ஒக்ரோபர் 2009 க்கான தொகுப்பு
கல்நாயக்!

இது ஒரு பண்டோராவின் பெட்டி போல. வல்லியம்மாவின் மங்கையராய் பிறப்பதற்கே இடுகையே என்னையும் எழுதத் தூண்டியது! ”எனக்கும் இப்படி நடந்திருக்கிறது” என்று!

அவரது இடுகையை மேலோட்டமாக புரிந்துக்கொண்டு பின்னூட்டமிட்டுவிட்டேன். ஆனால், அதன்பின் நீண்ட நேரம் இடுகையைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். ஒருவேளை அவருடைய இடத்தில் நானிருந்தால், என்னால் என்ன செய்திருக்கக்கூடுமென்று!! அல்லது என்ன செய்திருப்பேனென்று! எதுவும் தோன்றவில்லை, ஆனால், சொல்வதற்கு ஏராளம் இருக்கிறது! சிறுவயதிலிருந்து நான் கடந்து வந்த ஒவ்வொரு நிகழ்ச்சியும் மனதில் வந்து போகிறது..அதனோடு, அவை தந்த வலிகளும்!!

பள்ளிககூடத்திற்குச் செல்ல, எங்கள் குடியிருப்பைத் தாண்டி மெயின் ரோடிற்கு வரவேண்டும். அங்கே ஒரு ஆட்டோ ஸ்டேண்டை கடந்துதான் மெயின் ரோடிற்கு கடந்துவர முடியும். எட்டாவது வகுப்பு, சென்றபின்னர் எனக்கு அந்த ஆட்டோ ஸ்டேண்டை கடப்பது நைட் மேராக இருந்தது. காலையில், தலையை வாரி, பையை எடுக்கும்போதே அந்த ஆட்டோ ஸ்டேண்ட் கிலி பிடித்துக்கொள்ளும்! ஒருமாதிரி பயம் என் வயிறு முழுதும் பரவும்! எல்லாம் எதற்காக..அங்கே கிராஸ் செய்யும்போது கேட்கும் சீழ்க்கையொலிகள், கிண்டல், கேலி குரல்களுக்காக,! இதற்காகவே, கவிதாவுடன் ஒன்றாக செல்ல ஆரம்பித்தேன்- ஒரு தைரியத்துக்காக!

கிண்டல், கேலி அல்லது சினிமா பாடல்வரிகள்தன்…ஆனாலும் அந்த street harassment கொடுத்த வலி என் சிறு வயதின் மனதினில் பதிந்தது…கல்லூரி சென்றும், யாரேனும் என் பின்னால் சாதாரணமாக நடந்து வந்தால் கூட இதயம் படபடவென்று அடித்துக்குமளவிற்கு ஆனது! எல்லாமே ‘நீ ஒரு பெண்..சதையாளானவள்..நாங்கள் பார்க்கவும், பார்த்து உணரவும், வார்த்தைகளால் சீண்டவும், முடிந்தால் தொட்டு சீண்டவும் நீ உண்டாக்கப்பட்டவள்’ என்று சொல்லிக்கொண்டே இருப்பது போல இருந்தது!

மதுரையிலிருக்கும்போது நிகழ்ந்தது இது. நானும், சீதாவும் சிம்மக்கல் செல்லும் நகரப்பேருந்தில் சென்றோம். பேருந்து மிகுந்த கூட்டமாக இருந்தது. எங்களுக்கு எப்படியோ உட்கார இடம் கிடைத்துவிட்டது. எங்களுக்கு முன்னிருக்கையில் அமர்ந்திருந்தவன் அருகில் நின்றுக்கொண்டிருந்த பெண்ணிடம் தவறாக நடந்துக்கொள்ள ஆரம்பித்தான். அந்த ஜனக்கூட்டத்தில் யாரும் இதைக்கண்டுக்கொண்ட மாதிரியே தெரியவில்லை. அவரவர் இறங்கும் இடம் எப்போதடா வருமென்று தவித்துக்கொண்ட மாதிரி இருந்தது. என்னருகில் அமர்ந்திருந்த சீதா கொஞ்சம் முன்நகர்ந்து அந்த ஆளின் தலையை பிடித்து இழுத்து ஆட்டினாள். அடுத்த நிமிடமே அந்த ஆள் எழுந்து அந்த கூட்டத்திலும் நகர்ந்து வாயிற்படியினருகில் நின்றுக்கொண்டான். நிறுத்தம் வருவதற்குள்ளாகவே இறங்கியும் சென்றுவிட்டான்.

இது நிகழ்ந்து நீண்ட நாட்களுக்கு அடிக்கடி நினைவில் வந்துக்கொண்டிருந்தது! என்னை நானே மிக அருவறுப்பாக உணர்ந்தேன். எனக்கு நிகழ்ந்தது போல, அதை நினைத்துக்கொண்ட போதெல்லாம் குளிக்கத் தொடங்கினேன், என் தோலையே கழட்டிவிடுவதுபோல!! அதிலிருந்து பேருந்தில் செல்வதை தவிர்க்கத் தொடங்கினேன். ரயிலில், யாராவது என்னை, எனது பெயரை, படிக்கும் கல்லூரியை பற்றி விசாரிக்கத் துவங்கினால் (நட்பாகக்கூட்!), பெயரை மாற்றிக்கூறினேன். தவறான கல்லூரியை குறிப்பிட்டேன்! அடுத்த செமஸ்டர் வந்தபின்னரே கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தேன்! மதுரை என்றில்லை..எந்த நகரத்திலும் ஒரு பெண்ணுக்கு நிகழக்கூடியதுதான் இது…!!

