Posts filed under: ‘ஆகாயநதி‘
சம்மர் கேர் நம்ம குட்டீஸ்கு

இந்த கொளுத்தும் கோடை பெரியவர்களான நமக்கே தாங்க முடிவதில்லை 😦
பாவம் பிஞ்சுக் குழந்தைகள்! அவர்களின் சூடு பிரச்சனைகளை சொல்லவும் தெரியாமல், அவஸ்தையை பொறுக்கவும் முடியாமல் அழும் போது நமக்கும் வேதனை தானே? 😦 நீர் கடுப்பு, மலச் சிக்கல்(அ) வயிற்றுப் போக்கு, வயிற்று வலி, உடல் எரிச்சல் போன்றவை அதிக வெப்பத்தால் குழந்தைகளையும் தாக்கும். மேலும் இந்த விளையாட்டு அம்மை நோய் தடுப்பும் அவசியம்.

இன்று பொழிலனுக்கு தடுப்பூசி போடுவதற்கு சென்ற இடத்தில் ஒரு தாய் 15 நாள் குழந்தையை வெயிலில் வைத்து அழுகையை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தார். அதுவோ மிகவும் அழுகிறது… ஊசி வலி, வெயில் கொடுமை, பசி… எப்படி அழாமல் இருக்கும். அது என்ன கொஞ்சம் பெரிய குழந்தையா வெளியில் வந்தால் வேடிக்கை பார்க்க.. இதைப் பார்த்து தான் எனக்கு இந்த பதிவு எழுதத் தோன்றியது…

எனக்கு தெரிந்த வரையிலும், மருத்துவர் மற்றும் பெரியோர் கூற்றுப்படியும் சில சூடு தணிக்கும் வழிகளைக் கூறுகிறேன். என் குழந்தையைப் போல் பிற குழந்தைகளும் பயனடைய வேண்டியே இந்த பதிவு.

0-6 மாதக் குழந்தைக்கு:

இவர்களுக்கு தாய்ப்பால் மட்டுமே உணவு; அதனால் பால் கொடுக்கும் தாய்மார்கள் கீழ்காணும் ஆகாரங்களை எடுத்துக் கொள்வது நல்லது. மற்றபடி தாய்ப்பாலை மதிய வேளையிலும் இரவு படுக்கும் போதும் குழந்தையின் தொப்புள், உச்சி தலை, உள்ளங்காலில் ஒரு சொட்டு வீதம் தடவிவிடுதல் சூட்டைத் தணிக்கும்.

தயவு செய்து சிக்கன் உண்பதைத் தவிர்க்கலாமே! 🙂

இளநீர்

மோர்

வெந்தய களி( கடும் கோடையில் கண்டிப்பாக இதனால் சளி பிடிக்காது)

சாத்துகுடி ஜூஸ்

மாதுளை ஜூஸ்

வெறும் வயிற்றில் வெந்தயம் முழுங்கலாம்

இவற்றில் தினம் ஏதேனும் ஒன்று எடுத்துக்கொண்டாலே போதும். மேலும் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

6 மாதம் முதல் 1வயது வரை:

இளநீர் 100மிலி வரை கொடுக்கலாம்

சாத்துகுடி ஜூஸ் வெண்ணீரில் கலந்தது

ஆரஞ்சு ஜூஸ் வெண்ணீரில் கலந்தது

அதிகம் புளிக்காத மோர் வெண்ணீரில் கலந்தது

மோர் சாதம்

கொதிக்க வைத்து ஆர வைத்த தண்ணீர் அதிகம் குடிக்கவைக்க வேண்டும்

வெள்ளரி பழம் சிறிது சர்க்கரை சேர்த்துக் கொடுக்கலாம்

இவர்களுக்கு அடி வயிறு தொப்புள் மற்றும் உள்ளங்காலுக்கு தாய்ப்பாலினை தடவி விடலாம்.

