நவம்பர் 2009 க்கான தொகுப்பு
பாப்பு செய்த மணிமாலை

பாப்புவுக்கு பள்ளி நேரம் மாலை மூன்று மணியுடன் முடிந்து விடும் ,வீட்டிற்கு வந்த பின் உடனே யூனி பார்ம் கூட மாற்றிக் கொள்ளாமல் அவள் செய்யும் முதல் வேலை டி .வியை ஆன் செய்வது தான்…பிறகு அவள் இரவு தூங்கச் செல்லும் வரை அது ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் , அதில் வரும் நிகழ்ச்சிகளைப் பார்க்கிறாளோ இல்லையோ டி.வி அது பாட்டுக்கு ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் ,இப்படி ஒரு கட்டாய மனநிலை,ஒற்றைக் குழந்தையாய் வளரும் பல குழந்தைகளுக்கும் இருக்கக் கூடும் என்றே தோன்றினாலும் ,இந்தப் பழக்கத்தை மாற்றியே ஆக வேண்டும் என முயன்றதில் நல்ல பலன் .
நேற்று இந்த செயற்கை மாலையும் ,இயர் ஹேங்கிங்கும் பாப்புவே தன் கையால் செய்து காட்டினாள் எனக்கும் அவளது அப்பாவுக்கும்.இன்றைக்கு பள்ளிக்கு எடுத்துக் கொண்டு செல்கிறாள் அவளது அனிதா மிஸ்ஸிடம் காண்பிக்க வேண்டுமாம்.
மணிமாலை செய்யத் தேவையான பொருட்கள்:
மீடியம் சைஸ் பீட்ஸ் – 40 (கலர் கலராக கலந்து வாங்கிக் கொள்ளவும் )மாலை முகப்பு(டாலர் போல) செய்ய – 3 சிறு மணிகள் பிணைத்த தொங்கல்கள்
நரம்பு ( கோர்க்க) – 3௦0 சென்டி மீட்டர் (அல்லது) தேவையான அளவு
திருகு அல்லது கூக் – 1 ஒன்று (ரெடிமேட் ஆகவே கடைகளில்
கிடைக்கும்)
நரம்பில் விரும்பும் வண்ணங்களில் மணிகளைக் கோர்த்து இரண்டு முனைகளையும் பிணைக்கும் போது ஏற்க்கனவே வாங்கி வைத்த ரெடி மேட் ஹூக்கின் பின்புற முனைகளையும் மணிகளின் கடைசியில் உள்ளே கோர்த்து உட்புறமாக முடிச்சிடவும் .
இயர் ஹேங்கிங் செய்யத் தேவையானவை :
மாலை முகப்பு செய்யப் பயன்படுத்திய சிறுமணிகள் பிணைத்த தொங்கல்கள் – 2
கேங்கிங் கூக் – 2
இது மாலை செய்வதைக் காட்டிலும் எளிதானது வாங்கி வைத்த ரெடிமேட் ஹேங்கிங் ஹூக்கில் சிறுமணிகள் பிணைத்த தொங்கல்களை பிணைத்தால் இயர் ஹேங்கிங் ரெடி .இப்படியாக நேற்று பாப்பு அதிகம் டி.வி பார்க்கவில்லை ,மேஜிக் வொண்டர் லேன்ட் மட்டுமே பார்த்து விட்டு ஹோம் வொர்க் செய்தாள்,பிறகென்ன தூக்கம் வரவே சரியான நேரத்திற்கு தூங்கப் போய் இன்றைய பொழுது அவசரமின்றி அழகாக விடிந்தது.
எனக்கும் ஐயோ ! …எந்நேரமும் டிவி பார்க்கிறாளே என்ற பயம் குறைந்தது, ஆனாலும் கதை இன்னும் முடியவில்லை தான் ;அடுத்தென்ன செய்யலாம் அவளது கவனம் டி.விக்குச் செல்லாமல் தடுக்க என்று யோசிப்பதில் காலம் கரைகிறது எனக்கு .
Advertisements

6 பின்னூட்டங்கள் நவம்பர் 27, 2009

எ ஃபார்…

….. எடுத்துக்காட்டு!!

இந்த.காஎன்ற எடுத்துக்காட்டு படுத்தற பாடு இருக்கே!! யூகேஜிலேர்ந்து இன்னைக்கு வரைக்கும் நம்மை துரத்திக்கிட்டே வர்ற விஷயம்! முதல்லே ‘எ.கா’ -ன்றது ‘எடுத்துக்காட்டு’ அப்படின்னு எனக்கு புரியறதுக்கே சில பல வகுப்புகள் தாண்டி வர வேண்டியிருந்தது.

பளளிக்கூட புத்தகத்துலே பாடம் முடிஞ்சதும் அடுத்ததா கேள்விகள்/பயிற்சிக்கேள்விகள் இருக்கும். அது எப்படின்னா எடுத்துக்காட்டு ஒன்னு கொடுத்துட்டு அதே மாதிரி மீதியெல்லாம் செய்ங்க எனும் ரீதியில் இருக்கும். அறிவியல், தமிழ், ஆங்கில பாடங்கள் கூட சமாளிச்சிடலாம். ஆனால், இந்த கணக்கு பாடத்துலே இருக்குமே…அது ஒன்னொன்னும் ஒரு மாதிரி இருக்கும். எ.கா-ஆக இருக்கறது மட்டும் ஈசியா இருக்கும். ஒருவேளை ஈசியா இருக்கறதை மட்டும் எ.கா -ஆ செஞ்சு கொடுத்திட்டாங்களோன்னு தோணும்!