ஒரு டவுனிலிருந்து, எல்லோரையும் எல்லோருக்கும் தெரிந்த ஒரு சிறு ஊரிலிருந்து, வழியில் உங்கள் சைக்கிள்செயின் கழன்றால் உடனே வந்து சரிசெய்து ‘டீச்சர் பொண்ணுதானேம்மா’ என்று கேட்டுவிட்டு செல்லும் நபர்கள் நிறைந்த ஊரிலிருந்து வந்த எனக்கு இந்த சம்பவம் நடுக்கத்தையே, திடுக்கிடலையே தந்தது!!

சீதாவிற்கு அந்த தைரியம் வர..அது ஒரு நீண்ட பயணமாக இருந்திருக்க வேண்டும்! பயத்தை..அதிர்ச்சியை..ஒரு உடலாக உணரப்பட்ட தருணத்தை..உதறி அந்த ஆளின் முடியைப் பிடிக்க அவள் இதையெல்லாம் கடந்து வந்திருக்கவேண்டும்! நமக்காக யாரும் குரல் உயர்த்த மாட்டார்கள், இதுபோன்ற சந்தர்ப்பங்களில்! நாம்தான் நமக்காக எழுந்து நிற்க வேண்டும்! வல்லியம்மாவின் அனுபவம் உணர்த்துவதும் அதைத்தான்!

Advertisements

Add a comment ஒக்ரோபர் 30, 2009

பப்புவின் ஸ்ட்ரைக்!

காலை ஆறரை. ஆறேகாலுக்கு பப்புவை எழுப்பியும் எழவில்லை. இன்னும் கொஞ்சம் தூங்கட்டும் என்று அதிகப்படியாக 10 நிமிடங்கள் கழித்து எழுப்பியும் சலனமேயில்லை.ஆழ்ந்த உறக்கம். ஒரு ஐந்து நிமிடங்கள் தாமதமானாலும், அதைத்தொடர்ந்து எல்லாக் காரியங்களுமே சடசடவென சரியக்கூடிய அபாயம் இருக்கும் காலை நேரம்! வேறு வழியில்லை…அரைக்குறை தூக்கத்திலிருந்த பப்புவை, முகில் தூக்கிக்கொண்டு வந்து குளியலறையில் விட ஒருவழியாக குளித்து முடித்தாயிற்று.

அடுத்து சாப்பிட வைக்கவும், பாலை குடிக்க வைக்கவும் ஒரு மெகா போராட்டம் காத்திருக்கிறது. பொதுவாக கொஞ்சம் விளையாட்டு அல்லது புத்தகங்கள் இருந்தால் சமாளித்துவிடலாம். ஆனால், இன்று எல்லாவற்றிலும் ஒரே ஒத்துழையாமை இயக்கம். குளித்துவிட்டு வந்தவுடன் சோபாவில் மறுபடியும் படுத்துக்கொண்டாள். முட்டையையும், தம்ளரில் தண்ணீரையும் எடுத்துக்கொண்டு சாப்பிட அழைக்கிறேன். விளையாடலாமா, புத்தகத்தை எடுத்து கதை சொல்லி என்று…ஒரு வாய் வாங்கியதை உள்ளே அடக்கிக்கொண்டிருந்தாள். ‘மென்னு முழுங்கு’ என்று கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி சொன்னதும் இரண்டாவது வாய் உள்ளே இறங்கியது. சிறிதுநேரத்திற்கு பின், ‘நான் இன்னைக்கு ஸ்கூலுக்கு போகல’ என்றாள். ‘ஸ்கூலுல்ல ஆன்ட்டி பப்புவை தேடுவாங்க’, ‘அப்புறம் வர்ஷினி வெண்மதி எல்லாம் ஜாலியா விளையாடுவாங்க..நீயும் போய் விளையாட வேணாமா’ என்று வழக்கமாகச் சொல்வதையெல்லாம் சொன்னேன். அவள்பாட்டுக்கு புத்தகத்தின் பக்கங்களையே திருப்பிக்கொண்டிருந்தாள்.

போகக்கூடாதென்று அவள் மனதிற்குள்ளாக முடிவு செய்துக்கொண்டிருப்பாளாயின், நான் என்ன செய்துவிட முடியும்? அழ அழ அவளை வேனுக்குள் திணிக்கலாம். அல்லது வண்டியில் கொண்டு போய் விடலாம். கடைசியில் ‘நாங்க இப்போ ஆபிஸ் கிளம்பி போய்டுவோம். நீ மட்டும் வீட்டிலே ஆயாக்கு துணையா இரு. ‘ என்று சொல்லிவிட்டு ‘ நான் ஆபிஸ் கிளம்பறேன்’ என்று அவளை விட்டு வந்துவிட்டேன். அடுத்து முகில் களத்தில் இறங்க அப்போதும் ஒத்துழையாமை இயக்கமே! சிறிது நேரத்தில் என்னைத் தேடி வந்த பப்புவிடம் மெதுவாக குரலை எவ்வளவு மென்மையாக்க முடியுமோ அவ்வளவு மென்மையாக கேட்டுப்பார்க்கிறேன். ‘நான் ஸ்கூலுக்குப் போகல’ – திடமான நேரடியான பதில். அவளையே நான் பார்த்துக்கொண்டிருந்ததை அறிந்து, ‘ ஸ்கூல்லே ஆன்ட்டி அடிக்கறாங்க’ பின்னர் ‘எல்லோரும் கா கா விடறாங்க’ பின்னர் ‘ எல்லோரும் என்னை அடிக்கறாங்க’!

