Posts filed under: ‘அனுபவங்கள்‘
தமன்னாவின் அத்தையும், வர்ஷாவின் சபதமும்..

கடந்த புதனன்று லதாவின் திருமணத்திற்காக கோவை சென்றிருந்தேன். லதாவின் ஊர் உடுமலைபேட்டை. அங்கேதான் முதலில் என்னை வரச்சொல்லியிருந்தாள். நம்ம மயிலை சந்திக்கப் போகிற குஷியில், நான் நேராக கோவை வருவதாக சொல்லிவிட லதாவுக்கு ஒரே குழப்பம்..லதாவுக்கு தெரிந்து எனக்குக் கோவையில் தெரிந்தவர்கள் லதாவின் அக்கா குடும்பத்தினர், இன்னும் சிலர் மட்டுமே. ஆனாலும் மயிலைப் பற்றிச் எடுத்துச் சொல்லி ‘மயிலிருக்க பயமேன்’ என்று சமாதானபடுத்தியாயிற்று.

மயிலுக்கு மேனேஜராகக் கூடிய அத்தனை தகுதியும் இருக்கு!! ஆம்பூரில் ரயிலேறியதிலிருந்து கோவை நார்த் வரும்வரை, ‘இப்போ எங்கே இருக்கீங்க’ என்றும் ‘திருப்பூர் வந்ததும் எனக்கு மெசேஜ் பண்ணிடுங்க’ என்றும் ‘இருகூர் வந்தாச்சா’, ‘இப்போ கோவை நார்த் வந்திருக்கணுமே’ என்றும் டிராக் செய்துக்கொண்டிருந்தார். ரயில் நிலையத்திற்கு எதிரில் காத்துக்கொண்டிருந்தவர் என்னை கண்டுக்கொண்டதும் ஆட்டோ, பஸ் என்று எதையும் மதிக்காமல் க்ராஸ் செய்துவந்தார். அது என்னைப் பார்த்த குஷி என்று நினைத்தேன்…பிறகுதான் தெரிந்தது…மயிலுக்கு கிராஸ் செய்வது என்றால் ரிஸ்க் எடுத்து ரஸ்க் சாப்பிடுவது மாதிரி என்று!! அவ்வ்வ்!! 🙂

மயில் வீட்டில் ‘வீட்டுப்புறா’ சக்தி காத்திருந்தார். அவ்ரது பெயரை பதிவுகளில் பார்த்திருக்கிறேனே தவிர அவ்வளவாக அறிமுகம் இல்லை. பழகுவதற்கு இனியவர். ஆனால், சிறிது நேரத்தில் ‘வீட்டுக்கு போகணும், ஆத்தா வையும்’ (நன்றி : சஞ்சய்) என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார். 🙂 சிறிது நேரத்தில், சஞ்சய் வந்துவிட, திருப்பூரிலிருந்து வெயிலானும், பள்ளியிலிருந்து பப்புவும் வர்ஷாவும், பின்னர் வடகரை வேலனும் வந்துவிட வீடு களை கட்டியது. செம சுட்டிகள்!! வர்ஷாவின் அரங்கேற்றத்திற்காக அடுத்த கோவை பயணம் நிச்சயம்!! நடுவே செல்வேந்திரனையும் சந்திக்க முடிந்தது.

மறுநாள் காலை லதாவின் திருமணம் முடிந்து மயில் வீட்டிற்கே வந்துவிட ‘வீட்டுப்புறா’ சக்தியும், ‘ஊஞ்சல்’ தாரணிபிரியாவும் வந்தனர். மிகவும் கலகலப்பான சந்திப்பாக இருந்தது.நட்டுவும், அபி அம்மாவும், அபி அப்பாவும் வந்தனர். நட்டு க்யூட் + செம வாலு! நட்டு தனது அட்டகாசங்களால் சூழலை ரசிக்க வைத்தான். ‘சீசன்ஸ்’ என்ற ரெஸ்டாரண்ட்டிற்கு சென்றோம் தாரணி,சக்தி, மயில் மற்றும் நான். அரட்டையில் ஆரம்பித்து தொலைபேசி நம்பர்களை பரிமாறியபடி சந்திப்பு முடிந்தது – ரயிலுக்கு நான் செல்ல வேண்டிய நேரமும் வந்தது. ரொம்ப காலத்திற்கு முன் செல்வேந்திரன் வைத்த ஒரு போட்டியில் காலங்கடந்து கலந்துக்கொண்ட போது தருவதாக சொன்ன புத்தகத்தின் நினைவு வந்தது. புத்தகத்திற்காக செல்வேந்திரனுக்கு நன்றி! வழியிலேயே சஞ்சயிடம் ஃபோனில் விடைபெற்றுக்கொண்டேன். (தமன்னாவின் அத்தை…வ்ர்ஷாவின் திட்டம்…:)))

ரயிலேறி அமர்ந்ததும் வெயிலானிடம் தொலைபேசியில் விடைபெற்று நினைவுகளை அசைப்போட்டபடி ஆம்பூர் வந்து சேர்ந்தேன். கடந்த ஒன்றரை வருடங்களுக்குப் பின் இப்போதுதான் பப்பு தனியாக (நானும் முகிலும் இல்லாமல்) ஊரில் தங்குகிறாள். பப்பு சமாளித்துக்கொள்வாள் என்று நம்பினேன். ‘நீ போனதிலேருந்து உன்னை ஒரு தடவைக் கூட கேக்கவேயில்ல’ என்று ஆயா சொன்னதற்கு அழுவதா சிரிப்பதாவென்று தெரியவில்லை!! 🙂
பப்புவிற்கு வெயிலான் பரிசளித்த goodies மிகவும் பிடித்திருக்கிறது. நன்றி வெயிலான்!!

ஒவ்வொரு முறை கோவை செல்லும் போதும் இப்படித்தான் ஆகிவிடுகிறது. கண்டிப்பாக இன்னொரு முறை வரவேண்டும் என்று நினைக்கும்படி! இந்தமுறையும் அந்த நினைப்பையே தந்த கோவை, திருப்பூர் பதிவர்கள் அனைவருக்கும் நன்றிகளும், வாழ்த்துகளும், நட்பும்!! பப்புவிற்கும் வர்ஷாவிற்கும் அன்பு முத்தங்கள்!!லதாவிற்கு திருமண வாழ்த்துகள்!!

Advertisements

Add a comment ஒக்ரோபர் 24, 2009

Weekend in pictures!!
விரிவான செய்திகள் பிற்பாடு!!

image courtesy : ‘பார்வைகள்’ கவிதா!!

Add a comment ஒக்ரோபர் 14, 2009

காது குத்திய காதை!!

பப்புவின் அனுமதியின்றி, அவள் விருப்பப்பட்டாலொழிய காது குத்துவதில்லை என்று முடிவு செய்திருந்ததை இங்கே எழுதியிருந்தேன். ஊரில் உறவினர்களுக்காக, முதல் மொட்டையின்போது நெல்மணியாலே காதில் லேசாக அழுத்தி, சம்பிரதாய காது குத்தை முடித்துவிட்டோம். தற்போது ‘கம்மல் குத்த போலாம்’ என்ற அவளது ஆசை, நச்சரிப்பாக மாறியதைத் தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுத்துவிட முடிவு செய்தோம். (நாங்க இப்போதைக்கு காது குத்த வேண்டாம்னுதான் நினைச்சிருந்தோம், ஆனால் வர்ஷினி அப்படி நினைக்கலையே!! – சிவாஜி ஸ்டைலில் வாசிக்கவும்!)

‘ஊரைக்கூட்டி, நாலைஞ்சு ஆடை வெட்டி எதற்கு ரணகளம், இங்கே சென்னையிலேயே குத்திவிடலாமெ’ன்று முகிலும் நானும் முடிவு செய்து (‘இதுக்கெல்லாம் ஒரு ஃபங்ஷனா’!)உறவினர்கள் கேட்டால் சமாளித்துக்கொள்ளலாமென்று அருகிலிருக்கும் ‘நாதெள்ளா’வில் கம்மல் வாங்கி அங்கேயே குத்தியாயிற்று. ஆசாரி உள்ளேயே இருக்கிறார். முதலிலேயே சொல்லிவிட்டால் அவரும் தயாராக இருப்பார். முதல்லே டாக்டரிடம் போகலாமாவென்று நினைத்து இங்கேயே கன்ஷாட்-இல் குத்திவிடுவார்களென்றுச் சொன்னதால் ஒரு ஐந்து நிமிடம் காத்திருப்புக்குப் பின் ஆசாரி வந்ததும் குத்தியாயிற்று.

