டது!!

அடுத்து – பண்ருட்டி! அதைப்பற்றி அடுத்த இடுகையில் தொடர்கிறேன்.

Add a comment நவம்பர் 15, 2009

உ ஃபார்….

…உல்லாசப் பயணங்கள்! (கோல்டா அக்கா, நீங்க பரிந்துரைத்ததுதான்!)

உல்லாச பயணம் அதாங்க டூர்! பள்ளிக்கூட காலங்களில் இரண்டே இரண்டு தடவைகள் மட்டுமே உல்லாச பயணத்திற்குச் சென்றிருக்கிறேன். ஒன்று எட்டாவது படிக்கும்போதும், இன்னொன்று பதின்னொன்றாம் வகுப்பிலும். ஐந்தாம் வகுப்பில் ஒரு உல்லாசப் பயணமொன்று சென்றார்கள் – மெட்ராஸுக்கு. அதன்பிறகு, பார்த்தால் வகுப்பில் இரண்டு குழுக்களிலிருந்தது – ஒன்று டூர் போன நண்பர்கள், இன்னொன்னு டூர் போகாதவர்கள் என்று. (டூருக்கு முன்பு வேறு மாதிரி குழுக்களிலிருந்தது!)ஒருநாளிலேயே, நண்பர்களை மாற்றும், நெருக்கத்தைக் கொடுக்கும் திறமை டூருக்கு இருந்தது!

பயணத்திற்கு ஒரு மாதம் முன்பாக அறிவிப்புகள் வகுப்புவாரியாக நடக்கும். நாட்கள் நெருங்க நெருங்க மனதில் ஒருவித பரபரப்புத் தொற்றிக்கொள்ளும். அதுவும், ‘இப்படம் இன்றே கடைசி’ போன்றதொரு தோற்றத்தை அறிவிப்புகள் மூலம் அவ்வப்போது கொடுத்துக்கொண்டிருப்பார்கள். நாமோ வீட்டில் கெஞ்சிக் கதறிக்கொண்டிருப்போம்,எல்லாவிதமான அஸ்திரங்களையும், ‘இனிமே நல்லா படிப்பேன், ஃப்ர்ஸ்ட் மார்க் எடுக்கறேன்’ போன்ற வாக்குறுதிகளை அள்ளித் தெளித்துக்கொண்டு. கடைசி வரை இழுத்தடித்துவிட்டு, ‘இதுக்கு மேல தாங்காது’ என்ற இரக்கம் மேலிட காசு கொடுப்பார்கள். இதற்கு மேல் ஏமாற்றினால் பெண் எங்கே வீட்டை விட்டு ஓடிவிடுமோ என்ற பயம் கூட காரணமாக இருக்கலாம். ;-))

பெயர்கொடுத்தபின், அடுத்த டென்ஷன்கள் ஆரம்பிக்கும். அடுத்தகட்ட திட்டமிடல்கள். என்ன மாதிரி பை எடுத்துச் செல்வது – நம்மிடம் இருக்கும் எல்லா ஃபேஷன் வஸ்துகளையும் அடுத்தவரிடம் காட்டிக்கொள்ள் கிடைத்த அரியதொரு வாய்ப்பு இல்லையா..அதை ஒழுங்காக பயன்படுத்தி peer pressure ஏற்றிவிடுவது நமது கையிலல்லவா இருக்கிறது! மேட்சிங் வளையல்கள், ரப்பர் பேண்ட்கள், ஹேர் க்ளிப்கள்,புது தண்ணீர்பாட்டில், அப்புறம் டாப் அப்பாக கூலிங் கிளாஸ், முடிந்தால் வாக் மேன், ஸ்வெட்டர் கண்டிப்பாக, அல்லது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், அமெரிக்காவிலிருந்த வந்த வாட்ச். இவை தவிர, வீட்டிலிருந்து தையிலையிலோ அல்லது புரச இலையிலோ கட்டித்தரப்படும், மிளகாய் பொடி தடவிய இட்லி போன்ற பொருட்களை கவனமாக, மறதியாக வைத்துவிடுவது போல வைத்துவிட்டு பிஸ்கெட், சாக்லேட், சூயிங் கம், முறுக்கு, சிப்ஸ் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். காமிரா-வுக்கு அடிப்போட்டு பார்த்தல் உசிதம்! இத்தனைக்கும் போகுமிடம் மெட்ராஸ் – மகாபலிபுரம், வேடந்தாங்கல் தான்!

அடுத்தது, எந்தெந்த டீச்சர்கள் நம்முடன் வருகிறார்கெளென்று பற்பல வதந்திகள் கிளம்பும். ‘ஐயோ..சயின்ஸ் டீச்சர் மட்டும் வரக்கூடாதுப்பா’, ‘ஹிஸ்டரி டீச்சரா..ஆ…அதுக்கு போகமலே இருக்கலாம்பா’ என்று கதைகள் பேசி மாய்ந்துப் போவோம். கண்டிப்பாக பி.இ.டி டீச்சர் வருவார். நாட்களை எண்ணியெண்ணி, யார் பக்கத்தில் யாரமருவதென்று முடிவுக்கட்டி, ‘காலையில் ஜன்னல் சீட் உனக்கென்றால் மதியம் எனக்கு’, அல்லது ‘போகும் போது ஜன்னல் உனக்கு, வரும்போது எனக்கு’ என்று பஞ்சாயத்து பேசி கிளம்புவதற்கு முதன்நாளும் வந்துவிடும். அந்த இரவுதான் மிகக் கஷ்டம். பரபரப்பில், மகிழ்ச்சியில், தூக்கமே வராது. வீட்டிலிருந்து கடைசிநேர அட்வைஸ்கள் – ‘ட்ரெஸை அழுக்காக்கிட்டு வராதே’, ‘வேடிக்கை பார்த்துக்கிட்டு நிக்காதே’, ‘டீச்சர் கூடவே போகணும்’, ‘பத்திரமா இருக்கணும்’, ‘கண்டதை வாங்கி சாப்பிடாதே’, ‘வாந்தி மாத்திரை பையிலே சைடிலே வச்சிருக்கேன் etc – போதாதென்று பக்கத்துவீட்டு ஆன்ட்டிகளின் அட்வைஸ்கள் வேறு – நம்புங்கள், எல்லாம் ஒருநாள் டூருக்குத்தான்.

