ஊ ஃபார் …

நவம்பர் 15, 2009 sandanamullai

…ஊருக்குப் போறோம்!

“உங்களுக்கு எந்த ஊரு” என்று கேட்டால் உடனே சொல்லிவிட முடிவதில்லை. வடலூரில் இருக்கும் போது ஆம்பூர்காரியாகவும், ஆம்பூரில் இருக்கும் போது வடலூர்க்காரியாகவும் கொடைக்கானலில், இவையிரணடில் அந்த நேரத்தில் எது தூக்கலாக இருக்கிறதோ அந்த ஊர்க்காரியாகவும், பெங்களூரில் சென்னைக்காரியாகவும் இருந்த எனக்கு சட்டென நேரும் குழப்பமே அது! கல்லூரியில் எப்போதும் ஆம்பூர்க்காரியாகவும், வடலூரை(சுற்றியிருக்கும் கிராமங்களான நெய்வேலி, பண்ரூட்டி, விருத்தாசலம் ஊரைச்) சேர்ந்தவர்களை சந்தித்தால் வடலூர்க்காரியாகவும் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறேன். ஆயாவின் பூர்வீகம் கடலூராக இருந்தாலும் அவர்கள் செட்டிலானது வடலூரில்தான்.

”ஊருக்குப் போறோம்” என்ற வார்த்தைகள் சிறுவயதில் எனக்குள் ஏற்படுத்திய கொஞ்சம்ஜாலி, கொஞ்சம் கலவரம், கொஞ்சம் கிலி என்ற கலவையான உணர்வுகள்!!

வளர்ந்தபிறகு ”நான்ல்லாம் அந்த ஊருக்கு வரவே மாட்டேன்ப்பா, ஊரா அது” என்று முரண்டுபிடித்திருக்கிறேன். வடலூர் மேல் இவ்வளவு வெறுப்பு வர பெரிதான காரணங்களொன்றும் தேவையில்லை…ஆம்பூரிலிருந்து வடலூர் செல்ல ஆகும் நேரம் – ஒரு நாள்-பஸ்ஸில்! இப்போதல்ல, ஒரு இருபது வருடஙளுக்கு முன்னால்!- பை பாஸ் ரோடுகளோ,ஹை வேக்களோ வந்திராத காலம்!! அதுவும், ஆயா பென்ஷன் வாங்க இரண்டு மாதங்களுக்கொரு முறை நெய்வேலி ட்ரெஷரி அல்லது வடலூர் செல்ல வேண்டும். ஆயாவோடு நானும்! எனது நான்கு வயதிலிருந்து எட்டாம் வகுப்பு வரை இந்தப்பயணம் தொடர்ந்தது. ஆம்பூரிலிருந்து வேலூர், வேலூரிலிருந்து திருவண்ணாமலை, திருவண்ணாமலையிலிருந்து திருக்கோவிலூர், திருக்கோவிலிருந்து பண்ருட்டி, பண்ருட்டிலிருந்து வடலூர்!!

காலை ஆறு அல்லது ஆறரைக்கு கிளம்பினோமானால் (அன்று) மாலையே ஆறரைக்கு வடலூர் சென்றுவிடலாம்.ஆயாவின் ட்ரேடு மார்க் ஒரு டவாலி பை. கட்டங்கள் போட்ட கதர் துணியில் ஜிப் தைத்த டவாலிப் பை. பார்த்த மாத்திரத்திலேயே நான் வெறுக்கும் வஸ்து அது!! அதில் தண்ணீர் பாட்டில், டிக்கெட்டிற்கான காசு கொண்ட வள்ளி விலாஸ் பர்ஸ், முகம் துடைக்க சிறு வெள்ளைத் துண்டுகள் அப்புறம் எனக்கு பாலித்தீன் கவர்கள், பழைய செய்தித்தாட்கள் – பஸ்ஸில் ஏறி அமர்ந்துவிட்டால் வயிறு பிரட்டுமே அதற்கு. எப்படியும் ஜன்னல் சீட் எனக்குத்தான். அதுவும் அந்த டீசல் வாசம் வந்துவிட்டாலோ…போச்!!ஆனால் எவ்வளவுதான் டயர்டு ஆனாலும் ஊருக்குப் போனதும் விளையாட ஆரம்பித்தபின் டயர்டாவது ஒன்றாவது!! சோர்வு என்பதைவிட நாள் முழுவதும் பஸ்ஸில் செல்வது – அதுவும் விளையாட முடியாமல் ஒன்றும் செய்யமுடியாமல் ஒரு சீட்டிலே முடக்கப்பட்டிருந்த உணர்வே அது என்பது இப்போது புரிகிறது! ஆனாலும் ஊருக்குப் போவது ஜாலியாக இருக்கும். பட்டுக்கோட்டை, தந்தை பெரியார், திருவள்ளுவர் என்று பலவித பஸ் அனுபவங்களுடன் வடஆற்காடு மாவட்டத்திற்கும் தென்னாற்காடு மாவட்டத்திற்குமான பயணம் அது!