இப்படி செய்தாலே வெயிலினால் ஏற்படும் வெப்பத்தின் தாக்கத்தைக் குறைத்து குட்டிகளின் உடலை குளிர்ச்சியாக பராமரிக்கலாம்.

வாரம் இரு முறை தலைக்கு ஊற்றலாம்…ஆனால் அதிகம் வெயில் மற்றும் வியர்வை இல்லாத சமயம் குளிப்பாட்டலாம்.

எனக்கு தெரிந்த அளவு உங்களோடு பகிர்ந்துவிட்டேன். இன்னும் ஏதாவது வழிகள் இருப்பின் பின்னூட்டத்தில் கூறி அனைவருக்கும் உதவுங்கள்!

Advertisements

17 பின்னூட்டங்கள் மே 6, 2009

ஈன்ற பொழுதில் பெரிதுவத்தல் – 3

நான் என் தாய்மையை உச்சக்கட்ட உணர்வாக உணர்ந்த அந்த நிமிடங்களை இங்கே பதிவு செய்துள்ளேன்! இது தாயாகப் போகிற தாய்மார்களுக்கு பயனளிக்கும் தைரியம் அளிக்கும் என்று நம்புகிறேன். மொக்கையாக இருந்தாலும்… மன்னித்து என் தாய்மைக்கு, என் குழந்தைக்கு உங்கள் வாழ்த்துகளையும் ஆசிர்வாதங்களையும் அளியுங்கள்! 🙂 அன்னையர் தின ஸ்பெஷல் என்பதால் பொழிலன் பிறந்த தருணத்தை மட்டும் இங்கே எழுதியுள்ளேன். மற்றவை என் வலைப்பூவில் 🙂 இங்கே தொடுப்பு கொடுத்துள்ளேன்.

ஈன்ற பொழுதில் பெரிதுவத்தல்(பிரசவ அனுபவம்) – 1

ஈன்ற பொழுதில் பெரிதுவத்தல்( ஆபரேஷன் தியேட்டரில்) – 2

என் குழந்தை இந்த உலகத்தைக் காணும் பொன்னேரத்திற்காக நான் கடவுளை வேண்டத் துவங்கினேன். “கடவுளே அது பிறக்கும் இந்த நேரம் நல்ல நேரமாக, என் குழந்தை நல்ல படியாக பிறக்க வேண்டும்… எந்த குறையும் இன்றி ஆரோக்கியமான குழந்தையாக பிறந்து இறுதி வரை அப்படியே ஆரோக்கியத்துடன் இருக்க அருள் பண்ணிடேன்!” இப்படியெல்லாம் என்னன்னவோ தத்துபித்துனு சாமிக்கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன்.

ஆஹா! வயிற்று மேலே சில கைகள்! இங்க தான் சிஸ்டர்… நல்லா பிடிச்சிக்கோங்க… அப்படி இப்படினு ஏதோ பேசிக்கிட்டாங்க… நான் தலையை அப்படி இப்படி அசைத்து கண் துணி ஓரளவு விலகி எனக்கு தெரியும் படி செய்தேன். 🙂 என் வயிறு தான் தெரிந்தது. அப்புறம் ஒரு கோடுதாங்க போட்டாங்க வயித்துல…. குபுக் குபுக்னு தண்ணீர் கொட்டுச்சு! அடக் கடவுளே இவ்வளவு தண்ணீர் இருக்கேனு நினைச்சேன்… பின்ன ஏன் தண்ணீ இல்லனு சொன்னாங்கனு யோசிக்கும் போதே… டாக்டர் ஃபுல் கட்டிங் முடிச்சாச்சு போல… 🙂 நல்லா இழுங்க.. பார்த்து ஜாக்கிரதைனு சொல்ல இரு கைகள் என் மேல் வயிற்றை மார்பு நோக்கி இழுத்தது பார்க்க முடிந்தது.. சரியா உணர முடியல…