நாற்காலியில் பப்புவை உட்கார வைத்து, நாங்கள் குறித்த புள்ளியிலேயே குத்திவிட்டார். அப்படியே கம்மலையும் மாட்டிவிட்டார். பப்புவுக்கு அழுகையே வரவில்லை, ‘கம்மல் குத்திக் கொள்ள’போகும் உற்சாகத்தில்! லேசாக ஒரு ஆஆ! அவ்வளவுதான். அழுகையின்றி ரத்தமின்றி ஒரு காதுகுத்து!

வெளியே வந்ததும் கண்ணாடியில் திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டாள்…பார்த்துக்கொண்டு நின்றாள்…நின்றுக்கொண்டே இருந்தாள்!! வரும்வழியில் தொட்டு தொட்டு பார்த்துக்கொண்டாள். இரவும் கம்மலுடனே கழிந்தது. பள்ளிக்கூடத்திற்கு தங்கம் போட்டுச் செல்லக் கூடாது. அதனால் கழட்டிவிட்டு, ஆயா சொன்னபடி தேங்காயெண்ணெய் விட்டு (‘அசைவு இருக்குமாம்’) துடைப்பக்குச்சியை போட்டு அனுப்பினோம். சாயங்காலம் வரும்போது பார்த்தால் வலது காதில் சிவப்பாகி வீங்கி இருந்தது. துடைப்பக்குச்சிகளை காணோம். எண்ணெய் மட்டும் விட்டோம். கம்மல் போட விடவில்லை. அழுகை. ஆர்ப்பாட்டம். ”எனக்கு கம்மல் வேணாம்”!!!

அடுத்த நாள் காலை காயம் மூடிக்கொண்டது. அதன்பின் என்ன செய்வது? தேங்காயெண்ணெய் விட்டுக்கொண்டே இருந்ததில் அடுத்த ஞாயிற்றுக்கிழமைக்குள் துளை இருந்த இடமே தெரியவில்லை. :-).

காது குத்தும் படலத்திற்கு தன்னைக் கூப்பிடவில்லையென்று கோபித்துக்கொண்ட வடலூர் ஆயா, ‘ஊர்லே போய் இன்னொருதடவை காது குத்திக்கலாமா’வென்று கேட்டால், பப்பு சொல்கிறாள்,

“கம்மல் குத்துனா வலிக்கும்…,நான் பெரிய பொண்ணாகிட்டுதான் கம்மல் குத்திப்பேன்…நீங்க பெரிய கம்மல் போட்டு இருக்கீங்க..உங்களுக்குக் காது வலிக்குதா? கழட்டிடுங்க!!”

Add a comment ஒக்ரோபர் 6, 2009

உ ஃபார்….

…உல்லாசப் பயணங்கள்! (கோல்டா அக்கா, நீங்க பரிந்துரைத்ததுதான்!)

உல்லாச பயணம் அதாங்க டூர்! பள்ளிக்கூட காலங்களில் இரண்டே இரண்டு தடவைகள் மட்டுமே உல்லாச பயணத்திற்குச் சென்றிருக்கிறேன். ஒன்று எட்டாவது படிக்கும்போதும், இன்னொன்று பதின்னொன்றாம் வகுப்பிலும். ஐந்தாம் வகுப்பில் ஒரு உல்லாசப் பயணமொன்று சென்றார்கள் – மெட்ராஸுக்கு. அதன்பிறகு, பார்த்தால் வகுப்பில் இரண்டு குழுக்களிலிருந்தது – ஒன்று டூர் போன நண்பர்கள், இன்னொன்னு டூர் போகாதவர்கள் என்று. (டூருக்கு முன்பு வேறு மாதிரி குழுக்களிலிருந்தது!)ஒருநாளிலேயே, நண்பர்களை மாற்றும், நெருக்கத்தைக் கொடுக்கும் திறமை டூருக்கு இருந்தது!

பயணத்திற்கு ஒரு மாதம் முன்பாக அறிவிப்புகள் வகுப்புவாரியாக நடக்கும். நாட்கள் நெருங்க நெருங்க மனதில் ஒருவித பரபரப்புத் தொற்றிக்கொள்ளும். அதுவும், ‘இப்படம் இன்றே கடைசி’ போன்றதொரு தோற்றத்தை அறிவிப்புகள் மூலம் அவ்வப்போது கொடுத்துக்கொண்டிருப்பார்கள். நாமோ வீட்டில் கெஞ்சிக் கதறிக்கொண்டிருப்போம்,எல்லாவிதமான அஸ்திரங்களையும், ‘இனிமே நல்லா படிப்பேன், ஃப்ர்ஸ்ட் மார்க் எடுக்கறேன்’ போன்ற வாக்குறுதிகளை அள்ளித் தெளித்துக்கொண்டு. கடைசி வரை இழுத்தடித்துவிட்டு, ‘இதுக்கு மேல தாங்காது’ என்ற இரக்கம் மேலிட காசு கொடுப்பார்கள். இதற்கு மேல் ஏமாற்றினால் பெண் எங்கே வீட்டை விட்டு ஓடிவிடுமோ என்ற பயம் கூட காரணமாக இருக்கலாம். ;-))

பெயர்கொடுத்தபின், அடுத்த டென்ஷன்கள் ஆரம்பிக்கும். அடுத்தகட்ட திட்டமிடல்கள். என்ன மாதிரி பை எடுத்துச் செல்வது – நம்மிடம் இருக்கும் எல்லா ஃபேஷன் வஸ்துகளையும் அடுத்தவரிடம் காட்டிக்கொள்ள் கிடைத்த அரியதொரு வாய்ப்பு இல்லையா..அதை ஒழுங்காக பயன்படுத்தி peer pressure ஏற்றிவிடுவது நமது கையிலல்லவா இருக்கிறது! மேட்சிங் வளையல்கள், ரப்பர் பேண்ட்கள், ஹேர் க்ளிப்கள்,புது தண்ணீர்பாட்டில், அப்புறம் டாப் அப்பாக கூலிங் கிளாஸ், முடிந்தால் வாக் மேன், ஸ்வெட்டர் கண்டிப்பாக, அல்லது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், அமெரிக்காவிலிருந்த வந்த வாட்ச். இவை தவிர, வீட்டிலிருந்து தையிலையிலோ அல்லது புரச இலையிலோ கட்டித்தரப்படும், மிளகாய் பொடி தடவிய இட்லி போன்ற பொருட்களை கவனமாக, மறதியாக வைத்துவிடுவது போல வைத்துவிட்டு பிஸ்கெட், சாக்லேட், சூயிங் கம், முறுக்கு, சிப்ஸ் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். காமிரா-வுக்கு அடிப்போட்டு பார்த்தல் உசிதம்! இத்தனைக்கும் போகுமிடம் மெட்ராஸ் – மகாபலிபுரம், வேடந்தாங்கல் தான்!

அடுத்தது, எந்தெந்த டீச்சர்கள் நம்முடன் வருகிறார்கெளென்று பற்பல வதந்திகள் கிளம்பும். ‘ஐயோ..சயின்ஸ் டீச்சர் மட்டும் வரக்கூடாதுப்பா’, ‘ஹிஸ்டரி டீச்சரா..ஆ…அதுக்கு போகமலே இருக்கலாம்பா’ என்று கதைகள் பேசி மாய்ந்துப் போவோம். கண்டிப்பாக பி.இ.டி டீச்சர் வருவார். நாட்களை எண்ணியெண்ணி, யார் பக்கத்தில் யாரமருவதென்று முடிவுக்கட்டி, ‘காலையில் ஜன்னல் சீட் உனக்கென்றால் மதியம் எனக்கு’, அல்லது ‘போகும் போது ஜன்னல் உனக்கு, வரும்போது எனக்கு’ என்று பஞ்சாயத்து பேசி கிளம்புவதற்கு முதன்நாளும் வந்துவிடும். அந்த இரவுதான் மிகக் கஷ்டம். பரபரப்பில், மகிழ்ச்சியில், தூக்கமே வராது. வீட்டிலிருந்து கடைசிநேர அட்வைஸ்கள் – ‘ட்ரெஸை அழுக்காக்கிட்டு வராதே’, ‘வேடிக்கை பார்த்துக்கிட்டு நிக்காதே’, ‘டீச்சர் கூடவே போகணும்’, ‘பத்திரமா இருக்கணும்’, ‘கண்டதை வாங்கி சாப்பிடாதே’, ‘வாந்தி மாத்திரை பையிலே சைடிலே வச்சிருக்கேன் etc – போதாதென்று பக்கத்துவீட்டு ஆன்ட்டிகளின் அட்வைஸ்கள் வேறு – நம்புங்கள், எல்லாம் ஒருநாள் டூருக்குத்தான்.