அதென்னவோ, நான் போன உல்லாச பயணங்களும் (ஒன்றைத் தவிர) அதிகாலை மிகச்சரியாக நாலு மணிக்குத்தான் வரச்சொல்லுவார்கள். பேருந்து மிகச்சரியாக நாலரை மணிக்கு கிளம்பிவிடும், யார் வந்தாலும் வராவிட்டாலும் என்பார்கள். மப்ளர் கட்டிய அப்பாக்கள், ஸ்வெட்டர் போட்ட அம்மாக்கள், ஷால் போர்த்திய ஆயாக்கள், மற்றும் தலையை கோதியபடி நுழையும் அண்ணாக்களுடன் ஒவ்வொருவராக வந்து சேர அட்டெண்டன்ஸ் எடுத்தபின் ஆறு மணிக்கு டாணென்று பஸ் கிளம்பும். தூக்கக் கலக்கத்தில் முகங்கள் – புன்னகைகள் – ‘தூக்கம் வருதா, மடிலே படுத்துக்கோ’ போன்ற பாச அலைகள்!!
முதலில் சாமிப்பாட்டு எல்லாம் போட்டபின்னர் மெதுவாக சினிமா பாடல்கள் ஆரம்பிக்கும். ‘லாலாக்கு டோல் டப்பிம்மா’, ‘ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி’தான் என்று பாடல் ஒலிக்கத் தொடங்கும். வீடு, ஹோம்வொர்க், வகுப்புகள் என்று எல்லாமும் ஊர் எல்லையின் மைல்கல்லோடு விடைபெற்றிடும். ‘ரொம்ப ஸ்ட்ரிக்ட்’ என்று நினைத்த ஆசிரியர்கள் கூட சிநேகமான மறுபக்கத்தைக் காட்டுவார்கள். பாடல்களை முணுமுணுப்பதோடுஇ கைத்தடடி தாளம் போட ஆரம்பிப்பார்கள். ஒருவித உல்லாச மனநிலை எல்லோரையும் ஆக்ரமிக்கத் துவங்கும்! நமக்கேத் தெரியாமல் கைகள் தாளமிடத் துவங்கும். அதிகாலைக் காற்று சிலீரென்று முகத்தில் படர இந்தப் பயணம் முடிவிலாமல் நீண்டாலென்ன என்பது போலத் ஆசை அரும்பும்!

வெயிலடிக்கத் தொடங்கும் நேரத்தில் நடைபெறும் இடமாறுதல்கள். உற்சாகமாக ஆரம்பிக்கும் கை தட்டல்கள் மெதுவாக ஓயும்போது யாராவது யாரையாவது எழுப்பி முன்னே தள்ளி டான்ஸ் ஆட வைத்துக் கொண்டடிருப்பார்கள். மீண்டும் களை கட்டத்துவங்கும் ஆடலும் பாடலும் அதனோடுச் சேர்ந்துக் கொண்ட சிரிப்பொலியும். காலை உணவு முடித்தபின் ஜன்னலோர இடமாறுதல்கள், கடி ஜோக்குகள், டம் ஷரத், அந்தாக்‌ஷரி போன்ற எவர்க்ரீன் விளையாட்டுகள் தொடங்கும். இப்போது பேருந்தின் முன்பக்கம் கூட்டமாகியிருக்கும். சிலரது மடிகள் சிலருக்கு இருக்கையாகியிருக்கும். தோழியரின் கைகள் தோளை அரவணைத்திருக்கும். மெதுவாக எல்லோரது பையிலிருக்கும் நொறுக்குத் தீனிகள் பையை விட்டு வெளிவரும்.

ஒப்பந்தப்படி ஜன்னல் சீட் கொடுக்காத சண்டைகள் லேசாக புகையும். தாளமிட்டு கைவலி வந்திருக்கும் நேரத்தில் பார்க்க வேண்டிய இடமும் வந்திருக்கும். டீச்சரை முன்னால் செல்ல விட்டு பின்னால் குரூப்பாக நடந்து மக்களை வேடிக்கைப் பார்த்து என்று பாதிபயணம் முடிந்திருக்கும். மீதிப்பயணமும் முடிந்து சாயங்கால வேளையில் தேநீர் அருந்த நிறுத்தியிருப்பார்கள். முகங்கள் களைப்புடனும், லேசான சோகத்துடனும் இருக்கும். தாலாட்டும் பாடல்களுடன் திரும்ப ஊருக்குள் நுழைகையில், இவ்வளவு சீக்கிரம் முடிஞ்சு போச்சே என்றிருக்கும்…அடிக்கடி இப்படி டூர் வைத்தாலென்ன என்றும் தோன்றும்! தூக்கம் சொக்க திரும்ப அட்டெண்டென்ஸ் எடுத்தபின் அப்பா-அம்மாக்கள் அல்லது நண்பர்கள் வீட்டுக்கு போய்விட்டு நாளை காலை வீட்டிற்கு செல்பவர்கள் என்று கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் குறையும். ‘டூர் எப்படி இருந்துச்சு’ என்ற கேள்விக்கு ‘ம்’ என்று ஒற்றை வார்த்தையில் தலையசைப்போடு புன்னகையை பதிலாக்கிவிட்டு மௌனமாக இரவின் இருட்டில் காலடிச் சத்தங்கள் தேயும். மனமோ, நாலுக்கால் பாய்ச்சலில் அடுத்த டூரைப் பற்றி நினைக்கத் துவங்கும்!