இதற்குமேல் நானும் ஒன்றும் சொல்லாமல் கிளம்புவதற்கான வேலைகளில் மூழ்கினேன். ஹாலுக்கு ஓடினாள்.முகிலிடமும் அதையே சொல்லியிருக்கிறாள். யாரும் அவளைக் கண்டுக்கொள்ளவில்லை. வேனும் கடந்துச் சென்றது. அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தாள். அணிந்திருந்த சீருடைகளெல்லாம் தரையில் கிடந்தன. வீட்டில் அவளை மட்டும் விட்டுச் செல்ல வேண்டும். பின்னர் இதுவே பழக்கமாகி விடுமா? ஒரு நாள் இருந்து பார்க்கட்டுமே! அவள் அவ்வளவு தீர்மானமாக இருப்பாளாயின் அதன் பலனை அனுபவித்துப் பார்க்கட்டுமே..ஆயாவால் சமாளிக்க முடியவில்லையெனில் பார்த்துக்கொள்ளலாம்.இந்த எண்ணங்களோடே நான் கிளம்பி வெளிவரும் சமயம் அவளாகவே பாலைக் குடித்திருந்தாள்.பள்ளிச்சீருடையை அணிந்துக்கொண்டு சாக்ஸ்/ஷூ வேண்டாமென்றுச் சொல்லிவிட்டு செருப்புகளை அணிந்துக்கொண்டிருக்கிறாள். முகில் பைக்கில் போகலாமாவென்றதும் சரியென்று எட்டேமுக்காலுக்கு கிளம்பிச் சென்றுவிட்டாள்.

சிலசமயங்களில், செல்லம் கொஞ்சி சமாளிப்பதையோ அல்லது மிரட்டுவதையோ விட ஒன்றும் செய்யாமல் அவரவர்போக்கில் விட்டுவிடுவதும் நல்ல பலன்களைத் தருகிறது!

Add a comment ஒக்ரோபர் 29, 2009

From Troublesome Threes to Fearless Fours!!

பப்பு,

இந்த ஒரு கடிதம் உன்னைப் பற்றிய எல்லாவற்றையும் சொல்லிவிடுமாவென்றுத் தெரியவில்லை. ஆனால், கடந்த வருடங்களில் நான் எழுதியிருக்கும் இடுகைகள் உன்னைப்பற்றியும், உனது குழந்தைப்பருவத்தையும், ஒரு பெண்ணை தாயாக..மகிழ்ச்சியான தாயாக நீ உருமாற்றியதையும் கூறும்!

மேலிருக்கும் படம், நீ இப்போது கடந்துக்கொண்டிருக்கும் காலகட்டத்தை உணர்த்துவதற்காக – ஓடுவதற்கு ஆயத்தமாக – நம்பிக்கையுடன், துடிப்புடன் – அறிந்துக் கொள்ளும் ஆர்வத்துடன் – எளிதில் மன்னித்து, மறந்தும் விடக்கூடிய இதயத்துடன்! பப்பு, நீ வாழ்க்கையில் எல்லாவற்றையும் பெற வேண்டுமாய் வாழ்த்துகிறேன்..அதைவிட பெரிதாக வாழ்த்த வேண்டுமானால், பப்பு, நீ இப்படியே இருக்க வேண்டுமாய் வாழ்த்துவேன்! மாறாமல் இதே துடிப்புடன் – இதே நேசத்துடன் – இதே உன்னத்ததுடன் – உள்ளத்தூய்மையுடன்!!

அதற்காக, நீ ஒரு தேவதை என்று படம் காட்டவில்லை. உனது மறுபக்கத்தையும் எங்களுக்கு காட்டாமலில்லை! சமயங்களில் எங்களை நோக்கி பற்கடிக்கிறாய். எதையாவது மறுத்தால் எங்களுக்கு அடிகளைத் தருகிறாய்.உனது உணர்ச்சிகளும் எண்ணவோட்டங்களும் மிக ஆழமானவை – அதற்கேற்றவாறு நடந்துக்கொள்ள நானும் உந்தப்படுகிறேன்! எதை மறுக்கிறேனோ அதைச் செய்யவே நீயும் உந்தப்படுகிறாய்! நீயும் நானும் இப்படியே சுற்றி வருகிறோம்!!

குறும்பும், குழந்தையின் அறியாமையும், உனக்கேயுரித்தான ஞானத்துடனும் நிறைந்திருக்கிறாய் நீ! கடந்த நான்கு வருடங்களும், மிகவும் இனிமையானதாக, நல்லதொரு அனுபவமாகவே இருந்து வந்திருக்கிறது, பப்பு! நீ மிக அருமையானவள் பப்பு! நான் பொதுவாக உன்னெதிரில் அழுவதில்லை. ஓரிரு முறைகள் அப்படி நேர்ந்திருக்கிறது. அந்த இருமுறைகளும் நீ என்ன செய்தாய் தெரியுமா பப்பு, ஆச்சி, ஏன் உன் கண்லே தண்ணி வருது என்று கேட்கும்போதே உன்னையறியாமலேயே உனது கண்களும் குளமாகின! அதைவிட,உன் சின்னஞ்சிறு கரங்களால், என் கண்களை துடைக்க முற்பட்டாய். நான் இதை உனக்குச் செய்ததில்லை, பப்பு! நிறைய நேரங்களில் உன் அழுகைக்குக் காரணம் நாந்தான் என்றாலும் நீ அழும்போது என் கண்கள் கலங்கியதில்லை! என்னை மன்னித்துவிடு! நீ உன்னதமானவள், பரிவு மிக்கவள், பப்பு!

புதியவர்களைக் கண்டால் எங்கள் பின்னால் ஒளிந்துக்கொள்ளும் நீ, உறவினர்களை, தூரத்து உறவினர்களை அதுவும் முதல்முறைதான் பார்க்கிறாய் என்றாலும் எப்படிக் கண்டுக்கொள்கிறாய் என்பது எனக்கு இன்னமும் விளங்காத ஆச்சரியம். குடும்பத்தின் தலைமுறைகளை நன்றாக அறிந்து வைத்திருக்கிறாய். பக்கத்துவீட்டுச் சிறுவன் தீபாவளியன்று பொம்மைத் துப்பாக்கியில் உன்னை நோக்கிச் சுட்டான். நீயும் சுடு என்று உன் அப்பா கூற, ‘சுட்டா அவன் செத்துடுவான், பாவம்’ என்று சொல்லி எங்களை ஆச்சர்யத்திலாழ்த்தினாய்!