அதென்னவோ, நான் போன உல்லாச பயணங்களும் (ஒன்றைத் தவிர) அதிகாலை மிகச்சரியாக நாலு மணிக்குத்தான் வரச்சொல்லுவார்கள். பேருந்து மிகச்சரியாக நாலரை மணிக்கு கிளம்பிவிடும், யார் வந்தாலும் வராவிட்டாலும் என்பார்கள். மப்ளர் கட்டிய அப்பாக்கள், ஸ்வெட்டர் போட்ட அம்மாக்கள், ஷால் போர்த்திய ஆயாக்கள், மற்றும் தலையை கோதியபடி நுழையும் அண்ணாக்களுடன் ஒவ்வொருவராக வந்து சேர அட்டெண்டன்ஸ் எடுத்தபின் ஆறு மணிக்கு டாணென்று பஸ் கிளம்பும். தூக்கக் கலக்கத்தில் முகங்கள் – புன்னகைகள் – ‘தூக்கம் வருதா, மடிலே படுத்துக்கோ’ போன்ற பாச அலைகள்!!
முதலில் சாமிப்பாட்டு எல்லாம் போட்டபின்னர் மெதுவாக சினிமா பாடல்கள் ஆரம்பிக்கும். ‘லாலாக்கு டோல் டப்பிம்மா’, ‘ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி’தான் என்று பாடல் ஒலிக்கத் தொடங்கும். வீடு, ஹோம்வொர்க், வகுப்புகள் என்று எல்லாமும் ஊர் எல்லையின் மைல்கல்லோடு விடைபெற்றிடும். ‘ரொம்ப ஸ்ட்ரிக்ட்’ என்று நினைத்த ஆசிரியர்கள் கூட சிநேகமான மறுபக்கத்தைக் காட்டுவார்கள். பாடல்களை முணுமுணுப்பதோடுஇ கைத்தடடி தாளம் போட ஆரம்பிப்பார்கள். ஒருவித உல்லாச மனநிலை எல்லோரையும் ஆக்ரமிக்கத் துவங்கும்! நமக்கேத் தெரியாமல் கைகள் தாளமிடத் துவங்கும். அதிகாலைக் காற்று சிலீரென்று முகத்தில் படர இந்தப் பயணம் முடிவிலாமல் நீண்டாலென்ன என்பது போலத் ஆசை அரும்பும்!

வெயிலடிக்கத் தொடங்கும் நேரத்தில் நடைபெறும் இடமாறுதல்கள். உற்சாகமாக ஆரம்பிக்கும் கை தட்டல்கள் மெதுவாக ஓயும்போது யாராவது யாரையாவது எழுப்பி முன்னே தள்ளி டான்ஸ் ஆட வைத்துக் கொண்டடிருப்பார்கள். மீண்டும் களை கட்டத்துவங்கும் ஆடலும் பாடலும் அதனோடுச் சேர்ந்துக் கொண்ட சிரிப்பொலியும். காலை உணவு முடித்தபின் ஜன்னலோர இடமாறுதல்கள், கடி ஜோக்குகள், டம் ஷரத், அந்தாக்‌ஷரி போன்ற எவர்க்ரீன் விளையாட்டுகள் தொடங்கும். இப்போது பேருந்தின் முன்பக்கம் கூட்டமாகியிருக்கும். சிலரது மடிகள் சிலருக்கு இருக்கையாகியிருக்கும். தோழியரின் கைகள் தோளை அரவணைத்திருக்கும். மெதுவாக எல்லோரது பையிலிருக்கும் நொறுக்குத் தீனிகள் பையை விட்டு வெளிவரும்.

ஒப்பந்தப்படி ஜன்னல் சீட் கொடுக்காத சண்டைகள் லேசாக புகையும். தாளமிட்டு கைவலி வந்திருக்கும் நேரத்தில் பார்க்க வேண்டிய இடமும் வந்திருக்கும். டீச்சரை முன்னால் செல்ல விட்டு பின்னால் குரூப்பாக நடந்து மக்களை வேடிக்கைப் பார்த்து என்று பாதிபயணம் முடிந்திருக்கும். மீதிப்பயணமும் முடிந்து சாயங்கால வேளையில் தேநீர் அருந்த நிறுத்தியிருப்பார்கள். முகங்கள் களைப்புடனும், லேசான சோகத்துடனும் இருக்கும். தாலாட்டும் பாடல்களுடன் திரும்ப ஊருக்குள் நுழைகையில், இவ்வளவு சீக்கிரம் முடிஞ்சு போச்சே என்றிருக்கும்…அடிக்கடி இப்படி டூர் வைத்தாலென்ன என்றும் தோன்றும்! தூக்கம் சொக்க திரும்ப அட்டெண்டென்ஸ் எடுத்தபின் அப்பா-அம்மாக்கள் அல்லது நண்பர்கள் வீட்டுக்கு போய்விட்டு நாளை காலை வீட்டிற்கு செல்பவர்கள் என்று கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் குறையும். ‘டூர் எப்படி இருந்துச்சு’ என்ற கேள்விக்கு ‘ம்’ என்று ஒற்றை வார்த்தையில் தலையசைப்போடு புன்னகையை பதிலாக்கிவிட்டு மௌனமாக இரவின் இருட்டில் காலடிச் சத்தங்கள் தேயும். மனமோ, நாலுக்கால் பாய்ச்சலில் அடுத்த டூரைப் பற்றி நினைக்கத் துவங்கும்!

Add a comment செப்ரெம்பர் 16, 2009

50:50

சமையல் செய்யும் அம்மா ‘அவசரமா ஊருக்குப் போகவேண்டியிருக்கு, வர எவ்ளோ நாளாகும்னு தெரியல, போய்ட்டு ஃபோன் பண்றேன்’னென்றுச் சொல்லிவிட்டு திண்டிவனத்திற்குச் சென்றார். ஒரு வாரமாகியும், எந்தத் தகவலுமில்லை. பத்துநாட்கள் கழித்து வந்தவரிடம் ‘ஃபோன் பண்ணிச் சொல்றேன்னு சொன்னீங்களே” என்றதற்கு,

”ஊரிலே கரெண்ட்டே இல்லம்மா, ஃபோனே எடுக்கலை”

பப்பு தனியாக விளையாடிக்கொண்டிருந்தாள். சடசடவென சரிந்து விழுவது போல சத்தம் கேட்டது. அலமாரியில் ஏதோ கை வைத்திருக்கிறாள், எல்லாம் விழுந்திருக்கிறது என்று புரிந்தது. நானும் போய் பார்க்கவில்லை. ஒன்றும் கேட்கவுமில்லை.

என்னிடம் வந்த பப்பு,

“ஆச்சி, புக்லாம் அதுவே விழுந்துடுச்சு…வந்து பாரு” என்றாள். நான் அசையாமலிருந்தது அவளதுக் கூற்றை நான் நம்பவில்லை என்றெண்ண வைத்தது போலும். என்னை ஒருமாதிரியாக பார்த்து சொன்னாள்,

”ஆச்சி, குள்ளநரி வந்து எல்லாத்தையும் தள்ளி விட்டுடுச்சு, புக்லாம் கீழே கிடக்கு” !!

Add a comment செப்ரெம்பர் 3, 2009

Z is for Zoo!

வண்டலுர் ஜூ. எனக்கு ஐஞ்சு வயசா இருக்கும்போது எங்க ஆயா என்னையும் இளஞ்செழியனையும் கூப்பிட்டு போனாங்க. ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்தாங்க. நாங்களும் சாப்பிட்டிக்கிட்டிருந்தோம். கடைசிலே ஆயாக்கும் ஐஸ்கிரீம்-காரருக்கும் சண்டை. என்னன்னா, அவர் ‘ரெண்டு அர்ரூபா’ ரெண்டு அர்ரூபா’ ன்னு சொன்னாராம். கடைசிலே ஐஞ்சு ரூபா கேட்டுருக்கார்.எங்க ஆயா ‘ரெண்டு ஐஸ்க்ரீம் அரை ரூபா’ன்னு நினைச்சு வாங்கிக் கொடுத்திருக்காங்க!இப்போவரைக்கும் எங்க ஆயா அதை மறக்கலை..போன சனிக்கிழமை பப்புவை கூப்பிட்டு போறோம்-ன்னு சொன்னதும் அவங்க இதை திரும்ப எங்களுக்கு (10001வது தடவையா) ரி-ப்ளே பண்ணாங்க!எனக்கு இதெல்லம் ஞாபகம் இல்லை..ஆனா ஒரு யானை மேலே ஏறனும்னு அடம் பிடிச்சது மட்டும் ஞாபகம் இருக்கு!

