ஜூன் 2009 க்கான தொகுப்பு
Z is for Zoo!

வண்டலுர் ஜூ. எனக்கு ஐஞ்சு வயசா இருக்கும்போது எங்க ஆயா என்னையும் இளஞ்செழியனையும் கூப்பிட்டு போனாங்க. ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்தாங்க. நாங்களும் சாப்பிட்டிக்கிட்டிருந்தோம். கடைசிலே ஆயாக்கும் ஐஸ்கிரீம்-காரருக்கும் சண்டை. என்னன்னா, அவர் ‘ரெண்டு அர்ரூபா’ ரெண்டு அர்ரூபா’ ன்னு சொன்னாராம். கடைசிலே ஐஞ்சு ரூபா கேட்டுருக்கார்.எங்க ஆயா ‘ரெண்டு ஐஸ்க்ரீம் அரை ரூபா’ன்னு நினைச்சு வாங்கிக் கொடுத்திருக்காங்க!இப்போவரைக்கும் எங்க ஆயா அதை மறக்கலை..போன சனிக்கிழமை பப்புவை கூப்பிட்டு போறோம்-ன்னு சொன்னதும் அவங்க இதை திரும்ப எங்களுக்கு (10001வது தடவையா) ரி-ப்ளே பண்ணாங்க!எனக்கு இதெல்லம் ஞாபகம் இல்லை..ஆனா ஒரு யானை மேலே ஏறனும்னு அடம் பிடிச்சது மட்டும் ஞாபகம் இருக்கு!

எட்டாவது படிக்கும்போது எங்க ஸ்கூல் டூர். வண்டலூர் ஜூ, வேடந்தாங்கல் அப்புறம் மகாபலிபுரம். ரொம்ப ஜாலியா இருந்துச்சு. யாரு அனிமல்ஸை பார்த்தது…ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து ஃபோட்டோ எடுக்கறதும், க்ரூப்பா பாட்டு பாடறதும், ஸ்னாக்ஸ் வாங்கி சாப்பிடறதும், ஜன்னல்கிட்டே நீ எனக்கு இடம் தரலைன்னு சண்டை போடறதுமா இருந்துச்சு! உள்ளேயே ட்ரெயின் ஓடுது..அதுல போகலாம்-ன்னு டூர் ஆர்கனைசர் வேற பில்டப்! ஒரு tram-ஐ காட்டி ட்ரெயின்-ன்னு சொல்லி ஏமாத்தினாங்களே..அவ்வ்வ்…அந்த ட்ராம் இன்னும் இருக்கு!

‘ட்ரெயின் புகழ்’ ட்ராம்!

மிருகங்களை பயமுறுத்த மூனு வழி இருக்கு.

1.நடந்தே போய் பார்க்கலாம்
2.வாடகை சைக்கிள் கிடைக்குது.
3.அப்புறம் ‘ஜூ உள்ளேயே ஓடற ட்ரெயின்’. (ஒரு மணிநேரம் ரவுண்ட்)

சைக்கிள்லே என்னையும் பப்புவையும் வைச்சு முகில் ஓட்டினாலும் சைக்கிள் தாங்குமானு டவுட் இருந்ததாலே ட்ராம்-க்கு டிக்கெட் வாங்கினோம். எவ்வளவு சீக்கிரமா போறீங்களா அவ்வளவு சீக்கிரம் டிக்கெட் கிடைக்கும். (10 ரூபாய் – சிறாருக்கு, 20- ரூபாய் – பெரியவர்களுக்கு)நாங்க போனப்போ ரெண்டு ஸ்கூல்-லேர்ந்து வந்திருந்தாங்க.11.30 மணிக்கு போனோம், ஆனா மதியம் 2.15-க்குதான் டிக்கெட் கிடைச்சது. அன்னைக்கு வெதர் ரொம்ப நல்லா இருந்துச்சு! அதனால, கொஞ்ச நேரம் நடந்து சுத்திப் பார்த்துக்கிட்டு இருந்தோம். நல்லா சுத்தமா வச்சிருந்தாங்க. பப்பு அதைத்தான் காடுன்னு நினைச்சுக்கிட்டா. ”காஆஆடு, ஐஸ்க்ரீம் தீவு..நாம அப்புறம் எங்கே போறோம் டோரா’ன்னு கேட்டுக்கிட்டிருந்தா. பப்புவிற்கு ஏப்-தான் ரொம்ப பிடிக்கும். ‘ஏப் வந்து எனக்கு எக் கொடுக்கபோகுதா’ன்னு கேட்டா.அவ்வ்வ்! (ஒரு மூவிலே, தன் வீட்டுக்கு வந்த ஒரு பொண்ணுக்கு ஏப் காலையில் பால், முட்டை எல்லாம் தட்டில் வைத்து எடுத்து வரும்!!)