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம், பப்பு! வாழ்க்கை உனக்கு முன் விரிந்துக்கிடக்கிறது, நீ அதை இன்னும் சுவாரசியமாக்குவாய் என்பதையும் அறிந்திருக்கிறேன் பப்பு!
கடந்த வருடம் உனக்கு நிறைய நண்பர்களும்,ஆரோக்கியமும், எல்லாச் செல்வங்களும் கிடைக்க வாழ்த்தினேன்..இந்த வருடமும் உனக்கு இவையெல்லாவற்றோடும் மிகுந்த தைரியத்தையும் வாழ்த்துகிறேன்!! இந்த வருடத்தையும் ஒன்றாகவே கடப்போம், கற்றுக்கொள்வோம், உன்னை நானும் என்னை நீயும் உற்றுக்கேட்டுக்கொள்வோம்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், பப்பு!!

ஆச்சி!

பி.கு :பப்பு, இதை நேற்று இரவு எழுதி முடிக்கும்போது கடந்த வருடம் எழுதிய பப்பு 0..1..2.. நினைவுக்கு வந்தது. உன் மழைத்தோழி இந்த வருடம் வரவே இல்லையே என்ற நினைப்பும் எட்டிப் பார்த்தது. இன்று காலையில் தூறலிட்டு வாழ்த்த வந்துவிட்டாள் உன் தோழி!! 🙂

Add a comment ஒக்ரோபர் 28, 2009

பப்பு டைம்ஸ்

எஸ்க்யூஸ் மீ மிஸ் கந்தசாமி..
.
.
…என்னை வந்து பாரே…
போடி போடா…

எனது முறைப்பை பார்த்ததும்,

அதுலே அப்படிதான் வருது.. என்று சொல்லிவிட்டு தொடர்ந்து பாடுகிறாள், எனது முறைப்பையும் சட்டை செய்யாமல்!! முளைச்சு மூணு இலை…ஹ்ம்ம்!!


”நான் எப்போ இந்த ஊருக்கு வந்தேன்..”

பேபியா இருக்கும்போது.

என்னா பண்ணிட்டிருந்தேன்?

தூங்கிட்டேயிருந்தே!

ஏன் இப்போ தூங்காம இருக்கேன்?

பெரிய பொண்ணாயிட்டே இல்ல..அதான்..இப்போ விளையாடறே, புக்ஸ் படிக்கறே..நைட்லே தான் தூங்கறே!

நான் பேபியா இருந்தப்போ நீயும் என்கூட பேபியா இருந்தியா?!
.
.
.And the argument goes on!!

பப்பு எப்போது பிறந்தாள், எப்படி இருந்தாள், அவள் பேபியா(?) இருந்தப்போ என்ன செய்தாள் என்று அறிந்துக்கொள்வதில் மிகவும் விருப்பம்.

அம்மா-பேபி விளையாட்டு விளையாடிக்கொண்டிருந்தோம். நான் அவள் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும். அவள் எனக்கு புத்தகம் படித்துக்காட்டுவாள். சாப்பிட வைப்பாள். எல்லாம் ஆக்‌ஷந்தான்! புத்தகத்தில் K – kitten இருந்ததை அவள் Cat என்று சொல்ல நான் திருத்தினேன். உடனே பப்பு கேட்டாள்,

”நீ எனக்கு அம்மாவாகலாம்னு பாக்கிறியா?”

Add a comment ஒக்ரோபர் 27, 2009

Kreative krayonz @ Velachery

க்ரியேட்டிவ் க்ரேயான்ஸ் – நமது “பார்வைகள்” கவிதாவின் ப்ரெய்ன் சைல்ட்!! என் மனதுக்குப்பிடித்த மாதிரியான ஒரு குழந்தைகள் காப்பகத்தை மடிப்பாக்கம்/வேளச்சேரி பகுதிகளில் தேடி எதுவும் சரிவராமல் ஆயாக்களின் துணையோடு பப்புவை கவனித்துக் கொள்ள வேண்டியதாயிற்று! கவிதா இந்த முயற்சியை ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பே எடுத்திருந்தால் “க்ர்யேட்டிவ் க்ரேயான்ஸ்” மிகுந்த பாக்கியம் பெற்றிருக்கும்..;-))! வாழ்த்துகள் கவிதா!!

வேளச்சேரியில், ஒரு ஹாபி/ஆக்டிவிட்டி சென்டர் – Lets do Somthing சிறிது நாட்களுக்கு முன் பானை வனைதலைப் பற்றி சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்தக்கூடிய இடத்தைத் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது கிடைத்தது இது!!

வேளச்சேரி வளர்கிறது!! 🙂

Add a comment ஒக்ரோபர் 26, 2009

டோராவை யார் கண்டுபிடிப்பது?

முன்பெல்லாம், வாங்குகிற எல்லாவற்றிலும் – பள்ளிக்கு கொண்டு செல்லும் பையிலிருந்து அணிந்துக்கொள்கிற உள்ளாடை முதல் எல்லாவற்றிலும் டோரா வேண்டும் பப்புவிற்கு. இப்போது டோரா க்ரேஸ் அவ்வளவாக இல்லை. சுட்டி டீவியில் இப்போது டோராவிற்கு பதிலாக ஹெய்டி என்ற தொடர் ஒளிபரப்பப்படுகிறது. பப்புவிற்கு அவ்வளவாக இஷ்டம் இல்லை. அதுவும் இல்லாமல் ”உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா?”, “ஒரு தடவை சொன்ன புரியாதா” என்று (அனிமேஷன்) குட்டீஸ் பேசுவதை சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனாலேயே சுட்டி டீவியை தாண்டி சென்றுவிடுகிறோம். எப்படியானாலும் இது போன்றவற்றை கற்றுக்கொள்ளத்தான் போகிறார்கள்…ஆனால் அது தானாக நடக்கும்போது நடக்கட்டுமே..எதற்கு நாமே படம் போட்டு காட்டவேண்டும்?!!