ஆஹா! ஆஹா1 ஆஹா! என்ன சொல்ல எப்படி சொல்ல… அந்த ச்ங்கீதம்… வாழ்க்கையில மறக்க முடியாத இனிமையான சங்கீதம்…. “ங்கா ங்கா ங்கா”னு என் தங்கம், செல்லம், குட்டிமா சத்ததோட வந்துச்சு! 🙂 🙂 🙂

இதை எழுதும் போதே கண்ணுல கண்ணீர் கன்னத்துல ஓடுதுங்க! அவ்வளவு சந்தோஷம்… 🙂 ஆனந்த கண்ணீர் இப்போ. அப்பனா அப்போ எப்படி இருந்திருக்கும் எனக்கு… என் உலகமே என் கைக்கு வரப் போகுது!

ஆனால் அந்த இரு கைகள் என் வயிற்றை இழுத்துபிடித்த படியே இருந்ததால அப்போ குட்டிமாவ பார்க்க முடியல.:(

நான் இந்த உலகத்துக்கு வந்த காரணம் புரிஞ்சாச்சு! என் பிறப்பின் அர்த்தம்… எங்கள் காதலின் கல்யாண பரிசு… குட்டியான அழகான பூ… இப்படி என்னனமோ நினைச்சு எப்படா பார்ப்போம்னு இருக்கையில, குழந்தையை சுத்தம் பண்ணி திரும்ப கொண்டு வந்தாங்க… அப்போ குழந்தை அழுகை இல்ல… எனக்கு என் வயிற்றில் தையல் போடுவது தெரிந்தது! பிறகு சில நிமிடங்கள் கண் அயர்ந்தது போல இருந்தேன்… அதற்குள் ஐயோ குழந்தையை நான் தான் முதலில் பார்க்கனும்னு கண் திறந்தா என் வயிற்றை துடைச்சிக்கிட்டு இருந்தாங்க… எல்லாம் முடிந்தாச்சு போல 🙂

கண் கட்டை கழட்டினாங்க… இப்போ எல்லா பக்கமும் பார்க்க முடிந்தது… நான் என் குழந்தையை தேடினேன்… 😦 காணோம்… பிறகு அந்த மயக்க மருந்து டாக்டர் வந்து இவங்க கிட்ட குழந்தைய காட்டலாம இல்லனா இவங்கள தூங்க வைக்கலாமானு என் டாக்டர் கிட்ட கேட்டாரு 😦 அடப்பாவி என்ன குழந்தைனும் சொல்லாம, கண்ணுலயும் காட்டாம… என்னயா கேள்வி இதுனு நினைச்சுக்கிட்டு ” குழந்தை எங்கே?” கேட்டேவிட்டேன். 🙂 அங்க தான் ஒரு குட்டி அறைல இருந்தது பாப்பா…

தூக்கிட்டு வந்தாங்க…. உங்களுக்கு பையன் அப்படினு சொன்னாரு.. ஆஹா! ஆஹா! எனக்கு குழந்தையா? இதுவா என் வயிற்றுல இவ்வளவு நாள இருந்தது? thank god… எப்படி அழகு… மொத்த அழகும் இங்க இல்ல இருக்கு… கடவுளே நேரில் வந்துட்டாரோ? ஆனால் இது ரோஜாப் பூ மாதிரியே இருக்கே… அதே இளஞ்சிவப்பு ரோஜா நிறம்… கண்ணை இருக்க மூடி கைகள மூடி… அழகா! எவ்வளவு அழகு? எப்படி தூங்குது… எனக்கு பேச்சே வரல… அவ்வளவு சந்தோஷம்… கண்களில் கண்ணீர் பொங்கி வழியுது அப்ப… கண்ணாலயேவும் கை ஆட்டியும் கிட்ட வர சொல்லி சைகை காண்பிச்சேன் 🙂

என் பக்கத்துல வந்து குழந்தையைக் காண்பிச்சாங்க…:) தொட்டேன் மெதுவா… ஆஹா! எவ்வளவு மிருதுவா… என்னால முடியல… “thank god” னு மட்டும் வாயிலிருந்து தானா வந்தது. அப்புறம் ரோஜாப்பூ மாதிரியே இருக்குலனு சொன்னேன். அந்த டாக்டர் சிரித்தார். 🙂 அப்புறம் டாக்டர் என்னிடம் உங்க வீட்டுல எல்லார்கிட்டயும் காட்டனும் அதுனால குழந்தையை தூக்கிட்டுபோறோம்னு சொல்லிட்டு கொண்டு போயிட்டாரு!