எட்டாவது படிக்கும்போது எங்க ஸ்கூல் டூர். வண்டலூர் ஜூ, வேடந்தாங்கல் அப்புறம் மகாபலிபுரம். ரொம்ப ஜாலியா இருந்துச்சு. யாரு அனிமல்ஸை பார்த்தது…ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து ஃபோட்டோ எடுக்கறதும், க்ரூப்பா பாட்டு பாடறதும், ஸ்னாக்ஸ் வாங்கி சாப்பிடறதும், ஜன்னல்கிட்டே நீ எனக்கு இடம் தரலைன்னு சண்டை போடறதுமா இருந்துச்சு! உள்ளேயே ட்ரெயின் ஓடுது..அதுல போகலாம்-ன்னு டூர் ஆர்கனைசர் வேற பில்டப்! ஒரு tram-ஐ காட்டி ட்ரெயின்-ன்னு சொல்லி ஏமாத்தினாங்களே..அவ்வ்வ்…அந்த ட்ராம் இன்னும் இருக்கு!

‘ட்ரெயின் புகழ்’ ட்ராம்!

மிருகங்களை பயமுறுத்த மூனு வழி இருக்கு.

1.நடந்தே போய் பார்க்கலாம்
2.வாடகை சைக்கிள் கிடைக்குது.
3.அப்புறம் ‘ஜூ உள்ளேயே ஓடற ட்ரெயின்’. (ஒரு மணிநேரம் ரவுண்ட்)

சைக்கிள்லே என்னையும் பப்புவையும் வைச்சு முகில் ஓட்டினாலும் சைக்கிள் தாங்குமானு டவுட் இருந்ததாலே ட்ராம்-க்கு டிக்கெட் வாங்கினோம். எவ்வளவு சீக்கிரமா போறீங்களா அவ்வளவு சீக்கிரம் டிக்கெட் கிடைக்கும். (10 ரூபாய் – சிறாருக்கு, 20- ரூபாய் – பெரியவர்களுக்கு)நாங்க போனப்போ ரெண்டு ஸ்கூல்-லேர்ந்து வந்திருந்தாங்க.11.30 மணிக்கு போனோம், ஆனா மதியம் 2.15-க்குதான் டிக்கெட் கிடைச்சது. அன்னைக்கு வெதர் ரொம்ப நல்லா இருந்துச்சு! அதனால, கொஞ்ச நேரம் நடந்து சுத்திப் பார்த்துக்கிட்டு இருந்தோம். நல்லா சுத்தமா வச்சிருந்தாங்க. பப்பு அதைத்தான் காடுன்னு நினைச்சுக்கிட்டா. ”காஆஆடு, ஐஸ்க்ரீம் தீவு..நாம அப்புறம் எங்கே போறோம் டோரா’ன்னு கேட்டுக்கிட்டிருந்தா. பப்புவிற்கு ஏப்-தான் ரொம்ப பிடிக்கும். ‘ஏப் வந்து எனக்கு எக் கொடுக்கபோகுதா’ன்னு கேட்டா.அவ்வ்வ்! (ஒரு மூவிலே, தன் வீட்டுக்கு வந்த ஒரு பொண்ணுக்கு ஏப் காலையில் பால், முட்டை எல்லாம் தட்டில் வைத்து எடுத்து வரும்!!)

மயில், பலவித கிளிகள், குரங்குகள், மேலும் குரங்குகள், மேலும் மேலும் குரங்குகள்-ன்னு பார்த்துட்டு, ஒரு கல்மண்டபதுலே உட்கார்ந்து கொண்டு வந்த சாப்பாடு, நொறுக்ஸ் எல்லாம் காலி பண்ணிட்டு சரியா ரெண்டு மணிக்கு ட்ராம் வர்ற இடத்துக்கு போய்ட்டோம். அந்த ட்ராமிலே போறதும் ஜாலியாதான் இருந்துச்சு. நாம நடக்கற வேகம்தான்…;-). அங்கங்கே நிறுத்தி 10 நிமிஷம் டைம் கொடுக்கறாங்க. அதுக்குள்ளே பார்த்துட்டு வந்துடனும். பப்பு, பார்க்கிற மிருகங்களையெல்லாம் ‘ஏன் அது என்கூட பேச மாட்டேங்குது’ னு கேட்டுக்கிட்டிருந்தா. அவ்வ்வ்..the animated CDs n TV programs!! புலி பாட்டுக்கு அந்தப் பக்கம் போய்க்கிட்டிருக்கு. ‘புலி புலி’ ன்னு கூப்பிட்டா அது திரும்பி பார்க்குமா என்ன?! (நமக்குத் தெரியும் அது புலின்னு, ஆனா புலிக்குத் தெரிய வேணாமா..ஹ்ம்ம்..இதெல்லாம் சொன்னா பப்புவையாவது ஒழுங்கா விட்டு வைன்னு சொல்றது!!)

புலி, வெள்ளை புலி, ஹிப்போ, மான்கள், யானை, ஜீப்ரா, ஜிராஃப் எல்லாம் முடிச்சுட்டு 3.15-க்கு ஏறின இடத்துக்கே வந்துட்டோம். லேசா தூறல். வெளிலே வந்தப்புறம் செம மழை. பப்புவிற்கு வரவே மனசில்லை. நான் உள்ளேயே இருக்கேன்னு சொல்லிட்டு திரும்பி உள்ளேயே ஓடறா! ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்லை, நாம வீட்டுக்கே போகலாம்-ன்னு சொல்ல நினைச்சேன்..ஹிஹி்..செல்ஃப் டேமேஜாகிடும்ன்னு விட்டுட்டேன்! ;-))

நுழைவு கட்டணம் : பெரியவர்களுக்கு – 20 ரூ சிறார் – 10 ரூ
காமெரா கட்டணம் : 25 ரூ
நுழைவாயில் தாண்டி, உள்ளே ஒரு TTDC உணவகம் இருக்கு. மினரல் வாட்டர் வேணா வாங்கிக்கலாம். ட்ராம்/வாடகை சைக்கிளுக்கு கட்டணம் தனி. பொதுவான ஜூ ரவுண்ட்-உம், லயன் சஃபாரி-யும் இருக்கு. ஜூ ரவுண்ட் ஒரு மணி நேரம் – எல்லா மிருகங்களும்! லயன் சஃபாரி – 30 நிமிடங்கள் – சிங்கங்கள் மட்டும் – ஆனால் வெகு அருகில் பார்க்கலாம்! ஜு உள்ளே சென்றால் ஆவின் ஐஸ்க்ரீம் கடை இருக்கு. அது ஒன்னுதான் கொஞ்சம் ஆறுதல். மற்றபடி வேறு உணவகங்கள் எதுவும் இல்லை. குடிநீர், நொறுக்குத்தீனி, சாப்பாடு, தொப்பி கொண்டு செல்வது நல்லது!

Add a comment ஜூன் 30, 2009

ரோஜாக் கூட்டத்தோடு ஒரு மணிநேரம்!!

அலுவலகத்தில் அதுவும் கேபினுக்கு பக்கத்தில் அல்லது ஒரு ஜன்னல் வழியே நமது பெற்றோர் எட்டி நம்மை, நாம் வேலை செய்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? சிலர் விருப்பபடலாம், ஒரு சிலர் விருப்பபடாமலும் ஏன் அபப்டி ஒரு எண்ணத்தையே வெறுக்கலாம். அது நாம் எந்தப் பக்கத்திலிருக்கிறோமென்பதையும் பொறுத்திருக்கிறது…;-). By this time, you would have got the idea. ஆமாம், என்னை அப்படி என் பெற்றோர் பார்க்க(கண்காணிக்க!?!) விரும்பியிருந்தால் அவ்வளவுதான்..உண்டு இல்லையென்றுச் செய்திருப்பேன்.(அதுக்கெல்லாம் சேர்த்து வைச்சுதான் பழிவாங்கிட்டாங்களே..ஒரே ஸ்கூல்!!)ஆனால், பப்புவை,அவளது பள்ளி நேரத்தில் பார்க்க மிகுந்த ஆவலோடு கிளம்பினேன்!

அன்று பப்பு பள்ளியில் observation day. 9.30 AM to 10.30 AM. உள்ளே சென்றதும் என் கண்கள் பப்புவைத் தேடின. “குறிஞ்சி மலரோட மம்மி ” என்று ஒரு குட்டிப்பெண் பக்கத்து குட்டிப் பெண்ணிடம் சொன்னதைக் கேட்டேன்.huh..என்ன ஒரு அறிமுகம்!! ஆனால், அந்த சுட்டிகளை யாரென்று எனக்குத்தான் தெரியவில்லை. வாட் அ ஷேம்!! காலையின் வாகனத்தில் ஏற்றும் போது பார்த்திருப்பார்களாயிருக்கும். எனக்கும் பெயர் தெரிந்திருக்கலாம்!! but it was a good feeling, you know!