அதுவும், இந்த மணி பார்க்க கத்துக்கற காலகட்டம் மறக்கமுடியாதது… பாடத்துக்கு பின்னாடி நெறைய கடிகாரங்கள் வெவ்வேற நேரம் காட்டிய படி வரைஞ்சு இருக்கும். அதுலேயும் எ.கா-இல் இருக்கறது ரொம்ப ஈசியா 1.30 மணி காட்டும். ஆனா, நாம் எழுத வேண்டியது மட்டும், 7.45, 2.15 12.45 இப்படி இருக்கும். ஹாஃப் பாஸ்ட் 2, ஃக்வார்டர் டூ 8 – னுதான் சொல்லணும். ஆனா எ.கா-ஆக இதையெல்லாம் போட்டிருக்க மாட்டாங்க. நாமே “யாரேனும் மணி கேட்டால் அதை சொல்லக் கூட தெரியாதே” கேஸ்! நேராக சரியான மணி சொல்றதே பெருங்கஷ்டம், இந்த மாதிரி சுத்தி வளைச்சு சொல்லச் சொன்னா!!

எப்படியோ, மணியெல்லாம் (அட, கடிகாரத்திலேதான்!) பார்க்க கத்துக்கிட்டு பெரிய க்ளாஸ் வந்தா, கொஸ்டின் பேப்பரிலே, “கோலங்கைமா திசு, பாரங்கைமா திசு, மைட்டோகாண்ட்ரியா வை எ.கா டுடன் படம் வரைந்து விளக்கு” னு இருக்கும்! நமக்கு ஏதோ ஒரளவுக்கு ஒழுங்கா வரைய தெரிஞ்சது அமீபாதான். இதோட எங்க சயின்ஸ் டீச்சர் புண்ணியத்துலே மைட்டோகாண்ட்ரியா எப்படி இருக்கும்னு இப்போ வரைக்கும் ஞாபகம் இருக்கு! ஆனாலும் பத்தாவது பரீட்சையிலே கண் -னை (ஏன்னா அதுக்கு முன்னாடி வருஷம் கேள்வித்தாள்லே காது கேட்டிருந்தாங்க!) விழுந்து விழுந்து படிச்சுட்டுப் போக, கடைசிலே கொஸ்டின் பேப்பரில் ‘காது வரைந்து விளக்கு’ன்னு வந்து இருந்தது. என்ன பண்ண, மனசை கல்லாக்கிட்டு, படிச்சிட்டு போன கண்ணை வேஸ்ட் பண்ணாம, ‘இந்த மாதிரி இருக்கிற கண்ணுக்கு சற்றுத்தள்ளி காது இருக்கும்’ என்ற மாதிரி ஒரு விடை எழுதி விட்டு வந்தது வரலாறு!

ஆனாலும், கழித்தல் கற்றுக்கொண்ட போது, 10-இலிருந்து 3 போனா மீதி எவ்வளவு கேள்விக்கு புரியாமல் விடும் லுக்-கை பார்த்து, “உன்கிட்டே பத்து மாம்பழம் இருக்கு, மூனு மாம்பழம் அனு-வுக்கு கொடுத்துட்டா மீதி உன்கிட்டே எவ்வளவு இருக்கும்” ன்னு எ.கா-டோடு கேட்க, ”ஏன் அனுவுக்குக் கொடுக்கணும் நானேதான் சாப்பிடுவேன்” என்ற கேள்வி மனதில் பசுமையாக இருக்கிறது! அதேபோல் அல்ஜீப்ராவில் மைனஸூம் மைனஸூம் ப்ளஸ் என்று கற்றுக்கொண்டதும்!

ஒவ்வொரு பேப்பருக்கும் செமினார் – அந்த செமினாருக்கு இண்டர்னல் மதிப்பெண்களும் உண்டு. ‘எந்த டவுட்-னாலும் தனியா கேளு, என் செமினார்லெ நீ கேக்காதே, உன் செமினார்லே நான் கேக்க மாட்டேன்’ என்று சொல்லப்படாத டீலிங் வகுப்பில் நடைமுறையில் இருந்தது. இரண்டு செமினார்களை பார்த்த ஆசிரியர், டவுட்களை அவராக கேட்க ஆரம்பித்துவிட திருடனுக்குத் தேள். அதிலிருந்து தப்பிக்க, ‘நான் அவனை கேப்பேன், அவன் என்னை கேப்பான்” என்று போட்டு வைத்த திட்டத்தில் “ இதனை ஒரு எ.கா-டோடு விளக்க முடியுமா” என்ற கேள்விக்கே முதலிடம்!