”போடா லூசு, நீ என்ன லூசா” என்று பேசுவது போல வருவது செட்ரிக் என்று நினைக்கிறேன். பப்புவும் அதை ஓரிரு முறைகள் சொல்லி என்னிடம் நன்றாக அடி வாங்கினாள். அதிலிருந்து, அவளுகு கோபம் வந்தால் அல்லது நாங்கள் அவளை வேனுக்கு அவசரப்படுத்தினால் “லூசு சொல்லிடுவேன், சொல்லட்டா” என்று கேட்கிறாள். ஜீபூம்பா என்ற தொடரை பார்த்து “ஆக்கு பாக்கு வெத்தலை பாக்கு” கற்றுக்கொண்டு ”ஒன் பேரு கொய்யா” என்கிறாள். உண்மையில் அதில் ”ஆக்கு பாக்கு வெத்தலை பாக்கு, டைகர் செய்யப்போறான் மேஜிக்’ என்று வரும். பள்ளியில் இப்படித்தான் விளையாடுவார்களாம். நாங்கள் ‘ஒன் பேரு கொய்யா” என்று திருப்பிச் சொன்னால் கோபித்துக்கொள்கிறாள். ”அவங்கவங்களே அவங்கவங்களுக்கு சொல்லிக்கணும்” என்று அழுகை வேறு!!

இவற்றையெல்லாம் பார்க்கும்போது டோராவே பரவாயில்லையென்று தோன்றுகிறது. அட்லீஸ்ட் ஹார்ம்லெஸ். புயல்மேகம், பாலம், சாக்லேட் ஏரி, ஐஸ்கிரீம் மலை, எனக்கொரு ஐடியா இருக்கு – இவையே தேவலை என்று தோன்றுகிறது!! பெஞ்சமின் தி எலிஃபெண்ட், கைப்புள்ள – பப்புவிற்கு இஷ்டம். ஆனால் ஒளிப்பரப்படும் நேரம் சாதகமாக இல்லை. பப்புவை சாப்பிடவைப்பதற்கு கதைப்புத்தகங்களே இப்போது பெரிதும் உதவுகின்றன. டோரா ஐ மிஸ் யூ!! 🙂

Add a comment ஒக்ரோபர் 25, 2009

தமன்னாவின் அத்தையும், வர்ஷாவின் சபதமும்..

கடந்த புதனன்று லதாவின் திருமணத்திற்காக கோவை சென்றிருந்தேன். லதாவின் ஊர் உடுமலைபேட்டை. அங்கேதான் முதலில் என்னை வரச்சொல்லியிருந்தாள். நம்ம மயிலை சந்திக்கப் போகிற குஷியில், நான் நேராக கோவை வருவதாக சொல்லிவிட லதாவுக்கு ஒரே குழப்பம்..லதாவுக்கு தெரிந்து எனக்குக் கோவையில் தெரிந்தவர்கள் லதாவின் அக்கா குடும்பத்தினர், இன்னும் சிலர் மட்டுமே. ஆனாலும் மயிலைப் பற்றிச் எடுத்துச் சொல்லி ‘மயிலிருக்க பயமேன்’ என்று சமாதானபடுத்தியாயிற்று.

மயிலுக்கு மேனேஜராகக் கூடிய அத்தனை தகுதியும் இருக்கு!! ஆம்பூரில் ரயிலேறியதிலிருந்து கோவை நார்த் வரும்வரை, ‘இப்போ எங்கே இருக்கீங்க’ என்றும் ‘திருப்பூர் வந்ததும் எனக்கு மெசேஜ் பண்ணிடுங்க’ என்றும் ‘இருகூர் வந்தாச்சா’, ‘இப்போ கோவை நார்த் வந்திருக்கணுமே’ என்றும் டிராக் செய்துக்கொண்டிருந்தார். ரயில் நிலையத்திற்கு எதிரில் காத்துக்கொண்டிருந்தவர் என்னை கண்டுக்கொண்டதும் ஆட்டோ, பஸ் என்று எதையும் மதிக்காமல் க்ராஸ் செய்துவந்தார். அது என்னைப் பார்த்த குஷி என்று நினைத்தேன்…பிறகுதான் தெரிந்தது…மயிலுக்கு கிராஸ் செய்வது என்றால் ரிஸ்க் எடுத்து ரஸ்க் சாப்பிடுவது மாதிரி என்று!! அவ்வ்வ்!! 🙂

மயில் வீட்டில் ‘வீட்டுப்புறா’ சக்தி காத்திருந்தார். அவ்ரது பெயரை பதிவுகளில் பார்த்திருக்கிறேனே தவிர அவ்வளவாக அறிமுகம் இல்லை. பழகுவதற்கு இனியவர். ஆனால், சிறிது நேரத்தில் ‘வீட்டுக்கு போகணும், ஆத்தா வையும்’ (நன்றி : சஞ்சய்) என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார். 🙂 சிறிது நேரத்தில், சஞ்சய் வந்துவிட, திருப்பூரிலிருந்து வெயிலானும், பள்ளியிலிருந்து பப்புவும் வர்ஷாவும், பின்னர் வடகரை வேலனும் வந்துவிட வீடு களை கட்டியது. செம சுட்டிகள்!! வர்ஷாவின் அரங்கேற்றத்திற்காக அடுத்த கோவை பயணம் நிச்சயம்!! நடுவே செல்வேந்திரனையும் சந்திக்க முடிந்தது.