எல்லோரும் சீருடையில், அவரவர்களின் பாயில் அமர்ந்திருந்தார்கள். ஹா..இதோ பப்பு, என்னைப் பார்த்து ஒரு ஆச்சரியம், ஒரு வெட்கப் புன்னகை! அவளது இடத்திலிருந்து மூன்றாவது இடத்தில் நான். ஏதோ செய்துக் கொண்டிருந்தாள், கலர் பாக்ஸ் என்று நினைக்கிறேன். அதைச் செய்து முடித்துவிட்டு, பெட்டியில் போட்டு அதன் இடத்தில் வைக்கச் சென்றாள். என்னிடம் வந்து “நீ ஆபிஸ் போகல?” என்றாள். போகணூம் பப்பு, உன்னைப் பார்க்க வந்தேன்! என்றேன்.

வேறு ஏதோ எடுத்து வந்து செய்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு எதிரில் வெண்மதி. இரட்டைக் குடுமி போட்ட ஒரு குட்டிப் பெண். பப்பு வீட்டில் எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பது இவளைப் பற்றிதான். என்னால், அவளை மட்டுமே அடையாளம் காண முடிந்தது. பப்பு திரும்ப அடுத்தப் பொருளை எடுக்கச் சென்றபோது, “நீ ஆபிஸ் போ மாட்டே?’ என்றாள்! அவ்வ்வ்வ்வ்! ”போவேன் பப்பு” என்றேன்!she has got my genes! (hostel-ல் என்னை யாரும் பார்க்க வந்தால் சுத்தமாக பிடிக்காது. நீங்க என்ன எடுத்துக்கிட்டு வரணும்னு நினைக்கறீங்களோ, அதை எனக்கு கூரியர் பண்ணிடுங்க, பார்க்கணும்னா நாந்தான் வருவேன். யாரும் என்னைப் பார்க்க வரக்கூடாது..அப்படின்னு கண்டிஷன்லாம் போட்டேன். என்ன சொல்லி என்ன, அதையெல்லாம் கேட்கல..ஆனா, வர்ற frequency மட்டும் குறைஞ்சது!)

எடுத்து வந்ததை செய்தபின் , பாயை சுருட்டி ஒரு டப்பாவில் வைக்கவேண்டும். அந்த டப்பா எனக்குப் பின்னால் இருந்தது. பாயை வைத்துவிட்டு, என்னருகில் வந்து, ”ஏன் என்னையே பார்த்துக்கிட்டு இருக்கே? என் ஃப்ரெண்ட்சை பாரு” என்றாள். (அடுத்த பல்ப்!) பிறகு அவர்களையும் பார்க்கத் தொடங்கினேன். மெதுவாக ஆயாம்மாவிடம் பேச்சுக் கொடுத்ததில் தண்ணொளியையும், தனுஷையும் அறிந்துக் கொண்டேன்.

பப்பு பொருட்கள் எடுக்க/வைக்க செல்லும்போது குதித்துக் கொண்டும், பாடிக் கொண்டும் செல்வதைக் கவனித்தேன். (எப்போதும் அப்படியா, அல்லது நானிருப்பதாலாவென்றுத் தெரியவில்லை.) ஒன்று மட்டும் என்னை ஆறுதல் படுத்தியது, பப்பு அவளது இடத்தில்
தன்னை பொருத்திக் கொண்டிருக்கிறாள். எதைச் செய்யவும் பயப்படவோ கலங்கவோ இல்லை. மேலும் ஷீ இச் மெத்தாடிக்கல். ( இ-திருஷ்டி பொட்டு!)

பள்ளியிலேயே சொல்லிவிட்டாலும் பப்புவின் ஆண்ட்டிக்கும் மாண்ட்டிசோரி அம்மையாருக்கும் நன்றி!

Add a comment மார்ச் 15, 2009

டீச்சர் பசங்களாகிப் போனதன் சோகங்கள்!!

டீச்சர் பசங்களா இருக்கறது கஷ்டம்..ஆனா அதைவிட கஷ்டம் அந்த டீச்சர் வேலை செய்ற பள்ளிக்கூடத்தில் படிக்கறதுதான்! மேலோட்டமா பார்த்தா நிறைய அட்வாண்ட்டேஜஸ் இருக்கற மாதிரி தெரியும்..ஆனா நல்லா கவனிச்சா,எவ்வளவு சோகம் இருக்குன்னு டீச்சர் பசங்களுக்குத்தான் தெரியும்……சிங்கை நாதனும், கேவிஆர்-க்கும் இதேதானான்னு சொல்லனும்!! :-))

1. நாம பள்ளிக்கூடத்திலே சேர்ந்து வகுப்புக்குப் போனதும், நமக்கேத் தெரியாம ரெண்டு குரூப் உருவாகிடும்.ஒன்னு டீச்சர் பசங்கன்னு நம்மகிட்டே பேசமாட்டாங்க, இன்னொரு க்ரூப், டீச்சர் ப்சங்கன்னு நம்மகிட்டே பேசுவாங்க! ஆனா இப்படிரெண்டு க்ருப்-கள் இருக்கறது நமக்கே தெரிஞ்சிருக்காது..நாம அதுக்கு எந்த விதத்திலேயும் காரணமில்லேன்னாலும்! ஆனா,காலப்போக்கில், ரெண்டு க்ரூப்-ல் இருக்கறவங்களும் இடமாறலாம், ஆனா அந்த க்ரூப்-கள் இருந்துக்கிட்டேதானிருக்கும்! நாம அந்த க்ரூப்-க்கு லீடரா மாறுவது அவரவர் திறமை/ஆர்வத்தைப் பொறுத்தது!

2. நம் செல்லப் பெயர்கள் almost எல்லா டீச்சர்களுக்கும் தெரிஞ்சிருக்கும்….அதுவும் சிலசமயம் நாm செய்த குறும்புத்தனங்கள், அசட்டுதனங்கள்-னுஎல்லா வரலாறும் பலருக்கு தெரிஞ்சிருக்க நிறைய வாய்ப்பு இருக்கு! சில டீச்சர்களால், நம்மைச் செல்லப் பெயரால கூப்பிடறதை மாத்திக்கமுடியாது..ஆனா இந்தப் பிரச்சினை மேல் வகுப்புகளுக்குச் செல்லச் செல்ல குறையலாம்!

3. நமக்கேத் தெரியாம நாம கவனிக்கப்பட்டுக்கொண்டேயிருப்போம்! (Ouch! How I hated that!!) கொஞ்ச நேரந்தானே..நிர்மலா கூப்பிட்டாளே, அவங்க வீட்டுக்குப் போய்ட்டு வரலாமேன்னு நினைச்சுடக் கூடாது….நாம திரும்ப கிளாஸுக்கு போறதுக்குள்ள,செய்தி பள்ளிக்குப் போய்டும்..அதேமாதிரி, நாம விடைத்தாள் வாங்கிட்டு வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடி நம்ம மார்க் விஷயங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்திருக்கும்!!

4. நமக்கு நிறைய பேரைத் தெரியலேன்னாலும் நிறையப் பேருக்கு நம்மைத் தெரிஞ்சிருக்கும்! அதுதான் டேஞ்சரான மேட்டர்..அதே சமயம் ஜாலியாவும் இருக்கும்..நான் ராத்திரி ட்ரெயின்லே வந்தாலும் ஆட்டோ அண்ணாக்கள் நம்மைப் பார்த்ததும், பையை வாங்கிக்கிட்டு”டீச்சர் வீடுதானேம்மா”-ன்னு சொல்லிக்கிட்டே ஆட்டோவை ஸ்டார்ட் செய்வாங்க!

5. போட்டிகளிலே கலந்துக்கிட்டு பரிசு வாங்கிட்டோம்-னா டீச்சர் பசங்கன்னு கொடுத்துட்டாங்கன்னு சிலபேர் கிண்டல் செய்வாங்க….வேறயாரு..நம்ம கூட இருக்கறவங்க..இல்லன்னா போட்டியிலே கலந்துக்கிட்டவங்க! ஆனா அதையெல்லாம் தாண்டி நம் பெர்பாமன்ஸ் இருக்கணும்! அது ஒரு டென்ஷன்!! அதே சமயம், பப்ளிக் எக்சாம்-ன்னா எல்லாருக்கும் நம்ம மேல ஒரு எதிர்பார்ப்பு இருக்கு..அதுவும் ஒரு டென்ஷன்….

சமயத்துல காமெடியாவும் இருக்கும்..ஒன்பதாவது படிச்சுக்கிட்டிருக்கும்போது, வீட்டுக்கு வர்றவங்க, ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க கேள்வி கேட்பாங்க…

“என்னம்மா, எந்தக் கிளாஸ் படிக்கிறே?!”

நைன்த் அங்கிள்!

ஓ..நைன்த்தா..அடுத்த வருஷம் டென்த்தா?!