ஆம்பூர் டூ வேலூர் தூக்க கலக்கத்தில் போய்விடும். வேலூரில் வேறு பஸ் ஸ்டாண்ட் மாறி செல்ல வேண்டும். அதற்குள் ஆயா எனக்கு கோகுலம், சாத்துக்குடி,பிஸ்கட் எல்லாம் ஸ்பான்ஸர் செய்வார். ஆனால், பஸ்ஸில் படிக்கக்கூடாது – கண் கெட்டுவிடும்! நடுவில் இருக்கும் 16 வண்ணப்படக்தையை மட்டும் படிக்கிறேனென்று படித்து விட்டு அப்புறம் வேடிக்கைதான். பாயிண்ட் டூ பாயின்ட் எல்லாம் வந்திராத காலம்! ஊருக்கு ஊர் நின்று செல்லும் பஸ்ஸாக இருக்கும் – வேலூர் டூ திருவண்ணாமலை ஜாலியாக போகும் – காலை நேரம் வெயில் அவ்வளவாக இருக்காது! திருவண்ணாமலையில் நல்லவேளை ஒரே பஸ் ஸ்டாண்டுதான். எப்படியும் ஆயாவுக்கு கண்டக்டரும் டிரைவரும் ஃப்ரெண்ட் ஆகிவிடுவார்கள். கிளம்புமிடத்திலிருந்து சேரும் இடம் வரை செல்பவர்களை மிகுந்த மரியாதையுடன் நடத்துவார் நடத்துனர்! ஆயாவும் அவர்பங்குக்கு, உறவினர் ஒருவர் பட்டுக்கோட்டையில் டிரைவராக பணியாற்றுவதைச் சொல்லுவார். ஒரு சில டிரைவர்கள் ஆயாவை நினைவிலும் வைத்திருப்பர்!! அவர்கள் சாப்பிட, டீ குடிக்க நிறுத்தும்போது எங்களுக்கும் சொல்வார்கள். ஆயா மறக்காமல் திருவண்ணாமலையில் பஸ் ஸ்டாண்டின் எதிரி்லிருக்கும் ஒரு கடையில் பக்கோடா வாங்குவார்! பெரிய மாமாவுக்கு அந்த பக்கோடாவென்றால் இஷ்டமாம்!நிறுத்தத்திலிருந்து பேருந்தை உடனே கிளப்பி விட மாட்டார் டிரைவர், சில நிமிட இடைவெளிகளில் மூன்று தடவை கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்துவார், ஹார்ன் சத்தத்துடன்.

குண்டும் குழியுமான ரோடில் குதித்து குதித்து செல்லும் பஸ் – சடன் ப்ரேக் போட்டால் முன்நெற்றி சென்று இடித்துக்கொள்ள இருக்கும் நேரத்தில் பின்னால் ஒரு டமார் – நாம்தான்
பின்னால் சென்றிருப்போம். முன்ஜாக்கிரதை காரர்கள் முன்சீட்டின் கம்பியை பிடித்துக்கொண்டு சீட்டின் நுனியில் வந்திருப்பார்கள்! ஜன்னல்களின் மேலே வெள்ளை நிற பெயிண்டில் ”கரம் சிரம் புறம் நீட்டாதீர்”. “யாகாவாராயினும் நாகாக்க”, ”தீயினாற் சுட்ட புண்”டிரைவரின் சீட் பின்னால் இருக்கும். திருவள்ளுவர் பஸ்களில் முதலுதவி பெட்டி வைத்திருப்பார்கள். அதனால் அதற்கு மேலே திருக்குறளின் இரண்டாம் வரி தெரியாதவாறு எழுதி வைத்திருப்பார்கள். இந்த பஸ்களின் சீட்கள் உயர்ந்திருக்கும். குஷன் சீட்கள் – தலை சாய்த்துக்கொள்ள வசதியாக. ஆனால் எனக்கு அது வசதியாகவே இருந்ததில்லை. சீட்களுக்கு நடுவே கட்டைகள் இருக்கும்.பட்டுக்கோட்டை, தந்தை பெரியார் பஸ்களில் சாதாரண சீட்கள்..பெரும்பாலும் பஸ்ஸின் நடுவில் கம்பி இருக்கும் சீட் அருகில் தான் உட்காருவோமென்று நினைக்கிறேன் அல்லது அங்கே உட்காரக்கூடாதோ ஏதோ ஒன்று நினைவில்லை.