ஏழாம் வகுப்பிலிருந்து படித்து வந்த ‘தொகை’களை, கல்லூரியில் விரிவாக நடத்திக்கொண்டிருந்தார் தமிழ் பேராசிரியர். ‘நமக்கெல்லாம் இந்த லேங்குவேஜா முக்கியம், சியும் சிபிபியும் தானே சோறு போட போகுது’ என்ற மிதப்பில் கனவு கண்டுக்கொண்டிருந்தபோது, ப்ரியாவிடம் “வினைத்தொகைக்கு’ எ.கா சொல்லுமா” என்றார் ஆசிரியர். ப்ரியா எதையுமே உணர்ச்சி பூர்வமாக விளக்குவாள். ஏதோ ஓர் அரவிந்தசாமி படக்கதையை மூன்று நாட்களாகச் சொன்னவள் அவள். சொல்வதோடு நில்லாமல் ஆக்‌ஷனும் உண்டு – ஒரு குழந்தையைப் போல!

சட்டென எழுந்த ப்ரியா,

”’பால்சோறு சாப்பிட்டான்’ங்க மேம்” என்று,
டெஸ்க்-லிருந்து எடுத்து சாப்பிடுவது போல ஆக்‌ஷ்னுடன் சொல்ல ஆசிரியருக்கே சிரிப்பு வந்துவிட்டது! ப்ரியா, அன்றிலிருந்து கொஞ்சநாளைக்கு ‘பால்சோறு’ ம் ஆனாள்! 🙂

உங்கள் எ.கா நினைவுகளையும் பகிர்ந்துக்கொள்ளுங்களேன்!

Add a comment நவம்பர் 27, 2009

தத்துவ முத்துக்களும் கருத்து குத்துக்களும்..

எப்போவும் பாய்ஸ் பக்கத்துலே பாய்ஸ்தான் உட்காரணும்..கேர்ல்ஸ் பக்கத்துலே கேர்லே வரணும்.

சின்னவங்க daappu, பெரியவங்க டூப்பு!

பாய்ஸ் எல்லாம் daappu, கேர்ல்ஸ் எல்லாம் டூப்பு!

கேர்ல்ஸ் தான் daappu, பாய்ஸ் எல்லாம் டூப்பு!

இதெல்லாம் பப்பு அப்போப்போ உதிர்த்த தத்துவங்கள். வேனிலே இப்படித்தான் கத்திக்கிட்டு வருவாங்களாம்!!மறுபடியும் டெம்ப்ளேட் மாத்திட்டேன். அந்த டெம்ப்ளேட் கொஞ்சநாள்லேயே போரடிச்சுடுச்சு. அதைப் பார்த்து எனக்கே தூக்கம் வந்து தூங்கிட்டேன்னா பார்த்துக்கோங்களேன்! அந்த டெம்ப்ளேட் மாத்திட்டு கருத்து கேட்போமேன்னு நானும் நாலு பேர்கிட்டே கேட்டேன்.

கருத்து 1 : டெம்ப்ளேட்-ல்லாம் ஓக்கே! Where is the girl on right side?

கருத்து 2 : இதுவும் நல்லாத்தான் இருக்கு. அந்த பொண்ணை மட்டும் இதிலே சேர்த்திடுங்க..சூப்பரா இருக்கும்.

கருத்து 3 : இது நல்லாருக்கு..ஆனா, அந்த டெம்ப்ளேட் பிடிச்சிருந்தது! (எ.கொ.ச.இ!!)

கருத்து 4 : ஹப்பாடா..ரொம்ப நாளா அந்த பொண்ணு நின்னுக்கிட்டே இருந்தாங்க, இப்போ உட்கார வைச்சுட்டீங்களா..வெரி குட்!

ம்ஹூம்! அப்புறம் நான் கருத்து கேக்கறதையே நிறுத்திட்டேன்!

எனக்கு பழைய டெம்ப்ளேட் மிகவும் பிடிக்கும். ஸ்கீரின்ஷாட் எடுத்து வைத்திருக்கிறேன். (எந்த பிரச்சினைக்காக மாற்றினேனோ அதே பிரச்சினை இப்போதைய டெம்ப்ளேட்டிலும் இருப்பது போலத்தான் தெரிகிறது!) மேலும், கைவசம் சில டெம்ப்ளேட்-கள் இருக்கின்றன.
இந்த டெம்ப்ளேட் கொஞ்சம் போரடித்தால்…:-)

Add a comment நவம்பர் 26, 2009

தங்களின் மேலான உதவி வேண்டி…

நண்பரின் நண்பர் நமக்கும் நண்பர்தானே! தயை கூர்ந்து உதவுங்கள்!!
அந்த நண்பர் விரைவில் உடல்நலம் பெறட்டும்!!

மேலும் விபரங்களுக்கு….

உதவுங்கள்

நண்பர்களே,

கிழக்கு பதிப்பகத்தில் என்னுடன் பணியாற்றிய முத்துராமன் என்கிற என் நண்பர் (வயது 33) இப்போது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் டயாலிஸிஸ் சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார். டயாலிஸி்ஸுக்கான மருத்துவச் செலவே மாதம் ரூ. 16,000 ஆகிறது. கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு ஆறு லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.