Add a comment செப்ரெம்பர் 16, 2009

ஈ ஃபார்….

…ஈகை! (கோல்டா அக்கா கொடுத்த தலைப்புதான்!!)
ஈகை-ன்னா எனக்கு ஈகைத்திருநாள்-தான் நினைவுக்கு வரும்! எங்க ஊர்லே ரம்ஜான் ரொம்ப கோலாகலமா இருக்கும்! எல்லோரும் ரொம்ப சந்தோஷமா – புது ட்ரெஸ் போட்டு- தெருவே செண்ட் வாசனையோட – சிறுவர்களும் சிறுமிகளும் அங்கேயும் இங்கேயுமா பரபரப்பா நடந்துக்கிட்டு – ரோட்லே எதிர்படறவங்களை கட்டிபிடிச்சு வாழ்த்துகள் பரிமாறிக்கறது- தெரிஞ்சவங்க வீட்டுக்கு பிரியாணி கொடுக்கறதுன்னு! (ரம்ஜான் வருதுன்னா ரெண்டு நாளைக்கு எஙக வீட்டுலே சமையல் ரொம்ப சிம்பிளா இருக்கும். ஏன்னா, மேரே பாஸ் பிரியாணி ஹை!) நோன்பு திறக்கறதுக்கு, காலையிலேயே ஒருத்தர் வந்து எழுப்பிட்டு போவார். ஆனா அதுக்கும் முன்னாடியே எங்க மேல் வீட்டுலே, எதிர் வீட்டுலே, கீழ் வீட்டுலே எல்லாரும் எழுந்து சமைக்க ஆரம்பிச்சிருப்பாங்க! (அதுவும் ரம்ஜான் மார்ச் ஏப்ரல்லே வந்துச்சுன்னா, நம்ம வீட்டுலே இருக்கறவங்களும் எழுந்துடுவாங்க..நம்மளை எழுப்பறதுக்கு! அதுவும் எங்க ஆயாவுக்கு இருக்க முன்னெச்சரிக்கை இருக்கே…மணி அஞ்சுதான் ஆகியிருக்கும்..அஞ்சரையாச்சு, எழுந்திரு…எழுந்திரு…படி..படின்னு! நமக்கு அதெல்லாம் புதுசா என்ன!! அவங்க சொல்றதுலேர்ந்து அரைமணிநேரம் கம்மியா கால்குலேட் பண்ணிக்க வேண்டியதுதான்..தூக்கத்துலேயே!)

ஏதோ சொல்ல வந்துட்டு்…எங்கேயோ போறேன்…நான் நாலாவது படிக்கும்போதுதான் சுமி அக்கா எங்க எதிர் வீட்டுக்கு குடி வந்தாங்க. கொஞ்ச நாள்லே‘சுமி வீடு’-ன்னு ஆயிடுச்சு. ஏன்னா, அந்த அக்கா பேரு சுமையா. அப்போ ஒன்பதாவது படிச்சுக்கிட்டு இருந்தாங்க. காலையிலே எட்டேகாலுக்கு ஒரு வேன் வரும்.முஸ்லீம் ஸ்கூல் வேன். அது கரெக்டா வீட்டு முன்னாடி வந்து நிக்கும். பாதிதான் கதவு திறக்கும், குடுகுடுன்னு சுமி அக்கா ஏறி உக்காந்துப்பாங்க. எல்லோருமே கருப்பு புர்க்கா போட்டு இருப்பாங்க. சுமி அக்கா, அவங்க நானி தைச்ச சம்க்கி வொர்க் ட்ரெஸ் போட்டுருப்பாங்க, ஆனா மேலே அந்த கருப்பு புர்க்கா போட்டுப்பாங்க. சுமி அக்காவுக்கு அவங்க கேக்கும்போதெல்லாம் நாந்தான் Campco சாக்லேட் வாங்கித் தருவேன்!

சுமி அக்காவுக்கு நாலு தம்பிங்க. அஸ்ரார், அப்ரார், உசேன் அப்றம் ஜூபேர். அஸ்ரார் என்னோட செட். அப்ரார் என்னை விட ரெண்டு வயசு சின்னவன். ஜுபேர்-க்கு அப்போதான் ஒரு வயசு. உசேனுக்கு போலியோ-னாலே சரியா நடக்க முடியாது. அவங்க அப்பாவை எல்லோரும் குல்ஸார் பாய்-ன்னு சொல்வாங்க. அவர், ஒரு பஜாஜ் ஸ்கூட்டர் வச்சிருந்தார். காலையிலே எட்டேமுக்காலுக்கு, அதை ஒரு சைடா சாய்ச்சு வச்சு ஸ்டார்ட் செய்வார். ரொம்ப அமைதியான டைப். அன்பானவர். சுமி அக்காவோட அம்மா ரொம்ப ஒல்லியா இருப்பாங்க. எப்போதும் உட்கார்ந்தே இருப்பாங்க. அப்றம், அவங்களோட நானிம்மா – அங்கிளோட அம்மா.