மறுநாள் காலை லதாவின் திருமணம் முடிந்து மயில் வீட்டிற்கே வந்துவிட ‘வீட்டுப்புறா’ சக்தியும், ‘ஊஞ்சல்’ தாரணிபிரியாவும் வந்தனர். மிகவும் கலகலப்பான சந்திப்பாக இருந்தது.நட்டுவும், அபி அம்மாவும், அபி அப்பாவும் வந்தனர். நட்டு க்யூட் + செம வாலு! நட்டு தனது அட்டகாசங்களால் சூழலை ரசிக்க வைத்தான். ‘சீசன்ஸ்’ என்ற ரெஸ்டாரண்ட்டிற்கு சென்றோம் தாரணி,சக்தி, மயில் மற்றும் நான். அரட்டையில் ஆரம்பித்து தொலைபேசி நம்பர்களை பரிமாறியபடி சந்திப்பு முடிந்தது – ரயிலுக்கு நான் செல்ல வேண்டிய நேரமும் வந்தது. ரொம்ப காலத்திற்கு முன் செல்வேந்திரன் வைத்த ஒரு போட்டியில் காலங்கடந்து கலந்துக்கொண்ட போது தருவதாக சொன்ன புத்தகத்தின் நினைவு வந்தது. புத்தகத்திற்காக செல்வேந்திரனுக்கு நன்றி! வழியிலேயே சஞ்சயிடம் ஃபோனில் விடைபெற்றுக்கொண்டேன். (தமன்னாவின் அத்தை…வ்ர்ஷாவின் திட்டம்…:)))

ரயிலேறி அமர்ந்ததும் வெயிலானிடம் தொலைபேசியில் விடைபெற்று நினைவுகளை அசைப்போட்டபடி ஆம்பூர் வந்து சேர்ந்தேன். கடந்த ஒன்றரை வருடங்களுக்குப் பின் இப்போதுதான் பப்பு தனியாக (நானும் முகிலும் இல்லாமல்) ஊரில் தங்குகிறாள். பப்பு சமாளித்துக்கொள்வாள் என்று நம்பினேன். ‘நீ போனதிலேருந்து உன்னை ஒரு தடவைக் கூட கேக்கவேயில்ல’ என்று ஆயா சொன்னதற்கு அழுவதா சிரிப்பதாவென்று தெரியவில்லை!! 🙂
பப்புவிற்கு வெயிலான் பரிசளித்த goodies மிகவும் பிடித்திருக்கிறது. நன்றி வெயிலான்!!

ஒவ்வொரு முறை கோவை செல்லும் போதும் இப்படித்தான் ஆகிவிடுகிறது. கண்டிப்பாக இன்னொரு முறை வரவேண்டும் என்று நினைக்கும்படி! இந்தமுறையும் அந்த நினைப்பையே தந்த கோவை, திருப்பூர் பதிவர்கள் அனைவருக்கும் நன்றிகளும், வாழ்த்துகளும், நட்பும்!! பப்புவிற்கும் வர்ஷாவிற்கும் அன்பு முத்தங்கள்!!லதாவிற்கு திருமண வாழ்த்துகள்!!

Add a comment ஒக்ரோபர் 24, 2009

The mad ad

“நீயும் ஆபிஸூக்கு போகாதே” என்று ஒரு சிறுமி வேலைக்குச் செல்லும் அம்மாவிடம் சொல்லுவதாக வரும் விளம்பரமொன்றை பார்க்க நேரிட்டது. எதற்காக…நீளமான பளபளக்கும் கூந்தலுக்காக!! அவளது தாய் சிறுமியாக இருக்கும்போது நீண்ட கூந்தலுடன் இருந்ததாகவும், தனக்கு அவ்வாறு இல்லையென்றும் குறைப்பட்டுக்கொள்வாள். தனது அம்மா ஓட்டிக்கொண்டு வந்த காரிலிருந்து இறங்கிய அச்சிறுமி பள்ளிக்கூடத்திற்குள் போகும்முன் மேற்கண்ட வசனத்தைச் சொல்லிவிட்டுச் செல்வாள். அவளது அம்மாவும் வேலைக்குப் போகும்வழியில் இதனை யோசித்துக்கொண்டு கவலைப்பட்டுக்கொண்டு காரை ஓட்டிச்செல்வாள். கடைசியில் ஒரு ஷாம்பூ பாட்டிலை வாங்குவாள்.

இந்த விளம்பரம் என்ன சொல்ல வருகிறது? இந்த விளம்பரம் சொல்லவரும் செய்தி சரியானதுதானா?

ஒரு பெண் தனது கேரியரைவிட, தனது குழந்தையின் நீளமான முடிக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மறைமுகமாக சொல்லப்படுவதாகவே தோன்றுகிறது!

பப்பு கார்னர் :

அவ்வப்போது ஆன்லைனில் கேம்ஸ் விளையாட பப்புவை அனுமதிப்பதுண்டு. அப்படி ஒருநாள் விளையாடிக்கொண்டிருந்தவள், “ஆச்சி, நான் பாயா கேர்லா” என்றாள்! அவ்விளையாட்டின் இடையில் ‘oh boy’ என்று வரும், விளையாட்டை பற்றி விளக்கும்போதோ அல்லது ஊக்குவிக்கும் போதோ அப்படிச் சொல்வதை கேட்டபின் அவளுக்கு வந்த சந்தேகமே அது!!

‘நீ கேர்ல்’தான் – என்று சொன்னதும், ‘ஏன் என்னை ஓ பாய் ன்னு சொல்லுது” என்றுக் கேட்டாள்.

Its time to change!!

Add a comment ஒக்ரோபர் 22, 2009

Collins Big Cat

பப்புவிற்கு படித்துக்காட்ட, vocabulary அதிகப்படுத்த, அவளாகவே திரும்ப சொல்வதற்கு எளிதான கதைப் புத்தகங்களை இணையத்தில் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது ஹார்ப்பர்கொலின்ஸ் தளத்தை காண நேரிட்டது. வாசிக்க ஆரம்பிக்கும் முதல் தானாகவே வாசிக்கும் வயது வரை நான்கு பிரிவுகளில் புத்தகங்களை வெளியிட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு பிரிவிலிருந்தும் ஒரு புத்தகம், மொத்தமாக நான்கு புத்தகங்களை Big Cat சீரிஸிலிருந்து இணையத்திலேயே வாங்கினேன்.