பலபேர் உதவினால் மட்டுமே சீக்கிரத்தில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடியும் என்கிற நிலைமை. எனவே உங்களால் முடிந்த தொகையை தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். சிறு உதவியாக இருந்தாலும் அது நிச்சயம் நண்பரின் வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

மேலும் இதுதொடர்பாக உதவக்கூடிய டிரஸ்டுகளில் உங்களுக்குப் பரிச்சயம் இருந்தாலும் சொல்லவும்.

முத்துராமன் அக்கவுண்ட் எண் –

Name – Muthuraman
State Bank of India (Mogappair) a/c no – 30963258849
IFS code no – 5090

MICR code : 600002118

முத்துராமன் முகவரி :

Muthuraman,
7/551, JJ Nagar West,
Near ERI Scheme Velammal School,
Mugappair West,
Chennai – 600037
Tamil Nadu. India.

Add a comment நவம்பர் 23, 2009

சனி-ஞாயிறு

சனிக்கிழமை ஒரு திருமண வரவேற்புக்கு சென்றிருந்தோம். ‘இனிமே கல்யாணிக்கெல்லாம்(கல்யாணம் இன் பப்புஸ் வெர்ஷன்) நான் வரமாட்டேன், அங்கே ரொம்ப நாய்ஸ்(Noice) இருக்கு’!! ஆர்கெஸ்ட்ராவுக்கு அருகில் நின்றுக்கொண்டிருந்தோம்! வரும்வழியில், ஏன் ரெண்டு பேருக்கும் கல்யாணி் நடக்குது, ஏன் எனக்கு நடக்கலை என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாள். நல்லா படிச்சு,வளர்ந்து, காலேஜ்-ல்லாம் போய் அப்புறம் ஆஃபீஸ் போனாத்தான் கல்யாணம் நடக்கும் என்று சொல்லிவைத்தேன். நீ தான் வளர்ந்து ஆஃபீஸ் போறியே, ஒனக்கு ஏன் கல்யாணம் நடக்கலை? என்று கேட்டாள்.

‘வாழ்க்கையிலே டிராஜிடி வரலாம், ஆனா டிராஜிடியே வாழ்க்கையா இருந்தா’ என்றெல்லாம் தத்துபித்துவங்கள் தோன்றினாலும் சொல்லாமல், “நீ பெரிய பொண்ணாகி ஏரோபிளேன்லே எங்கெல்லாம் போவே” என்று பேச்சை மாற்றினேன். ஒருமுறை அவள் ‘பெரியவளாகி சன் கிட்டே போய் ஏரோபிளேன் ஓட்டுவேன்’ என்று சொல்லியிருந்தாள்.

இந்தவாரயிறுதியில் பப்புவும் என்னோடு அலுவலகம் வந்தாள். வெளியே வரும் போது, எது அவளை அப்படி கேட்க வைத்தது என்று தெரியவில்லை!

“ஆச்சி, நீ ஆஃபீஸ்லே தூங்குவியா?”

Add a comment நவம்பர் 23, 2009

கிட்ஸ் புன்னகை உலகத்தில் பாப்பு

ஜெயாவின் முந்தைய பதிவைப் படித்து பாப்புவுக்கு சொல்லிக் கொண்டிருந்தேன் …முடிந்ததும் பாப்புவுக்கு என்ன தோன்றியதோ …ஹே…ஹே நானும் ப்ளாக் எழுதணும் மம்மி …ப்ளீஸ்…ப்ளீஸ் என்று ஒரே அடம்.

சரி என்ன எழுதணும் சொல்லு நான் நீ சொல்லச் சொல்ல டைப் பண்றேன் என்று அனுமதிக்கவே அவள் சொன்னது கீழே பார்வைக்கு …

“பேரன்ட்ஸ் வந்து சின்னக் குழந்தைங்க கொஞ்சம் சேட்டை பண்ணா மெதுவா சொல்லுவாங்க…சொன்னதைக் கேட்காம மறுபடி மறுபடி சேட்டை பண்ணா கண்டிக்க தான் செய்வாங்க…ஆனா நீங்க அம்மா அப்பா கண்டிக்கும் போது அவங்க பேச்சை கேட்டுட்டிங்கன்னா அவங்க இந்த மாதிரி கண்டிக்கவே தேவை இல்லை. எப்பவும் நல்ல குழந்தையா இருக்கற நீங்க அப்படியே இருந்திங்கன்னா மம்மி டாடி உங்களை ஒண்ணுமே சொல்ல மாட்டாங்க.இதெல்லாத்தையும் சொல்றது நான் தான் பாப்பு…இதை சொல்றதுக்கு எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு .

“ஹேவ் எ குட் டே “

பை..பை “

பாப்புவின் பள்ளியில் இருந்து ஒவ்வொரு மாதமும் புன்னகை உலகம் என்றொரு புத்தகம் அனுப்புவார்கள் ,இந்த இஸ்யூவில் “குழந்தைகளின் கிரியேட்டிவிட்டியை ” தூண்டவும் வளர்க்கவும் சொல்லப் பட்டிருந்த செய்திகளில் ஒன்று…

குழந்தைகளிடம் நிறைய புது புதுப் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருப்பது.

அதில் சில உதாரணங்கள் …

கேள்வி:

உனக்கு மூன்றாவதாக ஒரு கண் தோன்றி விட்டால் என்ன செய்வாய்?