சுமி அக்காதான் சமையல் செஞ்சு வைச்சுட்டு, டிபன் பாக்ஸ்லே எடுத்துட்டு போவாங்க. சில சமயம் ரசம் வைக்க, கீரைக்கூட்டு செய்யறதுக்கு ஆயாக்கிட்டே ரெசிப்பி கேப்பாங்க. அவ்ளோ சூப்பரா பிரியாணி செய்வாங்க..சாஃப்டா சப்பாத்தி செய்வாங்க..ஆனா இட்லி தோசை செய்ய ரொம்ப கஷ்டப்படுவாங்க. ‘வரவே மாட்டேங்குது ஆயா’ கவலைவேற. (நம்ம வீட்டுலே அப்படியே நேரெதிர். தக்காளி சாதம் ரேஞ்சுலே செஞ்சு வச்சிட்டு, ‘பிரியாணி’ன்னு பில்டப்) உசேனுக்கு தோசைதான் பிடிக்கும். அவன் அதை ‘சீலா’ன்னுதான் சொல்வான். அவன் ஸ்கூலுக்குக் கிளம்பற, எங்க ஆயா ரெண்டு தோசை சுட்டுக்கொடுப்பாங்க. எல்லோருக்கும் உசேன் மேல ஒரு தனிப்பாசம் இருந்துச்சு!

எங்க வீட்டுலே எது செஞ்சாலும், ‘சுமிக்கு பிடிக்கும்’ இல்லேன்னா ‘ஜுபேருக்கு கொடுங்க’ கொடுக்கறது – அவங்களும் சப்பாத்தி செஞ்சு ‘குட்டிக்கு கொடுங்க’ன்னு கொடுக்கறது!! தீபாவளிக்கு எங்கக் கூட சேர்ந்து உசேன் மத்தாப்பு கொளுத்துவான்-அஸ்ரார்க்கு எங்க ஆயா இங்கிலீஸ்(!) சொல்லிக்கொடுக்கறது- நாங்க ஊருக்குப் போனா, ‘எல்லோரையும் கேட்டதாச் சொல்லுங்க டீச்சர்’ன்னு அவங்க சொல்றது- பெங்களூர்லேர்ந்து ஆன்ட்டியோட தம்பி கொண்டுவந்த குடைமிளகாயை எங்களுக்கு தர்றதுன்னு ரொம்ப க்ளோஸ் ஆகிட்டோம். !

நான் அப்போ ஆறாவது. அந்த வருஷ அரைபரீட்சை லீவுலே, சுமி அக்கா வீட்டுலே எல்லோரும் பெங்களூருக்குக் கிளம்பினாங்க. அந்த ஆன்ட்டி எங்க ஆயாக்கிட்டே, நான் போய் பல்லை சரி பண்ணிக்கிட்டு வரேன் ஆயா, ஒரே குடைச்சல் கொடுக்குதுன்னு” சொல்லிக்கிட்டிருந்தாங்க. அப்பறம், லீவு முடியறதுக்கு ரெண்டு மூனு நாள் இருக்கும்போது யாரோ வந்து சொன்னாங்க, அந்த ஆன்ட்டி இறந்துப் போய்ட்டாங்கன்னு. அந்த அங்கிள் ஊரு பேர்ணாம்பட். அங்கேதான் காரியம் வச்சிருந்தாங்க. நாங்க எல்லோரும், சாந்தா அத்தை, கெஜா அம்மா எல்லோரும் போனோம். அந்த அங்கிள் ரொம்ப கலங்கிடாம பொறுமையா பேசினார். அவர்கூட சுமி அக்காவோட மாமா இருந்தார். எங்களை எல்லாம் வேறே ஒரு வீட்டுக்கு கூட்டிட்டு போய் என்ன ஆச்சுன்னு சொன்னார். அப்போக்கூட, ஸ்வீட்ஸ் வாங்கி வைச்சு சாப்பிடுங்க சாப்பிடுங்கன்னு சொல்லிக்கிட்டிருந்தார், அந்த அங்கிள்.

எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம். என்ன, பாய், இந்தநேரத்துலேயும் இப்படி உபசரிக்கறாரேன்னு! அந்த ஆன்ட்டிக்கு டிபி இருந்துச்சாம். அதுக்கு மருந்து சாப்பிட்டுக்கிட்டிருந்தாங்களாம். ஆனா அதை ஒரு வருஷம் கழிச்சு திரும்ப வந்து பாக்க சொல்லியிருக்கார் டாக்டர். ஆனா டாக்டர்கிட்டே போகாம, இவங்களா மருந்து வாங்கி தொடர்ந்து சாப்பிட்டிருக்காங்க. அதுதான் பிரச்சினையாகிட்டதா எல்லோரும் பேசிக்கிட்டாங்க வர்ற வழியிலே!! அப்பறம் கொஞ்சநாள் கழிச்சு சுமி அக்கா வந்துட்டாங்க. அவங்க நானிக்கும் கொஞ்சம் முடியாம இருந்தது. முஸ்லீம்களுக்கு நாப்பதுநாள் கணக்காம். நாப்பதாம் நாளுக்கு ஊருக்குப் போய்ட்டும் வந்தாங்க.