மயில், பலவித கிளிகள், குரங்குகள், மேலும் குரங்குகள், மேலும் மேலும் குரங்குகள்-ன்னு பார்த்துட்டு, ஒரு கல்மண்டபதுலே உட்கார்ந்து கொண்டு வந்த சாப்பாடு, நொறுக்ஸ் எல்லாம் காலி பண்ணிட்டு சரியா ரெண்டு மணிக்கு ட்ராம் வர்ற இடத்துக்கு போய்ட்டோம். அந்த ட்ராமிலே போறதும் ஜாலியாதான் இருந்துச்சு. நாம நடக்கற வேகம்தான்…;-). அங்கங்கே நிறுத்தி 10 நிமிஷம் டைம் கொடுக்கறாங்க. அதுக்குள்ளே பார்த்துட்டு வந்துடனும். பப்பு, பார்க்கிற மிருகங்களையெல்லாம் ‘ஏன் அது என்கூட பேச மாட்டேங்குது’ னு கேட்டுக்கிட்டிருந்தா. அவ்வ்வ்..the animated CDs n TV programs!! புலி பாட்டுக்கு அந்தப் பக்கம் போய்க்கிட்டிருக்கு. ‘புலி புலி’ ன்னு கூப்பிட்டா அது திரும்பி பார்க்குமா என்ன?! (நமக்குத் தெரியும் அது புலின்னு, ஆனா புலிக்குத் தெரிய வேணாமா..ஹ்ம்ம்..இதெல்லாம் சொன்னா பப்புவையாவது ஒழுங்கா விட்டு வைன்னு சொல்றது!!)

புலி, வெள்ளை புலி, ஹிப்போ, மான்கள், யானை, ஜீப்ரா, ஜிராஃப் எல்லாம் முடிச்சுட்டு 3.15-க்கு ஏறின இடத்துக்கே வந்துட்டோம். லேசா தூறல். வெளிலே வந்தப்புறம் செம மழை. பப்புவிற்கு வரவே மனசில்லை. நான் உள்ளேயே இருக்கேன்னு சொல்லிட்டு திரும்பி உள்ளேயே ஓடறா! ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்லை, நாம வீட்டுக்கே போகலாம்-ன்னு சொல்ல நினைச்சேன்..ஹிஹி்..செல்ஃப் டேமேஜாகிடும்ன்னு விட்டுட்டேன்! ;-))

நுழைவு கட்டணம் : பெரியவர்களுக்கு – 20 ரூ சிறார் – 10 ரூ
காமெரா கட்டணம் : 25 ரூ
நுழைவாயில் தாண்டி, உள்ளே ஒரு TTDC உணவகம் இருக்கு. மினரல் வாட்டர் வேணா வாங்கிக்கலாம். ட்ராம்/வாடகை சைக்கிளுக்கு கட்டணம் தனி. பொதுவான ஜூ ரவுண்ட்-உம், லயன் சஃபாரி-யும் இருக்கு. ஜூ ரவுண்ட் ஒரு மணி நேரம் – எல்லா மிருகங்களும்! லயன் சஃபாரி – 30 நிமிடங்கள் – சிங்கங்கள் மட்டும் – ஆனால் வெகு அருகில் பார்க்கலாம்! ஜு உள்ளே சென்றால் ஆவின் ஐஸ்க்ரீம் கடை இருக்கு. அது ஒன்னுதான் கொஞ்சம் ஆறுதல். மற்றபடி வேறு உணவகங்கள் எதுவும் இல்லை. குடிநீர், நொறுக்குத்தீனி, சாப்பாடு, தொப்பி கொண்டு செல்வது நல்லது!

Advertisements

Add a comment ஜூன் 30, 2009

‘பிரா’ப்ளம் – ஒரு அறிமுக பார்வை

சில பேரை பார்த்தல் ரொம்ப விலை உயர்ந்த துணி வகைகள் அணிந்து இருப்பார்கள், ஆனால் அவர்களின் உடல் வாகுக்கு அது பொருத்தமாக இருக்காது. அதிலும் பெண்கள் சிலர் நல்ல உடல் அமைப்பு இருக்கும் ஆனால் அவர்களின் உடை கெடுத்து விடும்.

இனிமேல் சில உடைகளை பற்றி எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.
( சத்தியமா துறை சார்ந்த பதிவுதான்)

சின்ன குழந்தைகளுக்கு எல்லாமே அழகா இருக்கும்.. என்றாலும் எப்பவும் காட்டன் நல்லது.

இது குழந்தைகளுக்கு அல்ல. பெண்களுக்கு அதிலும் முக்கியமாக உள்ளாடை என்பது எவ்வளவு முக்கியம் என்பது யாரும் உணர்ந்தது போல் இல்லை. இது வெறும் அடிப்படை விஷயங்கள் இது. சரியான உள்ளாடை மனதில் ஒரு தன்னம்பிக்கையை கண்டிப்பாக வளர்த்தும்.நெறைய வகைகள், உபயோகங்கள் உள்ளது. வயது வாரியாக பிரித்து பார்க்கலாம்.

உங்களின் சரியான அளவை எப்படி தெரிந்து கொள்வது:

இந்த படத்தை பாருங்கள்: அளவு எடுப்பது எப்படி என்றால் 1 என்னும் அளவுடன் 5 இன்ச் சேர்த்துக்கொள்ளவும். இதுதான் சரியான அளவு. கப் சைஸ் என்பது c , d என்பது மட்டுமே பொதுவாக நம்ம ஊருக்கு பொருந்தும். E கப் என்பது குண்டான உடல்வாகு கொண்டவர்களுக்கு.