ஹிஹி..ஆமா அங்கிள்! (மனசுக்குள் பின்ன திரும்ப எய்த்தா படிப்பாங்க…grrrrrrr!!)

சரி,இவங்க தொல்லைத் எனக்கு மட்டும்தான் இப்படின்னு பார்த்தா, என் ப்ரெண்ட்ஸ் நிறைய பேருக்கு இந்த அனுபவம்!!நைந்த்-க்கு அப்புறம் டெந்த்தானே படிப்பாங்க!! அவ்வ்வ்வ்வ்வ்வ்!அது வந்து, பப்ளிக் எக்ஸாமாம்..அதனால அவங்க அப்படி ஒரு விழிப்புணர்வைத் நமக்குத் தர்றாங்களாம்..:-)ஆனா, +1 படிக்கும்போது இந்தக் கேள்விக்கெல்லாம் அசரவேயில்லையே நாங்கள்!!

இன்னும் நிறைய இருக்கு..சோகங்கள்….வேறு ஒரு நாளில் தொடர்கிறேன்! 🙂

Add a comment மார்ச் 2, 2009

குத்துவிளக்காக குலவிளக்காக!!!

அமித்து அம்மா ஆரம்பிச்சு, வித்யா தொடர்ந்து அப்புறம் என்னையும் இழுத்து விட்டுட்டாங்க இதுல. ஓக்கே என்னோட கொசுவத்தி இல்லை அனுபவங்கள் எப்படியாவது எடுத்துக்கோங்க!
உண்மையில் ஒரு பதிவு எழுதத்தான் நினைத்திருந்தேன் வழக்கம்போல பப்புவை பற்றி! வில் பப்பு ஃபாலோ அ ரிலீஜியன், அப்படின்னு! ஏன்னா, ரிலீஜயனை விட ஸ்பிரிச்சுவலா இருக்கறதுதான் முக்கியம்ன்றது என்னோடக் கருத்து! அந்தப் பத்தி அப்புறம் பார்ப்போம்!

நான், ஒரு தமிழ்நாட்டு பெண்ணுக்குரிய அடையாளங்களான, நீள முடி, பூ வைக்கிறது, கொலுசு போட்டுக்கிறது, கை நிறைய வளையல் இதெல்லாம் இல்லாத ஒருத்தி. ஏனோ அதெல்லாம், சீரியல்லயும் சினிமாலயும் வர்றவங்களுக்குத்தான் எனும் நினைப்பு! பெண்ணுக்கு படிப்பும் அறிவும் இருந்தாப் போதும்ன்ற நினைப்பாக் கூட இருக்கலாம்! உண்மை-ன்னு ஒரு புத்தகம் எஙக் வீட்டுக்கு வரும். அதை ஐந்தாவது படிக்கும்போதிலிருந்து படிக்க ஆரம்பிச்சேன். அதுல படிச்சு, சின்ன வயசுலயே மனசில பதிந்ததனாலேயே என்னவோ எனக்கு நகை, அப்புறம் பூ மேலல்லாம் ஈர்ப்பு இல்லாமயே போய்டுச்சு! பூ ரொம்ப பிடிக்கும், ஆனா பறிக்கப் பிடிக்காது. ஏன்னா, ஒருதடவை கோகுலத்தில், “பூ எனக்குப் பிடிக்கும், ஆனா அதை பறிச்சு ஜாடியில் வைக்கப் பிடிக்காது, குழந்தைகள் கூடத்தான் அழகு. அதனால், அவர்களின் தலைகளை வெட்டியா வைச்சிக்கறோம்-”ன்ற மாதிரி ஒரு பொன்மொழி படிச்சேன். அதிலேர்ந்து பூக்களை பறிக்கறது இல்லை. அதுவுமில்லாம, பூவை தலையில் வைக்க அவ்வளவாக முக்கியத்துவம் கொடுத்ததில்லை நான். ஒருமுறை, மதுரை பஸ் நிலையத்தில் ஒரு பெண் நின்று ஓரத்தில் இருந்த கடையில் பூவாங்கி தலையில் வைத்துக் கொண்டு பஸ் ஏறிச் சென்றதை மிகுந்த வியப்போடு பார்த்தேன் நான்!

வீட்டுல எனக்கு நகை வாங்கினாக் கூட நான் போட்டுக்கவே மாட்டேன். மேலும் அதெல்லாம் எனக்குத் தெரியாமலே வச்சிருந்தாங்க. (காலேஜ் போனப்பறம்தான் ஆகா, இவ்ளோ இருக்கான்னு தெரிஞ்சது. அதிகமில்லை, குட்டி குட்டியா கம்மல்கள்)எனக்கு அதெல்லாம் வேணாம்னு தொடவே மாட்டேன். நானே சம்பாரிச்சுதான் போட்டுக்கணும்னு ஒரு வைராக்கியம். மேலும் நகை மேல அப்படி ஒன்னும் பெரிய ஆசையெல்லாமும் இல்லை. வீட்டிலயும், எனக்கு நகை ஆசை வராதமாதிரிதான் பார்த்துக்கிட்டாங்க. நகை-னு ஒண்ணு போட்டுக்கணும்னு தோணினது, கல்யாணத்துக்கு அப்புறம்தான்! உறவினர் கல்யாணம், விசேஷங்கள்-னு போக ஆரம்பிச்சதுக்கு அப்புறம், அம்மா கொடுத்த நகைகளை பூட்டி வைக்காம அப்போ மட்டும் போட்டுக்க ஆரம்பிச்சேன். மேலும், இன் லாஸ்-க்கு நாம் போட்டுக்கலன்னா அது பிரஸ்டீஜ் பிராப்ளம்! அதுவும், ரொம்ப சிம்பிளாதான், அப்போ மட்டும் அமித்து அம்மாவோட அம்மன் எஃபக்ட் கொடுப்பேன் நான். புடவைக் கட்டி, கை நிறைய மேட்சிங் வளையல் போட்டு, தொங்கல் கம்மல், இல்லேன்னா இருக்கவே இருக்கு முத்துக்கள். பூ மட்டும் நோ சான்ஸ், ஏன்னா எனக்கு இருக்கற முடியில் வைக்க முடியாதே!

கல்யாணம் நிச்சயமானபின் முடி வெட்டாம விட்டுட்டேன் வளரட்டும்ன்னு, முகிலின் பாட்டி வேண்டி விரும்பி கேட்டுக்கிட்டதால! கல்யாணத்திற்கு அப்புறம், ட்ரிம் பண்ணிட்டேன், கொஞ்சமா பின்னல் போடறமாதிரி. அப்போ எங்க மாமியார் வந்திருந்தாங்க ஊரிலிருந்து. நான் ஆபிஸ் கிளம்பும்போது, நான் தலை சீவறேம்மான்னாங்க. யார் என் தலையில்
கைவச்சாலும் எனக்கு பிடிக்காது. ஆனா, நோ சொல்லதான் நமக்கு தெரியாதே. சோ, பின்னி விட்டுட்டு,பிரிட்ஜிலிருந்து பூ எடுத்துட்டு வந்தாங்க. கனகாம்பரம். மஞ்சள் கனகாம்பரம்.
அன்னைக்குன்னு பார்த்து, என் கூட வேலை செய்ற பிரண்டு வேற நான் ஆட்டோலதான் போறேன், ரெடியா இரு, பிக்கப் பண்ணிக்க வரேன் ஒண்ணா போலாம்னு வேற சொல்லியிருந்தா. ஆகா, பிரண்ட்ஸ்-எல்லாம் பார்த்தா கிண்டல் பண்ணியே நம்மளை காலி பண்ணிடுவாங்க்ளேன்னு ஒரு கிலி வேறே! ஆனா, வைச்சிக்காம இருந்தா அவங்க ஹர்ட் ஆகிடுவாங்கன்னும் தோணுது. என்ன பண்ணறது! என் பிரண்டு வர்றா, அவளுக்கு வேணும்னு கட் பண்ணி வைச்சிட்டு, போகும்போது வச்சிக்கறேன் ஆண்ட்டி-ன்னு சொன்னா நானே வச்சிடுறேம்மான்னு வைச்சிவிட்டுட்டாங்க, பார்த்தா அப்பவும், சடையை விட நீளமா தொங்குது பூ! அப்புறம், என்ன ரெண்டு பேரும் மஞ்சள் கனகாம்பரம் வச்சிக்கிட்டு சியன்னா ஸ்விட்ச் பக் பிக்ஸ் பண்ணக் கிளம்பினோம். ஆட்டோவில் போகும்போது ரெண்டு பேரும் எடுத்து ஹாண்ட் பேகில் வைச்சிக்கிட்டோம், அந்தப் பூவை!!