சுமி அக்கா ஸ்கூல்க்கு நிறைய லீவ் போட்டதாலே அந்த வருஷம், இன்னொரு முறை படிக்க வேண்டியதாப் போச்சு. அவங்கதான் சமையல், அப்புறம் ஜூபேரைப் பார்த்துக்கறதுன்னு எல்லாம். அங்கிளும் ரொம்ப மனசுடைஞ்சு போய்ட்டதா பெரியவங்க எல்லாம் பேசிக்கிட்டாங்க.’நானும் போய்டுவேன், நானும் போய்டுவேன்’ன்னு அங்கிள் சொன்னதா சொல்லிக்கிட்டாங்க. பெரியங்க பேசிக்கிற இடத்துலே நின்னாதான் எங்க ஆயாவுக்கு கோவம் வந்துடுமே..”கண்ட செருப்பை வாங்கி காதுலே மாட்டிக்கோ”ன்னு திட்டுவாங்க. ஆனா முன்னாடி மாதிரி எங்க பிளாக் கலகலப்பாவே இல்லே..எல்லாமே அமைதியா ஒரு சுரத்தேயில்லாம மௌனமா இருக்கற மாதிரி நடந்துக்கிட்டிருந்தது.

ஒரு வாரம் போயிருக்கும்…இப்படியே! ஸ்கூல் விட்டு சாயங்காலம் வந்தா சுமி அக்கா வீடு பூட்டி இருக்கு..ஆயா முகம் இறுகிப் போய் இருக்கு. அங்கிள் ஆபிஸ் போகாம வீட்டுலேயே தான் இருந்திருக்கார். எல்லோரும் ஸ்கூல் போயாச்சு. நானி மட்டும்தான். காலையிலே ஒரு பதினொரு மணிக்கு நெஞ்சு வலிக்குதுன்னு சொல்லி இருக்கார். பத்துமணிக்கு மேலேதான் எங்க ப்ளாக்லே யாரும் இருக்கமாட்டாங்களே..யார்யாரையோ பிடிச்சு சாந்தா அத்தை டாக்ஸி ஏற்பாடு செஞ்சுருக்காங்க. எங்க ஆயாவை, அவர் பக்கத்துலேயே இருக்கச் சொல்லியிருக்கார். ஆனா, டாக்டர்கிட்டே போறதுக்குள்ளேயே உயிர் பிரிஞ்சுடுச்சு. பேர்ணாம்பட்லேருந்து அவங்க சொந்தக்காரங்க வந்து எல்லோரையும் கூட்டிட்டு போய்ட்டாங்க.

சுமி அக்காவும் ஜூபேரும் பெங்களூருலே ஒரு மாமா வீட்டுலேயும், அப்ரார் பேர்ணாம்பட்டுலே ஒரு மாமாக்கிட்டேயும், அஸ்ராரும் உசேனும் பெங்களுருலேயே வேற மாமாவீட்டுலேயும் தங்கிக்கற மாதிரியும்- சுமி அக்காவுக்கு கல்யாணம் ஏற்பாடு செய்யப்போறதாவும் – வீடு காலி பண்ணும்போது அவங்க சொந்தக்காரங்க சொன்னதுதான். இது எல்லாமே ரெண்டு மாசத்துக்குள்ளேயே…ஹாஃப் இயர்லி லீவு – ஆன்ட்டி இறந்த நாப்பது நாளு முடிஞ்சு ஒரு வாரம் – அங்கிள் இறந்து நாப்பது நாளும் முடிஞ்சது. அப்புறம் ஒரு ரெண்டு வாரம் கழிச்சு, நானியும் பேர்ணாம்பட்டேலேயே மௌத் ஆகிட்டதாச் சொன்னாங்க! ஆனா, யாரும் போகல..யாரையும் பாக்கிற மனவலிமை யாருக்கும் இல்லைன்னுதான் நினைக்கிறேன். ஆனா எல்லோரும் பேசி பேசி மாஞ்சு போறாங்க..

ரொம்பநாளைக்கு எங்க எதிர்வீடு பூட்டியிருந்தது…ஒன்றரை வருஷத்துக்கும் மேலே! அதுவும் ரொம்ப உயிரோட்டமா இருந்த எங்க ப்ளாக் ஃப்ரீஜாகி இருந்தது, கொஞ்ச நாள். ஆனுவல் லீவ் அப்போ சுமி அக்கா கல்யாணம் ஆகி எங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க, ஒரு சாயங்கால நேரம். டீ குடிச்சுட்டு கொஞ்சநேரம் பேசிக்கிட்டு இருந்துட்டு கிளம்பினாங்க. ‘சுமி கிடைச்சது என்னோட லக்’-ன்னு அந்த அண்ணா சொன்னாங்கன்னு அப்புறமா எங்க ஆயா, சாந்தா அத்தைக்கிட்டே பேசுக்கிட்டிருந்தது காதுலே விழுந்துச்சு.

நானும் காலேஜ்க்கு ஹாஸ்டல் போய்ட்டேன். லீவுக்கு வந்தப்போ அப்ரார் வந்திருந்தான் வீட்டுக்கு. பாலிடெக்னிக் முடிச்சுட்டு துபாய் போகப்போறதா சொன்னான். உசேன் எங்க ஊருலே ஒருக்கற மதரஸாலே சேரப்போறதாவும், அஸ்ரார் கோடம்பாக்கத்துலே ஒரு டான்ஸரை லவ் மேரேஜ் செஞ்சுக்கிட்டதாவும் சுமி அக்காவுக்கு ரெண்டு குழந்தைகள் இருக்கறதாவும் சொன்னான். உசேன் மட்டும் அப்போப்போ லீவுக்கு எங்க வீட்டுக்கு வருவான், ஒரு நாள்தான் லீவ் போல. ஆனா நாங்கதான்(நானும், குட்டியும்) ஹாஸ்டலுக்குப் போய்ட்டோமே..பெரிம்மாவும், ஆயாவும்தானே..கொஞ்ச நேரம் டீவி பார்த்துட்டு, தூங்கிட்டு, சாப்பிட்டு காசு வாங்கிட்டு போவான்னு சொன்னாங்க.