சரியான உடல் அளவுக்கு ஏற்ற பிரா என்றால் அது இப்படித்தான் இருக்க வேண்டும்
சரியான அளவு உடை அணியாதவர்களுக்கு முதுகு வலி, மார்பகங்கள் தொய்வு, கூன் விழுதல் போன்ற பிரச்சனைகள் வரும்.

முதலில் 10 முதல் 13 வயது உள்ள சிறுமிகளுக்கு : இந்த வயதில் இது தேவையா என்று தோன்றுகிறதா? கண்டிப்பாக தேவை. இந்த காலத்தில் பெண்கள் பத்து வயதில் பெரியவளாகி விடுவதால் அவர்கள் உடல் அமைப்பு மாறும் முக்கிய காலகட்டம் இது. இப்போது இருந்து சரியான உள்ளாடைகளை அவர்கள் அணிவது எல்லா வகையிலும் பாதுகாக்கும். குறிப்பாக ஸ்போர்ட்ஸ் ப்ரா எனப்படும் மிக சரியான அளவு உள்ளாடை மற்றும் பெகின்னேர்ஸ் ப்ரா உபயோகிக்க வேண்டும்.. அதிலும் அதிகமாக விளையாட்டுகளில் ஈடுபடும் பெண்கள் இறுக்கமான உள்ளாடை அணிவது அவசியம்.


13வயது முதல் திருமணம் வரை.. இந்த வயதில் uniform போடும்போது finafo bra , சுடிதார், t.ஷர்ட் போடும் போது seamless அல்லது நடுவில் தையல் இல்லாத பாயின்ட் இல்லாத t.ஷர்ட் bra போடுங்கள். அல்லது இந்த மாடலில் எது வேண்டுமானாலும் போடலாம்.

பாலுட்டும் தாய்மார்கள் பீடிங் பிரா அணியலாம். சிறிய மார்பகம் உள்ளவர்களும் உபயோகிக்க கூடிய புஷ் அப் பிரா அணியலாம். பின் கழுத்து டிசைன் ஜாக்கெட் போடுபவர்கள் backless பிரா அணியலாம். பாலுட்டும் தாய்மார்கள் சிறிய மார்பக பேடும் அணியலாம்.


இது போக இன்னும் மாடர்ன் டிரஸ் அணிபவர்களுக்கு பாடி ஹக்கின் பிரா, நோயாளிகளுக்கு மெடிக்கல் பிரா, வெட்டிங் பிரா, என்று எக்கச்சக்க வகைகள் உள்ளது.

இந்த சிவப்பு நிற உடை ஒரு செட்டாக இருக்கும், இது ஒரு வகையான பாடி ஹக்கிங்க்ஸ் உள்ளாடை, வெஸ்டர்ன் உடைகள் அணிவோர் பயன்படுத்துவது..

இது வெறும் அடிப்படை விஷயம் மட்டுமே, இன்னும் மருத்துவ ரீதியாக நிறைய விஷயங்கள் உள்ளது, அது அடுத்த முறை

7 பின்னூட்டங்கள் ஜூன் 29, 2009

பாப்கார்ன் வித் குட்டீஸ் : சென்னை பதிவர் சந்திப்பு!

”பாப்பாக்கு காது எங்கே குத்துனீங்க?”

“காதுலதான்!!”

போன்ற உலகத்தரம் வாய்ந்த காமெடி கடிகளும்,

”பேசு குட்டிம்மா, என் மானத்தை வாங்காதே”

”பேசாம இருக்கறதைவிட பேசினா தாங்க நமக்கு டேமேஜ்”

போன்ற கவனத்தைக் கவரும் அனுபவச்சிதறல்களையும்….நேற்று கிண்டி சிறார் பூங்கா கண்டது – நீண்டநாட்களாக பேச்சில் மட்டுமே இருந்த “பதிவர் சந்திப்பு வித் கிட்ஸ்” நேற்று சாத்தியப்பட்டது!!

அமித்து அம்மா அமித்துவுடனும், வித்யா ஜூனியருடனும், தீபா நேஹாவுடனும், அமுதா நந்தினி மற்றும் யாழினியுடனும், நான் பப்புவுடனும்!

(பதிவுலகத்தின் பிரபல குட்டீஸ்! )

அமித்து அம்மாவும் அமித்தும் மேட்சிங்-கான உடையில் வந்திறங்கினர். நாங்கள் வாயிலில் காத்திருக்க, மேடம் குறுக்கு வழியில் புகுந்து அசத்தினார். அமித்து ஒரு சமத்து குழந்தை. அமித்து அம்மாதான் ”கோங்கு” கேட்ட அமித்துவை ஒரு குரங்கு டஸ்ட்பின் காட்டி ஏமாற்ற முயற்சி செய்துக்கொண்டிருந்தார்.