அப்பாடா ஒரு வழியா குட்டிமா வந்தாச்சு! ஆனால் அவனைப் பார்க்கும் போது என் அப்பா, அம்மா, கணவர், மாமா, அத்தை இவங்க முகம் விரிந்து சிரிக்கும் அந்த காட்சியை பார்க்கமுடியல!

எனக்கு என் கணவரை உடனே பார்க்கனும் போல இருந்தது. ஆனால் அதற்குள் அந்த தியேட்டர் குரூப் எந்த அறிவிப்பும் இல்லாம என்ன தனி அறைக்கு கூட்டிட்டு போயிட்டாங்க. அதற்குள் ஆண்கள் அனுமதி இல்லயாம். 😦 அம்மா, சித்தி, அத்தை எல்லாம் வந்து பார்த்தாங்க.

குட்டிமா உள்ள மஞ்சள் லைட் கீழே விளையாடிட்டு இருந்ததது! இளம் வயது சிஸ்டர்கள் பார்த்து ” எவ்வளவு அழகு! சேட்டை! உன்னை நானே கட்டிக்கிறேன்… ” அப்படி இப்படினு அப்பவே ஒரே போட்டி! பெண்கள் பட்டாளம் புடை சூழ என் தங்கம் தங்க நிற வெளிச்சத்துக்குக் கீழே ஜொலிச்சது! 🙂

கடவுளுக்கு நன்றி சொல்லிக்கிட்டே இருந்தேன்… இன்னமும் சொல்லிக்கிட்டே இருக்கேன்! 🙂
இப்படி ஒரு சந்தோஷம் என் வாழ்க்கையில வேறு எந்த சந்தோஷத்துலயும் அனுபவித்ததே இல்லை… 🙂

தாய்மையை உணர்ந்தேன்! அனுபவித்தேன்! மெதுவா என் கை தூக்கி குழந்தையை லேசா தொட்டேன். குழந்தைக்கு பால் கொடுக்க என் அத்தை உதவினார். அம்மா! அப்போ பொங்கின தாய்மை உணர்ச்சிய எப்படி சொல்ல… வார்த்தையே கிடையாதுங்க! எனக்கு ஒரே ஆச்சரியம்… ” இப்போதானே கண்ணு வந்த… அதுக்குள்ள உனக்கு சாமி பால் குடிக்க கத்துக்கொடுத்தாட்டாரானு ” கேட்டேன்… 🙂 குழந்தையோட ஸ்பரிசம், கூடான அதோட கை… அப்பப்பா என்ன ஒரு சந்தோஷம்… இப்ப நினைச்சாலும் என் குழந்தை பிறந்த அந்த தருணம் புல்லரிக்குது! கண்ணீர் பொங்குது! தாய்மை எப்படிப்பட்ட உணர்வு! புனிதமானது!

வாய்ப்பளித்த முல்லைக்கு நன்றி! 🙂

10 பின்னூட்டங்கள் மே 3, 2009

குழந்தை வளர்ப்பும்… பெற்றோர் பொறுப்பும்…!