மெட்டிப் போட்டுக்க பிடிக்கும் எனக்கு. ஆனா சில சமயம், செருப்புகளோட ஒத்துப் போகாது, உறுத்தும். ஆனா, பப்பு ஒரு வயசா இருக்கும்போதிலிருந்து அதை கழட்ட முயற்சி செஞ்சு ஒன்றரை வயசுக்குள்ள வெற்றியும் பெற்று விட்டாள். கையில் வச்சிருந்து முழுங்கிட்டா என்ன பண்றதுன்னு, அதையும் கழட்டி வைச்சதுதான், இன்னும் போடலை. எங்கம்மாவும் திட்டித் திட்டி பார்த்துட்டாங்க. நாமதான் சொன்னா செய்ய மாட்டோமே! ஒருவேளை சொல்லாம இருந்திருந்தா போட்டிருப்பேனோ என்னவோ!

கொலுசு போட்டும் பழக்கமில்லை எனக்கு. ஆனா யாராவது போட்டிருந்தா பார்க்கப் பிடிக்கும்.
கல்யாணத்தின் போது, அம்மா ஒரு செட்டும், கல்யாணத்திற்கு அப்புறமும் மாமியார் ஒரு செட்டும் கொடுத்தாங்க. ஆனா, நாந்தான் போட்டுக்க மாட்டேனே.வழக்கம் போல மாமனார் கொலுசு போடும்மா ந்னு சொன்னார். ரொம்ப சத்தம் வரும் அங்கிள், ஆபிஸ்-ல் எல்லாரும் என்னையே பார்க்கற மாதிரி பீலிங் ந்னு சொன்னது,, அந்த மணிகளை மட்டும் எடுத்திட்டு கொடுத்தார். அப்புறம் அவங்க ஊருக்குப் போனப்பறம் கழட்டி வைக்கிறது, அவங்க நாளைக்கு வராங்க இன்னைக்கு நைட் எடுத்து போட்டுக்கறதுன்னு ரெண்டு மூனு தடவை நடந்துச்சு. நம்ம கொள்கைகள், விருப்பங்கள் அடுத்தவங்களை காயப் படுத்திடக்கூடாதுன்னு! அப்புறம், முகில் இதைப் பார்த்திட்டு, உனக்கு இஷ்டமில்லேன்னா போடாதே, நான் கேட்டா சொல்லிக்கறேன் அப்படின்னு சொல்லிட்டாங்க. சோ, அதுக்கும் டாடா!!

நகையெல்லாம், சிட்டில வீட்டுல இருந்தா பயம்ன்னு, லாக்கர்ல கொஞ்சம், எங்க மாமியார் வீட்டுல கொஞ்சம்னு இருக்கும். ஏன்னா, சில சமயம் அது ஹிந்தி ட்யூசன் படிக்கப் போகும். அதேசமயம், ஊரில விசேஷம்னா, அங்க இருக்கும் நகையை போட்டுக்கிட்டு போகலாம். மத்தபடி தாலி போட்டிருக்கும் செயின் மட்டும்தான்! கொத்துக் கொத்தா போட்டுக்கற வழக்கமும் கிடையாது. இப்போ சுத்தமா வளையலும் கிடையாது, போட்டிருந்தா இப்படி டைப் அடிக்கமுடியுமா என்ன! காலேஜ் டே, சாரி டே மாதிரி வந்தா மட்டும் பேஷனபிளா போட்டுப்பேன். அவ்வளவுதா, ஆனா சின்ன வயசுல எக்கச்சக்கமா பான்ஸி வளையல்கள் போட்டிருக்கேன். அதுக்கு அப்புறம் பிரெஸ்லெட்தான். ஏனோ தங்க வளையல் என் கைக்கு நல்லாயில்லாத மாதிரி பீலிங். சின்ன வயசுலே ஒரு தடவை, குடும்ப நண்பர் கல்யாணத்தில், செயினையோ கம்மலையோ வேற தொலைச்சுட்டேன்! அவ்ளோதான், அதுவும் கட். அதுவும் இல்லாம, காலேஜ் படிச்சது ஹாஸ்டல், அதுவும் கொடைக்கானல். பனிரெண்டு மணிநேர பயணம். அதனாலேயே காதுல போட்டுக்க சின்னச் சின்ன கம்மலா கலெக்‌ஷன் வச்சிருப்பேன். உயிருக்கே ஆபத்தாயிடக்கூடாது இல்லையா! அப்படியே போட்டு போட்டு, இப்போ எனகிட்ட இருக்கறதெல்லாம் லைட் வெயிட் மாடல்கள் தான்!

பதிவு ரொம்ப நீளமா போய்கிட்டிருக்கு!
முடிவா என்னன்னா, சாதாரணமான நாட்கள், அலுவலகம் செல்லும் போது கம்மல்,
தாலி போட்டிருக்கும் செயின். வளையல், பூ நோ எண்ட்ரி! புடவை, அதான் சொன்னேனே, கல்யாணம் அதுவும் காலை முகூர்த்ததிற்கு போனால் மட்டுமே. ரிசப்ஷன் என்றால் சல்வார்! இப்படியிருக்கும் நான், என்னோட அடுத்த தலைமுறைக்கு என்ன கத்துக் கொடுக்கப் போறேன்னு நினைக்கறீங்க? உனக்கு இஷ்டமிருந்தா இதெல்லாம் போட்டுக்கோ, வற்புறுத்தவோ தலையிடவோ மாட்டேன். ஆனா, உனக்கு பிடிச்சமாதிரி வேணுங்கறதை நீ சம்பாரிச்சுதான் வாங்கிக்கணும்!

பி.கு:
இதுக்கு எல்லாம் காரணம், அமித்து அம்மாவோட போட்டோ பார்த்து ஒன்னைக் காட்டினாங்க..பார்த்தா, கையில் ஒரு வேல் வைச்சி, ஏதாவதொரு பூவுக்குள்ள நிக்கவோ உட்காராவோ வைச்சு அம்மன் படம் தோத்துது போங்க, அந்த ரேஞ்சுல இருந்தாங்க!! அதைப் பத்தி பேசிக்கிட்டே இருந்தப்போ இதைப் பத்தி பதிவு போடலாமான்னு பேசினது, இப்போ இந்த நெலமையில் இருக்கு. யாராவது இந்தப் பதிவை தொடர்ந்தா நல்லாயிருக்கும்!

Add a comment திசெம்பர் 6, 2008

சினிமா சினிமா…..என்னோட ரெண்டு பைசா!!

சினிமா பற்றி எங்கிட்டே கேட்டிருக்கிற ஆயில்ஸை நினைச்சா எனக்கு அழறதா, சிரிக்கறதான்னுக் கூட தெரியல..ஏன்னா எனக்கும் சினிமாவுக்குமான சம்பந்தம் அப்படி!
சினிமா/சினிமாப் பாடல்கள் பொதுவாக எங்கள் வீட்டில் தடா! அதுவும் தியேட்டருக்கு போவது பற்றி கேட்கவே வேண்டாம். ”அந்த மூனு மணிநேரத்தில நீ எவ்வளவோ செய்யலாம்(ம்ம்..என்னத்தை செஞ்சி,அதை விடுங்க,,வேற கதை!!),மரத்தை சுற்றி அவனுங்க
டூயட் பாடுறத பார்க்கணூமா” என்று எங்கள் வீட்டினரால் அது ஒரு நல்ல காரியமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்தக் கட்டுப்பாட்டினாலேயே,நான் ஹிந்திக்கு மாறினேன்..ஏன்னா, தமிழ் படம் பார்த்ததான திட்டுறாங்க, ஹிந்தின்னா விட்டுவாங்க..ஆனா இதைவிட மோசமா இருக்கும் அதில, ஆனா வீட்டுல இருக்கறவங்களுக்குப் மெயினா பாட்டிக்குப் புரியாதே!!இதுதான், நான் இந்திப் பாடல்களை/ஆல்பங்களை ரசிக்க முதல் காரணம். பள்ளி முடிக்கறவரைக்கும் அவங்கதான் என் எதிரி. ஆனா, இப்போதான், அதுவும் நான் ஒரு குழந்தையோட எதிர்காலத்துக்கு பொறுப்பாளின்னு ஆனதுக்கு அப்புறம்தான், அவங்க நிலைமை புரியுது!!

எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்

அதாவது எனக்கு ரொம்ப சின்ன வயதில..அநேகமா இரண்டு வயது இருக்கும்போது சகலகலா வல்லவன், தியேட்டரில் பார்த்ததாக என் பாட்டி சொல்கிறார்கள். ஏன்னா, அப்போ அந்த சினிமாவால எனக்கு எந்த பாதிப்பும் வரக் கூடிய பாதகம் இல்லைன்னு நினைச்சிருக்கலாம். அப்போ நாங்க ஆம்பூரில் ஐந்து குடித்தனக்காரர்கள் இருந்த வீட்டில் இருந்தோம்.அப்போ வேலைக்கு போகிறவர்களை அனுப்பிவிட்டு வீட்டிலிருக்கும் பெண்கள் எல்லாருமாக மாட்டினிக் காட்சிக்குக் கிளம்பிப் போயிருக்கிறார்கள்.