வித்யா மட்டுமே சொன்ன நேரத்தை கடைப்பிடித்தார்..கடமை கண்ணியம்..காட்பாடி! ஜுனியர் செம ஆட்டம்! விட்டால் பார்க்கை ஒரு ரவுண்ட் வந்திருப்பார். வித்யாவின் கெஞ்சல்+மிரட்டலுக்கு செவிசாய்த்து அடக்கிவாசித்தார். ஃபோட்டோ எடுக்கலாமென்று சொன்னதும் மிக அழகாக வந்து புன்னகை புரிந்தார்.! பப்புவிடமிருந்து பையை வாங்கிவிட முயற்சி செய்துக் கொண்டிருந்தார் 🙂

நேஹா யார்பேசினாலும் “மம்மா” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
“பௌபௌ” என்று “ம்மா” என்றும் மிருகங்களைப் பார்ததுச் சொல்லிக்கொண்டிருந்தார். தீபாவின் மிரட்டலில் தூக்கத்தைத் தியாகம் செய்து வந்திருந்தார்.

நந்தினி, யாழினியுடன் வந்திருந்தார் அமுதா. நந்தினி எல்லா குட்டீஸுக்கும் ப்ரெண்ட் ஆகிவிட்டாள். எல்லா குட்டீஸையும் பார்த்த அமுதா, ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் போல…”சரி, இந்த தட்டிலாவது சாப்பிட்டு உடம்பு தேறுதான்னு பார்ப்போம்னு” எல்லா குழந்தைகளுக்கும் ஒரு தட்டை பரிசளித்தார்! நன்றி அமுதா, அடுத்த தடவை ரிசல்ட் பாருங்க…;-)) (இங்கே தெனாலிராமன் பூனை வளர்த்த கதை உங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல!)

பப்பு பார்க்கை சுற்றிவர துடித்துக் கொண்டிருந்தாள். வரும்போதே கவிதா ஆண்ட்டி வந்துட்டாங்களா என்று கேட்டாள்! வழக்கமாக செல்லும் பாதையில் போகாமல் நேராக மரத்தடிக்கு வந்தது அவளுக்கு பிடிக்கவில்லைபோல….”அங்கெல்லாம் போய் பார்க்கலாம்” என்று சொல்லிக்கொண்டிருந்தாள். கவிதா ஆன்ட்டியையும் g3 ஆன்ட்டியையும் எங்கே காணோம் என்றுத் தேடிக்கொண்டிருந்தாள், நெடுநேரம்! 😦 முகிலின் வேலையை நான் செய்ய வேண்டியதாயிற்று..சறுக்குமரத்திற்கு அழைத்து செல்வது, சீசாவில் உட்காரவைத்து ஆட்டுவது…அவ்வ்வ்!! கையை பிடித்து நடக்கச் சொன்னதற்கு, “எனக்கு யாரையுமே பிடிக்காது” என்று சொல்லிவிட்டு தனியாக நடக்க ஆரம்பித்தாள்! (இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக இருந்தும், நாங்கள் பேசிக்கொள்ளத்தான் நேரம் கிடைக்கவில்லை. நம்புவீங்கதானே!)

On the whole, we had fun!புது ஆன்ட்டிகள், தங்கள் பெயர்களையும் தங்களைப்பற்றி எல்லாம் தெரிந்தவர்கள் போல நடந்துக்கொண்டது குட்டீஸ்-க்கு வியப்பளித்திருக்கக்கூடும்!

Add a comment ஜூன் 29, 2009

பப்பு டைம்ஸ்!

”வர்ஷினி, வீட்டுக்குத்தான் போகணும், அம்மாகிட்டே போணும்னு அழுதுச்சு. நான் வேன்லே கூப்டு போய் அவங்க வீட்டுலே விட்டேன். வர்ஷினி அம்மாகிட்ட, “ஒங்களைதான் வர்ஷினிக்கு வேணுமாம”னு சொல்லிட்டு ஸ்கூலுக்கு வந்திட்டேன். அப்றமா,அவங்கம்மா வர்ஷினியை ஸ்கூல்ல கொண்டு வந்து உட்டாங்க..அப்புறம் வர்ஷினி ஸ்கூல்லேயே இருந்துச்சு. நாங்க வீட்டுக்கு வரும்போது, ”நான் ஸ்கூல்லேயேதான் இருப்பேன், வீட்டுக்கு போக மாட்டேன்”னு அழுதுச்சு!”

இது (கதை) நேற்று நடந்ததாக பப்புவால் எனக்குச் சொல்லப்பட்டது.


செய்தி 1 :
கடந்த வாரத்தில் இறுதி இரண்டு நாட்களாக 11.00 – 11.30 மணி வாக்கில் பப்புவும் வர்ஷினியும் ஒன்றாக சேர்ந்துக் கொண்டு அழுவதாக, “அம்மாகிட்டே போகணும்” என்று அழுவதாக ஆன்ட்டி செய்தியனுப்பினார்.

செய்தி 2 :
இந்த திங்களன்று பப்புவின் பள்ளியிலிருந்து அழைப்பு வந்தது – 11.30 வாக்கில். ..அழைத்துக் கொண்டு செல்லும்படி.அவள் மிகவும் அழுதுக் கொண்டிருப்பதாகவும், காய்ச்சல் அடிப்பது போலிருப்பதாகவும்!!