பாப்புவின் பதில் :

மூனாவதா ஒரு கண்ணு வந்தா …கண்ணாமூச்சு விளையாடும் போது இந்த ரெண்டு கண்ணையும் மூடிட்டா நான் மூணாவது கண்ணை ஓபன் பண்ணிட்டு லார்ட் சிவா மாதிரி ஒளிஞ்சிட்டு இருக்கறவங்களை கண்டு பிடிப்பேன் ,கண்டிப்பா அந்த மூணாவது கண்ணை அப்படியே வச்சுப்பேன் … எடுக்க சொல்ல மாட்டேன். (ஏனோ…ஏனோ…அது ஏனோ?!) நல்லா இருக்கும் இல்ல மம்மி ?!

இதற்க்கு என்ன சொல்வேன் நான்?

அவளது பதில் கேட்டு ஒரு பக்கம் சந்தோசமாக உணர்ந்தேன் ;எந்த பதிலைச் சொல்வது என்ற தயக்கம் இல்லை அவளிடம் …அது போதுமாய் இருந்தது போலும் எனக்கு.

4 பின்னூட்டங்கள் நவம்பர் 22, 2009

எப்படி வளர்க்கலாம் குழந்தைகளை?

நம்மில் பலருக்கு நம் குழந்தைகளை பற்றிய கவலை கனவிலும் நினைவிலும் வாட்டி வதைக்கும். சரியாக சாப்பிட மாட்டேங்கறானே, சரியா படிக்க மாட்டேங்கறானே, எந்த நேரமும் டி.வி முன்னாடியே இருக்கானே, பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்க மாட்டேங்கறானே, வீட்டுக்கு வர்றவங்க கிட்ட நல்லபடியா பேச மாட்டேங்கறானே, அக்கா தங்கச்சி கிட்டே சண்டை போடறானே, யார் கிட்டேயும் தன்னோட பொருட்களை ஷேர் பண்ண மாட்டேங்கறானே, கீரை, பழங்கள், காய்கறிகள் சாப்பிட மாட்டேங்கறானே, சில காய்கறிதான் உள்ளே இறங்குது, மத்தது எல்லாம் சாப்பிடலை என்றால் எப்படி நல்லா வளருவான்? எந்த நேரமும் ஸ்நாக்ஸ் என கடையில் விற்கும் பண்டங்களை தின்னால் வயிறு என்ன ஆவது?, அப்புறம் எந்த கிளாஸுக்கும் போக மாட்டேங்கிறானே, பாட்டு கத்துக்க வேண்டாமா, டான்ஸ் கிளாஸ் போக வேண்டாமா, விளையாட்டு பொருட்களை பத்திரமாக எடுத்து வை என்று நூறு தரம் சொன்னாலும் எல்லாவற்றையும் தொலைத்து விடுகிறானே, ஒரு நிமிஷம் கூட கண்ணை எடுக்க முடியலையே, எதையாவது உடைத்து விடுகிறான், கொட்டி விடுகிறான், சில்மிஷம் செய்து விடுகிறானே என ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கவலைகள் இதில். இதில் பாதி எங்க அம்மாவின் புலம்பல் கூட. நல்ல பழக்கத்தை சொல்லித் தருகிறேன் பேர்வழி என்று அதனுடன் போராடி நாமும் டென்ஷன் ஆகி குழந்தையையும் டென்ஷன் ஆக்கி விடுவோம்.