டில்லி டூருக்குப் போய்ட்டு வந்து அவங்க சொன்ன கதைங்க, அவங்க எனக்குக் கொடுத்த ஒரு மஞ்சள் கலர் கம்மல்,நான் அரேபியன் நைட்ஸ் படிச்சுட்டு, சுமி அக்கா சொல்ற கதைகளோட கற்பனை செஞ்சுக்கிட்டது – எல்லோரும் கண்ணாமுச்சு விளையாடறோம்னு அவங்க வீட்டுக் கட்டிலுக்கு அடிலே ஒளிஞ்சுகிட்டது – அவங்க எல்லோரும் வீட்டைக் காலி செஞ்சுட்டு போனதும் சூழ்ந்த வெறுமை-ன்னு இந்த எதிர்வீட்டு நினைவுகள் அத்தியாயம் இல்லாம என்னோட பால்யக்காலம் முழுமையாகாது! ஜாலியாத்தான் இந்த இடுகையை ஆரம்பிச்சேன்….நினைவுகளிலேருந்து தப்பிக்க முடியலை – எழுதினப்பறம்தான் தெரிஞ்சது. என்னோட பதினோரு வயசுக்கே நான் பயணிச்சு, அப்போ பார்த்ததையெல்லாம், கேட்டதையெல்லாம் கொட்டிட்டேன்னு!!

உபரிக்குறிப்பு : காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் லீவுக்குப் போனப்போ, ‘பூஜாக்குக் கொடுங்க’ன்னு எங்க பெரிம்மா பூரி கொடுக்கறதும், ‘கோங்குரா அரைச்சேன், டீச்சர்’ன்னு எதிர்வீட்டு ஆன்ட்டி கொடுக்கறதுமா இருந்துச்சு! ‘இதுக்குத்தான் யார்க்கிட்டேயும் க்ளோசா இருக்கக் கூடாதுன்னு, இனிமே’ ன்னு, சுமி அக்காவீடு காலியா இருக்கற பார்த்துட்டு பெரிம்மா, ஆயாக்கிட்டே சொன்னது ஏனோ நினைவுக்கு வந்துச்சு!

Add a comment ஓகஸ்ட் 6, 2009

இ ஃபார்…

…இடுப்பு!! இ ஃபார் இந்தநாள் இனியநாள் என்று எழுத நினைத்திருந்தேன். Golda அக்கா எனக்கு இ ஃபார் இடுப்பு எனற தலைப்பை பரிந்துரைத்திருந்தார்கள். நன்றி அக்கா! இடுப்பு பத்தி நான் எதுவுமே சொல்ல வேண்டியதில்லை. அதான் சினிமாவே அதன் உபயோகங்களையெல்லாம் கோனார் நோட்ஸ் போட்டு சொல்லிக் கொடுத்து விடுகிறதே!! சினிமாவில் இடுப்பை வெளிப்படுத்த எந்த அளவிற்கு ஹீரோயின்கள் ஊக்கப்படுத்தப்படுகிறார்களோ, அதற்கு நேர்மாறான வீட்டில் பெண்கள் இடுப்புத் தெரியுமாறு உடை உடுத்துவது தடை செய்யப்பட்ட விஷயம்! (பின்ன என்னங்க, ஐந்து வயசுலே ஜோதிகா ட்ரெஸ்-ன்னு பாவாடைக்கும் பிளவுஸ்-க்கும் இடையிலே கேப் விட்டு போட்டு அழகு பார்ப்பார்கள், அதையே
வளர்ந்தப்புறம் அவங்க போட்டா திட்டுறது..எப்படி ஜீன்ஸ் இடுப்புத் தெரியறமாதிரி போட்டுக்கிட்டு போறாங்கன்னு!!)

அதை விடுங்க, நான் சொல்ல வந்ததைவிட்டு எங்கேயோ போகிறேன்! எங்க பள்ளிக்கூடம், இருபாலருக்குமானது. அதுவுமில்லாமல் எங்கள் ஊர் ஒரு சிற்றூர்.. எட்டாவது ஒன்பதாவதுதான் படித்துக்கொண்டிருப்போம். நமது வகுப்பிலிருக்கும் ஒரு சில பெண்களிடம் மட்டும் தனியாக ஆசிரியர் பேசுவார். அடுத்தடுத்த வாரங்களில் அந்தக் குறிப்பிட்ட பெண்
தாவணியில் வருவார். உடனே எங்களுக்குத் தெரிந்து விடும்…சரி, நம்மிடம் பேசினாலே டேஞ்சர் என்று! பலருக்கும் தாவணி பிடிக்கும், ஆனால் அணிகின்ற பெண்களுக்கு நிச்சயமாகப் பிடிக்காது! அவ்வளவு ஏன், நிறைய ஆண்கள், பெண்கள் தாவணி போட்டுக்கிட்டிருந்தா பிடிக்கும் என்றுச் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், தாவணி அணிந்தவர்களுக்கேத் தெரியும் அதிலுள்ள சங்கடங்கள்! அதுவும் 13/14 வயது சிறுமிகளை தாவணியில் கட்டிப்போட்டால்…!! பொதுவாக பதினொன்றாம் வகுப்பிலிருந்து எங்கள் பள்ளியில் தாவணி அணிய வேண்டுமென்பது சட்டமாக இருந்தது!நானும் என் தோழிகளும் மிகுந்த மன அவஸ்தைக்குள்ளகினோம். சொல்லில் புரிய வைக்க முடியுமாவெனத் தெரியவில்லை. ஜாலியாக சல்வாரும் மிடியும் அணிந்துக் கொண்டு வந்த இடத்திற்கு, அடுத்த ஒரு மாதத்திலிருந்து தாவணியில் வரவேண்டுமென்பது ஒரு மாதிரி இனங்காண முடியாத தயக்க உணர்வாக இருந்தது! பள்ளி நிர்வாகம் இதை உணர்ந்ததாவென்பது சந்தேகமே!