(சளிதான் கொஞ்சம் அதிகமாக இருந்ததே தவிர, இவர்கள் அழுததில் கொஞ்சம் பயந்திருக்கிறார்கள் போலிருக்கிறது. காய்ச்சல் எதுவுமில்லை. மேலும், பப்பு இப்போது அடுத்த லெவலுக்கு சென்றிருப்பதால் ஆண்ட்டி மாறியிருக்கிறார்கள். மோதி ஆன்ட்டியை மிஸ் செய்கிறாள் போல!)

நான் நெய்ல்போலிஷ் போட்டு அழகாயிருக்கேன், நீ? – பப்பு

நான் போடலியே….(அதற்குமேல் என்ன சொல்வது..அழகாயில்லன்னு நெகடிவா சொல்லவேணாமே..வேற எப்படி..) – யோசித்தபடி நான்.

“நான் நெய்ல்போலிஷ் போட்டு அழகாயிருக்கேன், நீ நெய்ல்போலிஷ் போடாம அழகா இருக்கே!” – பப்பு!

ஓ..அவ்வளவு எளிதானதா இது!சிலசமயங்களில் ரொம்ப யோசித்துதான் நான் காம்ப்ளிகேட் செய்துக்கொள்கிறேன் போல..!!

”இது பச்சை தண்ணியா?” – கைகழுவ தண்ணீர் கொடுத்தபோது ஆயா என்னிடம்!

”இல்ல, இது க்ரீன் தண்ணி!” – பப்பு!

Add a comment ஜூன் 27, 2009

புது அப்பாக்களுக்கு சில பாயிண்ட்ஸ்!

1. எமோஷனல் சப்போர்ட் – உங்கள் மனைவியுடன் பேசுங்கள். நேரம் செலவழியுங்கள். தாய் ஒரு அறையில் குழந்தையின் தேவையை கவனித்துக் கொண்டு இருப்பார். எல்லோரும் ஹாலில் டீவி பார்த்துக் கொண்டோ அல்லது ஜாலியாக பேசி சிரித்துக்கொண்டோ இருப்பார்கள். தான் ஒரு பால் கொடுக்கும் மிஷிந்தானோ என்று எண்ணும்படி விட்டுவிடாதீர்கள்!

2. அவர் விரும்பியதை செய்ய உதவுங்கள் – குழந்தை பிறந்த கொஞ்ச நாள் வரை உறவினர்களும், எண்ணற்ற அறிவுரைகளாலும் ,ஏகப்பட்ட அட்வைஸ்களாலும் சூழ்ந்துக் கொண்டிருப்பார்கள். சமயம் பார்த்து நீங்கள்தான் பாதுகாக்க வேண்டும், பிறர் மனம் கோணாதபடி. (சிலசமயங்களில் ஏதேனும் படிக்கவோ அல்லது தூங்கவோ விரும்பலாம்.)

3. குழந்தை உடல்நிலை சரியில்லாமல் போனால் தாயைத்தான் உடனே விமர்சிப்பார்கள். அவருக்கு ஆறுதலாக நடந்துக் கொள்ளுங்கள். தாய் குளிக்கும் நேரத்திற்கும், குழந்தை தும்முவதற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள்தானே!

4. அவ்வப்போது சர்ப்ரைஸ் டின்னர் அல்லது குழந்தை தூங்கும் நேரம் சினிமா என்று வெளியில் அழைத்துச் செல்லுங்கள்!(she may need a break! )

5. 10 மாதங்களாக அவரது உடல் பல மாறுதல்கலை எதிர்கொண்டிருக்கும். அதை மனதளவில் ஏற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கு சில காலம் எடுக்கலாம். அதைக் குறித்த விமர்சனங்களிலிருந்து தடுத்து விடுங்கள். அதைக்குறித்த அவரது சோர்ந்த மனநிலைக்கு ஆறுதலாக இருங்கள்!

ஹேப்பி ஃபாதர்ஸ் டே!

15 பின்னூட்டங்கள் ஜூன் 26, 2009

பை பை மைக்கேல்…Rest in peace!

வி லவ் யூ! எனது பதின்மங்களை இசையால் நிரப்பியதற்கு நன்றி! உமது இசை இனி வானுலக தேவதைகளையும் ஆட்டுவிக்கட்டும்! பை பை மைக்கேல்! வி மிஸ் யூ..!!

Add a comment ஜூன் 26, 2009

காஸ் தொல்லை-தீர்வு Pls

என் mithraku 31 நாட்கள் ஆச்சு. கடந்த 8 நாளா காஸ் தொந்தரவால் ரொம்ப சிரம படரா.. முக்கியமா சாயங்காலம் மற்றும் இரவு… தூங்க 1 மணி ஆயிடுது. சின்னதா முனகிட்டே இருக்கா .Dr செரிமானதுக்காக Neopeptine ட்ராப்ஸ் குடுக்க சொன்னார். ஆனாலும் ரொம்ப effect தெரியலை. இந்த காஸ் troble தாய் பால்லேர்ந்து வருதா ? அப்படினா அதை தடுக்க அம்மா சாப்பிட வேண்டிய , தவிர்க்க வேண்டிய உணவு பத்தி சொல்லுங்களேன்.