நல்ல விஷயங்களை சொல்லித்தருவது நல்லதுதான் ஆனால் அதை எப்படி சொல்லுகிறோம் என்பது கூட ரொம்ப முக்கியம் என நான் நினைக்கிறேன். அகில் டி.வி. பார்க்கும், ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் – சாப்பிட்டு முடிக்கும் வரை, பின்னர் தூக்கம், எழுந்தால் திரும்ப கொஞ்ச நேரம் – இந்த கொஞ்ச நேரம் என்பது ஒரு இரண்டு மணி நேரம் வரை நீளும். நான் ஆபிஸில் இருந்து வரும் வரை அதற்க்கு செய்வதற்க்கு வேறு வேலை இல்லை, வீட்டின் அருகே நண்பர்கள் யாரும் இல்லை விளையாடுவதற்க்கு. பல நாட்களில் என் அம்மாவுடன் பீச் அல்லது பார்க் செல்லும், அது முடியாத போது மேலே சொன்னது போல டி.வி பார்க்கும். எனக்கு ஒரு பக்கம் பதட்டமாக இருக்கும், என்னடா இவன் இவ்வளவு டி.வி. பார்க்கிறானே, டி.வியின் அடிமை ஆகிவிடுவானோ என, டி.வி பார்க்காதே என்று தடை சொல்லவில்லை என்றாலும், அவ்வப்போது சொல்லுவேன் – அகில் டி.வி நிறைய பார்த்தால் மூளை மழுங்கி விடும், கண்கள் கெட்டு போவதற்க்கும் வாய்ப்பு இருக்கின்றது என்று. அதற்க்கென்று எப்போதும் டி.வியின் முன்னாடி இருக்க விடமாட்டேன், அவன் பார்த்தாலும் முடிந்த வரை கூட இருக்க பார்ப்பேன். சோட்டா பீம், ஹனுமான், டாம் அன்ட் ஜெர்ரி, ஒசோ, ஹாண்டி மேனி என என்ன பார்ப்பான் என்பதும் நான் சொல்லுவதுதான். இப்போது இன்னொரு பாப்பா வந்த பிறகு டி.வி பார்ப்பது இன்னும் கொஞ்சம் கூடிதான் இருக்கின்றது. அதிலும் நான் ரொம்ப கண்ட்ரோல் செய்வதில்லை. ஏனென்றால், என்னுடைய அம்மா என்னை விட புதிதாக வந்திருக்கும் பாப்பாவுடன் நிறைய நேரம் செலவிடுகிறான், என்னுடைய அம்மாவை என்னிடம் இருந்து பிரித்து விட்டாள் என்ற எண்ணங்களை விட ஒரு மணி நேரம் டி.வி. அதிகமாக பார்ப்பது எவ்வளவோ தேவலை தானே? சாப்பிடும் போது டி.வி இருந்தால் சீக்கிரம் வேலை ஆகும் எனக்கும் சரி அவனுக்கும் சரி. அதுவும் கூட ஒரு சவுகர்யம் தானே, பார்க்கின்ற மும்மரத்தில் சீக்கிரம் சாப்பிட்டுவிடுவான், அவனுக்கு புதிதாக கொடுக்கும் காய்கறிகளை எல்லாம் இந்த சமயத்தில் ஊட்டி விட்டால் இரட்டிப்பு நன்மை. எனக்கு இவ்வளவு நாள் ஆன பிறகு கூட ஒரு புத்தகம் கையில் இல்லை என்றால் சாப்பாடு இறங்காது. சாப்பிடுவதற்க்கு தண்ணீர் எடுத்து வைத்துக் கொள்ளுகிறேனோ இல்லையோ, புத்தகத்தை தேடி வைத்துக் கொள்ளுவேன், அப்படி இருக்கும் போது இவனை சாப்பிடும் போது டி.வி பார்க்காதே என்று எப்படி அதட்ட முடியும்? எனக்கு புக் என்றால் இவனுக்கு டி.வி…

சில கட்டுப்பாடுகள் அவனுக்கே தெரியும், அம்மா வீட்டுக்கு வந்த பிறகு டி.வி பார்க்க முடியாது, தூங்கும் நேரம் வந்தால் என்ன நிகழ்ச்சியாக இருந்தாலும் டி.வி நிறுத்தப்படும், ஜெட்டெக்ஸ் மற்றும் வன்முறை நிகழ்ச்சிகளையும் பார்க்க முடியாது, தமிழ் சேனல் மெகாசீரியல் அல்லது பாட்டு என எதுவுமே நாங்கள் வைப்பதில்லை அவன் முன்னால். கொஞ்ச நாட்களாகவே நானாக சென்று டிவி யை அணைக்க சொல்லும் முன்னர் அவனே அணைத்து விடுகின்றான், இதுவே ஒரு பெரிய முன்னேற்றமாக எனக்கு தோன்றியது. இன்றைக்கு மான்ஸ்டர் இன்க் படம் போட்டுக் கொண்டு இருந்தான், பாதியில் அகில் வந்து சொன்னது, “அம்மா கொஞ்சம் அதிக நேரமாதான் டி.வி பார்த்துக் கிட்டு இருக்கேன், ஆனாலும் இந்த படம் பார்த்து முடிச்சுடறேனே…” ரொம்பவே சந்தோஷமாக இருந்தது கேட்க, இதுதானே நமக்கு தேவை, குழ்ந்தைக்கு சுதந்திரம் கொடுக்கும் போது அதுவே நல்லது கெட்டது தெரிந்து கொள்ளுகிறது, நாமே ஒரு வட்டத்தை இட்டு அதனுள்ளே இருக்க் வைக்கும் போதுதான் அதனை மீறும் எண்ணம் வலுப்படுகிறது. அப்படி சொல்லி விட்டு தூங்கும் வரை பார்த்தது என்று வைத்துக் கொள்ளுங்கள், ஆனாலும் அந்த எண்ணம் வந்ததையே ஒரு பெரிய விஷயமாக நான் கருதுகிறேன். இன்றைக்கு எண்ணம் வந்து இருக்கின்றது, நாளைக்கு அடுத்த படியாக அதனை செயல்படுத்தும் என நம்புகிறேன்.