இந்த பதிவினை குழந்தைகளின் எதிர்காலத்தினை தீர்மானிக்கும் செயல்கள் பற்றிய பதிவாகவும்,
அவர்கள் எதிர்காலம் பற்றிய பதிவாகவும் நினைத்துக் கொண்டு நான் துவங்குகிறேன்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஒரே பையன், ஒரே பெண் என்று செல்லம் அதிகமாகக் கொடுத்தே வளர்க்கிறார்கள். செல்லம் கொடுப்பது தவறல்ல; ஆனால் அதோடு பொறுப்பு, தன்னிச்சையாக தன் காரியங்களை செய்து கொள்ளுதல், பிறருக்குக் கேட்காமலேயே சென்று உதவுதல் போன்ற நல்ல பழக்கங்களை கற்றுத்தருவதோடு சிறு சிறு வீட்டு வேலை முதல் சமையல், துணி துவத்தல் என அனைத்து வேலைகளையும் செய்யப் பழக்குதல் அவசியம்.

இந்த காலத்தில் ஆண்(அ)பெண் எந்த குழந்தையானாலும் எல்லா வேலைகளையும் செய்யப் பழகியிருத்தல் மிகவும் அவசியம் என்பதைப் பெற்றோர்கள் உணர வேண்டும்.

நான் என் வயதையொத்த, என்னுடன் பழகிய, என்னுடன் படித்த என்று பல பெண்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு இன்னமும் அம்மா தான் தலை வாரி விட்டு உணவு ஊட்டிவிட்டு என அனைத்துமே அம்மா தான் செய்ய வேண்டும். தன் பெண்ணிற்கு பொறுப்பினை ஊட்டாமல் உணவு ஊட்டும் தாய் அங்கு அவரை அறியாமலேயே அவர் பெண்ணின் எதிர்காலத்தினை பாதிக்கும்படி செய்கிறார்.

இவ்வளவு ஏன் திருமணம் ஆன பிறகும் கூட பல பெண்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்!
பெண்கள் எதிர்காலத்தில் ஒரு குடும்பத்தினையே தாங்கி நிற்கும் தூண்கள்; குடும்பத்தினர் அனவருக்கும் தாயாக இருந்து தேவையானதை செய்யும் மிகப் பெரிய பொறுப்பு பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் உள்ளது. ஆனால் தன் காரியங்களை செய்யவே தாயை எதிர்பார்க்கும் பெண் எப்படி வெளி உலகையும் சமாளித்து ஒரு குடும்பத்தினை தாங்கி நிற்கும் தூணாவள்.

ஆணுக்கும் இதே தான். தன் காரியங்களை தானே செய்து கொள்ள பெற்றோர் குழந்தை பருவம் முதலே பழக்கி விட வேண்டும். குழந்தைகள் எல்லாவற்றிற்கும் அம்மாவை எதிர்பார்க்காமல் பள்ளி செல்லும் பருவம் முதல் சிறிது சிறிதாக தன்னிச்சையாக தன் வேலைகளை செய்து கொள்ள வேண்டும். அதை விடுத்து செல்ல மகன் என்று ஷூ பாலிஷ் செய்வது, டை அணிவிப்பதில் இருந்து தலை வாரி ஷூ மாட்டிவிடுவது வரை அம்மாவே எல்லாம் செய்தால் அந்த மகனுக்கு பொறுப்பு என்பது வராமலே போய்விடும்.

குழந்தைகளை இளம் வயது முதலே பொறுப்புள்ளவர்களாக இருக்கப் பழக்கிவிடுவது பெற்றோர்களின் முதற்கடமை. இன்றும் 2வயது மகனுக்கு வெளியில் வைத்து இடுப்பில் தூக்கிக் கொண்டே சாப்பாடு ஊட்டும் தாய்மார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்! அவர்களுக்காகத் தான் இந்தப் பதிவு.