12 பின்னூட்டங்கள் ஜூன் 25, 2009

இரு சம்பவங்கள் மற்றும் நான்!

“ஷேப்பர்ஸ்(வடிவங்களை உருவாக்கும் ஒரு விளையாட்டு பொருள்) எங்கே பப்பு?” – நான்.

“கரப்பான் பூச்சி தூக்கிக்கிட்டு போய்டுச்சு” – பப்பு

கரப்பான் பூச்சியா?!! – நான்!

“ஆமா ஆச்சி, அது தூக்கிக்கிட்டு போய் அதோட வீட்டுலே வைச்சுகிச்சு” – பப்பு.

(ஓ, அப்போ அது எங்கேன்னு பப்புக்கு தெரிஞ்சுருக்கு போல, அதைதான் கரப்பான் பூச்சி வீடுன்னு சொல்ல வர்றாங்களோ மேடம்?!)

அதோட வீட்டுலேயா..கரப்பான் பூச்சியோட வீடு உனக்கு தெரியுமா?!- நான்.

”தெரியுமே ஆச்சி, அது இழுத்துக்கிட்டு போய் எனக்கு வேணும்னு வச்சிக்கிச்சு” – பப்பு

(அப்போ அதை எங்கேயோ போட்டுட்டு அது இருக்கிற இடத்தைத் தான் கரப்பான் பூச்சி வீடுன்னு சொல்ல வர்றாளோ?!..இருக்கும்..இருக்கும்…எப்படியோ கிடைச்சா சரி!)

”எனக்கு காட்டு, நான் எடுத்துத் தரேன்” – நான்

அவள் என்னைக் கூட்டிக்கொண்டுச் சென்ற இடம், எங்கள் சமையலறையின் பின்வழியில் இருக்கும் சாமான் கழுவும் நீர் செல்லும் பாதை!

நான் ‘ஞே’ வாகிக் கொண்டிருந்தேன்!

ஏனோ ஒரு ஃப்ளாஷ்பேக் நினைவுக்கு வந்துத் தொலைத்தது.

ஃப்ளாஷ்பேக்:

வொர்க்கிங் வுமன்ஸ் ஹாஸ்டலில் தங்கி இருந்தோம் அப்போது. ஹாஸ்டல் அணுகுண்டைக் கூட சாப்பிட்டு விடலாம், ஆனால் கன்பவுடரை கண்டிப்பாக வாயில் வைக்க முடியாது! (அனுகுண்டுன்னா என்னனு எல்லோருமே கண்டுபிடிச்சுடுவீங்க, கன்பவுடரை கண்டுபிடிங்க :-)) அதனால் எங்களை காப்பாற்றுவது பழங்கள்தான். ஹாஸ்டலுக்கு எதிரில் இருக்கும் பழக்காரரிடம்தான் பிசினஸ். முந்தையதினம் வாங்கிய சாத்துக்குடி பழங்கள் சரியில்லையென்று திருப்பி எடுத்துச் சென்றேன். இது நல்லாயில்லையென்று சொல்லி அவரிடம் கொடுத்து விட்டேன். அவரும் வாங்கி வைத்துக் கொண்டார். பிறகு வந்தவர்களிடம் பிசினசை கவனிக்க தொடங்னினார். கொஞ்ச நேரம் (5 நிமிடங்கள்?!) நின்றுக் கொண்டிருந்தேன். அவர் என்னை கவனித்த மாதிரியேத் தெரியவில்லை. பின்னர் திரும்பி வந்துவிட்டேன். அறையில் வந்து இதைச் சொன்னதும் ஷீபா அக்கா கேட்டார்கள், ”நீ ஏன் நின்னுக்கிட்டிருந்தே?, யாராவது இங்கே அப்படி மாத்திக் கொடுப்பாங்களா?” – என்று சிரித்துக்கொண்டே சொன்னார்!

நான் அங்கே ‘ஞே’-வாகிக் கொண்டிருந்தேன்,ஆம்பூரிலேல்லாம் மாத்திக் கொடுப்பாங்கதானே என்று நினைத்தபடி!!

பப்புவும் பழக்காரரும் மாறி மாறி தெரிந்தார்கள் என் கண்முன்!! (ஒரு பொண்ணு இன்னொசன்டா இருந்தா எப்படியெல்லாம் ஏமாத்தறாங்கப்பா!!) நாந்தான் இப்படியா இல்ல மக்கள்ஸ்தான் இப்படியான்னே தெரியலை! 😉

Add a comment ஜூன் 24, 2009

osteoporsis – என்றால் என்ன?

osteoporsisஎன்றால் என்ன?

எலும்புகளின் அடர்த்தி குறையும் போது அதன் வலிமையும் குறையும். உறுதியான எலும்புகள் ஒரு பஞ்சு போன்ற தன்மைக்கு வரும். எலும்புகளில் நேரும் இந்த குறைபாடு osteoporsis எனப்படும். எலும்புகளின் மேல் படியும் கால்சியம் எலும்புக்கு ஒரு சுவர் போன்ற பாதுகாப்பை தருகிறது. வயதாகும் பொது அந்த கால்சியம் சுவர் உதிர்ந்து போகிறது

osteoporsis – என்ன விளைவுகள் ஏற்படும்?