பல சமயம் நாம் நம் குழந்தைகள் எந்த குறையும் இல்லாத குழந்தையாக வளர வேண்டும் என நினைக்கின்றோம். சாப்பிடும் விஷயத்தை எடுத்துக் கொண்டால், எல்லா காய்கறிகளையும் சாப்பிடவேண்டும், கீரை இஷ்டமாக சாப்பிட வேண்டும் என்று விரும்பிகிறோம், எனக்கு நினைவு தெரிந்து, சிறுமியாக சாப்பிட காய்கறிகளை விரல் விட்டு எண்ணி விடலாம், விவரம் தெரிந்து நான் சாப்பிட்ட காய்கறிகளே அதிகம் – ஃப்ரண்ட் வீட்டில் சாப்பிட்டது, புத்தகத்தில் நல்லது என படித்து சாப்பிட பழகியது, திடீரென தோன்றியது என பல காய்கறிகளை அப்புறம் தான் சாப்பிட ஆரம்பித்தேன். இன்னும் கூட சில காய்கறிகள் பிடிப்பதில்லை, அதை சாப்பிடுவதில்லை, அப்படி இருக்கும் போது என் குழந்தை மட்டும் எல்லா காய்கறிகளையும் இப்போதே சாப்பிடனும் என்று எதிர்பார்த்தால் என்ன நியாயம்? அதிலும் எல்லா சத்துள்ள காய்கறிகளும் மண்ணு மாதிரி இருக்கும் சாப்பிட… அதற்க்காக அந்த முயற்ச்சியை சுத்தமாக விட்டு விட வேண்டும் என்றும் சொல்ல வரவில்லை – அன்றொருநாள் வீட்டில் கோவைக்காய் சமைத்திருந்தோம், அகிலுக்கு அதை கொஞ்சம் வைத்தேன், சாப்பிட்டு விட்டு ரொம்ப நல்லா இருக்கு அம்மா இந்த காய், அடிக்கடி செய்யறியா என்று கேட்டு சாப்பிட்டது, அதே போல வெண்டைக்காய் ஒரு நாள் சாப்பிட்டது. ஒரு சிலது சாப்பிடுகிறது, பல பிடிப்பதில்லை, நானும் போட்டு திணிப்பதில்லை. நம் எதிர்ப்பார்ப்புகளை குறைத்துக் கொண்டாலே குழந்தைக்கும் சரி நமக்கும் சரி மனநிம்மதி அதிகமாக இருக்கும் என்பது என் வாதம்.

அப்படியே நம பல புலம்பல்களுக்கு பதில் கொஞ்சம் நம்முடைய இளமைகாலத்தையும், ப்ராக்ட்டிகலாகவும் யோசித்து பார்த்தாலே தெரிந்துவிடும்.

பழக்கவழக்களை பொறுத்த வரை என்னுடைய நிலைப்பாடு இதுதான்: ஒரு பழக்கத்தை எப்படி பழக்கிக் கொள்ளுவது, ஒரு பழக்கத்தில் இருந்து எப்படி வெளியே வருவது என குழந்தைக்கு சொல்லிக் கொடுத்தால் போதும், அப்புறம் அது என்ன பழக்கத்தை கற்றுக் கொண்டால் என்ன? டி.வி அதிகமாக பார்க்கட்டுமே, எப்போது நிறுத்த வேண்டும் என தெரிந்தால் போதும், விதவிதமான சிற்றுண்டிகளை டேஸ்ட் செய்து பார்க்கும் பழக்கத்தை பழகிக் கொள்ள குழந்தைக்கு தெரிந்தால் போதுமே, அது எல்லா உணவையும் சாப்பிட ஆரம்பித்து விடுமே அதுதானே நம் தேவை…

சிறு வயதில் இருக்கும் விதமாகதான் ஒரு குழந்தை வாழ்நாள் முழுவதும் இருக்குமா என்ன? நான் சின்ன வயதில் அவ்வளவு நன்றாக யாரிடமும் பேசமாட்டேன், இப்போது அப்படியா இருக்கின்றேன்? வாயை திறந்தால் தயவு செய்து மூடேன் என்று கெஞ்சுகிறார்கள். இன்றைக்கு ஒரு டிரீட்டில் வெளுத்து வாங்கும் பையன் சின்ன வயசில் ஒரு சின்ன தட்டு சாதத்தை ஒரு மணி நேரம் வைத்து சாப்பிட முடியாமல் முழித்துக் கொண்டு இருந்திருப்பான். நிஜமான அறிவு இருக்கின்றவன் பெரியவர்களுக்கு கண்டிப்பாக மரியாதை கொடுப்பான், ஒரே ரூம்மில் ஹாஸ்டலில் படிக்கும் பையன் தன்னுடைய அன்டர்வேர் வரை அடுத்தவனுடன் ஷேர் செய்து கொள்வான் அப்படி எல்லாம் மாறும் போது எதற்க்கு நாம் நம் குழந்தைகளைப் போட்டு கொடுமை படுத்த வேண்டும்?

நல்ல பழக்ககளை சொல்லி கொடுப்பது ரொம்ப முக்கியம் – இல்லை என்று சொல்ல வில்லை ஆனால் அதை எப்படி சொல்லிக் கொடுக்கின்றோம், எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோம், அதற்க்காக குழந்தையை எந்த அளவிற்க்கு தொந்தரவு படுத்திகிறோம் என்பது தான் யோசிக்க வேண்டிய விஷயம்.

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என நீங்கள் நினைக்கிறீர்களா? சுதந்தரம் கொடுப்பதால் குழந்தைகள் நம் கையை விட்டு போய் விடுவார்கள் என்று நினைக்கிறீர்களா? உங்கள் எண்ணத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

ஜெயா.

2 பின்னூட்டங்கள் நவம்பர் 21, 2009

ஸ்டைலு ஸ்டைலுதான்…

பப்புவிற்கு மழலை போய்விட்டது என்றாலும் சில வார்த்தைகளை உச்சரிக்கும் விதம் மட்டும் இன்னும் மாறவில்லை.