The Big Splash – ஒரு முதலை/அலிகேட்டர் தானாக குளிப்பதற்கு என்னென்ன பொருட்களை எடுத்துக்கொண்டு தயாராகிறது என்பது தான் கதை. இது முதல் லெவலில் நான்கு புத்தகங்களில் ஒன்று. மூன்று வயதுக்கு மேல் உபயோகப்படுத்தலாம். இந்த லெவல் பொதுவாக படம் பார்த்து பெயரை சொல்வது, அடுத்த என்ன பொருளை எடுத்துக்கொள்ளும் என்று கதையை தொடர உதவும். கதை முடிந்ததும் செயல்பாடுகள். எளிதான் maze, நிறைய படங்கள் (டெலிபோன், பிரஷ், டவல், காலணி முதலியன) கொடுத்து குளிக்க நாம் எதையெல்லாம் பயன்படுத்துவோம் என்று குழந்தைகள் கண்டறிவது முதலிய விளையாட்டுகள் உள்ளன.

The Little egg – இதுவும் எளிதாக கதைதான். ஆனால் லெவல் இரண்டு. இது சற்றே பெரிய கதை, அதிக வார்த்தைகள் + ரைமிங் வார்த்தைகள், பல விலங்குகளின் வசிப்பிடங்கள் முதலானவற்றை கதையினூடாக சொல்லிச் செல்கிறது. ஒரு சிறிய முட்டை அதன் கூட்டிலிருந்து பல இடங்களைக் கடந்து, பல விலங்குகளை சந்தித்து தனது கூட்டுக்கே திரும்ப வருவதுதான் கதை. இதிலும் கதைக்குப்பின் பல செயல்பாடுகள் உண்டு. கதையில் நிகழும் பல சம்பங்களை கொடுத்து வரிசைக்கிரமமாக சொல்லுதல் போன்ற செயல்பாடுகள் – இது 4 வயதினருக்கு மேல் ஏற்றது.

மற்ற இரண்டு புத்தகங்கள் மேல் பப்புவிற்கு இப்போது விருப்பம் இல்லை. சற்றே கடினமானதாக இருக்கலாம். அதனால் இந்த இரண்டு புத்தகங்கள்தான் இப்போது வாசிக்கிறோம். அந்த புத்தகங்களை வாசிக்கும்போது அவற்றை பற்றி பதிவிடுகிறேன்.

Dr.Seuss-இன் புத்தகங்கள் சிலவற்றை வாங்கினேன். இது 5 அல்லது 6 வயதுக்கு மேல் வாசிக்க பழக்குவதற்கு மிகுந்த உபயோகமாக இருக்கும். ஃபன்-க்கு நான் கியாரண்டி!! tongue twister மாதிரியான வாக்கியங்களில் அமைந்த புத்தகம். இப்போது நாங்கள் நாலு பக்கங்கள் வரைதான் வாசிக்கிறோம்….வாசித்துக்காட்டும் போதே பப்புவுக்கு ஜாலியாக இருக்கிறது. அவளும் கூடவே சொல்ல முற்படும்போது இன்னும் ஜாலியாக இருக்கிறது.
மொத்தத்தில் பயனுள்ள செலவு!! 🙂

வாங்குவதற்கு இங்கே செல்லவும்.

Add a comment ஒக்ரோபர் 17, 2009

ஜங்கிள் ஜங்கிள்…

‘இன்னைக்கு ஆக்டோபர் 28தா’ என்பதுதான், கடந்த இரண்டு மாதங்களாக காலையில் எழுந்ததும் எங்கள் காதுகளில் விழும் முதல்வாக்கியம். இம்முறை, 28ஆன் தேதி வாரநாட்களில் வருவதால் பிறந்தநாளைக் கொண்டாடுவது கொஞ்சம் சிரமம் என்று தோன்றியது. மேலும், அலுவலக நண்பர்களின் குழந்தைகளை பப்பு அறிந்திருக்கிறாளே தவிர அவர்களுடன் நேரம் செலவழித்ததில்லை. விளையாடியதில்லை. இதையெல்லாம் மனதில் கொண்டு கடந்த வாரயிறுதியில் ஒரு சிறிய கெட்-டூ-கெதரை(மினி பர்த் டே கொண்டாட்டம்) வைத்தாயிற்று – எனது அலுவலக நண்பர்கள் + குழந்தைகள். அதுவும்,’அனிமல்ஸ்லாம் வரணும் என் பர்த்டே’வுக்கு என்ற பப்புவின் கட்டளை என் ஆர்வத்தைத் தூண்ட ‘ஜங்கிள் பர்த்டே பார்ட்டி” யாக உருமாறியது.

அலங்காரங்கள் :

காட்டு மிருகங்கள் என்னவெல்லாம் வரவேண்டுமென்று பப்புவிடம் கேட்டு பட்டியலை தயாரித்தாயிற்று. யானை, புலி, சிங்கம், ஏப், ஹிப்போ, ரைனோ, ஜிராஃப், ஜீப்ரா, மான், ராபிட். இதற்கான பிரிண்ட் அவுட்களை இங்கே எடுத்துத் தர, பப்பு வண்ணம் தீட்டினாள். மஞ்சள் முயல், பிங்க் ஹிப்போ, ஆரஞ்சு ஒட்டகசிவிங்கி என்று உருமாறின. அவற்றை வெட்டி அறை முழுதும் ஒட்டினோம்.

சிறுத்தைகளின் கால் தடங்களையும், கரடியின் கால் தடங்களையும் சார்ட்டில் வரைந்து வெட்டி அவற்றையும் அறைக்கு செல்லும் வழியில் ஒட்டினோம்.

பப்புவின் விலங்கு பொம்மைகளை அங்குமிங்கும் வைத்தோம். ஒரு குகையைச் சார்ட் பேப்பரால் செய்து புலியை அதன் வாயிலில் அமர வைத்தோம்.