அன்று காலை பள்ளிக்குக் கிளம்ப வேண்டும். கட்டவும் தெரியாது, தெரியாதென்பதைவிட பிடிக்காதென்பதே பொருத்தமாக இருக்கும். இயலாமையும் ஆற்றாமையும் சேர்ந்து வர அழுகை எட்டிபார்த்தது. பெரிம்மாதான் எனக்குக் கட்டி விட்டார்கள். அதுவும் தாவணி கட்டும்போது, பாவாடையில் ஒரு V ஷேப் வரவேண்டும். ஆனால் பெரிம்மா கட்டிவிட்டதோ அந்தக்காலத்து ஸ்டைல்!! அதுவேறு பிடிக்கவில்லை. இடுப்புத் தெரிவதுபோன்ற ஃபீலிங்! பிடிக்கவேயில்லை. நானாகவே ஏதோ V வருவதுபோல சுற்றிக் கொண்டு, பதினோரு ஊக்குகளை அங்கங்கே இழுத்துபிடித்து போட்டுக்கொண்டு ஒருவழியாக வகுப்பிற்குப் போய் சேர்ந்தேன்! அங்கே ஷபீனா, ரேணுகா, அனு, கவிதா, ஹேமா என்று எல்லோரும் அதே மாதிரி வந்திருந்தார்கள். எல்லோர் கண்களும் (அழுது) சிவந்திருந்தன அல்லது வீங்கியிருந்தன. அவர்கள் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ள முடிந்தது! பின்னர் ஒருமாதத்தில் பழகிவிட்டது..எங்களுக்குள் தனிப்பட்ட கிண்டல்கள் தவிர!

ஆனால் தாவணிபோட்டுக்கொண்டு சைக்கிள் ஓட்டுவது மிகப் பெரிய அபாயம். அதுவும் காலையில் ஒரு ட்யூஷன், மாலையில் ஒரு ட்யூஷன் என்று செல்லவேண்டிய செட் நாங்கள்! நாங்கள் பனிரெண்டாம் வகுப்பு வரும்போது அந்தச் சட்டத்தை எடுத்துவிட்டார்கள், பள்ளிநிர்வாகத்தினர். பாவாடை, சைக்கிளில் மாட்டி எங்கள் பள்ளியைச் சார்ந்த ஒரு பெண் ரோடில் விழுந்து பின்னால் வந்த வண்டி அவள் மீதேறி விபத்துக்குள்ளானதேக் காரணம்! தாவணி அணிந்தப் பெண்கள் சிரிப்பது சினிமாவிலும் நாடகங்களிலும்தான்! பள்ளிச் செல்லும் பெண்களுக்கு அது மற்றுமொரு அசௌகரியமே!!

ஆனந்த விகடனின்(லேட்டஸ்ட் இஷ்யூ) கடைசி பக்கங்களில் வழக்கறிஞர் அருள்மொழி மிக அருமையாக சொல்லியிருந்தார் – இன்று பெண்கள் உடுக்கும் எல்லா உடைகளுமே ஆண்களால் வடிவமைக்கப்பட்டவையே! பெண்களை நுகர்வு பண்டமாக பார்க்கும் போக்கிலிருந்து ஆண் குழந்தைகளை இன்றைய பெற்றோர்கள் மீட்க வேண்டுமென்று!! அவரவர் உடை அவரவர் உரிமை!

Add a comment ஜூன் 23, 2009

ஆ ஃபார்…

ஆச்சி…வீட்டில் எனது செல்லப் பெயர்! ஐந்தாம் வகுப்பு வரை பள்ளியில் இந்தப் பெயரில் என்னை யாரும் அழைத்திருக்க வில்லை.ஆனால் மேனிலைப் பள்ளியில் ஆச்சி என்றுதான் பலரும் அறிவர். பெரும்பாலான ஆசிரியர்கள எனது சின்னவயதிலிருந்து அறிந்ததால் இருக்கலாம். ஆனால் வகுப்பறையில் முல்லைதான்! ஆச்சி என்ற இந்தப் பெயர் சிறியவயதில் ஒரு தொல்லையாகவே இருந்தது. அப்போதெல்லாம் திட்டுவதற்கு பெரிதாக ஒன்றும் தெரியாதே..பெயரை வைத்துத் தானே திட்டுவோம்!! விஜி பஜ்ஜி, புகழேந்தி..புழு, ராஜா கூஜா, பிரேமா கிரேமா..இப்படி அர்த்தமிருக்கிறதோ இல்லையோ, டீ ஆர் பாணியில் !!அதில் ”ஆச்சி..பூச்சி”யாக்கப்பட்டுவிடும் வெகு எளிதில்!!