அம்போது – ஒன்பது

ஒளைச்சு வச்சிருக்கேன் – ஒளிச்சு வைச்சிருக்கேன்

நான் அமக்கறேன் – அமுக்கறேன் (ஆயாவிற்கு கால் அமுக்கினால் போட்டிக்கு வருவாள்)

அமதியா இருங்க – அமைதியா இருங்க (அவள் பேசுவதை கவனிக்காமல் யாராவது பேசினால்)

கல்யாணி – கல்யாணம்

வத்தலம் – வத்தல், அப்பளம்!

Add a comment நவம்பர் 21, 2009

பப்பு டைம்ஸ்

”நீராரும் கடலுடுத்த” பாடிக்கொண்டிருந்தாள். தக்கசிறு -க்கு பின்னர் என்னவெல்லாமோ பாடிக்கொண்டிருந்தாள். நானும் கூட பாட(?) ஆரம்பித்தேன். ஆச்சர்யம் தாங்கமால்,

“ஹேய், நாங்க பாடினது உங்க ஆபிஸுக்கு கேட்டுச்சா?” என்று இரண்டு மூன்று தடவை கேட்டுக்கொண்டாள்! நானும் ஆமென்று தலையாட்டினேன்! :-))

ஆச்சி, நான் வயித்துக்குள்ளே என்னெல்லாம் பண்ணேன்?

இது ஒரு அட்வென்ச்சர் ஸ்டோரி போல..பத்து நிமிடத்திற்கு ஓடும்! அதே போல, நான் பேபியா இருக்கும்போது என்னெல்லாம் பண்ணேன்(?) என்றும்!

மேலும், அவள் குட்டிக்குழந்தையாக இருந்து ஃப்ர்ஸ்ட் பர்த்டே, செகண்ட் பர்த்டேவெல்லாம் கொண்டாடியதை கேட்டுக்கொள்வாள்.

இதெல்லாம் தினமும் நடக்கும் கதைதான் இப்போதெல்லாம் என்றாலும் இரண்டு நாட்கள் முன்பு கேட்டாள்.

“நான் ஃப்ர்ஸ்ட் உன் வயித்துக்குள்ளே எப்படி வந்தேன், குட்டியா?”

காலையில் குளிக்கும்போது முகத்தில் சோப்பு போடுவதுதான் போராட்டமாக இருக்கிறது. சோப்பை அவளது கையில் குழைத்து போட வைப்பேன். முதலிரண்டு நாட்கள் வரை நன்றாக போய் கொண்டிருந்தது! அதன்பிறகு சுணக்கம். இப்படி ஏற்படும் நேரங்களில், கண்ணை மூடிக்கொண்டு திறப்பதற்குள் செய்து முடிப்பது அல்லது ஒன்றிலிருந்து பத்து வரை எண்ணுவது என்ற வழிவகைகளை கடைப்பிடிப்போம்.

என் கண்களை மூடிக்கொள்ளவேண்டுமென்றும், திறப்பதற்குள் அவள் முகத்தில் போட்டு முடிக்கவேண்டுமென்றும் முடிவாயிற்று! நானும் கைகளால் முகத்தை மூடிக்கொண்டேன், கை துவாரங்களின் வழியே பார்த்தவாறு! போடுவது போல தெரியவில்லை. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். பொறுத்து பொறுத்து பார்த்து, ‘நீ போடவேயில்லை பப்பு, இப்ப நாந்தான் போடப்போறேன்’ என்றேன். டக்கென்று வந்தது பதில்,

”நீ ஓட்டை வழியா பார்க்கிறே..நீ பார்க்கிறியான்னுதான் நான் பாத்துக்கிட்டிருந்தேன் ”

ஆமை குடும்பம் பிக்னிக் போன கதைதான் நினைவுக்கு வந்தது!!

Add a comment நவம்பர் 19, 2009

பப்பு மணி மாலை…

தெர்மோகோல் மணிமாலை. மாலை மாதிரி வரைந்து தந்ததும் கோந்தை தடவி பப்பு ஒட்டினாள்.

பழக்கூடை – வரைந்து_வண்ணமடித்து_வெட்டி_ஒட்டியது! அதிலிருப்பது, வாழை, ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம் மற்றும் பச்சை ஆப்பிள். ( யாருப்பா அது, வாழை ஏன் சிவப்பா இருக்குன்னு கேக்கறது…!!!) சிலசமயங்களில் படங்களுக்கு விதவித வண்ணம் தீட்டுவாள். சிலசமயங்களில் எல்லாம் ஒரே வண்ணமாக இருக்கும்..முழு படத்திற்கும் பிரவுன், சிவப்பு, மஞ்சள் என்று – சிலசமயங்களில் எ.கா.படத்திலிருப்பது போலவே தீட்டப்பட்டிருக்கும்! என்ன இருக்குமோ…அவள் மனதில்! கூடை என் கை வண்ணம்..ஹிஹி!

கண்டுபிடிக்க முடிகிறதா இது என்னவென்று?!! 🙂

Add a comment நவம்பர் 17, 2009

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

நவம்பர் 2009
தி செ பு விய வெ ஞா
« அக்   டிசம்பர் »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Posts by Month

Posts by Category