முதலில் எலும்பு முறிவு ஏற்படும், உலகில் தற்போது 30% பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். முக்கியமாக இடுப்பு எலும்புகள் உடைவது, வயதானவர்களுக்கு இதனால் இன்னும் பாதிப்பு அதிகம். நிமோனியா, ரத்தம் உறைவது அல்லது அடைப்பு போன்றவை உருவாகும்.

osteoporsis – ஏன் யாருக்கு வருகிறது?

போன் மாஸ் எனப்படும் பொருள் தான் எலும்புக்கு வலு தருகிறது. அதில் ஈஸ்ட்ரோஜென் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அது குறையும் போது இந்த நோய் வரும். அதாவது 35 வயதுக்கு மேல் பெண்களுக்கு வரும் வாய்ப்புகள் அதிகம்.

பெண்களுக்கு, சிறிய, ஒடுங்கிய, ஒல்லியான உருவ அமைப்பு,
புகை
படிப்பவர்கள்,
மது அருந்துபவர்கள்,
உடல் பயிற்சி இல்லாமல்,
கால்சியம் குறைவு, சத்து பற்றாக்குறை,
சரியான
ஜீரண சக்தி இல்லாமல் இருப்பவர்கள்,
ஈஸ்ட்ரோஜென் அளவு குறைவு ( கர்ப்பப்பை எடுத்தவர்களுக்கு அதிக வாய்ப்பு), குறைந்த வயதில் மேனோ பாஸ் வருவது,
rheumatoid arthritis,
லிவர்
சரியாக வேலை செய்யாமல்,
தைராயிடு
பிரச்னை உள்ளவர்கள்,
விட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள்.

மேலும் heparin , phenytoin , Prednisone போன்ற மருந்துகளை நீண்ட காலம் எடுத்து கொள்ளுவது போன்றவையும் osteoporosis வர காரணம்.

எப்படி தெரிந்து கொள்வது?

osteoporosis எலும்புகள் பலவீன மறைவதால் வருகிறது, 40 வயதிற்கு மேல் அனைவரும் ( ஆண்களும் கண்டிப்பாக) பரிசோதிக்க வேண்டும். ஒரு சின்ன ஸ்கேன் கருவி சொல்லிவிடும் உங்கள் எலும்பின் தரத்தை..

என்ன சிகிச்சை முறை:
வேற என்ன? கால்சியம் மாத்திரைகள், உடல் பயிற்சி, தைராய்ட் சிகிச்சை, ஹார்மோன் தெரபி, ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி, மெனோபாஸ் ரீப்ளேஸ்மென்ட் தெரபி ,ஆகியவைகள் தான் தீர்வு..

வரும் முன் காக்க முடியுமா??

சிறு வயதில் நெறைய கால்சியம் சேர்ப்பது, சரியான உடல்பயிற்சி, போன்றவை நல்லது. ஒரு நாளைக்கு 300 மில்லி பால் எடுத்து கொள்ளுங்கள்.

7 பின்னூட்டங்கள் ஜூன் 23, 2009

இ ஃபார்…

…இடுப்பு!! இ ஃபார் இந்தநாள் இனியநாள் என்று எழுத நினைத்திருந்தேன். Golda அக்கா எனக்கு இ ஃபார் இடுப்பு எனற தலைப்பை பரிந்துரைத்திருந்தார்கள். நன்றி அக்கா! இடுப்பு பத்தி நான் எதுவுமே சொல்ல வேண்டியதில்லை. அதான் சினிமாவே அதன் உபயோகங்களையெல்லாம் கோனார் நோட்ஸ் போட்டு சொல்லிக் கொடுத்து விடுகிறதே!! சினிமாவில் இடுப்பை வெளிப்படுத்த எந்த அளவிற்கு ஹீரோயின்கள் ஊக்கப்படுத்தப்படுகிறார்களோ, அதற்கு நேர்மாறான வீட்டில் பெண்கள் இடுப்புத் தெரியுமாறு உடை உடுத்துவது தடை செய்யப்பட்ட விஷயம்! (பின்ன என்னங்க, ஐந்து வயசுலே ஜோதிகா ட்ரெஸ்-ன்னு பாவாடைக்கும் பிளவுஸ்-க்கும் இடையிலே கேப் விட்டு போட்டு அழகு பார்ப்பார்கள், அதையே
வளர்ந்தப்புறம் அவங்க போட்டா திட்டுறது..எப்படி ஜீன்ஸ் இடுப்புத் தெரியறமாதிரி போட்டுக்கிட்டு போறாங்கன்னு!!)