இலைச்சரங்களை தி.நகர் பாண்டி பஜாரில் ரோட்டோரக்கடைகளில் வாங்கியிருந்தேன் (Thanks to Gowri!!).அதனை அறையில் தொங்க விட்டு, மூலைக்கொன்றாக பலூன்களை கட்டினோம். நிறைய ஸ்டிக்கர்களும் கிடைக்கிறது. நாங்கள் ஏற்கெனவே பிரிண்ட் எடுத்திருந்ததால் வாங்கவில்லை.

விளையாட்டுகள் / ஆக்டிவிட்டி

ஃபேஸ் பெயிண்டிங் : கோடுகள் அல்லது ஸ்பாட்கள் இருந்தால் விலங்குகளின் அடையாளம்தானே. சிறுத்தைதோல் போல வட்டங்கள் கொண்ட உடையணிந்த பப்புவிற்கு புலி மீசையும் , கறுப்பு- வெள்ளையுமாக உடையுடுத்திருந்த யாழினிக்கு முகத்தில் வரிக்குதிரை,திவ்யாவிற்கு சிங்கக்கோடுகளும் போடப்பட்டது.

பேஸ் பெயிண்டிங் செய்ய விரும்பாதவர்களுக்கு word search (5 வயதினருக்கு மேல்), maze போன்றவைகளை பிரிண்ட் எடுத்து வைத்திருந்தேன். எல்லோருமே விருப்பமுடன் செய்தார்கள்.

வண்ணம் தீட்டப்பட்ட சிங்கத்திற்கு வால் ஒட்டும் விளையாட்டு: ஒவ்வொருவரின் கண்களையும் கட்டிவிட்டு வாலை சரியாக ஒட்டவேண்டும். streamers ஐ வெட்டி செய்த வாலை எல்லா குட்டீஸுமே ஒட்டினார்கள் – மிகுந்த வரவேற்பை பெற்றது இது!

நான் யார்/Who am I ; மிருகங்களின் ஸ்டிக்கர்களை வாங்கியிருந்தேன். ஒவ்வொரு குழந்தையின் முதுகில் ஒட்டி விட வேண்டும். என்ன மிருகம் ஒட்டப்பட்டதென்று அந்த குழந்தையைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியும். ஆனால் சொல்லக் கூடாது. ஸ்டிக்கர் ஒட்ட்ப்பட்டிருப்பவர் தான் என்ன மிருகமென்று கேள்விகள் கேட்டு கண்டுபிடிக்கவேண்டும். ஆம்/இல்லையென்று பதில் வருவது போன்ற கேள்விகள்தான் கேட்க வேண்டும். உ.தா ; எனக்கு நீண்ட கழுத்து இருக்குமா ? எனக்குக் கொம்புகள் இருக்குமா? எனக்கு தும்பிக்கை இருக்குமா? என்பது போல!

இது பப்பு வயதினருக்கு இல்லையென்றாலும் வளர்ந்த குழந்தைகளுக்கு ஏற்ற விளையாட்டாக இருந்தது இது. வித்தியாசமான க்ளுவெல்லாம் கொடுத்தார்கள் குழந்தைகள்!! குழந்தைகளுக்குப் பிறகு நாங்களும் மீதி இருந்த ஸ்டிக்கரைக் கொண்டு விளையாடினோம்!!

உணவு : முதலில் பொம்மை பிஸ்கெட்(animal shapes) பரிமாறப்பட்டது. கேக், மசாலா கடலை, நேந்திரம் சிப்ஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ், மாசா மற்றும் ஆரஞ்சு ஜூஸ்.

இசை : வண்டின் ரீங்காரங்கள்,ஓடை சலசலப்புகள், மைனாவின் கூவல்கள் கொண்ட யூ ட்யூப் வீடியோவை டவுன்லோடு செய்து சத்தத்தை மட்டும் ஒலிப்பரப்பினோம். ஸ்பீக்கர்கள் இல்லாததாலும், குழந்தைகளின் இசை அதனை விட இனிமையாக இருந்ததாலும் காட்டின் இசை அவ்வளவாக கவனம் பெறவில்லை.

இசை – 1

இசை -2

மிருக முகமூடியையும் அணிந்துக்கொண்டு அவற்றைப்போல போஸும் கொடுத்தார்கள்!!
வந்திருந்த எல்லாக் குழந்தைகளும் காட்டுமிருகமொன்றை தம்மோடு அழைத்துச் சென்றார்கள், அதனோடு நல்ல நினைவுகளையும் சுமந்து சென்றிருப்பார்களென நம்புகிறேன்!!

நீங்கள் எங்களோடு செலவழித்த நல்ல நேரங்களுக்காகவும், பப்புவிற்கு நல்ல நினைவுகளை பரிசளித்த குட்டீஸ்களுக்கும் அவர்களது அம்மாக்களுக்கும் நன்றிகள். குட்டீஸோடு குட்டீஸாக இணைந்து சூழலை கலகலப்பாக்கிய கவிதா விருந்தினர்களையும் நன்றாக கவனித்துக்கொண்டார். கவிதாவிற்கு ஸ்பெஷல் நன்றிகள். பப்புவிற்கு கவிதா ஆண்ட்டியை வீட்டுக்கு அனுப்ப மனமேயில்லை! உங்களனைவரையும் இந்தவாரமும் எதிர்பார்க்கிறாள்..:-))

பெரும்பாலான ஐடியாக்களை இணையத்திலிருந்தே பெற்றேன். பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு அருமையான ஐடியாக்களை அள்ளித்தந்த இணையத்திற்கு நன்றி! உதவிய தளங்கள் –
இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே

Add a comment ஒக்ரோபர் 16, 2009

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

ஒக்ரோபர் 2009
தி செ பு விய வெ ஞா
« செப்   நவ் »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Posts by Month

Posts by Category