குழந்தைப் பருவத்திலேயே தன் விளையாட்டு சாமான்களைப் பொறுப்புடன் அதன் இடத்தில் அடுக்கி வைப்பது, தன் துணிகளை தானே மடிக்கக் கற்றுத் தருவது, முக்கியமாக 1வயது முதலே குழந்தைகள் தானே தன் கையால் உணவு உண்ணப் பழக்கிவிடுவது, தானே குளிப்பது, உடையணிந்து கொள்வது முதல் , ஒற்றுமை, விட்டுக்கொடுத்தல், அன்பாக பழகுதல், மரியாதை என அனைத்தையும் சிறு வயதிலேயே பழக்கிவிடுவது நல்லது. வீட்டுப்பாடங்கள் மற்றும் வரைபடங்கள் கூட அவர்கள் தன்னிச்சையாக செய்ய வேண்டும்.

பேரண்ஸ் கிளப் வலைப்பூவில் எப்படி குழந்தைகளை மாண்டிசோரி கல்வி மூலம் எல்லா வேலைகளையும் செய்யப் பழக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது பெற்றோர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்று எண்ணுகிறேன் 🙂

அதுமட்டுமல்லாமல் நடைமுறையிலும் இதனை தீஷூ நிகழ்த்திக் காட்டுகின்றார். இந்த வலைப்பூவை படித்ததும் அசந்துவிட்டேன். நன்றி தீஷு அம்மாவிற்கும் :)எல்லாரும் ஒரு முறை இங்கு சென்று வாங்க!

” ஓடி விளையாடு பாப்பா!….” என்னும் பாடல் வரிகள் சிறந்த குழந்தைகளை உருவாக்க உருவானவை என்றே எண்ணுகிறேன்!
குழந்தைகள் சிறப்பாக வளர்க்கப்பட்டார்களானால் சிறந்த வீடும், ஊரும், நாடும் உருவாகும்.:)

16 பின்னூட்டங்கள் ஏப்ரல் 2, 2009

குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள்

முந்தைய காலத்தில் குழந்தைகளுக்கு மரத்தினாலான விளையாட்டு பொருட்கள் கிடைத்தன. மரப்பொம்மைகள் வாயில் வைத்தால் தீங்கு விளைவிக்காது. கூர்நுனிகள் இல்லாததால் குழந்தைகளை காயப்படுத்தாது. ஆனால் அந்த பட்டியல் மிகவும் சிறியது தான். நடைவண்டி, மரப்பாச்சி பொம்மைகள், சொப்பு போன்றவை தான் குழந்தைகளுக்கு விளையாட கிடைத்திருக்கும்.

மரத்திற்கும் காகிதத்திற்கும் மாற்றாக வந்த ப்ளாஸ்டிக் குழந்தைகளுக்கான பொருட்களையும் விட்டு வைக்கவில்லை. குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் யாவும் ப்ளாஸ்டிக்கில் வர ஆரம்பித்தன. 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அவை பொருத்தமானவை. ஆனால் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு?

இப்போது பெரும்பாலான பொம்மைகள் சீனாவிலிருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. 3 வயதுக்கு மேல் என்று அட்டைப்பெட்டியில் குறிப்பு இருந்தாலும், எல்லா வயது குழந்தைகளும் தான் அதை வைத்து விளையாடுகின்றனர். மிகச் சிறிய குழந்தைகள் எதையும் வாயில் வைக்கும் பழக்கம் உடையவர்கள் என்பதால் இவ்வகை பொம்மைகள் அவர்களுக்கு கட்டாயம் தீங்கு விளைவிக்கும். அதில் பயன்படுத்தப்படும் ப்ளாஸ்டிக் கெடு விளைவிக்கலாம் என்பது ஒரு புறம், அதில் இருக்கும் சின்ன சின்ன பாகங்களும் குழந்தைகளுக்கு கட்டாயம் கேடு விளைவிக்கலாம்.