அதை விடுங்க, நான் சொல்ல வந்ததைவிட்டு எங்கேயோ போகிறேன்! எங்க பள்ளிக்கூடம், இருபாலருக்குமானது. அதுவுமில்லாமல் எங்கள் ஊர் ஒரு சிற்றூர்.. எட்டாவது ஒன்பதாவதுதான் படித்துக்கொண்டிருப்போம். நமது வகுப்பிலிருக்கும் ஒரு சில பெண்களிடம் மட்டும் தனியாக ஆசிரியர் பேசுவார். அடுத்தடுத்த வாரங்களில் அந்தக் குறிப்பிட்ட பெண்
தாவணியில் வருவார். உடனே எங்களுக்குத் தெரிந்து விடும்…சரி, நம்மிடம் பேசினாலே டேஞ்சர் என்று! பலருக்கும் தாவணி பிடிக்கும், ஆனால் அணிகின்ற பெண்களுக்கு நிச்சயமாகப் பிடிக்காது! அவ்வளவு ஏன், நிறைய ஆண்கள், பெண்கள் தாவணி போட்டுக்கிட்டிருந்தா பிடிக்கும் என்றுச் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், தாவணி அணிந்தவர்களுக்கேத் தெரியும் அதிலுள்ள சங்கடங்கள்! அதுவும் 13/14 வயது சிறுமிகளை தாவணியில் கட்டிப்போட்டால்…!! பொதுவாக பதினொன்றாம் வகுப்பிலிருந்து எங்கள் பள்ளியில் தாவணி அணிய வேண்டுமென்பது சட்டமாக இருந்தது!நானும் என் தோழிகளும் மிகுந்த மன அவஸ்தைக்குள்ளகினோம். சொல்லில் புரிய வைக்க முடியுமாவெனத் தெரியவில்லை. ஜாலியாக சல்வாரும் மிடியும் அணிந்துக் கொண்டு வந்த இடத்திற்கு, அடுத்த ஒரு மாதத்திலிருந்து தாவணியில் வரவேண்டுமென்பது ஒரு மாதிரி இனங்காண முடியாத தயக்க உணர்வாக இருந்தது! பள்ளி நிர்வாகம் இதை உணர்ந்ததாவென்பது சந்தேகமே!

அன்று காலை பள்ளிக்குக் கிளம்ப வேண்டும். கட்டவும் தெரியாது, தெரியாதென்பதைவிட பிடிக்காதென்பதே பொருத்தமாக இருக்கும். இயலாமையும் ஆற்றாமையும் சேர்ந்து வர அழுகை எட்டிபார்த்தது. பெரிம்மாதான் எனக்குக் கட்டி விட்டார்கள். அதுவும் தாவணி கட்டும்போது, பாவாடையில் ஒரு V ஷேப் வரவேண்டும். ஆனால் பெரிம்மா கட்டிவிட்டதோ அந்தக்காலத்து ஸ்டைல்!! அதுவேறு பிடிக்கவில்லை. இடுப்புத் தெரிவதுபோன்ற ஃபீலிங்! பிடிக்கவேயில்லை. நானாகவே ஏதோ V வருவதுபோல சுற்றிக் கொண்டு, பதினோரு ஊக்குகளை அங்கங்கே இழுத்துபிடித்து போட்டுக்கொண்டு ஒருவழியாக வகுப்பிற்குப் போய் சேர்ந்தேன்! அங்கே ஷபீனா, ரேணுகா, அனு, கவிதா, ஹேமா என்று எல்லோரும் அதே மாதிரி வந்திருந்தார்கள். எல்லோர் கண்களும் (அழுது) சிவந்திருந்தன அல்லது வீங்கியிருந்தன. அவர்கள் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ள முடிந்தது! பின்னர் ஒருமாதத்தில் பழகிவிட்டது..எங்களுக்குள் தனிப்பட்ட கிண்டல்கள் தவிர!

ஆனால் தாவணிபோட்டுக்கொண்டு சைக்கிள் ஓட்டுவது மிகப் பெரிய அபாயம். அதுவும் காலையில் ஒரு ட்யூஷன், மாலையில் ஒரு ட்யூஷன் என்று செல்லவேண்டிய செட் நாங்கள்! நாங்கள் பனிரெண்டாம் வகுப்பு வரும்போது அந்தச் சட்டத்தை எடுத்துவிட்டார்கள், பள்ளிநிர்வாகத்தினர். பாவாடை, சைக்கிளில் மாட்டி எங்கள் பள்ளியைச் சார்ந்த ஒரு பெண் ரோடில் விழுந்து பின்னால் வந்த வண்டி அவள் மீதேறி விபத்துக்குள்ளானதேக் காரணம்! தாவணி அணிந்தப் பெண்கள் சிரிப்பது சினிமாவிலும் நாடகங்களிலும்தான்! பள்ளிச் செல்லும் பெண்களுக்கு அது மற்றுமொரு அசௌகரியமே!!

ஆனந்த விகடனின்(லேட்டஸ்ட் இஷ்யூ) கடைசி பக்கங்களில் வழக்கறிஞர் அருள்மொழி மிக அருமையாக சொல்லியிருந்தார் – இன்று பெண்கள் உடுக்கும் எல்லா உடைகளுமே ஆண்களால் வடிவமைக்கப்பட்டவையே! பெண்களை நுகர்வு பண்டமாக பார்க்கும் போக்கிலிருந்து ஆண் குழந்தைகளை இன்றைய பெற்றோர்கள் மீட்க வேண்டுமென்று!! அவரவர் உடை அவரவர் உரிமை!

Add a comment ஜூன் 23, 2009

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

ஜூன் 2009
தி செ பு விய வெ ஞா
« மே   ஜூலை »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Posts by Month

Posts by Category