கல்லூரியில் எல்லோருக்கும் தெரிந்து இருக்காது, ஆனால் நமக்கென்று இருக்கும் ஒரு க்ளோஸ்ட் க்ரூப் மட்டும் அறிந்திருக்கும்..ஆனால் ஒரு சில நேரங்களில்தான் இந்தப் பெயர் உபயோகத்துக்கு வரும்.புதிதாகக் கேள்விப்படுபவர்களுக்கு பெயர் விளக்கம் சொல்லனும். தானாகத் தெரியாது, ப்ரெண்ட்சை வீட்டுக் அழைத்துவரும்போது தெரிந்துவிடும்!!
கல்லூரித் தோழிகள் வீட்டுக்கு வந்தால் அப்படியே மாறி விடுவார்கள், நமதுக் குடும்பத்தில் ஒருவரைப் போலவே! ஆச்சியென்றே அழைப்பது, நாம் யாரை என்ன உறவு வைத்துக் கூப்பிடுகிறோமோ அவ்வாறே அவர்களும் அழைப்பது!! கொஞ்சம் ஓவராத் தான் இருக்கும்! எல்லாம ரொம்ப பவ்யமாக இருப்பதுபோல சீனுக்காகத் தான்! அதில், லதா கொஞ்சம் அதிகமாகப் போய், பெரிம்மா காலில் வேறு விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள்! (அசத்துவதாக நினைத்து செய்தாள் என்று நினைக்கிறேன்!அதுவுமில்லாம கால்ல விழுந்தா கண்டிப்பா காசுக் கொடுப்பாங்க வேற!) ஆனால் பெரிம்மா, ”கால்ல விழுந்தாத்தான் எங்க ஆசீர்வாதம்னு இல்லம்மா, எப்போவும் உங்களுக்கு எங்க ஆசீர்வாதம் இருக்கும்னு ”சொல்லிட்டாங்க! (ஹிஹி..நோ காசு!)அதுவும் இல்லாம க்ளோஸ் ப்ரெண்ட்சை நம்ம வீட்டுக்கு கூப்பிட்டு வர்றது பெரிய சந்தோஷம். ஒரு தடவை கூப்பிட்டுப் போனா போதும், எல்லா லெட்டர்லேயும் இவங்களை அவங்க நலம் விசாரிப்பாங்க,அவங்க இவங்களை நலம் விசாரிப்பாங்க, நமக்கு நாம யாரோட குடும்பம்னு ஒரு குழப்பமே வந்துடும்! நமக்கு வர்ற போன்கால்ல இவங்க வந்து ரெண்டு வார்த்தை வேற பேசிட்டு போவாங்க!! நமக்கும் அவங்க வீட்டுலேர்ந்து இதே கவனிப்புதான்! இப்படி ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு போறேன்னுதான் திண்டுக்கல், உடுமலைப்பேடை,ராமேஸ்வரம், கோயமுத்தூர்ன்னு சுத்தினதெல்லாம்! இப்போவும் அதேமாதிரி விட்டேத்தியா சுத்தறதுக்கு ஆசைதான்! ஹ்ம்ம்….ப்ரெண்ட்ஸ் வீடெல்லாம் இருந்தாலும் வீட்டுலே யாரும் இல்ல!!

அ ஃபார் ….

Add a comment மே 22, 2009

அ ஃபார் ….


ஃபார் அவ்வ்வ்வ்வ்!

அவ்வ்வ்வ் என்பது பின்னூட்டங்களிலும், பதிவுகளிலும் என்னால் தவிர்க்க முடியாததாகிவிட்டது!
🙂 ஆனால், அது என்னைப் பொறுத்த வரை அழுவது மாதிரி மட்டுமல்ல! அதிர்ச்சி அல்லது
ஜெர்க்கான ப்லீங்சை பிரதிபலிக்கவும்தான்! இன்று நான் சந்தித்த சில அவ்வ்வ்வ் தருணங்கள்!

தருணம் 1 :

காலையில் எழுந்தவுடனே பப்பு கதை சொல்லு என்றாள், பக்கத்திலிருந்த புத்தகத்தை எடுத்து!

உனக்கேத் தெரியுமே, நீ சொல்லு பப்பு!

நாளைக்கு நீ சொன்னது, எனக்கு ஞாபகம் இல்ல! இன்னொரு வாட்டி சொல்லு!

அவ்வ்வ்வ்!

தருணம் 2 :

தற்போது வீட்டு வேலைக்கு உதவியாயிருந்த ஷோபனா அக்காவும் நின்றுவிட திரும்பவும் ஆள் தேடும் வேட்டை. இன்று காலை ஒரு ஆயா வந்திருந்தார்கள்.மேல்வேலைகளுக்கு மட்டும்.
பாத்திரம் கழுவிக்கொண்டு இருந்தார்கள்.

சமையல் செய்வீங்களா?

ம்ம்..செய்வேன்மா, அங்க இருந்தேன்ல, ரெண்டு நாய்ங்களுக்கு நாந்தான் சாப்பாடு செய்வேன்!
சாப்பாடு வைப்பேன்!!

அவ்வ்வ்வ்வ்வ்!

முன்பு வேலை செய்த இடத்தில் இரு நாய்க்குட்டிகளை கவனித்துக் கொண்டார்களாம்,அந்த நாய்க்குட்டிகளுக்கு் சாப்பாடு செய்ததைத் தான் அப்படி சொல்லியிருக்கிறார்கள்! I dropped the idea!

அ ஃபார் …

இது புதிதாக தோன்றிய ஐடியா,பப்புவிடமிருந்துதான்! அவள் எதற்கோ அப்படி சொல்லப் போக என்னையும் தொத்திக்கொண்டது. அ, ஆ, இ, ஈ என்று தொடங்கும் எழுத்துகளில் தோன்றுவதைப் பதிவிடலாமென்று. தினமும் போடுவேனென்று சொல்ல முடியாது, ஆனால் இந்த சீரிஸை தொடர்வேன்!

Add a comment ஏப்ரல் 20, 2009

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

ஜனவரி 2019
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Posts by Month

Posts by Category