குழந்தைகள் கடித்து விளையாட ஏதேனும் வாங்கலாம் என்று முடிவு செய்து கடைக்கு சென்றால் கிடைக்கும் சில பொம்மைகளின் பட்டியல் கீழே:

*** முதலில் கிடைத்தது ‘தேன் நிப்பிள்’. வாயில் வைக்கும் ரப்பர். இது மிகச்சிறிதாக இருப்பதால் குழந்தைகளை எவ்வளவு கவரும் என்பது தெரியவில்லை

*** அடுத்து Johnson & Johnson Baby Kit உடன் வரும் Teether Set. இவை கடிப்பதற்கு ஏதுவாகவும், நச்சுத்தன்மை இல்லாதவையாகவும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

*** அப்புறம் சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட Water Teethers. ஏதோ ஒரு திரவம் அடைக்கப்பட்ட காய்கறி/பழம் வகைகளை போல வடிவமைக்கப்பட்ட பொம்மைகள். அவை மிருதுவாகவும் கடிப்பதற்கு ஏதுவாக இருக்கும் போல. ஆனால் சீனத்தயாரிப்பு என்பதால் கொஞ்சம் தயக்கம் காட்ட வேண்டியிருக்கிறது

*** வேறு Brand தயாரிப்புகள் இருக்கிறதா என்றால் FunSkool தயாரிப்புகளை காட்டினார்கள். FunSkool நிறுவணம் குழந்தைகளுக்காக ஏகப்பட்ட பொம்மைகளை தயாரிக்கிறார்கள். ஒவ்வொரு பருவத்திற்கேற்ப வெவ்வேறு பொம்மைகள். விளையாட்டு வழி கல்விக்கு பயன்படும் அழகழகான பொம்மைகள். இந்திய பொம்மைகள் எதுவும் கிடைக்காத பட்சத்தில், குழந்தைகளுக்குக்கான பொம்மைகள் என்றால் கட்டாயம் எனது வாக்கு FunSkool நிறுவணத்திற்கு தான்.

*** FunSkool பொம்மைகள் அருமையானவை என்றாலும் அவை எல்லோராலும் வாங்கப்படுவதில்லை. ஏனென்றால் விலை அதிகம். கடைக்காரரிடம் கேட்டபோதும் அவர் இதே காரணத்தை தான் சொன்னார். நான் சீனப்பொம்மைகளில் இருக்கும் நச்சுத்தன்மை குறித்து கேள்வி எழுப்பிய போது, அவர் அதெல்லாம் சொன்னாலும் இந்த பொம்மைகள் விற்பனையாகிக்கொண்டே தான் இருக்கின்றன. அந்த செய்திகள் எல்லாம் சீன வியாபாரத்தை குறைப்பதற்காக சொல்லப்படுவது என்றும் சொன்னார்.

***விலை மலிவு என்பதால் சீன பொம்மைகளை வாங்கிறோம். ஆனால் அந்த நச்சுத்தன்மை குறித்த கருத்துகள் உண்மையா இல்லையா என்று ஏன் ஆராய்வதில்லை. குறைந்தபட்சம் FunSkool பொம்மைகளில் இது Non-Toxic என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். சீன பொம்மைகளில் அது கூட இல்லையே.

ஒரு வருத்தம், எத்தனை கடைகளில் தேடினாலும் குழந்தைகளுக்கான பொருட்களிலோ, பொம்மைகளிலோ இந்திய தயாரிப்புகள் அவ்வளவாய் கிடைப்பதில்லை. (அல்லது எனக்கு தெரியவில்லை). Wipro BabySoft பால் குடிக்கும் சீசாக்கள், டயாப்பர்கள் தயாரிக்கிறார்கள். ஆனால் அவை எல்லா கடைகளிலும் கிடைப்பதில்லை. மேலும் மற்றவைகளை விட சற்று விலையும் அதிகம்.

மற்றபடி குழந்தைகளுக்கான தயாரிப்புகளை தரும் இந்திய நிறுவணம் ஏதேனும் உள்ளதா??? தெரிந்தால் சொல்லுங்களேன்

4 பின்னூட்டங்கள் ஜனவரி 26, 2009

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

ஒக்ரோபர் 2018
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Posts by Month

Posts by Category