ஆனால் நினைவு தெரிந்து பார்த்த சினிமா என்றால், மை டியர் குட்டிச்சாத்தான் பார்த்தது, அதுவும் ஐஸ்கிரீம் மற்றும் பலூன் பிடிக்க கை நீட்டியது மங்கலாக நினவில் இருக்கிறது. அதிலும் முன்சீட்-டில் இருப்பவர்கள் பிடித்துவிட போகிறார்கள் என்று எண்ணியது அதைவிட நன்றாக நினைவிருக்கிறது.

அந்த வயதில் என்ன பீல் பண்ணினேன் என்றால், சொன்னால் சிரிப்பு வரும்..நேராகவே யாராவது வந்து பேசுவார்கள், அப்புறம் போய் வேறே ட்ரெஸ் செய்துக் கொண்டு வருவார்கள் என்றுதான் நீண்டநாள் நினைத்திருந்தேன். அதுவும், ஃப்ளாசஷ்பாக் வந்ததென்றால், அவர்கள் சின்ன வயதாயிருக்கையிலே எடுத்துவிடுவார்கள் போல என்றும் மனதிற்கும் எண்ணியிருக்கிறேன். ஆனால்,இதுவரை இந்த நினைவை என் கல்லூரி நண்பர்கள் தவிர வேறு யாரிடமும் பகிர்ந்தததில்லை. (இந்த மாதிரி மொக்கைத்தனமாக யோசிப்பதில் நான் கில்லாடியாக்கும்!!)

மை டியர்…க்கு அப்புறம் ஒரு ஆங்கில சினிமா..டாம் சாயர், ஹல்வா வாலா ஆகையா பாடல் வரும் இந்தி படம் இவை பார்த்து அடுத்ததாக நான் தியேட்டரில் பார்த்த படம்
அஞ்சலி!!அஞ்சலிக்கு அப்புறமா நான் தியேட்டரில் போய் பார்த்தது ஜூராசிக் பார்க்!! எவ்ளோ பெரிய கேப்!!இப்போது புரிந்திருக்குமே, எங்கள் வீட்டைப் பற்றி!!அதே தான்..சினிமா பார்த்து பசங்க கெட்டுப் போயிடுவாங்க என்ற மைண்ட் செட் உள்ள ஒரு நடுத்தரக் வர்க்க குடும்பம்!!

ஆனால் இதற்கு எல்லாம் சேர்த்து கல்லூரி காலத்தில் ஈடு கட்டிவிட்டேன்!! வாரத்துக் ரெண்டு சினிமா பார்த்து பார்த்து சினிமாவே பிடிக்காம போனது வேறு கதை!

கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

அஞ்சாதே! உறவினர்கள் யாராவது வந்தால் பப்புவை விட்டுவிட்டு முகிலுடன் சத்யம் தியேட்டரில் நைட் ஷோ!

ப்லாக் ரெவ்யூ பார்த்துவிட்டு அல்லது ஒரு சில இயக்குநர்களின் படம் என்றால் பார்க்கப் போவது என்றாகி விட்டது!பெரும்பாலும் லக்கியின் ரெவ்யூவிற்கு எங்கள் வீட்டில் மரியாதை உண்டு..ஆனால் இப்போதெல்லாம் லக்கி மொக்கைப் படங்களுக்கும் நல்ல கமெண்ட் கொடுத்துவிடுகிறார்! அஞ்சாதே பற்றி நல்லா எழுதுவாரென்று நினைத்தேன்,ஆனால் கிழிகிழியென்று கிழித்துவிட்டார்! :-).

கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

ம்ம்..டவுன்லோடு செய்து பார்த்த ஆண்பாவம். சிரிசிரியென்று சிரித்தேன். எந்த மாதிரியும் பொல்யூஷனும் (வன்முறை, வுமென் எக்ஸ்ப்ளாய்ட்டேஷனோ என்று பொருள் கொள்க!) இல்லாத படம். ஒரு சண்டைக் காட்சி வரும், அதுவும் சிரிப்பாகவே இருக்கும்!

மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?

பருத்திவீரன்! பார்த்து ரெண்டு மூன்று நாட்களுக்கு சரியாக தூக்கம் இல்லாமல், அமீருக்கு லெட்டர் எழுதப் போறேனென்று, முகிலிடம் புலம்ப வைத்தது.
மடிப்பாக்கம் வேலன்/வெற்றிவேலனோ என நினைக்கிறேன்! அப்புறம் ஒன்பது ரூபாய் நோட்டு, சொல்ல மறந்த கதை! தங்கரின் படங்கள் எதையும் மிஸ் பண்ணக் கூடாதென எண்ணியிருக்கிறேன்.

அப்புறம் நகைச்சுவைக்காக, தில்லுமுல்லு, சென்னை-28 என்னுடைய ஆல் டைம் ஃபேவரிட்.

உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?

ரஜினி மன்னிப்பு கேட்டது!!

தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

இப்போ ஆனந்த விகடனில் என்ன இருக்குன்னு நினைக்கறீங்க..சினிமா, சினிமா நடிக/நடிகையர் பற்றி செய்திகள்தானே! சினிமாவையே வேறு வடிவத்தில் பார்ப்பது
போல் இருக்கிறது சில நேரம்! எங்கள் வீட்டில் இருக்கும் பழைய ஆ.வி.யை கம்பேர் செய்யும்போத்யு இன்றைய ஆ.வியில் சினிமா தூக்கலாக இருப்பது உண்மை!!

தமிழ் சினிமா இசை?

இதுவும் நான் சினிமா பார்த்த கதைதான். அதாவது ஒன்று நினைவு தெரியாத வயதாயிருக்கையில் வாங்கிய கேசட்டுகள்/ஒலித்த பாடல்கள். அதுவும் உனக்கு நான், எனக்கு நீ என்று பாடல்கள் வந்தால் அது கட்.ஏதோ ஒளியும் ஒலியும் புண்ணியம் கட்டிக்கொண்டது!ஆனால், ஒருசில பாடல்கள் என் சித்தப்பா போட்டுக் கேட்பார் இது ஒரு பொன்மாலை பொழுது…மாதிரியான ஹிட்ஸ். ஆனால், வீட்டில் எனக்குத் தெரிந்து ஒலித்தவை போனி எம், அபா, எரப்ஷன், பீட்டில்ஸ் இன்னபிற. ஆனால், நான் வளர ஆரம்பித்த பின், எங்கள் வீட்டு பெரியவர்கள் சினிமா/பாட்டு பார்த்த/கேட்டது மில்லை விட்டதுமில்லை… :(..அதனால்தான் இப்போது ரேடியோஸ்பதியின் ஒரு பதிவினை விடுவதில்லை…ஆனால் வேலைக்கு வந்தபின்/திருமணத்திற்கு பின் கேட்பவை முழுவதும் இந்த ம்யூசிக் சானல்கள்தான்!

தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

இந்தியில் ப்ளாக், தாரே..! ஆங்கிலத்தில சவுண்ட் ஆஃப் ம்யூசிக், கான் வித் த விண்ட். சவுண்ட் ஆஃப் ம்யூசிக் எப்பவுமே பார்க்கப் பிடிக்கும்.
அப்புறம் ஷாருக்கின் படங்கள் in 90s!

தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

அப்படியெல்லாம் எதுவும் இல்லாம இருக்கறதே, தமிழ் சினிமா மேம்பட உதவும்!

தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இதுக்கு குசும்பனோட பதில்தான் ரொம்பப் பொருத்தம். ரொம்ப சிரிச்சேன், அதைப் படிச்சிட்டு!

அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

:-)). நான் 13 வருடங்களாக(என் பால்ய காலத்தை) வாழ்ந்த வாழ்வை எல்லாருமே வாழ்வீர்கள்! தமிழில் நிறைய இசை ஆல்பங்கள் வரலாமென எதிர்பார்க்கிறேன். ஆல்பத்தின் பாடல்களிலியே ஒரு சினிமாவை அடக்கிவிடலாம்!

அழைத்த ஆயில்ஸுக்கு நன்றி! நான் அழைக்கும் ஐந்து பேர்!!

அமிர்தவர்ஷினி அம்மா
தாமிரா
பிரேம்குமார்
சிநேகிதி
அமுதா

Add a comment ஒக்ரோபர் 14, 2008

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

பிப்ரவரி 2019
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

Posts by Month

Posts by Category