ஆனால், சீட்டை தேர்ந்தெடுப்பதில் அந்தக் கம்பி பெரும்பங்கு வகித்தது! அதுவும் முன்சீட்டில் உட்கார்ந்தாலும் உட்காரலாம், பின்சீட் கண்டிப்பாகக் கூடாது, தூக்கி தூக்கிப் போடுமே! ஆனால் அந்த பம்ப்பி ரைட்டிற்கு மனதளவில் ஆசைப்பட்டிருக்கிறேன், அந்த வயதில்! சீட்டிலிருந்து முன்னால் பார்த்தால் தூரத்தில் ரோடு மேடாக தெரியும். பள்ளத்திலிருந்து இறங்குவது எனக்கு சறுக்குவது போன்ற உணர்வை தருமாதலால் காத்துக்கொண்டிருப்பேன், ஆனால் அது உண்மையில் மேடு அல்ல! மேலும்,ரோடின் இருபுறமும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல்வெளிகள், மேலே பறக்கும் வெள்ளை நிற பறவைகள் (கொக்கா அல்லது நாரையா?!) சமயங்களில் ஜன்னலை தாண்டி பஸ்ஸில் எட்டிப்பார்த்து செல்லும் ரோடில் வளர்ந்திருக்கும் நீளமான சூரை முட்செடிகள்! திருவண்ணாமலையில் மதிய உணவு முடிந்தபின்னர், ‘எப்போதடா ஆற்றின் நடுவில் கல்லின் மேலிருக்கும் ஒரு கோயில் வருமெ’ன்று காத்துக்கொண்டிருப்பேன்.

ஏனென்றால், எனக்கு அது அடுத்த மைல்கல் – அந்த ஊர் திருக்கோவிலூர்.அந்த கோவிலில் காவி வண்ணமும் சுண்ணாம்பும் கலந்து பட்டையாக அடித்து வைத்திருப்பார்கள். எப்படி அதன் மேல் ஏறுவார்களென்று வியப்பாக இருக்கும்! மேலும் ரோட் நடுவில் கம்பு மற்றும் கேழ்வரகு போன்ற தானியங்களை கொட்டி வைத்திருப்பார்கள். ரோடிற்குள் தள்ளிவிட ஓடிவரும் முக்காடிட்ட பெண்கள், பழுப்பேறிய வேட்டியை உயர்த்தி கட்டிக்கொண்டு தலையில் துண்டை கட்டியிருக்கும் ஆண்கள், பஸ்ஸுக்கு டாடா காட்டும் குட்டிப்பசங்கள் என்று நல்ல காட்சிதான். ஆனால், என்ன, தூசி கண்ணில் விழுந்துவிட்டால்தான் கஷ்டம்! மழை வந்தால் அது தனிக்கதை.அடிக்கும் சாரலை தடுக்க துருபிடித்த ஷட்டரை மூட முடியாது – சட்டென சில கைகள் உதவிக்கு நீளும்.

திருக்கோவிலூர் கொஞ்சம் காய்ந்த ஊர் என்ற நினைப்பு எனக்கு. தண்ணீர் இல்லாத மணல் தெரியும் வறண்ட ஆறு. மரங்கள் இல்லாத குன்றுகள்.புழுதி பறக்கும் சாலைகள் – கண்கள் இடுங்கி ,உழைத்து உழைத்து சுருக்கங்கள் விழுந்த வந்த ஒல்லியான மக்கள் ! மேலும் திருக்கோவிலூர் என்றால் உடனே நினைவுக்கு வருவது வாழைப்பழ சீப்பை எடுத்துக்கொண்டு பஸ் புறப்பட்டபின்னரும் கூடவே ஓடிவரும் மக்கள்!!’நான் படிச்சு பெரிய ஆளாகி அவங்களுக்கெல்லாம் ஹெல்ப் பண்ணுவேன்’ என்று எனக்குள் நானே நினைத்துக்கொண்டது நினைவோடே நின்றுவிட்டது!!

அடுத்து – பண்ருட்டி! அதைப்பற்றி அடுத்த இடுகையில் தொடர்கிறேன்.

Entry Filed under: உயிரெழுத்துத் தொடர்,குடும்பம்,நினைவுகள்

பின்னூட்டமொன்றை இடுக

Trackback this post  |  Subscribe to comments via RSS Feed

பக்கங்கள்

பிரிவுகள்

நாட்காட்டி

நவம்பர் 2009
தி செ பு விய வெ ஞா
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Most Recent Posts